November 08, 2008

தமிழ் சினிமாவில் எடிட்டர்கள் - பகுதி 3

ஒரு படத்தின் தலைவிதியை இயக்குனர், தயாரிப்பாளர்களை விட நன்கு கணிக்க்கூடியவர்கள் திரையரங்கில் பணிபுரிபவர்களே. ஆப்பரேட்டர், கேண்டீன் காரர்கள் இரண்டு நாளில் கணித்து விடுவார்கள். (முதல் நாள் ரசிகர்கள் அதிகம் பார்ப்பதால் சிறிது கடினம்).

இந்திய படங்களிலேயே பெரு வெற்றி பெற்ற படம் ஷோலே. இப்படத்தின் வெற்றியை தயாரிப்பாளருக்கு முதன் முதலில் சொன்னவர் புறநகர் தியேட்டர் ஒன்றின் கேண்டின் உரிமையாளர். அவர் சொன்ன காரணம் " இடைவேளை விட்ட பின்னர் 5 நிமிடம் கழித்தே மக்கள் கேண்டீனுக்கு வந்தார்கள்". சாதாரணமாக மணியடித்ததும் மக்கள் உடனே எழுந்தரித்து வந்து விடுவார்கள். இப்படம் ஏற்படுத்திய பிரமிப்பால் அவர்கள் அசந்து உட்கார்ந்துவிட்டார்கள்.

இம்மாதிரி அனுபவம் எனக்கும் சில படங்களில் கிடைத்துள்ளது. சேது படத்தின் முதல் காட்சி. 40 பேர் மட்டும் அரங்கில். இடைவேளைக்குப் பின் திரையரங்கில் மயான அமைதி. படம் முடிந்து கதவும் திறக்கப்பட்டது. யாரும் எழவில்லை. 5 நிமிடம் கழித்தே எல்லோரும் வெளியேறினோம். இதே போன்ற அனுபவம் காதல் கோட்டையிலும். எனக்கு முன்வரிசையில் இருந்த நண்பர்கள் முதல் பாதியில் சலசலத்துக் கொண்டே இருந்தனர். இடைவேளை முடிந்து சிறிது நேரம் கழித்து படத்தில் ஆழ்ந்தனர்.

தியேட்டர் ஆப்பரேட்டர்களும் ஒரு வகையில் நல்ல எடிட்டர்களே. அரிசியில் கல் பொறுக்குவது போல படத்திற்க்கு தேவையில்லாத காட்சிகளை தூக்கிவிடுவார்கள். இங்குதான் இயக்குனர் தலையீடு இல்லையே. மேலும் காட்சிகள் குறைந்தால் மின்கட்டணமும் குறைவதால் தியேட்டர் உரிமையாளர்களும் இதை ஊக்கப்படுத்துவார்கள்.

இவர்களின் கத்தரிக்கு முதலில் இரையாவது பாடல் காட்சிகளே.

1. பெரும்பாலும் கவர்ச்சி காட்சிகள் இல்லாத மெலடி பாடல்கள்.

2. படத்திற்க்கு எந்த வகையிலும் உபயோகமில்லாத பாடல்கள் (தூள் : குண்டு பெண்ணெ, நாட்டாமை : உறவுக்காரன் உறவுக்காரன்)

3. எந்த பாடல் வரும்போது அதிக வெளிநடப்பு நடக்கிறது (கேண்டின் காரர் மட்டுமே இதை ஆட்சேபிப்பார்)


இரண்டாவதாக முக்கிய நடிகர் இல்லாத, வெட்டினாலும் கதையோட்டத்தை பாதிக்காத சிறு நடிகர்களின் காட்சிகள். இவர்கள் பெரும்பாலும் காமெடி காட்சிகளை வெட்டுவதில்லை (படு மொக்கையாக இருந்தாலொழிய)

படம் நீளமாக இருந்தால் மக்களால் ரசிக்கப்படாத காட்சிகள்
ஆளவந்தான் - மொட்டை கமல் தப்பிவந்த பின் வரும் பல கிராபிக்ஸ் காட்சிகள்
ஹேராம் - சாகேத்ராம், தன் முன்னால் நண்பர்களை சந்திப்பது, சில விஷயங்கள் நடக்கும் போது அவரின் எண்ண ஓட்டம் என 30 நிமிட காட்சிகள் இரண்டு நாளில் வெட்டப்பட்டன.

பெரும்பாலும் இம்மாதிரி எடிட்டிங் சரியாகவே இருக்கும். ஆப்பரேட்டர்கள் பெரும்பாலும் அந்தந்த பகுதியை சேர்ந்தவர்களாகவே இருப்பதால் அவர்களின் ரசனை அப்பகுதி மக்களின் பொது ரசனையை பிரதிபலிக்கும். சென்னையில் இம்மாதிரி எடிட்டிங் அதிகம் செய்யப்படுவதில்லை. அப்படத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் பார்க்கும் வாய்ப்பு அதிகம் மற்றும் ஆப்பரேட்டர் ரசனையும் பார்வையாளர் ரசனையும் இங்கு வேறுபட்டது.

மிகவும் பிரபலமான உதாரணம் மெல்லத் திறந்தது கதவு. சில தியேட்டர்களில் அமலா வரும் பகுதி முதலிலும் ராதாவின் போர்ஷன் பின்னாலும் வரும். சில இடங்களில் இது உல்டாவாக இருக்கும். விருதுநகர் போன்ற ஊர்களில் படத்தின் முக்கிய பாடலை இரண்டு முறை காட்டி விடுவார்கள். (உள்ளத்தை அள்ளித்தா - அழகிய லைலா இரண்டாம் பாதியிலும் வரும்படி தேர்ந்த எடிட்டிங்). ஜாக்கிசானின் ட்வின் பிரதர்ஸ் பட காட்சிகளுக்கு எங்க வீட்டு பிள்ளை பாடல்களை இணைத்து ரணகளப்படுத்துவார்கள்.

நான் லீனியர் எடிட்டிங்

முன்பு பட நெகடிவ்வை தேவையான இடங்களில் வெட்டி, மற்ற பகுதியுடன் இணைப்பார்கள். இதனால் நெகடிவ் சில பகுதிகளில் அழிவதுடன் மீண்டும் பயன்படுத்த முடியாமையும் ஏற்படும். நான் லீனியர் எடிட்டிங்கில் நெகடிவ்வில் இருக்கும் காட்சிகள் ஒரு ஹார்ட் டிஸ்க்கில் ஏற்றப்படும். பின்னர் சாப்ட்வேர் உதவியுடன் தேவையில்லாத காட்சிகள் நீக்கப்படும். காட்சி வரிசைகள் நாம் வேர்டில் கட் அண்ட் பேஸ்ட் செய்வது போல மாற்றி அமைக்கப்படும்.

இதன் சாதகங்கள்
1. ஒரிஜினல் நெகடிவ் துளிகூட அழியாமல் பாதுகாக்கப்படும்

2. செலவு குறைவு, வேகம் அதிகம்

3. தொலைக்காட்சி தொடர்களில் இம்முறையே மிகவும் பயன்படுகிறது. கதைப் போக்கிற்க்கு ஏற்ப முன்னர் எடுத்து வேண்டாமென ஒதுக்கிய காட்சிகளை கூட மீண்டும் பயன்படுத்தலாம்.

4. இயக்குனருக்கு எடிட்டிங் புரிதல் இருந்தால் தொழில் முறை எடிட்டர் தேவையில்லை (உம் பாலு மகேந்திரா)

எனவே எடிட்டிங் செய்வதற்கு பெரிய தொழில்நுட்ப அறிவு தேவையில்லை. யாரும் எளிதில் கற்றுக்கொள்ளலாம். ஆனால் திரைப்படம் பற்றிய புரிதலும் நல்ல ரசைனையும் இருந்தால் மட்டுமே நல்ல எடிட்டராக மாற முடியும்.

ஒரு சந்திப்பில் சுஜாதா தன்னை புகைப்படம் எடுக்குமாறு பாலுமகேந்திராவிடம் கேட்டாராம். ஒரே ஒரு தெர்மோகூல் ஷீட், சாதாரண கேமரா உதவியுடன் எடுத்துக் கொடுத்தாராம். அது சுஜாதாவின் புகைப் படங்களிலேயே சிறப்பாக அமைந்ததாம். அதைப்பற்றி சுஜாதா ஒருமுறை எழுதியிருந்தார் " நல்ல புகைப்படம் எடுக்க கருவிகள் தேவைதான். ஆனால் அதைவிட முக்கியம் அதை எங்கே வைக்க வேண்டும் என்று சொல்வதற்க்கு ஒரு பாலு மகேந்திரா தேவை"

எடிட்டர்களின் பங்கை நாம் உணரவில்லை என்பதற்க்கு உதாரணமாக ஒரு கேள்வி.
பாட்ஷா பட எடிட்டர் யார்?
கணேஷ் குமார் என்பவர்.

33 comments:

தமிழ்ப்பறவை said...

நல்ல அலசல்...
//எந்த பாடல் வரும்போது அதிக வெளிநடப்பு நடக்கிறது (கேண்டின் காரர் மட்டுமே இதை ஆட்சேபிப்பார்)//
ஹி...ஹி.... சிரித்தாலும் உண்மை, உண்மைதானே...
//ஜாக்கிசானின் ட்வின் பிரதர்ஸ் பட காட்சிகளுக்கு எங்க வீட்டு பிள்ளை பாடல்களை இணைத்து ரணகளப்படுத்துவார்கள்.//
இந்தக்கூத்தெல்லாம் நடந்திருக்கா....?
நான்லீனியர் எடிட்டிங் பற்றி ,போன பதிவில், பின்னூட்டத்தில் விளக்கமளித்த டாக்டர்.புருனோ வுக்கும், இப்பதிலும் விளக்கிய உங்களுக்கும் சிறப்பு நன்றிகள் முரளி சார்...
//மிகவும் பிரபலமான உதாரணம் மெல்லத் திறந்தது கதவு. சில தியேட்டர்களில் அமலா வரும் பகுதி முதலிலும் ராதாவின் போர்ஷன் பின்னாலும் வரும். சில இடங்களில் இது உல்டாவாக இருக்கும்.//
ஆக்சுவலா எந்தப் பகுதி முன்னால வரும்...?

அத்திரி said...

தங்களை புத்தக தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன். மறக்காமல் எழுதவும்

நல்லா இருக்கு. சின்ன வயசுல படம் பாகும் போது யோசிச்சியிருக்கேன் எப்ப்டிடா திடீர்னு வீட்டில் இருப்பவன் மலையில போய் டான்ஸ் ஆடுறான்னு?.

narsim said...

முரளி கண்ணன்.. வலக்கமான அசத்தல்..

"ஏ ஆப்பரேட்டரே".. என்ற கோஷம் கிராமப்புற திரையருங்குகளின் தேசிய கீதம்..

அந்த மெல்ல திறந்தது கதவு மேட்டர் மிகச்சிறந்த உதாரணம்..

ஏக் து ஜே கேலியேவில் கற்பழிப்புக் காட்சியின் போது சரிவர காட்சிபடுத்த முடியவில்லையாம்.. பக்கத்தில் இருந்த பாறைகளை சில ஷாட் எடுத்துக்கொண்டு சுரேஷ்கிருஸ்ணாவிடம்(அப்போதைய அசிஸ்டெண்ட்) இப்படி சொன்னாராம் கேபி..

"அவளை எடிட்டிங் ரூமில் ரேப் செய்துவிடுகிறேன்"..

அதுபோலவே பாறை நீர்சுழல் என்று காட்சிகள் மாறி மாறி அசத்தலாக கற்பழிப்பு காட்சி என உணர்த்தப்பட்டிருக்கும்..

நர்சிம்

முரளிகண்ணன் said...

தமிழ்பறவை வருகைக்கு நன்றி.

முரளிகண்ணன் said...

அத்திரி வருகைக்கும், அழைப்புக்கும் மிக்க நன்றிகள். விரைவில் எழுதுகிறேன்

முரளிகண்ணன் said...

வருகைக்கும் கூடுதல் சுவராசிய தகவலுக்கும் நன்றி நர்சிம்

கானா பிரபா said...

ரசித்தேன், வித்தியாசமா இருக்கு

யோசிப்பவர் said...

ஆபரேட்டர் எடிட்டிங்கை வரவேற்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? பள்ளி, கல்லூரி நாட்களில், எங்கள் ஊரில் இந்த அநியாயம் அநியாயத்துக்கு நடக்கும். பத்திரிக்கைகளில் ஏதாவது காட்சியை சிலாகித்து எழுதியிருப்பார்கள்(கொஞ்சம் கலை நயமானதாய் இருக்கும்). நம்பி நாம் தியேட்டரில் போய் உட்கார்ந்தால், ஆபரேட்டர் அதை போர் சீன் என்று வெட்டியிருப்பார். செமை கடுப்பாகிவிடும். சென்னையில் பரவாயில்லை என்றாலும், இங்கேயும் சில கேட்பாரில்லாத படங்களுக்கு இந்த எடிட்டிங் நடத்தத்தான் படுகிறது.

குட்டிபிசாசு said...

//இம்மாதிரி அனுபவம் எனக்கும் சில படங்களில் கிடைத்துள்ளது. சேது படத்தின் முதல் காட்சி. 40 பேர் மட்டும் அரங்கில். இடைவேளைக்குப் பின் திரையரங்கில் மயான அமைதி.//

ஆம். எனக்கு பொதுவாக பாலா படங்களில் இப்படி நிகழ்வது உண்டு. அன்பேசிவம் பார்க்கும்போது கூட இப்படி நிகழ்ந்தது.

//காதல் கோட்டை//

இப்படத்தில் ஒரு எடிட்டிங் தவ்ரு இருந்தது. நான் சொல்வது சரியா என்று மற்றவர்கள் கூறலாம். அஜீதும், விஜயும் ஒரு கடையில் சாப்பிட்டு கொண்டிருப்பார்கள், அப்போது சில ரவுடிகளுடன் சண்டை வரும். அந்தக் காட்சியின் போது அஜீத் ஆட்டோ ஓட்டுனர் அணியும் காக்கி சட்டை அணிந்திருப்பார். சண்டை முடிந்து, அடுத்த காட்சியில் விஜயுடன் பேசும் போது "வேலை கிடைக்காததால் ஆட்டோ ஓட்டலாம்" என்று முடிவெடுப்பார்.

வாழ்த்துக்கள்!!

குப்பன்_யாஹூ said...

நல்ல பதிவு.

ஆனால் எடிட்டிங், ஒளிப்பதிவு, சண்டை எடிட்டிங் போன்றவை மணிரத்னம், கமல் காலத்தில தான் மிக முக்கியமாக்கப் பட்டன.

பாட்சா போலவே, அண்ணாமலை, ராஜாதிராஜ, சகலகலா வல்லவன், குடியிருந்த கோயில் போன்றவை களின் எடிடோரோ, ஒளிப்பதிவாலரோ யாரும் அக்கறை கொள்ள மாட்டார்கள்.

மணிரத்னம் தான் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க செய்தவர்.

அக்னி நட்சத்ரம், இதயத்தை திருடாதே போன்ற படங்களில் இருந்து தான் டைட்டில் ஒளிப்பதிவாளர், நடன இயக்குனர் பெயர் பார்த்து ரசிகர்கள் கைதட்ட ஆரம்பித்தனர்.

தமிழ்த்திரை உலகம் மிக சிறந்த எடிடோர்களை கொண்டு உள்ளது, லெனின் பீம்சிங், விஜயன், தி ராஜேந்தர், தணிகாசலம்...குப்பன்_யாஹூ

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி கானா பிரபா, குட்டி பிசாசு, யோசிப்பவர், குப்பன் யாஹு.

நாமக்கல் சிபி said...

வேதம் புதிது படத்தின் எடிட்டர் யார்?

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி நாமக்கல் சிபி,


\\வேதம் புதிது படத்தின் எடிட்டர் யார்?

\\அப்படத்தின் எடிட்டர் பி மோகன்ராஜ்

பி வாசுவின் பெரும்பாலான படங்களுக்கு எடிட்டராக இருந்தவர்/இருக்கிரவர்

புருனோ Bruno said...

//4. இயக்குனருக்கு எடிட்டிங் புரிதல் இருந்தால் தொழில் முறை எடிட்டர் தேவையில்லை (உம் பாலு மகேந்திரா)//

ம்ம்ம்ம்

பாலு மகேந்திரா அந்த காலத்திலிருந்தே எடிட்டிங்கில் இருக்கிறார்.

அவருக்கு அந்தக்கால எடிட்டிங் குறித்த டெக்னிக்கல் அறிவு கட்டாயம் இருக்கும் என்றே நம்புகிறேன்

சரவணகுமரன் said...

வழக்கம் போல் கலக்கல்...

கார்க்கி said...

ஆன்டனியின் வருகைக்குப் பின் எடிட்டிங் பற்றி விமர்சணங்களில் அடிக்கடி சொல்லப் படுகிறது. ஆனால் அவரை சுயமாக வேலை செய்ய விடாத இயக்குனர்களின் படங்களில் அவர் சொதப்பியிருப்பார். உ‍-ம் அழகிய தமிழ்மகன், வல்லவன்.. நான் விவரமறிந்து எடிட்டரை திட்டிய படம் சிட்டிசன்..

தி பெஸ்ட் பதிவு என சொல்லலாம் சகா.. அத்தனை விவரங்கள்.. வாழ்த்துகள்..

நசரேயன் said...

வழக்கமான அசத்தல் அலசல், உங்க பதிவுக்கு படிச்சு முடிக்காம நகர முடியலை. அனைத்தும் அருமை

முரளிகண்ணன் said...

வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி சரவணகுமரன்,கார்க்கி,நசரேயன்

முரளிகண்ணன் said...

அன்பு புருனோ

பாலு மகேந்திரா அவரின் சில படங்களுக்கு எடிட்டராகவே பணியாற்றியவர். அதனால்தான் அவ்வாறு எழுதினேன்

SUREஷ் said...

பள்ளிக்கூடத்தில் கூட சில மாணவர்கள் பக்கமாக எழுதுவார்கள். சில சுருக்கமாக எடிட் செய்து எழுதி நிறைய மார்க் வாங்கிவிடுவார்கள்

SUREஷ் said...

//ஜாக்கிசானின் ட்வின் பிரதர்ஸ் பட காட்சிகளுக்கு எங்க வீட்டு பிள்ளை பாடல்களை இணைத்து ரணகளப்படுத்துவார்கள்.//
அந்த படத்தின் விளம்பரத்திலேயே இதைப் பயன்படுத்தி இருப்பார்கள்.
ஆனால் நீரும் நெருப்பும்[அபூர்வ சகோதரர்கள்] படத்தின் தழுவலாக தெரிகிறதே

SUREஷ் said...

திரைக்கதையையெ மாற்றும் எடிட்டர்களும் இருக்கிறார்கள். எந்தப்பாடலை எங்கே வேண்டுமானாலும் போடும் வகையில் படம் எடுக்கும் இயக்குனர்களும் இருக்கிறார்கள்

அக்னி பார்வை said...

அப்போ ஒரு நான் லீனியர் எடிட்டர friend அ புடிச்ச on spot ல புது பட டிவிடி எடுத்துடலாம்!!

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி சுரேஷ்.

அக்னிபார்வை நல்ல ஐடியா, ட்ரை பண்ணி பார்த்துறாதீங்க

ILA said...

kamalhaasan engo sonnathai neenga vilaavaariya,azaga solliirukeenga.

starjan said...

Murali Sir, ungakitta erunthu niraiya visayankal thrinchikkalam. Continue your service. எடிட்டிங் செய்வதற்கு பெரிய தொழில்நுட்ப அறிவு தேவையில்லை. யாரும் எளிதில் கற்றுக்கொள்ளலாம். ஆனால் திரைப்படம் பற்றிய புரிதலும் நல்ல ரசைனையும் இருந்தால் மட்டுமே நல்ல எடிட்டராக மாற முடியும்.

கோபிநாத் said...

வழக்கம் போல பின்னிட்டிங்க ;)))

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி இளா, ஸ்டார்ஜன், கோபினாத்

புருனோ Bruno said...

//அன்பு புருனோ

பாலு மகேந்திரா அவரின் சில படங்களுக்கு எடிட்டராகவே பணியாற்றியவர். அதனால்தான் அவ்வாறு எழுதினேன்//

இல்லை தல,

நீங்கள் எழுதியதில் எனக்கு புரிந்தது

1. நான் - லீனியர் நுட்பத்தில் படத்தொகுப்பு - எளிது
2. அந்த கால நுட்பத்தில் படத்தொகுப்பு - கடினம்
3. எளிதான நான் லீனியர் நுட்பத்தை வைத்து பாலு எடிட்டிங் செய்கிறார்
--
நான் கூற வந்தது. எளிதான நுட்பம் இல்லையென்றாலும் கூட அந்த கால நுட்பத்திலேயே எடிட்டிங் செய்ய வல்ல அளவிற்கு பாலு திறமை சாலி
--
:)

rapp said...

சூப்பர் பதிவுங்க, இதேமாதிரி அன்பே சிவம் படத்துல உமா ரியாஸ் கமலோடு பேசும் நீண்ட அழகான காட்சியைக் கூட நெறையத் தியேட்டர்களில் வெட்டிவிட்டார்கள்.

rapp said...

இதுல சொல்லிருக்க நெறைய விஷயங்கள் ரொம்ப ரொம்ப புதுசாவும் சுவாரசியமாகவும் இருக்கு:):):)

முரளிகண்ணன் said...

ராப், தங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றிகள்

அரவிந்தன் said...

உங்களுக்கு ஒரு கேள்வி...

சேது படத்தின் எடிட்டர் யார்.?

அன்புடன்
அரவிந்தன்
பெங்களூர்