December 21, 2009

பாரபட்சம் காட்டும் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்

25 வருடங்களுக்கு முன்னால் பெரிய நடிகர்களின் படமோ, பெரிய தயாரிப்பாளர்களின் படங்களோ வரும் போது நாளிதழ்களில் முழுப்பக்க விளம்பரம் கொடுக்கும் வழக்கம் இருந்தது. இது பூஜையில் இருந்தே ஆரம்பிக்கும். டீக்கடைகள், சலூன் ஆகியவற்றில், தங்கள் அபிமான நடிகர் நடித்த படமெனில் இந்தப் பக்கங்களை கிழித்து ஒட்டி வைத்திருப்பார்கள்.

கலைப்புலி தாணு, டி ராஜேந்தர் ஆகியோர் இப்படி விளம்பரம் பண்ணுவதில் சமர்த்தர்கள். அதுவும் டி ஆர் தினமும் ஒரு அடுக்கு மொழி வசனத்துடன் விளம்பரப்படுத்துவார்.

90களில் பல படங்கள் தோல்வியடைந்து தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் நஷ்டம் அடைந்த போது திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒரு கூட்டம் போட்டனர். அதன் நோக்கம், தயாரிப்புச் செலவைக் குறைப்பது. அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் ஒன்று நாளிதழ்களில் முழுப்பக்க விளம்பரம் கொடுக்கக்கூடாது என்பது.

அதன்படி கால் பக்க அளவுக்கே நாளிதழ்களில் விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. 60 கோடியில் தயாரான தசாவதாரமாக இருந்தாலும் சரி. மூன்று கோடியில் உருவான சுப்பிரமணியபுரமாக இருந்தாலும் ஒரே அளவில் தான் விளம்பரம் செய்யவேண்டும் என்பது விதி. மீறுபவர்களுக்கு ரெட் கார்டு போடப்படும்.

ஆனால் இப்போது நடப்பது என்ன? நாளிதழ்கள் படிப்பவர்களை விட தொலைக்காட்சி பார்ப்போர் அதிகம் உள்ள தமிழ்நாட்டில் கால் மணி நேரத்துக்கு ஒருமுறை பட விளம்பரம் வெளியே வருகிறது. சன் தொலைக்காட்சியினர் தாங்கள் தயாரிக்கும்/வினியோகிக்கும் படங்களுக்கு இவ்வாறு அதிக விளம்பரம் செய்கிறார்கள்.

இந்த விளம்பரத் தொகையை கணக்குப் பார்த்தால்?

பிரைம் டைம் மற்றும் சாதாரண நேரங்களில் சன் டிவி அந்தக் குறிப்பிட்ட வினாடிகளுக்கு வசூலிக்கும் தொகை எவ்வளவு? தினமும் எவ்வளவு நேரம் ஒளிபரப்பாகிறது? எத்தனை நாட்களுக்கு ஒளிபரப்பாகிறது? என்று பார்த்தால் மொத்த விளம்பரத் தொகை கோடிகளை தாண்டும் என்பது சர்வ நிச்சயம்.

இது எந்தக் கணக்கில் வருகிறது? சிறிய பட்ஜெட் படங்களைத் தயாரிப்பவர்கள் இதைச் செய்ய முடியுமா? அரைப்பக்க அளவு தினத்தந்தியில் விளம்பரம் கொடுத்தால் ரெட் காடு போடுபவர்கள் இப்போது எங்கே போனார்கள்?

அய்யா உங்களுக்கு சன் டிவியை கண்டிக்க முடியவில்லையா? பரவாயில்லை. இந்த விளம்பர கட்டுப்பாட்டையாவது நீக்குங்கள். மல்டிப்லெக்ஸ் ஆடியன்ஸ்க்கு படமெடுப்பவர்கள் ஆங்கில தினசரிகளில் முழுப்பக்க விளம்பரம் செய்து தங்கள் படத்தைக் கொண்டு சேர்க்கட்டும். ஜனரஞ்சக படமெடுப்பவர்கள் முழுப் பக்கம் தினத்தந்தியில் விளம்பரம் செய்து கொள்வார்களே? எல்லோரும் வாழ வாய்ப்புக் கொடுங்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் படித்த ஒரு கதை ஞாபகம் வருகிறது

இரண்டு நண்பர்கள். திரையரங்குக்கு சென்றிருப்பார்கள். அரசியல்வாதியின் உறவினன் ஒருவன் சிகரெட் குடித்துக் கொண்டு சத்தம் போட்டுக் கொண்டிருப்பான். பின்னால் உட்கார்ந்திருக்கும் இவர்கள் சிகரெட் புகையாலும் சத்தத்தாலும் அவதிப்படுவார்கள். அடுத்த முறை செல்லும் போது அங்கே ஒரு ஏழை பீடி பிடித்துக் கொண்டிருப்பான். நண்பர்களில் ஒருவன் அவனை கண்டிக்க எந்தரிப்பான். அப்போது இன்னொருவன் சொல்லுவான், சென்ற முறை அவன் செய்த தப்பைத்தானே இவனும் செய்கிறான். அவனை தட்டிக்கேட்காத நமக்கு இவனை தட்டிக்கேட்க மட்டும் என்ன தார்மீக உரிமை இருக்கிறது? என்று.

இதே கதை தயாரிப்பாளர் சங்கத்துக்கும் பொருந்தும்தானே?

December 14, 2009

இந்திய ஆல் டைம் டெஸ்ட் கிரிக்கெட் அணி - வேகப்பந்து வீச்சாளர்கள்

முதல் பகுதி

இரண்டாம் பகுதி



நேற்றுதான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தவர் ஆனாலும் சரி நாற்பது ஆண்டுகளாக கிரிக்கெட் பார்ப்பவர்களாய் இருந்தாலும் சரி, மைதானத்தில் நடக்கும் இரண்டே விஷயங்களுக்குத்தான் அவர்களை மீறிய ஆஹாகாரம் வெளிப்படும். ஒன்று பேட்ஸ்மென் அடிக்கும் அடியில் பந்து மைதானத்தை தாண்டி பறக்கும் போது மற்றொன்று பேட்ஸ்மென்னின் மிடில் ஸ்டெம்ப் விக்கெட் கீப்பரைத் தாண்டி பறக்கும் போது.

நம் நாட்டில் முதல் சாகஸத்தை செய்ய ஒரு கூட்டமே இருக்கிறது. ஆனால் இரண்டாவதைச் செய்ய?. தேர்வாளர்கள் கூட நம் நாட்டில் வேகப்பந்து வீச்சாளர்கள் உருவாகவே மாட்டார்கள் என்ற நம்பிக்கையை 30 ஆண்டுகளுக்கு முன்னால் வைத்திருந்தார்கள். அதனல் தான் கோச்சிங் கேம்பில் கபில்தேவ் என்ற இளைஞன் எனக்கு நான்கு சப்பாத்தி போதாது, நான் வேகப்பந்து வீச்சாளன், எனக்கு அதிக சக்தி தேவை, அதற்கேற்ற உணாவு கொடுங்கள் என்று கேட்டதற்கு சிரித்து அவமானப்படுத்தினார்கள். இன்னும் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாய் 150 கிமீ வேகத்தில் ஒருவர் பந்து வீசுகிறார் என்ற செய்தி வருகிறது. அதைவிட வேகமாய் அவரது வேகம் அவர்களிடம் இருந்து விடை பெற்று சென்று விடுகிறது.


1.கபில்தேவ்

தன்னுடைய வேகத்தால் முதல் சில ஆண்டுகளும், நேர்த்தியான அவுட்சுவிங்கர்களால் பல ஆண்டுகளும் பேட்ஸ்மென்களை மிரட்டியவர். தன்னுடைய உச்சக்கட்ட பார்மில் இருந்த முதல் பத்தாண்டுகளில் இணையாக பந்து வீச ஆளில்லாமல் அவதிப்பட்டவர்.

டென்னிஸ் லில்லி-தாம்சன், அக்ரம்-யூணுஸ், அம்புரோஸ்- வால்ஷ், டொனால்ட்-போலக் என இணையான வீரர்கள் பந்து வீசும்போது எதிர் அணிக்கு மிகுந்த நெருக்கடி கிடைக்கும். கபில்தேவுக்கு அப்படி யாரும் கிடைக்கவேயில்லை.

ரோஜர் பின்னி ரேஷன் கடை துவரம் பருப்பு போல. நல்ல தண்ணி, காப்பர் பாட்டம், கேஸ் ஸ்டவ் என எல்லாம் சாதகமாக இருந்தால் தான் அவர் பருப்பு வேகும். அதனால்தான் வெளிநாட்டு ஆடுகளங்களில் பிரகாசித்த அளவுக்கு உள்ளூரில் அவர் பிரகாசிக்கவில்லை.

இன்னொரு துணையாக இருந்த மதன்லாலைப் பற்றி ரிச்சர்ட்ஸின் கமெண்ட்

"ஆப் ஸ்பின் போடுபவர்களிலேயே அதிக தூரத்தில் இருந்து ஓடி வந்து போடுபவர்"

85 ஆம் ஆண்டு வாக்கில் வந்த சேட்டன் சர்மா வேகமாக இருந்தாலும், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. சார்ஜாவில் போட்ட புல்டாஸில் மனம் உடைந்து போனார்.

இந்தியாவில் இன்னொரு வேகப்பந்து வீச்சாளர் பிறந்து அவர் 434 டெஸ்ட் விக்கெட் எடுப்பாரா என்பது கேள்விக்குறிதான்.


2.மனோஜ் பிரபாகர்


86 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி நம் நாட்டில் சுற்றுப்பயணம் செய்த போது, அக்ரம் ஸ்ரீகாந்தின் நெற்றியைப் பிளந்து விட, அந்த இடத்தில் துவக்க ஆட்டக்காரராக இறங்கியவர் இவர். பின்னர்தான் தெரிந்தது இவர் வேகப்பந்து வீச்சாளர் என்று. 89ஆம் ஆண்டு நம் அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்தபோதுதான் இவரது பொடென்சியல் வெளியே தெரிந்தது. ஒரு பந்து வீச்சாளர் எதிரணி ஆட்டக்காரர்களுக்கு டெரராய் இருக்கிறார் என்பதை உணர்த்த பல அளவுகோல்கள் இருந்தாலும் முக்கியமான ஒன்று இருக்கிறது. அது பந்தை எறிகிரார் என எழும்பும் குற்றச்சாட்டு.

அக்தார்,முரளிதரன்,ஹர்பஜன் என முண்ணனி வீரர்களை குறித்துத்தான் இந்த குற்றச்சாட்டு கிளம்பும்.

அந்த அளவுகோலின் படி பார்த்தால் மனோஜ் இம்ரான்,மியான்டாட் வாயால் எறிகிறார் என குற்றம் சாட்டப்பட்டவர். எனவே அவரும் ரவுடிதான். பழைய பந்தை ஸ்விங் செய்வது எப்படி என எனக்கு கற்றுக் கொடுத்தவர் மனோஜ்தான் என கபில்தேவே ஸ்டேட்மெண்ட் கொடுத்துள்ளார்.

அந்த தொடர் சம்பந்தமான கட்டுரை ஒன்றில் இந்தியா டுடே இதழ் இப்படி சொல்லியிருந்தது "மனோஜ் : தாமதமாக மலர்ந்த தாமரை". அசாருடன் மோதல், புக்கி விவகாரம், ஜெயசூர்யாவால் ஸ்பின்னராக மாற்றப்பட்டது என பல சர்ச்சைகளால் அணியில் இருந்து கழட்டி விடப்பட்டார்.

இருந்தாலும் நல்ல் இன்ஸ்விங்கர் என்ற முறையில் போட்டியில் இருக்கிறார்.

3. ஜவகல் ஸ்ரீநாத்

பேட்ஸ்மென்கள் குட்டையாய் இருந்தாலும் பரவாயில்லை, பவுலர்களும் குட்டையாய் இருக்கும் அணி நம் அணிதான் என்று ஒரு கேலிப் பேச்சு இருக்கும். ஆறடிக்கு மேல் உயரத்துடன், ஒல்லியான உடல் வாகுடன் வந்த ஸ்ரீநாத் அந்தக் குறையைப் போக்கினார். அவர் உள்ளே நுழையும் போது கபில் தன் இறுதிக்கட்டத்தில் இருந்தார். மனோஜ் மட்டும் துணையாக இருந்தார். இவர்கள் சென்ற உடன் முழுச்சுமையும் இவர் தோளில் விழுந்தது. வெங்கடேஷ் பிரசாத் ஓரளவுக்கே துணை நின்றார். இவர் பந்து வீச்சின் மூலம் சில டெஸ்ட் வெற்றிகளை இந்தியா பெற்றது.

தெண்டுல்கர் கேப்டன் ஆனது இவருக்கு வினையானது. அவர் ஸ்ரீநாத்தை அதிகம் உபயோகப்படுத்தி படுத்தி விட்டார். ஷோல்டர் இஞ்சுரியால் விரைவாகவே ஓய்வு பெற்றுவிட்டார்.


4. ஜாகிர்கான்


எனக்கு பாகிஸ்தான் வேகப் பந்து வீச்சாளர்களைக் கண்டாலே பொறாமையாய் இருக்கும். சர்பராஷ் நவாஸ் காலத்தில் இருந்தே அவர்கள் ரிவர்ஸ் ஸ்விங் செய்து வருகிறார்கள். கல்லூரியில் என் ஆதர்சம் வாசிம் அக்ரம் தான். ஹம் ஆப்கே
ஹெயின் கோன் படம் பாகிஸ்தானில் ஹிட் ஆன போது அவர்கள் பாடிய மாதுரி தீக்ஸித்தைக் கொடுத்து விட்டு காஷ்மீரை எடுத்துக் கொள்ளுங்கள் (மாதுரி லேலோ காஷ்மிர் ... என என்னவோ இந்தியில் வரும்.மறந்து விட்டது) என்ற வரிகளை மாற்றி நாங்கள் வாசிமை கொடுங்கள் காஷ்மீரை எடுத்துக் கொள்ளுங்கள் என பாடுவோம்.

வாகர் யூணிஸ் இங்கிலாந்தில் தன் பந்து வீச்சால் கலக்கிக் கொண்டிருக்கும் போது ஹென்றி புளோபீல்ட் அடித்த கமெண்ட் " த லைட் கெட்டிங் டார்க்கர் அண்ட் டார்க்கர், வக்கார் கெட்டிங் பாஸ்டர் அண்ட் பாஸ்டர்" . அதைக் கேட்டுவிட்டு இங்கே ஒரு ஆள் இப்படி வரமாட்டானா என ஏங்கியதுண்டு.

ஜாகிர் அந்தக்குறையை ஓரளவுக்கு தீர்த்தவர் என்று சொல்லலாம். இந்தியார்களும் ரிவர்ஸ் ஸ்விங் செய்வார்கள் என்று அழுத்தம் திருத்தமாக காட்டியவர். பிட்னஸ்ஸில் மட்டும் நிறைய கவனம் எடுத்துக் கொண்டிருந்தால் இன்னும் பிரகாசித்திருக்கக் கூடியவர்.


5. இஷாந்த் ஷர்மா


இவர் வந்து இரண்டு ஆண்டுகளே ஆகியிருந்தாலும் கவனமாகக் கையாளப்பட்டால் பெரிய உயரங்களுக்கு செல்லும் திறமை வாய்ந்தவர். சமகால வேகப்பந்து வீச்சாளர்களில் பிளிண்டாபுக்கு அடுத்து ரிக்கி பாண்டிங்கை திணற வைத்தவர் இவரே. மூன்று பார்மட் தவிர ஐபிஎல் என சகட்டுமேனிக்கு விளையாடியதில் டயர்ட் ஆகிவிட்டாரோ எனத் தோன்றுகிறது. அதுவும் கல்கத்தா ஐபிஎல் டீம் இவரை டீமாரலைஸ் செய்து விட்டதைப்போலவே எனக்குத் தோன்றும். உயரமும், பத்து ஓவர் வீசினாலும் டயர்ட் ஆகாத உடல்திறனும் அமையப்பெற்ற பந்து வீச்சாளர்.
ரிவர்ஸ் ஸ்விங் மற்றும் இன்சுவிங் யார்க்கர் வீசுவது கூடுதல் பலம்.


பதிவர்கள் தங்களுக்குப் பிடித்த இரு வேகப் பந்து வீச்சாளர்களைத் தெரிவிக்கலாம்.

சென்ற பதிவின் பின்னூட்டங்களின் படி துவக்க ஆட்டக்காரர்களாக தேர்வு பெற்றவர்கள்

1.சுனில் கவாஸ்கர்
2.விரேந்திரா சேவாக்

பின்னூட்டத்தில் தங்கள் தெரிவைத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

December 10, 2009

தொழில் தர்மம்

கொஞ்சம் பவுடர் போட்டுக்குங்க
கோட் டை ஆப்டா இருக்குமே
நல்லா நிமிந்து உக்காருங்க
லைட்டா பேஸ் லெப்ட்ல திருப்புங்க
போதும் கொஞ்சம் ரைட்
சின் டவுன் பண்ணுங்க
ஸ்மைல் போதாது

என தொணத்திக் கொண்டே இருப்பவரிடம்
எப்படி சொல்வது
எடுக்கப் போவது செக்யூரிட்டி வேலைக்கான
புகைப்படம் தான் என்பதை



பின்குறிப்பு

என்டர் கவிதை என்று பின்னூட்டமிடுபவர்களின் பிளாக் ஹேக் செய்யப்படும்

தினமலர் வாரமலருக்கு அனுப்பலாம் என்பவர்களுக்கு பொங்கல் முதல் நாள் பாண்டியன் எக்ஸ்பிரஸ்சில் அன் ரிசர்வுடு கம்பார்ட்மென்டில் பயணம் செய்வதற்கான டிக்கட் கொடுக்கப்படும்

மொக்கை குப்பை என பின்னூட்ட மிடுபவர்களுக்கு உரையாடல் கவிதைப் போட்டியின் தேர்வாளர் பொறுப்பு கொடுக்கப்படும்

November 25, 2009

3500

குணா கமல் மன்ற
குருதிக்கொடையின் போதுதான்
தெரிந்தது அபூர்வ பிரிவென்று

அன்று நிமிர்ந்த நெஞ்சு
பலமுறை நிமிர்ந்திருக்கிறது

ராஜகுமாரனைப் போலத் தான்
நுழைவேன் ஒவ்வொருமுறையும்
இன்று நடைப்பிணமாய்

மூன்று மாதம் முன்
நின்ற சம்பளம்
தீரப்போகும் லாக்டோஜன்

November 24, 2009

இந்தியா ஆல் டைம் லெவென் பகுதி 2 துவக்க ஆட்டக்காரர்கள்

முதல் பகுதி இங்கே

இந்திய ஆல் டைம் டெஸ்ட் அணிக்கு யார் துவக்க ஆட்டக்காரர்கள்?

துவக்க ஆட்டக்காரர்களுக்கும் மிடில் ஆர்டர் ஆட்டக்காரர்களுக்கும் என்ன வித்தியாசம்? முதல்
பந்தில் ஓப்பனர் அவுட் ஆகிவிட்டால் உடனே நம்பர் த்ரி உள்ளே வந்து விடுகிறாரே?

நிச்சயம் இருக்கிறது.

துவக்க ஆட்டக்காரர் உள்ளே நுழையும் போது (அது எந்த இன்னிங்ஸாக இருந்தாலும்) வேகப்பந்து வீச்சாளர்கள் தன் முழு ஆற்றலுடன் இருப்பார்கள். அனலைக் கக்குவார்கள். அவர்களை சமாளிக்க வேண்டும். பந்தும் புதிதாக இருக்கும். அருமையாக ஸ்விங்கும் ஆகும். எனவே நல்ல பேட்டிங் டெக்னிக் இருக்க வேண்டும்.

பிட்ச் எந்த கண்டிஷனில் இருக்கிறது என்று தெரியாது. எவ்வளவு எம்பும்? இல்லை தாழும் எனத் தெரியாது.விக்கெட் விழாமல் ஆட வேண்டும்.

முதல் இன்னிங்ஸில் எதிர் அணி இரண்டு நாட்கள் ஆடி கடைசி நாலு ஓவர் மட்டும் கொடுக்கும் போது, பேடைக் கட்டிக்கொண்டு போய் நிற்க ஸ்டாமினா வேண்டும். விக்கெட் கொடுக்காமல் ஆட கான்சண்ட்ரேஷன் வேண்டும். ஆனால் பவுலர் பிரெஷாக இருப்பார்.

இதுமாதிரியான சிக்கல்களினால் தான் அது ஸ்பெஷலிஸ்ட் பொசிஷனாக கருதப்படுகிறது.

71ல் இருந்து நம் அணியில் ஆடிய துவக்க ஆட்டக்காரகளில் யாரை தேர்ந்தெடுக்கலாம்?

1. சுனில் கவாஸ்கர்

பேட்டிங் ஆவரேஜ் 50க்கு மேல். 10000ஐ முதன் முதலில் பார்த்தவர். 34 சதத்தையும்
முதலில் பார்த்தவர். வேகப் பந்து பிசாசுகளான ஆண்டி ராபர்ட்ஸ்,மைக்கேல் ஹோல்டிங்,கார்னர் மற்றும் மார்ஷல் போன்றோரை அனாசியமாக ஆடியவர். ஸ்விங்கில் வல்லவர்களான லில்லி,ஹேட்லி, போத்தம் ஆகியோரையும் இம்ரான்,அக்ரம் போன்ற வல்லவர்களையும் எளிதாக எதிர் கொண்டவர்.

நீ வேகமாப் போடு. அப்பதான் எனக்கு ஈஸி. தட்டி விட்டாலே போர் போயிடும் என்று அவர்களைப் பார்த்து சிரித்தவர்.

கவாஸ்கர் ஸ்டம்புக்கும், மிட் ஆனுக்கும் இடையே உள்ள 'வி' யில் பந்துகளை அருமையாக ட்ரைவ் செய்வார். பவுலரும் தொட முடியாது, மிட் ஆன் பீல்டருக்கும் வாய்ப்பிருக்காது. இது எப்படி எனக் கேட்ட போது அவர் சொன்னது

“ நான் தெருவில் விளையாடும் போது மிட் ஆனில் இரண்டு கார்கள் நிற்கும். அந்த கண்னாடியில் அடிக்கக் கூடாது என்பதற்காக அந்த வி யில் அடித்தே பழகினேன்”. என்றார்.

ஸ்பின்னர்களையும் தெளிவாக ஆடுவார்.நல்ல ஸ்லிப் பீல்டரும் கூட.


2. எம் எல் ஜெயசிம்மா


அசாருதீனுக்கும் லட்சுமணனுக்கும் உள்ள ஒற்றுமை ஹைதராபாத் அணி மற்றும் ரிஸ்டி பிளே. அந்த மணிக்கட்டு திருப்பு ஆட்டத்துக்கும்,லெக் ஸ்டம்பில் போடும் பந்தை நோகாமல் தட்டி பவுண்டரிக்கு அனுப்பும் ஸ்டைலுக்கும் குரு இவர்தான். இவரும் ஹைதராபாத் தான். இவரது லெகஸிதான் அசாருக்கும் பின் லட்சுமணனுக்கும் வந்தது. இவர் முதலில் மிடில் ஆர்டர் ஆட்டக்காரர்தான். ஆனால் நமது அணியில் மிடில் ஆர்டருக்கு எப்போதும் இருக்கும் அடிதடியால் மேக்‌ஷிஃப்ட் ஓப்பனர் ஆகி பின் அதையே நிரந்தரமாக்கிக் கொண்டவர். அப்பொதைய அணியில் பிரசன்னா,வெங்கட்ராகவன்,பேடி,சந்திர சேகர் போன்ற ஸ்பின் ஜாம்பவான்கள் இருந்ததால் மித வேகப் பந்து வீசும் இவரையே துவக்க பந்து
வீச்சாளாராக உபயோகப் படுத்தினார்கள். ஓப்பனிங் பேட்டிங், ஓப்பனிங் பவுலிங் என வாழ்ந்தவர்.

அதன்பின் இலங்கையின் ரவிரத்னாயகே வும்,நம் மனோஜ் பிரபாகரும் அந்த வாழ்வை அனுபவித்தவர்கள்.

3. சேட்டன் சௌகான்

செஞ்சுரியே அடிக்காமல் 40 டெஸ்ட் ஆடியவர். ஆனால் கவாஸ்கருக்கு நல்ல துணையாக விளங்கியவர். கவாஸ்கர் ஒருமுறை இந்திய கனவு அணியை தேர்வு செய்த போது இவரைத்தான் துவக்க ஆட்டக்காரராக தேர்வு செய்தார். (இன்னொருவர் கவாஸ்கரேதான்). இவர் எப்படி ஆடுவார் என பார்க்க வேண்டுமென்றால் ஸ்டார் டிவியில் கிளாசிக் தொகுப்பில் பார்க்கலாம். ஆனால் அகால வேளையில் போடுகிறார்கள்.

நான் விளக்குமாற்றை கிரிக்கெட் பேட்டாக கற்பனை செய்து ஆடி அம்மாவிடம் திட்டு வாங்கினேன். கல்யாணத்தன்று கிப்ட் கொடுத்த நண்பனிடம் ஸ்கோர் என்னாச்சு என்று மணமேடையில் கேட்டு மனைவியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டேன். இப்போது கிரிக்கெட் பார்க்க கார்ட்டூனை மாத்தாதே என மகனிடமும் திட்டு வாங்குகிறேன். மூன்று தலைமுறையும் என்னை கிரிக்கெட் பார்க்க விடாமல் சதி செய்கிறது.
சௌகான் ஆட்டத்தைப் பார்த்தவர்கள் பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும்.

4. கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்

ஒரு முறை அரசு பதிலில் எஸ் ஏ பி (ஐராசு,ராகிரா வாகவும் இருக்கலாம்) சொன்னது, “ ஸ்ரீகாந்த் அடிச்சா நாமே அடிச்சமாதிரி இருக்கும்”. அது உண்மைதான். சராசரியை விட அதிக அகலத்துக்கு காலை அகட்டி நிற்பதும், மூக்கை உறிஞ்சிக்கொள்வதும்,சூரியனை பார்ப்பதும், ரெஸ்ட்லெஸாக லெக் அம்பயரை நோக்கி நடப்பதும் சிரிப்பாகத்தான் இருக்கும். ஆனால் ஆண்டி ராபர்ட்ஸை அவர் அடித்த ஸ்கொயர் ட்ரைவ் இன்னும் கண்ணுக்குள் தான் இருக்கிறது.

சார்ஜாவில் மார்ஷலை முதல் பந்தில் மிட்விக்கெட்டில் சிக்சரும், அடுத்த பந்தில் ஸ்கொயர்கட்டில் போரும் அடித்தவுடன், ஸ்லிப்பில் நின்ற ரிச்சர்ட்ஸ் காலில் வென்னீரைக் கொட்டியதுபோல் மார்ஷலிடம் ஓடினார். மார்ஷல் வாழ்க்கையிலேயே கேப்டனிடம் சுடு சொல் வாங்கியது அந்த ஒரு சந்தர்ப்பத்திலாகத்தான் இருக்கும்.

சிட்னியில் ஸ்ரீகாந்த் அடித்த 123ம், சேப்பாக்கத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக அடித்த் 123ம் தான் அவர் செஞ்சுரிகள். ஆனால் இரண்டும் பல ஆண்டுகளுக்கு பேசப்பட்டவை.

5. நவ்ஜோத் சிங் சித்து


மே இந்திய தீவுக்கு எதிராக அங்கே போய் 201 அடித்தாலும், இந்தியாவில் சில செஞ்சுரிகள்
அடித்திருந்தாலும் இவருக்கு ஒரு வீக்னெஸ் இருக்கிறது.

நல்ல லெங்த்தில் போடப்பட்டு வேகமாக இன்கட் ஆகி உள்ளே வரும் பாலை ஆட மிகவும்
சிரமப்படுவார். பெரும்பாலான முறை இம்மாதிரி பந்துகளில் அவுட் ஆகி உள்ளார். ஆனால் ஸ்பின்னர்களை ஆடுவதில் கிங்.

6. விரேந்திர சேவாக்


ஜெஃப்ரி பாய்காட் துவக்க ஆட்டக்காரர் என்றாலே வேகப் பந்து வீச்சாளர்கள் நொந்து போய் விடுவார்கள்.அப்படி ஒரு கட்டை பார்ட்டி. ரன் அடிப்பதில் அவருக்கு சந்தோஷமில்லை. நங்கூரம் பாய்ச்சி நிற்பதில் தான் ஆசை. காமம் இல்லாத காதல்தான் பாய்காட்டின் சாய்ஸ். நம்மாள் இவருக்கு ஆப்போசிட் பார்ட்டி. இவரைக் கண்டும் வேகப் பந்து வீச்சாளர்கள் நொந்து போவார்கள். அடிக்கும் அடி அப்படி. நிற்பதில் ஆசை இல்லை.

சேப்பாக்கத்தில் இவர் அடித்த 300ன் போது தென் ஆப்பிரிக்க கோச் சொன்னது “எங்களிடம் இருந்த எல்லா அஸ்திரத்தையும் ஏவி விட்டோம், எங்களுக்கு தெரிந்த எல்லா வியூகத்தையும் அமைத்து விட்டோம், முடியவில்லை”.

ஆனால் இவர் யாரும் எதிர் பார்க்காத பந்தில் அவுட் ஆகி அவர்கள் நெஞ்சில் பாலை வார்ப்பார்.

இவரது ஆவரேஜும் 50க்கு மேல். இன்று (24-11-09) அடித்த சதத்துக்கு முன்னால் அடித்த
கடைசி 15 சதமும் 150 க்கு மேல்தான்.

இவரும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென் ஆக இருந்து மேக் ஷிஃப்ட் ஓப்பனாராக மாறியவர் (உபயம் :கங்குலி)

7. கவுதம் காம்பீர்

கணவனின் சம்பாத்தியத்தில் திருப்தி அடையாத சராசரி இந்திய மனைவியின் மனநிலையில்
இருப்பவர் இவர். எவ்வளவு ரன் அடித்தாலும் திருப்தி இருக்காது. ரன் வெறி கொண்டவர்.
செஞ்சுரி அடித்து விட்டு வந்தாலும் கமாண்ட்ரேட்டரிடம் சிரிக்க மாட்டார். கடைசி ஒன்பது மேட்சுகளில் ஏழு சென்சுரி. இந்த மேட்சோடு சேர்த்து (24-11-09) தொடர்ந்து நாலு மேட்ச் சென்சுரி. நல்ல டெம்பெர்மெண்ட். ஸ்பின்னர்களையும் அனாயாசமாக ஆடக்கூடியவர்.

தனது பார்மை அப்படியே டீமுக்கு உபயோகமாக திருப்பக் கூடியவர்.

இந்த ஏழில் இருந்து இருவரை தேர்ந்தெடுங்கள் கண்மணிகளே.

November 23, 2009

இந்தியா ஆல் டைம் லெவென்

கிரிக் இன்போ இணையதளம் முதலில் ஆஸ்திரேலியா ஆல் டைம் லெவென் கிரிக்கெட் அணியை தேர்வு செய்யும் விவாதத்தை துவக்கிய போது, அடுத்த அணி இந்திய அணியாகத்தான் இருக்கும் என நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால் அவர்கள் அடுத்து இங்கிலாந்து,நியுசிலாந்து என தேர்வு செய்து இப்போது தென் ஆப்பிரிக்க அணியில் வந்து நிற்கிறார்கள்.

அதையெல்லாம் எதிர்பார்த்துக்கிட்டே இருந்தால் எப்படி. நாமே தேர்வு செய்துவிடுவோம், காசா பணமா என்று இறங்கிவிட்டேன்.

கிரிகின்போ படா படா ஆட்களிடம் இருந்து தேர்வுப் பட்டியலைப் பெறும். ஓட்டெடுப்பும் நடக்கும். அடைந்தால் மகாதேவி அடையாவிட்டால் மரணதேவி என்று ஆட்களுக்காக ஏங்குபவர்களா நாம்?. திரிஷா இல்லைன்னா திவ்யா என சமாதானம் அடைந்து கொள்பவர்கள் தானே நாம்.

அதனால் நாமே ஒரு அணியை தேர்வு செய்து விடுவோம்.


முதல் குழப்பம் எந்த வருடத்தில் இருந்து துவங்குவது என்று. ரஞ்சித்சிங்ஜி,துலிப்சிங்ஜி ஆகியோர் எப்படி விளையாடுவார்கள் என்று பார்த்ததில்லை. சாதனைகளை கேள்விப்பட்டதோடு சரி.

சி கெ நாயுடு வின் அதிரடி ஆட்டம், ரஙகாச்சாரியின் ஸ்டம்புகளை உடைத்தெறியும் பந்து வீசு என பழைய இதழ்களில் படித்ததும் கேள்விப்பட்டதும் உண்டு.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக லாலா அமர்நாத் செஞ்சுரி அடித்தார். சரி எதும் புட்டேஜ் இருக்கா? இல்லையே.

சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் பாகிஸ்தான், பங்களாதேஷ் எல்லாம் ஒன்றாக இருந்ததால் நாம் சுதந்திரத்திற்க்குப் பின்னால் தொடங்குவோம்.

சுதந்திரத்துக்குப் பின்னால் பல ஆண்டுகள் சென்ற இடமெல்லாம் சிராய்ப்பு என்னும் அளவுக்கு அடி வாங்கியதால் அந்த காலகட்டத்தை சாய்ஸில் விட்டு விடுவோம்.

முதன் முதலில் வெளிநாட்டு மண்ணில் (இங்கிலாந்து மற்றும் மே இந்திய தீவுகள்) டெஸ்ட் தொடர் வெற்றிக்கனியைப் பறித்த 1971ல் இருந்து தொடங்குவோம். அப்பொதைய கேப்டன் அஜித் வடேகர் மற்றும் அவரது அணியில் இருந்து தற்போதைய அணி வீரர்கள் வரை மட்டுமே நமது இலக்கு.



நம் அணியில் ஒரு வசதி என்னவென்றால் சில பொசிஷன்களுக்கு பெரிய போட்டியே இருக்காது. எடுத்துக்காட்டு வேகப்பந்து வீச்சு. இரண்டே இரண்டு ஏரியா தான் கடுமையான போட்டி நடைபெறும் இடம். மிடில் ஆர்டர் மற்றும் சுழல்பந்து வீச்சு.

முதலில் விக்கெட் கீப்பிங்கில் துவங்குவோம்.

1.பரூக் எஞ்சினியர்
2.கிர்மானி
3.சதானந்த் விஸ்நனாத்
4. சந்திரகாந்த் பண்டிட்
5.கிரன் மோர்
6.நயன் மோங்கியா
7.மகேந்திர சிங் டோனி
8.திணேஷ் கார்த்திக்

அடுத்தது துவக்க ஆட்டக்காரர்கள்

2.சுனில் கவாஸ்கர்
3.சேட்டன் சௌகான்
4.எம் எல் ஜெய்சிம்மா (மேக் ஷிப்ட்)
5.கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்
6. விரேந்திர சேவாக் (மேக் ஷிப்ட்)
7.கௌதம் காம்பிர்
நவ்ஜோத் சித்து

கொடுமை ரெண்டு பிளேசுக்கு ஏழு பேருக்கு மேல தேறலை.


வேகப்பந்து வீச்சு

1.கபில்தேவ்
2.கர்சன் காவ்ரி
3.ரோஜர் பின்னி
4.சேட்டன் ஷர்மா
5.மனோஜ் பிரபாகர்
6.ஜவகல் ஸ்ரீனாத்
7.வெங்கடேச பிரசாத்
8.ஜாகிர் கான்
9.இஷாந்த் சர்மா


இனி வர்றது ஸ்பின்னர்ஸ்

1.சந்திரசேகர்
2.பிஷன் சிங் பேடி
3.பிரசன்னா
4.வெஙகட்ராகவன்
5.சிவலால் யாதவ்
6.எல் சிவராமகிருஷ்ணன்
7.மனீந்தர் சிங்
8.ரவி சாஸ்த்ரி
9. நரேந்திர ஹிர்வாணி
10.அர்ஷாத் அயூப்
11.அனில் கும்ப்ளே
12.வெங்கடபதி ராஜு
13.ஹர்பஜன் சிங்
வி வி குமார்
சுபாஷ் குப்தே



அடுத்தது தான் கோர் ஏரியா, செலக்டர்ஸ் டரியல் ஆகுற இடம். மிடில் ஆர்டர்

1. அஜீத் வடேகர்

2.குண்டப்பா விஸ்வனாத்
3.மன்சூர் அலிகான் பட்டோடி
4.மொஹிந்தர் அமர்னாத்
5.திலிப் வெங்சர்க்கார்
6. முகமது அசாருதீன்
7. சஞ்சய் மஞ்சிரேக்கர்
8. சச்சின் தெண்டுல்கர்
9. ராகுல் திராவிட்
10.சௌரவ் கங்குலி
11.வி வி எஸ் லட்சுமண்

சந்தீப் பாட்டில்
யுவராஜ் சிங்


திலீப் சர்தேசாய்

சரி வரும் பகுதிகள்ல இவங்களை எடை போடுவோம். பின்னூட்டத்தில் விட்டுப் போனவர்களையும் (நல்ல ஆட்டக்கார்கள்), நீங்கள் இதில் இருந்து தேர்வு செய்யும் அணியையும் குறிப்பிட்டால் உதவியாக இருக்கும்.

ஆகுறோம்டா நாங்களும் ஒரு செலக்டர்.

November 22, 2009

மாற்றம்

எரிச்சலாக வந்தது. கணேஷிடம் புலம்பினேன்.

"நேத்து நான் ஏல சீட் எடுக்கணும், யாராச்சும் அல்டெர்னேட் பாருங்கடான்னு கெஞ்சினேன். ஒருத்தனும் தலையாட்டலை. இன்னைக்கு சிவா பாண்டிச்சேரிக்கு தண்ணியடிக்க செட்டு சேர்த்துட்டு போறான். அவனுக்கு அல்டெர்னேட் ஈசியா கிடைக்குது"

என்னடா உலகம் இது? என்று.

கணேஷ் பதிலளித்தான். "இது நம்ம நாட்டு சைகாலஜிடா. தியேட்டர்ல பார்த்திருப்பியே பில்லியனர் மாதிரி ஒருத்தன் நின்னுக்கிட்டு இருப்பான். அவன்கிட்ட பக்கிரி மாதிரி இருக்கிற ஒருத்தன் போய் பீடிக்கு நெருப்புக் கேட்பான். இவனும் அவன் அடிச்சுக்கிட்டு இருக்குற பாரின் சிகரெட்டையே பத்தவைக்க கொடுப்பான்".

அவன் என்ன சோஷலிச சிற்பியா? இல்லை ஒருத்தன் கெட்டுப் போறான்னா அதுக்கு ஹெல்ப் பண்ணுறதில்ல ஒரு அல்ப சந்தோஷம். அதுதான்.

என் மனம் திருப்தியடையவில்லை. இந்த சிவா இருக்கிறானே, அவனும் நானும் ஒண்ணாத்தான் சேர்ந்தோம், இந்த கம்பெனியில. சின்சியரா வேலை பார்த்த என்னை விட்டுட்டு அவனுக்கு பிரமோஷன் கொடுத்ததால அவன் மீது எனக்கு கொஞ்சம் கடுப்பு.

"தேர் இஸ் மோர் பிளட் இன் மை ஆல்கஹால் சிஸ்டம் " என்று அடிக்கடி உதார் விட்டுக் கொள்வான். ஒருமுறை மானேஜர் வீட்டு விசேஷத்துக்கு போயிருந்தபோது அங்கிருந்த தாஜ்மஹால் போர்ட்ராயிட்டைப் பார்த்து அவன் அடித்த கமெண்ட் " தெ கிரேட்டஸ்ட் எரெக்சன் ஆப் எ மேன் பார் எ வுமன்"

எந்த பெண்ணைப் பார்த்தாலும் அவன் வைத்திருக்கும் மூன்று கேட்டகிரி ஸ்கேலில் தான் அளப்பான். கட்டில்,கூபே மற்றும் காட்டேஜ் தான் அது.

ஒருமுறை கணேஷ் தான் அதைப் பற்ரி விசாரித்தான். அதென்னடா கட்டில்,கூபெ,காட்டேஜ் என்று?

சிவா பொறுமையாக விளக்கினான்.

"இப்ப ஒரு பிளாட்பாரக் கடையில பஜ்ஜி போட்டுக்கிட்டு இருக்கான். பார்த்தாலே சாப்பிடனும் போல இருக்கு என்ன பண்ணுவ?

அதற்கு கணேஷ் " ரெண்டு வாங்கி சாப்பிட்டு கையை கழுவிட்டு போயிக்கிட்டே இருப்பேன்"

அதுமாதிரிதான் கிடைக்கிற கேப்பில ரூமிலயோ,லாட்ஜிலயோ முடிக்குற அளவுக்கு அழகா இருக்குற பொண்ணுங்க கட்டில் கேட்டகிரி.

சரி. கூபே?

மதுரைல இருந்து ட்ரைன்ல வந்துக்கிட்டு இருக்க, மணப்பாறை முறுக்கு விக்குது. செம டேஸ்டா இருக்கு. என்ன பண்ணுவ?

நாலு பாக்கெட் வாங்கி மெட்ராஸ் வர்ற வரைக்கும் சாப்பிட்டுக்கிட்டே வருவேன்.

ஆமா. அதுமாதிரி ஒரு நாள் பூராம் ரசிச்சுக்கிட்டே இருக்குற மாதிரி அழகான பொண்ணுங்க கூபே கேட்டகிரி. அதுங்களையெல்லாம் ட்ரெயின்ல கூபே புக் பண்ணி கூட்டிட்டுப் போயி சந்தோஷமா இருக்கணும்.


போன மாசம் தீபாவளிக்குப் போயிட்டு வந்தியே, என்ன கொண்டு வந்த?

வீட்டில செஞ்ச அதிரசமும் முறுக்கும்.

என்ன பண்ணின?

பத்து நாள் வச்சு சாப்பிட்டேன்.

ம்ம். அதுமாதிரி பத்துநாள் பக்கத்திலேயே இருந்தாலும் சலிக்காத பிகர்னா மகாபலிபுரம்,கோவான்னு காட்டேஜ் புக் பண்ணிப் போயி சந்தோஷமா இருக்கணும்.

இதைக்கேட்டு கிறு கிறுத்து வந்தவனிடம் நான் கேட்டேன்

"சரிடா கல்யாணத்தப் பத்தி என்ன சொல்லுறான்?"

போடா அதப்பத்திக் கேட்டா இட்லி,கல்தோசைன்னு ஏதாச்சும் எக்சாம்பிள் கொடுத்து என்னைக் காய வைப்பான். வேற வேலை இல்லை என்று அலுத்துக் கொண்டான்.

நான் அதைக்கேட்க காரணம் இருந்தது. அப்போது எனக்கும் அவனுக்கும் அவரவர் வீடுகளில் பெண் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிகரெட்,குடி மற்றும் பெண் சகவாசம் இல்லாததால் அவனை விட எனக்கு விரைவில் பெண் கிடைக்கும் என நினைத்துக் கொண்டிருந்தேன். பிரமோஷனில் அவன் என்னை முந்தியதால் இதிலாவது நாம் முந்த வேண்டும் என்ற அல்ப வெறி.


அவனில்லாத நேரங்களில் நண்பர்கள் பேசிக்கொள்வார்கள். டேய் அவனுக்கெல்லாம் ரெண்டு மாசத்துக்கு ஒரு சிம் கார்டு மாத்துற பொண்ணுதாண்டா கிடைப்பா என்று.

எனக்கு அவர்கள் மேல் அளவு கடந்த எரிச்சல் வந்தது. அவன் கேரக்டர் சரியில்லையின்னா ஏண்டா வரப்போற பொண்ணப் பத்தி கேவலமா பேசுறீங்க என்று சண்டை கூட போட்டேன்

நினைத்ததற்க்கு மாறாக அவன் என்னை இதிலும் முந்தி விட்டான். எல்லோரும் பெண் போட்டோ கேட்ட போது அப்புறம் தருகிறேன் என மழுப்பி விட்டான்.

அட்டு பிகரா இருக்கும் போல, அதாண்டா காட்ட மாட்டேங்குறான் என்ற வதந்தியும் அதனால் பரவியது.

சில நாள் கழித்து பெண்ணின் பெற்றோர் போட்டா மட்டும் காட்டினான். குரங்க பாத்தா பத்தாதா? குட்டிய வேற பார்க்கணுமா என சலித்துக் கொள்ளும் அளவுக்கு அவர்கள் இருந்தார்கள்.



திருமணத்திற்க்கு போணோம். மணப்பெண் நாங்கள் போட்ட கணக்கை யெல்லாம் தவிடு பொடியாக்கும் அபார அழகுடன் இருந்தாள்.

முடிந்து திரும்புகையில் பாருக்குள் நுழைந்தது குழு, "நீதான் தயிர் சாதமாச்சேடா இங்க என்ன பண்ணப் போற? என்று கலாய்த்தார்கள்.ஒரு நிமிடம் யோசித்தேன்.

எனக்கும் ஒரு கிளாஸ் வைங்கடா என்ற குரல் என்னையும் மீறி வந்தது.

November 11, 2009

சட்டை

அரவிந்த் என் அறை நண்பன்.சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ். அவனுக்கு, அவன் கம்பெனிகளின் கிளைகள் எங்கெங்கே இருக்கின்றன, எந்த பொருளுக்கு எவ்வளவு தள்ளுபடி என்பதெல்லாம் கூட சரியாகத் தெரியுமா என்பது சந்தேகம். ஆனால் அலன் சாலி, லூயி பிலிப், குரொக்கடைல், பேசிக் ஷோ ரூம்கள் எல்லாம் எங்கெங்கு இருக்கின்றன, அங்கே எவ்வளவு ஆபர், செகண்ட் சேல்ஸ் எப்போது என்ற தகவல்கள் எல்லாம்
விரல் நுனியில் இருக்கும். நண்பர்களுக்கு மெசேஜாக அனுப்பித் தள்ளுவான்.

அவன் முதன் முதலில் அறை நண்பனாக உள்ளே நுழைந்த உடனேயே என் செல்போனைத் தான் கவனித்தான்.என்ன பாஸு போயும் போயும் டபுள் ஒன் டபுள் ஜீரோவா, என அதை எடுத்துப் பார்த்தவன், சிம் கார்ட் பி எஸ் என் எல் என்றதும் தலையில் அடித்துக் கொண்டான். நீங்க எங்கெங்கே பேசுவீங்க, அந்த நம்பர்லாம் என்ன, ஒரு நாளைக்கு எவ்வளவு மெசேஜ் அனுப்புவீங்க? என்று கேள்விகளாய் கேட்டு கடைசியில்
இந்த சிம் வாங்குங்க, செல்ல நாளைக்கு மாத்திடுங்க என்று முடித்தான்.

ஆம் அரவிந்த் அப்படித்தான். தகவல் களஞ்சியம். தேர்ந்தெடுப்பு ரசனை அதிகம்.மேலும் நாட்டாமை மாதிரி பாரபட்சம் இல்லாமல் யாருடனும் ஒரே அளவிலான நட்பு பாராட்டுவான். அவனைத்தேடி வாரம் இரண்டு பேராவது வருவார்கள்.

“மாப்பிள்ளை, அண்ணன் கல்யாணம், துணி எடுக்கணும்”,
“இவன் என் பிரண்டு, அடுத்த மாசம் கல்யாணம், துணி எடுக்கணும்”

கூட வாடா

என கோரிக்கைகளோடு வருவார்கள். இவனும் சலிக்காமல் நிறைவேற்றுவான்.

ஆனால் அவன் துணி எடுக்க கூட வராத நண்பன் நான் மட்டும்தான்.

”போதும்டா, நான் கிழிக்கிற கிழிக்கு” என்று மறுத்து விடுவேன்.

அவன் யுனிகார்னை சர்வீஸுக்கு விட்டிருந்த நாளில் என்னுடைய ஸ்பிளெண்டரை எடுத்துக் கொண்டு போனவன், திரும்பி வந்து காய்ச்சினான்.

என்னடா இது, வண்டி இப்படி வச்சிருக்க என்றவன்,அவனின் ஆஸ்தான மெக்கானிக்கிடம் அழைத்துச் சென்றான். அவர் கொடுத்த லிஸ்டுடன் கிளம்பினோம். ஸ்பேர்பார்ட்ஸ் கடை ஒரு மார்வாரிக்கு சொந்தமானது. அவர் கட்டமும் இல்லாமல் கோடும் இல்லாமல் ஒரு டிசைனில் சாயம் போன கலரில் சட்டை போடிருந்தார். இவனுக்கு மயிர்க்கால்கள் சிலிர்த்தன.

இந்த மாதிரி ஒரு டிசைன்ல தாண்டா சட்டை போடணும். எனக்குத் தெரிஞ்சு மெட்ராஸ்ல இந்த டிசைன் ரேர்டா என்றான். அவரிடமே, ”எங்கே எடுத்தது” எனக் கேட்க

”ரொம்ப நாளாச்சு மறந்துட்டேன்” என்றார்.

எனக்கென்னவோ அது மரண மொக்கை டிசைனாக தெரிந்தது.

ஆனால் அவனோ,

“ அந்த கலர் தாண்டா சரியில்லை. சிகப்புக்கும் மெஜண்டா வுக்கும் இடையில ஒரு கலர் இருக்குமே, அந்த கலர்ல இந்த டிசைன்ல சட்டை போட்டா, அப்படியே அள்ளும்” என்றான்.

அன்றிலிருந்து அவன் தேடல் ஆரம்பித்தது. மார்வாடி என்பதால் சௌகார்பேட்டை பக்கம் எடுத்திருக்க வாய்ப்பிருக்கு என்று அந்த ஏரியாவை அலசினான். எனக்கு மாலை வேளைகளில் கொறிப்பதற்கு பல குஜராத்திய இனிப்பு வகைகள் கிடைத்தன. தமன்னாவின் உறவுப் பெண்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைதத்து. ஜெயின் கோவிலில், என் திருமணத்திற்காக ஒரு பிரார்த்தனை செய்ய முடிந்தது.

ஆனால் சட்டை தான் கிடைக்கவில்லை. இந்நிலையில் தன் நண்பன் திருமணத்திற்கு துணி எடுக்க துணைக்குப் போனவன் ஆலா பிளீச் போட்ட அங்க வஸ்திரம் போல பளிச் புன்னகையுடன் வந்தான்.

வேறொன்றுமில்லை. தன் தந்தையின் பிறந்த நாளுக்கு துணி எடுத்துக் கொடுத்து அவரை அசத்த நினைத்த ஆரணங்கு ஒன்று ஆடை செலக்ட் செய்யத்தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தது அந்த ஷோ ரூமில். இவன் உடைகளுக்கு அடித்துக் கொண்டிருந்த கமெண்டுகளைக் கேட்டு இவனிடம் அபயம் புகுந்தது. இவனும் அவளிடம் அவர் நிறம்,உயரம்,குண்டா,ஒல்லியா, தொப்பையா, வழுக்கையா,
சுருள் முடியா, கண்ணாடி போட்டிருப்பாரா என மச்சத்தை தவிர எல்லா விபரத்தையும் கேட்டு ஒரு செட் எடுத்துக் கொடுத்திருக்கிறான். இலவச இணைப்பாக தன் நம்பரையும் கொடுத்திருக்கிறான்.

இரண்டு நாளில் அவளிடமிருந்து போன். அவள் தந்தை உடையைப் போட்டுப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் விட்டாராம். காதல் கண்ணீரில் தான் முடியக் கூடாது. ஆரம்பிக்கலாம். அதுவும் ஆனந்தக் கண்ணீரில்.தப்பில்லை.

துணைவி சிக்கியும் துணி சிக்கவில்லை அவனுக்கு. ஒரு முறை மும்பை போன போது கூட அந்த சட்டையை தேடி சலித்து வந்தான்.

இரண்டு வாரம் கழித்து அவள் பிறந்த நாள் வருகிறது, என பரிசுப் பொருள் தேடி சேகரிக்க ஆரம்பித்தான். எங்கள் அறையே கிப்ட் ஷாப்பாக மாறிக் கொண்டிருந்தது.

பிறந்த நாளுக்கு இரு நாள் முன்னால் அதே ஆலா பிளீச் சிரிப்புடன் வந்தான். என்னடா புரமோஷனா? என்றேன். இல்லடா சட்ட சிக்கிடுச்சு என்றான். அவ பிறந்த நாளுக்குத்தான் போடனும்னு இருந்திருக்கு என்றான்.

நாளைக்கு செங்கல்பட்டு ஏரியா. முடிஞ்சு சாயங்காலம் வந்ததும் பேசியல், அப்படியே தூங்கிட்டு பிரெஷா இந்த சட்டையைப் போட்டுக்கிட்டு போனா ”என் ராஜகுமாரனே” அப்படீம்பா என்று லயித்தான்.

மாலை அலுவலத்திலிருந்து லேட்டாகத்தான் திரும்ப முடிந்தது. அரவிந்த் இருண்டு போன முகத்தோடு உட்கார்ந்திருந்தான். அந்த சட்டை கசக்கி வீசப்பட்டிருந்தது.

என்னடா ஆச்சு? என்றவுடன் புலம்பினான்.

இந்த சட்டையை அங்க ஒரு ஸ்கூல்ல யூனிபார்மா வச்சிருக்காங்கடா என்று.

November 08, 2009

தமிழ்சினிமாவில் பெண்ணியம் பகுதி-2

எண்ணிக்கையளவில் நடுத்தர குடும்பத்து பெண்களின் பிரச்சினைகளை தமிழ்சினிமாவில் அதிகம் பேசியவர் பாலசந்தர் தான்.

நடுத்தர வர்க்க பொருளாதார பிரச்சினைகள் (நீர்க்குமிழி, எதிர் நீச்சல் ),

சமூகப் பிரச்சினைகள் (வறுமையின் நிறம் சிகப்பு, தப்புத் தாளங்கள்,தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை
அச்சமில்லை, உன்னால் முடியும் தம்பி, வானமே எல்லை)

காதல் (மரோ சரித்ரா, சொலத்தான் நினைக்கிறேன், நினைத்தாலே இனிக்கும்,புன்னகை மன்னன்,அழகன், டூயட்..),

நகைச்சுவை (பாமா விஜயம்,அனுபவி ராஜா அனுபவி, தில்லு முல்லு,பொய்க்கால் குதிரை),

ரொமாண்டிக் வகையில் நான் அவன் இல்லை, மன்மத லீலை, மனித உறவுகளின் தீவிர குழப்பத்தில் அபூரவ ராகங்கள், மூன்று முடிச்சு என அவர் கை வைக்காத துறைகள் இல்லை.

நாம் இந்தத் தொடரில் பார்க்கப் போவது அவர் பெண்ணியத்தை கையாண்ட விதம் மட்டுமே. அதற்கு நாம் எடுத்துக் கொள்ளப்போவது அவர் பெண்ணியத்தை அடிப்படையாக வைத்து எடுத்த படங்களை மட்டுமே.

1. இரு கோடுகள்
2.தாமரை நெஞ்சம்
3.அரங்கேற்றம்
4.அவள் ஒரு தொடர்கதை
5. அவர்கள்
6. நிழல் நிஜமாகிறது
7. 47 நாட்கள்
8.கல்யாண அகதிகள்
9. அக்னி சாட்சி
10. சிந்து பைரவி
11. மனதில் உறுதி வேண்டும்
12. புதுப் புது அர்த்தங்கள்
13. ஒரு வீடு இரு வாசல்
14. கல்கி
15. பார்த்தாலே பரவசம்.

இரு கோடுகள் படத்தில் ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி காதலிக்கிறார்கள். காசியில்
திருமணம் செய்கிறார்கள்.ஜெமினி வீட்டார் நிர்ப்பந்தம் காரணமாக அவர் சென்னை வருகிறார். அங்கே ஜெயந்தியை திருமணம் செய்கிறார். கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றுகிறார். சௌகார் ஐ ஏ எஸ் தேர்வு பெற்று அந்த அலுவலகத்திற்கே கலெக்டராக வருகிறார். வந்து ஜெமினியுடன் வாழ வேண்டுமென பிரயத்தனப் படுகிறார், புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் எனக்கே என்று கொலுவில் பாடு மளவுக்கு. இது அப்பட்டமான ஆணாதிக்கப் பிரதி. கலெக்டரே ஆனாலும் அவள் தாலிக்கு மரியாதை செய்ய வேண்டும் என்பது மாதிரியான செய்தியே பெண்களைச் சென்றடைந்தது.

சிந்து பைரவியில் பாடகர் சிவகுமாருக்கு தன் மனைவி சுலக்‌ஷனாவுக்கு இசை பற்றி தெரியவில்லை என வருத்தம். இசையைப் பற்றி பகிர சுஹாசினி வருகிறார்.படுக்கையையும் பகிர்கிறார். சுலக்‌ஷனாவுக்கு இது பற்றி தெரிய வந்ததும் அவர்களுக்கு திருமணம் செய்ய வைக்க முனைகிறார். சுஹாசினியோ தனக்குப் பிறந்த குழந்தையை பரிசாக கொடுத்து விட்டுப் போகிறார். இதில் ஒரு கிளைக்கதை, சுஹாசினியின் ஒரிஜினல் பெற்றோர், சிவகுமாருக்கு நண்பர்கள். திருமணத்துக்கு முன் உறவின் காரணமாகப் பிறந்தவர்
சுஹாசினி. அதனால் அனாதை ஆசிரமத்தில் விட்டு விடுகிறார் சுஹாசினியின் தாய். உண்மை தெரிந்தும் குடும்ப அமைதி கெடும் என குடும்பத்தில் சேர்க்க மறுக்கிறார் சுஹாசினியின் தாய்.

இந்தப் படம் சொல்ல வருவது என்ன? ஒரு ஆண் தனக்கு தேவையென்றால் இன்னொரு பெண்ணிடம் உறவு கொள்ளலாம். அதை மனைவி ஏற்றுக் கொள்ள வேண்டும்.சரி பெண் இப்படிச் செய்யலாமா? தன் ரசனைக்கு ஏற்ப?

கணவருக்கே குழந்தையைப் பெற்றிருந்தாலும் குடும்ப அமைதி கெடாமல் இருக்க அவளை ஏற்றுக் கொள்ளக் கூடாது.

இந்த செய்திகள் தான் மக்களைச் சென்றடைந்தன இந்தப் படத்தில்.

புதுப் புது அர்த்தங்கள்

பாடகன் (ரகுமான்)மீது ஆசைப் படுகிறாள் பணக்காரப் பெண்(கீதா). ஓவர் பொசஷிவ் காரணமாக சந்தேகப் படுகிறாள். அவன் ஓடி விடுகிறான். அங்கே கணவனால் பாதிக்கப் பட்ட பெண்ணுடன் (சித்தாரா)காதல். இங்கே பணக்காரப் பெண்ணுக்கு இன்னொரு கிரிக்கெட் வீரனுடன் மணம் முடிக்க ஏற்பாடு ஆகிறது. கிரிக்கெட் வீரனுக்கும், கீதா வீட்டு பணிப் பெண்ணுக்கும் காதல். திருமண செய்தி கேட்டு அவள் தற்கொலை செய்து கொள்கிறாள். கீதாவுக்கு பைத்தியம் பிடிக்கிறது. கணவனை கொடுமைப் படுத்தியது தவறு என மனச் சிதைவு கொள்கிறாள். அங்கே சித்தாராவின் கணவன் விபத்தில் சிக்கி கலை இழக்கிறான். இயக்குநர் படத்தில் வரும் மற்ற பாத்திரங்களை பேச விட்டு ரகுமான் - சித்தாரா ஜோடிக்கான முடிவவைச் சொல்கிறார். கல்யாணம் புனிதமானது. அவங்க அவங்க வீட்டுக்கு சமத்தா திரும்பிப் போங்க என்று.

சரி. இதில் ரகுமான் கேசைக் கூட விட்டு விடலாம். தன்னை விபச்சார விடுதி அளவுக்கு தள்ளிய கணவனுக்கு ஏன் சித்தாரா சேவை செய்யப் போக வேண்டும்?

கல்கி

ஒரு சாடிஸ்ட் கணவனால் பாதிக்கப் படும் இரு மனைவிகள். அவனைத் திருத்த நினைக்கிறாள் பெண்ணிய புதுமைப் பெண் கல்கி.அவளை ஒருவன் காதலித்துக் கொண்டு இருக்கிறான். ஆனாலும் பெண்களைக் கொடுமைப் படுத்துவனை பழைவாங்க வேண்டுமே? அவனுக்கு மூன்றாவது மனைவியாகி, கர்ப்பமாக இருக்கும் போது பல டார்ச்சர் செய்து அவனைப் பழிவாங்குகிறாள். எந்த லாஜிக்காலும் ஜீரணிக்க முடியாத ஒன்று. பெண்ணியம் என்றால் என்னவென்று ஒரு பெண்ணுக்கு தெரியாவிட்டாலும் பரவாயில்லை.அரைகுறையாய் தெரிந்து வைத்திருப்பதுதான் அதிக ஆபத்து. என்ற கருத்தை மட்டும் நான் இதில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.

பார்த்தாலே பரவசம்

தன் கணவனுக்கு (மாதவன்) இன்னொரு பெண்ணுடன் உறவு இருந்து குழந்தை இருக்கிறது என்று தெரிய வந்தவுடன் பிரிகிறாள் மனைவி (சிம்ரன்). ஒரு நடனக் கலைஞனை சந்திக்கிறாள் (ராகவா லாரன்ஸ்)தன் கணவன் மற்றொரு பெண்ணை (சினேகா) திருமணம் செய்யப் போகிறான் என கேள்விப்பட்டு லாரன்ஸை திருமணம் செய்ய நினைக்கிறாள். ஆனால் பல திருப்பங்கள் ஏற்பட்டு சிம்ரன்,மாதவனுடனே இணைகிறாள்.

இந்தப் படத்தை பார்த்து யாரும் டென்சன் ஆகாமல் இருந்தால் அவருக்கு மிஸ்டர் கூல் பட்டத்தைக் கொடுக்கலாம். மாதவனுடன் உறவு கொண்ட பெண் (ராதிகா சௌத்ரி) எதற்கு மெனக்கெட்டு தன் மகனைக் கூப்பிட்டுக் கொண்டு வந்து அதை சொல்லுகிறாள்? பல வருடம் கழித்து? சரி கணவனைப் பழிவாங்க இன்னொரு திருமணம் தான் மாற்றா?.

இதெல்லாம் பரவாயில்லை. லாரன்ஸின் குடும்பத்தை கறுப்பு குடும்பம் என்று சித்தரித்திருப்பார்கள்.எல்லோருக்கும் கறுப்பு மை தடவி. வடிவுக்கரசிக்கு கறுப்பு மை தடவி, அவர் குடிப்பது போல் காட்டி,மற்ற ஜாதியினர் இப்படித்தான் என்பது போல் பாலசந்தர் தன் வக்கிரத்தை வெளிப்படுத்தியிருப்பார். யாருமே இந்த வக்கிரத்தை கண்டிக்கவில்லை.


47 நாட்கள், ஒரு வீடு இரு வாசல் ஆகியவை ஓகே.
அரங்கேற்றம்,அவள் ஒரு தொடர்கதை, மனதில் உறுதி வேண்டும் மூன்றுமே குடும்பத்தில் உள்ள தம்பி,தங்கைகளுக்காக அக்கா பாடுபடுவது. மூன்றிலுமே அவர்கள் தங்கள் வாழ்க்கையை,காதலை பெரிதாக எடுத்துக் கொள்ளாத பாத்திரங்கள். (அரங்கேற்றத்தில் பாலியல் தொழிலாளி). இந்தப் படங்களையும் அவர்கள், நிழல் நிஜமாகிறது போன்றவற்றைப் பற்றியும் அடுத்த பகுதியில் பார்ப்போம்.

தமிழ்சினிமாவில் பெண்ணியம் - பகுதி 1

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பத்திரிக்கையில் கார்ல் மார்க்ஸ்ஸின் மூலதனம் பற்றி ஒரு நகைச்சுவை வெளிவந்திருந்தது. "மூலதனத்தை தமிழ்நாட்டில் படித்தவர்கள் நான்கு பேர் தான். இருவர் அதை மொழிபெயர்த்தவர்கள், இருவர் அதை ப்ரூப் ரீடிங் செய்தவர்கள் என்று. அதைப் போலத்தான் தமிழ்நாட்டில் பெண்ணியமும். அதை முழுதாக அறிந்தவர்கள் எத்த்னை பேர் என்பதை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

அன்பே சிவம் படத்தில் ஒரு வசனம் வரும். "கம்யூனிசம் என்பது ஒரு உணர்வு. அது கார்ல் மார்க்ஸ் சொல்லும் முன்னரேயும் பலருக்கு இருந்திருக்கிறது". ஆம் கார்ல் மர்க்ஸ்ஸை தெரியாதவர்களுக்கும் கூட கம்யூனிஸ சிந்தனை வந்து கொண்டுதான் இருக்கும். அது ஒரு உணர்வு. அதுபோலத்தான் பெண்ணியமும். ஷபனா ஆஸ்மி, தீபா மேத்தா, பெமினா போல பெண்ணியத்தைக் குறிக்கும் எந்த குறியீடுகளும் தெரியாமலேயே பெண்ணிய உணர்வுடன் வாழும் ப்லர் இருக்கிறார்கள். ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், கஞ்சி போட்ட காட்டன் சாரி, ஆபரணங்கள் அணியாமை தான் பெண்ணியம் என்று ஒரு கருதுகோள் சில ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது. இன்று அதில் இருந்து சில அடி தூரம் பெண்ணிய கருத்துக்கள் முன்னேறி வந்துள்ளன.

தமிழ்நாட்டிலிருக்கும் பெண்ணியவாதிகளுக்கு முழு முதல் எதிரி யாரென்று பார்த்தோமானால் அது எழுத்தாளர் ரமணி சந்திரன் தான். (கவுண்டமணி : அப்படீன்னா ஆதவன், நாஞ்சில் நாடனையெல்லாம் என்னன்னு சொல்லுவீங்க)

ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறைதானே என்பதுதான் இவரது எல்லா நாவல்களின் யு எஸ் பி யும். பாத்திரப் பெயரும், களமும் தான் மாறும். இந்த லட்சணத்தில் இவை சிடிக்களாக வேறு வெளிவருகிறதாம். வாசகியர் சமைக்கும் போது, துணி துவைக்கும் போது கேட்டுக் கொண்டே வேலை செய்யலாமாம். வெளங்கிடும் அடுத்த தலைமுறை. இதில் இன்னொரு காமெடி இதில் வரும் பகுதிகளை யாரும் மற்றவற்றில் பயன் படுத்தக் கூடாதாம். நீங்களே முதல் கதையை வச்சுத்தானே மத்த எல்லாத்தையும் எழுதிட்டு வர்றீங்க? உங்களுக்கு இது அப்பிளிகபில் இல்லையா?

சரி நம்ம தமிழ் சினிமாவுக்கு வருவோம். பெரிய நடிகர்கள் நடிச்ச படங்களை விட்டுடுவோம். அதில பொண்ணுன்னா இப்படி இருக்கணும் அப்பிடி இருக்கணும்னு பல டெபனிஷன்லாம் வரும். அதில பெண்ணியக் கருத்துக்கள தேடுறது டைம் வேஸ்ட். நாம பெண்ணியத்தை மையமா வச்சு எடுத்த படங்களை மட்டும் பார்ப்போம்.

இயக்குநர் கே சுப்ரமணியத்தின் தியாக பூமி, வீணை பாலச்சந்தரின் அந்தநாள், ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள், ருத்ரய்யாவின் அவள் அப்படித்தான், சேதுமாதவனின் மறு பக்கம், பாலு மகேந்திராவின் மறுபடியும், சிங்கீதம் சீனிவாசராவின் மகளிர் மட்டும் என பல படங்களில் பெண்ணியம் சிறப்பாக சித்தரிக்கப்பட்டு இருக்கும்.

ஆர் சி சக்தியின் சிறை (அனுராதா ரமணன் கதை) , கே பாலசந்தரின் கல்கி (இவர் பட பெண்ணிய கொடுமைகளை தனியா பார்ப்போம்), மதுமிதாவின் வல்லமை தாராயோ போன்ற பல படங்கள் பெண்ணியத்தின் அபத்தச் சித்தரிப்புக்களுக்கு உதாரணம்.

தற்போதைய இயக்குநர்களில் பெண்ணியத்தைப் புரிந்து படம் எடுப்பவர்கள் என்று பார்த்தால் ராதா மோகனை சொல்லலாம். அவரின் அழகிய தீயே, மொழி,அபியும் நானும் என எல்லாமே பெண்ணிய கருத்துக்களை அழகாக சொன்ன படங்கள்.

அழகிய தீயே

தன் கொள்கைகளுக்காக வசதியான வாழ்வைத் துறந்து வரும் நாயகி, சூழ்நிலை காரணமாக இன்னொரு ஆணுடன் தங்க நேரிடுகிறது. அவனை வெறுக்கிறாள். ஆனால் நட்பாகிறாள். எப்போது? அவன் நாம் இருவரும் சம உரிமையுடன் நட்பாக இருப்போம். உன்னிடமிருந்து நான் சிலவற்றைக் கற்றுக்கொள்கிறேன் என கரம் நீட்டும் போது. படத்தின் இறுதிவரை அவள் நிமிர்ந்தே நிற்கிறாள். நீ யில்லாமல் நானில்லை என மீன்டும் அவன் கரம் நீளும் போது அவனை ஏற்றுக்கொள்கிறாள். தமிழ்சினிமா சித்தரித்த ஆளுமை உடைய பெண்பாத்திரங்களில் இது நிச்சயம் அடக்கம்.

மொழி

இதை உடல் ஊனம் இருந்தாலும் கம்பீரமாக இருக்கும் மனித ஆளுமை என்றும் கொள்ளலாம். ஆளுமையுடைய பெண் கதாபாத்திரம் என்றும் கருதிக்கொள்ளலாம். இதில் வரும் முகம் தெரியாத பிரகாஷ் ராஜின் அம்மா கூட பெண்ணியத்தை உணர்ந்தவராக சித்தரிப்பு இருக்கும். தன் மகன் ஒரு விதவையை திருமணம் செய்து கொள்ளப் போவதாக சொன்னவுடன் இன்னைக்குதான் நான் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று அந்தப் பாத்திரம் சொல்லும்.

அபியும் நானும்

15 வய்துப் பெண் சொல்லும் "டாடி ஐ நோ வாட் ஐ யாம் டூயிங்" வசனமும் சரி, அம்மா வாக வரும் ஐஸ்வரியா எதையும் எளிதாக எடுத்துக் கொள்வதாகட்டும் பார்க்கும் அனைவருக்கும் ஒரு செய்தியைக் கடத்துகிறது.

மற்ற இயக்குநர்களைப் போல் இல்லாமல் நோ நான்சென்ஸ் பெண்ணிய கேரக்டர்களை அதிகம் உலவ விட்டவர் ராதாமோகன் தான் (இந்த குறுகிய காலத்தில்). இனி விசு டைப், வி சேகர் டைப், பாலசந்தர் டைப் பெண்ணியங்கள் எல்லாம் அடுத்த பகுதியில் பார்ப்போம்.

October 25, 2009

தமிழ்சினிமாவில் மீனவர்கள்

உலகின் பாரம்பரியத் தொழில்கள் என்றால் நமக்கு உடனே நினைவுக்கு வருவது உழவும், நெசவும். அதற்கு அடுத்ததாகத்தான் நமக்கு மீன்பிடித் தொழில் ஞாபகத்துக்கு வரும். ஆனால் உழவுக்கும் நெசவுக்கும் முன்னரே கூட இந்த தொழில் நடைபெற்றிருக்கக் கூடும். தமிழ்நாட்டில் சென்னை, கடலூர்,தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இத்தொழில் சிறப்பாக நடை பெற்று வருகிறது.

உழவுத் தொழிலைப் பற்றி தமிழ் சினிமா கருத்தியல் ரீதியாக என்ன சொல்லி இருக்கிறது? என்று பார்த்தால் நமக்கு மிகப் பெரிய ஏமாற்றம் தான் கிடைக்கும். எம்ஜியாரின் விவசாயி முதல் தற்காலத்திய படங்கள் வரை விவசாயத்தை ஒரு பேக் ட்ராப்பாக மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளன. விவசாயிகள் கூட்டுறவாக செயல் படவேண்டும், பூச்சிக் கொல்லிகள் இல்லாமல் இயற்கை விவசாயம் செய்ய வேண்டும், காவிரி பிரச்சினை (ஒரு படம் எடுக்கப்பட்டது, வெளிவரவில்லை) என்பது போன்ற எந்தக் கருத்தையும் ஆணித்தரமாகச் சொல்லாமல் மேம்போக்காக மட்டுமே காட்டி வந்துள்ளன.

நெசவைப் பற்றி இன்னும் மோசம். இப்போதுதான் ஒரு காஞ்சிவரம் வந்திருக்கிறது. நெசவைத் தவிர அதன் உப தொழில்களான சாயப் பட்டறை போன்றவற்றைப் பற்றிய பதிவுகள் தமிழ்சினிமாவில் இல்லை. ஸ்ட்ரைக் நடக்கும் காட்சி, அதன்மூலம் ஒரு ஹீரோயிஸக் காட்சிக்கு மட்டுமே நெசவு ஆலைகள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. அது மாதிரியான ஸ்பின்னிங் மில்களில் தொழிலாளர்களுக்கு ஏற்படும் நுரையீரல் சம்பந்தமான வியாதிகள் போன்றவற்றை ஒரு வசனமாகக் கூட காட்டியதில்லை நம் சினிமா. நமக்குத் தெரிந்ததெல்லாம் போனஸ் பிரச்சினை மட்டுமே.

நெசவுத் தொழிலில் சம்பந்தமான படங்களில் வீரம், ஈரம் மற்றும் கதைக்குத் தேவையான சம்பவங்கள் குறைவு என்று சொன்னாலும் அதற்கெல்லாம் பஞ்சமேயில்லாத மீனவர் வாழ்க்கையையாவது நம் சினிமா ஒழுங்காக பதிவு செய்திருக்கிறதா என்றால் அதிலும் ஏமாற்றமே.

படகோட்டி (எம்ஜியார்), தியாகம் (சிவாஜி), கடல்மீன்கள் (கமல்ஹாசன்), சின்னவர், கட்டுமரக்காரன் (பிரபு), கடலோரக் கவிதைகள் (சத்யராஜ்), கடல் பூக்கள் (முரளி, மனோஜ்), செம்பருத்தி (ராதாரவி, மன்சூர் அலிகான்), நிலாவே வா (விஜய்), சிட்டிசன் (அஜீத்) என பல படங்களில் பலர் மீனவர் வேடத்திலோ அல்லது மீனவக் கிராமங்களில் வாழ்வது போன்றோ காட்சியமைப்புகள் உள்ளன.

பாரதிராஜாவின் கடலோரக் கவிதைகளும், கடல் பூக்களும் வெங்கடேசின் நிலாவே வாவும் தென் தமிழக மீனவ கிராமத்தை கதைக்களமாக கொண்ட படங்கள். சிட்டிசனை டெல்டா மாவட்டங்களில் இருந்து கடலூர் மாவட்டம் வரையில் உள்ள மீன் பிடிப் பகுதிகளில் ஒன்று என்பது போல் (அத்திப்பட்டி) சொல்லி இருப்பார்கள். சின்னவர், கட்டுமரக்காரன் போன்றவை சுத்தமான மைய நீரோடைத் தமிழை பேசும் படங்கள்.

இதில் என்ன பிரச்சினை? சென்னை காசிமேடு, ராயபுரம் மக்கள் பேசும் மீனவ பாஷைக்கும், கடலூர் தேவனாங்குப்பம் பகுதி பாஷைக்கும், கன்னியாகுமரி பாஷைக்கும் வேறு பாடு உண்டு. கன்னியாகுமரி மீனவர்களின் பாஷை ஓரளவுக்கு நிலாவே வா படத்தில் காட்டியிருப்பார்கள். ஆனால் மற்ற படங்களில் அதைப் பற்றிய எந்த பிரக்ஞையும் இருக்காது.

படகோட்டியில் எம்ஜியாரும், சரோஜாதேவியும் அன்பேவா வில் பேசியது போலவேதான் பேசுவார்கள். தியாகம் படத்தில் சிவாஜியும், கடல் மீன்களில் கமலும் அப்படித்தான். கடல் பூக்கள் திரைப்படத்தில் முரளி ஓரளவு முயற்சித்திருப்பார்.

சரி பாஷையை விட்டுவிடுவோம். வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறதா? மீனுக்கு வியாபாரிகள் விலை கொடுக்க மாட்டேன் என்கிறார்கள், மீனவர்களின் குடிப்பழக்கம், அவர்களின் கோபம் ஆகியவையே மீண்டும் மீண்டும் பதிவு செய்யப் படுகின்றன. சில படங்களில் மட்டும் எந்திர படகுகளால் கட்டுமர மீனவர்கள் பாதிக்கப் படுகிறார்கள் போன்ற வசனங்கள் இடம் பெற்றுள்ளன.

இது மட்டும் தானா, மீனவர்களின் பிரச்சினை? கச்சத்தீவு, இலங்கை ராணுவ அத்துமீறல்கள் போன்றவை பதிவு செய்யப் பட்டுள்ளனவா? எப்படி முடியும்? சமீபத்திய பேராண்மை மிகச் சிறந்த உதாரணம், மத்திய அரசின் சென்சார் போர்டு எப்படி செயல்படும் என்பதற்கு. படித்து முன்னுக்கு வரும் பழங்குடியினர் மீது மற்ற முன்னேறிய ஜாதியினர் காட்டும் குரோதத்தை பல வசனங்களின் மூலம் சித்தரித்திருந்தார்கள். அவையெல்லாம் வெட்டுப் பட்டு விட்டன. பாவம் ஆப்பரேட்டரின் குடும்பத்தாருக்கும் இதனால் பலத்த திட்டு.

மீன்கள் இனப் பெருக்கம் செய்யம் காலங்களில் மீன் பிடிக்க நிலவும் கட்டுப்பாடுகள், அந்த நாட்களீல் மீனவர்கள் பொருளாதார பிரச்சினையை எங்கணம் சமாளிக்கிறார்கள்?, பவழப் பாறைகள் அழிப்பு, வெடி வைத்து மீன் பிடிக்கும் ஆபத்தான போக்கு, மண்டைக்காடு கலவரம், கன்னியாகுமரி,தூத்துக்குடி,சென்னை மாவட்ட மீனவ அரசியல் போன்ற எதுவுமே ஒரு சிங்கிள் ஷாட்டில் கூட பதிவு செய்யப் படவில்லை.

புகழ்பெற்ற செம்மீன் படத்திற்கு பின்னால் தகழி சிவசங்கரனின் நாவல் இருந்தது. வண்ண நிலவனின் கடல் புறத்தில், நரசய்யாவின் பல நூல்களில் மீனவக் கதைகளும், பிரச்சினைகளும் கொட்டிக் கிடக்கின்றன. இயற்கை படத்தில் மாலுமிகளின் ஒரு பக்கத்தை காட்டிய ஜனநாதன் போன்றவர்கள் மனது வைத்தால் மீனவர்களின் உண்மை வாழ்க்கையை நாம் திரையில் காணலாம்.

October 11, 2009

1976 ஆம் ஆண்டு திரைப்படங்கள் – ஒரு பார்வை

சுதந்திரத்திற்க்குப் பின் தமிழகத்தில் நடைபெற்ற முக்கிய அரசியல் நிகழ்வுகளான 65ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம், ஜூன் 75 முதல் மார்ச் 77 வரை அமலில் இருந்த அவசர நிலை பிரகடனம், அதன் விளைவுகள் ஆகியவை தமிழ்சினிமாவில் எங்காவது ஆவணப் படுத்தப் பட்டிருக்கிறதா? எனத் தேடிப்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. (இருவர் திரைப்படம் இதை ஊறுகாய் போலவே தொட்டுச் சென்றிருந்தது).

விடுதலைக்குப் பின்னர் தமிழகத்தில் ஆளுமை கொண்ட தலைவர்களில் பெரியார் மற்றும் காமராஜரை வைத்து மட்டுமே திரைப்படங்கள் வந்துள்ளன. வ உ சி, பாரதியார் பற்றிய படங்கள் வந்திருந்தாலும் அவர்கள் சுதந்திரத்திற்க்கு முன்னரே மறைந்தவர்கள். அண்ணாதுரையின் நூற்றாண்டு விழாவில் அவரைப் பற்றிய திரைப்படம் ஒன்றினை திமுகவோ அதிமுகவோ தயாரித்திருக்கலாம்.

இணையத்தில் அண்ணா என்று தேடினாலே ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை அன்னா கோர்னிக்காவின் படங்களும்,செய்திகளும் தான் வருகின்றன என்ற ஆதங்கத்தில் தனியார் சிலர் அண்ணா பற்றிய ஆவணப் படத்தை தயாரித்தனர். தற்போது அரசும் ஒரு ஆவணப்படத்தை தயாரித்தது. ஆனால் அதை பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்ல எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஒருவேளை கருணாநிதி பற்றி படமெடுத்தால் இந்தி எதிர்ப்பும், ஸ்டாலின் பற்றி படமெடுத்தால் மிசாவும் ஆவணப்படுத்தப் படலாம்.

அவசரநிலை விலக்கப்பட்டவுடன் ஜனதா கட்சியின் ஆட்சி சில ஆண்டுகள் நடைபெற்ற நிலையில் கூட, மிசா கொடுமைகளைப் பற்றிய எந்த பதிவும் தமிழ்படங்களில் அப்போது வரவில்லையே என நான் நினைத்தது உண்டு. பின் செல்வமணி இயக்கிய குற்றப்பத்திரிக்கை படம் பாஜக ஆட்சியில் கூட பல ட்ரிப்யூனல்களில் பந்தாடப்பட்டதைப் பார்த்த போதுதான் உண்மை நிலவரம் விளங்கியது. இந்திரன்கள் மாறினாலும் இந்திராணி மாறுவதில்லையே.

1976 ஆம் ஆண்டு அவசரநிலை உச்சத்தில் இருந்த ஆண்டு. அரசுக்கு எதிராக யாரும் தமிழ்சினிமாவில் தும்மக்கூட இல்லை. எனவே பெரும்பாலும் அரசியல் கலப்பில்லாத பொழுது போக்கு படங்களே வந்தன. அதில் சில படங்களைப் பார்ப்போம்.

அன்னக்கிளி

இளையராஜா அறிமுகமான படம். பஞ்சு அருணாசலம் தயாரிப்பில் சிவகுமார், சுஜாதா, தேங்காய் சீனிவாசன் நடிதத படம். அறிமுகமாகி அடுத்த 16 ஆண்டுகளுக்கு தனிகாட்டு ராஜாவாய் விளங்கியவருக்கு ஆரம்பமே அட்டகாசம் தான். ஆனால் அவரது இசைக்கேற்ப காட்சிகளை பல இயக்குநர்கள் அமைக்கவில்லை. அதனால்தான் அந்தப் பாடல்களை கேட்க முடிந்தாலும் பாடல் காட்சிகளை பார்க்க முடியவில்லை.

மன்மதலீலை

கமலுக்கு காதல் இளவரசன் என்னும் பட்டத்துக்கு அதி பயங்கர அடித்தளம் போட்ட படம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கமல் படமா? அசிங்கமா இருக்கும் பார்க்கக்கூடாது என தடை உத்தரவு அளிக்க ஒரு காரணமாய் இருந்த படம். பத்தாண்டுகள் கழித்தும் ரஜினி-கமல் ரசிகர் மோதலில், கமலின் மீது கடைசி பிரம்மாஸ்திரமாக உபயோகிக்கப்படும் பொம்பளைப் பொறுக்கி என்னும் வசவுக்கு ஒரு காரணமாய் இருந்த படம்.
நான் கல்லூரியில் படித்த நாலு ஆண்டுகளும் (91-95) இந்தப் படம் ஒரு குறிப்பிட்ட தியேட்டரில் ரீ ரிலிஸ் ஆவதும், மாணவர்கள் அனைவரும் இரண்டாம் ஆட்டத்திற்க்கு சேர்ந்து செல்வதும் சம்பிரதாயமாக நடந்த ஒன்று என்பதில் இருந்தே இந்தப் படத்தின் பொடென்சியலை அறியலாம். இப்போதும் இது ஜீவன்,ஜீவா மற்றும் சிம்புவுக்கு ஏற்ற ரீமேக் படம்.

கே பாலசந்தர் இயக்கத்தில், எம் எஸ் விஸ்வனாதன் இசையில், கமல்,ஆலம்,ஹேமா,ஒய் ஜி பி,ஒய் ஜி எம், ஒய் விஜயா,ராதாரவி ஆகியோர் நடித்த படம். கமல் திருமணத்துக்குப் பின்னும் திருந்தாமல் உமனைசராக அலைகிறார். இளாம்பெண்கள் மட்டுமின்றி, அறிமுகமானவர்களின் மனைவிகளையும் விட்டு வைப்பதில்லை. இதைக்கண்டு வருந்தும் அவரது மனைவி விவகாரத்துக்கு மனு செய்கிறார். பிரிந்திரிக்கும் நேரத்தில் தந்திரமாக வந்து அவரை கருத்தரிக்க செய்துவிடுகிறார் கமல். ஆனால் பின்னர் நடக்கும் சில சம்பவங்களால் மனம் திருந்தி விடுகிறார்.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம், ஹலோ மைடியர் ராங் நம்பர், நாதமெனும் கோவிலிலே போன்ற அருமையான பாடல்கள் நிறைந்த படம்.

உணர்ச்சிகள்

கமல் அரங்கேற்றம் போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருந்த போது உருவாக்கிய கதை. இதை தன் ஆப்த நண்பர் ஆர் சி சக்திக்கு இயக்க கொடுத்தார். இந்தப் படத்தில் கமலின் வசனப் பங்களிப்பும் உண்டு. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் கமலின் எல்டாம்ஸ் ரோடு (வரும் நாட்களில் டாக்டர் கமல்ஹாசன் சாலை என மாறப் போகும்) இல்லத்திலேயே எடுக்கப்பட்டது. அதன்படி இந்தப் படம் ஸ்டியோவுக்குள் இருந்த கேமிராவை அவுட்டோருக்கு ஓரளவு மாற்றிய படம் எனலாம். பாரதிராஜா அடுத்த ஆண்டில் 16 வயதினிலே மூலம் கிராமத்துக்கே அதைத் தூக்கிச் சென்றுவிட்டார்.
இந்தப் படத்துக்கு இசை அமைத்தவர் பிரபல கேரள இசை அமைப்பாளார் ஷ்யாம் அவர்கள். இவர் ஆர் சி சக்தியின் அடுத்த படமான மனிதரில் இத்தனை நிறங்களா படத்துக்கும் இசை அமைத்தார். மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா என்ற அழியாப் பாடலை அந்தப் படத்தில் கொடுத்தார். ஒரு சி பி ஐ டைரி குறிப்பு, நேரறியான் சி பி ஐ போன்ற படங்களில் இவர் அமைத்த தீம் மியூசிக் மிகப் பிரபலம்.

மூன்று முடிச்சு

கமல்,ரஜினி ஸ்ரீதேவி என்னும் டிரீம் காம்பினேஷன் அமைந்த படம். கே பாலசந்தர் இயக்கம், எம் எஸ் விஸ்வனாதன் இசை. கமல்,ஸ்ரீதேவி காதலர்கள். ரஜினி கமலின் நண்பர். ஆனால் ஸ்ரீதேவியை லுக் விடுகிறார். ஸ்ரீதேவி இதை அறிந்து கமலிடம் எச்சரிக்கை செய்கிறார். கமல் நண்பனை நம்புகிறார். ஒருமுறை மூவரும் பிக்னிக் போகிறார்கள். படகு சவாரி செய்யும்போது கமல் தவறி ஏரியில் விழுந்து விட, ரஜினி காப்பாற்றாமல் பன்ச் சாங் பாடுகிறார். கமல் இறக்கிறார். ஸ்ரீதேவிக்கு மேலும் ஒரு இடியாக அவரது அக்காவுக்கு தீயில் முகம் வெந்து போகிறது.

மனைவியை இழந்த, குழந்தைகளை பராமரிக்க மணப்பெண் தேடும் ஒரு பணக்காரரை மணந்து கொள்கிறார் ஸ்ரீதேவி. அவர் யாருமல்ல ரஜினியின் தந்தை தான். பிற்பாதியில் ரஜினி, ஸ்ரீதேவி மோதல் காட்சிகள் சுவராசியம். இந்தப் படத்தில் ரஜினியின் தந்தையாக நடித்த கல்கத்தா விஸ்வனாதன் 2002ல் பாபாவிலும் ரஜினிக்கு தந்தையாக நடித்தார்.

ஆடி வெள்ளி தேடி உன்னை, வசந்த கால நதிகளிலே போன்ற அருமையான பாடல்கள் கொண்ட படம்.

நீதிக்கு தலை வணங்கு

தன் 59 வயதில் கல்லூரி மாணவனாக எம் ஜி ராமசந்திரன் நடித்த படம். இணை லதா. ஒரு விபத்தில் தன்னால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்காக பணக்கார வீட்டுப் பிள்ளை, தன் வீட்டை விட்டு அங்கு சென்று அவர்களை காப்பாற்ற கஷ்டப்படும் கதை. (தவசி படம் ஞாபகம் வருகிறதா?). அவர்களைக் காப்பாற்றும் முயற்சியாக இன்னொரு வீட்டில் பணியாளராக இருப்பார். இந்தப் பச்சைக்கிளிக்கு ஒரு செவ்வந்திப் பூவினில் என்னும் அருமையான பாடல் உண்டு. இந்தப் படத்தின் சேஸிங் காட்சிகளை படம் பிடித்தவர் காமிரா மேதை கர்ணன்.

உத்தமன்

சிவாஜிகணேசன், மஞ்சுளா நடித்த படம். காஷ்மீரில் இருவரும் சந்தித்து சண்டை போட்டுக் கொள்கிறார்கள். சிவாஜி பனிப் பிரதேசத்தில் காய்ச்சலால் குளிரில் அவதிப்பட, அவர் உடல் சூடானால் பிழைப்பார் என்னும் நிலையால் அவருக்கு ஒரு ஸ்பெசல் ட்ரீட்மெண்ட் தருகிறார் மஞ்சுளா. டிரீட்மெண்டால் சிவாஜி குணமடைய மஞ்சுளா கர்ப்பமாகிறர். சுய நினைவில்லாமல் இருந்த சிவாஜிக்கு இது தெரியாது. பின் இருவரும் தமிழ்நாடு வந்து விடுகிறார்கள். பின் மஞ்சுளாவுக்கு குழந்தை பிறந்து, வளர்ந்த பின் உண்மை தெரிந்து இருவரும் இணைகிறார்கள். படகு படகு ஆசைப் படகு என்னும் ரிதமான பாடலும் உண்டு.

துணிவே துணை

ஒரு கிராமத்தில் குற்றங்களே பல ஆண்டுகளாக நடை பெறவில்லை. அந்தக் கிராம தெய்வம் யாரையும் குற்றம் செய்யவிடாமல் பார்த்துக் கொள்கிறது. எனவே அங்குள்ள காவல் நிலையத்தை காலி செய்து விட்டார்கள் என உளவுத்துறைக்கு அறிக்கை வருகிறது. இதை நம்பாத உளவுத்துறை அந்த மர்மத்தைக் கண்டறிய அதிகாரி விஜயகுமாரை அனுப்புகிறது. அந்த ஊரில் வெளியாட்கள் தங்கினால் சாமி ஒத்துக் கொள்ளாது என்று பயமுறுத்தப் படுகிறார். தொடரும் விசித்திர சம்பவங்களால் அதிர்ச்சியிலேயே ரத்தம் கக்கி இறக்கிறார். இதனால் வருத்தமடையும் அவர் தம்பி ஜெய்சங்கர் (இவரும் அதிகாரி) துப்பறிய அந்த ஊருக்கு வருகிறார்.

அவருக்கும் அதே மாதிரியான விசித்திர சம்பவங்கள் நடக்கின்றன. ஆனால் அவர் தப்பிக்கிறார். குக்கிராமத்தில் சிக்கன் நூடுல்ஸ், பிரைட் ரைஸ் கிடைப்பதை அறிந்து வியக்கிறார். பின்னர் தான் தெரிய வருகிறது, ஒரு பெரிய கடத்தல் கூட்டம், அந்த கிராம பெரிய மனிதர்களுக்கு பணத்தாசை காட்டி தங்கள் புகலிடமாக அந்தக் கிராமத்தை பயன் படுத்துவது. பல்வேறு திருப்பங்களுக்குப் பின் ஜெய்சங்கர் கடத்தல் கூட்டத்தை பிடிக்கிறார். முதல் 45 நிமிடங்களுக்கு பரபரப்பாக செல்லும் படம், கடத்தல் கூட்டம் பிண்ணனியில் இருப்பது தெரியவந்ததும் சுருதி இறங்கி வழக்கமான வேகத்தில் செல்லத் தொடங்கி விடும். ஹெலிகாப்டர் சேசிங் போன்ற காட்சிகளும் உண்டு. ராஜ சுலோசனா, அசோகன், சுருளி ராஜன் எனப் பலரும் நடித்த படம். இயக்கம் எஸ் பி முத்துராமன்.

October 08, 2009

மயில் சாமி – ஒரு பார்வை

ஒருமுறை நாங்கள் கிரிக்கெட் லீக் மேட்சில் தோற்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தோம். பஸ்ஸ்டாப்பை நோக்கி நடக்கையில் வழக்கத்துக்கு மாறான உற்சாகம். ஏதோ நாங்கள்தான் வென்றதைப் போல ஒரு மிதப்பு.

அப்போது ஒருவர்

“ என்னப்பா ஜெயிச்சிட்டு வரும்போது கூட இவ்வளோ சிரிப்ப பார்த்ததில்ல” என்று கேட்டார்.

“ஆமா, ஈக்வல் டீம்கிட்ட தோத்தா கவலைப்படலாம். சப்பை டீம் கிட்ட தோத்தோமினா ஆத்திரப்படலாம், நம்ம விட நல்ல டீம், நல்லா பைட் பண்ணினோம் அவ்வளோதான், என அந்த அணியை சிலாகிக்கத் தொடங்கி பேச்சு வளர்ந்தது.

இதேபோலத்தான் ஒரு காலத்தில வெஸ்ட் இண்டீஸ் டீம் கூடத் தோத்தாக்கூட யாரும் கவலைப்படமாட்டாங்களாம் என பேச்சு வந்தது. உடனே அந்த பியர்சம் போர்சம் பற்றி அணியின் சீனியர் சிலாகித்தார்.

“ஆண்டி ராபர்ட்ஸ், மைக்கேல் ஹோல்டிங், ஜியோல் கார்னர், மால்கம் மார்ஷல், இப்படி இனிமே எந்த டீமுக்கும் செட் அமையாது”

அப்போது இன்னொருவர் ஆரம்பித்தார்.

“ இதே டைம்ல அங்க இன்னும் கூட நல்ல பௌலர்லாம் இருந்திருப்பாங்க. இவங்களைக் காட்டிலும் ஒரு 5% எபெக்டிவ்நெஸ் கம்மியா இருந்திருப்பாங்க”

அவங்கல்லாம் பாவம், இந்த செட்டை உடைச்சு உள்ள வரமுடியாம அப்படியே மங்கிப்போயிருப்பாங்க. இவங்க வெளியே வரும்போது அவங்க மாரல்,பார்ம் எல்லாம் காலியாயிருக்கும்.” என்று முடித்தார்.


இது கிரிக்கெட்டில் மட்டுமல்ல எல்லாத் துறைகளிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒன்று. அப்போதைய ”ஸ்டேட் ஆப் தி ஆர்ட்” திறமையை விட உச்சத்திறமை இருந்தால் வாய்ப்பு தானாகக் கிடைக்கும். ஆனால் 1% குறைவான திறமை இருந்தால் கூட வாய்ப்பு அதோகதிதான்.

தமிழ்சினிமாவில் 80களில் மூன்று காமெடி நடிகர்கள் கலக்கிக் கொண்டிருந்தார்கள். பெரிய பட்ஜெட்,பெரிய நாயகர்களின் படங்களில் ஜனகராஜ்; மீடியம் பட்ஜெட், மீடியம் ஹீரோ,கிராமிய கதையைப்பு உள்ள படங்களில் கவுண்டமணி; திமுக ஆதரவு தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள்,விஜயகாந்த்,டிஆர், ராமநாராயணன் போன்றோரது படங்களில் எஸ் எஸ் சந்திரன் என ஒரு அமைப்பு இருந்தது.

இந்த காலகட்டத்தில் அறிமுகமான காமெடி நடிகர்களால் இவர்களைத் தாண்டி பெரிய அளவில் வரமுடியவில்லை. சின்னி ஜெயந்த், சார்லி போன்றோர் கல்லூரி நாயகனின் நண்பன் போன்ற வேடங்களில் நடித்து சமாளித்துக் கொண்டிருந்தனர். 85ஆம் ஆண்டு கன்னிராசி படத்தில் தன் 20 வயதில் அறிமுகமான மயில்சாமிக்கு அதுவும் வாய்க்கவில்லை.

கன்னிராசியில், கவுண்டமணியின் வீட்டுக்கு மளிகைச்சாமான் கொண்டு வரும் சிறிய காட்சியில் அறிமுகமான இவர் பின்னர் கமலின் நட்பைப் பெற்றதால் அபூர்வ சகோதரர்கள், வெற்றிவிழா போன்ற படங்களில் சிறிய வேடம் கிடைக்கப் பெற்றார்.

95 ஆம் ஆண்டுவரையிலும் பெரிய பிரேக் கிடைக்காமல் கிக்கிரி பிக்கிரி என மிமிக்ரி பண்ணியே சமாளித்து வந்தார். 96 வாக்கில் காமெடி நடிகர்களை வைத்தே நீலக்குயில் என்னும் படம் தயாரானது. அதில் சொல்லிக் கொள்ளும் படியான வேடம். என்றாலும் படம் ஓடாததால் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

விவேக்கின் அசுர வளர்ச்சி ஆரம்பமான 2000ல் மயில்சாமிக்கும் அவரால் நல்ல வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. பெண்ணின் மனதைத் தொட்டு, கண்டேன் சீதையை (டப்பிங் படம், காமெடி டிராக் மட்டும் புதியது),பாளையத்தம்மன் போன்ற படங்களில் நல்ல காம்பினேஷன் சீன்கள் கிடைத்தன. பெண்ணின் மனதைத் தொட்டில் இலங்கைத் தமிழை சென்னைத் தமிழுக்கு மொழிபெயர்க்கும் காட்சி கலக்கலாக இருக்கும்.

பாளையத்தம்மனில் விவேக் யாகவா முனிவராகவும், மயில்சாமி டான்ஸ் சாமியார் சிவசங்கர் பாபாவாகவும் வந்து மோதும் காட்சி அசத்தலாக இருக்கும். அதில் பாபாவை இமிடேட் செய்து ஆடுவதும், விவேக்கை சிரித்தே டென்ஷன் ஆக்குவதுமாய் அசத்தியிருப்பார்.


பின் 2001ல் வெளியான தில், 12 பி ஆகிய படங்களிலும் விவேக்கின் ட்ரூப் ஆளாக வந்து மக்கள் மனதில் பதிய ஆரம்பித்தார்.

2002 ஆம் ஆண்டு மயில் சாமிக்கு திருப்புமுனையான ஆண்டு. இந்த ஆண்டு வெளியான வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் நாயகன் மனோஜுக்கு காதலுக்கு ஐடியா கொடுக்கும் முழு நீள வேடம். பெண்களில் சைக்காலஜியை விளக்குவதும், டி ராஜேந்தரை இமிடேட் செய்வதும் மக்களால் நன்கு ரசிக்கப் பட்டாலும் படத் தோல்வி இவரை பெரிய அளவுக்கு கொண்டு செல்லவில்லை.

ஆனால் சன் டிவியின் அப்பொதைய ஹிட் புரோகிராமான காமெடி டைம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு மயில் சாமிக்கு கிடைத்தது. இது தமிழ் மக்கள் அனைவரிடமும் மயில்சாமியை கொண்டு சேர்த்தது.

2003ல் வெளியான தூள், மிலிடரி, ஜெயம் போன்ற படங்களில் சொல்லிக் கொள்ளும் படியான வேடங்கள். தூளில் சந்திரபாபு நாயுடு லட்டுக்குப் பதில் ஜிலேபியை மாத்திட்டாரு காமெடியும், ஜெயம் படத்தில் அடிக்கும் டைமிங் ஜோக்குகளும் நல்ல வரவேற்பைப் பெற்றன.

இயக்குநர் பூபதி பாண்டியன் இவருக்கு தேவதையைக் கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம், மலைக்கோட்டை ஆகிய படங்களில் நல்ல வேடம் கொடுத்தார்.

இயக்குநர் சுராஜின் தலைநகரம், படிக்காதவன் படங்களிலும் நல்ல வேடம். சுந்தர் சி யின் ரெண்டு,கிரி ஆகிய படங்களிலும் நடித்து நம்மை சிரிக்க வைத்தார்.

நல்ல டைமிங் சென்ஸ் உள்ள நடிகர் மயில்சாமி. அதனால் தான் விவேக்,வடிவேல் போன்றோரும், பூபதி பாண்டியன், சுராஜ், சுந்தர் சி போன்ற நல்ல காமெடி சென்ஸ் உள்ளவர்களும் இவரை தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள்.

ஒரு காமெடி நடிகருக்குத் தேவையான டைமிங் சென்ஸ், அடுத்தவரின் வசனத்துக்கு செய்ய வேண்டிய ரியாக்‌ஷன், டயலாக் டெலிவரி என அனைத்து திறமைகளும் மயில்சாமியிடம் கொட்டிக் கிடக்கின்றன. இதை அவர் தொடர்ந்து தன் படங்களில் நிரூபித்துக் கொண்டு வருகிறார். இருந்தும் அவரால் முதல் வரிசை காமெடி நடிகராக முடியவில்லையே? ஏன்?

அறிமுகமான பொழுதில் முடியாவிட்டாலும், விவேக் வடிவேலுவின் எழுச்சிக்கு முன் ஒரு கேப் இருந்ததே, அதைப் பயன்படுத்தி முண்ணனிக்கு ஏன் அவரால் வர முடியவில்லை?

தமிழ்சினிமாவில் கமர்சியல் வேல்யு ஒரு கதாநாயகனுக்கு வர வேண்டுமென்றால் அவன் ஒரு ஆக்‌ஷன் படத்தில் நாயகனாக நடித்து வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் அவனை மக்கள் ஏற்றுக் கொண்டதாக திரைத் துறையினர் ஒத்துக் கொள்வார்கள். (சரத்குமார்- சூரியன், விஷால் – சண்டகோழி என பல உதாரணங்கள் உண்டு). அது போல ஒரு முண்ணனி காமெடி நடிகனாக வேண்டுமெனில் அவன் ஒரு படத்தில் காமெடி டிராக்கில் கலக்கியிருக்க வேண்டும்.

கவுண்டமணி முண்ணனிக்கு வந்தது பயனங்கள் முடிவதில்லை, வைதேகி காத்திருந்தாள் மூலம். வடிவேலுக்கு கண்ணாத்தாளும், நேசம் புதுசும் பெரிய லிஃப்டைக் கொடுத்தது. விவேக்குக்கு நான் பேச நினைப்பதெல்லாம் மற்றும் திருநெல்வேலி.

சரி, அது போல மயிலும் ஏதாவது படத்தில் டிராக்கில் கலக்க ஏன் முடியாமல் போனது? இத்தனைக்கும் வின்னர் பட காமெடி டிராக் எழுதிய பூபதி பாண்டியன் தொடர்ந்து வாய்ப்புக் கொடுக்கிறாரே?

விஷயம் இதுதான். ஒரு படத்தின் முழு காமெடி டிராக்கையும் கையாள ஒரு தனி பாணி இருக்க வேண்டும். கவுண்டமணி எல்லோரும் புனிதமாக நினைப்பதைக் கேள்வி கேட்பது, அலட்சியமாக யாரையும் இறக்கிப் பேசுவது, நாம் கேள்வி கேட்டு கிண்டல் செய்ய வேண்டும் என நினைப்பதை செய்வது என ஒரு பாணியை வைத்திருந்தார். வடிவேலு உதார் விட்டு அடி வாங்கும் பாணி, விவேக்குக்கு சமுதாய சட்டயர். ஆனால் மயில்சாமி தனக்கென ஏதும் தனி பாணியை வகுக்க வில்லை. இதுவே அவருக்கு முண்ணனி நகைச்சுவை நடிகனாகும் வாய்ப்பைக் கெடுதத்து.

ஆனாலும் படத்திற்க்கு மூன்று நான்கு காட்சிகள் வந்தாலும் எல்லாரையும் சிரிக்க வைத்துக் கொண்டுதான் இருக்கிறார். எல்லாத் திறமைகள் இருந்தாலும், அடுத்தவர்களை விட வேறுபடுத்தி தன்னைக் காட்டிக் கொள்ளவில்லையென்றால் பெரிய உயரத்திற்கு செல்ல முடியாது என்பதற்கு மயில்சாமி ஒரு உதாரணம்.

வரும் காலங்களில் எ கட் அபொவ் தி ரெஸ்டாக தன்னை மாற்றிக் கொண்டு உச்சத்துக்கு செல்ல மயில்சாமியை வாழ்த்துவோம்.

October 05, 2009

பத்தாண்டுகளில் 99ன் அறிமுக இயக்குநர்கள்

தமிழ்சினிமாவைப் பொறுத்த மட்டில் பல பிரபல இயக்குநர்களின் முக்கிய படங்கள் எல்லாம் அவர்கள் அறிமுகமான 10 ஆண்டுகளுக்குள்ளேயே இயக்கப்பட்டிருக்கின்றன. ஸ்ரீதர், மகேந்திரன்,துரை,பாலுமகேந்திரா,பாரதிராஜா,பாக்யராஜ்,மணிரத்னம் ஆகியோரின் முக்கிய படங்களெல்லாம் அவர்களின் 10 ஆண்டுகளுக்குள் வந்தவையே.

1999 ஆம் ஆண்டில் பல புதிய இயக்குநர்கள் நம்பிக்கையூட்டும் வகையில் அறிமுகமானார்கள். அவர்கள் இந்த தங்க பத்தாண்டில் என்ன சாதித்தார்கள்? என்று பார்ப்போம்.

சேது – பாலா

ஆண்டின் கடைசியில் வந்த முதல் ரகப் படம். விக்ரம்,சூர்யா என இரு நடிகர்கள், ஆர்யாவுக்கு ஒரு அப்பரெண்டிஷிப், கருணாஸ் என்ற காமெடி,குணச்சித்திர நடிகர், அமீர்,சசிகுமார் என்னும் பிரகாச இயக்குநர்கள் என தமிழ் திரைக்கு பாலாவிடம் இருந்து நல்ல பங்களிப்பு. இன்னும் நீராவி தீர்ந்துவிடவில்லை. இன்னும் பத்தாண்டுகளுக்கு இந்த வண்டி ஓடுமென்று எதிர்பார்க்கலாம்.


எதிரும் புதிரும் – வி சி ரமணி


தரணி என்று சொன்னால்தான் இப்போது நமக்கு பிடிபடும். திருட்டு விசிடி வெளியாகி கிட்டத்தட்ட 50 நாட்கள் கழித்து வெளியானது இந்த வீரப்ப காவியம். ஆனாலும் படம் சொல்லிக்கொள்ளும் படி ஓடி தரணிக்கு அறிமுகத்தைக் கொடுத்தது. தில்,தூள்,கில்லி என அசுர வேகத்தில் பறந்த இந்த விமானம், பங்காரம் (தெலுங்கு) படத்தால் திசை மாறி குருவியால் விபத்துக்குள்ளானது. வாழ்க்கையில் பல கஷ்டங்களைக் கண்டு மேடேறிய தரணி, மீண்டும் வருவார்.


வாலி – எஸ் ஜே சூரியா


வாய்க்கொழுப்பு நடிகராக அஜீத் அறியப்பட்ட காலத்தில் வந்த படம். இந்தப் படம் வந்து வெற்றியடைந்த 10 நாட்களில் அஜீத் சொன்னது இது

“நான் செத்தா டிவில நியூஸ் சொல்லும் போது, இந்தப் பட கிளிப்பிங்ஸ்தான் போடுவாங்க”

இதன்பின் எஸ் ஜே சூர்யா குஷி (தமிழ்,தெலுங்கு,இந்தி) இயக்கிவிட்டு, நியூ என்ற நீதிமன்றத்தால் தற்போது தடை செய்யப்பட்டிருக்கும் படத்தை இயக்கி நடித்தார். பின்னர் அ ஆ. பின் நடிகராக சில படங்கள். பாகிஸ்தான் டீம் போல திடீரென கலக்குவார் என எதிர்பார்க்கிறார்கள் தற்போது.

துள்ளாத மனமும் துள்ளும் – எழில்

விஜய்க்கு நல்ல வெற்றிப்படம். பின்னர் எழில் பிரபுதேவா, சரத்தை வைத்து இயக்கிய பெண்ணின் மனதை தொட்டு ஓரளவு வெற்றி. விவேக்குக்கு இந்தப் படம் நல்ல திருப்புமுனை என்று சொல்லலாம். அடுத்து அஜீத், ஜோதிகா காம்பினேசனில் பூவெல்லாம் உன் வாசம் தோல்வி. சமீபத்தில் ஜெயம் ரவி, பாவனா காம்பினேஷனில் வந்த தீபாவளி மியூசிக் சேனல்களுக்கு தீபாவளியாய் அமைந்தது. ஒரே பேட்டர்னில் படம் பண்ணுகிறார். கஷ்டம்தான்.


தொடரும் – ரமேஷ் கண்ணா


பல ஆண்டுகள் கே எஸ் ரவிகுமார் உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகவே இருந்து அஜீத், தேவயானி, ஹீராவை வைத்து இந்தப் படத்தை இயக்கினார். தோல்வி. பின் கே எஸ் ஆரிடமே அடைக்கலமாகி விட்டார். தீபாவளிக்கு வெளியாகப் போகும் ஆதவனில் கதை இவர் தான். கூடுதலாக இணை இயக்கமும்.

பூ மகள் ஊர்வலம் – மதுரவன்.

பிரசாந்த்,ரம்பா,லிவிங்ஸ்டன் நடிக்க ஆள் மாறாட்டக் குழப்பத்தை வைத்து எடுத்த படம். சுமார் ரகம். பின் சில ஆண்டுகள் கழித்து ராசு மதுரவன் என பெயரை மாற்றிக் கொண்டு பாண்டி, மாயாண்டி குடும்பத்தார் என்ற சுமார் ரகப் படங்கள். பெரிய நம்பிக்கை இல்லை.

கனவே கலையாதே – கௌதமன்

ககரத்தில் தொடங்கும் காதல் படங்களை எடுத்து கல்லா கட்டி வந்த சிவசக்தி பாண்டியனின் கனவைக் கலைத்த படம். முரளி,சிம்ரன் ஜோடி. பின்னர் மக்கள் தொலைக்காட்சியில் வீரப்பன் தொடரை இயக்கி நல்ல பெயரை பெற்றிருக்கிறார் கௌதமன். பெரிய திரை வாய்ப்பு மீண்டும் அமையுமா?

நீ வருவாயென – ராஜகுமாரன்.

பார்த்திபன்,தேவயானி,அஜீத் நடிப்பில் வெற்றி. ஆனால் சேதுவில் ஜெயித்த விக்ரமை எப்படியோ கவிழ்த்து விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற படத்தை எடுத்தார். இது தேவயானிக்கு மூன்று கோடி செலவில் நான் எழுதிய காதல் கடிதம் என்பது இவரின் ஸ்டேட்மெண்ட். கடிதம் எழுது ஆனா அதை ஏன் என் காசில எழுதுனே? என்று தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரி கோபப்படும் படி ஆனது பட ரிசல்ட். ஆனாலும் தேவயானி மனைவியானதால் காதலுடன் என்ற அடுத்த படமும் கிடைத்தது. தேவயானியை கவலையுடன் நிற்க வைத்தது. இப்போதும் ஒரு படம் தேவயானி தயாரிக்கப் போகிறாராம். கோலம் போட்டு கொண்டு வரும் காசை அலங்கோலப் படுத்தாமல் இருந்தால் சரி.


மானசீக காதல் - பி எஸ் ராமன்


இவர் வேறு யாருமில்லை. பழைய வெள்ளி விழா பட நடிகர் ரவி சந்திரன் தான். தன் மகன் அம்சவிர்தனுக்காக தன் சொந்தப் பெயரில் படம் இயக்கி தயாரித்தார். முடியவில்லை. தற்போது நடிப்போடு நிறுத்திக்கொண்டார்.

அன்புள்ள காதலுக்கு – மோகன்

இவரும் வெள்ளி விழா பட நடிகர் தான். இவர் எய்ட்ஸ் வந்து இறந்து விட்டதாக 98ல் ஒரு புரளி கிளம்பியது. பின் 99ல் இந்தப் படத்தை இயக்கினார். 69ல் வந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும். பின் சுட்ட பழம் ரேஞ்சுக்கு இறங்கியும் ஜெயமில்லை.


சுந்தரி நீயும் சுந்தரன் நானும் – ஏ என் ராஜகோபால்


பல ஆண்டுகள் உதவி இயக்குநராகவே இருந்து பின் பாண்டியராஜன், ஈஸ்வரி ராவ் நடிப்பில் இந்தப் படத்தை எடுத்தார். படம் சுமார். பின் எந்த தகவலும் இல்லை.

நேசம் புதுசு – வேல் முருகன் (கார்த்திக்)

ரஞ்சித்,பிரியா ராமன் இணை. வடிவேலுவின் ”என்னா கையப் பிடிச்சு இழுத்தயா” காமெடி. படம் சுமார். இப்போது பெயர் மாற்றி இருக்கிறாரா எனத் தெரியவில்லை.


கண்ணு பட போகுதய்யா – பாரதி கணேஷ்


விஜயகாந்த், சிம்ரன் இணை. இவரையும் காணவில்லை

என்றென்றும் காதல் – மனோஜ் பட்னாகர்

மனோஜ்- கியான் என இரட்டையர்களாக ஊமை விழிகள் போன்ற படங்களுக்கு இசை அமைத்தார்கள். பின் மனோஜ் பிரிந்து சமீரா ஒலிப்பதிவுக் கூடம் அமைத்து மனோஜ் பட்நாகராக மாறி இந்த பப்படத்தை விஜயை வைத்து இயக்கினார். நஷ்டத்தில் இருந்த குஞ்சுமோன் இந்தப் படத்தை வாங்கி இன்னும் நஷ்டமானார். பின் பட்நாகர் பிரசாந்த்,ரியா சென் நடிப்பில் குட்லக் என்னும் படத்தை எடுத்தார். பேட்லக் எல்லோருக்கும்.



இது தவிர இரண்டு துடிப்பான தமிழர்கள் இயக்குநர்களாக தெலுங்கில் அறிமுகமானார்கள்.


கணேஷ் – திருப்பதிசாமி


ஜூனியர் விகடன் மாணவ நிருபர். நம் வலையுலக மூத்த பதிவர் கௌதமின் ஜுவி பேட்ச்மேட். பின் இயக்குநர் அவதார மெடுத்தவர். வெங்கடேஷ், ரம்பா இணையில் ரேவதி குணச்சித்திர வேடத்தில் நடிக்க படம் மெகா ஹிட். அரசு ஆஸ்பத்திரி ஊழல்களைப் பேசிய படம். அடுத்த படம் நாகார்ஜூனா, பிரகாஷ் ராஜ் காம்பினேஷனில் குருஷேத்ரம். பம்பர் ஹிட். பின் தமிழில் தடம் பதிக்க வந்தார். விஜயகாந்தின் நரசிம்மா, படம் முடியுமுன் வாகன விபத்தில் பலியானார். பெரும் உயரத்திற்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டவர்.

ஆனந்த மழை – கருணாகரன்

சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண், கீர்த்தி ரெட்டி நடித்த மெல்லிய காதல் படம். ரசனையான படம். வெற்றி. ஆனால் அடுத்த படத்திலேயே சறுக்கி விட்டார்.

இதே ஆண்டில் காதலர் தினம் மூலம் அறிமுகமான குணால் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் அறிமுகமாகி கலக்கிய நகைச்சுவை நடிகர் பாரி வெங்கட்டும் அகால மரணமடைந்தார்.

இந்த ஆண்டில் தான் சிவாஜி கணேசனின் கடைசிப் படம் பூப்பறிக்க வருகிறோம் வெளியானது.

August 28, 2009

கிராமராஜன்களுக்கு இனி வாய்ப்பிருக்கிறதா?

1992 ஆம் ஆண்டு.சரத்குமார் நடித்து மணிவாசகம் இயக்கத்தில் வெளிவந்திருந்த பெரிய கவுண்டர் பொண்ணு திரைப்படத்துக்கு சென்றிருந்தேன்.(திண்டுக்கல் - கணேஷ் தியேட்டர்) மதிய காட்சி ஹவுஸ்புல். இடைவேளை முடிந்து ரசிகர்கள் அரங்கிற்கு உள்ளே சென்றதும் கேண்டின்காரரிடம் கேட்டேன்.

”என்னங்க இந்தப்படத்துக்கு இவ்வளோ கூட்டம்”

”ராமராஜன் படம் எதுவும் இப்போ இல்ல, பித்தளப்பட்டி,பாறைப்பட்டி,தெத்துப்பட்டின்னு எல்லா ஆளுகளும் இப்போ இந்தப் படத்துக்குத்தான் வந்திருக்காங்க” என்று பதிலளித்தார்.

அதுமட்டுமல்ல அதன்பின் வந்த ஊர் மரியாதை,எல்லைச்சாமி,சாமுண்டி, கட்டபொம்மன்,ராஜபாண்டி என சரத்குமார் நடித்த கிராமியப் படங்கள் எல்லாம் அந்த ஏரியாவில் நன்றாக ஓடியது.

91 ஆம் ஆண்டு வெளிவந்த என் ராசாவின் மனசிலே வெற்றிக்குப் பின் ராஜ்கிரணுக்கும் இந்த பாக்கியம் கிடைத்தது. அரண்மணைக்கிளி,எல்லாமே என் ராசாதான் என அடுத்தடுத்த படங்கள் வெற்றியும், பின் வந்த படங்கள் மற்ற இடங்களில் தோலிவியடைந்தாலும் சி செண்டர்களில் முதலுக்கு மோசமில்லாமல் ஓடின.

சென்னை-28, சரோஜா படங்களின் இயக்குநர் வெங்கட் பிரபு முதலில் கதாநாயகனாக அறிமுகமாக இருந்த படம் பூஞ்சோலை. அவர் தந்தை கங்கை அமரனே தயாரித்து இயக்குவதாக இருந்தது. நாயகி சங்கீதா (அப்போது ரசிகா). அந்தப் பட பிரஸ் மீட்டில் அமரன் சொன்னது,

“ராம்ராஜனின் இடம் இப்போது காலியாக இருக்கிறது. என் மகனுக்கு கிராமத்து ஹீரோவுக்கு உரிய முகம். ஒரு ரவுண்டு வருவான். அதனால் துணிந்து அறிமுகப்படுத்துகிறேன்” என்றார். விதி, வெங்கட் பிரபுவை நல்ல இயக்குநராக அடையாளம் காட்டியது பின்னர்.


ஆமாம். இப்பொது அந்த கிராமிய படங்களுக்கே உரித்தான ஹீரோக்கள் எங்கே போனார்கள்?
ராமராஜன்,ராஜ்கிரண் வரிசையில் அடுத்த ஆள் யார்?

கிராம மக்களின் ரசனை அப்படியே இருக்கிறதா? இல்லை முன்னேறி விட்டதா?

தற்போது ஆதவன்,கோபி கிருஷ்ணன், ப சிங்காரம் என படிக்கும் யாரும் முதலிலேயாவா அதைப் படிக்க ஆரம்பித்தார்கள்?. சிறுவர் மலர்,காமிக்ஸில் தொடங்கி விகடன்,குமுதம்,கிரைம் நாவல் வழியாக எஸ்ரா,சாரு,ஜெமோ என ஆரம்பித்து நாஞ்சில் நாடன்,சுரா,மௌனி,புதுமைப்பித்தன்,நகுலன் என முன்னேறியவர்கள் தானே?

ஐந்து வயதுப் பையனுக்கு ஹேராமும்,நான் கடவுளும் பிடிக்குமா? அவனுக்குப் பிடித்தது சண்டைப் படம்,மீசை அரும்பியபின் காதல் படம், கொஞ்சம் அடிபட்ட பின் அன்பே சிவம், மகாநதி.

ஆனால் விகடன், குமுதத்திலேயே தங்கி விடும் போதுதான் ரசனைத் தேக்கம் ஏற்படுகிறது. அதுபோலவே சி சென்டர் ரசிகர்களும் எதையுமே நேரடியாகச் சொல்லும் படங்களுடன் தங்களை நிறுத்திக் கொண்டார்கள். காட்சிகளுக்கு இடையே படித்தல், குறியீடுகள் ஆகியவை அவர்களுக்கு அன்னியமாய் இருந்தன.

எடுத்துக்காட்டாக

சந்திரமுகியில் ரஜினிகாந்த் அமெரிக்காவில் பெரிய மனோதத்துவ நிபுணர் என்ற பாத்திரம். அதற்கு சப்போர்டிவ்வாக அவர் ஏதும் கான்பரண்ஸில் பேசுவது மாதிரியோ அல்லது ஒரு சிக்கலான கேஸை ஹேண்டில் செய்வது மாதிரியோ காட்சி அமைத்து விளக்காமல், “அவர் எவ்வளோ பெரிய டாக்டர்” என்ற ஒரு வரி வசனத்தில் நேரடியாகச் சொல்லி விடுவார்கள்.

ராமராஜன்,சரத்குமார்,ராஜ்கிரண் நடித்த பல கிராமிய படங்களில் இம்மாதிரி நேரடிக் காட்சிகளே இருக்கும்.

சரி. இப்போது எப்படி நிலைமை? அவர்கள் அங்கேயே தங்கி விட்டார்களா? என்ற கேள்விக்கு
முன்னேறி வருகிறார்கள் என்பதே பதிலாக இருக்கும்.


கடந்த சில வருடங்களில் பஞ்சாயத்து,மஞ்சு விரட்டு,முறை மாமன் என லைட்டான கதையமைப்புடன் வந்த எந்த வழக்கமான கிராமியப் படமும் ஓடவில்லை. ஆனால் விருமாண்டி,பருத்திவீரன் போல உள்ளடக்கத்துடன் வந்த படங்கள் தப்பித்தன.

இப்போதைய தமிழ்சினிமாவில் இரண்டு வகையான படங்களே எடுக்கப்படுகின்றன. ஒன்று நகரத்தைக் களமாகக் கொண்ட ஆக்‌ஷன்,காதல், காமெடி பொழுது போக்குப் படங்கள்.

இன்னொன்று யதார்த்தமான அழகி,காதல்,சுப்ரமணியபுரம்,பூ, வெண்ணிலா கபடிக் குழு,நாடோடிகள்,பசங்க போன்ற படங்கள். இவை மதுரையைச் சுற்றியுள்ள இடங்களில் படமாக்கப்பட்டாலும் வழக்கமான கிராமியப் படங்களின் வகையில் சேர்க்க முடியாது. சில படங்கள் சிறு நகர பேக் கிரவுண்டில் எடுக்கப்படுகின்றன.
தங்கர் பச்சான் வட மாவட்டங்களைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டார். வெடிகுண்டு முருகேசன் கூட வழக்கமான கிராமியப் படங்களில் இருந்து மாறுபட்ட ஒன்றே.

முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, காத்தவராயன் என வழக்கமான பாணியில் எடுக்கப்பட்ட கிராமியக் கதைகள் படு தோல்வி அடைந்ததால் அனைவரும் யோசிக்கிறார்கள்.

செயற்கைக் கோள் தொலைக்காட்சி, அலை பேசி வருகைக்குப் பின் சி செண்டர் மக்களுக்கு அதிக எக்ஸ்போஷர் கிடைத்துள்ளது. எனவே அவர்களின் ரசனையும் உயர்ந்து கொண்டே வருகிறது.

யதார்த்தப் படங்களுக்கு கதைக்கேற்ற ஹீரோதான். ஆனால் வழக்கமான கிராமியப் படங்களுக்குத்தான் ரெககணைஸ் ஆன முகம் தேவை. அம்மாதிரிப் படங்கள் இனி வருவது கடினம் என்பதால் அதற்கேற்ற கிராமராஜன்களும் வருங்காலத்தில் உருவாவப் போவதில்லை.

இனி எல்லாம் அஜீத்,விஜய்,விக்ரம்,சிம்பு,விஷால்,ஜெயம் ரவி,ஆர்யா, மாதவன் டைப் ஹீரோக்கள் தான் வருவார்கள். சில சமயம் சசிகுமார் போல வந்தாலும் கதைக்கேற்ற வேடம்தான் போடுவார்கள்.

August 27, 2009

திட்டு

எங்கள் குழுவின் நிகழ்ச்சிகள் முடிந்து வாத்தியக் கருவிகளை வேனில் ஏற்றும் வைபவம் நடந்து கொண்டிருந்தது. கீ போர்ட் ஹரி பார்த்து பார்த்து என்று ஏற்றுபவரை பயமுறுத்திக் கொண்டே இருந்தான். குழு ஒருங்கிணைப்பாளர் வெங்கட் முகம் கொள்ளாத சிரிப்புடன் வந்து வேனை நோக்கி வந்து கொண்டிருந்தார். பக்கா செட்டில்மெண்டாயிருக்கும்.

செட்டில்மெண்டில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களின் பண்பு தெரிந்தது என்றால் நிகழ்ச்சியை நடத்திய விதத்தில் அவர்களின் ரசனை தெரிந்தது. சாப்பிட இடம் கிடைக்காத
வர்களும்,சாப்பிட்ட அசதியில் ஐந்து நிமிடம் உட்கார்ந்து போவோமே என நினைப்பவர்களும் மட்டுமே பெரும்பான்மையாக இருக்கும் ரிசப்ஷன் கச்சேரிகளுக்கே வாசித்தே
நொந்து போயிருந்த எங்களுக்கு இந்தக் கச்சேரி புது அனுபவமாய் இருந்தது. ஆம். கல்யாணம் முடிந்து, மதிய சாப்பாடு இரண்டு மணி வரை. கச்சேரி இரண்டு முதல் ஐந்து வரை. ஞாயிற்றுக் கிழமையாததால் அனைவரும் ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

வேனில் அனைவரும் ஏறிவிட நான் மட்டும் இங்கே தெரிஞ்சவர் ஒருத்தர் இருக்கார், பார்த்து நாளாச்சு,பார்த்துட்டு வந்துடுறேன் என கழண்டு கொண்டேன். இதைக் கவனித்துவிட்ட உதித்தும் வேனில் இருந்து இறங்கி என்னுடன் சேர்ந்து கொண்டான். உதித் நாராயணன் குரலில் அமைந்த பாடல்களைப் பாடும் ஸ்பெசலிஸ்ட் என்பதால் முருகேசனுக்கு அந்தப் பெயர். ஆறு மாதம் முன்பு குழுவில் இணைந்தவன்.சாரில் தொடங்கி இப்போது அண்ணே வரை வந்திருப்பவன்.

என்னாப்பா, இன்னைக்கு எங்கேயோ பார்த்த மயக்கத்தை ரொம்ப பீல் பண்ணி பாடீட்டயே என ஆரம்பித்தேன்.

ஆமண்ணே, ஆடியன்ஸில நாலஞ்சு நயன்தாரா அங்கிட்டும் இங்கிட்டும் அலைஞ்சுக்கிட்டு இருந்ததில்ல அதான் பீல் பண்ணிட்டேன். ஆமா நீங்களும் தாலாட்ட வருவாளா, கவிதைகள் சொல்லவான்னு பிழிஞ்சுட்டீங்களே? என்றான்.

தொடர்ந்து, எண்ணன்னே ஏன் வேன்ல போகல என ஆரம்பித்தான்.

ஆமடா, பி பி ஸ்ரீனிவாஸ் வாய்ஸ் ஆள்ல இருந்து பாங்கோஸ் வாசிக்கிறவன் வரைக்கும் இருக்கிற மூணு லேடி சிங்கர்ஸ்ஸ லுக் விடுறதும், கவன ஈர்ப்பு பண்றேன்னு கோமாளித்தனம் பண்ணுறதும், எரிச்சலா இருக்குடா. அதான் பஸ்ல போயிறலாம்னு.

அண்ணே வாழ்க்கைங்கிறது சின்ன சின்ன சந்தோஷத்துல தானன்னே அடங்கியிருக்கு

தம்பி, இப்படி சின்ன சின்ன சந்தோஷத்திலேயே கவனம் செலுத்திக்கிட்டு இருந்தா பத்து வருஷம் கழிச்சு நாம பெரிய பெரிய கவலையோடயே இருக்க வேண்டி வரும். சொசைட்டியில இருந்து அவ்வளோ பின்தங்கிப் போயிருவோம். வயசு ஆகுறதுக்குள்ள சீக்கிரமா செட்டில் ஆகப் பாரு.

அண்ணே செட்டில்ங்குறது, நாம கடைசியா சுடுகாட்டில ஆகுறதுதானன்னே. வாழ்க்கையை அதன் போக்குல வாழ வேணாமா?

நீ நெறையா புத்தகம் படிக்கிறேன்னு நெனைக்கிறேன். ஆமா இப்ப வேலைக்கு ட்ரை பண்ணுறியா இல்ல சினிமாக்கு ட்ரை பண்ணுறியா?

பார்ட் டைமா ஒரு ஜாப் கிடைச்சுருக்குண்ணே. மத்த நேரங்கள்ல பிராக்டிஸ், சான்ஸ் தேடன்னு இருக்கலாம்னு பார்க்குறேன்.

ஒரு தீவைப் பிடிச்சு ஆட்சி செய்யப் போறோம்னு வைச்சுக்கோ, அங்க போயி இறங்குன உடனே போன படகையெல்லாம் எரிச்சுடணும். இல்லையின்னா முடியாட்டி திரும்பிப் போயிறலாம்னு ஒரு எண்ணம் மனசுல ஓடிக்கிட்டேயிருக்கும். ஒரு பர்டிகுலர் டைம் பிக்ஸ் பண்ணிக்கோ. அதுவரைக்கும் சின்சியரா ட்ரை பண்ணு.முடியலையா புல் டைம் வேலைக்குப் போயிடு. என்ன மாதிரி அல்லாடாத.

ஆமண்ணே நானும் கேட்கணும்னே இருந்தேன். உங்களுக்கு அப்போ சான்ஸ் கிடைக்கலியாண்ணே?

கிடைச்சுருக்கும். முழு மூச்சா ட்ரை பண்ணியிருந்தா. ஆத்தில ஒரு கால் சேத்தில ஒரு கால். இப்போ சோத்துக்கு, சுண்ணாம்பா வேக வேண்டியிருக்கு.

ஏழெட்டு வருஷம் சும்மா திரிஞ்சதால சொல்லிக்கிற மாதிரி எக்ஸ்பீரியன்ஸ் இல்லைன்னு சுமாரான வேலை தான் கிடைச்சது. அப்புறம் கல்யாணம். கைக்கும் வாய்க்குமே பத்தாத சம்பளம்.

ராணி மாதிரி வாழணும்னு கனவு கண்டேன். சாணி மாதிரி என்னைய ஆக்கிட்டியேன்னு வீட்டுக்காரி தெனமும் வார்த்தையாலே கொல்லுறா. அவளச் சொல்லியும் குத்தமில்ல. அவ செட்டு ஆளுங்க இருக்கிற நெலமையோட கம்பேர் பண்ணி மாஞ்சு மாஞ்சு போறா. அஞ்சு வயசுல பொம்பளப்பிள்ள. ஸ்கூல் யூனிபார்ம தவிர ரெண்டே டிரஸ்தான் அவளுக்கு இருக்கு.ஆத்திரத்த எங்கதான் போயி காட்டுவா? அதான் இப்போக் கூட ரெண்டுமணி நேரம் டைம் பாஸ் பண்ணிட்டு ராத்திரிக்கு போகலாம்னு இருக்கேன்.

கேட்கவே சங்கடமா இருக்குண்ணே.என்ன தான் பண்ணலாம்னு இருக்கீங்க?

காலேஜில வோக்கல் சோலோ ஜெயிக்கும் போதெல்லாம் கிடச்ச கைதட்டல் போதை இன்னும் கேட்குது. ஆனா இப்போ கொஞ்சம் கொஞ்சமா புரோகிராம குறைச்சுக்கிட்டு வர்றேன். மத்த ஆளுங்கள்ளாம் கூப்பிட்டா போறது இல்ல. வெங்கட்டுக்காக மட்டும்தான் பாடவர்றது.சில்லறை செலவுக்கு ஆகுது. இனி காலையில இல்லாட்டி, சாயங்காலம் எதுவும் பார்ட் டைம் ஜாம் கிடைச்சா பார்க்கலாமுன்னு இருக்கேன்.

இப்படியே போயிக்கிட்டு இருந்தா எப்படிண்ணே?

கஷ்டம்தான். ரெண்டு மூணு வருஷத்துக்குள்ள கொஞ்சம் காசு சேர்த்து சைடு பிஸினஸ் பண்ணலாம்னு இருக்கேன். எப்படியும் அஞ்சாறு வருஷத்துல மேடேறிரணும்.

பேசிக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. பேருந்து வர ஏறிக்கொண்டோம். கூட்டம் அதிகமானதால் பேச்சு தடைப்பட்டது.இறங்க வேண்டிய இடம் வர கண்களாலேயே விடை பெற்றுக் கொண்டு இறங்கினேன்.

ஐந்து வருடத்தில் பிரச்சினை எல்லாம் தீர்ந்து விடுமா? யோசிக்கத் தொடங்கியது மனம்.சரி தீரவில்லை யென்றால்? இப்போ வயசு முப்பத்தாறு. அறுபது வரைக்கும் இருப்போம்னா இன்னும் 24 வருஷம். எட்டு மணி நேரத் தூக்கத்திலேயே எட்டு வருஷம் போயிடும். எட்டு மணி நேரம் ஆபிஸ் வேலையில்ல எட்டு வருஷம். ஞாயிறு, லீவெல்லாம் கழிச்சாலும் ஆறரை வருஷம் வரும். அப்புரம் குளிக்கிறது, கடைக்குப் போறது, பாப்பாவுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க்ண்ணு ஒரு நாலரை வருஷம் வச்சோமின்னா ஒரு 19 வருஷம் ஓடிடும், பார்ட்டைமோ சைடு பிஸினஸோ மூணு மணி நேரம் பார்த்தா அது ஒரு மூணு
வருஷம் ஓடிடும்.

வீட்டுக்காரி திட்டுனா எவ்வளவுதான் திட்ட முடியும்? ரெண்டு வருஷம்தான் அவளுக்கு டைம் கிடைக்கும்.

என ஏதேதோ எண்ணங்கள் ஓட வீட்டுக் கதவைத் தட்டினேன். நல்ல தூக்கக் கலக்கத்தில் மனைவி கதவைத் திறந்தாள். சாப்பிட்டுட்டேன் என்றதும், குழந்தையின் அருகில் சென்று படுத்துக் கொண்டாள்.

இரண்டு வருஷத்தில் இப்போது எவ்வளவு நேரம் கழிந்திருக்கும்? என எண்ணிக்கொண்டே படுக்கையை விரித்தேன்.

August 22, 2009

என்ன செய்யப் போகிறார்? ஜெயலலிதா.

எதிர்பார்த்தபடியே இடைத்தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. தொண்டாமுத்தூர் தவிர மற்ற தொகுதிகளில் திமுகவிற்கும், தே தி மு கவிற்கும் முன்பை விட அதிகமான ஓட்டுகள் கிடைத்திருக்கின்றன. 67% தானே ஒட்டுப் பதிவு, ஓட்டுப் போடதவர்கள் எல்லாம் அதிமுக வினர் என்று ஜெயா டிவி கூட சொல்லாது.

எப்போதும் ஓட்டுப் போடுபவர்கள் வாக்குச் சாவடிக்கு வந்திருக்கிறார்கள். எப்போதும் வராதவார்கள் வரவில்லை.

சரி. ஜெயலலிதாதான் அதிமுகவினர் ஓட்டுப் போட வேண்டாமென்று மறைமுக உத்தரவு எல்லாம் கொடுத்தாரே? அவர்கள் அதை மதிக்க வில்லையா? இல்லை அதிமுக என்னும் ஓட்டு வங்கியே திவாலாகி விட்டதா? என்று கேள்விகள் வரலாம்.

ஒரு கட்சியின் ஓட்டு வங்கி என்பது, முழுக்க முழுக்க அக்கட்சிக்காரர்களை மட்டும் சேர்ந்ததல்ல. இந்தக்கட்சி மற்றவர்களை விட பரவாயில்லை (எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி பெஸ்ட்?) என்ற அடிப்படையில் அதை முதல் சாய்ஸாக வைத்திருப்பவர்களைச் சேர்த்தும்தான்.

அதிமுகவில் கட்சிக்காரர்கள் அதன் ஓட்டு வங்கியில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு என்றால், அதிமுகவை பர்ஸ்ட் ஆப்ஷனாக வைத்திருக்கும் பொதுமக்கள் மீதப் பங்கு. இதேதான் திமுக விற்கும், தேதிமுகவிற்கும்.

இந்தப் பொதுமக்கள் அதிமுக போடியிடவில்லை என்பதற்காக வீட்டில் இருந்துவிடவில்லை. தங்கள் அடுத்த ஆப்ஷனுக்கு வாக்களிக்கச் சென்று விட்டார்கள்.

எம்ஜியார் கட்சியை ஆரம்பித்தபோது, அவர் கொள்கை கருணாநிதி எதிர்ப்பு என்பதே. அதனால் தான் கட்சியின் கொள்கை என்ன என்று கேட்டால் அண்ணாயிஸம் என்று மழுப்புவார். அப்போதைய அதிமுக ஓட்டு வங்கியில் இருந்தவர்கள் எல்லாம் கருணாநிதிக்கு வாக்களிக்க கனவிலும் நினைக்காதவர்கள்.

ஆனால் இப்பொதைய அதிமுக ஓட்டு வங்கி அப்படி இல்லை. திமுக விற்கு அவர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் வாக்களித்துள்ளார்கள். சென்ற தேர்தலைவிட திமுக இப்போது அதிகம் பெற்றுள்ள வாக்குகளே சாட்சி.

சரி. என்ன செய்து திமுக, அதிமுகவின் ஓட்டு வங்கியை கரைத்துள்ளது?.

இதற்கு முன் பழைய சம்பவம் ஒன்றை பார்ப்போம்.

எம்ஜியார் ஆட்சிக்கு வரும்முன், அவரது ராமாவரம் தோட்டம் சார்பாக ஒரு ஆவணம் தேவைப்பட்டது. அதை வாங்கிவர அவரது உதவியாளார், அந்த பஞ்சாயத்து நாட்டாமையிடம் சென்றார். அவர் இவர்களை மதிக்கவேயில்லை. அதை அறிந்த எம்ஜியாரின் சூப்பர் ஈகோ விழித்துக் கொண்டது. நாட்டாமையைப் பற்றி விசாரித்தார்.

”இவர்களெல்லாம் பரம்பரை பரம்பரையாக இந்த பதவிக்கு வருபவர்கள். நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. என்று பதில் வந்தது”

எம்ஜியார் ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக போட்ட உத்தரவே, இந்த பரம்பரை பதிவுகள் ஒழிக்கப்படுகின்றன என்பதுதான். அதற்குப் பின் அரசுத் தேர்வு மூலம், கிராம் நிர்வாக அலுவலர்கள் (வி ஏ ஓ) என்ற பதவியில் யார் வேண்டுமானலும் தேர்வு பெறலாம் என சட்டமியற்றினார்.

அப்போது பதவிக்கு வந்த வி ஏ ஓ அவர்தம் குடும்பத்தினர் எல்லாம் அதிமுகவிற்கு விசுவாமாக இருந்தார்கள். ஏனெனில் வாழ்க்கை கிடைத்ததல்லவா?.

அதே போலத்தான் இப்போது திமுகவின் இந்த ஆட்சியிலும் சரி, 1996-2001 ஆட்சியிலும் சரி ஆசிரியர் பணிகளுக்கு எந்த வித பணப் பரிமாற்றமும் இல்லாமல் (குறிப்பாக அன்பழகன் அமைச்சராக இருந்த போது) ஏராளமானோர் நியமிக்கப் பட்டார்கள். அதில் சிலர் 27 வயது கடந்தும் மணமாகாத பெண்கள். அவர்களுக்கெல்லாம் உததரவு கிடைத்த ஆறு மாதத்தில் கல்யாணம் நடந்தது. அவர்களின் ஓட்டு என்றென்றைக்கும் திமுக விற்குத்தான்.

மற்ற அரசுத்துறைகளிலும் நியமனம் திமுக ஆட்சியிலேயே அதிகம் நடைபெறுகிறது. அந்த ஊழியர்களையும் திமுக திருப்திப் படுத்திக் கொண்டேயிருக்கிறது. ஆறாவது ஊதியக் கமிஷன் அமலாக்காத்திற்கு முன்னேயே இடைக்கால நிவாரணத்தை வழங்குகிறது. அதிமுகவின் ஆட்சிக்காலத்திலோ ஜெயலலிதா எஸ்மா டெஸ்மா என அவர்களை பகைத்துக் கொண்டார்.

சிறுபான்மையினரின் ஓட்டு என்ற வங்கியை குறிவைத்தே திமுக காய்களை நகர்த்துகிறது. எந்த மேடையாய் இருந்தாலும் எஸ்றா சற்குணம் அங்கே இருப்பார். இயேசு அழைக்கிறார் (காருண்யா) அமைப்புக்கு அதிக விசுவாசிகள் இருக்கிறார்கள் என்பதால், கிரீன் வேஸ் ரோட்டின் ஒரு பகுதியை டி ஜி எஸ் தினகரன் சாலை என மாற்றுகிறார்கள். இனி அவர்களின் ஓட்டு யாருக்கு விழும்? அதிமுகவோ மத மாற்ற தடைச்சட்டம், கன்னிமேரி விவகாரம் என எதிர்ப்பாளர்களை அதிகப்படுத்திக் கொண்டேயிருக்கிறது.

பாஜகவுடன் மறைமுக அண்டெர்ஸ்டாண்டிங், நரேந்திர மோடியின் பதவியேற்பில் கலந்து கொள்வது, அவர் சென்னை வந்தால் விருந்து கொடுப்பது என தனக்கு ஆதரவாக இருக்கும் ஓரளவு முஸ்லிம் ஓட்டுக்களையும் ஜெயலலிதா இழந்து வருகிறார்.

அதிமுகவின் பலமாக தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் ஓட்டு வங்கியும், மேற்கு மாவட்டங்களில் கொங்கு வேளாளர் ஓட்டு வங்கியும் கருதப்படுகிறது. ஜெயலலிதாவும் தன் அருகில் அச்சமூகங்களைச் சேர்ந்தவர்களையே வைத்துக் கொண்டிருக்கிறார். அம்மாவட்டங்களில் இருக்கும் பிற வகுப்பினர்களுக்கு (நாயுடு, பிள்ளைமார் போன்ற வகுப்பினர்கள்) இப்போது முக்கிய பதவிகள் எதுவும் கொடுப்பதில்லை. ஆனால் திமுக அமைச்சரவையிலும் சரி, கட்சியில் மாவட்ட, ஒன்றிய செயலாளர், பொதுக்குழு உறுப்பினர் போன்ற பதவிகளிலும் சரி ஒரு பிரதிநிதித்துவம் கடைப்பிடிக்கப் படுகிறது. இதனால் அவர்களுடைய வாக்குகள் முதல் சாய்ஸாக திமுகவிற்கு மாறி வருகின்றன.

அதிமுகவை முதல் சாய்ஸாக வைத்திருந்த இன்னொரு முக்கிய பிரிவினர் அடித்தட்டு மக்கள். ஓட்டுப்பதிவன்று சுனாமியே வந்தாலும் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற தயங்காதவர்கள். அவர்களுக்கு ஒரு ரூபாய் அரிசி, கலர் டிவி, கேஸ் அடுப்பு என அள்ளி விட்டு வருகிறார்கள். பொங்கல் சீர் வேறு. எனவே அவர்களும் மெல்ல மெல்ல திமுகவை முதல் சாய்ஸாக மனதில் எண்ணத் தொடங்கியிருக்கிறார்கள்.

இன்னும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டம், பிரசவ உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை என பல் திட்டங்களை சரியாக செயல்படுத்தி, பயணாளிகளின் முதல் சாய்ஸாக திமுக மாறி வருகிறது.

சென்ற ஆண்டு ரேஷன் கார்டு இருந்தால் தான் அடுத்த சிலிண்டர் பதிவே என்னும் அளவுக்கு கெடுபிடிகள் துவங்கின. வேறு ஆதாரங்கள் மூலம் இணைப்பு வாங்கியவர்கள் லீவு போட்டு வட்ட வழங்கல் அலுவலகங்களுக்கு படையெடுத்தார்கள். அங்கேயோ இலவசத்திட்டங்கள் எல்லாவற்றுக்கும் ரேஷன் கார்டுதானே அடிப்படை என்பதால் பல ஆதாரங்களைக் கேட்டு மக்களை திருப்பியனுப்பினார்கள். சில நாட்களில் உத்தரவு வந்தது. சிலிண்டருக்கு ரேஷன் கார்டு ஆதாரம் தேவையில்லை என. பெருமூச்சு விட்ட பலரில் சிலர் திமுகவை முதல் சாய்ஸாக எண்ண அது வழி வகுத்தது.


மேடையில் பேசி எல்லாம் யார் மனத்தையும் மாற்றி விட முடியாது என்பதை கருணாநிதி தெளிவாக உணர்ந்திருக்கிறார். அதனால் தான் குறிபார்த்து ஓட்டுக்களை சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள் திமுகவினர்.

அடுத்த கட்டமாக அதிமுகவின் நிர்வாகிகளையும் தூக்க ஆரம்பித்து விட்டார்கள். அனிதா ராதாகிருஷ்ணன் என்ன? அடுத்து ஓ பி எஸ்ஸையே தூக்கப் போகிறோம் என்கிறார்கள்.


ஜெயலலிதா விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது. கட்சி நிர்வாகிகளையும் பாதுகாக்க வேண்டும். தன் முதல் சாய்ஸ் வாக்காளர்களையும் தக்க வைதுக் கொள்ள வேண்டும்.

என்ன செய்யப் போகிறார் பார்ப்போம்.

August 21, 2009

என்னைக் கவர்ந்த புருனோ

பெரும்பாலான பதிவர்களைச் நான் முதன்முதலில் சந்தித்த மெரினா காந்தி சிலை அருகேதான் டாக்டர் புருனோவையும் சந்தித்தேன். அந்த சந்திப்பு வரை, அவர் ஒரு மருத்துவர், இட ஒதுக்கீடு பற்றி ஆழ்ந்த புரிதல் உள்ளவர், மருத்துவ உயர் கல்வி நுழைவுத்தேர்வு பற்றிய புத்தகங்கள் எழுதியவர் என்று மட்டுமே நினைத்திருந்தேன். அந்தச் சந்திப்பு எல்லாவற்றையும் மாற்றியது.

அவர் முகம் கொள்ளாத சிரிப்புடன் வந்து சேர்ந்த உடனேயே எல்லோருக்கும் உற்சாகம் தொற்றிக் கொண்டது. பேசிய போதுதான் தெரிந்தது அவர் சினிமா,விளையாட்டு,இசை,அரசியல், சமூகம் என எல்லாத்துறைகளிலும் ஆழ்ந்த புரிதல் உள்ளவர் என்பது.

அதற்கடுத்த மாதமே ஓப்பன் சோர்ஸ் பற்றி கருத்தரங்கில் விரிவுரையாற்றி தன் கணிணித்துறை அறிவை வெளிப்படுத்தினார். அறிவு ஜீவிகள் வேறு தலைமைப் பண்பு வேறு என்று பலரும் சொல்வார்கள். இரண்டும் ஓரிடத்தில் இருப்பது கடினம் என்று சொல்பவர்களும் உண்டு. ஆனால் அது அப்படியில்லை என என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.  புருனோவும் அப்படித்தான். அவர் தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கத்தின் நிர்வாகியாகவும் இருந்தவர்.

அப்பாடா, அவரைப் பற்றி எல்லாம் அறிந்து கொண்டு விட்டோம் என நினைத்திருந்த எனக்கு கிடைத்தது ஒரு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி. அவர் ஜோதிடத்திலும் விற்பன்னர் என்பது. சித்தர் பாடல்களையும் விட்டு வைக்கவில்லை மனிதர்.

கிழக்கு பதிப்பகத்தில் அவர் ஆற்றிய பன்றிக்காய்ச்சல் பற்றிய உரை இன்னும் மனதில் இருக்கிறது. விரைவில் பன்றிக்காய்ச்சல் பற்றிய அவரது புத்தகமும் வர இருக்கிறது.

இந்த வார ஆனந்த விகடனில் அவர் வைரஸ்களைப் பற்றி எழுதிய சிறு கட்டுரை 143ஆம் பக்கம் வெளியாகி உள்ளது. (இலவச இணைப்பில்).

இவை எல்லாவற்றையும் விட அவரது இன்னொரு முகம் எனக்குப் பிடித்தமானது. அதுதான் தான் சரி என்று நம்பியதற்காக கடைசி வரை போராடுவது.

சட்டக் கல்லூரி சம்பவம் பற்றிய பதிவர் சந்திப்பிற்காக மெரினாவில் 50 பேர் கூடியிருந்தோம். அப்போது காவல் துறை உதவி ஆய்வாளரும், காவலர்கள் இருவரும் வந்து இப்படி கூட்டமாக நிற்கக் கூடாது, கலைந்து சென்று விடுங்கள் என்று கூறினார்கள்.

நான் அவர்களிடம், “நாங்கள் எந்த அமைப்பையும் சார்ந்தவர்கள் இல்லை. நண்பர்கள் கூடி பேசுகிறோம், அதனால் அனுமதியுங்கள்” என்று மழுப்பிக் கொண்டிருந்தேன்.
அப்போது புருனோ, அவர்களிடம் ”எந்த சட்டத்தில் இருக்கிறது?, ஆர்டர் இருக்கிறதா? வாய் மொழி உத்தரவா?” என வாதம் செய்ய ஆரம்பித்தார். அவரின் கூரான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திரும்பிச் சென்றார்கள்.

அவர்கள் போகும்போது டிசி கிட்ட பேசி வண்டி அனுப்பச் சொல்லணும் என்பது போல பேசிக் கொண்டே சென்றார்கள். அதற்குள் பாலபாரதி டிசி யிடம் அலைபேசியில் பேசி நிலைமையை விளக்கியதும், அவர் கூட்டம் நடத்த தடை இல்லை, நீங்கள் அந்த உதவி ஆய்வாளரிடம் போய் என்னிடம் வயர்லெஸ்ஸில் பேசச் சொல்லுங்கள் என்று கூறினார்.

நாங்கள் இருவரும் கிளம்பிப் போய் இதை சொன்னவுடன், அவர் டிசியிடம் பேசிவிட்டு அனுமதியளித்தார்.

அப்போது என்னிடம் அவர் கேட்டது, “உங்க கூட நின்னு பேசிக்கிட்டிருந்தாரே, யாருங்க அவரு? லாயரா?”


பின்குறிப்பு

இதே கூட்டத்துக்கு அகநாழிகை வாசுதேவன் அவர்களும் வந்திருந்தார். அவர் உடை, ஹேர்ஸ்டைல், மீசை, அளந்து வார்த்தைகளைப் பேசிய விதம், விவரங்களைக் கேட்ட பாங்கு ஆகியவற்றை வைத்து, அவர் உளவுத்துறை என பதிவர்களிடம் ஒரு வதந்தி பரவியது. உடன் வந்த அவர் நண்பரும் அதே கெட்டப்பில் இருந்தார். சில பதிவர்கள் அவரிடம் பேசவே பயந்தார்கள் (ஹி ஹி நானும்தான்).

August 15, 2009

தென்னங்கீற்று

தமிழ்சினிமாவில் பெண்கள் வயதுக்கு வருவது, அதற்கான சடங்குகள் நடத்துவது போன்ற காட்சியமைப்புகள் எப்போதிலிருந்து வருகின்றன என்று பார்த்தால் 70 களின் ஆரம்பத்தில் இருந்துதான் என்று சொல்ல முடியும். இயல்பான கதைகள் வரத்தொடங்கிய காலகட்டத்தில் தான் பெண்களின் இயல்பான பருவமாற்றமும் திரையில் வரத் தொடங்கியது.

இந்தக் காட்சிகளின் அவசியமென்ன?. இரு குடும்பத்தாரிடையே சண்டை வர ஒரு களம், அதைத் தொடர்ந்து கதையில் வரும் முடிச்சிற்க்காக சில இயக்குநர்கள் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். குறிப்பாக பாரதிராஜா. தாய்மாமன் என்னும் உறவை தூக்கிப்பிடிக்கவும் இது பயன்படுத்தப்பட்டது.


ஒரு பெண்ணிற்க்கு காதல் வரத்தொடங்கும் ஆரம்பப் புள்ளியாகவும் (பாரதிகண்ணம்மா,காதல்), ஆணுக்கு காதல் தொடங்கும் (அழகி) ஆரம்பப்புள்ளிக்காகவும் இந்தக் காட்சிகள் பல இயகுநர்களால் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.

சில இயக்குநர்களே இதை காமெடி காட்சிகளுக்கும் உபயோகப் படுத்தினார்கள் (ஜல்லிக்கட்டு காளை, திருப்பதி). வைகாசி பொறந்தாச்சு படத்தில் ஒரு ஆண் வயதுக்கு வந்தால் எப்படி பாட வேண்டுமென காமெடி பண்ணியிருந்தார்கள். பாட்டாளி திரைப்படத்தில் பெண் வேடமிட்ட ஆணுக்கு சடங்கு என்று ஒரு காமெடியும் உண்டு.

ஆனால், இந்த விஷயத்தை திரைப்படத்தின் கருவாகவே உபயோகித்த படங்கள் மிகக் குறைவு. தென் மாவட்டங்களில் ஒரு பழக்கம் உண்டு (மற்ற இடங்களிலும் இருக்கலாம்). ஒரு பெண் வயதுக்கு வந்துவிட்டால் அந்தத் துணிகளை துவைத்து கொடுப்பவர்கள் சலவைத் தொழிலாளர்களே. பின் அந்தப் பெண்ணை தனியே உட்கார வைத்து, சில நாட்களுக்குள் தாய்மாமன் சீர் நடைபெறும். (பூப்புனித நீராட்டு விழா என்பது வசூலுக்காகவும், எங்கள் பெண் பெரியவளாகிவிட்டாள் என ஊருக்குத் தெரியப்படுத்தவும் பின் சவுகரியமான ஒரு நாளில் நடத்தப்படுவது.). இந்த தாய்மாமன் சீரில் கொடுத்த புடவையைத் தான் முதலில் உடுத்திக் கொள்ள வேண்டுமென சொல்வார்கள். இந்த இடைப்பட்ட ஓரிரு நாளில் அந்தப் பெண்கள் உடுத்திக் கொள்வது சலவைத் தொழிலாளர்கள் கொடுக்கும் உடைகளையே.

இதை மையமாக வைத்து 1992 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் முதல் சீதனம். சிவா, ஆம்னி நடிக்க சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர் பி சவுத்ரி இசையில் வெளியானது இந்தப்படம். இயக்கியது சேரன் பாண்டியன் போன்ற படங்களின் வசனகர்த்தா ஈரோடு சவுந்தர். இசை சௌந்தர்யன்.

ஒரு சலவைத் தொழிலாளியை பெரிய வீட்டுப் பெண் காதலிக்கிறார். அந்தத் தாய்மாமனை விட எனக்கு முதல் சீதனம் கொடுத்த இந்த தொழிலாளி பெரியவர்தான் என நாயகி சொல்கிறாள். முடிவு எப்படியிருக்கும்?. இந்தப் படம் தோல்வியடைந்தாலும் சில சமூக சிந்தனைகளைத் தூண்டியது.

தாழ்த்தப்பட்டவர்களில் புதிரை வண்ணார்கள் என்று ஒரு பிரிவு உண்டு. சுருக்கமாகச் சொன்னால் தாழ்த்தப்பட்டவர்களில் இவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள். இவர்கள் தீட்டுச் சேலையை சலவை செய்து கொடுப்பவர்கள் என்று சொல்வார்கள். திண்டுக்கல்,விருதுநகர் மாவட்டங்களில் இவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் வசிக்கிறார்கள். விருதுநகர் மாவட்டத்தில் சற்று அதிகமாகவே. இவர்கள் தங்கள் உரிமைக்காக பல போராட்டங்களை நடத்தி வந்தார்கள். பல சமூக ஆர்வலர்கள் இவர்களுக்காக உழைத்தார்கள்.

தமிழக அரசு சமீபத்தில் அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுத்தது. அதைத் தொடர்ந்து நீண்ட முயற்சிகளுக்குப் பின் புதிரை வண்ணார்களுக்கான தனி நல வாரியத்தை அமைத்துள்ளது. இது அவர்கள் வாழ்வில் ஒளியேற்றும் என நம்புவோமாக.

முதல் சீதனம் படத்தில் பாடல்கள் நன்றாக இருக்கும். குறிப்பாக எஸ் பி பி பாடிய எட்டு மடிப்புச் சேலை என்னும் பாடல்.

மேற்குறிப்பிட்ட படங்களெல்லாம் பெண் பருவமடைந்த பின் வரும் காட்சியமைப்புகளை வைத்து. ஆனால் ஓரு பெண் பருவமடையாவிட்டால் என்னென்ன கஷ்டங்களை அவளும் அவள் குடும்பத்தாரும் பட நேரிடும் என்பதை அருமையாக காட்டிய படம் 1975 ஆம் ஆண்டு வெளியான தென்னங்கீற்று.

எழுத்தாளர் கோவி மணிசேகரன் எழுதிய நாவலே இது. அவர் சில காலம் சினிமா மீது கொண்ட பற்றுக்காரணமாக இயக்குநர் கே பாலசந்தரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். முதல் படம் அரங்கேற்றம். பின்னர் அவரிடம் இருந்து வெளியேறியபின்
இயக்கிய படமே தென்னங்கீற்று.

இந்தக் கதையை கேள்விப்பட்ட ஒரு கன்னட தயாரிப்பாளர் இதை கன்னடத்தில் படமாக்க வந்தார். அவரிடம் கோவி, படத்தை தானே இயக்குவதாகவும், தமிழிலும் இதை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

விஜயகுமார், சுஜாதா நடிக்க உருவானது இந்தப் படம். சுஜாதா 28 வயதாகியும் பருவமடையாத பெண்ணாக நடித்திருந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் வேடத்தில் நடித்த கல்பனா. கன்னடத்தில் சுஜாதா வேடத்தை ஏற்றிருந்தார். பல சங்கடங்களை சந்திக்க நேரும் சுஜாதா இறுதியில் பருவமடைவார்.

கன்னடத்தில் நல்ல வெற்றி பெற்ற இந்தப் படம், தமிழில் தோல்வியடைந்தது. ஆனால் விமர்சகர்களால் பாராட்டப் பட்டது. தமிழக அரசு விருதும் கிடைத்தது.

இந்தப்படம் வெளியான காலகட்டங்களில் பெண்ணின் பருவமடையும் வயது 14-15 ஆக இருந்தது. பி யூ சி படிக்கத் தொடங்கும் வயது பெண்களுக்கு 16. அந்தக் காலகட்டத்தில் பெண் பருவமடையாமல் இருந்தால் அவளை தென்னங்கீற்று என மறைமுகமாக கிண்டல் செய்வார்களாம்.

இதனால் பல பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

பெண் பருவமடையும் வயது படிப்படியாக குறைந்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 60களில் 16 ஆக இருந்தது தற்போது 12-13 என மாறிவருகிறது. இதற்குச் சூழலும் முக்கியமாக உணவுப் பழக்கங்களும் காரணம் எனத் தெரிவிக்கிறார்கள். இந்த வயது இன்னும் குறைந்தால் மிகப் பிரச்சினை. மன முதிர்சிக்கு முன் உடல் முதிர்ச்சி அபாயகரமானது.

August 13, 2009

துண்டு சிகரெட்

எப்போது அந்த ஆசை ஏற்பட்டது என்று சரியாக நினைவில்லை. வீட்டிலும், தெருவிலும்,உறவிலும் யாருக்கும் அந்தப் பழக்கம் இல்லை. ஆனாலும் வந்துவிட்டது. அதற்கு எங்கள் குலதெய்வமே காரணம். படையலில் சுருட்டு இல்லாவிட்டால் சாமி ஏற்றுக்கொள்ளாது என்று சொல்லி அதை வாங்கிவர என்னை விரட்டி விடுவார்கள். அனைவருக்கும் தேங்காய் பழம் பிரித்துக் கொடுத்த பின் சுருட்டை மட்டும் கோடாங்கியிடம் கொடுத்து அனுப்பி விடுவார்கள்.புதிதாய் வந்த கோடாங்கிக்கு சேவல் மார்க் சுருட்டு ஒத்துக்கொள்ளவில்லை. சாமி கும்பிடும் ஒரு நாளில் என்னை அழைத்து, ராஜாபாதர் கடையில வாங்கிக் கொடுப்பா, அங்கதான் நல்லாயிருக்கும் என்று கேட்டுக் கொண்டார்.

ராஜாபாதர் கடை என்பது ஆண்களுக்கு மட்டுமேயான பிரத்யேகக் கடை. பென்சன் அண்ட் ஹெட்ஜஸ், ரோத்மண்ஸ், 555 போன்ற சிகரெட் ரகங்கள்,வெத்திலை பாக்கு, சர்பத், செண்ட் பாட்டில், ஜவ்வாது,காண்டம்,  என சில அயிட்டங்களே அங்கேயிருக்கும். கடை அமைந்திருக்கும் இடமும் ஊருக்கு வெகு தள்ளி.

நான் போய் சுருட்டு கேட்டதும், ”இந்தாடா இதுதான் சர்ச்சில் குடிச்ச சுருட்டு” என்று சொல்லி கொடுத்தார்.அந்தக்கடையே அப்படித்தான். எதுவுமே சாதாரணமானதாக இருக்காது. கத்திரி சிகரெட் விற்பதைக்கூட மானக் குறைவாக கருதியவர் ராஜாபாதர்.

ஒருமுறை ஒரு வாடிக்கையாளார் அவரிடம், ஏன்? இந்தக் கடையை ஊருக்குள்ள வச்சா எங்களுக்கு வசதியா இருக்குமே என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் “ முருங்கைக்கீரை வீட்டுக் கொல்லையிலேயே கிடைக்கும்,மூலிகை வேணுமின்னா காட்டுக்குத்தான் போகணும்”.

ஆமாம். நன்னாரி சர்பத் என்றால் ஒண்டிப்பிலி, பாதாம் சர்பத் என்றால் ஜனதா, சோழவந்தான் வெற்றிலை,அங்குவிலாஸ் புகையிலை, கும்பகோணம் சீவல் என பார்த்துப் பார்த்து வாங்கி வியாபாரம் செய்வார். திண்டுக்கல் சிறுமலை வாழைப்பழமும், காயாக வாங்கி, அவரே புகை போட்டு பழுக்க வைக்கும் லால்குடி ரஸ்தாளியும் மட்டும் தான் அங்கே கொக்கியில் தொங்கும். கடலை மிட்டாய், முறுக்கு இதெல்லாம் அவர் சாப்பிட்டுப் பார்த்து அவருக்கு திருப்தி ஆனால் தான் கண்ணாடி பாட்டிலில் அடுக்குவார். விற்பனையாளர்கள் கொண்டு வரும் தேங்காய் பர்பி சரியில்லை என, அய்யம்பாளையத்தில் நன்கு முற்றிய தேங்காய் வாங்கி தெரிந்த ஆளிடம் கொடுத்து, அதில் பர்பி செய்யச்சொல்லி வாங்கி விற்பார். சிகரெட் பற்ற வைக்கக் கூட அவர் வெட்டுப்புலி தீப்பெட்டிதான் கொடுப்பார்.

சுருட்டு வாங்க அடிக்கடி சென்ற வகையில் அந்தக் கடையின் மேல் எனக்கு ஒரு காதலே வந்துவிட்டது. மாலை வேளைகளில் பாதாம் சர்பத்தைக் குடித்துவிட்டு, வில்ஸ் பில்டரை ஊதிக் கொண்டிருப்பவர்கள் பார்க்கும் பார்வையை வைத்தே காண்டமை பக்குவமாக பாக் செய்து சில்லறையுடன் சேர்த்துக் கொடுப்பார் ராஜாபாதர். ஒரு அசட்டுச் சிரிப்புடன் அதை வாங்கி பையில் போட்டுக் கொண்டு நடையைக் கட்டுபவர்களைப் பார்க்கையில் ஒரு பொறாமையே வரும்.

சர்பத் மீது நாட்டமில்லை,காண்டமை உபயோகிக்க வயதில்லை என்பதால் சிகரெட்டையாவது பிடித்துப் பார்த்து விட வேண்டுமென்ற ஆசை எனக்கு வந்தே விட்டது.

நேரடியாக கடையில் வாங்கப் பயம் மேலும் பொருளாதார சிக்கல் வேறு. இம்மாதிரியானவர்களுக்கு கைகொடுப்பது ஒட்டுப்பீடி என்றும் துண்டு சிகரெட் என்றும் அழைக்கப்படம் முழுவதும் புகைக்கப்படாத சிகரெட்டுகள்.

இம்மாதிரி துண்டு சிகரெட் ஆட்களில் பலவகையினர் உண்டு. கிடைத்தது போதும் என்று சொக்கலாலோ, மங்களூர் கணேஷோ, பாசிங் ஷோ தொப்பியோ, கத்திரியோ, சார்மினாரோ எது கிடைத்தாலும் இழுப்பவர்கள்.

எச்சியா சீ சீ நாங்கள் சுத்தமாக்கும் என்று சொல்லி நோட்டு பேப்பரை பீடி போல் சுருட்டி அதைப் பத்தவைத்து இழுப்பவர்கள்.

குடிக்கிறது கூழா இருந்தாலும் கொப்புளிக்கறது பன்னீரா இருக்கணும் என்ற கொள்கையுடையவர்கள்.என்னைப்போல. இவர்களெல்லாம் பில்டர் சிகரெட்டைத்தான் எடுத்து உபயோகிப்பார்கள். ராஜாபாதர் கடை புண்ணியத்தில் எனக்கு அவ்வப்போது பாரின் சிகரெட் மிச்சங்களும் கிடைத்துக் கொண்டிருந்தன.

இந்த நேரத்தில்தான் எங்கள் தெருவுக்கு குடிவந்தனர் ராஜேஸ் குடும்பத்தார். வந்த சில நாட்களிலேயே நன்றாக படிப்பது,தெருவில் யார் சொன்னாலும் கடைக்குப் போவது போன்ற செயல்களால் நல்ல பிள்ளை என்ற பட்டத்தை வாங்கி விட்டான் ராஜேஷ். எனக்கு எரிய ஆரம்பித்தது.அவனை தவிர்க்கத் தொடங்கினேன்.

ஒரு விடுமுறை நாளில் புதர்ப்பக்கம் ஒதுங்கியபோது, ராஜேஸையும் அங்கே பார்த்தேன். அவன் கிடைத்தது போதும் கேட்டகிரி. உடனே அவன் மனதுக்கு நெருக்கமானவனாக மாறிவிட்டான். அவனுக்கும் பில்டரின் மகத்துவத்தை எடுத்துரைத்து என் கட்சியில் சேர்த்துக் கொண்டேன்.

ஆசை தானே மனிதனை குகையில் இருந்து காஸ்மோபாலிட்டன் வரை கொண்டு வந்திருக்கிறது. எங்கள் ஆசை முழு சிகரட்டை நோக்கி எங்களை தூண்டியது. நாளும் குறிக்கப்பட்டது. காசும் சேர்க்கப்பட்டது.அந்த சுபயோக சுபதினம் ராஜேஸ் வீட்டார் ஒரு திருமணத்திற்க்கு செல்லும் ஞாயிற்றுக் கிழமை.

அந்த நாளும் வந்தது. எங்கள் உறவுக்காரர் விக்கெட் ஒன்றும் விழுந்தது. யாருக்கும் தொல்லையில்லாம ஞாயித்துக்கிழமை செத்திருக்காரு, நல்ல சாவு என்று சொல்லி வீடே கிளம்பியது. என் சோகம் இழவு வீட்டிற்க்கு சிங்காகிப் போனது.

திரும்பி வந்தால் தெருவில் ஒரே பேச்சு. நம்ம ராஜேஸா இப்படி? என்று. தப்பை தப்பாகச் செய்து மாட்டிக்கொண்டான் அவன்.

என் தாய்,தமக்கைகள் எல்லோரும் இவனும் இப்படித்தான் இருப்பான். நாலடி போட்டு விசாரிங்க என்று என் தந்தையைத் தூண்டினார்கள்.ராஜேஸிடம் பலமுறை ஜாடை மாடையாக விசாரித்தார்கள்.

அவனும் காட்டிக்கொடுக்கவில்லை. என் தந்தையும் இன்றுவரை என்னிடம் அதைப் பற்றி கேட்டதில்லை.

August 12, 2009

தேங்காய் சீனிவாசன் - சில நினைவுகள்

நாற்பது வயதானாலே நாய்க்குணம் ஆண்களுக்கு வந்துவிடும் என்று சொல்வார்கள்.
இந்த நாய்க்குணம் என்பது வீட்டைக் காவல்காக்கும் என்ற அர்த்தத்தில்.
படியவாரிய தலைமுடி,கைவைத்த பனியன்,நறுக்கிய மீசை,கலரில்லாத உடை
என தங்கள் கேரக்டரையே பெரும்பாலான ஆண்கள் இந்த வயதில் மாற்றிக்கொள்வார்கள்.

இந்த வளர்சிதை மாற்றம் சிலருக்கு, தன் பெண்ணை ஒருவன் சைட்டடிக்கத்
தொடங்கிய பின்னரோ அல்லது தன் மகன் செகண்ட் ஷோ தனியாகப் போக
ஆரம்பித்தவுடனோவும் வரப்பெறும்.

ஆனால் சிலர் மட்டும் இந்த மாற்றம் வாய்க்கப்பெறாமல் காலம் முழுவதும் மைனராகவே
திரிவார்கள். மகள் கல்யாணத்திற்க்கு முதல் நாள் கூட மேட்னி ஷோ சினிமா போவார்கள்.
பளபள ஷேவ், மடிப்பு கலையாத ஆடை, பெண்களைக் கண்டால் அலைபாயும் கண்கள் என
தங்கள் சுயத்தை விடாமல் இருப்பார்கள். தெருவிற்கு ஒன்றிரண்டு பேர் இப்படி நிச்சயம் இருப்பார்கள்.

இம்மாதிரி ஆட்களை வெள்ளித்திரையில் அட்டகாசமாக பிரதிபலித்த நடிகர், 70களிலும் 80களிலும் தமிழ் சினிமாவைக் கலக்கிய மறைந்த தேங்காய் சீனிவாசன்.

சித்தூர் சீனிவாசன் என்ற இயற்பெயருடன் சினிமாவுக்கு வந்தவர்,
தான் ஏற்று நடித்த தேங்காய் என்னும் கேரக்டரின் மூலம் தேங்காய் சீனிவாசனானார்.நடிக்க வரும் பெரும்பாலானோர் நாயகன் ஆகும் கனவுடனேயே திரையுலகுக்கு வருவார்கள். ஆனால் காமெடியன் ஆகும் எண்ணத்துடனே சீனிவாசன் சென்னை வந்தார் என நாம் கொள்ளலாம். ஏனென்றால் அவர் சென்னைக்கு வந்து முதலில் சந்தித்ததே காலத்தை வென்ற காமெடியன் சந்திரபாபுவைத்தான். ஒரு தெய்வத்தைப் பார்க்கும் மனநிலையுடன் சந்திரபாபுவை சீனிவாசன் பார்த்தாரென ஒரு கட்டுரையில் அருள்
எழிலன் குறிப்பிட்டுள்ளார்.

காமெடியன், கேரக்டர் ஆர்டிஸ்ட், வில்லன், கதாநாயகன், தயாரிப்பாளர் என பல பரிமாணங்களை திரையில் அவர் எடுத்து இருந்தாலும் அவரின் பிம்பமாக நம்மிடம் எஞ்சியிருப்பது காமெடியன் வேடமும், நாற்பதுகளின் மைனர் வேடமும்தான்.

இந்த மைனர் வேடத்தை இவருக்கு முன்னாலும் பின்னாலும் காட்சிப்படுத்தியவர்கள் மிகக் குறைவு. டிக் டிக் டிக் படத்தில் போட்டோ ஸ்டுடியோ ஓனராக வந்து, தன் தொழிலாளி கமலுக்கு கால் கேர்ள்கள் அட்ரஸைக் கொடுத்து டென்சனை குறைத்துக் கொள்ளச் சொல்வார். அப்போது அந்த சுகத்தை அவர் வர்ணிப்பது இப்போதைய டெலிபோன் செக்ஸ் அழைப்புகளுக்கு முன்னோடி எனச் சொல்லலாம்.

தென்றலே என்னைத் தொடு வில் மோகனின் மேனேஜராக, சனிக்கிழமையானால் கால்கேர்ள்களிடம் கட்டாயம் செல்ல வேண்டுமென துடிக்கும் நடுத்தர வயது வேடம். தேங்காய்க்குத்தான் அது அல்வாவாயிற்றே. மாட்டிக்கொள்ளாமல் அதைச் செய்வதும், தன் மனைவி காந்திமதியை ஏமாற்றுவதுமாய் மனுஷன் பின்னியிருப்பார்.

தங்கமகனில் ரஜினிக்கு தந்தையாக ஆனால், வில்லன் வேடம். வில்லனாக இருந்தாலும் சாண்ட்விச் மசாஜை பற்றி ஒரு வசனமும் உண்டு. வீரப்பா,நம்பியார் காலம் முதல் இப்போதைய கிஷோர், சம்பத் காலம் வரை எல்லோருக்கும் வில்லனைப் பார்த்தாலே பயம் வரும்படியாகத்தான் காட்சிகள் அமைப்பார்கள். ஆனால் இதில் தேங்காய் மட்டும் விதிவிலக்கு. வில்லனாக இருந்தாலும் அவருக்கு வசனங்களிலும்
நடவடிக்கைகளிலும் ஒரு கிளுகிளுப்பு சாயத்தைப் பூசிவிடுவார்கள்.

இதனால் காக்கிச்சட்டை படத்தில் கூட சைடு வில்லனாக இருந்தாலும், கஞ்சா கடத்துதலும், விபச்சாரமுமே இவரது தொழிலாக சித்தரித்திருப்பார்கள்.

இவர் நாயகனாக நடித்த நான் குடித்துக் கொண்டேயிருப்பேனில் (தலைப்பிலேயே) கூட குடியால் கெடும் வேடமே.

ஆனால் தேங்காயின் லேண்ட் மார்க் படங்களாக கருதப்படும் காசேதான் கடவுளடா படத்திலும், தில்லு முல்லு படத்திலும் ஒன்றுக்கொன்று முரணான கேரக்டர்கள், முக்கியமாக அவரது டிரேட் மார்க் இல்லாத கேரக்டர்கள். காசேதான் கடவுளடா படத்தில் சென்னை பாஷை பேசும் டீக்கடை உரிமையாளர் நண்பர்களுக்காக போலி சாமியார் வேடத்தில் நடித்து ஏமாற்றும் கேரக்டர். தில்லுமுல்லில் கம்பெனி உரிமையாளர் தன் பணியாளரிடம் ஏமாறும் கேரக்டர்.

வானவில்லின் இரண்டு எதிரெதிர் முனைகளின் நிறங்களைப் போன்ற வேறுபாடான கேரக்டர்கள். இரண்டிலும் மிளிர்ந்தவர் தேங்காய்.


தேங்காய் சீனிவாசனின் இன்னொரு தனித்தன்மை அவரது வேறுபாடான வசன உச்சரிப்புகள். மாடுலேஷன் எல்லோரும் செய்வதுதான் என்றாலும் பச்சக், கிச்சக்,ஜலாபத்ரி என ஏராளமான தமிழில் நாம் கேட்டறியாத சொற்களைத் திரையில் ஒலிக்கச் செய்தவர் தேங்காய்தான். இவரது மறைவும், சின்னி ஜெயந்தின் வருகையும் சமகாலத்தில் நிகழ்ந்தது. இவர் விட்டுச் சென்ற ஜில்பான்ஸி, கில்போத்ரி பாணி சொற்களை சின்னி தத்தெடுத்துக் கொண்டார்.

ஆரம்ப காலத்தில் சிவாஜியுடன் மிக நெருக்கமாக இருந்தாலும், பின்னர் எம்ஜியாருடன் நெருக்கமானார். ஆனால் அதன் பின் சிவாஜியை நாயகனாக வைத்து கண்ணன் வந்தான் படத்தை தயாரித்தார். கமல்ஹாசனுடன் பல படங்கள் செய்திருந்தாலும், ஒப்பீட்டளவில் இவர் ரஜினிகாந்துடந்தான் அதிக படங்கள் செய்துள்ளார்.

பில்லா,கழுகு,தங்கமகன்,தாய்வீடு, நான் சிகப்பு மனிதன் என ஏராளமான படங்களில் ரஜினியுடன் வித விதமான கேரக்டர்களில் நடித்துள்ளார்.

அவர் மறைந்து 20 வருடங்கள் ஆனாலும், நம் மனதை விட்டு அவர் அகலப் போவது எப்போதுமில்லை

July 14, 2009

நாகராஜன் சந்து

எங்கள் ஊர்ப்பகுதிகளில் ஒரு வழக்கம் இருந்து வருகிறது. வேறொன்றுமில்லை.ஊரின் பெயரைச் சுருக்கி வாடகை சைக்கிள் செயின் கார்ட்,கடை விளம்பரப் பலகை மற்றும் திருவிழா போஸ்டர்களில் எழுதுவது. வத்தலக்குண்டு என்னும் பெயரை வதிலை என்றும், கெங்குவார்பட்டியை கெங்கை, தும்மலப் பட்டியை துமிலை என்றும் சுருக்குவார்கள். அதில் தப்பொன்றும் இல்லை. சுருக்கத்துக்குப் பின்னால் மாநகர் என்னும் அடை மொழியைச் சேர்ப்பார்கள். அதைப் பார்க்கும் போதுதான் வயிறெறியும். 200 வீடுகள் இருக்கும் தும்மலப்பட்டியை துமிலை மாநகர் என்று சொன்னால் வேறு எப்படி இருக்கும்?

அப்படியொரு பெயரைப் பெற்ற வதிலை மாநகரில் எதற்கு குறைவிருக்கிறதோ இல்லையோ ருசியான சாப்பாட்டுக்கு மட்டும் குறைவிருக்காது. ஆறு, ஏரி ஏன் கடலே வத்தினாலும் வத்தாதது வதிலை மாநகர மாந்தரின் வயிறு.

காலை ஐந்துமணிக்கு குழந்தைகளுக்காக ஆரம்பிக்கும் பனியார,ஆப்பக்கடைகள் ஏழு மணியளவில் இட்லி தோசைக் கடையாக பரிணாம வளர்ச்சி அடையும். காலை பத்துமணிக்கு அங்கே இனிப்பு சிய்யம்,வெங்காய போண்டா போட ஆரம்பிப்பார்கள். 12 மணியளவில் மசால் வடையும், உளுந்த வடையும்.

ரன் ரேட் எப்படியிருந்தாலும் நாலைந்து ஓவரில் மேக்கப் செய்துவிடும் அதிரடி பேட்ஸ்மெனைப் போன்றவை இந்த வடைகள். ஆம் எவ்வளவு மட்டமான சாம்பார்,ரசத்தையும் ருசியாக்கி விடும் வல்லமை இவைகளுக்கு உண்டு. மாலை மூன்று மணிக்கு அவல் கேசரியும், தவளை வடையும் தங்கள் இன்னிங்சை ஆரம்பிக்கும்.

நடைபாதைக் கடைகளே இப்படியென்றால் நளனே வந்து ரெசிப்பி கேட்கும்படி சுவையாக இருக்கும் வதிலை மாநகர ஹோட்டல் அயிட்டங்கள். கறி வாங்கி சமைப்பது அவர்களுக்கு ஆகாது. தங்கள் டேஸ்டுக்கேற்ப ஆடுகளை வளர்த்து வெட்டிச் சமைப்பார்கள் அங்கே. ஒருவர் அகத்திக்கீரையை மட்டுமே போட்டு ஆட்டை வளர்ப்பார். இன்னொருத்தவர் ஆட்டுத்தீவனமே வீட்டில் தயார் செய்வார்.

காலை ஐந்து மணிக்கு ஆட்டை வெட்டியதும் ஸ்பெசலாக ரத்தப் பொறியலும், வெங்காய குடல் கறியும் தயாராகும். அதை வாங்க வரிசையில் நிற்பவர்கள் வீட்டிற்கு பெரும்பாலும் மாப்பிள்ளை வந்திருப்பார். இரவு ஏழு மணிக்கு தயாராகும் புரோட்டாக்கள். விண்டவர் கண்டிலர் என்னும் கம்பராமாயணப் பாட்டிற்கு அர்த்தம் வேண்டுபவர்கள் சாப்பிடுவோரின் இலைகளைப் பார்க்கலாம். இந்தக் கடைகளில் மாவு இரவு மூன்று மணி வரை இருக்கும்.

இரவு மூன்று மணிக்கும் காலை ஐந்து மணிக்கும் இடையே  பசியெடுத்தால் என்ன செய்வது? இருக்கவே இருக்கின்றன. காளியம்மன் கோயில் பகுதி டீக்கடைகள். பால் பன்,அச்சு பன்,தேங்காய் பன்னில் இருந்து செவ்வாழை,பச்சை,புள்ளி,கற்பூர,நாட்டு வாழை வரை சூடான டீயுடன் கிடைக்கும்.

இவ்வளவு சாப்பாட்டுக் கடைகள் இருக்கும் ஊரில் ஒரு டாய்லெட் கூட இல்லை என்றால் எப்படியிருக்கும்? ஆம். அதிர்ஷ்டவசமாக பெண்களுக்கு மட்டும் சில பொதுக்கழிவறைகள் இருந்தன. பாதாள சாக்கடைத் திட்டம் போன்ற எதுவுமில்லாத ஊரில் ஆண்கள் எங்கே தங்கள் கடன்களை கழிப்பது?

மூன்று வயதுவரை அந்த வைபவம் வீட்டிலேயே நடந்துவிடும். பக்குவமாக பார்சல் செய்யப்பட்டு வீதியில் டிஸ்போஸ் செய்யப்படும். அதனால் நிமிர்ந்த நெஞ்சும் நேர்கொண்ட பார்வையும் அங்கே வேலைக்காகாது. மூன்று வயதுக்கு மேல் தெரு ஓரத்தில் குப்பைத் தொட்டிக்கு அருகில் அந்த சடங்கு நிறைவேற்றப்படும். அந்தப் பையனுக்கு வெட்கம் வரும் வரையிலோ அல்லது பார்ப்பவர்களுக்கு எரிச்சல் வரும் வரையிலோ அந்த இடம்தான்.

அடுத்தகட்ட பிர மோசன் நாகராஜன் சந்து என ஒருகாலத்தில் அழைக்கப்பட்ட நரகல் சந்து. நூறு நூற்றி இருபது மீட்டர் நீளத்தில் வளைந்து நெளிந்து இருக்கும் அந்த சந்தில் காலைக் கடன்களை கழிக்க பஞ்சாயத்து அனுமதி இருந்தது. நாம் போகும்போது யாராவது உட்கார்ந்திருந்தால் அவர் பக்கத்தில் போய் உட்கார்ந்து விடக்கூடாது. எவ்வளவு தூரம் தள்ளிப் போக முடியுமோ அவ்வளவு தூரம் தள்ளிப் போய்விட வேண்டும். அடுத்து வருபவன் இருவருக்கும் இடைப்பட்ட இடத்தில் உட்கார வேண்டும். இது அங்கே
உள்ள ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட்.

பின் சுத்தம் செய்வதற்கு சந்தின் கடைசியில் இருக்கும் மழை நீர் தேங்கும் பள்ளத்துக்கு செல்ல வேண்டும். அங்கே தேங்காய் மூடி, பாதி உடைந்த பிளாஸ்டிக் மக், ஓட்டையிருக்கும் தகர ஆயில் டின் ஆகியவை இருக்கும். அவற்றில் நீர் வாரி வேலையை முடித்துக் கொள்ள வேண்டும். நேரடியாக பள்ளத்தில் இறங்கி விடக்கூடாது என்பது அக்ரிமெண்டின் உப சரத்து.

இதற்கடுத்த புர மோசனும் உண்டு. மூன்று கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் சுடுகாடு. பத்துவயதில் என்னுடைய கனவே, சைக்கிள் எடுத்துச் சென்று சுடுகாட்டில் காலைக் கடன் முடிக்க வேண்டும் என்பதே. கழுவுவதற்கு வசதியாக பம்ப்செட் தண்ணீர் அங்கே இருப்பது கூடுதல் வசதி.அந்தக் கனவு கைகூடும் முன்னரே நாங்கள் வேறு ஊருக்கு இடம்பெயர நேரிட்டது.

அங்கே துயரத்தின் உச்சமாக வீடுகள் எடுப்பு கக்கூஸுடன் இருந்தன. அதனாலேயே அந்த வீடு எனக்கு அன்னியமாகவே இருந்தது. இரண்டு மூன்று நாட்களில் நண்பர்கள் கிடைக்க, அந்த ஊர் நாகராஜன் சந்து அறிமுகமானது. அன்னியமான கூட்டுக்குடும்ப வீட்டில் கட்டிக்கொடுக்கப் பட்ட பெண், அங்கே வளைய வர எவ்வளவு கூச்சப்படுவாளோ, அதற்கு நிகரானது இந்த மாதிரி புது இடங்களில் புழங்குவதும். நான்கு நாட்களில் அந்த சந்திற்கான ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட் பிடிபட்டுவிட ரிலாக்ஸானது காலைகள்.

பதினெட்டு வயதில் இந்தப் பிரச்சினை ஓய்ந்தது. கல்லூரி விடுதிக் கழிவறைகள் ஓரளவு வசதியாகவே இருந்தன. அந்தக் கதவில் கிறுக்கப்படும் கிசுகிசுக்கள், ஒன்லைனர்கள் கூடுதல் சுவராசியம்.

மூன்று ஆண்டுதான் நீடித்தது அந்த சுகம். பின் வேலைக்காக சென்னை மேன்ஷன். அப்பா எவ்வளவு சொல்லியும் ஐந்து மணிக்கு எந்திரிக்காத என்னை திருத்தியவை மேன்சன் கழிவறைகளே. பந்திக்கு கூட முந்தக்கூடாது, இதற்கு முந்துவது தான் அவசியம் என உணர்த்தியது அதன் சுத்தம். குடிக்கக் கூட மினரல் வாட்டர் உபயோக்கிக்காத நான், ஒரு முறை தண்ணீர் தீர்ந்ததால், கழுவ அதை வாங்கியது வாழ்க்கையின் நகைமுரண்.

இப்போது பரவாயில்லை, புறநகரில் தனி வீட்டில் வாடகைக்கு இருக்கிறேன். அதை விட முக்கியம் தனிக் கழிவறை.

சென்ற வாரம் அப்பா வந்திருந்தார். கிளம்பும் போது, பெண் பார்க்கப் போகிறோம். ஏதாவது அபிப்ராயம் இருந்தால் சொல் என்றார்.

”பொண்ணு எப்படியிருந்தாலும் பரவாயில்லை. அந்த வீட்டில கக்கூஸ் கொஞ்சம் தனியா இருக்கணும் அவ்வளவு தான்” என்ற என்னை வித்தியாசமாகப் பார்த்தபடியே கிளம்பினார் என் அப்பா.