June 01, 2009

நானும் கமல்ஹாசனும்

நான் திரைப்படம் பார்க்க ஆரம்பித்த நாட்களில் ரஜினி பில்லா, முரட்டுக்காளை,கழுகு என மிரட்டிக் கொண்டிருந்தார். கமலும் குரு, எல்லாம் இன்ப மயம், சவால் என போட்டி போட்டுக் கொண்டிருந்தார். ஆனால் எனக்கு ஏன் ரஜினியைப் பிடிக்காமல் கமலைப் பிடித்தது எதற்க்காக என்பதற்க்கு உளவியலாளார்கள் தான் பதில் சொல்ல வேண்டும். மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே நான் கமல் ரசிகனாக தெருவில் பார்ம் ஆகிவிட்டேன்.

அதற்கடுத்த ஆண்டு சகலகலாவல்லவன் எங்கள் ஊருக்கு வந்தபோது எங்கள் தெருவே விழாக் கோலம் பூண்டது. முதல் நாள் இரவு டேப்ரிக்கார்டரில் படத்தின் பாடல்களை திரும்பத் திரும்ப போட்டுக் கொண்டேயிருந்தார் எதிர் வீட்டு செல்வம் அண்ணன். அவர் வீட்டு வாசலில்தான் அடுத்த நாள் தியேட்டரில் வைக்கப்படப் போகும் தட்டிகள் தயாராகிக் கொண்டிருந்தன. பழைய சைக்கிள் டயர்களின் உள்ளே எக்ஸ் வடிவத்தில் மூங்கில் தப்பைகளை வைத்து அதை உறுதிப்படித்தி, பின்னர் அதன் மீது வெள்ளைப் பேப்பர்களை ஒட்டி தட்டிகள் தயாரிக்கப்படும்.

அதில் சகலகலா வல்லவனைக் காண வரும் கண்களுக்கு நன்றி. இவண் காதல் இளவரசன் கமல்ஹாசன் ரசிகர் மன்றம் என்று எழுதி கீழே மன்ற உறுப்பினர்களது பெயர்களை எழுதுவார்கள். நான் பாடல்களைக் கேட்டுக்கொண்டே அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென செல்வம் அண்ணன், எழுதிக்கொண்டிருந்தவர்களிடம்

“டேய், இவன் பேரையும் எழுதுங்கடா” என்று சொல்லவும் மனதில் ஒரு இனம் புரியா மகிழ்ச்சி. அடுத்த நாள் தியேட்டருக்குச் சென்று அதை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

நடுநிலைப் பள்ளி நாட்களிலும், பின்னால் மேல்நிலைப் பள்ளி விடுதி வாழ்க்கையிலும் ரஜினி – கமல் சண்டை என்றாலே கமல் அணியின் முக்கிய தளபதி நான் தான். எந்தப் படம் எவ்வளவு நாள் ஓடியது? வசூல் என்ன? போன்ற விபரங்களுடன் சண்டை போடுவேன்.

பின்னர் கல்லூரிக்குள் நுழைந்ததும் மனம் பக்குவப்பட்டது. எல்லாப் படங்களையும் ரசிக்கும் மனநிலை ஏற்பட்டது. கல்லூரி முதலாண்டு தீபாவளிக்கு தளபதியும் குணாவும் ரிலீஸ். நான் ரஜினி,மணிரத்னம்,மம்முட்டி மற்றும் பாடல்களுக்காக தளபதிக்கே ஓப்பன் ஷோ சென்றேன். அங்கு என்னை எதிர்பாராத ”ராஜபந்தா ரஜினிகாந்த்” ரசிகர் மன்றத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

நான் அவர்களிடம் சென்று விட்டுக்கொடுக்காமல் ” குணாவுக்கு டிக்கட் கிடைக்கலை, இங்க தான் பிரீயா இருக்குன்னு வந்தேன்” என்று இனிமா கொடுத்தேன்.

பின்னர் சென்னை வாசம். பல திரைப்பட கலைஞர்கள், நண்பர்கள், சிறு பத்திரிக்கைகள் தற்போது இணையம் என கமலைப் பற்றி கேள்விப்படாத எதிர்மறை செய்திகள் இல்லை.

யாரையும் மதிக்க மாட்டார், கர்வி, துதிபாடிகள் தான் அண்ட முடியும் என அவரைப் பற்றி கேட்காத செய்திகள் இல்லை.

எனக்கும் கமல்ஹாசனுக்கும் உள்ள பிரியமானது கடலளவு. இந்த இங்க் பில்லர்களால் அதை எவ்வளவு உறிஞ்ச முடியும்?

இன்று என் வாழ்வின் முக்கியமான நாள். கமல் நடத்தும் திரைக்கதை பயிற்சிப் பட்டறை வளாகத்துக்குச் சென்றிருந்தேன். தேநீர் இடைவேளை முடிந்து பங்கேற்பாளர்கள் அரங்கத்துக்கு உள்ளே சென்று கொண்டு இருந்தனர். கமல் வெளியே நின்று கொண்டிருந்த தன்னார்வலர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். நான் அருகில் நின்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.


நீல நிற ஜீன்ஸ், பயிற்சிப் பட்டறை சீருடையான சாம்பல் நிற டி சர்ட், சாதாரண லெதர் செருப்பு, கையில் கறுப்பு நிற டயல் மற்றும் வாருடன் கூடிய வாட்ச். உன்னைப் போல் ஒருவனுக்காக ட்ரிம் செய்யப்பட்ட தாடி. 55 வயதில் 30க்கு மேல் மதிப்பிட முடியாத தோற்றத்தில் இருந்தார்.

அங்கே இருந்தவர்கள் அவருடன் புகைப்படம் எடுக்கத் தொடங்கினர். நான் கமலையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட அவரது பி ஆர் ஓ நிகில் முருகன் வாங்க போட்டோ எடுத்துக்குங்க என்று அழைத்தார். மிக மகிழ்ச்சியுடன் என் ஆதர்சத்தின் அருகில் சென்றேன்.

என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். புன் சிரிப்புடன் கேட்டுக் கொண்டார். புகைப்படம் எடுத்து முடித்ததும், ”உன்னைப் போல் ஒருவன் தீபாவளி ரிலீஸா” என அவரிடம் கேட்டேன்.

”இல்லை, அதற்கு முன்னாலேயே வந்து விடும்” என பதிலளித்தார். அனேகமாக ஆகஸ்ட் 15க்கு வரும் என நான் நினைத்துக் கொண்டேன்.

அங்கு இருந்த செக்யூரிட்டிகள், உணவு கொண்டுவந்த கேட்டரிங் சர்வீஸ்காரர்கள் அனைவரும் அவருடன் புகைப்படமெடுத்துக் கொண்டனர். கேட்டரிங் உதவியாளர் ஓடிச்சென்று வண்டி டிரைவரையும் கிளீனரையும் அழைத்து வந்தார். அவர்களுடன் சகஜமாக பேசிக் கொண்டு போஸ் கொடுத்தார். பின்னர் பட்டறை நடக்கும் அரங்கத்தின் உள்ளே சென்றார்.

நான் வெளியே வரும் போது, அங்கு இருந்த செக்யூரிட்டி ஆபிஸர்கள் பேசிக் கொண்டார்கள். “ கமல் அப்படி இப்படின்னாங்க, எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செய்யுறாரு, ரொம்பத் தன்மையா இருக்காரு” என.

கேட்டரிங்காரர்களும் அதே கருத்தை எதிரொலித்தார்கள். அங்கு இருந்த தன்னார்வலர்களும் டிட்டோ.

இந்த மாதிரி ஒரு அவுன்ஸ் தண்ணீர் ஊற்றுவதால் எனக்கும் கமலுக்கும் இடையேயான பாசக் கடலின் நீர் மட்டம் உயர்ந்துவிடுமா என்ன?

49 comments:

seik mohamed said...

1st

சென்ஷி said...

தலைவா.. தமிழ் துள்ளி விளையாடிட்டு இருக்குது :))

//எனக்கும் கமல்ஹாசனுக்கும் உள்ள பிரியமானது கடலளவு. இந்த இங்க் பில்லர்களால் அதை எவ்வளவு உறிஞ்ச முடியும்?//

//இந்த மாதிரி ஒரு அவுன்ஸ் தண்ணீர் ஊற்றுவதால் எனக்கும் கமலுக்கும் இடையேயான பாசக் கடலின் நீர் மட்டம் உயர்ந்துவிடுமா என்ன?//

கலக்குங்க.. கலக்குங்க :-))

வந்தியத்தேவன் said...

நீங்கள் அவருடன் எடுத்த அந்த பொக்கிசத்தை விரைவில் வெளியிடுங்கள்.

நாடோடி இலக்கியன் said...

நான் சொல்ல நினைத்ததை சொல்லி சென்ஷி முந்திகிட்டார்.
கமலுடன் எடுத்த போட்டோவை விரைவில் வலையேற்றுங்கள் முரளி.

சரவணகுமரன் said...

தலைவா, போட்டோ போடுங்க...

Cable சங்கர் said...

இயல்பிலே கமல் ஒண்றும் திமிர் பிடித்தவர் கிடையாது.. எனக்கும் அவருடன் பழகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.. நான் சினிமாவில் நுழைவதற்கு முன்பே.. அவர் வீட்டின் செக்யூரிட்டி கார்டு கம்பெனி ஓனரின் பேரன் என்கிற விதத்தில் நான் அப்போது கமல் வெறியன்.. இன்றைக்கும் எனக்கு அவர் என்னிடம் பழகியது இனிமையான நினைவாக இருக்கிறது.. மற்ற மீடியாக்களை அவர் தேவையில்லாமல் நெருங்க விட மாட்டார்.. அதனால் லேசாக அவர் மேல் உள்ள காழ்புணர்ச்சியில் பேசுவதுதான் அவரை பற்றி தவறாக..

சென்ஷி said...

வலையிலேற்று.. வலையிலேற்று..

தலைவர்களின் படத்தினை பதிவுல சீக்கிரமா ஏற்று

தினேஷ் said...

//நான் அவர்களிடம் சென்று விட்டுக்கொடுக்காமல் ” குணாவுக்கு டிக்கட் கிடைக்கலை, இங்க தான் பிரீயா இருக்குன்னு வந்தேன்” என்று இனிமா கொடுத்தேன். //

மண்ல விழுந்தாலும் மீசையிலே ஒட்டலேனுதான் சொல்லுவோம்...

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஒரு உண்மையான ரசிகனின் பிம்பம்


உங்கள் பதிவு


அருமையான பதிவு

ILA (a) இளா said...

Duplicate Post வந்திருக்குங்க

Sukumar said...

//நான் அவர்களிடம் சென்று விட்டுக்கொடுக்காமல் ” குணாவுக்கு டிக்கட் கிடைக்கலை, இங்க தான் பிரீயா இருக்குன்னு வந்தேன்” என்று இனிமா கொடுத்தேன். //
நல்லா இருக்கே இது.... டெய்லி லைப்ல யூஸ் ஆகும்... ரொம்ப நல்ல பதிவு சார்...

Gokul said...

சகலகலா வல்லவனுக்கு பிறகு கமல் 1983-இல் இருந்து 1987 நாயகன் வரும் வரை மிகப்பெரிய தோல்வி படங்களை கொடுத்தார்.

இந்த நிலையில் கமல் ரசிகனாக இருந்தது மிகவும் 'பெரிய' விஷயம் (நம்ம தல ரசிகர் மாதிரி... :-) )

அப்புறம் கமல் கர்வி அது இது என்று, அது உண்மைதான் என்று பல பேர் சத்தியம் செய்கிறார்கள் , ஆனால் அது கலைஞர்களுக்கே உரித்தான ஒரு demerit, இளையராஜாவும் அதுபோலதான் என்று பலபேர் சொல்வார்கள், கமல் இளையராஜா போன்ற கலைஞர்களை தள்ளி நின்றே ரசிக்க வேண்டும்.

ஒட்டி நின்று ரசிக்க வேண்டும் என்றால் அது ரஜினி, எம்.ஜி.ஆர் போன்ற ஸ்டார்களிடம் சாத்தியம் கமல் , சிவாஜி, இளையராஜா போன்ற கலைஞர்களிடம் சாத்தியம் இல்லை , அதில் தவறொன்றும் இல்லை.

anujanya said...

முரளி, போட்டோ பதிவேற்றும் போது photo shop வேலை கொஞ்சம் ஆதி உதவியுடன் செய்து நாம மூணு பெரும் வர மாதிரி செய்திடுங்க. நானு, கமல், அப்புறம் பரவாயில்ல, நீங்களும் போட்டோவுல வர மாதிரி;

அடாடா, ஆதர்ச நாயகன் பக்கத்துல போயி...எனக்கில்ல சொக்கா. சரி, உங்க ஆட்டோகிராப் போட்டு எனக்கு அனுப்பி வையுங்க.

பட்டறை பற்றியும் விரிவாக எழுதவும். கார்க்கியின் நோட்ஸ் எல்லாம் சரிப்படாது. வேற ஏதோ படம் மட்டும் வரைந்து வைத்திருப்பதாக குசும்பன் சொன்னார்.

அனுஜன்யா

butterfly Surya said...

நன்றி முரளி, நான் எழுதிய பதிவு போலவே இருக்கிறது..

நானும் ஹாலிவுட் பாலாவிடம் நிறைய டிஸ்கஸ் பண்ணிட்டு அப்ளை பண்ண வேண்டும் என்று நினைத்தேன்.

சிறந்த 5 உலக் படங்களையும் தேர்வு செய்து மூன்றிற்கு விமர்சனமும் ரெடி பண்ணினேன்.


ஆனால் அலுவலகத்தில் லீவு கிடைக்காமல் போய்விட்டால் அந்த பாக்கியத்தை தவற விடும் வாய்ப்பை இந்த பிஞ்சு மனம் தாங்காது.


விஷயம் தெரிந்தவர்கள் எல்லாம் தலைகனம் பிடித்தவர்கள் என்பது சில காலி குடங்களின் கருத்து.

அவர் சகலகலாவல்லவர் தான் சந்தேகமில்லை..

யாமறிவோம்


கேபிளாரே ... காழ்ப்புணர்ச்சியில்லை...

எங்க ஊர் பாஷையில் சொன்னா “காண்டு”

கிரி said...

நல்லா எழுதி இருக்கீங்க முரளிகண்ணன்

ராஜ நடராஜன் said...

//ரஜினி,மணிரத்னம்,மம்முட்டி மற்றும் பாடல்களுக்காக தளபதிக்கே ஓப்பன் ஷோ சென்றேன். அங்கு என்னை எதிர்பாராத ”ராஜபந்தா ரஜினிகாந்த்” ரசிகர் மன்றத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.//

கிரி அண்ணன் வந்துட்டுப் போயிட்டாரான்னு தேடிகிட்டே வந்தேன்.எனக்கு முன்னாலதான் வரிசையில நிற்கிறாரு.அதனால பயமில்லாம ஒரு ரகசியம்.(நானும் உங்க கட்சிதானுங்க.)

கோபிநாத் said...

நீங்க கலைஞானிக்கு எத்தனை போஸ்டு போட்டாலும் அதில் நாங்க பின்னூட்டம் போடுக்கிட்டே தான் இருப்போம்ல ;))

அப்படியே கலைஞானியும், பதிவுல திரைஞானி அதான் நீங்க ரெண்டு பேரும் இருக்குற போட்டோவை அனுப்பிச்ச பார்த்து இன்னும் சந்தோஷபடுவோம்ல ;))

முரளிகண்ணன் said...

பார்சா குமரன் நன்றி.

வாங்க சென்ஷி.

வந்தியத்தேவன்,

நிகழ்வு முடிந்து புதன்கிழமை மாலை தருவதாக அவரது பி ஆர் ஓ சொல்லியிருக்கிறார். எப்படியும் இந்த
வாரத்திற்க்குள் வலையேற்றி விடுவேன்

முரளிகண்ணன் said...

வாங்க நாடோடி இலக்கியன், சரவண குமரன்.

இஒந்த வாரத்திற்க்குள் நிச்சயம் ஏற்றிவிடுவேன்.

விரிவான பகிர்தலுக்கு நன்றி கேபிள்.

வருகைக்கு நன்றி சூரியன், ஸ்டார்ஜான்.


ஆமாம் இளா. அவசரத்தில் இரண்டுமுறை பப்ளிஷ் பட்டனை அழுத்தி விட்டேன்.

தெரியாமல், ஒரு பதிவை மட்டும் திரட்டிகளில் இணைத்தேன். இன்னொன்றில் பிளாக்கர் வழியாக அப்துல்லா அண்ணன் உடனே 6 கமெண்டுகள் போட்டு விட்டார்.

அதை நீக்க மனசு வரவில்லை. அதுதான்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நீங்களும் குணாவுக்கு முன்னாடியே தளபதி பார்த்த கோஷ்டியா? அதுதான் தளபதி பெரிய வெற்றி

முரளிகண்ணன் said...

வாங்க சுகுமார் சுவாமினாதன்.

பஞ்ச் டயலாக்குகள பார்த்து யூஸ் பண்ணுங்க.


கோகுல்,

நீங்கள் சொல்லும் இடைவெளியில் காக்கிசட்டை போன்ற வெற்றிப் படங்களூம் வந்தன.

விக்ரம் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு அந்த அளவுக்கு (எதிர்பார்ப்புக்க்கு) ஓட வில்லை. ஆனாலும் அவரின் ரசிகனுக்கு அப்படம் ஏமாற்றமில்லை.

அந்த ஒரு நிமிடம், மங்கம்மா சபதம் போன்றவைதான் எங்களை சோதித்தன.

\\இந்த நிலையில் கமல் ரசிகனாக இருந்தது மிகவும் 'பெரிய' விஷயம் \\

வெயில் காலங்களில் ஆறுகள்தான் வறண்டு போகும். கடல்?

முரளிகண்ணன் said...

வாங்க அனுஜன்யா,

போட்டோ ஷாப்? செஞ்சிடுவோம்.

பட்டறையில் நான் கலந்து கொள்ள வில்லை. அதனால் அதைப்பற்றி பிற ஊடகங்கள் மூலமாக கிடைக்கும் செய்திகளைத் தான் தொகுத்து எழுத முடியும்.


வாங்க வண்ணத்துப்பூச்சியார்,

தங்களின் விரிவான பின்னூட்டத்திற்க்கு
நன்றி.

முரளிகண்ணன் said...

வாங்க கிரி, நன்றி.

வாங்க ராஜ நடராஜன். கிரி ரொம்ப நல்லவர். பயம் தேவையில்லை.

கோபிநாத், வாங்க வாங்க.

நன்றி சுரேஷ்.

ஜோ/Joe said...

தீவிர கமல் ரசிகனாக இருந்தாலும் குணாவுக்கு ஒரு நாள் முன்னரே தளபதி பார்த்தவர்களில் நானும் ஒருவன்.

Vidhya Chandrasekaran said...

ம்ம் அவரோட போட்டோவா? சீக்கிரம் போடுங்க பாஸ்.

நானும் அவரோட டை ஹார்ட் ஃபேன்:)

ராமகுமரன் said...

முரளிகண்ணன் ரசிகர் மன்றம் சார்பில் தலைவரும் அவர் தலைவரும் சேர்ந்து எடுத்த போட்டோவை பதிவில் பதிவிட‌ செய்ய கோரிக்கை வைக்கப்படுகிறது

முரளிகண்ணன் said...

வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி ஜோ

வித்யா வரும் வியாழன் கிடைத்துவிடும். அதைவிட வேறேன்ன வேலை?

ராம்குமார், தாங்காதய்யா, தாங்காது

வெட்டிப்பயல் said...

எனக்கு கமல், ரஜினி ரெண்டு பேரையுமே ரொம்ப பிடிக்கும்.

சின்ன வயசுல நான் விஜயகாந்த் ரசிகன் :)

Bleachingpowder said...

//நான் அவர்களிடம் சென்று விட்டுக்கொடுக்காமல் ” குணாவுக்கு டிக்கட் கிடைக்கலை, இங்க தான் பிரீயா இருக்குன்னு வந்தேன்” என்று இனிமா கொடுத்தேன்//

இதெல்லாம் ரொம்ப லொள்ளு சொல்லீட்டேன். தலைவரை பிடிச்சாலும், ஒத்துக்க மாட்டீங்களே :))

லக்கிலுக் said...

தலைவனை கண்ட தலைவா வாழி!

சண்டியர் கரன் said...

ஆண்டவர் படம் பார்த்த பின்னே ரஜினி படம் பார்க்கும் ( அப்ப தானே இந்த ஆளு படத்தை கிண்டல் செய்ய முடியும்... ) கமல் பக்தன் நான்....

நான் படத்துக்கு போய், இடைவேளைக்கு முன்னேயே தூங்கி விட்ட படம் தான் இந்த தளபதி படம்.... நீங்க எல்லாம் புகழ்கிற மாதிரி அதுல அப்படி ஒன்னுமில்லையே.......

கும்மாச்சி said...

நல்லப் பதிவு. கமல்ஹாசன் என்ற ஒப்பற்றக் கலைஞனின் பெருமை, சில குற்றஞ்சொல்லி பத்திரிகைளால் குறைந்து விடாது.

Jey said...

நல்ல பதிவு. பன்ச் லைன்ஸ் பின்னூட்டங்களிலும் தெரிக்கிறதே!

பயிற்சிப் பட்டறை வந்து பார்க்கணுமுன்னு ஆசை, ஆனா முடியல.
நீங்க எழுதுவீங்கன்னு தான் வெயிட்டிங்க்.. :-)

-விகடகவி

நர்சிம் said...

இவண் மேட்டர் கலக்கல் தல..வெறும் முரளிகண்ணனா? கமல்முரளியா? ஹும்.அதுவொரு காலம்..

அனுஜன்யாவே சைடில் பார்க்க கமல்மாதிரிதானே இருப்பாரு ஃபோட்டா ஷாப் எல்லாம் எதுக்கு? (சிம்லாஸ்பெஷல் கமல்தான் அனுஜன்யா..புதுப் படம் இல்ல..யூத் கமல்தான்)

முரளிகண்ணன் said...

வெட்டிப்பயல், பிளீச்சிங் பவுடர்,
லக்கிலுக் வருகைக்கு நன்றி.

வாங்க சண்டியர் கரன்.

வருகைக்கு நன்றி கும்மாச்சி, விகடகவி.

நன்றி நர்சிம்.

Srinivas said...

// சண்டியர் கரன் said...

நான் படத்துக்கு போய், இடைவேளைக்கு முன்னேயே தூங்கி விட்ட படம் தான் இந்த தளபதி படம்.... நீங்க எல்லாம் புகழ்கிற மாதிரி அதுல அப்படி ஒன்னுமில்லையே.......//

நீங்க தளபதி ன்னு நெனைச்சுகிட்டு குணா வுக்கே போயருப்பீங்கன்னு நெனைக்கறேன் ...உள்ள போனவுடனே தூங்கியிருப்பீங்க...கனவுல தளபதி ஓடியிருக்கும்...அதா நெனைச்சுகிட்டு படம் சரியில்லைனு சொல்றீங்க....
தளபதி அட்டகாசமான திரைப்படம் ...அனைத்து தரப்பினரும் விரும்பி பார்க்கும் படம்.
தளபதி யும் குணா வும் ரிலீஸ் ரிலீஸ் ஆனா போது , கமல் ரசிகர்கள் ..
" தளபதி பார்த்து தலைவலி வந்தவர்கள் குண பார்த்து குணம் அடையுங்கள் என்று எழுதினார்கள் "
ஆனால், நடந்ததோ!!! " குணா பார்த்து மனநலம் குன்றியவர்கள் தளபதி பார்த்து தலைத் தெளுந்தார்கள் "

எது எப்படியோ ,ரஜினி க்கு அடுத்து பிடித்தது என்றால் அது கமல் தான்

சண்டியர் கரன் said...

//Srinivas said...
நீங்க தளபதி ன்னு நெனைச்சுகிட்டு குணா வுக்கே போயருப்பீங்கன்னு நெனைக்கறேன் ...
//

நீங்க குணா ன்னு நெனைச்சுகிட்டு தளபதிக்கு போயருப்பீங்கன்னு நெனைக்கறேன்...அதான் தளபதியை போய் அட்டகாசமான திரைப்படம் என்று சொல்றீங்க....

Bleachingpowder said...

//சண்டியர் கரன் said...
நீங்க குணா ன்னு நெனைச்சுகிட்டு தளபதிக்கு போயருப்பீங்கன்னு நெனைக்கறேன்...அதான் தளபதியை போய் அட்டகாசமான திரைப்படம் என்று சொல்றீங்க....//

நீங்க தூங்கினதுனால தளபதி நல்ல படமில்லைன்னு ஆயிடாது, கை வலிக்க வலிக்க தட்டி பார்த்தாலும் கமலோட எல்லா படமும் நல்ல படமும் ஆகாது.

முப்பது வருசமா வாய கொடுத்து வாங்கி கட்டறதுல கமல் ரசிகர்களுக்கு ஈடு ஈனையே கிடையாது.

கார்க்கிபவா said...

/
பட்டறை பற்றியும் விரிவாக எழுதவும். கார்க்கியின் நோட்ஸ் எல்லாம் சரிப்படாது. வேற ஏதோ படம் மட்டும் வரைந்து வைத்திருப்பதாக குசும்பன் சொன்னார்//

இருக்கட்டும்.. கொஞ்சம் பிசியா இருக்கேன்..

/அனுஜன்யாவே சைடில் பார்க்க கமல்மாதிரிதானே இருப்பா//

எந்த கமல் சகா?
இந்தியன் அப்பா கமலா?
இந்திரன் சந்திரன் மேயர் கமலா?
தசாவதாரம் பாட்டி கமலா?
அவ்வை சன்முகி கமலா?
குணா கமலா?
*** கமலா?
*** கமலா?
*** கமலா?
*** கமலா?

பரிசல் கேள்வியின் கடைசி வார்த்தைகளை மட்டும் பாருங்க

Joe said...

நல்ல பதிவு.
ஒரு கலைஞனுக்கே உரிய கர்வம் கமலுக்கு உண்டு, அதில் ஒன்றும் பெரிய தவறில்லை.

ஒரு கலைஞனின் வாழ்வை, உணர்வுகளை சாதாரண மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாது. வெளியிலே பகட்டும், ஆடம்பரமும், சந்தோஷமும் நிறைந்ததாக தெரிந்தாலும், அவன் படும் வலியும், வேதனையும், துயரங்களும் அவன் மட்டுமே அறிவான்.

அன்பே சிவம் ஒன்று மட்டுமே போதும், கமல் எப்பேர்பட்ட திறமைசாலி என்பதை நிரூபிக்க. கமலின் இந்த படம், ரஜினியின் அந்த படத்தை விட சிறந்தது என்பது போன்ற பள்ளிச் சிறுவர்களின் சண்டையில் நான் கலந்து கொள்ள விரும்பவில்லை.

Thamira said...

பிரமாதம் முரளி.. காதலா காதலாவுக்கு சுவர் விளம்பரம் எழுதியது நினைவுக்கு வருகிறது. சேம் டூ யூ.!

M.G.ரவிக்குமார்™..., said...

நீங்க இன்னும் கமல் ரசிகன் தானா?உங்க இந்தப் பதிவு lite - ஆ டவுட்டைக் கிளப்புதே!......

தீப்பெட்டி said...

//நான் அவர்களிடம் சென்று விட்டுக்கொடுக்காமல் ” குணாவுக்கு டிக்கட் கிடைக்கலை, இங்க தான் பிரீயா இருக்குன்னு வந்தேன்” என்று இனிமா கொடுத்தேன்.//

கலக்கல்...

கமலோட எடுத்த போட்டாவ போடுங்க பாஸ்..

Joe said...
This comment has been removed by the author.
ரவிஷா said...

எனக்கும் கமலைப் பார்த்து பேச ஆசைதான்! ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லையே! ஆனால் பாருங்கள் என் மாமனாருக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது! சுமார் 40 வருடங்களுக்கு முன் என் மாமனாரிடம் நாடகங்களில் நடித்திருக்கிறார் கமல்! இந்த உரலை சுட்டுங்கள்:
http://therinjukko.blogspot.com/2008/02/blog-post.html

Unknown said...

how long murali,i saw the poster near icsr-madan

Paraashakthi said...

வியாபாரிகளும் எதிகால அரசியல் வாதிகளும்
நிறைந்திட்ட சினிமா உலகில் - ஒரு நல்ல
நடிகரின் ரசிகனாக இருப்பது கூட பெருமைக்குரியதே!

Srinivas said...

//நீங்க குணா ன்னு நெனைச்சுகிட்டு தளபதிக்கு போயருப்பீங்கன்னு நெனைக்கறேன்...அதான் தளபதியை போய் அட்டகாசமான திரைப்படம் என்று சொல்றீங்க...//

ஹா ஹா ஹா ...தெரிந்ததே புதை குழியில் விழும் பழக்கம் எனக்கில்லை ...
அதனால் குணா படத்திற்கு செல்லவே இல்லை..

முகில் said...

எனக்கு குணா தியேட்டரில் பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. வீட்டில் வலுக்கட்டாயமாக தளபதிக்கு இழுத்துச் சென்றுவிட்டார்கள். அதனாலேயே அந்தப்படம் எனக்குப் பிடிக்கவில்லை. அதென்னவோ ரஜினி படங்களை தியேட்டருக்குச் சென்று பார்ப்பதில் எனக்கு விருப்பமே இருப்பதில்லை.

நீண்ட வருடங்களுக்குப் பின் சமீபத்தில்தான் கேடிவியில் குணா சுதந்தரமாக எந்தத் தொந்தரவும் இன்றி பார்த்து ரசித்தேன்.

நடிப்பை ரசிக்கத்தானே சினிமாவைப் பார்க்கிறோம். அதைக் குறைவின்றிக் கொடுப்பவர்களைத்தானே ரசிக்க முடியும். ;)