September 24, 2008

சினிமாவில் நீதிமன்றங்களின் அபத்த சித்தரிப்புகள்

பல அரசுத்துறைகளை சினிமாவில் தவறாக சித்தரித்து வருகிறார்கள். இதற்கு நீதித்துறையும் விதிவிலக்கல்ல. நீதிமன்ற காட்சிகள் பல படங்களின் அடிநாதமாக அமைந்திருக்கின்றன. அவற்றுள் சிலவற்றைப பார்ப்போம்

கௌரவம்
பாரிஸ்டர் ரஜினிகாந்த்தாகவும், அவரது தம்பி மகன் கண்ணனாகவும் சிவாஜி இருவேடத்தில் நடித்த படம். ஒரு கொலைக்குற்றவாளிக்கு தண்டனை வாங்கித்தரும் விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் எதிர் எதிராக மோதுவது தான் கதை. ‘கிளிக்கு றெக்கை முளைச்சிடுச்சு’ மறக்க முடியாத வசனம். இதில சிவாஜி ஏற்று நடித்த பாரிஸ்டர் ரஜினிகாந்த் வேட மேனரிஷங்கள் இன்று மிமிக்ரி செய்ய உதவி கொண்டிருக்கின்றன.

விதி
20 ஆண்டுகளுக்கு முன்பு மதிய நேரங்களில் முடிதிருத்தகம், டீக்கடை, ஒலி பெருக்கி வாடகை கடைகள் போன்றவற்றில் இந்த படத்தின் வசன கேசட் கேட்கப்பட்டுக்கொண்டிருக்கும். காதலி காதலனிடம் கற்பை இழக்கிறாள். காதலனின் தந்தை வக்கீல். காதலி மற்றொரு பெண் வக்கீலிடம் தஞ்சம் புகுகிறாள். இரண்டு வக்கீல்களுக்கும் இடையேயும் இதே நிகழ்வு முற்காலத்தில். விவாதம் அனல் பறக்கிறது. வசனம் ஆரூர்தாஸ். மோகன்,பூர்னிமா,ஜெய்சங்கர்,சுஜாதா நடித்த இப்படம் இந்தி ரீ மேக். பாலாஜி தயாரிப்பு.

நான் அவன் இல்லை

பல வேடங்களில் பெண்களை சாமர்த்தியமாக ஏமாற்றுகிறான் ஒருவன். நீதிமன்றத்தில் தன் சாதுர்ய பேச்சால் தப்பிக்கிறான். முதலில் பாலசந்தர் இயக்கத்தில் ஜெமினி கணேசன் நடித்தது. பின்னர் செல்வா இயக்கத்தில் ஜீவன் நடிக்க வெளிவந்தது.


கனம் கோர்ட்டார் அவர்களே/ மிடில் கிளாஸ் மாதவன்

இந்த இரண்டு படங்களிலும் ஜூனியர் வக்கீல்களின் கஷ்டங்களை காண்பித்திருப்பார்கள். கனம் கோர்ட்டார் அவர்களே யில் சத்யராஜ், மிடில் கிளாஸ் மாதவனாக பிரபு.

பராசக்தி, நான் சிகப்பு மனிதன், கேப்டன் பிரபாகரன் போன்ற படங்களின் கோர்ட்டில் நடக்கும் கிளைமாக்ஸ் காட்சிகள் பெயர் பெற்றவை. பராசக்தி யில் சிவாஜியின் அனல் கக்கும் பதிலுரை பல எதிர்ப்பதிவுகளை இன்றும் பெற்று வருகிறது. சட்டம், படிக்காதவன் போன்ற படங்களிலும் வக்கீல்கள் முக்கிய பாத்திரங்கள்.

அபத்த சித்தரிப்புகள்
௧. வழக்கறிஞர்கள் ஒரிடத்தில் நின்று கொண்டே பேச வேண்டும். ஆனால் இங்கே குறுக்கும் நெடுக்குமாக நடக்கிறார்கள்

௨. ஒரு நேரத்தில் ஒரு சாட்சி மட்டுமே விசாரிக்கப் படுவர். ஒரு சாட்சி கூண்டு தான் இருக்கும். இங்கேயோ எதிர் எதிர் கூண்டுகள்,வாதி பிரதிவாதிக்கென அது வாய்ப்பேயில்லை.


௩. ஒரு கூண்டில் ஒருவருக்கு மேல் நிற்க அனுமதியில்லை. இங்கே இருவர், மூவர் என.

௪. திடீரென ஒரு புதிய சாட்சியையோ, ஆதாரத்தையோ கோர்ட்டில் சமர்ப்பிக்க முடியாது. எதிர் வழக்கறிஞரிடம் அதைக்காட்டி அவர் அனுமதி அளித்த பின்னரே அதை சமர்ப்பிக்க முடியும். இங்கேயோ திடீரென ஒரு ஆதாரத்தைக்காட்டி திடுக்கிட வைப்பதாக காட்சி அமைப்பு இருக்கும்.


௫. எதிர் வழக்கறிஞரின் குறுக்கு விசாரனையின் போது, பதில் மட்டுமே அளிக்க வேண்டும். விளக்கம் அனுமதிக்கப்படாது. அது நம் வழக்கறிஞர் விசாரிக்கும் போதே தரவேண்டும். தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரத்தில் (மாயூரம் வேதநாயகம் பிள்ளை – ஆசிரியர்). இதுபற்றி கிண்டலாக எழுதியிருப்பார்.


எதிர் வக்கீல் – குதிரைக்கு ஒரு கொம்பா, இரண்டா?
வாதி - குதிரைக்கு கொம்பு இல்லைங்க
எதிர் வக்கீல் – கேட்ட கேள்விக்கி பதில்?
வாதி - (மனதுக்குள், ஒரு வேளை குதிரை காத

பத்தி கேட்கிறாரோ?) இரண்டு சார்.

எதிர் வக்கீல் - யுவர் ஆனர், குதிரைக்கு இரண்டு கொம்பு
என்கிறார் இவர்


௬. வழக்கறிஞர்கள் கத்தி பேசுவதில்லை. நீதிபதி,டைப்பிஸ்ட் க்கு கேட்டால் போதும்.

இனி வருபவர்களாவது அபத்தமில்லாமல் எடுக்கட்டும்

18 comments:

கிரி said...

இதெல்லாம் இருந்தால் தான் தமிழ் படம் என்று அறிவிக்கப்படாத சட்டம் உள்ளது :-))

பாசப்பறவைகள் கூட அருமையாக இருக்கும் ராதிகா லட்சுமி. முரளி கண்ணன் உங்களை இந்த வாரம் ஊருக்கு வந்த பிறகு தொடர்பு கொள்கிறேன்.

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி கிரி. பாசப்பறவைகளை இணைத்துக் கொள்கிறேன்.

தங்கள் வரவை எதிர்பார்க்கிறேன்

anujanya said...

எல்லா முக்கிய படங்களையும் சொல்லி விட்டீர்கள் என நினைக்கின்றேன். காவியத்தலைவி, எதிரொலி (சிவாஜி பாலசந்தர் இயக்கத்தில் நடித்த ஒரே படம்?) ஆகிய படங்களும் முக்கிய கதாபாத்திரங்கள் வழக்கறிஞர்களாக வந்தவை. ஜஸ்டிஸ் விஸ்வநாத் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நல்ல வேளையாக அந்தப் படம் பார்த்ததில்லை.

கோர்ட் படி ஏறியதில் பல ஆண்டுகள் வாழ்வைத் தொலைக்கும் அவலத்தை எந்த படமும் இதுவரை சொல்லாதது வருத்தமே. (வீடு எப்படி வீடு காட்டுவதின் சிரமங்களை விளக்கியதோ அவ்வாறு).

வாழ்த்துக்கள் மு.க.

அனுஜன்யா

சரவணகுமரன் said...

ஜென்டில்மேன் கிளைமாக்ஸ் காட்சியும் நன்றாக இருக்கும், நீங்கள் குறிப்பிட்ட தவறுகளுடன். :-)

சரவணகுமரன் said...

பிதாமகன், சுப்ரமணியபுரம் படங்களில் காட்டப்படும் கோர்ட் காட்சிகள் தான் சரியா?

Athisha said...

தலைவா நான் எழுதணும்னு நினைச்சிட்டுருந்தேன் நீங்க முந்திட்டேளே

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி அனுஜன்யா

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி சரவணகுமரன்

யோசிப்பவர் said...

//ஜென்டில்மேன் கிளைமாக்ஸ் காட்சியும் நன்றாக இருக்கும், நீங்கள் குறிப்பிட்ட தவறுகளுடன். :-)
//
ஆம். ஆனால், அந்நியனில் இந்த தவறுகள் ஓரளவு சரிசெய்யப்பட்டிருந்தன!!

முரளிகண்ணன் said...

யோசிப்பவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

புருனோ Bruno said...



௩.

வாழ்த்துக்கள்

இந்த எண்களை எப்படி உள்ளீடுவது

புருனோ Bruno said...

எனக்கு தெரிந்து பாய்ஸ் படத்தில் வரும் நீதிமன்ற காட்சி (அபராதம் விதிக்கப்படுவது) பரவாயில்லை.

--

நான் சினிமா பற்றி இரண்டு இடுகைகள் எழுதியிருக்கிறேன் :)

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி புருனோ, தமிழ் 99 முறையில் டைப் செய்து முதலில் உள்ளிடவும். பின்னர் 1,2,3 என்று அடித்தால் அதற்குரிய தமிழ் எண் வரும்

rapp said...

ஹா ஹா ஹா, சூப்பர். அதேப்போல இன்னொரு முக்கியான விஷயம், செஷன்ஸ் கோர்ட்ல வாதாடறவர் அடுத்த நாளே சுப்ரீம் கோர்ட் போறது.

rapp said...

இந்தப்பதிவு ரொம்ப கலக்கல்

முரளிகண்ணன் said...

ராப் வருகைக்கு நன்றி

தென்றல் said...

/நீதிமன்றங்களின் அபத்த சித்தரிப்புகள்../

ஒரு தாயின் சபதம் (நீதிமன்றம், விஷம், மருத்துவமனை, வசசசனனனனம்ம்ம்ம்.....?)

Prasanna Rajan said...

விருமாண்டி படத்தில் நீங்கள் மேற்க்கூறிய அபத்தங்கள் இல்லாமல் நீதிமன்ற காட்சி அமைந்து இருக்கும்.