March 10, 2009

1987ன் திரைப்படங்கள் – இரண்டாம் பகுதி

முதல் பகுதி இங்கே

சின்னப்பூவே மெல்லப் பேசு

காதல் படங்களுக்கு எப்பொழுதுமே மவுசு குறையாது. காதல் படங்களின் முக்கிய தேவை, காதல் உருவாவதற்க்கான அபத்தமில்லாத அழுத்தக் காட்சிகள். அதிலும் இனிமையான பாடல்களும், ஒரளவு நல்ல நகைச்சுவைக் காட்சிகளும் அமைந்து விட்டால் படம் ஓடு ஓடு என ஓடித் தீர்த்துவிடும். ராபர்ட்- ராஜசேகரன் இயக்கத்தில் மேற்கொண்ட அம்சங்களுடன் வெளியான இப்படத்தின் மூலம் திரைப்படக் கல்லூரி மாணவர் ராம்கி நாயகனாகவும், பல்லவி நாயகியாகவும் அறிமுகமானார்கள். எஸ் ஏ ராஜ்குமாரும் இப்படத்தில் தான் அறிமுகமாகி சின்னப் பூவே மெல்லப் பேசு, ஏ புள்ள கருப்பாயி போன்ற இனிமையான பாடல்களைக் கொடுத்தார்.. கை கொடுக்கும் கையில் அறிமுகமான சின்னி ஜெயந்துக்கு இந்தப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின் ஐந்து,ஆறு வருடங்களுக்கு கல்லூரி மாணவராகி காதலர்களை சேர்த்தார், தமிழாசிரியர்களை கலாய்த்தார். பின்னர் விவேக் அந்த ஜோதியை எடுத்துக் கொண்டு சில ஆண்டுகள் ஓடினார். இப்போது அது சந்தானம் கையில் வந்து சேர்ந்திருக்கிறது. அடுத்து யாரோ?. இந்தப் படத்தில் பிரபுவுக்கு சப்போர்டிங் ரோல். மாணவர்கள் மாறுவார்கள், ஆசிரியர்கள் மாறுவார்கள் ஆனால் கல்லூரியும் காதலும் தொடர்ந்து அங்கேயே இருக்கும் என்ற கருத்தில் வந்து நல்ல வெற்றியைப் பெற்ற படம்.

ஆண்களை நம்பாதே

ஆனந்த விகடனில் ஸ்டெல்லா புரூஸ் எழுதிய தொடர்கதை அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் பாண்டியன் நடிப்பில் வெளியானது. இந்தத் தொடர் விகடனில் வந்த போது பலராலும் ரசிக்கப் பட்டது. ஆனால் படம்?. சென்னையில் ஒரு அலுவலகத்தில் வேலை செய்யும் சற்று குண்டான வைத்தியநாதன் என்பவனுக்கு தன் சக பெண் அதிகாரி மேல் காதல். அவனுக்கு காதலை சொல்ல தயக்கம். அவனது இமேஜை உயர்த்தி அதன் மூலம் காதல் வளர அவன் நண்பர்கள் முயற்சிக்கிறார்கள். முடிவு என்ன என்பதே? கதை. இந்தத் தொடருக்கு மணியம் செல்வன் அசத்தலான ஓவியங்கள் வரைந்திருந்தார். வைத்தி என்பவனின் தோற்றம் எல்லோர் மனதிலும் படிந்திருந்தது. பாண்டியன் அந்த கேரக்டருக்கு ஒட்டவேயில்லை. திரைப்படமாக்கும் போது சென்னையை ஊட்டியாக மாற்றியிருந்தார்கள். ஸ்டெல்லா புரூஸ் இயல்பான நகைச்சுவையை கதையில் கொடுத்திருந்தார். படத்தில் கதையோட்டத்திற்க்கு பொருத்தமில்லாத (செந்தில்) நகைச்சுவைக் காட்சிகள் கதையின் பீலைக் குலைத்துவிட்டன. பாடல்களும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

நன்கு காதலித்த பெண்ணை கல்யாணம் செய்தபின் அந்தக் காதலே வெறுப்பாய்த் தோன்றும். பேசாமல் நம் காதல் தோற்றிருக்கலாமே, இனிமையான நினைவுகளாவது மிஞ்சியிருக்கும் என்ற எண்ணம் தோன்றும். அது போல நல்ல கதையை படமாக எடுத்துக் கெடுக்காமல் இருந்தால் அந்தக்கதையின் உணர்வாவது மனதை சுகப்படுத்திக் கொண்டிருக்கும்.

இலங்கேஸ்வரன்

ராமாயனத்தின் இன்னொரு வடிவமான ஆனந்த ராமாயனத்தில் ராவணன் சீதைக்கு தந்தை என்றும், மகள் பாசத்தின் காரணமாகவே அவளை சிறையெடுத்து சென்றார் என்றும் கதை இருக்கும். இதை ஆர் எஸ் மனோகர் நாடகமாக நடத்திவந்தார். பின் அவரே ராஜேஷை நாயகனாக (ராவணனாக) வைத்து இந்தப் படத்தை தயாரித்தார். எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. மேலும் அப்போது ஆர் எஸ் எஸ் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் வளர்ந்து கொண்டிருந்தது. பஜ்ரங் தள், ராம சேனா போன்ற இயக்கங்கள் இங்கு இல்லை. பி ஜே பியோ இந்திராகாந்தி அனுதாப அலையில் சிக்கி இந்தியா முழுவதற்க்குமே இரண்டு எம் பிக்களை மட்டும் பெற்றிருந்தது. அப்ப்டியென்றால் தமிழ்நாட்டில்? அதனால் இந்தப் படத்திற்க்கு ஆதரவாகவோ எதிர்ப்பாகவோ குரல் எழும்பி விளம்பரம் கிடைக்கவில்லை. எம் ஆர் ராதா படைத்த இன்னொரு வடிவமான கீமாயாணம் படமாக எடுக்கப்பட்டால் இப்போதுள்ள சூழ்நிலைக்கு நல்ல விளம்பரம் கிடைக்கும்.

அன்புள்ள அப்பா

அபியும் நானும் படத்தின் முன்னோடி என்று சொல்லலாமா? முடியாது நிறைய வித்தியாசங்கள். அபியில் தாய் இருக்கும் போதும் மகளிடம் ஏற்படும் பாசம், குழந்தைப் பருவம் முதல் காட்டப்பட்டிருக்கும். அன்புள்ள அப்பாவில் மனைவி இறந்துவிட்டதால் மகளின் மேல் காட்டும் அதீத பாசம். இள வயதில் இருந்துதான் கதை ஆரம்பிக்கும். முதல் மரியாதை, படிக்காதவன் படங்களில் மிக குண்டாக தோற்றமளித்த சிவாஜி, இப்படத்தில் உடல் இளைத்து ட்ரிம்மாக காணப்படுவார். மகள் திருமணம், பிரிவு ஆகியவற்றால் வருந்தி சிவாஜி அம்ம்ம்ம்மாமா என்று இழுத்து பேசும் வசனமே இன்றும் மிமிக்ரி கலைஞர்கள் வாய்க்கு அல்வாவாக இருந்து வருகிறது. நதியா போன்ற மகள் பிரிந்தால் சோகம் வராதா என்ன?

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

கமலின் விக்ரம் படத்தை இயக்கிக் கொண்டிருந்த ராஜசேகர் இடையில் ரஜினியின் மாவீரன் படத்தை இயக்க சென்றுவிட கமல் தன் நண்பர் சந்தான பாரதி உதவியுடன் படத்தை முடிக்க வேண்டியதாயிற்று. அந்த அன்பில் சந்தான பாரதிக்கு கொடுத்த படம் தான் இது. விக்ரமில் வில்லனாக நடித்த சத்யராஜே இதில் நாயகன். பாடல்கள் இல்லாத மிகச்சில தமிழ்படங்களில் (அந்தநாள், குருதிப்புனல்) ஒன்றாகவும் இந்தப்படம் விளங்குகிறது.

இந்தப்படத்தின் சிறப்பு காவல்துறை அதிகாரியை இயல்பாய் காட்டியது. தியாகராஜன் நடித்த காவல், ரஞ்சித் நடித்த பீஷ்மர், அமீரின் ராம், மிஷ்கினின் அஞ்சாதே ஆகிய சில படங்களில் தான் காவல்துறையை இயல்பாக சித்தரித்திருப்பார்கள். ஹீரோ காவல்துறை அதிகாரியாய் இருந்தால் சூப்பர் ஹீரோவாகவும், வில்லன் போலீஸாய் இருந்தால் கொடூரமானவனாகவும் காட்டுவதே நம் பண்பாடு.

இந்த ஆண்டு சத்யராஜுக்கு மிக மிக முக்கியமான ஆண்டு. வேதம் புதிதுவில் பாலுத்தேவர், மக்கள் என் பக்கத்தில் சாராய அதிபர் சாம்ராஜ், பூ விழி வாசலிலேவில் மண வாழ்க்கையில் தோல்வியுற்று, அனாதை ஊமைச் சிறுவனை வளர்க்கும் பாத்திரம், சின்னத்தம்பி பெரிய தம்பியில் இயல்பான கிராமத்தான், ஜல்லிக்கட்டில் கோபக்கார இளைஞன், முத்துக்கள் மூன்றில் எதிர் நாயகன் என ஒன்றுக் கொன்று வித்தியாச வேடங்கள்.

சத்யராஜ் சமீபத்திய பேட்டியொன்றில் விஜய் பூ விழி வாசலிலே பட ரீமேக்கில் நடித்தால் நன்றாக இருக்கும் என சொல்லியிருந்தார். நிச்ச்யம் விஜய்க்கு இந்த வேடம் பொருந்தாது. பல்வேறு உணர்ச்சிகளை சத்யராஜ் அனாயாசமாக இப்படத்தில் வெளிப்படுத்தியிருப்பார். விஜய்க்கு மனிதன், வேலைக்காரன் போன்ற ரஜினி படங்கள்தான் பொருத்தமாய் இருக்கும்.

காணிநிலம்

அருண் மொழி என்பவர் இயக்கத்தில் வெளியான படம். இதுதவிர இவர் ஏர்முனை என்னும் படத்தையும் இயக்கியிருந்தார். விவசாயிகளின் பிரச்சினையை பேசிய இந்தப் படம் வெற்றி பெறவில்லை.

ஆனந்த்

பிரபு, ராதா நடிப்பில் இளையராஜா இசையில் சி வி ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான படம். பணக்கார இளைஞனுடன் (பிரபு) முதலில் ஈகோ மோதல், அப்புறம் காதல், பின் தன்னை சந்தேகப் பட்டுவிட்டானே என்று காதலை தூக்கியெறிந்து விட்டு இன்னொருவனை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கும் வேடத்தில் ராதா அசத்தியிருப்பார். இந்தப்படத்திற்க்குப் பின் ராதா அழகாக ஆகிவிட்டார். ஆமாம் அதற்க்கு முன்னால் அவர் மிக அழகாக இருந்த கடைசி சில படங்களில் இதுவும் ஒன்று. படம் வெற்றி பெறாவிட்டாலும் இளைஞர்களை கவர்ந்தது.

கூட்டுப்புழுக்கள்

ரகுவரன், அமலா நடிக்க ஆர் சி சக்தி இயக்கிய படம். அமலா மங்கா என்னும் கேரக்டரில் நடித்திருந்தார். தற்கால மெகா சீரியலுக்கு கதைக்கருக்களை தரும் படங்களில் இதுவும் ஒன்று. (இன்னொன்று : அவள் ஒரு தொடர்கதை)

மனைவி ரெடி

ஆண்பாவத்தின் பெரு வெற்றிக்குப் பின் பாண்டியராஜன் இயக்கத்தில் வெளிவந்த படம். ரசிக்கும் படியான காட்சிகள் பல இருந்தாலும் பெரிய வெற்றி இல்லை.

பூக்கள் விடும் தூது


இளவயதிலேயெ மரணமடைந்த மோனிஷா அறிமுகமான படம். கவுண்டமணிக்கும் முக்கிய வேடம். டி ராஜேந்தர் இசையில் நல்ல பாடல்கள். இளவயது காதலை சொல்லிய படம். இதுதவிர கூலிக்காரன் படத்திற்க்கும் இந்த ஆண்டு டி ஆர் இசை அமைத்திருந்தார்.

இந்த ஆண்டில் எல்லாவகைப் படங்களும் வந்து அவற்றின் தரத்திற்க்கேற்ப வெற்றியும் பெற்றன.

51 comments:

Cable சங்கர் said...

சின்னப்பூவே மெல்லப்பேசு படம் வந்த காலத்தில் எல்லாம் ஏபுள்ள கருப்பாயி தான் மாணவர்களின் விருப்ப பாடலாய் இருந்த்து.. ம்ஹூம்ம்.. நான் அந்த பாடலை பாடியே என் ஜூனியர் இலங்கை பெண் ஒருத்தியை கரெக்ட் பண்ணியது ஞாபகம் வருகிறது.

Cable சங்கர் said...

ஆனந்த படம் மொக்கையானாலும், இளையராஜாவின் பாடல்கள் சூப்பர். இது ஒரு தெலுங்கு படத்தின் ரீமேக் முரளி.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//மனைவி ரெடி//

கொட்டுவது எப்படி அழகாகச் சொல்லிக் கொடுத்திருப்பார்கள்.

நாயகனுக்கு ஆண்மை போய்விட்டது என்னும் விஷயத்தைக் காமெடியாகக் காட்டி இருப்பார்கள்.

நாயகிக்கு இன்னொரு திருமணம் செய்ய மேடை ஏறிய பின்னர் வாந்தி எடுத்து கர்ப்பம் எனக் காட்டி கொஞ்சம் பூந்து விளையாடி யிருப்பார்கள்.

ஆனாலும் பனிரண்டாம் வகுப்பு மாணவனுக்கு கல்யாணம் பண்ணி நமது வயித்தெரிச்சலைக் கொட்டிக் கொண்டதுதான் படத்தின் தோல்விக்குக் காரணம் என்று நினைக்கிறேன்,

காதலுக்கும் பாசத்துக்கும் உள்ள வித்தியாசத்தை அழகாகச் சொல்லியிருப்பார்.

கே.என்.சிவராமன் said...

முரளி,

தகவலுக்காக...

'கடமை கண்ணியம் கட்டுப்பாடு' மம்முட்டி நடித்த ஒரு மலையாளப் படத்தின் ரீமேக். 'கூட்டுப் புழுக்கள்' அனுராதாரமணனின் கதை. நண்பர் கேபிள் சங்கர் கூறியது போல் 'ஆனந்த்' தெலுங்கு ரீமேக். 'தேவதாஸ்' படத்தை முன்மாதிரியாக வைத்து அந்தப் படத்தை அங்கு எடுத்தார்கள் :)

'அன்புள்ள அப்பா', இயக்குநர் ஏ.சி. திருலோகசந்தரின் இயக்கத்தில் வந்த கடைசிப் படம் என நினைக்கிறேன்.

முரளிகண்ணன் said...

கேபிள் சார் பகிர்தலுக்கு நன்றி.

சுரேஷ் :-)), அதுவும் பாண்டியராஜன் தந்தையின் நண்பர் கேரக்டர் கூடுதல் சுவராசியம்.

பைத்தியக்காரன்
தங்கள் வருகைக்கும், மேலதிக தகவல்களுக்கும் நன்றி.
(அடிக்கடி வந்து போங்க சார்)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//இப்படத்தில் உடல் இளைத்து ட்ரிம்மாக காணப்படுவார். //

அது சரி. அவர் மட்டும் குண்டாகாமல் இருந்திருந்தால் இங்கு ரஜினியும் கமலும் சிவகுமார் மாதிரி ஆகியிருப்பார்கள்.

கார்க்கிபவா said...

தலைவரை குறைத்து மதிப்பிட்டதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன் :))

அத்திரி said...

தல வழக்கம் போல் அருமை .....

அத்திரி said...

//கார்க்கி said...
தலைவரை குறைத்து மதிப்பிட்டதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன் //

நம்ம தலையோட நடிப்பு மதிப்பு தெரியாதா..........

கே.என்.சிவராமன் said...

//(அடிக்கடி வந்து போங்க சார்)//

அப்ப உங்க மனசுல நிரந்தரமா நான் இல்லையா? :(

முரளிகண்ணன் said...

கார்க்கி, அத்திரி வருகைக்கு நன்றி

முரளிகண்ணன் said...

சார்,

\\அப்ப உங்க மனசுல நிரந்தரமா நான் இல்லையா? :(
\\

ஐயோ, நான் அப்படி சொல்லவில்லை. இந்த மாதிரி விடுபடும் தகவல்களை எடுத்துக் கொடுங்கள் என்ற அர்த்தத்தில் சொன்னேன்.


உங்களை மறந்தால் தானே நினைப்பதற்க்கு?

CRV said...

As usual excellent post. SAR's first movie was Mudhal Vasantham and not CPMP. His career best is Manasukkul Mathapoo.

மாதவராஜ் said...

சின்னப் பூவே மெல்லப் பேசு கதாநாயகம் சாத்தூர்க்காரர். பாவம் காணாமல் போனவர்.

கட்மை கண்ணியம் கட்டுப்பாடும், கூட்டுப் புழுக்களும் முக்கியமான படங்கள்தாம்.

பழைய ஞாபகங்களை கிளற்விடுகிறது உங்கள் பதிவு நண்பரே!

கே.என்.சிவராமன் said...

//As usual excellent post. SAR's first movie was Mudhal Vasantham and not CPMP. His career best is Manasukkul Mathapoo.//

நண்பர் சிஆர்வி கூறியிருக்கும் இந்த தகவல் சற்றே நெருடுகிறது. சேமர் அஹமத் என்ற பெயர் கொண்ட இளைஞனை 'எஸ்.ஏ. ராஜ்குமார்' என பெயர் சூட்டி அறிமுகப்படுத்தியது (ராபர்ட்) ராஜசேகர்தான். 'சின்னப் பூவே மெல்ல பேசு'தான் எஸ்.ஏ. ஆர்.ரின் முதல்படம்.

மட்டுமல்ல, வித்யாசாகரை அறிமுகப்படுத்தியது கூட (ராபர்ட்)ராஜசேகர்தான். படம் 'பூ மணம்'

narsim said...

கலக்கல் தலைவரே..சத்யராஜின் அந்த அத்தனைபடங்களுமே கலக்கல் ரகம்.. விஜய் ரஜினி படங்களை ரீமேக்கலாம் என்பதில் ரஜினியின் நடிப்பிற்கான அளவீடு தெரிகிறது(?!)

கலக்குவது உங்கள் வழக்கமாகிவிட்டது!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வழக்கம் போல் அருமை .....

"உழவன்" "Uzhavan" said...

பின்னோக்கிப் பார்ப்பதில் எப்போதுமே ஒரு சுகம் உண்டு. தெரியாத பல படங்களின் பெயர்களைத் தெரிந்து கொண்டோம்.

கோபிநாத் said...

அண்ணாச்சி நீங்க கொடுத்துயிருக்குற லிஸ்டுல சின்னப்பூவே மெல்லப் பேசு,கடமை கண்ணியம் கட்டுப்பாடு,ஆனந்த் இந்த படங்கள் தான் பார்த்துயிருக்கேன் மீதி எல்லாம் புதுசு எனக்கு ;)

தகவலுக்கு நன்றி ;)

கார்க்கிபவா said...

/விஜய் ரஜினி படங்களை ரீமேக்கலாம் என்பதில் ரஜினியின் நடிப்பிற்கான அளவீடு தெரிகிறது(?!)
//

ஸ்டிக்கரை பிய்த்தெரிய புறப்படுங்கள் நண்பர்களே

Indian said...

//பல்லவி நாயகியாகவும் அறிமுகமானார்கள்.//

Ramki's pair is Narmada and Prabhu's pair is Sabeetha Anandh.

Indian said...

Pallavi debuted in 'Aruvadai Naal'.

Indian said...

//ஆனந்த்

பிரபு, ராதா நடிப்பில் இளையராஜா இசையில் சி வி ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான படம்.//

Lata Mangeshkar sang a song 'Aaraaro Aaraaro, Nee Vero Naan Vero' for this movie.

புருனோ Bruno said...

//சின்னப்பூவே மெல்லப் பேசு - எஸ் ஏ ராஜ்குமாரும்//

அந்த படத்தில் தான் தமிழில் முதன் முதலில் ஆட்டோமேடிக் ரிதம் பயன்படுத்தப்பட்டதான் கூறுவார்களே

அப்படியா

அதை பயன் படுத்தியவர் யார் தெரியுமா ??

புருனோ Bruno said...

//விஜய்க்கு மனிதன், வேலைக்காரன் போன்ற ரஜினி படங்கள்தான் பொருத்தமாய் இருக்கும்.//

மனிதன் பொருந்துமா என்று தெரியவில்லை

வேலைக்காரன் டாப்பாக பொருந்தும்

மனிதனுக்கு பொருத்தமான்வர் அஜித் தான்

புருனோ Bruno said...
This comment has been removed by the author.
புருனோ Bruno said...
This comment has been removed by the author.
முரளிகண்ணன் said...

சிஆர்வி, மாதவராஜ் தங்கள் வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றிகள்.

நர்சிம், டிவி ராதாகிருஷ்ணன், உழவன், கோபிநாத் தங்களின் தொடர் ஆதரவுக்கு நன்றி


கார்க்கி, பொறுமை.

இந்தியன் தங்கள் பகிர்வுக்கு நன்றி.

டாக்டர் மனிதனும் விஜய்க்கு ஏற்றதுதானே?


டாக்டர் நீங்கள் சொல்லுவது மக்கள் என் பக்கம் படம். ஒரிஜினல் மோகன்லால் நடித்தது. (ராஜாவிண்டே மகன்). அதன் மூலம் ஷிட்னி ஷெல்டன்.

பாலா said...

எனக்கு தெரிஞ்சி.. ‘சி.பூ.மெ.பே’ தான் SAR-ன் முதல் படம்.

அந்த படத்துக்கு ரஹ்மானும் இவரோடு வெர்க் பண்ணியதா எங்கோ படித்த ஞாபகம். சரியா?

முரளிகண்ணன் said...

ஹாலிவுட் பாலா தங்களின் வருகைக்கு நன்றி.

கூற்றும் சரி

சின்னப் பையன் said...

தல வழக்கம் போல் அருமை .....

முரளிகண்ணன் said...

நன்றி சின்னப்பையன்

அருண்மொழிவர்மன் said...

சின்ன பூவே மெல்ல பேச்சு, மக்கள் என் பக்கம் எல்லாம் என் ஆல் டைம் ஃபேவரைட்ஸ்

சின்ன பூவே மெல்ல பேசுதான் எஸ் ஏ ராஜ்குமாரின் முதல் படம். முதல் வசந்தம் படம் அவர் நடித்த முதல் படம் என்று நினைவு

முரளிகண்ணன் said...

அருண்மொழிவர்மன் தங்கள் வருகைக்கு நன்றி.

G.Ragavan said...

சின்னப்பூவே மெல்லப்பேசு படம் ரொம்பப் பிடிக்கும். பாட்டெல்லாம் சூப்பராயிருக்கும். படம் வந்தப்ப தியேட்டர்ல பாத்த நினைவில்லை. பின்னாடி எங்கயோ கேசட்டுல பாத்தேன்னு நெனைக்கிறேன். அதுல நாயகி பேரு பல்லவியா? வேற படத்துல அவங்களப் பாத்ததில்லையே!

ஆண்களை நம்பாதே.... இந்தப் படத்துல வாராய் என் தோழா வாராயோன்னு ஒரு பாட்டு இருக்குன்னு நெனைக்கிறேன்.

இலங்கேஸ்வரன்.... இந்தப் படத்த விஜய் டீவியில் பாத்தேன். பொருத்தமில்லாத பாத்திரத் தேர்வுகள். அதைச் சரி செஞ்சிருந்தாலே கொஞ்சம் ஓட்டிருக்கலாம்.

அன்புள்ள அப்பா...அப்பப்பா....அதுல வர்ர மரகதவல்லிக்கு மணக்கோலம் எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு

கடமை கண்ணியம் கட்டுப்பாடு நல்ல படம்

நந்தா said...

என்னத்தைச் சொல்ல. வழக்கம் போல கலக்கல். கடமை கண்ணியம் கட்டுப்பாடு பிடித்த படங்களில் ஒன்று.

முரளிகண்ணன் said...

ஜி ரா, நந்தா தங்களின் வருகைக்கும் பகிதலுக்கும் நன்றிகள்

ராஜ நடராஜன் said...

வயசாயிடுச்சோ?ஒரு படம் கூட நினைவில்லை போங்க.

SANKAR said...

"ANAND " IS THE REMAKE OF SIVAJI'S "VASANTA MALIGAI". AM I CORRECT.
BEFORE CPMP,SABEETHA ANAND ACTED IN NAIDU HALL ADVTS.
ANOTHER SUPER HIT SONG FROM CPMP IS
"SANGEETHA VANIL SANTHOSAM PADUM SINGARA POONGUILE"

chennaivaasi said...

Murali Sir...wonderful post...a couple of tidbits...

Moondru Muthukkal - muic is by T.R.
Pallavi was introduced in Aruvadai Naal and not CPMP

Aangalai Nambadhe - I believe the director himself acted in that movie & K.S. Ravikumar would have acted in that movie too as he was an Asst. Director...
Your knowledge on movies is amazing..

BTW, can you write a post on the later day directrs showing their face as a small actor in the movie they work as asst. director?

வெட்டிப்பயல் said...

//விஜய் ரஜினி படங்களை ரீமேக்கலாம் என்பதில் ரஜினியின் நடிப்பிற்கான அளவீடு தெரிகிறது(?!)//

Thala,
ella rajini padathaiyum vijayaala remake panna mudiyathu...

oru 4, 5 padam thaan vijayku othu varum. meethi ellam try panna kooda mudiyathu.

Raja chinna roja, Velaikaaran, Thambiku entha ooru intha maathiri romba sila padangal thaan panna mudiyum.

May be Ajith can remake more Rajini movies. appadiyum niraiya padathai yaaralaiyum remake panna mudiyathu. He is Unique.

வெட்டிப்பயல் said...

//டாக்டர் மனிதனும் விஜய்க்கு ஏற்றதுதானே?//

mu.ka,
I dont think so. Vijayku konjam comedy kalanthirukanum. Manithan romba seriousaana masala padam...

G.Ragavan said...

கூட்டுப்புழுக்கள் ரொம்ப நல்ல படம். ஆர்.சி.சக்தியின் படைப்பு. சிறை, கூட்டுப் புழுக்கள் போன்ற நல்ல நாவல்களைத் திரைப்படமாக்கிய அவரைத் திரையுலகம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாதது வருத்தமே. மனக்கணக்கு திரைப்படமும் மிக அருமையாக இருக்கும்.

கூட்டுப்புழுக்கள் படத்தில் வரும் நித்தம் நித்தம் என் கண்ணோடு இன்பக்கனா பாடல் மிக இனிமையானதும்... பாடுவதற்குக் கடினமானதும் கூட.

மேவி... said...

"சத்யராஜ் சமீபத்திய பேட்டியொன்றில் விஜய் பூ விழி வாசலிலே பட ரீமேக்கில் நடித்தால் நன்றாக இருக்கும் என சொல்லியிருந்தார். நிச்ச்யம் விஜய்க்கு இந்த வேடம் பொருந்தாது. பல்வேறு உணர்ச்சிகளை சத்யராஜ் அனாயாசமாக இப்படத்தில் வெளிப்படுத்தியிருப்பார்."

ஆமாங்க .... விஜய்க்கு சூட் ஆகாது அந்த ரோல்........
அந்த ரோல்க்கு தல அஜித் தான் பொருத்தமாய் இருப்பார்......
முகவரி , வாலி படம் பார்த்த பிறகு யாரும் இதை தான் சொல்லுவார்கள்

மேவி... said...

antha varushathila naan chinna payan......
athanal intha padagalai naan tv la konjam konjam than parthu irukkiren

முரளிகண்ணன் said...

ராஜ நடராஜன் வருகைக்கு நன்றி.

சங்கர், ஆனந்த் திரைப்படத்தை வசந்த மாளிகையின் ரீமேக் என்று சொல்ல முடியாது.பல விதங்களில் வேறு பட்டிருக்கும்.

சென்னைவாசி, வருகைக்கு நன்றி. நீங்கள் கூறிய நாட் நன்றாக உள்ளது. விரைவில் முயற்சிக்கிறேன்

முரளிகண்ணன் said...

வெட்டிப்பயல்,

எல்லா ரஜினி படங்களையும் விஜய்யால் ரீமேக் செய்ய முடியாது என்பதுதான் என் கருத்தும்.

வேலைக்காரன் போன்ற படங்கள் விஜய்க்கு எளிது.

அஜீத்துக்கும் சில படங்கள் ஒத்து வரும்.

80க்கு முன் ரஜினி செய்த வேடங்கள் மிகவும் யுனிக்கானவை. அவற்றை ரீமேக் செய்வது கடினம்.


மனிதன் படத்தில் விஜய்க்கு நல்ல ஸ்கோப் இருப்பதாகவே கருதுகிறேன்.

வினுசக்கரவர்த்தியை அரசியலுக்கு இழுப்பது, ரூபிணியுடனான காதல், துள்ளல் பாடல்கள், அக்கா குழந்தையுடன் கொஞ்சல் என சமாளிக்க முடியும் என நினைக்கிறேன்

கருத்துப் பகிர்தலுக்கு நன்றி

முரளிகண்ணன் said...

ஜி ராகவன், தமிழ் திரையுலகம் ஆர் சி சக்தியை பயன்படுத்திக் கொள்ளாதது வருத்தமே.

நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல் அருமையானது.

முரளிகண்ணன் said...

மேவி தங்கள் வருகைக்கு நன்றி.

மக்கள் என் பக்கம் வேடம் கூட அஜீத்துக்கு பொருத்தமாய் இருக்கும் என்பது என் கருத்து.

ராமகுமரன் said...

பூ விழி வாசலிலே என்னை மிக கவர்ந்த படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாத படம். நல்ல சஸ்பென்ஸ் இயல்பான திரைப்படம், பாசில் போன்ற இயக்குனர்களின் படம் மிக அழகாக இருக்கும். பாடல் இல்லாத தமிழ் சினிமாவில் ஏர்போர்ட்டையும் சேர்த்துக் கொள்ளுங்கள்

முரளிகண்ணன் said...

நன்றி ராம்குமார்.

ஏர்போர்ட்டை ஞாபகப் படுத்தியதற்க்கு