May 29, 2009

எம் எம் ஏ சின்னப்பா தேவர் - ஒரு பார்வை

சமுதாயத்தில் சினிமாவின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்று மக்களைக் கேட்டால், இப்படிப்பட்ட பதில்கள் வரும்.

சினிமா என்பது சக்தி வாய்ந்த ஊடகம், எனவே அதில் நல்ல கருத்துக்கள் மட்டுமே வரவேண்டும். கலை அழகு மிளிர வேண்டும் என்று ஒரு சாரார் சொல்வார்கள்.

போங்கப்பா, சினிமான்னா பொழுது போக்குத்தான். அதில எது வேணும்னாலும் சொல்லலாம் எப்படி வேணும்னாலும் சொல்லலாம் என்று ஒரு சாரார் சொல்வார்கள்.

ஆனால் பெரும்பான்மையோரின் கருத்து எப்படி இருக்கும் தெரியுமா?

சினிமா பொழுது போக்குக்குத்தான். அதில நல்ல கருத்து சொன்னா சந்தோஷம். சமுதாயத்துக்கு ஏதும் கெடுதல் செய்யாம இருந்தாப் போதும்.

இந்தப் பெரும்பான்மையோரின் கருத்துக்கு ஏற்ப படங்களைத் தயாரித்தவர்களே தமிழ் சினிமா வரலாற்றில் பெரும் தயாரிப்பாளர்களாக விளங்கிய்ருக்கிறார்கள்.

ஜெமினி எஸ் எஸ் வாசன், ஏ வி எம் மெய்யப்ப செட்டியார், விஜயா வாகினி நாகிரெட்டியார் ஆகியோர் வரிசையில் இதே கருதுகோள்களோடு தமிழ் திரையுலகில் தடம் பதித்தவர் தான் எம் எம் ஏ சின்னப்பா தேவர்.

அவர் மற்ற மூவரைப்போல இன்றளவும் மனதில் நிற்க்கும் பிரமாண்டப் படங்களை தயாரித்தவர் இல்லை.

ஆனால் அவர்களை விட இவருக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு.

ஒளிவிளக்கு (ஜெமினி), அன்பே வா (ஏவிஎம்), எங்க வீட்டு பிள்ளை (விஜயா) என ஆளுக்கொரு படங்களையே இவர்களால் அப்போது சூப்பர் ஸ்டாராக விளங்கிய எம்ஜியாரைக் கொண்டு தயாரிக்க முடிந்தது. ஆனால் தேவர், யாராலும் கணிக்கவோ அடக்கவோ முடியாத சூப்பர் ஈகோவுக்கு சொந்தக்காரரான எம்ஜியாரை வைத்து 17 படங்கள் தயாரித்தார்.

கோவையில் 1940 ஆம் ஆண்டு வாக்கில் ஜூபிடர் ஸ்டியோ இயங்கி வந்தது. பல படங்களின்
படப்பிடிப்புகள் அங்கே நடந்தன. எம்ஜியார், கருணாநிதி ஆகியோர் அங்கேயே தங்கி பணிபுரிந்து வந்தார்கள். அதே கால கட்டத்தில் அங்கே பாடி பில்டராகவும், மில் தொழிலாளியாகவும், முருக பக்தராகவும் விளங்கிய தேவர், சின்ஹா என்னும் இயக்குநரின் பார்வையில் பட்டு துணை நடிகரானார்.பின் எம்ஜியாரின் நட்புக் கிடைத்து 20 படங்கள் வரை பல கேரக்டர்களில் நடித்தார். பின் தயாரிப்பாளராக மாறினார். முதல் படத்தை சிலருடன் சேர்ந்து தயாரித்தார். தோல்வி. பின் தேவர் பிலிம்ஸை துவக்கி எம்ஜியாரை நாயகனாக்கி தன் இன்னிங்ஸை ஆரம்பித்தார். அடுத்து சில படங்களை ரஞ்சன், உதய குமார்,ஜெமினி கணேசன்,ஆனந்தன் போன்றாரை வைத்து தயாரித்தார்.

சில வருட இடைவெளிக்குப் பின் எம்ஜியாரும், தேவரும் இணைந்து தொடர்ந்து படங்களைத் தந்தார்கள். எம்ஜியார் கிடைக்காத காலங்களில் அவர் ஆன்மீகப் படங்களையும்,மிருகங்களை வைத்து வணிக ரீதியான படங்களையும் எடுத்து வெற்றி கண்டார். அவற்றை தண்டாயுதபாணி பிலிம்ஸ் என்னும் பேனரில் தயாரித்தார். தமிழ் மட்டுமே தெரிந்த அவர் ராஜேஷ்கண்ணாவை வைத்து ஹாத்தி மேரா சாத்தி என்னும் பெரும் வெற்றிப்படத்தை இந்தியிலும் எடுத்தார்.

எந்த வித பின்புலமும் இல்லாமல், படிப்பும் இல்லாமல், ஆங்கில அறிவும் இல்லாமல் உழைப்பாலேயே ஒருவர் பெரிய அளவுக்கு வரமுடியும் என்று தமிழ்நாட்டுக்கு நிரூபித்தவர்களில் தேவரும் ஒருவர்.

படம் பூஜை போட்டு அறுபதே நாட்களில் படத்தை திரைக்கு கொண்டு வருவார். அதற்க்கு முன்னரே கதை வசனம், நடிகர்கள் கால்ஷீட் என எல்லாமும் பக்காவாக ரெடி செய்து கொள்வார். திரைப்படம் பார்க்க வரும் மக்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை தன் அனுபவத்தாலேயே உணர்ந்து,அதற்க்கேற்ற வகையில் கதை,வசனத்தை அமைப்பார்.

அவர் படங்களில் கலை அழகு மிளிராது, இலக்கண தர வசங்கள் இருக்காது. ஆனால் கட்டிப்போடும் தொய்வில்லாத திரைக்கதை இருக்கும்.அதற்க்கு காரணம் அவரது பிரத்யேக கதை இலாகா.

இந்தப் பகுதியில் அவர் எம்ஜியார் இல்லாமல் தயாரித்த சில படங்களை பார்க்கலாம்.

தெய்வம்

இந்தப்படம் முருகனின் தலங்களை அடிப்படையாக கொண்ட பாடல்களைக் கொண்ட படம். முத்துராமன், கே ஆர் விஜயா நடித்தது. இப்படத்தின் இசை குன்னக்குடி வைத்தியநாதன். பாடல்கள் கண்ணதாசன்.இன்றுவரை கிராமப்புற டூரிங் தியேட்டர்களில் காட்சி துவக்கப்போவதற்க்கான அறிவிப்பாக வரும் பாடலான மருதமலை மாமணியே (மதுரை சோமு) பாடல் இடம்பெற்ற திரைப்பபடம் இதுவே. அதுதவிர குன்றத்திலே
குமரனுக்கு கொண்டாட்டம் (ரமணியம்மாள்), திருசெந்தூரின் கடலோரத்தில் (சீர்காழி கோவிந்தராஜன்), வருவாண்டி தருவாண்டி (சூலமங்கலம் ராஜலக்‌ஷ்மி) திருசெந்தூரில் போர்புரிந்து (ராதா ஜெயலக்‌ஷ்மி), நாடறியும் (பித்துக்குளி முருகதாஸ்)என கர்நாடக சங்கீதம் அறிந்தவர்களே அனைத்துப் பாடல்களையும் பாடினார்கள். படம் பார்த்த மக்கள் அனைவரும் சிலிர்த்துப் போனார்கள்.

துணைவன்

இதுவும் முருக பக்திப் படமே. ஏவி எம் ராஜன், சௌகார் ஜானகி நடித்தது. தங்கள் குழந்தை பிணி தீர முருகன் தலங்களுக்குச் சென்று வேண்டுவதை அடிப்படையாகக் கொண்ட கதை. இப்படத்தின் சிறப்பு கிருபானந்த வாரியார் இதில் நடித்தது. அவரின் கதா காலேட்சபம் கேட்டு ஒருவன் திருந்துவது போல காட்சி அமைப்பு. இச்சிறப்பால் படம் நன்கு ஓடியது.

ஆட்டுக்கார அலமேலு

1972 ஆம் ஆண்டில் வெளியான இந்தப் படம் தமிழ்சினிமாவை ஒரு கலக்கு கலக்கியது. ராமு என்னும் ஆடு ஓவர் நைட்டில் சூப்பர் ஸ்டாரானது. தியேட்டர் தியேட்டராக அந்த ஆட்டை கூட்டிச் சென்று படம் பார்க்க வந்தவர்களுக்கு காட்டினார்கள். நமது விஜயகாந்த் கூட தன் நண்பர் வினியோகஸ்தர் மன்சூக் என்பவருக்காக் அப்பணியை செய்திருக்கிறார். சிவகுமார்,ஸ்ரீபிரியா நடித்த படம். ஸ்ரீபிரியாவையும் நம்பர் ஒன் அந்தஸ்த்துக்கு உயர்த்தியது. பின் ஐந்து வருடங்கள் அவர் உச்சத்தில் இருந்தார். பொதுமக்கள் ஆட்டின் சாகஸங்களான டேப் ரிக்கார்டர் ஆன் செய்வது, கடிதம் கொடுப்பது போன்றவற்றில்
மெய்மறந்தனர்.


வெள்ளிக்கிழமை விரதம்


அதுவரை இணை நாயகனாக நடித்துக் கொண்டிருந்த சிவகுமார் நாயகனாக ப்ரமோஷன் ஆன படம். ஜெயசித்ரா கதாநாயகி. ஆனால் பாராட்டுக்களை அள்ளிக் கொண்டது முக்கிய வேடத்தில் நடித்த பாம்பு.ஏறக்குறைய இந்தி நாகினின் தமிழாக்கமான இந்தப் படமும் நன்கு ஓடியது. படம் பார்த்த எம்ஜியார் தன் ஜோடிகளில் ஒருவராக நவரத்தினம் என்னும் படத்தில் ஜெயசித்ராவை புக் செய்யுமளவுக்கு நன்கு நடித்திருந்தார்.

ஹாத்தி மேரா சாத்தி

ராஜேஷ்கண்ணா நாயகன், தனுஜா நாயகி.லட்சுமி காந்த் பியாரிலால் இசை, தேவரின் தம்பி
எம் ஏ திருமுகம் இயக்கம். சென்னையில் விஜயா வாகினியில் படப்பிடிப்பு. ஏற்கனவே மேஜர் சுந்தர் ராஜனை வைத்து தேவர் எடுத்திருந்த தெய்வச்செயல் என்னும் படத்தையே சீர் படுத்தி கதை செய்திருந்தார்கள். படம் இந்தியில் ஓடு ஓடு என ஓடியது. பட வெற்றியைக் கண்டு அதே கேரக்டரில் எம்ஜியாரை வைத்து நல்ல நேரம் என ரீமேக்? செய்தார்கள். இப்பட்த்தின் பாடல்களும் பெரும்புகழ் பெற்றவை.

அடுத்த பகுதியில் தொடருகிறேன்

28 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தல..,


எம்,ஜி.ஆர் அவர்களை வைத்து தாயைக் காத்த தனயன் போன்ற நிறைய கிராமப் புறக் கதைகளை எடுத்திருக்கிறாரே..

அந்தப் படங்களைப் பற்றி தனி இடுகைகள் போடுங்கள்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அப்பா..

நட்சத்திரத்துக்கு மீண்டும் முதலாக வந்து பின்னூட்டம் போட்டாச்சு

கடந்த சில இடுகைகளுக்கு முடிய வில்லை

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//படம் பார்த்த எம்ஜியார் தன் ஜோடிகளில் ஒருவராக நவரத்தினம்//

நவரத்தினங்களில் ஒருவராக நடித்திருந்தார்.

ஜோடி லதா மட்டும்தான். தயவுசெய்து நம்புங்கள்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//தெய்வம்//

தேவரின் தெய்வம் தல

முரளிகண்ணன் said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

தேவர் எம்ஜியார் காம்பினேஷன் தனிப்பதிவாகப் போடுகிறேன்.

எங்கோ படித்த ஞாபகத்தில் நவரத்தினம் என்று எழுதினேன்.

சரிபார்த்து திருத்திவிடுகிறேன்

மீண்டும் ஒருமுறை நன்றி

முரளிகண்ணன் said...

தேவரின் தெய்வம் என்றே மாற்றிவிடுகிறேன் சுரேஷ்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இன்னும் நிறைய பின்னூட்டங்கள் போடலாம்னு தோணுது தல..

நீங்களே தொடருவீர்கள் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்

ஆர். முத்துக்குமார் said...

கிழக்கு பதிப்பகம் சின்னப்பா தேவரின் வாழ்க்கையைப் புத்தகமாக வெளியிட்டுள்ளது. நூலாசிரியர் பா. தீனதயாளன். இவர் ஏற்கெனவே சிவாஜி, ஜெமினி கணேசன் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளை எழுதியுள்ளார்

கார்க்கிபவா said...

தல கோச்சுக்காதீங்க.. இந்த பதிவுகள் எப்ப வேண்டுமென்றாலும் படிச்சுக்கலாம்.. நட்சத்திர வாரத்தில் குட் ஃபுட் போல, வெரைட்டியான பதிவுகள் வருமா? புனைவு வந்தாச்சு, சினிமா, நகைச்சுவை ஆச்சு.. எனி அரசியல் அல்லது சமூகம்???????

தமிழக மக்களின் உளவியல் குறித்து உஙக்ள் பார்வை ஆழமானது. அது போல..

நையாண்டி நைனா said...

ஹலோ எச்சூஸ் மீ....

அவரை 'சாண்டோ' சின்னப்ப தேவர் என்றும் சொல்லுவாங்கல்லோ???

கே.என்.சிவராமன் said...

முரளி,

அடுத்த பதிவிலும் தொடருவதாக நீங்கள் சொல்லியிருப்பதால், அறிந்த சில விவரங்களை கூறாமல் விட்டுவிடுகிறேன்.

மேலதிக தகவலுக்காக -

'வெள்ளிக்கிழமை விரதம்' தேவர் தயாரித்த முதல் வண்ணப்படம் மட்டுமல்ல, தேவரின் மாப்பிள்ளையான ஆர். தியாகராஜன் இயக்குநராக புரோமோஷன் அடைந்த முதல் படமும் கூட.

'ஆட்டுக்கார அலமேலு' படம் குறித்து ஒரு தகவலை சொல்வார்கள். எம்.ஜி.ஆரும் - கருணாநிதியும் பிரிந்த பின், மு.க. முத்துவை வைத்து படம் எடுக்குமாறு தேவரை கருணாநிதி நிர்பந்தித்ததாகவும், தேவர் பிடிவாதமாக மறுத்ததாகவும், அதன் காரணமாகவே ஆட்டையும், அதுவரையில் துணை கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த ஸ்ரீப்ரியாவை நாயகியாக்கியதாகவும் சொல்வார்கள்.

'தெய்வம்' படத்துக்காக குன்னக்குடி, பல கர்நாடக சங்கீத வித்வான்களை பாட வைப்பதாக சொன்னபோது, தேவர் சொன்ன பதில் என்ன தெரியுமா? 'யாரை வேணா பாட வைங்க... ஆனா, நம்ம டி.எம்.எஸ்ஸுக்கு ஒரு பாட்டை கொடுத்துடுங்க...' என்றுதான்.

ஆர். முத்துக்குமார் பின்னூட்டத்தில் கூறியிருக்கும் கிழக்கு பதிப்பகத்தின் நூலை முடிந்தால் வாங்கிப் படியுங்கள் முரளி. இரண்டு நாட்களுக்கு முன்புதான் அந்த நூலை நான் வாசித்தேன்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

முரளிகண்ணன் said...

முத்துக்குமார் தங்கள் தகவலுக்கு நன்றி.

கார்க்கி,

நட்சத்திர வாரத்தில், அவ்வளவாக தற்போதைய தலைமுறையிடம் சென்று
அடையாத முந்தைய தலைமுறைப்
பிரபலங்களைப் பற்றி எழுதலாம் என்று நினைத்தே கே சுப்ரமணியம்,கர்ணன்,தேவர் எனத் தொடங்கினேன்.

இவற்றை அடுத்த வாரத்தில் இனி தொடர்ந்து கொள்கிறேன்.

இந்தவாரத்தில் வித்தியாசம் காட்ட
முயற்சிக்கிறேன்

முரளிகண்ணன் said...

நையாண்டி நைனா,

ஆமாம். அபார உடல்கட்டும், மல்யுத்தம் போன்ற கலைகளையும் அறிந்தவர்களை சாண்டோ என்று
அழைப்பார்கள்.

ராஜா சாண்டோ என்பவர் பிரபல இயக்குநர்,நடிகர் 35களில்.
அவர் பெயரால் நம் தமிழக அரசு ஒரு விருது கூட வழங்கி வருகிறது.

இவரும் கட்டுமஸ்தான தேகம் கொண்டவரானதால் இவரையும் சாண்டோ என்று அழைப்பார்கள்

முரளிகண்ணன் said...

பைத்தியக்காரன்,

தங்கள் வருகைக்கும் மேலதிக தகவல்களுக்கும் நன்றி.

விரைவில் அப்புத்தகத்தை படிக்கிறேன்.

ஸ்ரீ.... said...

தேவரைப் பற்றி இன்றைய மக்களும் அறியும் வண்ணம் இருந்த்து.

ஸ்ரீ....

சிவக்குமரன் said...

///பாடலான மருதமலை மாமணியே (மதுரை சோமு) பாடல் இடம்பெற்ற திரைப்பபடம் இதுவே. அதுதவிர குன்றத்திலே
குமரனுக்கு கொண்டாட்டம் (ரமணியம்மாள்), திருசெந்தூரின் கடலோரத்தில் (சீர்காழி கோவிந்தராஜன்), வருவாண்டி தருவாண்டி (சூலமங்கலம் ராஜலக்‌ஷ்மி) திருசெந்தூரில் போர்புரிந்து (ராதா ஜெயலக்‌ஷ்மி), நாடறியும் (பித்துக்குளி முருகதாஸ்)என கர்நாடக சங்கீதம் அறிந்தவர்களே அனைத்துப் பாடல்களையும் பாடினார்கள்///

இந்த பாடல்களெல்லாம் இரண்டு இரண்டு பேரா, சேர்ந்து பாடுனதுன்னு கேள்விப் பட்டிருக்கேன். வருவாண்டி தருவாண்டி(சூலமங்கலம் சகோதரிகள்). திருசெந்தூரின் கடலோரத்தில்(சீர்காழி கோவிந்தராஜன், டி எம் சௌந்தரராஜன்), மத்த பாடல்கள் பத்தி எனக்கு தெரியல....

அபுல் கலாம் ஆசாத் said...

//ஏறக்குறைய இந்தி நாகினின் தமிழாக்கமான இந்தப் படமும்//

அன்புடையீர்,

இந்தியில் வெளியாகியிருக்கும் இரண்டு நாகின்களின் கதையமைப்பும் வெள்ளிக்கிழமை விரதம் கதையமைப்புடன் தொடர்புடையவை அல்ல.

அன்புடன்
ஆசாத்

nagoreismail said...

வில்லன் நடிகர் அசோகன் சின்னப்பா அவர்களின் செல்லப் பிள்ளை என்றே சொல்லலாம். கிட்டதட்ட எல்லா படத்திலும் அசோகன் இருப்பார்.

அசோகனும் எவ்வளவோ பண உதவியும் செய்து இருக்கிறார், "எல்லாம் மனிதாபிமானத்தோடு தான் செய்கிறேன்.." என்று சொல்வாராம். மேற்படி செய்தியை அசோகன் அவர்களே எனது உறவினர் ஒருவரிடம் தாய்லாந்த் நாட்டில் உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பில் தெரிவித்தது.

இந்தி நடிகர் ராஜேஷ் கண்ணாவிற்கு 24லட்சம் அவசரமாக தேவைப்பட்ட போது அவர் வீட்டிற்கே சென்று கதவை தட்டி வேண்டிய உதவிகளை செய்தாராம்.

நர்சிம் said...

கலக்கல். கார்க்கி சொல்ற மேட்டர் புதுசா இருக்கே.. அந்த உளவியல் பதிவ அடிங்க தலைவரே..

சகாதேவன் said...

நான் மதுரை டி.வி.எஸ் ஒர்க் ஷாப்பில் கார் பிரிவில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது தேவர் தன் காரில் வந்தார். டிரைவர் சொன்ன சில வேலைகளை பார்த்து முடிந்ததும் கெஸ்ட் ரூமில் இருந்த அவரிடம் உங்கள் கார் ரெடி என்றேன். நன்றி முருகா என்று சொல்லி உன் பேர் என்ன என்று கேட்டார், முருக பக்தர் தேவர். நான், வடிவேல் முருகன் என்றதும் மீண்டும் முருகா முருகா என்று சொல்லி என்னை அணைத்துக் கொண்டு போய் வருகிறேன் என்றார். மறக்க முடியாத சந்திப்பு.
சகாதேவன்

Cable சங்கர் said...

மீண்டும் ஒர் அருமையான பதிவு..

ராஜ நடராஜன் said...

//இந்தி நடிகர் ராஜேஷ் கண்ணாவிற்கு 24லட்சம் அவசரமாக தேவைப்பட்ட போது அவர் வீட்டிற்கே சென்று கதவை தட்டி வேண்டிய உதவிகளை செய்தாராம்.//

சூட்கேஷ் கலாச்சாரமெல்லாம் 90க்கு மேல் வந்தது.எம்.எம்.ஏ இடுப்பில கட்டிகிட்டுப் போய் அட்வான்ஸ் கொடுத்ததாகக் கேள்வி.

கேள்விப் பட்ட இன்னொரு கிசு கிசு. திட்டிக் கொண்டே படத் தயாரிப்பு வேலைகளை வாங்கிக் கொண்டு பத்திரிகையாளர்கள்,மற்ற யாரும் வந்தால் முருகா!முருகா! என்பாராம்.

கார்க்கிபவா said...

//, அவ்வளவாக தற்போதைய தலைமுறையிடம் சென்று
அடையாத முந்தைய தலைமுறைப்
பிரபலங்களைப் பற்றி எழுதலாம்//

இதை நான் யோசிக்கல தல.. நல்ல முயற்சி.. இதுக்குத்தான் அவசரப்படக்கூடாது கார்க்கி

:)))))))))

Jayaprakash Sampath said...

aattukara alamelu release aanathu 1972 illai, 1976 :)

முரளிகண்ணன் said...

ஸ்ரீ, இரா சிவக்குமரன் தங்கள் வருகைக்கு நன்றி.

அபுல் கலாம் ஆசாத், தங்கள் வருகைக்கும், தகவலுக்கும் நன்றி.

நாகூர் இஸ்மாயில் தங்கள் வருகைக்கும், தகவலுக்கும் நன்றி

முரளிகண்ணன் said...

நர்சிம், தங்கள் வருகைக்கு நன்றி.

சகாதேவன், தங்கள் வருகைக்கும்
தகவலுக்கும் நன்றி.

வாங்க சென்ஷி, கேபிள் சங்கர்.

ராஜ நடராஜன் வருகைக்கு நன்றி.

கார்க்கி கூல்.

பிரகாஷ் சார், தங்கள் வருகைக்கு நன்றி.
திருத்தி விடுகிறேன்.

RV said...

முரளி, நல்ல பதிவு! பழைய பட பைத்தியமான எனக்கு உங்கள் தளம் அற்புதமாக இருக்கிறது.

ஆ. அலமேலு 1977 தீபாவளி ரிலீஸ். முதல் நாளோ இரண்டாம் நாளோ காஞ்சிபுரத்தில் பார்த்தேன். 1972-இல் சிவகுமார் கதாநாயகனாக நடிக்க ஆரம்பிக்கவில்லை என்று நினைக்கிறேன். வெ. விரதம் 1972-க்கு பிறகுதான் வந்தது.

வெ. விரதம் ஹிந்தியில் வந்திருக்கிறது. தேவரே எடுத்தத்தா என்று தெரியவில்லை. நவீன் நிஸ்சல் ஹீரோ.

முரளிகண்ணன் said...

ஆர்வி

தங்களின் வருகைக்கும் தகவல்களுக்கும் மிக்க நன்றி.

பிழையைத் திருத்தி விடுகிறேன்.

(தற்போது எடிட் செய்ய முடியவில்லை)

தொடர்ந்து ஆதரவு தாருங்கள்