May 10, 2009

எய்ம்ஸ், ஐஐடி, ஐஐஐடி டி & எம், ஏஐஈஈஈ, ஐஎஸ் எம் ஆகியவை இனி தமிழக சிறுநகர,கிராமப்புற மாணவர்களுக்கு எட்டாக்கனியா?

சமீபத்தில் எய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு) , ஏ ஐ ஈஈஈ (அகில இந்திய பொறியியல் நுழைவுத்தேர்வு) நடந்த தேர்வு மையங்களுக்கு சென்றிருந்தேன். ஒன்று மதுரையிலும் மற்றொன்று திருச்சியிலும்.

இரண்டு மையங்களிலும் கிராமப்புற மாணவர்களின் சதவிகிதம், தன் வாழ்நாளில் பொய்யே பேசாதவர்களின் சதவிகிதத்திற்க்கு நிகராக இருந்தது. சிறுநகர மாணவர்களின் சதவிகிதம் உண்மை மட்டும் பேசும் அரசியல்வாதிகளின் சதவிகிதத்திற்க்கு நிகராக இருந்தது.

ஏன் அவர்கள் இந்த தேர்வுகளில் பங்கெடுத்துக் கொள்வதில்லை?

1. இம்மாதிரி நுழைவுத் தேர்வுகள் இருக்கின்றன என்பது பற்றிய விழிப்புணர்வு பெற்றோருக்கு இல்லை.


2. இதைப் பற்றி சொல்லித்தர வேண்டிய ஆசிரியர்களுக்கு
போதுமான விழிப்புணர்வு இல்லை.

3. கிராமப்புற மாணவர்கள் பார்க்கும் தொலைக்காட்சி, படிக்கும் ஜனரஞ்சகப் பத்திரிக்கைகள் ஆகியவை இதைப் பற்றி பெரிய அளவில் அவர்களிடம் கொண்டு சேர்ப்பதில்லை. ஆனந்த விகடன், குமுதம் போன்றவை அரிதாக சில பக்கங்களை ஒதுக்குகின்றன (கேரியர் கைடன்ஸ் என்ற பெயரில்). ஆனாலும் அவை உற்சாகப் படுத்தும்படி எழுதுவதில்லை. தொடர்ச்சியாகவும் அவர்கள் இப்பணியைச் செய்வதில்லை. எனவே இதழ்களை தவறவிடுபவர்களுக்கு செய்திகள் சேர்வதில்லை.

4. நாளிதழ்கள் தேர்வு பற்றிய செய்திகளை வெளியிடுகின்றன. ஆனால் அதன் முக்கியத்துவம், வாய்ப்பு பற்றி அவை வாய் திறப்பதில்லை.

5. இம்மாதிரியான தேர்வுகள் அனைத்தும் கேந்திரிய வித்யாலயா மாதிரியான பள்ளிகளில் மட்டும் நடத்தப் படுகின்றன. எனவே அங்குள்ள ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் அதுபற்றிய விழிப்புணர்வு எளிதாக ஏற்படுகிறது. தமிழக அரசுப் பள்ளிகளையும் மையங்களாகக் கொண்டு இந்தத் தேர்வுகளை நடத்தினால் அங்குள்ளவர்களுக்கும் இது எதற்க்கு நடக்கிறது, படித்தால் என்னவாகலாம் போன்ற விழிப்புணர்வு ஏற்படும். இது மற்றவர்களுக்கும் பரவும்.

6. தமிழக அரசின் நுழைவுத் தேர்வு இருந்தபோது அதற்க்காக பலரும் படித்தார்கள். அண்ணனுக்கு பொண்ணு பார்த்த மாதிரியும் ஆச்சு, ஆடு மேச்ச மாதிரியும் ஆச்சு என்ற கணக்கில் அப்போது பலர் இந்த தேர்வுகளுக்கும் படித்தார்கள். ஆனால் இங்கே நுழைவுத் தேர்வு தளர்த்தப் பட்டதும் இதற்க்கு மட்டும் படிக்கும் ஆர்வம் மாணவர்களிடம் குறைந்து விட்டது.

7. மேலும் தமிழக அரசின் நுழைவுத் தேர்வு காரணமாக பல கோச்சிங் செண்டர்கள் இங்கே இருந்தன. தொழில் போட்டியின் காரணமாக அவர்கள் குறைந்த கட்டணம் வசூலித்தார்கள். ஆனால் இப்போது அவை அருகி விட்டன. மதுரை,திருச்சி ஆகியவற்றில் ஏ ஐ ஈ ஈ ஈ நுழைவுத் தேர்வு கோச்சிங்கிக்கு அதிக பணம் வசூலிக்கிறார்கள். இவற்றை கிராமப் புற மக்களால் செலுத்த முடிவதில்லை.

8. மேலும் அப்போது சிறு நகரங்களிலும் கோச்சிங் செண்டர்கள் இருந்தன. சுற்றியுள்ள கிராமப்புற மாணவர்கள் எளிதில் அங்கு சென்று படித்தார்கள். அவைகள் இப்போது மூடப்பட்டுள்ளதால் எல்லோரும் மாவட்டத் தலைநகருக்கே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்க்கு அவர்களின் பொருளாதாரம் சம்மதிப்பதில்லை.

ஏன் கோச்சிங் செண்டர்கள் பற்றி அதிக கவலை எனில்,

சமீபத்தில் ஐஐடி சென்னையின் டீன் அவர்கள் அளித்த பேட்டியில் “ இப்போது தேர்வாகிவரும் மாணவர்களிடம் ரா இண்டலிஜெண்ஸ் இல்லை, பயிற்றுவிக்கப்பட்ட திறமையே காணப்படுகிறது? என சொல்லியிருந்தார். எனவே நம் மாணவர்களும் முயற்ச்சி செய்தால் எளிதில் வெற்றி பெறலாம்.

அறியாமையின் காரணமாக மிகக் குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி கற்க்கும் வாய்ப்பு கிராமப்புற மாணவர்களுக்கு மறுக்கப்படுகிறது. இருக்கும் சூழ்நிலையில் நாம் என்ன செய்ய முடியும் என்று பார்த்தால்....


1) நமது எம் பிக்களிடம் கேந்திரிய வித்யாலயா போன்ற பள்ளிகளை பரவலாக கொண்டுவரச் சொல்லி வற்புறுத்தலாம். மக்கள் தொகைக்கு ஏற்பவும், மத்திய அரசு பணியாளர்களின் என்னிக்கைக்கு ஏற்பவும் தான் அப்பள்ளிகள் அமைக்கப்படும். ஆனால் அந்த விகிதத்திலாவது பள்ளிகள் இங்கு அமைக்கப் பட்டுள்ளனவா என்று சரிபார்க்கச் சொல்லலாம்.


2) ஏனெனில் இதுவரை அர்ஜூன் சிங், முரளி மனோகர் ஜோசி என வட மாநிலத்தவர்களே மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர்களாக இருந்து வருகிறார்கள். அதனால் அந்த துறையின் செயல்பாடுகள், அதன் பலம் ஆகியவை நம் எம் பிக் களுக்கு தெரிவதில்லை. அந்த துறையில் உள்ள ஓட்டைகள் மூலம் வட மாநில மக்கள் நமக்குச் சேரவேண்டியவற்றை அபகரிப்பது நடந்து வருகிறது.

3) பாராளுமன்ற நிலைக்குழுக்களுக்கு தேர்தல் நடைபெறும்போது நம் எம்பிக்கள் ரயில்வே,தொலைத் தொடர்பு போன்ற பசையுள்ள நிலை குழுக்களுக்கே முன்னுரிமை கொடுகிறார்கள். மக்களுக்கு நல்லது செய்யும் மனதுடையோர் மனித வள மேம்பாட்டு அமைச்சக நிலைக்குழுக்களுக்கு போட்டியிடலாம்.

4) எப்படியும் கூட்டணி ஆட்சி என்றே எல்லோரும் கணிக்கிறார்கள். எனவே தமிழக கட்சிகள் மந்திரி பதவி பெறும்போது மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தில் இணை அல்லது துணை மந்திரி பதவியைக் கேட்டு வாங்கினால் சர்வ சிக்‌ஷா அபியான் போன்ற திட்டங்களை இங்கு ஆக்க பூர்வமாக செயல்படுத்தலாம். புது திட்டங்களையும் நமக்கு கொண்டு வரலாம்.

5) சமீபத்தில் தென்மாவட்டங்களுக்கு சென்றிருந்தபோது எம் பிக்கள் சாதனைப் பட்டியலைப் பார்த்தேன். அவர்கள் சொல்லியிருப்பதெல்லாம் நிழற்குடை, பள்ளி கட்டடம், தெரு விளக்கு போன்ற உள்ளாட்சித் துறைப் பணிகளை. அவை மத்திய அரசின் எம் பி நிதியில் செய்யப் படும் கடமைகள். எப்படியும் செலவழித்துத்தான் ஆக வேண்டும். கமிசனும் கிடைக்கும். ஆனால் ஒரு எம் பி என்பவர் தொகுதிக்கு மத்திய அரசின் திட்டங்களைப் பெற்றுத் தருபவராகவே இருக்க வேண்டும். அம்மாதிரி எம்பிக்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

6) எனவே வெற்றி பெறும் எம்பிக்களை சந்தித்து, மத்திய அரசின் துணையுடன் இங்கு கல்வியை வளர்க்க ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்ளலாம்.

7) தற்போது புதிதாக மூன்று ஐஐடிக்கள், ஐஐஐடி டி&எம் ஆகியவை அமைக்கப் படவுள்ளன. இதிலும் ஓபிசிக்கான 27% இட ஒதுக்கீட்டுக் கொள்கை அமல் படுத்தப்பட உள்ளது. எனவே மத்திய அரசின் ஓபிசி சான்றிதழை வாங்கி விண்ணப்பிக்கவும். நான் சந்தித்த பலர், தமிழக அரசின் பிசி, எம்பிசி சான்றிதழ்கள் போதுமென நினைத்து மத்திய அரசின் சான்றிதழ் இல்லாமல் விண்ணப்பித்துள்ளார்கள்.

8) உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு பதின்ம வயதில் குழந்தைகள் இருந்தால் அவர்களிடம் இதைப் பற்றிப் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.

24 comments:

ஷண்முகப்ரியன் said...

பணம் சம்பாதிப்பது ஒன்றே குறிக்கோள் என்றாகிவிட்ட ஒட்டு மொத்த சமுதாயம்,பணம் சம்பாதிக்கும் வக்கும் அற்றுப் போய் இழிவு படும் என்பதற்கு இதெல்லாம் எடுத்துக் காட்டு.
வெறுமனே அரசியல்வாதிகளை மட்டும் குறை கூறிக் கொண்டிருக்கும் நாம்தான், மக்கள் என்ற புனைப் பெயரில் அனைத்து அக்கிரமங்களுக்கும் துணை போகிறோம் எனபதுதான் மறுக்க முடியாத உண்மை,முரளி.

முரளிகண்ணன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஷண்முகப்பிரியன்.

நாம் ஏதாவது செய்யவேண்டுமே என்ற ஆதங்கத்திலே எழுதப்பட்டது இந்தப் பதிவு.

இதில் சில முயற்சிகளை நான் தனியாகவும் மேற்கொண்டுள்ளேன்.

Mahesh said...

"ஏதாவது செய்யணும் பாஸ்"-க்கு நல்ல மேட்டராச்சேன்னு சொல்ல வந்தேன். உங்க பின்னூட்டத்துலயே சொல்லிட்டீங்க.

ரொம்ப ஆதங்கமான விஷயம்.

10 வருஷம் முன்னால ஒரே ஒரு முறை என் நண்பர்களோடு சேர்ந்து நாங்க படிச்ச ஸ்கூலுக்குப் போய் இந்த மாதிரி ஒரு கேரியர் கைடன்ஸ் ரோட் ஷோ மாதிரி நடத்தினோம். ஆனா அப்ப எங்க யாருக்குமே அவ்வளவு மெசூரிட்டி இல்லாததால (வெறும் ஆர்வம் மட்டுமே இருந்தது) அதை கச்சிதமா நடத்த முடியலை. இப்ப யோசிச்சுப் பாத்தா இன்னும் சிறப்பா நடத்தியிருக்கலாம்னு தோணுது.

Mahesh said...

உங்கள் தனி முயற்சிகளுக்கு நானும் எந்த வகையிலாவது உதவியாக இருக்க முடியுமென்றால் தயங்காது என்னை அணுகவும். இயன்றதை செய்ய காத்திருக்கிறேன்.

கையேடு said...

மிக உண்மையான ஆதங்கம்.

தேசிய அளவிளான தேர்வுகளுக்கான விண்ணப்பப் படிவங்கள் கூட அடுத்தடுத்த ஆண்டுகளில் கடுமையாக அதிகரிக்கப் பட்டுள்ளன.

அவர்கள் அதற்குக் குறிப்பிடும் காரணங்களுள் ஒன்று "தேர்வெழுதுவோரின் எண்ணிக்கையைக் குறைக்க"

யாருடைய எண்ணிக்கையைக் குறைக்க முற்படுகின்றனர். :(

தராசு said...

அருமையான பதிவு முரளி.

அடியேன் எWத வகையிலாவது உதவ முடியுமென்றால் தயங்காமல் ஆணையிடுங்கள்.

முரளிகண்ணன் said...

மகேஸ் தங்கள் வருகைக்கு நன்றி. இதற்க்காக பள்ளி தொடங்கி ஒரு மாதம் கழித்து ஜூலையில், முதலில் சில ஆசிரியர்களுக்கு இதுபற்றி விளக்கி பின்னர் மாணவர்களிடமும் பேசலாம் என்றிருக்கிறேன். உதவிகளை தயக்கமில்லாமல் கேட்பேன் உங்களிடம்.


கையேடு, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

தராசு நிச்சயம் உங்களைப் போன்றோரின் உதவியுடந்தான் இது செயலாக்கம் பெறும்.

தேர்தல் முடிந்த ஆறு மாதத்தில், சம்பந்தப்பட்ட எம்.பி க்களை சந்தித்து பேசவும் முயற்சி எடுக்கப்படும்.

jothi said...

மிக மிக அருமையான், அவசியமான் தலைப்பு முரளி. இன்றைக்கு கிராமபுர மாணவர்கள் அண்ணா பல்கலைகழகத்தில் கிடைத்தாலும் படிக்கமுடியாது. வருஷம் 50000 மட்டுமே சம்பாரிக்கும் ஒரு ஏழை விவசாயின் மகன் எப்படி வருஷம் 40000 (அரசு கல்லூரினாலும் இதே feesதான்)கட்டி படிக்க முடியும்? Awareness மட்டுமே இதற்கு பதில் இல்லை. வணிகர்களாலும், புரோக்கர்களாலும், முக்கியமாக அரசாலும் வாட்டி வதைக்கப்பட்டாலும் எல்லொருக்கும் சோறு போட்டுக்கொண்டிருக்கும் ஒரு ஏழை விவசாயின் மகனிற்கு இது எட்டாக்கனியே,.. பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வந்தால் ஒழிய இதற்கு தீர்வு கிடையாது.

Thamiz Priyan said...

மிகத் தேவையான பதிவு! இணைய உலகம் அறிமுகமான பிறகே எனக்கெல்லாம் இது போன்ற படிப்புகள் பற்றி தெரிய வந்தது.. :(

புருனோ Bruno said...

முரளி

இது குறித்து உங்களிடம் விரிவாக பேசுகிறேன்

தற்சமயம் ஒரே ஒரு கருத்து மட்டும்

நீங்கள் பட்டியலிட்ட எட்டு காரணங்களை விட மேலும் இரு அதிமுக்கியத்துவம் வாய்ந்தகாரணங்கள் உள்ளனவிபரங்களுக்கு http://www.payanangal.in/2009/03/2.html
ஒரு முறை படியுங்கள்

ஏதாவது புரிகிறதா பார்க்கலாம்

புருனோ Bruno said...

// இருக்கும் சூழ்நிலையில் நாம் என்ன செய்ய முடியும் என்று பார்த்தால்....//

முதலில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் படி இவர்களை மதிப்பெண் பட்டியலை வெளியிட சொல்ல வேண்டும்

விபரங்களுக்கு
http://www.payanangal.in/2008/08/mini-skirt-statistics-and-untold-truth.html

குசும்பன் said...

//எப்படியும் கூட்டணி ஆட்சி என்றே எல்லோரும் கணிக்கிறார்கள். எனவே தமிழக கட்சிகள் மந்திரி பதவி பெறும்போது மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தில் இணை அல்லது துணை மந்திரி பதவியைக் கேட்டு வாங்கினால் //

அண்ணே நல்ல காமெடி போங்க:) நம்ம ஆளுங்க கேட்டு வாங்கும் துறையா அது:)


பள்ளிகூட ஆசிரியர்களுக்கு திரும்ப ஒரு தேர்வு வைக்கனும் அப்பதான் உருப்படமுடியும்!

அத்திரி said...

//எனவே தமிழக கட்சிகள் மந்திரி பதவி பெறும்போது மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தில் இணை அல்லது துணை மந்திரி பதவியைக் கேட்டு வாங்கினால்//

இந்த துறையில் கட்டிங் எவ்வளவு தேறும் தல............. வருமானம் அதிகமுள்ள துறைகள்தான் நம்ம அரசியல்வாதிங்களுக்கு தேவை.........

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல பதிவு முரளி

SUREஷ்(பழனியிலிருந்து) said...

எனக்கு இது போன்ற தேர்வுகள் இருப்பது கல்லூரியில் சேர்ந்து சிலகாலம் கழித்துத்தான் தெரியும்..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இன்றும் கூட கிராமப் பகுதி மாணவர்களுக்கு இப்படியெல்லாம் தேர்வுகள் இருக்கிறதா என்று தெரியமா என்று தெரியவில்லை.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

எனக்கு இந்தத் தேர்வுகள் இருக்கிறதா என்று தெரியவில்லை என்பதைவிட பள்ளியில் எங்கள் சக மாணவர்கள் இருவர் இந்த தேர்வு எழுதினார்கள் என்பதும் அது பள்ளியில் படித்த மருத்துவம் மற்றும் பொறியியலில் சேர்ந்த இருபதுக்கும் அதிகமான மாணவர்களுக்குத் தெரியாது என்பது இன்று வரை எங்களுக்கு கடுப்பாக இருக்கும் விஷ்யம்

முரளிகண்ணன் said...

ஜோதி, தமிழ்பிரியன் தங்கள் வருகைக்கு நன்றி.

புருனோ அவர்களே சிபிஎஸ்சி சிலபஸ் பற்றி பேச வேண்டாம் எனப் பார்த்தேன். ஏனென்றால் அந்த கிரிடீரியா எல்லாருக்கும் பொதுவாகி விடுகிறது. நம் நோக்கம் ஒன்றுதான். விவாத்து பின் தேவையானவற்றைச் செய்வோம்

குசும்பன்,அத்திரி வருமானம் வர வாய்ப்புள்ள துறைதான் அது. ஆனால் பெட்ரோலியம்,தகவல் தொடர்பு அளவுக்கு அல்ல.

டி வி ராதாகிருஷ்ணன் வருகைக்கு நன்றி.

சுரேஷ், உங்கள் ஆதரவும் தேவை.

Raju said...

Arumaiyaana pathivu thalaivaree..!
kalakkal..!

( sorry for the English Font)

கார்க்கிபவா said...

நீங்க இத பத்தி எழுதறேன்ன்னு எப்பவோ சொன்னீங்க.. லேட்டானாலும் சரியா சொல்ல வந்தத சொல்லியச்சுன்னு நினைக்கிரேன். பாரட்டுக்கள் சகா

முரளிகண்ணன் said...

டகளஸ், தமிழ் நெஞ்சம், கார்க்கி வருகைக்கு நன்றி

thamizhparavai said...

அருமையான பதிவு மற்றும் ஆதங்கம் முரளி சார்.இன்றுதான் படித்தேன்.
எனக்குள்ளும் இந்த ஆதங்கம் இருந்தது.இருக்கிறது. மணி கட்ட முன்வந்தமைக்கு வாழ்த்துக்கள். என்னால் என்ன செய்ய இயலுமெனத் தெரியவில்லை.(தமிழகத்தில் இல்லை).உத்தரவிடுங்கள் உதவ முயலுகிறேன்...

ராமகுமரன் said...

அருமையான அலசல் முரளி. இதே போல் ராஜீவ் காந்தி தொடங்கிய நவதோயா பள்ளிகள் தமிழ்நாட்டில் மட்டும் ஒன்று கூட இல்லை. இதனை எடுத்து சொல்லி நமக்கும் அந்தப் பள்ளிகளை பெற்று தரும் துப்பு நம் அலிபாபாவுக்கும் நாற்பது திருடர்களுக்கும் இல்லை

Venkatesh Kumaravel said...

Very well written. I appeared and cleared most of these competitive examinations 2 years back. If I would be of any assistance, please do contact me. I would be glad to help or post on the same issue with details about the umpteen examinations for various courses in my blog as well. I would mail you at the earliest. We can be the cause for a change. Great effort! Kudos!
(Sorry, my tamil fonts have been corrupted since morning, would rectify them in a while and mail you asap)