ஒரு படத்தின் மூட் என்பதை கொண்டுவருவதில் ஒளிப்பதிவு, பிண்ணனி இசை தவிர எடிட்டர்களுக்கும் அதில் பெரும் பங்கு உண்டு. கலை இயக்கமும் இந்த வகையில் ஒரு பங்கை வகிக்கிறது. மற்றவை நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதை இப்போது எளிதில் சொல்லிவிடலாம். ஆனால் படத்தொகுப்பு அருமையாக இருந்தது அல்லது இல்லை என்பதை சொல்லுவது சற்றே சிரமமான காரியமாய் இருக்கிறது.
இப்போது படத்தின் வேகம் (தூள்,கில்லி), சில காட்சிகளை நளினத்துடன் சுருக்கென முடிக்கும் விதம் (காக்க காக்க) போன்றவற்றின் அடிப்படையில் தான் நாம் எடிட்டிங் நன்றாக இருக்கிறது அல்லது இல்லை என பேசிக்கொள்கிறோம். ஆனால் எடிட்டிங்கின் முக்கிய குறிக்கோள் என்று பார்த்தால் அது படத்திற்க்கு சரியான மூடை கொடுப்பதும்,கதையின் தளத்திற்க்கு ஏற்ற லயத்துடன் படத்தை நகர்த்துவதுமேயாகும்.
தமிழ்சினிமா படங்களை கதையின் அடிப்படையில் பல பிரிவுகளாக பிரிக்கலாம். ஒவ்வொரு பிரிவும் அதற்குரிய வேகத்துடன் படமாக்கப்பட்டாலே ரசிக்ககூடியதாய் அமையும். நம் வசதிக்கு கிரிக்கெட் ஆட்டத்துடன் இந்த பிரிவுகளை ஒப்பிடலாம்.
மகேந்திரன்,பாலு மகேந்திரா, பாசில்,பாலா ஆகியோரது படங்களின் கதைக்களனுக்கு படத்தின் வேகம் அமைதியான நீரோடை போல் இருக்க வேண்டும். அதிரடியான வேகத்தில் இந்தபடங்களை நம்மால் பார்க்க முடியாது. இவை டெஸ்ட் மேட்ச் போல.
திகில் மற்றும் திரில்லர் படங்கள் 80களில் ஆடப்பட்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் வேகத்தை ஒத்திருக்க வேண்டும். முதலில் சாவகாசமாக ஆரம்பிக்கப்பட்டு 35 ஓவருக்கு மேல் அடிக்க முற்பட்டு கடைசி 5 ஓவரில் காட்டடி அடிப்பதைப் போல. முதலில் கேரக்டர்களின் அறிமுகம், பின்னர் நடக்கப் போகும் சம்பவம் தொடர்பாக பில்ட் அப் காட்சிகள் கடைசி அரைமணி நேரம் உச்சக்கட்ட வேகம் என்றிருந்தால்தான் அவை சுவைக்கும்.
கமர்ஷியல் ஹீரோக்களான ரஜினி,விஜய்க்கு தற்போதைய ஒரு நாள் கிரிக்கெட் போல. முதலில் பவர் பிளே (ஒப்பனிங் பைட்,சாங்) , பின்னர் 40 ஓவர் வரை இன்னிங்ஸ் பில்டப் (கதைக்கான காட்சிகள்) கடைசியில் காட்டடி (கிளைமாக்ஸ்).
தரணியின் தூள், கில்லி ஹரியின் சாமி,ஆறு போன்ற படங்களில் இப்போதைய டிரெண்டான 20 20 வேகத்தில் காட்சிகள் நகரும் படி இருக்கும்
மேற்கூறிய வகைப் படங்களுக்கு எடிட்டிங் செய்வது ஒருவகையில் சுலபம்.
ஆனால் காமெடிப் படங்கள் இந்தவகையில் அடங்காது. இப்படங்களுக்கான மூடை கொண்டுவருவதும் மிக கடினம். நல்ல காமெடி சென்ஸ் உள்ள எடிட்டராலேயே அதை சாதிக்க முடியும். பல காமெடி படங்களின் தோல்விக்கு எடிட்டிங்கும் ஒரு காரணமாய் அமைந்திருக்கிறது. கதையுடன் சேர்ந்து பயனிக்காமல் தனியே வரும் காமெடி டிராக் கலைவாணர் காலத்தில் இருந்து கவுண்டமணி, வடிவேல், விவேக் வரை தொடருகிறது. இந்த டிராக்கை நெருடாமல் படத்துடன் இணைப்பதும் சவாலான காரியம். இது படம் தொய்வடையும் போது தூக்கி நிறுத்த வேண்டுமே தவிர வேகத்தை குறைத்துவிடக் கூடாது, மூடை குலைத்துவிட கூடாது.
தமிழ் சினிமா ஏன் இந்திய எடிட்டர்களின் முக்கிய தலைவலி பாடல்கள். பட வேகம்,மூடை கெடுக்காமல் எங்கே கோர்ப்பது இவற்றை?. பல படங்களுக்கு வேகத் தடையாக அமைவது பாடல்களே. தமிழ் மசாலா சினிமாவின் முக்கிய விதி கிளைமாக்ஸ்க்கு முந்தைய பாடல் படு வேகத்துடன், பீட்டுடன் இருக்க வேண்டும். இடைவேளைக்கு அடுத்துவரும் பாடல் மெலடியாக இருக்க வேண்டும். பாடல் காட்சியை எடிட் பண்ணுவதும் மிக கடினமானே ஒன்றே. பாடலின் ரிதத்துக்கு தக்கபடி காட்சியின் வேகம் இருந்தால் மட்டுமே நல்ல காட்சியனுபவம் கிட்டும்.
அடுத்தது பிளாஷ்பேக் காட்சிகள். எங்கே இது அமைக்கப்பட்டால் எபெக்ட் இருக்கும்? இந்தியன், ஜெண்டில்மேன், பாட்ஷா போன்ற படங்களின் வெற்றிக்கு அதன் ஆழமான பிளாஷ் பேக் காட்சிகளும் காரணம். பிளாஷ் பேக் இல்லாமல் திருப்பமில்லா நீரோடை போல அமைக்கப்பட்டிருந்தால் இந்த அளவுக்கு தாக்கம் ஏற்பட்டிருக்குமா?
எடிட்டிங்கால் வெற்றி/தோல்வி மற்றும் தமிழ் சினிமாவின் முக்கிய எடிட்டர்கள் - அடுத்த பதிவில்
50 comments:
me the first
me the second
சினிமா என்றாலே அது முரளிக்கண்ணந்தான் அருமை, அருமை.
மகேந்திரன்,பாலு மகேந்திரா, பாசில்,பாலா ஆகியோரது படங்களின் கதைக்களனுக்கு படத்தின் வேகம் அமைதியான நீரோடை போல் இருக்க வேண்டும்.
நேர்த்தியான கருத்து.
//பிளாஷ் பேக் இல்லாமல் திருப்பமில்லா நீரோடை போல அமைக்கப்பட்டிருந்தால் இந்த அளவுக்கு தாக்கம் ஏற்பட்டிருக்குமா? //
இது எடிட்டர் கைவண்ணமா, திரைக்கதையாளர் கைவண்ணமா?
நல்ல அருமையான விளக்கம், நான் படம் எடுத்தால் நீங்கள் தான் அதுக்கு எடிட்டர்
சுரேஷ் சார் வருகைக்கு நன்றி
\\இது எடிட்டர் கைவண்ணமா, திரைக்கதையாளர் கைவண்ணமா?\\
திரைக்கதை அமைத்தவரின் பங்கு அதிகமென்றாலும் திருப்பம், பிளாஷ் பேக் ஆகியவை எங்கு வந்தால் எவ்வளவு நீளம் வந்தால் நன்றாய் இருக்குமென்பதில் எடிட்டர்களுக்கு நல்ல புரிதல் இருக்கும் என்றே நினைக்கிறேன். பருத்திவீரனில் இடைவெளி விட்டு வரும் பிளாஷ் பேக் காட்சிகள், பாட்ஷாவில் வரும் பிளாஷ் பேக்குக்குள் ஒரு பிளாஷ் பேக் ஆகியவற்றில் எடிட்டர்களின் பங்கு இருப்பதாகவே கருதுகிறேன்.
விலேகா தங்கள் வருகைக்கு நன்றி
நசரேயன் தங்கள் வருகைக்கு நன்றி.
பதிவை எடிட் செய்வதே மிக கடினமாய் இருக்கிறது. இதுல படமா?. நீங்க ஆண்டியாகனும்னு இருந்தா யாரால மாத்த முடியும்
முரளி, எடிட்டர்களுக்கு பிரச்சினையே திரைக்கதைதான். இயக்குனர் சரியான இடத்துல எடுத்த காட்சியை (EX Scene 45/Shot 5) எழுதி வெச்சுட்டு படமாக்கிருப்பாங்க. எடிட்டருங்க மாத்த நினைப்பாங்க. அங்கேதான் பிரச்சினை ஆரம்பிக்கும். ஆதனாலேயே SVSekar மாதிரியானவங்க அவுங்களே எடிட்டர்களாயிருவாங்க.
இளா தங்கள் வருகைக்கும் தகவலுக்கும் நன்றி.
நீங்கள் திரைத்துறையுடன் தொடர்பில் இருந்ததால் இது போன்ற பல நிகழ்வுகளை கேட்டிருப்பீர்கள். அவற்றை பகிர்ந்து கொள்ளலாமே?
Sound editorஆ இருந்தா எனக்கு இதெல்லாம் அவ்வளா தெரியாதுங்க. பல உதவி இயக்குனர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன். அதுல ஒரு அலைபாயுதே.. மணிரத்னத்துடன் சண்டை போட்டுட்டாராம் ஸ்ரீகர் பிரசாத். எடிட்டிங் பொருத்தவரையில் அலைபாயுதே தமிழ் சினிமாவின் மைல்கல்.(என் பார்வையில்)
தாங்கள் கூறியதுபோல தொகுப்பு சவாலான விடயம் தான். மிகவும் ரசிக்கக்கூடிய, சுவாரசியமான படங்களில் தொகுப்பு பிரமாதமாக அமைந்திருக்கும்.
தற்போது வரும் அதிரடிப்படங்களில் அதிகமாக காட்சிகள், கோணங்கள் மாறுவதால் தொகுப்பு பற்றி பொதுவாக சிலாகிக்கப்படுகிறது. ஒன்றக் கூடிய மூட் கொண்டுவரப் போராடும் தமிழ்ப் படங்கள் தற்போது எதுவும் வரவில்லை என்றே கூறுவேன். அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.
தமிழ் சினிமாவைப்பொறுத்தவரி அதில் தொழினுட்ப கலைஞர்களின் பங்கு சரியான முறையில் புரிந்து கொள்ளப்படவில்லை. ஒரு படத்தை சரியான வேகத்ஹ்டில் கொண்டு செல்வதில் திரைக்கதை - எடிட்டரின் கூட்டு முயற்சி முக்கியமானது.
உதாரணமாக பாபா படம் விறுவிறுப்பில்லாமல் போனதற்கு ஒரு காரணமாக நான் சொல்வது, அதில் இடைவேளைக்கு முன்னர் ரஜினி பட்டம் விட்டு மந்திரத்தை பரிசோதிப்பார். பின்னர் இடைவேளை. இடைவேளாஇயில் எல்லாரும் பட்டம் விட்டது பற்றி கிண்டலடித்துக்கொண்டிருக்க இடைவேளை முடிந்த பின்னர் மீண்டும் பட்டம் விட்டு பரிசோதிப்பார்.....
இது ஒரு தவறான உத்தியாய் அமைந்தது என்று நினைக்கிறேன்
சில சமயம் எடிட்டரே இல்லாமல் படமெடுப்பார்கள் உதரணம ‘ஏகன்’..
வரும் பதிவில் uncredited எடிட்டர்களான தியேட்டர் ஆப்பரேட்டர்களை பற்றியும் எழுதுவீர்களா?
உங்களிடமிருந்து நான் எதிர்பார்த்த ஒன்று..நன்று..
ஒரு சந்தேகம் சகா.. திரைக்கதைதானே பாடல்கள் மற்றும் கொசுவத்தி எங்கே எப்போது வர வேண்டுமென முடிவு செய்வது சரியாயிருக்கும்..
வருகைக்கு நன்றி இளா, குட்டிபிசாசு, அருன்மொழிவர்மன்
அக்னி பார்வை தங்கள் வருகைக்கு நன்றி
\\வரும் பதிவில் uncredited எடிட்டர்களான தியேட்டர் ஆப்பரேட்டர்களை பற்றியும் எழுதுவீர்களா?
\\
கட்டாயம்
சினிமா என்றாலே அது முரளிக்கண்ணந்தான் அருமை,
கார்க்கி,
திரைக்கதை என்பது மனதிலும், பின்னர் பேப்பரிலும் உருவாவது. அதை காட்சிப்படுத்தும் போது சிறிதளவோ, பெரும்பாலுமோ மாறக்கூடியது. பின்னர் அக்காட்சிகளை கோர்க்கும் போது தடங்கல் இல்லாமல் செல்வது அவசியம். எனவே அதற்க்காக காட்சி வரிசையை மாற்றுவதுண்டு.
இதில் இருவரின் பங்களிப்பும் அவசியம்.
மைக்கேல் மதன காம ராஜனில் வரும், கமல் ஊர்வசி காதல் மலரும் காட்சிக்கு கிரேசி மோகன் 40 பக்க அளவில் வசனம் கொடுத்தாராம். பின்னர் கமல் அதை 4 பக்கமாக குறைத்தாராம் (கிரேசி பேட்டியில் சொன்னது). படமாக்கும் போது இம்பரவைசேஷனில் காட்சி நீளம் கூடியதாம். பின்னர் எடிட்டர், இயக்குனர் இருவரும் சேர்ந்து கச்சிதமாக்கினார்களாம். அந்த காட்சியின் கச்சிதத்தை இப்போதும் நாம் உணரலாம். திரைக்கதை எழுதும் போது அவ்வளவு கூர்மையாக எழுதமுடியும் என்று சொல்ல முடியாது. சில இயக்குனர்கள் 5 பட அளவுக்கு காட்சிகளை சுருட்டுகிறார்கள். தரணி (தூள்), செல்வராகவன் (புதுப்பேட்டை, 7G ஆகியவை அதிக காட்சிகள் படமாக்கப்பட்டு குறைக்கப்பட்டவை.
சமீபத்தில் கூட சிவாஜி யில் வெட்டப்பட்ட காட்சிகளை தொலைக்காட்சியில் காட்டினார்களே?
திரைக்கதை அமைத்தபின்னும் இம்ப்ருவைசேஷன் செய்வதால் புளோ மாறுபடும். அதை சரி செய்வது எடிட்டர்களே. தன் பிள்ளைகள் எல்லாமே தாய்க்கு நல்ல பிள்ளைகள் தான். மாமனார் மாமியார் தான் குறையை கண்டுபிடிப்பார்கள்
வருகைக்கு நன்றி பிஸி
முரளிக்கண்ணன் வந்துட்டீங்களா! கொஞ்ச நாளா ஆளை (பதிவை) காணோம்.
//இப்போது படத்தின் வேகம் (தூள்,கில்லி), சில காட்சிகளை நளினத்துடன் சுருக்கென முடிக்கும் விதம் (காக்க காக்க)//
படையப்பா கூட எடிட்டிங் பக்காவா இருக்கும்
//ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் வேகத்தை ஒத்திருக்க வேண்டும். முதலில் சாவகாசமாக ஆரம்பிக்கப்பட்டு 35 ஓவருக்கு மேல் அடிக்க முற்பட்டு கடைசி 5 ஓவரில் காட்டடி அடிப்பதைப் போல//
:-))) நல்லா வர்ணித்து இருக்கீங்க
முரளிகண்ணன் உண்மையில் பல விஷயங்கள் சிறப்பா கூறி இருக்கீங்க..உங்கள் பதிவுகளை படித்த பின்பு தான் பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.
வழக்கம் போலவே அருமையன தொகுப்பு முரளி
வருகைக்கு நன்றி கிரி, கானா பிரபா
அருமையான அலசல் முரளிகண்ணன்.. எடிட்டர், கலை இயக்குனர் போன்ற தொழில்நுட்பக் கலைஞர்களின் வெற்றியே படம் பார்க்கும் ஆடியன்ஸ் அவர்களின் வேலையை உணரக்கூடாது என்பதுதான்.. சரியாக தொகுத்திருக்கிறீர்கள்.
கிரிக்கெட்டுடன் ஒப்பிட்டது கலக்கல்..
வழக்கம் போல் ஆழமான அலசல்..
அடுத்த பதிவை எதிர்பார்த்து...
நர்சிம்
வருகைக்கு நன்றி வெண்பூ, நர்சிம்.
எடிட்டிங் பத்தி கலக்கலா சொல்லிடீங்க..
ஒரு சந்தேகம்.. இயக்குனர் தானே ஒரு படத்தில் எந்த இடத்தில் எது, எப்போது வர வேண்டும் என்பதை முடிவு செய்வார்?? நீங்கள் கார்க்கிக்கு கூறியது போல் இருவரின் பங்களிப்பும் அவசியம் தான். ஆனால், இறுதியில் இயக்குனர் தானே முடிவெடுக்க வேண்டும்??
ofcourse, i'm not denying the importance of editors.. same time, i couldn't understand their importance..:-)
சென் தங்கள் வருகைக்கு நன்றி.
\\ofcourse, i'm not denying the importance of editors.. same time, i couldn't understand their importance..:-)
\\
இயக்குனர் தான் அதில் கடைசி முடிவு எடுக்க வேண்டியவர் என்பதில் சந்தேகமில்லை. சினிமா ஒரு கூட்டு முயற்சியே. தனக்கு தேவையான பாடல், பிண்னனி இசையை இசை அமைப்பாளரிடம் கேட்டு வாங்கலாம். ஒளிப்பதிவாளரிடம் குறிப்பிட்ட ஷாட் (லாங்,மிட்,குளோசப்) வைக்க சொல்லலாம். அப்பொழுது கதையை உள்வாங்கிய ஒளிப்பதிவாளர் வேற மாதிரி வைக்கலாமே என் சஜஷன் சொல்வதுண்டு. இயக்குனர்களும் அதை ஏற்றுக் கொள்வதுண்டு. அதைப் போலவே எடிட்டர்களும் இந்த வகையில் காட்சி நகராமல் வேறு மாதிரி நகர்ந்தால் விறுவிறுப்பு கூடும், தாக்கம் அதிகரிக்கும் என கருத்து கூறுவதுண்டு. லெனின் போன்ற எடிட்டர்கள் இதில் சமர்த்தர்கள். காதல் தேசம் படம் கூட படம் வெளியானபின் தொய்வாக இருப்பதாக பேசப்பட்டு, பின் குஞ்சுமோன் லெனினிடம் கொடுத்து ட்ரிம் செய்தார் என்பார்கள்.
இதனால் பல மோதல்கள் இயக்குனர்-எடிட்டர் இடையில் வருவதுண்டு. நீங்கள் கஜினி, தலைநகரம் என்ற இரண்டு படங்களையும் நன்கு மனதில் ஓட்டி பாருங்கள். அதில் எடிட்டரின் இன்றியமையாமை புலப்படும்.
பாலு மகேந்திரா தன் படங்களை தானே எடிட் செய்துகொள்வதுண்டு.
அம்மாடி... என்னா ஒரு ஆராய்ச்சி..
இது போன்ற பதிவுகளுக்கு அற்பணிப்பு முக்கியம். பராட்டுக்கள் முரளி.
அந்த ரஜினி, விஜய் பட வகைப்பாடு வெகுவாக ரசித்தேன்.. :))
வருகைக்கு நன்றி சஞ்சய்
எடிட்டிங் என்பது டெக்னிக்கல் சமாச்சாரம்தான் பெரும்பாலும்.
ஸ்க்ரீன்பிளே என்பது ஒருவகையில் ரிவர்ஸ் எடிட்டிங். ஒரு கதையை சீன் பை சீனாக பிரித்து படம் பிடிக்க ஏதுவாக எழுதி வைத்துக் கொள்வது.
அந்த ஸ்க்ரீன் பிளேயை பின்பற்றி ஷாட்-பை-ஷாட்டாக எடுக்கப்பட்ட காட்சிகளை ஒன்றாக்கி முழுப்படத்தையும் மீண்டும் உருவாக்கி தருவதுதான் எடிட்டிங்.
படத்தின் உள்ளடக்கத்தை தீர்மானிப்பது கதை என்றால் வேகத்தை தீர்மானிப்பது திரைக்கதைதான் என்பது எனது புரிதல். ஏனென்றால் ஸ்க்ரீன்பிளேவில் இருப்பதைத்தான் டைரக்டர் ஷாட்களாக மாற்றி கேமராமேன் படம் பிடித்துக் கொடுக்கிறார்கள். அதுதான் எடிட்டிங்கே ஸோர்ஸ் டேடா.
டெக்னிக்கலாக நிறைய வித்தை காட்டலாம். உதா - மன்மதன் (என்றுதான் நினைக்கிறேன்) படத்தில் சிம்பு, ஜோதிகா ஆடும் டான்ஸ். ஆனால் டைரக்டர் கன்சீவ் செய்யாததை எடிட்டிங்கில் கொண்டு வர முடியாது இல்லையா?
அலைபாயுதே, பாட்ஷா போன்ற படங்களின் திரைக்கதை அப்படி அமைக்கபட்டிருக்கிறது.
இப்பொழுது சில படங்களுக்கு ஆன் த ஸ்பாட் எடிட்டிங் செய்கிறார்கள். இது ஒருவகையில் திரைக்கதையின் இடைவெளிகளை இட்டு நிரப்பும் வேலை.
பொதுவாக ஹாலிவுட் படங்களில் முழு ஸ்க்ரீன் பிளேயும் ஸ்டோரி போர்ட் பண்ணி விடுவார்கள். அதுவே ஒரு மினி படம்தான்.
ஸ்ரீதர் நாராயனன் தங்கள் வருகைக்கும், சிறப்பான தகவல்களுக்கும் நன்றி
கலக்கறீங்க முரளி.
கனவுத்தொழிற்சாலை ஒரு கடல். அதிலிருந்து எத்தனை எத்தனை விஷயங்களை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள்!
வருகைக்கு நன்றி பரிசலார்.
நீண்ட இடைவெளிக்குப் பின் முரளி சார்...
வருக,,பதிவு அருமையாக இருந்தது. நீங்கள் குறிப்பிட்டது போல் எடிட்டரின் வேலை பற்றி எல்லோருக்கும் முழுதாகத் தெரியாது. நானும் யோசிப்பேன் ,இது திரைக்கதையின் சாமர்த்தியமா, எடிட்டரின் திறமையா என...இன்னும் குழம்பிக்கொண்டுதானிருக்கிறேன்.
//தமிழ் மசாலா சினிமாவின் முக்கிய விதி கிளைமாக்ஸ்க்கு முந்தைய பாடல் படு வேகத்துடன், பீட்டுடன் இருக்க வேண்டும்.//
'உப்புக்கருவாடு','என்னாசை மைதிலியே',சங்கீத ஜாதிமுல்லை' பாடல்கள்.
// இடைவேளைக்கு அடுத்துவரும் பாடல் மெலடியாக இருக்க வேண்டும். //
இதுவும் கேண்டீன் விற்பனைக்கு உதவும்.
பல படங்களில் சண்டை அல்லது பாடல் காட்சிகளில் வந்த காட்சிகளையே, மறுபடியும் வெட்டி ஒட்டி இருப்பார்கள். இது எடிட்டரின் திறமைக் குறைவு அல்லது பற்றாக் குறை தயாரிப்பால் ரீல் குறைவு ஆக இருக்கும் என நினைக்கிறேன்.
அது என்னங்க 'நான் லீனியர் எடிட்டிங்'?
\\வரும் பதிவில் uncredited எடிட்டர்களான தியேட்டர் ஆப்பரேட்டர்களை பற்றியும் எழுதுவீர்களா?//
இது இன்னும் சுவாரஸ்யமான ஒன்று, 'மெல்லத் திறந்தது கதவு' படத்தில் அமலா கதை முன்பு வருமா,ராதா கதை முன்பும் அமலா கதை ஃப்ளாஷ்பேக்கில் வருமா என எனக்கு இன்னும் தெரியவில்லை. அதெல்லாம் மதுரை தியேட்டர் ஆப்பரேட்டர்கள்தான் சொல்ல வேண்டும்.
அந்தளவுக்கு ஆப்பரேட்டர்கள் பட்த்தை 'ஆப்பு'ரேஷன் செய்கிறார்கள்.ஆனால் பாதிக்கு மேல் பேஷண்ட் பிழைத்துக் கொண்டது உண்மை எனலாம்.
நான் சேலத்தில் 'காதலுக்கு மரியாதை' முதல்முறை பார்க்கையில், விஜய் ஷாலினி வீட்டுக்கு வந்து லெட்டர் கொடுக்கும் காட்சியில், பின்னணியில் வந்தது ஒரு பாடல்,"நான் தேடும் செவ்வந்திப் பூவிது".
கிளைமேக்ஸில் ஷாலினி விஜய்க்கு கூல்ட்ரிங்ஸ் கொடுக்க வந்து பேசாமல் நிற்கையில் பின்னணியில் வந்த பாடல் வரிகள், "நேரம் கூடி வந்த வேளை,நீ நெஞ்சை மூடி வைத்த கோழை".பொருத்தமாக இருந்தது..
பின்பு குறுந்தகட்டில் படம் பார்க்கையில்தான் தெரிந்தது ,தியேட்டர் ஆப்பரேட்டர் இளையராஜாவான கதை.
'தூள்' படம் பார்க்கையில் 'குண்டு குண்டு குண்டுப் பெண்ணே ' பாடலை வெட்டி விட்டார்கள். அதுவும் சரியாகத்தான் இருந்தது.
சூப்பர் சார். எனக்கு இந்த மாதிரி தொழில்நுட்ப வல்லுனர்களை பற்றி ஜாஸ்தி தெரியாது. அவர்களின் தொழில்நுட்ப யுக்திகளும் அவ்வளவாக கண்டுபிடித்து பாராட்டி ரசிக்கத் தெரியாது. அருமையான பதிவு வாழ்த்துக்கள்
ராப் தங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி
//எடிட்டிங் பொருத்தவரையில் அலைபாயுதே தமிழ் சினிமாவின் மைல்கல்.(என் பார்வையில்)//
உண்மைதான்.
அதிலும் அதில் வரும் பாடல்கள் - முக்கியமாக பச்சை நிறமே மற்றும் காதல் சடுகுடு இரண்டும் தனி class !!!
காதல் சடுகுடு பாடல் காட்சிகள் முழுவதும் reverseல் செல்லும் !!
//உதாரணமாக பாபா படம் விறுவிறுப்பில்லாமல் போனதற்கு //
பாபாவில் வரும் பட்டம் விடும் காட்சி மோசமான படத்தொகுப்பிற்கு உதாரணம் என்பது என் கருத்தும் கூட
//தமிழ் மசாலா சினிமாவின் முக்கிய விதி கிளைமாக்ஸ்க்கு முந்தைய பாடல் படு வேகத்துடன், பீட்டுடன் இருக்க வேண்டும்.//
காக்கி சட்டை படத்தில் வரும் பாடலை போல் அவ்வளவு கச்சிதமாக பாடல் வேறு எந்த படத்திலும் வந்ததாக ஞாபகம் இல்லை !!
//அது என்னங்க 'நான் லீனியர் எடிட்டிங்'?//
உதாரணம் அளிக்கிறேன். புரியவில்லை என்றால் கேட்கலாம்
ஒலிப்பேழையில் (டேப்பில்) பாடல்கள் வரிசையாக இருக்கும். அதில் ஒவ்வொன்றாக ஒரு டேப்பிலிருந்து அடுத்த டேப்பில் பதிந்தால் அது லீனியர் எடிட்டிங்
ஒரு குறுந்தகட்டிலிருந்து (சிடியிலிருந்து) அல்லது வன்தகட்டிலிருந்து டேப்பில் பாடல்களை பதிவது நான் லீனியர் எடிட்டிங்
தற்சமயம் பெரும்பாலான படங்கள் நான் லீனியர் முறையில் தான் தொகுக்கப்படுகின்றன
http://www.cybercollege.com/tvp056.htm
" Working on a non-linear editing system is like working with a sophisticated word processor. Using a computer screen and a mouse you can randomly cut and past segments and move them around until you are satisfied with the result.
Working on a linear editing system is a bit like using a typewriter to type a term paper; you need to assemble everything in the proper sequence as you go along. After it's all on paper (or in this case recorded), adding, deleting or rearranging things can be a major problem. "
புருனோ வழக்கம் போல அசத்தல் தகவல்களை எனக்கு அளித்துள்ளீர்கள்.
\\//தமிழ் மசாலா சினிமாவின் முக்கிய விதி கிளைமாக்ஸ்க்கு முந்தைய பாடல் படு வேகத்துடன், பீட்டுடன் இருக்க வேண்டும்.//
காக்கி சட்டை படத்தில் வரும் பாடலை போல் அவ்வளவு கச்சிதமாக பாடல் வேறு எந்த படத்திலும் வந்ததாக ஞாபகம் இல்லை !!\\
கில்லி - அப்படிப் போடு
முதல்வன் - உப்புகருவாடு
ஜென்டில்மேன் - ஒட்டகத்தை கட்டிக்கோ
சந்திரமுகி - அண்ணனோட பாட்டு
எம் குமரன் - வச்சுக்க வச்சுக்கவா இடுப்பில
என பலபடங்களில் நன்கு அமைந்திருக்கின்றன.
புருனோ,
நான் லீனியர் எடிட்டிங் தொடர்பான விளக்கத்துக்கும் சுட்டிக்கும் நன்றி
?? அண்ணனோட பாட்டு - ரா ரா தானே கடைசி பாடல் ???
//ஜென்டில்மேன் - ஒட்டகத்தை கட்டிக்கோ//
அந்த பாடல் கடைசியிலா வரும் ??
//கில்லி - அப்படிப் போடு
முதல்வன் - உப்புகருவாடு//
தசாவதாரத்தின் கடைசி பாடலையும் சேர்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்
புருனோ
//ஜென்டில்மேன் - ஒட்டகத்தை கட்டிக்கோ//
அந்த பாடல் கடைசியிலா வரும் ??
புருனோ
ஒட்டகத்தை கட்டிக்கோ தான் கடைசி பாடல், அதுபோல காதலனில் - எர்ரானி குர்ரதானி கோபாலா, இந்தியனில் - மாயா மச்சீந்திரா, அன்னியன் - அண்டங்காக்கா கொண்டக்காரி, சிவாஜி - அதிரடிக்கார மச்சான்.
என எல்லா பாடல்களும் பீட் பாடல்கள்தான்.
புருனோ
//?? அண்ணனோட பாட்டு - ரா ரா தானே கடைசி பாடல் ???//
சந்திரமுகி யில் ரா ரா பாடல்தானே கிளைமாக்ஸ். அதனால் அண்ணனோட பாட்டை சொல்லிவிட்டேன் (ஆஹா சமாளிச்சுட்டோம்).
:-))))))))))
Post a Comment