November 29, 2008

தமிழ்சினிமாவின் முக்கிய காதல் படங்கள் பகுதி - 3

அன்புடன்

அருண்விஜய், ரம்பா, வினுசக்கரவர்த்தி,வையாபுரி நடிப்பில் வெளிவந்த படம். கதையின் நாயகியை கடைசிவரை காட்டாமல்,பெண்ணின் தாழ்வு மனப்பான்மையை திரையில் கொண்டுவந்த படம் இது. இதற்க்கு முன்னால் தாமரைநெஞ்சம் (நாகேஷ்), சொல்லாமலே (லிவிங்ஸ்டன்), அலைபாயுதே (விவேக்) என ஆண்கள் தாழ்வுமனப்பாண்மையை சித்தரித்த பல படங்கள் வந்திருக்கின்றன. தமிழ் சினிமாவில் பெண்களின் தாழ்வுமனப்பான்மை என்பது அவர்களின் பொருளாதார நிலையாகவே காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது. தனக்கு அழகில்லை என்பதால் காதலனை சந்திக்க தயங்கும் பெண்ணை இப்படம் காட்டியது.

காவல்துறை ஆய்வாளரின் (வினுசக்கரவர்த்தி) மகள் கறுப்பு நிறமுடையவள். அவள் ஒரு ஓவியனை(அருண் விஜய் அப்போது அருண்குமார்) காதலிக்கிறாள். அவனின் முன்னேற்றத்துக்கு தன் முகம் காட்டாமல் உதவுகிறாள். நண்பர் குழாமோ அவ்வாறு உதவுவது தங்களின் தோழியோ (ரம்பா) என சந்தேகித்து பின் தெளிவடைகிறார்கள். தன்னை காதலிப்பவளை சந்திக்க பெருமுயற்சி எடுக்கிறான் ஓவியன். நோய்வாய்ப்பட்ட தாயையும் மறக்கிறான். அப்பெண்ணின் தந்தையின் தவறான புரிதலால் நிலைமை சிக்கலாகிறது. காதலி முகம் காட்டாமலேயே உலகை விட்டு செல்கிறாள்.

தன்னை பார்க்க துடிக்கும் காதலனுக்காக கடிதம் அனுப்புகிறாள் பெண். இன்று மாலை கோவிலுக்கு குறிப்பிட்ட நிற உடையில் வருவதாக. காதலன் நண்பர் குழாமுடன் சென்று கோவிலையே அலசுகிறார்கள். அவள் வரவில்லை. தன் இறுதி கடிதத்தில் அவள் சொல்லுகிறாள் "அன்று நான் கோவிலுக்கு சொன்னபடியே வந்திருந்தேன், நீங்கள் நிறமான பெண்ணாகவே தேடி தேடி கேட்டீர்கள். என்னை கேட்கவேஇல்லையே நீயா என்று?" படத்தின் மையமே இதுதான். கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் அருமையான படமாக வந்திருக்க வேண்டிய கதைக்கரு. பட்ஜெட் மற்றும் பல காரணங்களால் போதிய கவனம் பெறப்படாமல் போனது இந்த படம்.

இந்த படம் நம்மிடம் கேட்கும் கேள்விகள் பல.

ஊடகங்கள் (சிகப்பழகு கிரீம்) தொடர்ந்து சிகப்பு தான் அழகு என அனைவர் மனதிலும் பதிய வைக்கிறதே, இதனால் கறுப்பு நிறமுடைய பெண்களின் மனம் என்ன பாடுபடும்?

முதலில் 36 26 36 என்றார்கள், இப்பொழுது சைஸ் ஜீரோவில் வந்து நிற்கிறார்கள். குண்டாக இருக்கும் பெண்கள் சாபம் பெற்றவர்களா?

பெற்றோர் கூட இவ கறுப்பா பிறந்துட்டா, நெறைய சேர்க்கனும் என்று சொல்லி வளர்க்கும் போது அவளுக்கு எப்படி சுயமரியாதை வளரும்?

ஒரு தெருவில், கல்லூரியில்,அலுவலகத்தில் சிகப்பு நிற பெண்ணுக்கு கிடைக்கும் அதே மரியாதை நிறம் குறைந்த பெண்ணுக்கு கிடைக்கிறதா?

7 G ரெயின்போ காலனி

வாழ்ந்து கெட்ட குடும்பத்து பெண்(சோனியா அகர்வால்), அவளை வெறித்தனமாக காதலிக்கும் (ரவிக்ருஷ்ணா) லோயர் மிடில் கிளாஸ் பையன். அவள் மனமும் கரைகிறது, ஆனால் குடும்ப சூழ்நிலையால் செல்வந்தனை மணக்க வேண்டிய நிலை. உன் காதலுக்கு என் உடலை கொடுக்கிறேன், எடுத்துக்கொண்டு என்னை மறந்து விடு என செயல்படுத்துகிறாள். தொடரும் விபத்தில் அவள் இறக்க, புத்தி பேதலிக்கிறான் நாயகன்.

செல்வராகவன் இயக்கத்தில், யுவனின் இசையில், அர்விந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் ஏ எம் ரத்னம் தயாரித்த படம். நான் முன்பு பணிபுரிந்த இடத்தில், பயிற்சிக்கு வந்த பெண்கள் இந்த படம் பார்க்க போவதால் மாலை ஒரு மணி நேரம் பெர்மிஷன் வேண்டும் என கேட்டு வந்தார்கள். நான் இந்தப்பட தீம் நன்றாக இருக்காது, வேறு படத்துக்கு போங்கள் என சொன்னேன். அவர்களோ கேட்பதாயில்லை. அடுத்த நாள் அவர்களிடம் படம் பற்றி விசாரித்தேன். எங்கள் அனைவருக்கும் படம் பிடித்திருந்தது, க்ளைமாக்ஸில் சோனியா பயன்படுத்திய தலையணை,பாயை தூக்கிகொண்டு அவன் ஓடிவரும் போது அழுதுவிட்டோம் என்று கூறினார்கள்.

எனக்கு காதல் தோல்விப் பாடல்கள் மிக பிடிக்கும். பூங்காற்றிலே (உயிரே), உன்னை நினைச்சேன் (அபூர்வ சகோதரர்கள்), எங்கிருந்தாலும் வாழ்க (நெஞ்சில் ஓர் ஆலயம்), டீ ஆரின் ஆரம்பகால படங்களின் காதல் தோல்விப் பாடல்கள் என கலைவையாக போல்டரில் போட்டு வைத்து கேட்டுக்கொண்டிருப்பேன். நினைத்து நினைத்து பார்த்தேன் பாடலை மட்டும் மூன்று முறை காப்பி செய்து அதில் வைத்திருக்கிறேன்.

இயற்கை

ஜனநாதன் இயக்கத்தில், ஏகாம்பரம் ஒளிப்பதிவில், வித்தியாசாகர் இசையில், அருண்குமார், ஷாம், குட்டி ராதிகா, சீமா பிஸ்வாஸ், கருணாஸ் நடிப்பில் வெளிவந்த இந்தப்படம் மாநில, மத்திய அரசு விருதுகளை பெற்றது. தஸ்தவாஸ்கியின் வெண்ணிற இரவுகளின் சாயல் இந்த படத்தில் இருக்கும். சஞ்சய் லீலா பன்ஸாலி இயக்கத்தில், ரண்பீர் கபூர் (ரிஷிகபூர் மகன்), சோனம் கபூர் (அனில் கபூர் மகள்) நடிப்பில், ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் வெளியான சவாரியா படம் இப்பட கருவை தழுவியதே.

துறைமுகப் பகுதியில் வியாபாரம் செய்யும் குடும்பபத்துப் பெண்(குட்டி ராதிகா), ஒரு கப்பல் கேப்டனை (அருண்) காதலிக்கிறாள். அவன் திரும்பி வருவதாக சொல்லிப் போகிறான். மாதங்கள் கடக்கின்றன. அத்துறைமுகத்துக்கு வரும் மாலுமி (ஷாம்) ஒருவன் அவளிடம் காதல் கொள்கிறான். அவளோ தன் பழைய காதலை சொல்லி மறுக்கிறாள். காப்டன் கடல் புயலில் இறந்து விட்டதாக தகவல். மாலுமியை அவள் மணமுடிக்க அரை மனதுடன் சம்மதிக்கிறாள். பின்னர் என்ன ஆனது?
ஷாமின் காதல், ராதிகாவின் உணர்ச்சிப் போராட்டம் என அருமையாக கொண்டு சென்றிருப்பார் ஜனநாதன். இப்படத்தில் வரும் காதல் வந்தால் சொல்லி அனுப்பு பாடல் காதலியிடம் நல்ல சிக்னல் கிடைக்காதவர்கள் காலர் டியூனாக வைத்துக்கொள்ள ஏற்றது.

22 comments:

அத்திரி said...

//இப்படத்தில் வரும் காதல் வந்தால் சொல்லி அனுப்பு பாடல் காதலியிடம் நல்ல சிக்னல் கிடைக்காதவர்கள் காலர் டியூனாக வைத்துக்கொள்ள ஏற்றது.//

லொள்ளு????????

அருன் விஜய் நடித்த அந்த திரைப்படத்தின் கதைக்கரு ஒரு கன்னட படத்தில் இருந்து சுட்டது என நினைக்கிறேன்.

இயற்கை திரைப்படம் ஒரு தெளிவான நீரோட்டத்தை போன்றது.

7ஜி -------- யுவன் தான் இதில் கதாநாயகன்.

cable sankar said...

தொடரட்டும் உங்கள் பணி..

கானா பிரபா said...

வித்தியாசமான தொகுப்புக்கு நன்றி

narsim said...

அடாது மழையிலும் ரம்மியமான பதிவு முரளிகண்ணன்.. 7ஜி, இயற்கை இரண்டுமே மிக வித்தியாசமான‌ காதல் களம் கொண்ட படங்கள்..

//ஊடகங்கள் (சிகப்பழகு கிரீம்) தொடர்ந்து சிகப்பு தான் அழகு என அனைவர் மனதிலும் பதிய வைக்கிறதே, இதனால் கறுப்பு நிறமுடைய பெண்களின் மனம் என்ன பாடுபடும்?
முதலில் 36 26 36 என்றார்கள், இப்பொழுது சைஸ் ஜீரோவில் வந்து நிற்கிறார்கள். குண்டாக இருக்கும் பெண்கள் சாபம் பெற்றவர்களா?
//

நச் கேள்விகள்..

அரவிந்த் said...

\\ஒரு தெருவில், கல்லூரியில்,அலுவலகத்தில் சிகப்பு நிற பெண்ணுக்கு கிடைக்கும் அதே மரியாதை நிறம் குறைந்த பெண்ணுக்கு கிடைக்கிறதா? \\

சத்தியமாக இல்லை. இதை சொல்ல எனக்கும் வெட்கமாக, அசிங்கமாக உள்ளது. ஆனால், மறுக்க முடியவில்லை.

முரளிகண்ணன் said...

அத்திரி, சங்கர், கானா பிரபா, நர்சிம் வருகைக்கு நன்றிகள்

முரளிகண்ணன் said...

அரவிந்த் வருகைக்கு நன்றி

நாடோடி இலக்கியன் said...

அன்புடன் படம் இப்போதுதான் கேள்வி படுகிறேன்,அந்த படத்தில் நீங்கள் குறிப்பிட்டு இருந்த காட்சி அருமை.
நல்ல பதிவு.

நவநீதன் said...

அன்புடன்,
7 G ரெயின்போ காலனி,
இயற்கை.

காதல் படங்களை நல்ல பார்வையாளனாக பார்த்திருக்கிறீர்கள்...

"அன்புடன் " - யோசிக்க வைக்கும் கேள்விகள்...

தமிழ் பிரியன் said...

///எனக்கு காதல் தோல்விப் பாடல்கள் மிக பிடிக்கும். பூங்காற்றிலே (உயிரே), உன்னை நினைச்சேன் (அபூர்வ சகோதரர்கள்), எங்கிருந்தாலும் வாழ்க (நெஞ்சில் ஓர் ஆலயம்), டீ ஆரின் ஆரம்பகால படங்களின் காதல் தோல்விப் பாடல்கள் என கலைவையாக போல்டரில் போட்டு வைத்து கேட்டுக்கொண்டிருப்பேன்.////
என் செல்லில் இது போல் 50 பாடல் வரை இருக்கிறது.... வேலை இல்லாத நேரங்களில் பாடிக் கொண்டிருக்கும்.. சில நேரங்களில் வேலை செய்யும் நேரங்களில் கூட

முரளிகண்ணன் said...

நாடோடி இலக்கியன், நவநீதன், தமிழ்ப்ரியன் தங்கள் வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றிகள்

வெண்பூ said...

நல்ல தொகுப்பு முரளிகண்ணன்.. "நினைத்து நினைத்து" மற்றும் "காதல் வந்தால் சொல்லியனுப்பு" ரெண்டுமே எனக்கும் ரொம்ப ஃபேவரைட் பாடல்கள்...

சரவணகுமரன் said...

அன்புடன் படத்தை டிவியில் பார்த்தபோது, இது இப்படிபட்ட படமா என்று ஆச்சர்யபட்டேன்...

சரவணகுமரன் said...

7 ஜி செல்வராகவனின் மாஸ்டர் பீஸ். "டேய்... அது காவியம்டா" என்று என் நண்பர்களிடன் கூறிகொண்டிருப்பேன்.... :-)

சரவணகுமரன் said...

இயற்கை படத்தின் கிளைமாக்ஸும் அந்த டிரம்ஸ் இசையும் உண்மையிலேயே கலக்கல்...

SUREஷ் said...

க்ளைமாக்ஸில் சோனியா பயன்படுத்திய தலையணை,பாயை தூக்கிகொண்டு அவன் ஓடிவரும் போது அழுதுவிட்டோம் /////

இப்ப புரியுதா... இந்த பொண்ணுங்க ஏன் ஏமந்து போராங்கண்ணு.

அருண்மொழிவர்மன் said...

செல்வராகவனின் காதல் கொண்டேனின் தாக்கத்தால் 7ஜி ரெயின் போ காலணி முதல் நாளேஎ பார்த்தேன். மிகப்பெரிய அதிர்வுகளாஇ ஏற்படுத்திய படம். இதன் பாதிப்பு சில நாட்கள் வரை தொடர்ந்தது.

நல்ல் தொகுப்ப்...


அதுபோல அன்புடன்.... இது ஒரு மென்மையான படம். ஆனால் போஸ்டர்களில் அருண்குமார் கட்டுமஸ்தான உடம்புடன் , வெற்று மேலுடன் நிற்கும் காட்சியை போட்டு, ஒரு ஆக்‌ஷன் படம் போல பில்டப் பண்ணிவிட்டார்கள். அருண் நடித்த சில நல்ல படங்கள் வீணான தோல்வியை நடைந்திருக்கின்றன, உதாரணாம் பாண்டவர் பூமி, அழகாய் இருக்கிறாய்.... இப்படி.

முரளிகண்ணன் said...

வெண்பூ, சரவணகுமரன், சுரேஷ், அறருண்மொழிவர்மன் தங்கள் வருகைக்கு நன்றி

Chuttiarun said...

வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.

http://www.thamizhstudio.com/

Add a Gadget - ல் இதை பயன்படுத்துக

வழி --> Add a Gadget --> select HTML/JavaScript

Title : தமிழ் ஸ்டுடியோ.காம்

Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>

தமிழ்ப்பறவை said...

வித்தியாசமான தொகுப்பு முரளி சார்..
'அன்புடன்' படத்தை எப்படி மிஸ் செய்தேன் எனத் தெரியவில்லை..
நீங்கள் கேட்ட கேள்விகள் நியாயமானவை.
7 ஜி பற்றி நிறையப் பார்த்தாயிற்று. கேட்டாயிற்று..
'இயற்கை' நல்ல படம். கிளைமேக்ஸ் எதிர்பாராதது. ஷாம் நடித்த உருப்படியான படம். இதன் இயக்குனரின் 'பேராண்மை' படத்தை எதிர்பார்க்கிறேன்.

நசரேயன் said...

நல்ல அலசல் முரளி, அன்புடன் படம் இனிமேல் தான் பார்க்கணும்

rapp said...

அன்புடன் படம் பத்தி தேயாது. ஆனா ரெயின்போ காலனி மற்றும் இயற்கை ரொம்பப் பிடிச்சப் படங்கள்:):):) அதிலும் இயற்கை ரொம்ப ரொம்பப் பிடிச்சது. ஒவ்வொரு காட்சியுமே படத்தில் பிளஸ்தான், ஆனாலும் பசுபதி அறிமுகக் காட்சி, குட்டி ராதிகாவை கூட்டிக்கிட்டு கப்பல் கப்பலாக செய்தி தெரிஞ்சுக்க போகும் காட்சிகள், அற்புதமான கிளைமேக்ஸ்னு, இதில் எல்லாமே சூப்பர்:):):)