November 09, 2008

நான் படித்த புத்தகங்கள்

இந்த தொடர் பதிவுக்கு என்னை அழைத்த அத்திரிக்கு நன்றிகள்

எங்கள் தெருவில் சோஷலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆப் இந்தியா என்னும் கம்யூனிஸ இயக்கத்தின் நகர அலுவலகம் இருந்தது. அவர்கள் தட்டி எழுதுவதை வேடிக்கை பார்ப்பது என் சிறுவயது பொழுதுபோக்கு. அப்போது அவர்கள் எனக்கு சோவியத் யூனியன் தயாரித்து, மொழி மாற்றம் செய்யப்பட்ட சிறுவர் கதை புத்தகங்கள், பொது அறிவு புத்தகங்களை அறிமுகப்படுத்தினார்கள். எங்கள் வீட்டில் விகடன்,சாவி,குமுதம்,இதயம் போன்ற பத்திரிக்கைகளை வாங்குவதால் இயல்பாகவே எனக்கு வாசிக்கும் பழக்கம் இருந்தது.

என் வயதையொத்த நண்பர்கள் எனக்கு அமையாததால் நூலகத்துக்கு செல்ல ஆரம்பித்தேன். அங்கு ஸ்டெல்லா புருஸ்,சுஜாதா, பாலகுமாரன் போன்றோரை விரும்பி படித்தேன். இந்த கால கட்டத்தில் ஜூனியர் விகடன் வேகமாக வளர ஆரம்பித்தது. அதனுடன் தராசு, நக்கீரன், நாரதர், கழுகு போன்ற அரசியல் புலனாய்வு பத்திரிக்கைகள் வெளியாயின. எம் ஜி யார் மறைவுக்குப் பின், ஜா ஜெ பிளவு, சட்டமன்ற அடிதடி, ஆட்சிகலைப்பு, கவர்னர் ஆட்சி என தமிழகம் பரபரப்பாக இவற்றில் வரும் சூடான செய்திகளுக்காக இவற்றை படிக்க ஆரம்பித்தேன்.

1989 தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிக்காக பூத் ஸ்லிப் எழுதுவது, டோர் கேன்வாஸிங் என (10 ஆம் வகுப்பில்) களப்பணியில் ஈடுபட்டேன். தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிக்கு முன் அமைக்கப்படும் (பூத் ஸ்லிப் வினியோகிக்க உதவும்) கீற்று பந்தலில் அமர்ந்து ஸ்டெல்லா புருஸ்ஸின் (அது ஒரு நிலா காலம் என நினைக்கிறேன்) நாவலையும், நக்கீரனின் கருத்து கணிப்பையும் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது என்னை பார்த்த ஒரு தோழர், இதையெல்லாம் ஏன் படிக்கிறாய்? என கடிந்து கொண்டு தன்னை வந்து பார்க்கச் சொன்னார்.

அவர் எனக்கு வாழ்வின் அலைகள் (மாக்சிம் கார்க்கி), வால்கா முதல் கங்கை வரை (ராகுல சாங்கிருத்தியன்), அன்டோன் செகாவ் சிறுகதைகள் மற்றும் லெனினின் புத்தகங்கள் ஆகியவற்றை தந்தார். படித்தேன். எதுவும் புரியவில்லை.

பின் 1991 கல்லூரி விடுதியில், உடனிருந்த மற்றவர்கள் ஸ்டார் டஸ்ட், பிலிம் பேர், வீக், இந்தியா டுடே என படித்ததால் நானும் அவற்றை படிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் இந்தி படவுலகம் குறித்தும், தேசிய அரசியல் குறித்தும் முதன்முறையாக அறிந்து கொண்டேன்.

பின் படிப்பு முடிந்து, வாழ்க்கையில் அடிபட்டு சென்னையில் அலைந்து கொண்டு இருந்தபோது எனக்கு ஆதரவளித்தது சென்னை கன்னிமாரா நூலகம். காலையில் நுழைந்தால் பசி உணரும் வரை படிக்க வேண்டியது. வெளியில் சென்று ஒரு பிரட் ஆம்லேட் பின்னர் விட்ட இடத்தில் தொடர வேண்டியது. இக்காலத்தில் தான் எனக்கு சிறுவயதில் புரியாததெல்லாம் புரிய ஆரம்பித்தது. கு அழகிரிசாமி, அசோகமித்திரன், லாசரா, புதுமைப்பித்தன், சி சு செல்லப்பா (வாடிவாசல்) ஆகியோரது படைப்புகள்அனைத்தும் படித்தேன். தி ஜா வின் மோகமுள், மரப்பசு, கல்கி,தேவனின் பெரும்பாலான படைப்புகள், ஆதவனின் என் பெயர் ராமசேஷன், சு ராவின் ஒரு புளிய மரத்தின் கதை, ஜே ஜே சில குறிப்புகள், நாஞ்சில் நாடன், எஸ் ராமகிருஷ்ணன்
ஜெயமோகனின் குறு நாவல்கள் (ரப்பர்), என கலந்து கட்டி படித்தேன்.

அதன்பின் மேல்படிப்பு,திருமணம், குழந்தை என சமூக அந்துஸ்துக்காக ஓடிக்கொண்டிருருப்பதால் படிப்பது குறைந்து விட்டது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் சாரு,ஜெமோ,கீற்று,சென்னை லைப்ரரி, வலைப்பதிவுகள் என வலையில் வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

இந்த தொடர் பதிவுக்கு நான் அழைப்பது
1.தமிழ்பறவை

2.புதுக்கோட்டை விலேகா

3. அக்னி பார்வை

42 comments:

SUREஷ் said...

// எம் ஜி யார் மறைவுக்குப் பின், ஜா ஜெ பிளவு, சட்டமன்ற அடிதடி, ஆட்சிகலைப்பு, கவர்னர் ஆட்சி என தமிழகம் பரபரப்பாக இவற்றில் வரும் சூடான செய்திகளுக்காக இவற்றை படிக்க ஆரம்பித்தேன்.//

எனக்கு இந்த நிகழ்ச்சிதான் படிக்கும் ஆர்வத்தை தூண்டியது. அப்போது வந்த அனைத்து பத்திக்கைகளையும் படித்து அதை எங்க ஊர் பெரியவர்களின் புளிய மரத்துக்கடியில் ரவுண்ட் டேபிள் கான்பரன்ஸ்ன் போது எடுத்து விட்டு பல நேரங்களில் உள்ளூர் மகா யுத்தம் நடக்க வைத்ததுண்டு

முரளிகண்ணன் said...

பகிர்தலுக்கு நன்றி சுரேஷ்

தமிழ்ப்பறவை said...

என்னங்க கண்ட,கண்ட புத்தகமெல்லாம் படிச்சிருக்கீங்க...?!அந்த அளவுக்கு எல்லாம் எனக்கு வாசிப்பனுபவம் இல்லை. இருந்தாலும் தொடர்பதிவுக்கழைத்தமைக்கு நன்றி முரளி சார்...
//வாழ்வின் அலைகள் (மாக்சிம் கார்க்கி), வால்கா முதல் கங்கை வரை (ராகுல சாங்கிருத்தியன்), அன்டோன் செகாவ் சிறுகதைகள் மற்றும் லெனினின் புத்தகங்கள் ஆகியவற்றை தந்தார். படித்தேன். எதுவும் புரியவில்லை.//
அப்புத்தகங்களைப் பின்பு படித்துப்பார்த்தீர்களா...?புரிந்திருக்குமே...

முரளிகண்ணன் said...

தமிழ்பறவை, உண்மையைச் சொன்னால் 30 வயதுக்குப்பின், பல மறுவாசிப்புக்குப்பின்னரே இவை புரிந்தன.

SUREஷ் said...

ஒரே ஒரு புத்தகம் .........
பொன்னியின் செல்வன்.........
அதைப் படிக்கும் போதெல்லாம் படிக்கும்போது ஆட்சியில் இருப்போரை தாக்கி எழுதப் பட்டதுபோலவே இருக்கும்.......
எப்போதுமே புத்தம்புதிதாய் இருக்கும்

Anonymous said...

very nice writting.

விலெகா said...

என்னை அழைத்தமைக்கு நன்றி,விரைவில் முயற்சிக்கிறேன்.

விலெகா said...

அதன்பின் மேல்படிப்பு,திருமணம், குழந்தை என சமூக அந்துஸ்துக்காக ஓடிக்கொண்டிருருப்பதால் படிப்பது குறைந்து விட்டது.
உண்மை.

Barani said...

//படிப்பது குறைந்து தான் விட்டது//

நிஜம் தான்

மறுபடியும் புத்தகம் வாசிக்கவென்றே ஒரு காலம் வரும் அறுபதின் பின் அப்போது வாசிக்க மனமிருக்குமோ என்னவோ ?

வாசித்தவரை நல்லதே !

அதிஷா said...

:-)

இந்த தொடர்பதிவு மூலமா நிறைய புத்தகங்கள் குறித்து அறிந்து கொள்ள முடிந்தது , அறிந்தும் கொண்டேன் நன்றி முரளி அண்ணா!

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி கடையம் ஆனந்த்

முரளிகண்ணன் said...

சுரேஷ்

\\பொன்னியின் செல்வன்.........
அதைப் படிக்கும் போதெல்லாம் படிக்கும்போது ஆட்சியில் இருப்போரை தாக்கி எழுதப் பட்டதுபோலவே இருக்கும்.......
எப்போதுமே புத்தம்புதிதாய் இருக்கும்\\


நான் பலமுறை படித்த புத்தகம் அதுதான். ஆனால் ஆட்சியாளர்களை தாக்குவது ?? ஒருவேளை எல்லா ஆட்சியளர்களும் ஒரேமாதிரி இருப்பதாலா?

முரளிகண்ணன் said...

விலெகா, வருகைக்கு நன்றி

முரளிகண்ணன் said...

பரணி தங்கள் வருகைக்கு நன்றி

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி அதிஷா தம்பி

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ரப்பர் ஜெமோவின் முதல் நாவல் (குறுநாவலில்லை!).

இப்ப அவர் தலைகாணி சைஸ்ல நாவல் எழுதறதப் பாத்தா அது குறுநாவல்தான் :)

குட்டிபிசாசு said...

பயங்கர படிப்பாளியாக இருக்கீங்க! அதிக ஆர்பாட்டம் பண்ணாம உங்களிடம் கொஞ்சம் பணிவாக இருந்துக்கணும்.

வரும் வாரத்தில் எதாவது சென்னை பதிவர் சந்திப்பு இருக்கா, இருந்தா மறக்காம சொல்லுங்க!

நசரேயன் said...

எவ்வளவு புஸ்தகம் படிச்சு இருக்கீங்க, நான் எல்லாம் கல்கி தவிர யாரடைய நாவல்களையும் படிச்சதே இல்லை.

இப்போதைக்கு தமிழ் மணம் தான் :)

முரளிகண்ணன் said...

சுந்தர் சார்,

ரப்பர் ஜெமோவின் முதல் நாவல் (குறுநாவலில்லை!).

இப்ப அவர் தலைகாணி சைஸ்ல நாவல் எழுதறதப் பாத்தா அது குறுநாவல்தான் :)விஷ்ணுபுரத்தை பார்த்து (முழுவதும் படிக்கல) விட்டு அதை பார்த்ததால் குறுநாவல் மாதிரிதானே இருக்கு.

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி நசரேயன்,குட்டிபிசாசு

அத்திரி said...

//அதன்பின் மேல்படிப்பு,திருமணம், குழந்தை என சமூக அந்துஸ்துக்காக ஓடிக்கொண்டிருருப்பதால் படிப்பது குறைந்து விட்டது.//

உண்மை....

சோவியத் யூனியன் அரசாங்கத்தின் தமிழ்பதிப்பு புத்தகங்களை பார்ப்பதற்குத்தான் புரட்டி உள்ளேன். அந்தபுக்கின் பேப்பர் நல்லா வள வளப்பா இருக்கும்.
கம்யூனிச புத்தகங்களெல்லாம் படிச்சிருக்கீங்க, கம்யூனிஸ்ட்களுக்காக வேலை செஞ்சிருக்கீங்க. அப்புறம் ஏன் உங்க பதிவுல ஒரு அரசியல் நியூஸ்கூட இல்லையே?

பாபு said...

நான் எல்லாம் ஒரு அளவிற்கு மேல் ,தீவிர இலக்கியம் பக்கம் எல்லாம் போகாமல் இருந்துவிட்டேன்,நீங்கள் நல்ல எழுதுக்களை நிறைய வாசித்திருக்கிறீர்கள்
அனுபவ பகிர்வுக்கு நன்றி

முரளிகண்ணன் said...

அத்திரி, நான் ஓராண்டுக்கு முன் அரசியல் பதிவுகள் எழுதினேன் (என் மன வானில் பதிவில்). சில விரும்பத்தகாத அனுபவங்களால் அவற்றை நீக்கி விட்டேன். தற்போதுள்ள சூழ்நிலையில் நடுநிலையாக அரசியல் பதிவுகள் எழுதுவது கடினம்.

ஆனால் நடுநிலையாக நின்று எழுதக்கூடிய விஷயங்களை எழுதலாம் என்று இருக்கிறேன். (அரசியலில் நடுநிலை என்பதே ஏமாற்று வேலை என்னும் கருத்தும் உண்டு)

முரளிகண்ணன் said...

பாபு தங்கள் வருகைக்கு நன்றிகள்

அருண்மொழிவர்மன் said...

முரளி கண்ணன்

//அன்டோன் செகாவ் சிறுகதைகள் மற்றும் லெனினின் புத்தகங்கள் ஆகியவற்றை தந்தார்//
ரஷ்யா சிதறியதால் ஏற்பட்ட பெரிய இழப்பு இப்போது தமிழில் முபு போல ரஷ்ய இலக்கியங்கள் மொழி மாற்றம் செய்யப்பட்டு வராமல் போனது. மலிவு விலையில் எவ்வளாவு அருமையான புத்தகங்களை பதிப்பித்தார்கள்.

நான் சூதாடி, குல்சாரி, கப்டன் மகள், உள்ளிட்ட எத்தனையோ அற்புதமான புத்தகங்களை வாசித்தது அந்நாட்களில் தான்

முரளிகண்ணன் said...

\\ரஷ்யா சிதறியதால் ஏற்பட்ட பெரிய இழப்பு இப்போது தமிழில் முபு போல ரஷ்ய இலக்கியங்கள் மொழி மாற்றம் செய்யப்பட்டு வராமல் போனது. மலிவு விலையில் எவ்வளாவு அருமையான புத்தகங்களை பதிப்பித்தார்கள்.

\\

ஆமாம் அருண்மொழிவர்மன்.

பலமுறை இதை நினைத்து வருத்தப்பட்டிருக்கிறேன். தற்போதுள்ள சிறுவர் புத்தகங்கள் எல்லாம் நாம் வாங்கிதர இயலாத விலையில் இருக்கின்றன. சென்ற புத்தக கண்காட்சியில் சாதாரண புத்தகங்கள் கூட ரூ 100 விலையில் இருந்தன.

நமது பதிவர் லக்கிலுக் கூட, சிறுவர் புத்தகங்கள் எழுதி லாப நோக்கின்றி குறைந்த விலையில் வெளியிடவேண்டும் என்பதில் மிக ஆவலுடன் உள்ளார்

முரளிகண்ணன் said...

குட்டிபிசாசு,

வரும் சனிக்கிழமை (15 - 11 - 2008) மாலை மெரினா கடற்கரை காந்திசிலை அருகில் சந்திப்பு உள்ளது. அவசியம் கலந்து கொள்ளவும்

narsim said...

முரளி, மிக நல்ல வாசிப்பானுபவங்களை பகிர்ந்துகொண்டதற்கு நன்றிகள்..

நல்ல பதிவு

நர்சிம்

முரளிகண்ணன் said...

வாங்க நர்சிம், நீங்க படிக்கிறதுடன் கம்பேர் பண்ணா, நான் பயனிக்க வேண்டிய தூரம் அதிகம்

K.Ravishankar said...

நல்லா இருக்கு சார். ஆனால்.....நீங்கள் சினிமா பற்றி அருமையான தகவல்கள் எழுதுகிறீர்கள் அது எப்படி வளர்ந்தது என்று சொல்லுவீர்கள் என்று எதிர் பார்த்தேன்
ஏமாந்தேன்.

முரளிகண்ணன் said...

ரவிஷங்கர் தங்கள் வருகைக்கு நன்றி.

அதிகமான திரைப்படங்களை சிறுவயதில் இருந்து பார்த்ததாலும், வாரப்பத்திரிக்கைகளை படித்ததாலும்தான் தான் சினிமா பற்றி எழுத முடிகிறது என நினைக்கிறேன்.

குட்டிபிசாசு said...

முரளி கண்ணன்,

கண்டிப்பாக வந்துவிடுகிறேன். உங்களை கண்டு பிடிக்க எதாவது கோட்வேர்ட் இருக்கா? இருந்தா சொல்லுங்க.

அக்னி பார்வை said...

//என் வயதையொத்த நண்பர்கள் எனக்கு அமையாததால் நூலகத்துக்கு செல்ல ஆரம்பித்தேன்.//

உம்.. நீங்களுமா!

தொடர் பதிவிற்க்கு அழைத்தமைக்கு நன்றி..திடிரென்று புத்தகங்களை பற்றி எழுத அழைத்து விட்டிர்கள்...

கடந்த 5 வருடங்களாக - புத்தகங்களுடனே வழ்ந்துக் கொண்டிருக்கிறேன் இதில் எதை பற்றி எழுதுவது?, எதை விடுவது?...விரைவில் ஒரு பெரிய புத்தக பட்டியலுடன் பதிவை பார்க்கலாம்...என்ன தமிழ் கொஞ்சம் தகறருச் செய்யும்....

பரிசல்காரன் said...

அருமையான பகிர்தல்.

வால்கா முதல் கங்கை வரை நூலை வாங்கிப் படிக்கச் சொல்லி வற்புறுத்திய நண்பர் எப்போது பார்த்தாலும் கேட்பார்.. ‘படிச்சுட்டியா?' என்று. எடுத்தால் படிக்க முடியவில்லை. ஏனென்று தெரியவில்லை.

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி பரிசலார்.

@அக்னிபார்வை, எழுத எழுத தமிழ் கூடி வரும். முயலுங்கள்

@குட்டிபிசாசு, உழவர் சந்தை வாழ்க என்ற கோட்வேர்ட் வைத்துக்கொள்ளலாமா?

கார்க்கி said...

கார்க்கியின் தாய் படிச்சிருக்கிங்களா? கார்க்கியோட எழுத்துக்கள் எல்லாமே அருமை. (கிகிகி நான் இல்லைங்க)


/ரப்பர் ஜெமோவின் முதல் நாவல் //

பேருக்கேத்த மாதிரிதான் இருக்கும். எனக்கு அபப்டித்தான் தோண்றியது.

rapp said...

வழக்கம்போலவே சூப்பர் சார். இன்னிவரைக்கும் எனக்கு நூலகத்துல இருந்து புத்தகம் எடுத்துப் படிக்கிற பழக்கம் கிடையாது. வாங்கித்தான் படிப்பேன்.

rapp said...

// எம் ஜி யார் மறைவுக்குப் பின், ஜா ஜெ பிளவு, சட்டமன்ற அடிதடி, ஆட்சிகலைப்பு, கவர்னர் ஆட்சி என தமிழகம் பரபரப்பாக இவற்றில் வரும் சூடான செய்திகளுக்காக இவற்றை படிக்க ஆரம்பித்தேன்.//

எங்கப்பா இப்போக்கூட இந்த மாதிரி பரபரப்பான விஷயங்களுடைய செய்தித்தாள், இதழ்கள் எல்லாத்தையும் சேகரிச்சு வெச்சிருக்கார். அவ்ளோ சூப்பரா இருக்கும்:):):)

தாமிரா said...

அழகான பதிவு

முரளிகண்ணன் said...

// எம் ஜி யார் மறைவுக்குப் பின், ஜா ஜெ பிளவு, சட்டமன்ற அடிதடி, ஆட்சிகலைப்பு, கவர்னர் ஆட்சி என தமிழகம் பரபரப்பாக இவற்றில் வரும் சூடான செய்திகளுக்காக இவற்றை படிக்க ஆரம்பித்தேன்.//

எங்கப்பா இப்போக்கூட இந்த மாதிரி பரபரப்பான விஷயங்களுடைய செய்தித்தாள், இதழ்கள் எல்லாத்தையும் சேகரிச்சு வெச்சிருக்கார். அவ்ளோ சூப்பரா இருக்கும்:):):) //

வருகைக்கு நன்றி ராப், அப்போது பல கோணங்களில் செய்தியை விவரிப்பார்கள். மிக சுவையாக இருக்கும்

முரளிகண்ணன் said...

தாமிரா

\\அழகான பதிவு

\\
நீங்கள் பிள்ளையார் சுழி போட்டதுதானே இது.

முரளிகண்ணன் said...

கார்க்கி தங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றிகள்
\\கார்க்கியின் தாய் படிச்சிருக்கிங்களா?\\


தாய் படித்திருக்கிறேன்.

\\ரப்பர் ஜெமோவின் முதல் நாவல் //

பேருக்கேத்த மாதிரிதான் இருக்கும். எனக்கு அபப்டித்தான் தோண்றியது.\\
ரப்பர் நன்றாகவே இருக்கும். நாகர்கோவில் சார்ந்த பகுதியின் வட்டார வழக்கில் எழுதப்பட்ட ஒன்று. ஆனால் அதில் உள்ள நுண்ணரசியலை இணையத்தில் சிலர் விவரித்திருந்தனர். மறுவாசிப்பு செய்யலாமென இருக்கிறேன்