November 29, 2008

நாகேஷின் வித்தியாச வேடங்கள்

தமிழ்திரையுலகம் கண்ட மாபெரும் கலைஞர்களில் முக்கிய மானவர் நாகேஷ். நகைச்சுவை நடிகராகவே பெரும் பாண்மையானோர் மனத்தில் இடம் பெற்றிருக்கும் நாகேஷ் ஆரம்ப காலத்தில் கதாநாயகனாகவும் சில படங்களில் நடித்தவர். பதினாறு வயதினிலே படத்திற்க்கு கூட பாரதிராஜா சப்பாணி வேடத்திற்க்கு நாகேஷைத்தான் மனதில் வைத்திருந்தார். தயாரிப்பாளரின் விருப்பத்தின் பேரிலேயே கமலிடம் கதை சொல்ல சென்றார். படம் முழுவதும் வராமல் நான்கு காட்சிகளில் நடித்தாலும் அதை மறக்க முடியாத அனுபவமாக மாற்றக் கூடியவர். பிணமாக (மகளிர் மட்டும்) நடித்து கூட கைதட்டல் வாங்கமுடியும் என காட்டியவர். இவர் நடித்த நகைச்சுவை வேடங்களை பட்டியலிடமுடியாது, புத்தகமாகத்தான் எழுதமுடியும் என்பதால் அவர் ஏற்று நடித்த நகைச்சுவை அல்லாத வித்தியாச வேடங்களைப் பற்றிய ஒரு பார்வை.

தில்லானா மோகனாம்பாள்

பெரிய மனிதர்களுக்கு பெண்களை ஏற்பாடு செய்து தரும் வைத்தி என்னும் வேடம். கையில் எப்போதும் ஒரு எழுமிச்சம் பழத்துடன் அலைவதும், பெரிய மனிதர்களை கண்டவுடன் அதை கொடுத்துவிட்டு கேள்விக்குறியாய் வளைந்து பேசுவதும், தன்னை விட அந்துஸ்து குறைந்தவரிடம் ஆச்சரியக்குறியாய் நின்று பேசுவதுமாய், பாடி லாங்குவேஜில் பின்னியிருப்பார். அந்த வேலைக்குத் தேவையான அத்தனை கல்யாண குணங்களையும் பிரதிபலிப்பார். ஒரு விருந்தில் சிவாஜியை நாகஸ்வரம் வாசிக்க வேண்டாமென சொல்லுவதும், அதைத் தொடர்ந்து வரும் காட்சிகளிலும் அசத்தியிருப்பார்.

திருவிளையாடல்

ஏழைப் புலவன் தருமி வேடம். இந்த படத்தில் இவர் பேசிய ஒவ்வொரு வசனமும் பள்ளி, கல்லூரி விழா நாடகங்களிலும், மிமிக்ரி நிகழ்ச்சிகளிலும் கணக்கிலடங்கா முறை மறுசுழற்சி செய்யப்பட்டது. ஆயிரம் லட்டு,பெண்,கோழி என இருக்கும் எல்லா பொருள்களையும் பரிசாக கற்பனை செய்துகொண்டு அதற்கேற்ப சீன் எழுதுவார்கள். சாகாவரம் பெற்ற டிராக் இது.

தாமரை நெஞ்சம்

தாழ்வு மனப்பாண்மையால் அவதிப்படும் வேடம். சரோஜா தேவி நாயகியாய் நடித்த இப்படத்தில், தன் பர்சனாலிட்டி மற்றும் நோய் காரணமாக காதலை நாயகியிடம் சொல்லாமல் தவிக்கும் வேடம். நாயகனாக ஜெமினி கணேசன். தன் மனத்தை தைரியப் படுத்திக்கொண்டு ஒவ்வொரு முறை நாயகியிடம் காதலை சொல்ல முயற்சிப்பதும், பின்னர் பின் வாங்குவதுமாய் அசத்தியிருப்பார். பாலசந்தர் இயக்கிய இந்தப்படத்தில் நாயகனை விட அதிக கவனிப்பு பெற்றவர் நாகேஷே.

எதிர்நீச்சல்

சிறு சிறு வேலைகளை அக்கம் பக்கத்தாருக்கு செய்து கொடுத்து, படித்து முன்னேறும் வேடம். இடையில் ஒரு காதல். முறைவைத்து சாப்பாடு கொடுக்கும் வீடுகளுக்கு சென்று நான் மாது வந்திருக்கேன் என்று சொல்லும் போது அவர் முகத்தில் தோன்றும் உணர்ச்சியை விவரிப்பது கடினம்.

அபூர்வ ராகங்கள்

பாடகி பைரவிக்கு (ஸ்ரீவித்யா) மாரல் சப்போர்டராக இருக்கும் குடிகார டாக்டர் வேடம். தன் நிழலுடன் அவர் பேசும் காட்சியிலும், சியர்ஸ் சொல்லும் காட்சியிலும் டைமிங் பிரமாதமாக இருக்கும்.

மக்கள் என் பக்கம்

கடத்தல்காரனிடம் பணிபுரியும் வழக்கறிஞர் வேடம். ஒரு சிக்கலான வழக்கில் வழி சொல்ல முடியாமல் இவர் தவிக்க, மற்றொரு பெண் வழக்கறிஞர் அதற்க்கு தீர்வு சொல்கிறார். இதனால் அவமானப்படும் அவர் கடத்தல்காரனுக்கு எதிரான அரசியல்வாதியிடம் தஞ்சம் புகுகிறார். பெண் வழக்கறிஞர் தீர்வு சொல்லும் காட்சியில், மற்றவர்கள் ஏளனமாக பார்க்க அதை தாங்க முடியாமல் தன் உணர்ச்சிகளை மறைக்கும் காட்சியிலும், எதிரியிடம் சரணடையும் காட்சியிலும் நடிப்பில் அசத்தியிருப்பார்.

அபூர்வ சகோதரர்கள்

வில்லனாக நடிக்க வேண்டுமென்றால் அஜானுபாகுவான உடலமைப்பு வேண்டும் இல்லையென்றால் மிரட்டும் குரல் வேண்டும். இவை எதுவும் இல்லையென்றாலும் புதுமுகமாக இருந்தால் கூட போதும், தேவையான எபெக்டை கொண்டுவந்து விடலாம். காமெடியனாக மனதில் பதிந்து போனவரை கொடூர வில்லனாக மாற்ற முடியுமா?. முடியும் அது நாகேஷாக இருந்தால். பிரதான வில்லனாக மிரட்டியிருப்பார் இந்த படத்தில்.

மைக்கேல் மதன காம ராஜன்

எட்டு பென்களின் தந்தை, அவர்களின் திருமணத்திற்க்காக பொய்கணக்கு எழுதி முதலாளியின் பணத்தை சுருட்டும் அவினாசி என்னும் கேரக்டரில் அதகளப்படுத்தியிருப்பார். தூக்கி எறிந்தால் கூட பந்து போல் திரும்பிவரும் போதும் சரி, எல்லா சிக்கல்களையும் சமாளிக்கும்போதும் சரி அனாயாசமாக நடித்திருப்பார்.

சேரன் பாண்டியன்

தன்னை மதிக்காவிட்டாலும் தன் மகன் ஊர் போற்ற வர வேண்டும் என துடிக்கும் தந்தை, அதற்க்காக ஊர் பெரிய மனிதர்களான சகோதரர்களை மேலும் சண்டைக்காரர்களாக தன் குயுக்தியால் மாற்றுகிறார். காட்சிக்கு தகுந்தவாறு பாடி லாங்வேஜ், வாய்ஸ் மாடுலேஷனை மாற்றி அசத்துவார்.

கட்டபொம்மன்

தன் மகனை வில்லனின் சூழ்ச்சிக்கு இழந்திருப்பார். அவரின் நம்பிக்கை பேரன் தான். அந்த ஊரிலேயே இருக்கும் வில்லனை ஒன்றும் செய்ய முடியவில்லையே என தன் கையாலாகதனத்தை எண்ணி மறுகுவார். ஒருமுறை வில்லனை நேரில் பார்க்கும் போது அவனை அடித்து நொறுக்குவது போல மனக்கண்ணில் பார்ப்பார் (வால்டர் மிட்டி போல) . அந்த காட்சியில் அவர் நடிப்பை பார்த்தால் தான் புரியும்.

நம்மவர்

இந்த வேடத்திற்க்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். கல்லூரி பேராசிரியர் வேடம். ஆசையாய் வளர்த்த மகள் (பிருந்தா), சக மாணவனின் பழி வாங்கலால் (விபச்சார குற்றச்சாட்டு) தற்கொலை செய்துகொள்ள அதை தாங்க முடியாமல் திணறும் வேடத்தில் எல்லோரையும் அழ வைத்திருப்பார். இறந்த மகளுக்கு லேசான தலையனை வையுங்கள் என்று சொல்லும் போதும், அவள் உடன் ஆடுவதாக எண்ணி பாலே ஆடும் போதும் அழாதவர் தியேட்டரில் இல்லை.

37 comments:

ஊர் சுற்றி said...

எனக்கு மிகவும் பிடித்த கலைஞர்களுள் ஒருவர் நாகேஷ்.

அவரது படங்களிலிருந்து பல வகை வித்யாசங்களை அருமையாகக் காட்டியுள்ளீர்கள். நன்று.

முரளிகண்ணன் said...

ஊர்சுற்றி, தங்கள் வருகைக்கு நன்றி

சின்னதம்பி said...

சோதனை

SUREஷ் said...

தில்லானா மோகனாம்பாள்///
வில்லன்ல

SUREஷ் said...

திருவிளையாடல்/////
அந்த எபிசொடுக்கு அவர்தான் ஹீரோ.

சிவாஜினால முடியுமான்னு நினைக்க வைக்கும் நடிப்பு

SUREஷ் said...

தாமரை நெஞ்சம்//////புதிதா நடிக்க வரும் இளைஞர்களுக்கு கனவு வேடம்

SUREஷ் said...

எதிர்நீச்சல்
படத்தில அவர்தான் ஹீரோ. சோ அவார்டு அவர தேர்ந்தெடுத்தவங்களுக்குதான்

SUREஷ் said...

அபூர்வ ராகங்கள்/////
பாட்ஷா.............................

SUREஷ் said...

மக்கள் என் பக்கம்/////
இது எப்படி இருக்கு

SUREஷ் said...

அபூர்வ சகோதரர்கள்//////
இந்தியன் அப்பா (?தாத்தா) வோட மேனரிசங்கள் இதிலேயே தெரியும்.

SUREஷ் said...

மைக்கேல் மதன காம ராஜன்

பீம்பாய்... பீம்பாய்.....

SUREஷ் said...

சேரன் பாண்டியன்நந்தினி இன்ஷ்பிரேஷன்?

SUREஷ் said...

கட்டபொம்மன்அந்நியன்??????

SUREஷ் said...

நம்மவர்
நம்மவர்

அக்னி பார்வை said...

என் சாய்ஸ் ‘ சவாலே சமாளி’ சின்ன பண்ணைத் தான்.

வண்ணநிலவன் புத்தகத்தை பற்றிய தகவலுக்கு நன்றி....

சதங்கா (Sathanga) said...

//பிணமாக (மகளிர் மட்டும்) நடித்து கூட கைதட்டல் வாங்கமுடியும் என காட்டியவர்.//

தலைப்பைப் பார்த்தவுடன் மனதில் தோன்றிய காட்சி. சான்ஸே இல்ல. நம்மவர்ல ஒரு டான்ஸ் ஆடுவாரே ... அட அடா. அற்புதமான கலைஞர் நாகேஷ்.

அருண்மொழிவர்மன் said...

கமலின் பல படங்களில் இவரை அருமையாக பயன்படுத்தியிருப்பார். வசூல்ராஜா கூட ஒரு நல்ல் உதாரணம்.
சிறந்த நடனகலைஞரும் கூட

கானா பிரபா said...

நம்மவர் மற்றும் மகளிர் மட்டும் படங்கள் கூட இவரின் வித்தியாச நடிப்புக்கு ஒரு சாம்பிள் ஆயிற்றே.

முரளிகண்ணன் said...

சுரேஷ்,அக்னிபார்வை,சதங்கா,அருண்மொழிவர்மன், கானா பிரபா தங்கள் வருகைக்கு நன்றி

பினாத்தல் சுரேஷ் said...

ஆ.. தப்பு பண்ணீட்டீங்க.. ரத்தம் கொதிக்குது.. தாங்க முடியலை!

//மைக்கேல் மதன காம ராஜன்

நான்கு பென்களின் தந்தை, // எட்டு பெண்களின் தந்தை :-)

”சுளையா 25000 கொடுத்திருக்கேன் போயிண்டுங்கறான்!”

மகளிர் மட்டும்? டெட்பாடிகூட அவ்வளவு சிரிக்க வைக்க முடியுமா?

முரளிகண்ணன் said...

சுரேஷ் சார்,

எட்டு பெண்களாக மாற்றி விடுகிறேன்.

muru said...

அண்ணே நீர்குமிழி,நவராத்ரி-யை விட்டுடீங்களே,

வெண்பூ said...

நாகேஷ் நடித்த வித்தியாசமான படங்களை தொகுத்ததற்கு நன்றி முரளி.. நாகேஷ் என்று சொன்னதுமே திருவிளையாடல்தான் நினைவுக்கு வரும்.. சர்வர் சுந்தரம் மறந்துட்டீங்களே.. அவர் நகைச்சுவை என்பதை தாண்டி நடித்த முதல் படம் என்று நினைக்கிறேன்..

பரிசல்காரன் said...

என் மனங்கவர்ந்த நடிகர்களில் டாப்பில் இருப்பவர் நாகேஷ்.

அவ்வைசண்முகியில், ‘இதுவும் வேணும்.. இன்னமும் வேணும்' என்றவாறே ஜெமினியிடமிருந்து சூட்கேஸைப் பிடுங்குவாரே.. க்ளாஸ் ஆக்டிங்!!

அத்திரி said...

நாகேஷிடம் பிடித்தது இரண்டு ஒன்னு அவருடைய நடிப்பு

ரெண்டு அவருடைய நடனம்.

இதைப் பற்றி நீங்க சொல்லவே இல்லை முரளி.

அனுஜன்யா said...

நாகேஷ் யாருக்குத்தான் பிடிக்காது. வழமை போல் எல்லாவற்றையும் கவர் செய்து விட்டீர்கள் முரளி. என்னுடைய all time favourite - பாமா விஜயம் மற்றும் அனுபவி ராஜா அனுபவி, கா.நேரமில்லை. சர்வர் சுந்தரம் (வெண்பூ சொன்னதுபோல்) மற்றும் நீர்க்குமிழி அவர் காமெடி செய்யாமல் செய்த படங்களில் முக்கியப் படங்கள்.

அனுஜன்யா

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி வெண்பூ,பரிசல்,அத்திரி,அனுஜன்யா

@வெண்பூ
அவர் கதாநாயகனாக நடித்த படங்கள் வேண்டாமென நினைத்தேன்

@அத்திரி, அனுஜன்யா

அவரின் டிரேட் மார்க்கான முழு காமெடி, நடனம் ஆகியவற்றை தவிர்த்துவிட்டு வித்தியாசமானவற்றை மட்டும் எழுத நினைத்தேன்

சென்ஷி said...

நான் உங்களிடமிருந்து மிகவும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த பதிவு. நன்றி முரளி :))

Anonymous said...

See Sadhu Mirandal and his performance when he (the taxi driver) sees the dead body in the back seat.That is the highlight of the film.It is available in CD.

பாபு said...

எனக்கு மிக மிக பிடித்த நடிகர்,அதுவும் நீங்கள் குறிப்பிட்ட அந்த எதிர் நீச்சல்.
சர்வர் சுந்தரம் மிக பிடிக்கும்
நாம் அவருக்கு சரியான கௌரவம் தரவில்லை என்றுதான் நினைக்கிறேன்

Busy said...

நாகேஷ் நடித்த வித்தியாசமான படங்களை தொகுத்ததற்கு நன்றி முரளி..

Chuttiarun said...

வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.

http://www.thamizhstudio.com/

Add a Gadget - ல் இதை பயன்படுத்துக

வழி --> Add a Gadget --> select HTML/JavaScript

Title : தமிழ் ஸ்டுடியோ.காம்

Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>

வெட்டிப்பயல் said...

How come you missed Server Sundaram? That too the scene in which he acts before the director of a movie and gets a chance.

Post as usual kalakal....

ennudaiya all time Fav - Kaadhalika Neramillaiyum miss panniteenga :(

rapp said...

நீங்க சொல்லிருக்க ஒவ்வொன்னும் அவ்ளோ சூப்பர் படங்கள்:):):) தாமரை நெஞ்சம், சேரன் பாண்டியன், நம்மவர் ரொம்ப ரொம்ப பிடிக்கும்:):):) நானும் எங்கக்காவும் ரெண்டு வருஷம் முன்னதான் அவர்கிட்ட ஆட்டோகிராப் வாங்கினோம்:):):)

rapp said...

மு.க. முத்துவின் அந்நாளைய நெருங்கிய நண்பர்:):):)

நசரேயன் said...

நல்ல தகவல் முரளி,நாகேஷ் எனக்கும் பிடித்த நடிகர்.

Anonymous said...

முரளி,

இதில் நீங்கள் புன்னகை என்ற படத்தை இனைத்திருக்க வேண்டும் என்று கருதுகிறேன்..

அதில் பட்டதாரியான நாகேஷ் வேலைகிடைக்காமல் ரயிலில் “நானும் கூட ராஜா தானே நாட்டு மக்களிலே.. இதில் நாணம் என்ன வெட்கம் என்ன காசு கேட்பதிலே” என்ற பாட்டைப் பாடி பிச்சையெடுப்பார்.. அந்தப் பாட்டினூடாக ஒரு கணம் முகத்தை அந்தப்பக்கமாக ( மற்ற பயணிகளுக்கு எதிர்புறம்) திருப்பி ஒரு உணர்ச்சியைக் காட்டுவார் பாருங்கள்.... உலக நாயகனை விடுங்கள் - உலகில் வேறு எந்த நாயகனாலும் அந்த உணர்ச்சியைப் பிரதிபலித்திருக்க முடியாது..

அதே படத்தில் வேறு ஒரு இடம். வேலை கிடைக்காமல் பல வேலைகள் செய்து வருவார். ஒரு சந்தர்ப்பத்தில் திருமண ஊர்வலத்தில் பெட்ரோமாக்ஸ் லைட்டை சுமந்து வரும் வேலை. மாப்பிள்ளை கூட படித்த நெருங்கிய நன்பன் முத்துராமன். அவருக்கு மாப்பிள்ளை தன் நன்பன் என்று தெரியாமல் இந்த வேலைக்கு ஒப்புக் கொண்டிருப்பார்.. ஊர்வலத்தின் இடையே முத்துராமனும் இவரும் பார்த்துக் கொள்வார்கள்.. அந்த ஷணத்தில் நாகேஷின் முக பாவம் கூட வேறு எவராலும் வெளிப்படுத்தி விட முடியாது 1) நன்பன் திருமணத்திற்கு அழைக்க வில்லை 2) தனது இழிந்த நிலை நன்பனுக்கு தெரிந்து விட்டது 3) ஆனாலும் கௌரவத்தை விட்டுக் கொடுக்க முடியாது.. இந்த எல்லா பாவங்களையும் ஒரு கணத்தில் காட்டுவார்.

சோப்பு சீப்பு கண்ணாடியில் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் மாட்டிக் கொள்ளும் முன் அடிக்கும் அலப்பறை என்ன.. மாட்டிக் கொண்ட பின் “சார் நான் ஒரு டீசென்டான குடும்பத்தை சேர்ந்தவன் சார்” என்று டி.டி.ஆரிடம் இழைவது என்ன...உண்மையிலேயே கவனிக்கப்படாத கலைஞன் நாகேஷ் தான். நடிப்பில் சிவாஜி கணேசன் ஓவர் ஆக்டிங் செய்பவர்.. கமல் கூட குடுத்த காசுக்கு மேலேயே நடித்துக் கொடுப்பவர்.. ஆனால் நாகேஷ் தான் அல்டிமேட் நடிகர்.ச்சே காலம் தான் எத்தனை கொடூரமானது? இன்றைக்கு நாகேஷை தளர்ந்து வயதாகிப் போன தோற்றத்தில் காணவே வலிக்கிறது.

நல்ல பதிவுங்க.. கவணிக்காமெ விட்டிட்டேன்.

உங்களுக்கு ஒரு சீரியஸான வேண்டுகோள் - நீங்கள் நாகேஷ் நடித்த பல்வேறு கதாபாத்திரங்கள் / அதில் அவர் நடிப்பு பற்றி ஒரு தொடர் கட்டுறை எழுதலாம் தானே? எதிர்காலத்தில் ஒரு ரெபரன்ஸாகவும் இருக்கும் நம்மை பெருமளவில் மகிழ்வித்த அந்த மகாநடிகனுக்கு நாம் காட்டும் நன்றியாகவும் இருக்கும்