November 27, 2008

வண்ணநிலவனின் கடல்புரத்தில்அதிகாரம் என்பதே ஒருவன் வாழ்வதற்க்கான பலத்தையும், மன திடத்தையும் தருகிறது. அந்த அதிகாரம் குறையும் போது அவன் வாழ்வதற்க்கான காரணம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. முற்றிலும் அதை இழக்கும்போதோ கிட்டத்தட்ட நடைப்பிணமாகிறான். நகரத்தில் வசிக்கும் பெரும்பாலான அலுவலக அதிகாரிகள்/ஊழியர்களிடம் நாம் காண்பது, இதை உறுதிப்படுத்துகிறது. இது இவர்களுக்கு மட்டுமா பொருந்துகிறது?. ஆட்சியாளர்கள், கலைத்துறையினர், வர்த்தகர்கள், விவசாயிகள், நெசவாளிகள் என அனைத்து பிரிவினருக்கும் இது பொருந்துகிறது.வண்ணநிலவன் எழுதிய கடல்புரத்தில் புதினத்தில் இதுபோல் அதிகாரம் குறையும் ஒரு மீனவனுடைய குடும்பத்தார் வாழ்க்கை அந்த வட்டார மொழியில் சொல்லப்பட்டிருகிறது. இங்கே அவனது அதிகாரமாக இருப்பது அவனுடைய மீன்பிடி படகும், அதை செலுத்தக்கூடிய உடல் வலிமையும் தான். இயந்திரப்படகுகள் வருகையால் நாட்டுப்படகுகள் வைத்திருக்கும் மீனவர்கள் அடையும் பின்னடைவும் இதில் ஊடுபாகாக சொல்லப்பட்டுள்ளது. அவ்வூர் மீனவர்களின் காதல்,காமம், பாசம், ஏமாற்றம், அரவணைப்பு ஆகியவை இக்கதை மாந்தர்கள் மூலம் நம்மனதில் படியவைக்கப்படுகிறது.
எனக்கு கடலும் மீனவர்களும் அவ்வளவு பரிச்சியமில்லை. தென் தமிழ்நாட்டில் ஒரு விவசாய கிராமத்தில் பிறந்த எனக்கு விவசாயிகளின் வாழ்க்கை மட்டுமே அறியப்பட்டிருந்தது. சிறு விவசாயத்திற்க்கு செய்யும் செலவு ஒரு வழிப்பாதை ஆனபின், வாரிசுகள் வேறு இடத்திற்க்கு பிழைப்புக்கு சென்றபின் மீதமுள்ள பெண்ணின் திருமணத்திற்க்கோ, விட்டுப்போன சீர்வரிசைக்காகவோ பூர்விக நிலத்தை விற்க டவுனுக்கு வரும் பலரை பார்த்திருக்கிறேன், பத்திரபதிவு அலுவலகத்தின் அருகில் இருக்கும் பாலமுருகன் பிரியாணி ஸ்டாலில். பதிவு முடிந்தவுடன் அங்கே அரை பிளேட் மட்டன் பிரியாணி சாப்பிட்டுவிட்டு, குடும்பத்தார்க்கு பார்சல் வாங்கி டவுன் பஸ்ஸில் உட்கார்ந்திருக்கும் போதுகூட அவர்கள் முகத்தில் சலனம் இருக்காது.மறுநாள் காலை உடல் கடிகாரம் ஐந்து மணிக்கு எழுப்பிவிட்டுவிட, வழக்கம் போல் கருவிகளை எடுத்துக் கொண்டு நிலத்தை நோக்கி நாலடி வைத்தவுடன் உண்மை உறைத்து தோள் துண்டால் வாயைப் பொத்தி கேவும் போது, மனதளவில் இறந்துவிடுவார். அடுத்து யார் பாலமுருகன் கடையில் பிரியாணி சாப்பிடப்போகிறார்கள் என்பது ஊர் சாவடியில் வருத்ததுடன் பேசிக்கொள்ளப்படும். அதே போல் இங்கும் கதையின் நாயகன் மிக்கேல் குரூஸ் தன் பூர்விக படகையும் வீட்டையும் விற்றுவிட்டு மகளுக்கு விருப்பமானதை வாங்கிக்கொண்டு வருவதும் அதை தொடரும் நிகழ்வுகளும் குறிஞ்சி,முல்லைக்கு மட்டுமல்ல நெய்தலுக்கும் இதே நிலைதானோ என வருந்த வைக்கிறது.


எங்கள் ஊர் பக்கம் சேனைத்தண்ணீர் வைப்பது என்னும் பழக்கம் உண்டு. பெரும்பாலும் எல்லா இடங்களிலும் இருக்கும் என நினைக்கிறேன். பிறந்த குழந்தைக்கு சர்க்கரை கலந்த நீரை கொடுப்பதுதான் அது. அதை கொடுப்பவருடைய குணாதியசங்கள் குழந்தைக்கு வரும் என்பது ஒரு நம்பிக்கை. எனவே நன்கு படித்த, வாழ்வில் வெற்றியடைந்தவர்களையே சேணை வைக்கச் சொல்வார்கள். சில சமயம் பேசிக் கொண்டிருக்கும் போது, ஒருவனை சிலாகிக்க இப்படி சொல்வார்கள் "அவனுக்கு சேணை வச்சது யாரு?, நம்ம கிழக்கு வீட்டுக்காரரில்ல" என்று. இங்கும் சேணை வைக்கிறார்கள். சர்க்கரை நீரை அல்ல, கடல் நீரை. ஆணாயிருந்தால் அவனுக்கு கடலில் பிழைப்பதற்க்கான உடல் வலுவையும், பெண்ணாய் இருந்தால் எந்த கஷ்டத்தையும் தாங்கும் மனத்திடத்தையும் கடலம்மா தருவாள் என்ற நம்பிக்கை இங்கே. உண்மையிலேயே இங்கே பெண்ணுக்குத்தான் அதிக மனதிடம் வேண்டும். சென்றவன் என்ன ஆனான்? என ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைக்க வேண்டுமே?கடல்புரத்தில் வரும் பெண்களில் முக்கியமானவர்கள் மிக்கேல் குருஸ்ஸின் கடைசி மகள் பிலோமினாவும், அவளது தோழி ரஞ்சியும். இருவருக்கும் காதல் தோல்வி இருக்கிறது. ஆனால் அதை கடக்கும் மன உறுதியும் வாய்க்கப்பட்டவர்கள். இவர்களை வண்ணதாசன் வர்ணிக்கும் விதம் அலாதியாக இருக்கும். அவர்களை வர்ணிக்கும் போது சொல்வார், "பிலோமியின் உடல் நிறம் கறுப்பாக இருந்தாலும் உதடுகள் மின்னும் கறுப்பாக இருக்கும்" என்று. பொதுவாக தமிழர்களுக்கு வெள்ளை நிற பெண்ணும் பிடிக்காது, கறுப்பு நிற பெண்ணும் பிடிக்காது. மாநிற மேனி என்றால் மயங்கி விடுவார்கள். எங்கள் ஊர்பக்கம் அதை புதுநிறம் என்பார்கள். அந்த நிறத்தில் முகம் லட்சணமாக இருக்கும் பெண்கள் திருவிழா காலங்களில் தாவணி அணிந்து வளைய வரும் போது ஊரே வெறிக்கும். ஆனால் முழு கறுப்பு என்றால்???. பிலோமி சொல்கிறாள் " ரஞ்சி உன் சிரிப்புல என்னவோ இருக்குடி, இல்லாட்டி இந்த கறுப்பிய யாரு கட்டிக்கிருவா?" இதைப் படித்தபின் யோசித்துப் பார்த்தேன் கடைசியாக நம்மை கவர்ந்த கறுப்பான பெண் யார்? டி ஆர் ராஜகுமாரி,ரோஜா முதல் சினேகா வரை புதுநிறத்து பெண்கள் தானே?. நாம் ரசிக்கும் அழகுகூட சமுதாயத்தின் கருத்தாகவே நம்மீது படிகிறதோ?. சுற்றம் நட்பு என எல்லோரும் கறுப்புதான் அழகு என கற்பித்திருந்தால் நமது ரசனை மாறியிருக்குமோ?


இயந்திரப்படகுகள்வந்ததால் தொழில் நசிந்து வெளியேறுகிறார்கள் நாட்டுப்படகு வைத்திருப்பவர்கள். உடனே நமக்குள்ளே கேள்வி வருகிறது. ஏன் இவர்கள் வருங்காலத்தை மனதில் வைத்து வாழ்க்கை நடத்தியிருக்க கூடாது? இந்த எண்ணமே பொருளை மட்டுமே பார்க்கும் பலருக்கும் முதலில் தோன்றும். இயந்திரப்படகுகள் இல்லாமல் வல்லத்தில் மட்டும் சென்று எல்லோரும் மீன் பிடித்தால்? யாவரும் நலமாய் இருக்கலாமே?. அரிய மீன் வகைகள் அழியாது.சுற்றுச்சூழல் நிலை நிறுத்தப்படும். இதைதான் அவர்கள் கடலம்மா கோபித்துக்கொள்வாள் என்ற எளிய மொழியில் சொல்லுகிறார்கள். உண்மையில் இருப்பதோடு அவர்கள் திருப்திப்பட்டுக் கொள்வதில் வரும் தலைமுறைக்கு உலகத்தை தருகிறார்கள். தொழிலில் இம்ப்ரூவ்மெண்ட் என்று பேச ஆரம்பிக்கும் போது, நாம் செய்யும் எந்த முயற்சியும் சூழலை பாதிப்பதாகவோ இருக்கும் சமனிலையை சிதைப்பதாகவோதானே முடிகிறது. அதற்கு பாதிப்பில்லமல் செய்ய வழி இருந்தாலும் பொருள் கண்ணை மறைக்கிறதே. அதற்க்கு இந்த கடல்புரத்து வல்லத்துக்காரர்கள் எவ்வளவோ மேல்.
கதையில் வரும் மற்ற பாத்திரங்களான செபஸ்டி,ஐசக்,சிலுவை,வாத்தி, பவுலுபாட்டா போன்றவர்களின் பிம்பத்தை குறைவான வர்ணனைகள் மூலமே ஆசிரியர் நம் மனதில் ஏற்றிவிடுகிறார். அந்த கதாபாத்திரங்கள் பேசும் மொழியும் அவர்களின் இயல்புக்கேற்ப கட்டமைக்கப்பட்டுள்ளது.
கதையின் மையக்கதாபாத்திரமான மைக்கேல் குருஸ்ன் மனைவி மரியம்மை- ஊர் வாத்தி இடையேயான இலை மறை காய் மறை உறவு, அது தெரிந்திருந்தும் குறைந்துவிடாத மைக்கேலின் மனைவி பாசம், பிலோமிக்கும் தரகருக்கும் இடையே நடக்கும் ஒளிவுமறைவில்லாத பேச்சு, ரஞ்சிக்கும் அவளது கொளுந்தனுக்கும் இடையேயான பாசம் என பல காட்சிகளின் மூலம் அம்மக்களிடையே இருந்த நீக்கு போக்கான தன்மையும் வெளிப்படுகிறது.
இந்த கதை நடக்கும் காலகட்டம் 1970 என்பதால் இதில் சொல்லப்படும் படகின் விலை 350 ரூபாய், திருவிழாகாசு 10 பைசா என்பதெல்லாம் நம்மை ஆச்சரியப்படுத்துபவை. மேலும் அக்காலத்திலேயே ஆசிரியர்கள் உபதொழில்களை மேற்கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெரியப்படுத்தப்படுகிறது. அப்போதைய முக்கிய லாபம் தரும் வியாபாரங்களில் ஒன்றாக சைக்கிள் ஸ்பேர்பார்ட்ஸ் கடை சொல்லப்படுகிறது.

இந்த நாவலின் சிறப்பே, இதில் வரும் சம்பவங்கள், குடும்பத்தில் நடக்கும் வாத பிரதி வாதங்கள் எல்லாம் எந்த சமூகத்திற்க்கும் தொடர்புபடுத்தி பார்க்கும் வகையில் அமைந்திருப்பதேயாகும். நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில்தான் கடலைப் பார்த்தேன். இன்றுவரை கடற்கரையை தாண்டி எதையும் யோசித்ததில்லை. ஆனால் இதை வாசிக்கும்போது, கடல்புர மக்களின் பேச்சுவழக்கு, உடல்மொழி ஆகியவை என் மனதில் தோன்றிக்கொண்டே இருந்தன. இனி எப்பொழுதாவது மீனவர் குடியிருப்பு பக்கம் போனால் அங்கே குரூஸையும், பிலோமியையும், பவுலுபாட்டாவையும் என் கண்கள் தேடும்.


நூலின் பெயர் : கடல்புரத்தில்


ஆசிரியர் : வண்ணநிலவன்


பக்கங்கள் : 128


விலை : ரூ 75.


வெளியீடு: கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை,


ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018.

தொலைபேசி : 044-42009601/03/04

தொலைநகல் : 044-43009701

நூலை ஆன்லைனில் வாங்க இங்கே செல்லவும்நியூ ஹொரைசன் மீடியாவின் புதிய புத்தகங்கள் பற்றிய தகவல்களைப் பெற START NHM என்று டைப் செய்து 575758 என்கிற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள்.

22 comments:

லேகா said...

நல்ல பதிவு!!

முரளிகண்ணன் said...

தங்கள் வருகைக்கு நன்றி லேகா

மாதவராஜ் said...

எனக்கு இன்றும் மிக பிடித்தமான தமிழ் நாவல்களில், கடல் புரத்தில் ஒன்று. திருச்செந்தூர் அருகேதான் எனக்கு சொந்த ஊர் என்பதால், கடலும், இந்த மாந்தர்களும் பரிச்சயமானவர்கள்தான். இருந்தாலும், மீன் செதில்கள் மின்னும் அந்த தெருக்களில் அவர்களோடு காலம் கழித்ததைப் போல உணர்வு வந்து கொண்டே இருந்தது. கதையை வாசித்து முடித்த பின்னரும், கடலின் இரைச்சலோடு பிலோமியின் நினைவுகள் அலைஅலையாய் வந்து கொண்டிருந்தன. எல்லோருக்கும் பிலோமி ரொம்ப பிடிக்கும்.

ஆனால் கதையைப் பற்றிச் சொல்ல ஆரம்பிக்கும் இடத்தில் அதிகாரம் குறித்து சில விஷயங்கள் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். அதற்கு பதிலாக வாழ்வதற்கான நம்பிக்கையும், பிடிமானமும் என்று இருந்தால் பொருத்தமாயிருக்கும் என நினைக்கிறேன். அதிகாரம் என்பது வேறு நிறைய, அரசியல் பொதிந்த அர்த்தங்களோடு, எப்போதும் கோரப்பல்லோடு காட்சியளிக்கக்கூடிய ஒன்றாக கருதுகிறேன்.

எப்படியிருந்தாலும், கடல்புரத்தில் நினைவுகளை எனக்குள் மீட்டி விட்டீர்கள். நன்றி.

அரவிந்த் said...

\\இனி எப்பொழுதாவது மீனவர் குடியிருப்பு பக்கம் போனால் அங்கே குரூஸையும், பிலோமியையும், பவுலுபாட்டாவையும் என் கண்கள் தேடும்.\\

ஆழமாக பாதிப்பது என்பது இதுதானா?? உங்கள் விமர்சனம் அருமை.

அரவிந்த் said...

தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஒரு சில எழுத்துப்பிழைகள் உள்ளன. சரி செய்து கொள்ளவும்.

\\தமிழ்னாட்டில், டவுணுக்கு, etc\\

\\கடல்புரத்தில் வரும் பெண்களில்..\\

இந்த பத்தி, இரு முறை வருகிறது..

Dont publish.. Just correct it.. Sorry for the inconvenience..

முரளிகண்ணன் said...

மாதவராஜ் தங்கள் வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றிகள்

முரளிகண்ணன் said...

அரவிந்த் தங்கள் வருகைக்கும், தவறை சுட்டிகாட்டியமைக்கும் நன்றிகள்.

பிளாக்கர் சதி செய்கிறது. சரியாக எடிட் செய்ய முடியவில்லை. விரைவில் சரிசெய்து விடுகிறேன்.

முரளிகண்ணன் said...

மாதவராஜ் சார்,

\\அதிகாரம் என்பது வேறு நிறைய, அரசியல் பொதிந்த அர்த்தங்களோடு, எப்போதும் கோரப்பல்லோடு காட்சியளிக்கக்கூடிய ஒன்றாக கருதுகிறேன்.
\\

நான் இங்கே அதிகாரம் என சொல்ல வந்ததை, அவர்களின் திறன் காரணமாக மற்றவர்களின் மரியாதையைப் பெறுவது என்றும் கொள்ளலாம்

\\அதற்கு பதிலாக வாழ்வதற்கான நம்பிக்கையும், பிடிமானமும் என்று இருந்தால் பொருத்தமாயிருக்கும் என நினைக்கிறேன். \\

ஆம்.

விரிவான பின்னுட்டத்திற்க்கு நன்றிகள்

SUREஷ் said...

அதிகாரம் என்பதே ஒருவன் வாழ்வதற்க்கான பலத்தையும், மன திடத்தையும் தருகிறது. அந்த அதிகாரம் குறையும் போது அவன் வாழ்வதற்க்கான காரணம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. முற்றிலும் அதை இழக்கும்போதோ கிட்டத்தட்ட நடைப்பிணமாகிறான். ////////////////////
சில நேரங்களீல் பேயாகிவிடுகிறான்

பரிசல்காரன் said...

:-)

சரவணகுமரன் said...

நல்ல பதிவு

கார்க்கி said...

really good novel.

சிநேகிதன்.. said...

அண்ணா வண்ணநிலவனை வண்ணதாசன் என்று மாத்திட்டிங்க.. சரி செய்யவும்..


Dont publish.. Just correct it.. Sorry for the inconvenience. pls

விலெகா said...

ரொம்ப நல்லா இருக்குங்க:-)

முரளிகண்ணன் said...

விலெகா வருகைக்கு நன்றி.

சினேகிதன் வருகைக்கு நன்றி.

பிளாக்கரில் எடிட் செய்ய முடியவில்லை. திருத்திய உடன் ஜாம் ஆகிவிடுகிறது.

இன்று இரவுக்குள் திருத்திவிடுகிறேன். நன்றி

நவநீதன் said...

அண்ணே...
நாவல போலவே உங்க விமர்சனமும் அழகா இருக்கு....
அதுவும் ஆரம்பத்தில, உழவன் கதை அற்புதம்...
நல்லா சொல்லீருகீங்க...

முரளிகண்ணன் said...

நன்றி நவனீதன்

நசரேயன் said...

தகவலும் விமர்சனமும் அருமை

தமிழ்ப்பறவை said...

முரளி சார்...
நான் இன்னும் 'கடல்புரத்தில்' படிக்கவில்லை. படிக்க வேண்டிய புத்தகங்களின் மனப்பட்டியலில் ஏற்கனவே ஏற்றிவிட்டேன்.
//பதிவு முடிந்தவுடன் அங்கே அரை பிளேட் மட்டன் பிரியாணி சாப்பிட்டுவிட்டு, குடும்பத்தார்க்கு பார்சல் வாங்கி டவுண் பஸ்ஸில் உட்கார்ந்திருக்கும் போதுகூட அவர்கள் முகத்தில் சலனம் இருக்காது. //
இதுபோல் எங்கள் வீடு வாங்கியவர்கள் வாங்கிக்கொடுத்த பிரியாணியைச் சுவைப்பதா... இல்லை மீட்டெடுப்பது எப்படி என யோசிப்பதா எனப் புரியாமல் குழம்பிய காட்சி இன்னும் என் கண்களில்....
//மாநிற மேனி என்றால் மயங்கி விடுவார்கள். எங்கள் ஊர்பக்கம் அதை புதுநிறம் என்பார்கள். அந்த நிறத்தில் முகம் லட்சணமாக இருக்கும் பெண்கள் திருவிழா காலங்களில் தாவணி அணிந்து வளைய வரும் போது ஊரே வெறிக்கும்.//
இதற்கெல்லாம் ரிப்பீட்டுவது அபத்தம் எனினும் ரிப்பீட்டாமல் இருக்க முடியவில்லை. மாநிற மயில்களின் தண்ணீர்க்குடங்களில் தளும்பிச் சிதறியது என் பார்வைகள் எனில் மிகையாகாது.

முரளிகண்ணன் said...

நசரேயன் வருகைக்கு நன்றி.

தமிழ்பறவை தங்கள் வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றிகள்

சித்திரவீதிக்காரன் said...

கடல்புரத்தில் குறித்த அருமையான பகிர்வு. நான் வாசித்த நாவல்களில் 'கடல்புரத்தில்'க்கு தனி இடம் என்றும் உண்டு. நல்ல பதிவு. பகிர்விற்கு நன்றி.

முரளிகண்ணன் said...

நன்றி சித்திரவீதிக்காரன்