May 06, 2009

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும் தமிழ்சினிமாவும்

தமிழ்சினிமாவில் இதுவரை குழந்தைகளுக்கு என பிரத்யேகமாக எடுக்கப்பட்ட திரைப்படங்கள் இரண்டு சதவிகிதம் கூட இருக்காது. அவர்களை மகிழ்விக்கும் படங்களே குறைவு என்னும் போது அவர்களின் பிரச்சினைகளைப் பேசும் படங்கள் எத்தனை இருந்து விடக் கூடும்?. குழந்தைத் தொழிலாளர் பிரச்சினையை மட்டும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள் என்றால் கருவேலம் பூக்கள், குட்டி போன்ற படங்களைச் சொல்லலாம்.

திருமதி பழனிச்சாமி, காதல் கொண்டேன் போன்ற வணிக ரீதியிலான படங்களிலும் குழந்தைத் தொழிலாளர்கள் படும் சித்திரவதை, சமூகம் அவற்றை கண்டும் காணாமல் இருப்பது ஆகியவை காட்டப்பட்டன. பாதிக்கப் பட்டவர்கள் போராடினால் மட்டுமே விடிவு கிடைக்கும் என்ற ரீதியிலேயே இப்படங்கள் அமைந்திருந்தன.

குழந்தைகள் மீதான அடுத்த தாக்குதல் அவர்களைப் பிச்சைக்காரர்களாக மாற்றுவது. இந்த அவலத்தை சாடி காதலர் தினம், வில்லன், நான் கடவுள் ஆகிய படங்களில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம் இதே விஷயத்தை நகைச்சுவைக்காக உபயோகப் படுத்துவது. சமூக அக்கறையுள்ள கலைஞர் என்று அறியப்படும் கமல்ஹாசன் நடித்த படமான காதலா காதலாவிலும் இதை நகைச்சுவையாக பயன்படுத்தியிருந்தார்கள். சமூக அக்கறை எனக்குள்ளது என பிரகடனப் படுத்திக்கொள்ளூம் விவேக்கும் இந்த விஷயத்தை காமெடியாகவே பல படங்களில் அணுகுகிறார்.

குழந்தைத் தொழிலாளார் விஷயத்திலும் கூட டீக்கடைகளில் வேலை செய்வது, மெக்கானிக் செட்டுகளில் வேலை செய்வது ஆகியவை குற்றம் இல்லை என்ற தொனியிலேயே காட்சிகள் அமைந்து வந்திருக்கின்றன. இதில் நமக்கு கிடைத்திருக்கும் ஒரே ஆறுதல், குழந்தைகளின் மீதான பாலியல் வக்கிரங்களை நியாயப் படுத்தாமல் அது மிகப்பெறும் தவறு என்னும் நோக்கில் காட்சிகளை தமிழ்சினமா இயக்குநர்கள் அமைத்து வருவதுதான்.


அந்த நோக்கில் பார்த்தால் அரண்மனை காவலன், காதல் கொண்டேன் ஆகிய இருபடங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.

அரண்மனை காவலன்

இந்தப் படத்தில், ஊர் பெரிய மனிதர் ஒருவர் தன் பள்ளியில் படிக்கும் சிறு பெண் குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு ஆளாக்குகிறார். கொதித்தெழுந்த இன்னொரு குடும்பம் அவரை எல்லார் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்கச் சொல்கிறது. இதனால் அவர் மற்றவர்களை பழிவாங்க என படம் செல்கிறது. இதில் கவனிக்கப் பட வேண்டிய விஷயம், அது மிகப்பெரிய தவறு என காட்சிப்படுத்தியிருப்பதுதான்.

காதல் கொண்டேன்

மிக உக்கிரமாக இந்த பிரச்சினையை காட்டிய படம். பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல ஆண் குழந்தைகளுக்கும் இது பிரச்சினை தான் என முதன் முதலாக தமிழில் சொன்ன படம். மார்பிள் கல் தொழிற்சாலையில் வேலைப் பார்க்கும் சிறுவர்,சிறுமியரை முதலாளி பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்குகிறார். ஒரு கட்டத்தில் குழந்தைகள் பொங்கியெழுந்து முதலாளிகளை கொன்று தப்பிக்கிறார்கள்.

இதுதவிர குருதிப்புனல், துள்ளுவதோ இளமை ஆகிய படங்களிலும் இது குறித்து கோடிட்டு காட்டியுள்ளார்கள்.

ஆனால் இதைவைத்து குழந்தைகளுக்கு இது குறித்து நம்மால் ஏதும் புரிய வைக்க முடியுமா?

நிச்சயம் முடியாது. இதுதவிர

வேறென்னென்ன வகைகளில் அவர்கள் தாக்கப்படுவார்கள்?

அவர்களுக்கு அதற்க்குரிய பாதுகாப்பை நம்மால் வழங்க முடியுமா?

நாம் என்ன செய்து நமது குழந்தைகளை காப்பாற்ற வேண்டும்?

இதுபற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல் மே 10 ஆம் தேதி கிழக்கு பதிப்பக மொட்டை மாடியில் மாலை ஐந்து மணிக்கு நடைபெறுகிறது. மன நல மருத்துவர்கள் டாக்டர் ருத்ரன், டாக்டர் ஷாலினி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

இந்த நிகழ்வுக்கு விதையாய் அமைந்த தீபா அவர்களுக்கும், இதை மரமாக்கினால் நாலு பேர் பயனடைவார்களே என்று சிந்தித்த அமிர்தவர்ஷினி அம்மாவுக்கும், விதைக்க இடம் கொடுத்த கிழக்கு பதிப்பகத்துக்கும், விதையை நாற்றாக்கி, மண் கிளறி, உரமிட்டு,நீர் பாய்ச்சிய நர்சிம் அவர்களுக்கும், அவருக்கு துணை நிற்க்கும் லக்கிலுக்,எஸ்கே,அதிஷா முதலானோருக்கும், வளர உதவும் சூரிய வெளிச்சமாய் விளங்கும் டாக்டர்கள் ருத்ரன்,ஷாலினி ஆகியோருக்கும், வளர்வதற்க்கு அவசியமானது காற்று, ஆனால் அது கண்ணுக்குத் தெரியாது. அந்த காற்றைப் போல் இந்த நிகழ்வுக்கு உழைக்கும் ஏனையோருக்கும் மிகுந்த நன்றி.

மரமானால் மட்டும் போதுமா? அந்த கனிகள் மக்களை சென்றடைந்தால்தானே மரத்துக்கு மதிப்பு?

கனி வேண்டுவோர், இந்த முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பி பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


weshoulddosomething@googlemail.com

24 comments:

டக்ளஸ்....... said...

இதுதான் முரளிக்கண்ணன் பானி..!

டக்ளஸ்....... said...

விழா சிறக்க வாழ்த்துக்கள்..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

தனித்துவமான சந்திப்பிற்கான அழைப்பு!

சென்ஷி said...

சந்திப்பிற்கான "தனித்துவமான" அழைப்பு!

முரளிகண்ணன் said...

நன்றி டக்ளஸ்.

நன்றி ஜியோவ்ராம் சுந்தர். வந்து சிறப்பிக்க அழைக்கிறோம்

சென்ஷி :-)))

Suresh said...

நல்ல விஷியம் நல்ல பதிவு வாழ்த்துகள் மே 10 க்கு

வித்யா said...

உங்கள் ஸ்டைலில் அழைப்பு.

சரவணகுமரன் said...

இந்த விஷயத்தை உங்கள் பாணியில் சொல்லி இருக்கீங்க... நல்லா இருந்தது...

சரவணகுமரன் said...

சிவாஜி படத்தில் கூட ஒரு காட்சியில் "குழந்தைய ஏன்யா வேலைக்கு அனுப்புற?" என்று கேட்டு விட்டு, இன்னொரு காட்சியில் ஒரு சிறுவனிடம் டீயும் பஜ்ஜியும் வாங்கி சாப்பிடுவார் ரஜினி.

ஆதிமூலகிருஷ்ணன் said...

தனித்துவம். சந்திப்பு. அழைப்பு.

ஆதிமூலகிருஷ்ணன் said...

இது குறித்த சந்திப்பு இருக்கும் வேளையில் அழைப்பையே சிறப்பான ஒரு பதிவாகவும் தந்திருக்கிறீர்கள்..

கார்க்கி said...

அது முரளி..

அறிவிலி said...

பயனுள்ள சந்திப்பு,சிறப்பாக நடக்க வாழ்த்துகள்.

அருமையான அழைப்பு... உங்கள் வழியே தனி வழி.

starjan said...

குழந்தைகள் ஒரு தெய்வத்துக்கு சமம்
இப்படிப்பட்ட காட்சிகளை வைத்து பணம் சம்பாதிக்கிறாங்க ,
என்னனு சொல்ல .....

தீப்பெட்டி said...

நிகழ்ச்சி இனிது நிறைவேற எனது வாழ்த்துகள்.

அதற்கு உறுதுணையாய் இருந்து வரும் அனைவருக்கும் எனது வணக்கங்கள்

சந்தனமுல்லை said...

நல்லாருக்கு வித்தியாசமா! :-)

நர்சிம் said...

மிக அருமை முரளி

jothi said...

கவனிக்கப்பட வேண்டிய விஷயம். எழுத்தின் வீச்சு சிறப்பாக உள்ளது.

SK said...

பிச்சுடீங்க பாஸ். அருமையான அழைப்பு ..

SK said...

super nachuu :)

Cable Sankar said...

அருமையான முரளி அழைப்பு..

கோபிநாத் said...

இது தான் அண்ணாச்சி ஸ்பெசல்...

நிகழ்ச்சி சிறக்க வாழ்த்துக்கள்.

"அகநாழிகை" said...

நல்ல பதிவு. குழந்தைகளின் நடத்தையை இயல்பாகவே காட்டுவது கிடையாது. அதுவே திரைப்படம் பார்க்கும் குழந்தைகளின் மீதான வன்கொடுமைதானே ? சிந்தனையூட்டும் பதிவிற்கும், அழைப்பிற்கும் நன்றி.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

மே 10 மிகச் சிறந்த தினமாய் அமைய நல்வாழ்த்துகள்.