September 13, 2008

மக்கள் கலைஞர் – ஜெய்சங்கர்

ஒரு நடிகர் தன் திரைவாழ்க்கையை தொடங்கி குறிப்பிட்ட காலம் வரை ரசிகர்களை ஈர்க்கிறார். ஒரு கட்டத்தில் புதிய ரசிகர்கள் வருவது நிற்கிறது. காரணம், முதலில் பார்வையாளனாக வந்து ரசிகனாகுபவன் தன் வயதுக்கு அருகாமையில் உள்ள நடிகர்களையே ஆதர்சமாக கொள்ளுகிறான். அடுத்த காரணம் ரசனை மாற்றம். இதன் காரணமாகவே நடிகர்கள் குறிப்பிட்ட வயதுக்குப்பின்னால் வெற்றி பெறுவது கடினமாகிறது. உச்ச நடிகர்கள் மட்டுமே இதனைத் தாண்டி தாக்குப்பிடிக்கிறார்கள். இங்கு எம்ஜியார்,சிவாஜி,ரஜினி,கமல் போன்றோரால் மட்டுமே தலைமுறையைத்தாண்டி ரசிகர்களை ஈர்க்க முடிகிறது. மற்றவர்கள் பீல்ட் அவுட் ஆகிறார்கள் அல்லது வில்லன்/ குணசித்திர நடிகர்களாக பதவியிறக்கம் பெறுகிறார்கள். இந்த தலைமுறையில் பிரபு,கார்த்திக் போன்றோரை இதற்கு உதாரணமாய் சொல்லலாம். இந்த காலகட்டத்தை நடிகர்களின் மெனோபாஸ் என்றும் சொல்லலாம்.

எம்ஜியார், சிவாஜி என்ற மலைகள் இருந்த போது தனக்கென ஒரு பாணியை வகுத்து தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட், மக்கள் கலைஞன் என்று பெயர் பெற்ற ஜெய்சங்கர் அவர்களும் இந்த காலகட்டத்தில் திணறி வில்லன் நடிகராக மாறினார். கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் நடித்த அவர் வெள்ளிக்கிழமை ஹீரோ எனவும் புகழப்பட்டவர். அவர் உச்சத்தில் இருந்த போது வருடத்துக்கு 20 படங்களுக்கு மேல் நடித்தார். விஜய் டிவியை ஸ்டார் குழுமம் வாங்கும்முன் அந்த டிவிக்கு ஆபத்பாந்தவனாக இருந்தவர் இவரே. இவரின் படங்களைப்போட்டே அந்த டிவி கிராமங்களில் ஜெய்சங்கர் டிவி என பெயர் பெற்றது.

இவர் வருகைக்கு முன் திரைஉலகில் சீனியர்களை அண்ணா,சார் போன்ற அடைமொழிகளில் அழைக்கும் பழக்கம் இருந்தது. ஹாய் என்று வர்க்கபேதமில்லாமல் அனைவரையும் அழைத்து ஒரு நல்ல பழக்கத்தை ஏற்படுத்தினார். (பின்னர் சத்யராஜ் வந்து – தலைவா என மாற்றினார்). துப்பறியும் படங்கள், கௌபாய் படங்கள் என்றால் அப்போதைய இயக்குநர்களின் முதல் சாய்ஸ் இவரே.

பட்டணத்தில் பூதம், துணிவே துணை, பூவா தலையா, வைரம், கங்கா, சி ஐ டி சங்கர், வல்லவன் ஒருவன்,யார் நீ, இருவல்லவர்கள், ஊமை விழிகள், குழந்தையும் தெய்வமும், நூற்றுக்கு நூறு,வீட்டுக்கு வீடு,நான்கு கில்லாடிகள் போன்ற படங்கள் இவரின் முக்கிய படங்கள். முரட்டுக்காளையில் வில்லனாக மாறி பின்னர் ரஜினியின் ஆஸ்தான வில்லனானார் (தனிக்காட்டு ராஜா, பாயும்புலி, துடிக்கும் கரங்கள்). கமலுடன் சவால், அபூர்வ சகோதரர்கள் என ஒரு ரவுண்டு வந்தார். இவருக்கென தனி ரசிகர் கூட்டம் இருந்தது. இவர் 2000 ல் மறைந்தார். மதுரையில் ஒவ்வொரு ஆண்டும் இவருக்கு நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது. பல சமூக சேவைகளை மூன்றாம் நபர் அறியாமல் செய்தவர். தயாரிப்பாளர்களை கஷ்டப்படுத்தாதவர். ஜெண்டில்மேன் என புகழப்பட்டவர்.

குறிப்பிட்ட வயதுக்குப்பின் தங்களுக்கு ஏற்ற கதைக்களங்களை உருவாக்கி அதில் மிளிர வேண்டும் அல்லது உருவாக்கத்தெரிந்த இயக்குநர்களின் ஆதரவு வேண்டும். இல்லையெனில் பதவியிறக்கம் தான் இங்கே.

24 comments:

Anonymous said...

ஜெமினி கணெசனுக்கு போட்டியா இருந்தார்னு கூட சொல்லலாம். ஜேம்ஸ் பாண்ட் டைப் கேரக்டகள்ல நடிச்சவர் இல்லையா

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி சின்ன அம்மிணி

புதுகை.அப்துல்லா said...

கால சொழட்டி சொழட்டி அடிக்கிறதுல ஓரு விதத்தில் கேப்டனுக்கே குரு இவரு :)

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி அப்துல்லா

புருனோ Bruno said...

இவரை குறித்து ஒரு முக்கிய விஷயம் விடுபட்டுள்ளது :) :) :) ஹி ஹி ஹி :) :) :)

குட்டிபிசாசு said...

முரளி,

ஜெய்சங்கர் மறக்கமுடியாத நடிகர். அவர் நடித்த திகில் படங்களில் அதிகம் நடித்தார். நீங்கள் சொன்னவை தவிர்த்து, எனக்குப் பிடித்தவை யார்நீ, ஊமைவிழிகள், நூறுக்குநூறு, இருவல்லவர்கள். இவை தவிர்த்து நல்ல குடும்பம் மற்றும் நகைச்சுவைப் படங்களிலும் நடித்துள்ளார் (குழந்தையும் தெய்வமும்,பூவா தலையா, இரவும் பகலும், வீட்டுக்கு வீடு, நான்கு கில்லாடிகள்).

இவருக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே காதல் இருந்ததாக ஒரு கேள்வி?

முரளிகண்ணன் said...

குட்டி பிசாசு தங்களின் பகிர்தலுக்கு நன்றி. நீங்கள் தரும் தகவல்களை நான் உங்கள் அனுமதியுடன் என் பதிவில் இணைத்துக்கொள்ளலாமா? ஏனென்றால் இம்மாதிரி தகவல்கள் கிடைப்பது அரிதாய் இருக்கிறது.

ஜெயலலிதா அவர்களுடன் உரிமையாய் பழகியவர் என்று பெரியோர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.

முரளிகண்ணன் said...

புருனோ அவர்களே உங்களுக்கு குறும்பு அதிகம்

பாலராஜன்கீதா said...

விளம்பரப்படுத்திக்கொள்ளாமல் சமூக சேவை செய்த நடிகர் அவர் என்ற ஒரு செய்தியையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

உண்மைத்தமிழன் said...

இவரால் நஷ்டப்பட்ட தயாரிப்பாளரே இல்லை என்ற அளவிற்கு திரைப்பட உலகில் ஜென்டில்மேனாக வாழ்ந்தவர். இடது கைக்குத் தெரியாத அளவுக்கு வலது கையால் அவ்வளவு உதவிகளை பலருக்கும் செய்திருக்கிறார். நல்ல மனிதர். ஆனால் தனக்குக் கிடைத்த பெயரான "உற்சாக மனிதர்" என்ற தோற்றத்தைத் தக்க வைக்க அவர் மேற்கொண்ட அதீத குடிப்பழக்கமே அவரை வெகு சீக்கிரம் நம்மிடமிருந்து பிரித்துவிட்டது. இந்தப் பழக்கத்திற்கு அவருக்கு நெருக்கமான நண்பர்களே ஒரு காரணம்..

இவர் போன்றவர்களெல்லாம் இன்றைக்கும் இருந்திருந்தால் தமிழ்த் திரையுலகில் புதிய புதிய வேடங்கள் நமக்குக் காணக் கிடைத்திருக்கும்..

செல்வம் said...

முரளி நிறைய விஷயங்கள் கூறியுள்ளீர்கள். நூற்றுக்குநூறு எனக்கு மிகவும் பிடிக்கும்.

BTW டாக்டர் என்ன சொல்ல வருகிறார். ஹி ஹி ஹி ஒரு கியூரியாசிடி தான்

முரளிகண்ணன் said...

பாலராஜன் சார் உங்கள் வருகை எனக்கு மிக மகிழ்ச்சி.

முரளிகண்ணன் said...

உண்மைத்தமிழன் அண்ணா, தங்கள் வருகைக்கும் கருத்துப்பகிர்தலுக்கும் நன்றிகள்

முரளிகண்ணன் said...

செல்வம்

எங்க பாட்டன் சொத்து, ஜம்பு போன்ற படங்களில் அவர் நடித்ததை நான் இங்கு சொல்லவில்லை. அதைத்தான் அவர் கூறினார்

வெட்டிப்பயல் said...

நூற்றுக்கு நூறு அருமையான படம். பாலச்சந்த்ர் டைரக்ஷன் :)

குட்டிபிசாசு said...

முரளி,

நீங்கள் தாராளமாக தகவலை இணைத்துக் கொள்ளுங்கள். கூடுதல் தகவலுக்காகத் தான் நானும் கூறினேன்.

rapp said...

//இவரை குறித்து ஒரு முக்கிய விஷயம் விடுபட்டுள்ளது :) :) :) ஹி ஹி ஹி :) :) :)

//

கன்னாபின்னாவென வழிமொழிகிறேன் :):):)

rapp said...

இவர் முத்துராமன் மாதிரி எந்த வட்டத்துக்குள்ளும் சிக்காம இருக்க முயற்சி செய்தவர்னு சொல்லணும். ஏன்னா இவர் ஜேம்ஸ்பாண்டு டைப் படங்கள் செய்துக்கிட்டே கொஞ்சமும் இமேஜ் பார்க்காமல் வீட்டுக்கு வீடு, பொம்மலாட்டம் போன்ற படங்களில் நடித்தார்.
அவர் கொஞ்சநாள் அரசியல்வாதியாக இருக்க முயற்சி பண்ணதை விட்டுட்டீங்களே:):):)

முரளிகண்ணன் said...

ஆமாம் பாலாஜி, அவர் நூற்றுக்கு நூறில் மிகையில்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்

முரளிகண்ணன் said...

நன்றி குட்டிபிசாசு

முரளிகண்ணன் said...

ராப்,

தாங்கள் பல விஷயங்களைத் தெரிந்து வைத்துள்ளீர்கள். உங்கள் தகவலை இணைத்து விடுகிறேன்

Unknown said...

வளசரவாக்கத்துல அவருடைய "ஜெய் கார்டன்" இன்னமும் இருக்கா? சமீப காலம் வரைக்கும் அது ஒரு பாப்புலர் ஷீட்டிங் ஸ்பாட்.

சரவணகுமரன் said...

// இந்த காலகட்டத்தை நடிகர்களின் மெனோபாஸ் என்றும் சொல்லலாம்.//

//அந்த டிவி கிராமங்களில் ஜெய்சங்கர் டிவி என பெயர் பெற்றது.//

சூப்பருங்க...

சரவணகுமரன் said...

ஹீரோவாக, வில்லனாக, காமெடியாக, குணசித்திரமாக என்று எல்லா வகையிலும் பிரகாசித்தவர்.