September 16, 2008

சரித்திரம் படைத்த இயக்குனர் - ஸ்ரீதர் : பகுதி- 2

இந்த பதிவின் முதல் பகுதி

ஸ்ரீதர் அவர்களின் படங்களில் பாடல்கள் சோடை போனதே இல்லை. நகைச்சுவை எப்போதும் ரசிக்கத்தக்கதாய் இருக்கும். கதாநாயகிகளின் தோற்றம், பாடி லாங்குவேஜ் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கும்

1967 ஊட்டி வரை உறவு

1968 கலாட்டா கல்யாணம்

1969 சிவந்த மண்

1971 உத்தரவின்றி உள்ளே வா

1972 அவளுக்கென்று ஒரு மனம்

1974 உரிமைக்குரல்

சிவாஜி அவர்களுடன் இணைந்து எடுத்த ஊட்டி வரை உறவு,கலாட்டா கல்யாணம் ஆகியவை நல்ல நகைச்சுவை படங்கள். சிவந்த மண் ஒரு மசாலா படம். எம்ஜியாரை வைத்து அவர் இயக்கிய உரிமைகுரலும் அவ்வகையே. மிகப்பெரிய நடிகர்களை வைத்து இயக்கும் போது அவர்களுக்காக சில காட்சிகளை அமைக்கும் கட்டாயம் எல்லா இயக்குனர்களுக்கும் நேரிடுகிறது. அது இவருக்கும் ஏற்பட்டது. இந்த காலகட்டத்தில் இவரின் படங்கள் முந்தைய படங்களோடு ஒப்பிடும் போது ஒரு மாற்று குறைவே.

1978 இளமை ஊஞ்சலாடுகிறது

1979 அழகே உன்னை ஆராதிக்கிரேன்

1983 ஓடை நதியாகிறது

1984 ஆலய தீபம்

1985 தென்றலே என்னை தொடு

1986 யாரோ எழுதிய கவிதை, நானும் ஒரு தொழிலாளி

1991 தந்து விட்டேன் என்னை

இளமை ஊஞ்சலாடுகிறது

காதலன், காதலனின் நண்பன், காதலி, காதலியின் தோழி இளம் விதவை. இந்த நான்கு பாத்திரங்களை சுற்றி சுழலும் கதை. சந்தர்ப்ப சூழ்நிலையால் காதலன், இளம் விதவை உறவு கொண்டுவிட கோபமடைந்த காதலி, காதலனின் நண்பனை திருமணம் செய்ய முடிவெடுக்க தொடங்குகிறது உணர்ச்சி போராட்டம். காதலன் - கமல்ஹாசன், காதலி - ஸ்ரீப்ரியா, நண்பன் - ரஜினி காந்த், விதவை - ஜெய்சித்ரா. தண்ணி கருத்துருச்சு, என்னடி மீனாட்சி?, கிண்ணத்தில் தேன் வடித்து, நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் போன்ற கலக்கல் பாடல்கள் நிறைந்தது. இந்த படம் வந்த புதிதில் மீனாட்சி என்ற பெயருள்ள பெண்களை கலாய்க்க இளைஞர்கள் இப்பாடலை பயன்படுத்தினார்கள். தற்போது, என்னைத் தெரியுமா? என்னும் படத்துக்காக தண்ணி கருத்துருச்சு பாடல் ரீமிக்ஸ் செய்யப்படுகிறது.
என்னைக் கேட்டால் இந்தப் படத்தை, அஜித்,சூர்யா,அசின்,மீரா ஜாஸ்மின் ஆகியோரை வைத்து, யுவன் இசையில் யாராவது ரீமேக் செய்யலாம்.

நானும் ஒரு தொழிலாளி

கமல்,அம்பிகா நடிக்க சக்தி என்னும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டு, இப்பெயரில் வெளிவந்தது. நீண்ட நாட்கள் (7 ஆண்டுகள்) இப்படம் தயாரிப்பில் இருந்ததாக கூறுவார்கள். பேஷன் மாற்றம் இப்படத்தில் நன்கு தெரியும். சில காட்சிகளில் பெல்ஸ்ம், சில காட்சிகளில் பேண்ட்டும் கமல் அணிந்திருப்பார். இதில் இடம்பெற்ற நான் பூவெடுத்து, செம்பருத்தி பூவூ போன்ற பாடல்கள் மிக இனிமையானவை. படம் தோல்வி.


தென்றலே என்னை தொடு

ஒவ்வொரு பெண்ணும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தன் அழகின் உச்சத்தில் இருப்பார். அது அவர்களின் ஜீன்,வளர்ப்பை பொருத்தது. ஜெயஸ்ரீ தன் உச்சக்கட்ட அழகில் இருந்த போது எடுக்கப்பட்ட படம் இது. மோகன்,தேங்காய் சீனிவாசன், காந்திமதி, ஒய் ஜி மகேந்திரன் நடிப்பில் வெளிவந்த சாப்ட் ரொமாண்டிக் மியுசிகல் காமெடி. தென்றல் வந்து, கண்மனி நீ வரக் காத்திருந்தேன் போன்ற சூப்பர் ஹிட் பாடல்கள் நிறைந்தது. இப்படம் ஓடியதற்க்கு இளையராஜா தான் காரணம் என்றும். இல்லை இல்லை ஜெயஸ்ரீ தான் காரணம் என்றும் எங்கள் விடுதியில் ஒரு பட்டிமன்றமே நடந்தது.

இவர் கடைசியாக இயக்கிய படம் தந்துவிட்டேன் என்னை. விக்ரம் கதாநாயகன். காதலிக்க நேரமில்லை திரைபடத்தை ரீமேக் செய்யும் உரிமையை, இவரிடம் இருந்து இயக்குனர் மனோ பாலா பெற்றுள்ளார். நடிக நடிகையர் தேர்வில் பல ஹேஸ்யங்கள் நிலவுகின்றன.

தற்போது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, தன் மனைவியின் துணையால் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இன்னும் இவரின் கலைத்தாகம் குறையவில்லை. அண்மையில் இவரை சந்தித்த பாரதிராஜா விடம், நல்ல கதை இருக்கிறது, குணமடைந்தவுடன் விரைவில் அதை இயக்குவேன் என்று சொல்லியிருக்கிறார்.


சரித்திர சாதனையாளரே மீண்டு வாருங்கள், மீண்டும் வாருங்கள். புது ஒளிப்பதிவாளர்கள்,இசை அமைப்பாளர்கள், நடிக,நடிகையர் இருக்கிறார்கள். அவர்களோடு இணைந்து ஒரு கலானுபவத்தை இந்த தலைமுறைக்கும் .தாருங்கள்

14 comments:

புருனோ Bruno said...

//தண்ணி கருத்துருச்சு, என்னடி மீனாட்சி?, கிண்ணத்தில் தேன் வடித்து, நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் போன்ற கலக்கல் பாடல்கள் நிறைந்த//

மேலும் ஒரு பாடல் கூட உண்டு

”நெஞ்சத்தில் பெயர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்”

“கற்பனைகளில் சுகம் சுகம்
கண்டதென்னவோ நிதம் நிதம்”

”மழை நீ, நிலம் நான், மயக்கமென்ன...”

போன்ற அருமையான வரியுடன் :) :)

புருனோ Bruno said...

இந்த பாடல் தான்
http://www.youtube.com/v/0Uwks-nqgvY&hl=en

--

யூ டியுபில் உள்ள தமிழ் திரைப்பட பாடல்களின் எண்ணிக்கை வியக்க வைக்கிறது

--

விக்கிபிடியா போல் (அதை விட அதிமாக கூட) இங்கும் ஒரு அபார உழைப்பு இருக்கிறது என்று நினைக்கிறேன்

--

புருனோ Bruno said...

பாடல் வரிகள் கூட இணையத்தில் இருக்கிறது

http://thenkinnam.blogspot.com/2008/06/529.html

--

தமிழ் தவிர பிற இந்திய மொழிகளில் இந்த அளவு பங்களிப்பு இருக்கிறதா

--

குட்டிபிசாசு said...

//இந்தப் படத்தை, அஜித்,சூர்யா,அசின்,மீரா ஜாஸ்மின் ஆகியோரை வைத்து, யுவன் இசையில் யாராவது ரீமேக் செய்யலாம். //

ஏன் தனுஷ், சிம்பு, நயந்தாரா இன்னும் நன்றாக இருக்குமே!!

//சிவந்த மண் ஒரு மசாலா படம். எம்ஜியாரை வைத்து அவர் இயக்கிய உரிமைகுரலும் அவ்வகையே.//

சிவந்தமண் மொக்கை என்று சொல்ல இயலாது. கதையை ஒழுங்காக படம் எடுக்கவில்லை. அப்படத்தில் வரும் "பட்டத்துராணி" எனத்தொடங்கும் க்ளைமேக்ஸ் பாட்டு பெயர்போனது. எல்.ஆர்.ஈஸ்வரி அவர்கள் பாடியிருப்பார். இப்படத்தின் கதை "அன்று சிந்திய ரத்தம்" என்று எம்.ஜி.ஆருக்காக எழுத்தப்பட்டது என்று கேள்விப்பட்டேன். இப்படம் ஹிந்தியில் "தர்தி (1970)" என்னும் பெயரில் ஸ்ரீதர் எடுத்தார். சிவந்தமண் படத்தின் முதலில் 5-10 நிமிடம் வரும் முத்துராமன் வேடத்தை ஹிந்தியில் சிவாஜிகணேசன் நடித்தார்.

உரிமைக்குரல் படத்தில் வரும் "கையோடு வளையோசை" எனக்கு மிகவும் பிடித்த பாடல். வழக்கம் போல எம்.ஜி.ஆரின் சண்டைக்காட்சிகள் நன்றாக இருக்கும்.

உத்தரவின்றி உள்ளேவா ஒரு அக்மார்க் ஸ்ரீதர் படம். ஒரே வீட்டில் குடியிருக்கும் கல்யாணமாகாத ஆண்கள். அபலையாக அங்கே ஓடிவரும் ஒரு பெண். அந்தப் பெண்ணிடம் வழிந்தபடி இவர்கள் இடையே நடக்கும் குழப்பங்கள். நான் முதலில் இது பாலசந்தரின் படம் என்றே நினைத்திருந்தேன்.

ஊட்டி வரை உறவு படத்தில் வரும் "பூமாலையில் ஓர் மல்லிகை" எனக்கு பிடித்த பாடல். இப்பாடலில் நடனம் எதுவும் இல்லாமல் ஸ்ரீதரே அழகாக இயக்கி இருப்பார்.

குட்டிபிசாசு said...

எம்.ஜி.ஆர் நேரசி அரசியலுக்கு செல்லும் முன் நடித்த மீனவநண்பன், மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் ஸ்ரீதர் இயக்கியவை. மீனவநண்பனில் வரும் "நேருக்கு நேராய் வரட்டும்" பாடல் தான் எனக்கு நினைவில் உள்ளது.

மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தில் கதாநாயகியின் பெயர் "கயல்விழி" ...நம்ம புரட்சிதலைவர் "கயவி...கயவி"னு சொல்லி கலக்குவார்.

புருனோ Bruno said...

// தனுஷ், சிம்பு, நயந்தாரா//
ஜெய்சித்ராக்கு பதில் தானே நயன் தாரா :) :) :)

rapp said...

சிவந்த மண் எம்ஜிஆருக்காக உருவாக்கப்பட்டது. ஸ்ரீதர் அவர்களின் திட்டப்படி இதனையும் காதலிக்க நேரமில்லை படத்தையும் ஒன்றாக எடுக்க திட்டமிட்டு பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்தாராம். அதில்தான் வில்லங்கமே வந்தது. காதலிக்க நேரமில்லை படத்தை கலரிலும் இந்தப்படத்தை ப்ளாக் அண்ட் வொயிட்டிலும் கொடுத்ததுதான் பிரச்சினையானது. எம்ஜிஆருக்கு கோவம் வந்து படத்தில் நடித்துக் கொடுக்க மறுத்துவிட்டார். காரணத்தை ஸ்ரீதர் விளக்க முயன்றபோதும் முடியவில்லை. அப்பொழுது அவரும் புகழின் உச்சக்கட்டத்தில் இருந்ததால் இதனை கண்டுகொள்ளாமல் காதலிக்க நேரமில்லை இயக்க போய்விட்டார். பின்னர் இதனை எம்ஜிஆர் ரசிகர்கள் தவறாக எண்ணிக்கொண்டு பிரச்சினை செய்தனர். காதலிக்க நேரமில்லை படத்தின் தலைப்பிற்கே பெரிய பிரச்சினை கிளப்பினார்கள், ஆனால் அதுவே படத்திற்குக் கூடுதல் விளம்பரமாகி ஓஹோவென ஓட உதவியது. வெண்ணிறாடை படத்தின் ரிலீசின்போது சென்னையில் உள்ள தியேட்டர்களில் எம்ஜிஆரின் ரசிகர்கள் சிலர் காலேஜ் மாணவர்கள் போல் நுழைந்து சீட்டை கிழித்து அமர்க்களம் செய்து படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் செய்து கூப்பாடு போட்டனர். விபரீதத்தை உணர்ந்த ஸ்ரீதர் அவர்கள் எம்ஜிஆர் அவர்களின் காதிற்கு விஷயத்தை கொண்டுபோனவுடன் சமரசம் ஏற்பட்டது. ரசிகர்கள் கட்டிற்குள் வந்தனர்.

அதேப்போல தவறாக இருந்தால் மன்னிக்கவும். ஆலயமணி திரு.சங்கர் அவர்களின் இயக்கத்தில் வந்த படம் என்று நினைக்கிறேன். சென்ற பதிவில் இப்பொழுதுதான் கவனித்தேன்.

முரளிகண்ணன் said...

புருனோ,குட்டி பிசாசு, ராப் தங்கள் வருகைக்கும், அருமையான தகவல்களுக்கும் அளவில்லாத நன்றிகள்.

தொடர் ஆதரவை தாருங்கள்

ரவி said...

அம்பி கலக்குறேள் !!!!!!!!

narsim said...

தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்!

கலக்கலான பகுப்பாய்வு!..

அந்த படங்களை மீண்டும் பார்க்கத் தூண்டும் பதிவு..

நன்றி முரளி கண்ணன்.

நர்சிம்

முரளிகண்ணன் said...

நர்சிம், செந்தழல் ரவி வருகைக்கு நன்றி

முரளிகண்ணன் said...

குட்டி பிசாசு, நீங்கள் பெரும் பிசாசு (சினிமா தகவல்களில்).லட்டு லட்டான தகவல்களை தருகிறீர்கள்.

முரளிகண்ணன் said...

ராப், எங்கேயிருந்து இவ்வளவு அருமையான தகவல்களை தருகிறீர்கள்? ஆச்சரியமாக இருக்கிறது.

முரளிகண்ணன் said...

புருனோ அவர்களே அந்த பாட்டை மறந்து விட்டேன். "ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது" அட்டகாசமான பாடல்