September 19, 2008

தலைமுறையை உருவாக்கும் இயக்குனர்கள் பகுதி 2

இதன் முதல் பகுதி இங்கே

தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை போன்ற சில படங்களை தவிர பாலசந்தரின் அனைத்து படங்களும் உயர் மத்தியதர வாழ்க்கையையே பேசும். இரு கோடுகள்,பாமா விஜயம் ஆகட்டும், அரங்கேற்றம் ,அவள் ஒரு தொடர்கதையாகட்டும் வசதியான/வசதியற்ற மத்திய தர வர்க்கமே அங்கு கதைக்களன். நாடக இயக்குனராக இருந்துவிட்டு திரைத்துறைக்கு வந்ததால் இவரின் படங்களில் நடிப்புக்கு குறை இருக்காது. அதனால் தான் ரஜினி,கமல்,விவேக்,பிரகாஷ்ராஜ்,சௌகார் ஜானகி, சரிதா, ரேனுகா என பலரை பட்டை தீட்ட முடிந்தது.

இவரின் ஆரம்பகாலப் படங்கள் எல்லாமே இவரது நாடகங்களின் நீட்சியே. வாழ்க்கை என்பது வட்டம் என்பதால் அந்த படங்கள் இப்போது தொலைக்காட்சி நாடகங்களாக வந்து கொண்டிருக்கின்றன. இவரது உதவி இயக்குனர்களில் விசு,அமீர் ஜான்,சுரேஷ் கிருஷ்னா,வசந்த்,சரண் போன்றோர்கள் வெற்றி பெற்றவர்கள். அனந்து அவர்கள் சிகரம் என்னும் படத்தை இயக்கினார். இடைக்கால படங்களில் இவர்களின் பங்களிப்பு இருந்தாலும் கடைசியில் பாலசந்தரின் முகமே நமக்கு தெரியும். அவரின் அலைவரிசையிலேயே இவர்களும் சிந்தித்தார்கள். எனவே தான் அவரின் சாயல் இவர்களது படங்களில் வந்துவிடும். சுரேஷ் கிருஷ்னா,சரண் போன்றோர் ஜனரஞ்சக படங்களை இயக்கினாலும் குறிப்பிட்ட காலத்துக்குப் பின் தோல்விப் படங்களையே அளித்தார்கள்.

இளைஞர் போல் சிந்திப்பவர் கே.பி என்று சொல்லப்பட்டாலும் புதிய செய்திகளை உள்வாங்குபவர் என்று சொல்ல முடியாது. 1977 ல் அவர்கள் படத்தில் ரஜினி செய்ததையே 1996 ல் கல்கி படத்தில் பிரகாஷ்ராஜ் செய்தார். அவரின் பெண் பாத்திரங்களை பார்த்தோமேயானால் இன்று வரையில் அதில் மாற்றம் இருக்காது. அபூர்வ ராகங்கள் படாபட்டும், ஜாதிமல்லி யுவராணியும், கல்கி ஸ்ருதியும் ஒரே மாதிரி பெண்ணுரிமை வசனம் பேசுவார்கள். அவரிடம் சில வகை பாத்திரங்கள் உண்டு. காலங்கள் மாறும் போது அதில் புதியவர்கள் வருவார்கள். இதனால் தான் அவரின் உதவி இயக்குனர்களும் ஒரு வட்டத்தை தாண்டி சிந்திப்பதில்லை.

பாரதி ராஜாவால் கருத்தம்மா வையும் எடுக்க முடிகிறது, கண்களால் கைது செய் யையும் எடுக்க முடிகிறது. ஆனால் பாலசந்தர் மத்திய தரத்தில் இருந்து இன்னும் வெளிவரவில்லை

கடந்த பத்து ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க படங்களை தந்தவர்கள் பாலு மகேந்திராவின் வாரிசுகளே

பாலா (சேது,நந்தா,பிதாமகன்)

அமீர் (மௌனம் பேசியதே,ராம், பருத்தி வீரன்)

ராம் (கற்றது தமிழ்)

வெற்றி மாறன் (பொல்லாதவன்)

சசி (சுப்ரமனியபுரம்)

பாடலாசிரியர் முத்துக்குமார் இவரிடம் உதவியாளராய் இருந்துவிட்டு பின்னர் பாட்டெழுத சென்று விட்டார்.

உலகப் படங்களை பார்ப்பது, புத்தகங்கள் படிப்பது என தான் செய்யும் எல்லாவற்றையும் உதவியாளர்களுடன் சேர்ந்தே செய்வார் இவர். அதனால் அவரின் ரசனை உதவியாளர்களிடம் படிந்து விடுகிறது. மாற்று சிந்தனை அந்த குழுவில் குறைவாகவே இருக்கும். மேற்கூறிய எல்லா படங்களிலும் அவரின் தாக்கம் இருப்பதை அறியலாம். 20 ஆண்டுகளுக்குப் பின்னரே இவரால் உதவியாளர்களுடன் ஓருயிர் பல உடலாக இருக்க முடிந்தது. தன் வயதொத்த ஆட்களுடன் ஆரம்பத்தில் ஓத்துபோக முடியவில்லை எனலாம். ஒரு மூத்த அண்ணன்/தந்தை ஸ்தானத்தில் இருந்து இளைஞர்களை இவர் இப்போது வழிநடத்துகிறார்.

இனிவரும் காலங்களில் பாலு மகேந்திராவின் வாரிசுகள் தலைமுறையை உருவாக்கலாம்


20 comments:

வினையூக்கி said...

// அரங்கேற்ற வேளை// ???

முரளிகண்ணன் said...

வினையூக்கி, திருத்தி விட்டேன் அரங்கேற்றம் என்று. மிக்க நன்றி

SathyaPriyan said...

//அபூர்வ ராகங்கள் படாபட்டும்//

அது அவள் ஒரு தொடர் கதை அபூர்வ ராகங்கள் இல்லை. திருத்தி விடுங்கள்.

இதே குற்றைச்சாட்டை பல இயக்குனர்கள் மீதும் சொல்ல முடியும்.

உதாரணமாக மௌனராகத்தில் ரேவதி முதல் காட்சியில் தனது தந்தையிடம் பேசும் வசனத்தையே அதே வடிவில் கண்ணத்தில் முத்தமிட்டால் படத்தில் அந்த சுட்டிப் பெண் மாதவனிடம் பேசுவாள்.

Unknown said...

\\வயதொத்த ஆட்களுடன் ஆரம்பத்தில் ஓத்துபோக முடியவில்லை எனலாம்// ‍ திருத்தவும்

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி சத்யப்ரியன்

இனி நிதானித்து எழுதுகிறேன் நன்றி

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி கடுகு

திருத்திக்கொள்கிறேன் நன்றி

SathyaPriyan said...

//
முரளிகண்ணன் said...
இனி நிதானித்து எழுதுகிறேன் நன்றி
//
முரளிகண்ணன் அதனை நான் ஒரு குற்றச்சாட்டாக கூறவில்லை. தகவல் பிழையாகவே கூறினேன்.

மற்றபடி உங்கள் சினிமா பதிவுகள் அனைத்தும் பொருள் பொதிந்ததாகவும் பழைய படங்கள் பார்த்தவர்களுக்கு பழைய நினைவுகளையும் பார்க்காதவர்களுக்கு பார்க்க தூண்டும் விதத்திலும் இருக்கின்றன.

தொடர்ந்து எழுதுங்கள்.

முரளிகண்ணன் said...

சத்யப்ரியன்,

சிறு தவறை சுட்டிக்காட்டும் ஆசிரியரிடம், அடுத்த தடவை நல்லா பண்ணிடுறேன் சார் என்று சொல்லும் மனநிலையிலேயே நான் அளித்த பதில் அது. தவறாக எண்ண வேண்டாம்.

புருனோ Bruno said...

அது சரி

எஸ் ஏ சந்திரசேகர் - சங்கரை மறந்து விட்டீர்களே
--
பாய்ஸ், சிவாஜி போன்ற ”வெற்றி”ப்படங்களை தவிர ஜீன்ஸ், இந்தியன், ஜெண்டில்மேன் ஆகிய படங்களை எடுத்த நல்ல இயக்குநர் தானே சங்கர் :) :) அவரை மறக்கலாமோ
--
ஒரு எஸ். ஏ. சி படத்தில் சங்கர் படம் முழுக்க வருவார் - பெயர் மறந்து விட்டது.

வெண்பூ said...

பாலச்சந்தரை பற்றிய உங்கள் பார்வை மிகச்சரியாகவே படுகிறது முரளி. எல்லாமே ஒரு ஸ்டீரீயோடைப் படங்கள், கேரக்டர்கள்.

ஆனால் சுரேஷ் கிருஷ்ணாவைப் பற்றிய என் பார்வை வேறானது. அவர் செய்த முதல் படமே (சத்யா) முற்றிலும் மாறுபட்டிருக்கும். இப்போதைய அவரின் தோல்விக்கு காரணம் அவரது படைப்பாற்றல் அல்ல. அவரது வளைந்து கொடுக்கும்தன்மை.

பாட்ஷா போன்ற வெற்றி படத்தை தந்த அவரேதான் ஆஹா போன்ற குடும்பப் படத்தையும் தந்தார். இரண்டையுமே மக்கள் ரசித்தார்கள். ஆனால் ஆளவந்தானுக்காக கமல் சொன்னபடி ஆடியதும், பாபாவிற்காக ரஜினி சொன்னபடி ஆடியதும்தான் அவரை ஒரு தோல்விப்பட இயக்குனர்கள் வரிசையில் சேர்த்தது என்றால் தவறில்லை. அவர் மீண்டு வருவார் என்று நம்புவோம் (நமது சூப்பர் டூப்பர் ஹீரோக்கள் விட்டுவைத்தால்)

வெட்டிப்பயல் said...

//ஒரு எஸ். ஏ. சி படத்தில் சங்கர் படம் முழுக்க வருவார் - பெயர் மறந்து விட்டது.//

அந்த படம் பேரு சீதா...

கதாநாயகி - கனகா. கௌதமியும் இருக்காங்க. அவுங்க பத்திரிக்கை நிருபரா வருவாங்க.

படத்துல ஹீரோனு யாரும் இல்லை (ரகுமான் சும்மா டம்மி கேரக்டர்ல வருவாரு). முக்கிய பாத்திரம் வில்லனா வர சரண்ராஜ் தான். அவர் அஸிஸ்டெண்டா 'ஜப்பான்' அப்படிங்கற கேரக்டர்ல "ஷ"ங்கர் வருவாரு :)

ஒல்லியா இருப்பாரு...

ஓமக்குச்சி நரசிம்மன் தான் படத்துல நீ நடிக்க முயற்சி பண்ணாத உனக்கு டெக்னிஷியன் வேலை தான் சரினு சீரியஸா அட்வைஸ் பண்ணாராம். அதனால தான் ஷங்கர் படங்கள்ல பெரும்பாலும் ஓமக்குச்சி வருவாரு :)

இந்த படத்துல வந்த சரண்ராஜை தன்னோட முதல் படத்துல முக்கியமான ஒரு பாத்திரத்துல "ஷ"ங்கர் பயன்படுத்தினார்

--------

எஸ்.ஜே. சூர்யா பாண்டியராஜன்கிட்ட அஸிஸ்டெண்டா இருந்தாரு. நெத்தியடி படத்துல அமலா குத்துவிளக்கு ஏத்தற சீன்ல (பாண்டியராஜன் பெரிய ஹோட்டல் ஆரம்பிக்கற சீன்) ஊருல ஒருத்தரா இருந்து பேசுவாரு :)

இவரும் பாரதிராஜா ட்ரீல வருவாரு

-----------------

செல்வராகவன் பாலச்சந்தர்கிட்ட அஸிஸ்டெண்டா இருந்திருக்காருனு கேள்விப்பட்டிருக்கேன்.

இந்த தலைமுறை இயக்குனர்கள்ல செல்வா குறிப்பிடத்தகுந்தவர்...

-----------------

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி புருனோ, எஸ் ஏ சந்திரசேகரை என்னால் அவர்களுடன் ஒரே தட்டில் வைத்து பார்க்க முடியவில்லை. மணிரத்னம், டி ராஜேந்தர் இருவரையும் சுயம்பு என்று சொல்வார்கள். ஏனென்றால் அவர்கள் யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமலேயே இயக்குனரனாவர்கள். ஷங்கர், எஸ் ஏ சி யிடம் உதவி இயக்குனராக இருந்தாலும் இவரை உருவாக்குமளவுக்கு அவரிடம் சரக்கு இருந்ததா என தெரியவில்லை.

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி வெண்பூ, சுரேஷ் கிருஷ்னா வின் சமீபத்திய படங்களான ஆளவந்தான்,பாபா, சங்கமம், கஜேந்திரா, பரட்டை என்கிற அழகுசுந்தரம் எல்லாம் பப்படம் ஆகி விட்டதால் தான் அவ்வாறு கூறினேன். அவர் இப்போது பரத், ரம்யா கிருஷ்ணனை வைத்து இயக்கும் ஆறுமுகம் வெற்றி பெற வாழ்த்துவோம்

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி பாலாஜி,

நீங்கள் அளித்தவை எல்லாமே சுவையான தகவல்கள். இணைத்துக் கொள்கிறேன்.

narsim said...

முரளி கண்ணன்..

ஆழமான பகுப்பாய்வு..

பாலசந்தர் முத்திரை என்பது எண்பதுகளின் வார்த்தை..

ஆம்.. பாலுமகேந்திராவின் வழித்தோன்றல்கள் சரித்திரம் படைப்பார்கள் என்றே நானும் நம்புகிறேன்..

சீமானும் கவனிக்கப் படவேண்டிய படைப்பாளியே.. அவரின் பாஞ்சாலங்குறிச்சி கிராமத்தையும் அதன் வார்த்தைகளையும் வார்த்த திரைப்படம்.

இன்னும் எதிர்பார்த்து..

நர்சிம்

யோசிப்பவர் said...

//ஷங்கர், எஸ் ஏ சி யிடம் உதவி இயக்குனராக இருந்தாலும் இவரை உருவாக்குமளவுக்கு அவரிடம் சரக்கு இருந்ததா என தெரியவில்லை//
நானும் அப்படித்தான் நினைக்கிறேன். நான் சிலசமயம் ஆச்சர்யப்படுவதுண்டு, அவருகிட்டே அஸிஸ்டென்டா இருந்து ஷங்கரால் எப்படி இப்படி படமெடுக்க முடிகிறதென்று. ஷங்கருக்கு புதிய விஷயங்களை உள்வாங்கும் திறன் அதிகமென்பது என் கருத்து. ஆனாலும் SAC பல வருடங்களாக ஒரே கதையை கொஞ்சம் கொஞ்சம் மாற்றிப் படம் பண்ணி அந்த நேரத்தில் பெயர் வாங்கியவர். யோசித்துப் பார்த்தால், நான் மகான் அல்லவும், நான் சிகப்பு மனிதனும் ஒரே கதையின் வேறு வேறு வடிவங்கள் என்பது புரியும். இப்பொழுது அதே கதையைத்தான் புதிய மாறுதல்களுடன் ஷங்கரும் கொடுக்கிறார்(குரு வாசனை)....

நான் என்னவோ சொல்ல நினைச்சேன். எப்படியோ போயிருச்சு!!!;-)

முரளிகண்ணன் said...

யோசிப்பவர் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

நன்றாகவே யோசிக்கிறீர்கள்

புருனோ Bruno said...

//ஷங்கர், எஸ் ஏ சி யிடம் உதவி இயக்குனராக இருந்தாலும் இவரை உருவாக்குமளவுக்கு அவரிடம் சரக்கு இருந்ததா என தெரியவில்லை//

ஒரே கதையை திரும்ப திரும்ப படமெடுப்பது யார் பாதிப்பாம் ;)

anujanya said...

//வெண்பூ said...
பாலச்சந்தரை பற்றிய உங்கள் பார்வை மிகச்சரியாகவே படுகிறது முரளி. எல்லாமே ஒரு ஸ்டீரீயோடைப் படங்கள், கேரக்டர்கள்.//

பிரமாதமான, வேறுபட்ட, சீடர்களை உருவாகவில்லை என்பதனால் பாலச்சந்தரை ஒரு டப்பாவுக்குள் அடைக்கும் முயற்சி தவறான அணுகுமுறை. தப்புத் தாளங்கள் விளிம்பு நிலை மனிதர்களைப் படம் பிடித்தது. நாணல் அந்தக் காலத்து த்ரில்லர். பெரும்பாலும் மத்யதர மக்களையே படம் பிடித்தார். அதனால் ஸ்டீரியோ டைப் பிம்பம் உருவானது. ஆயினும், காரக்டர்கள் பலதரப்பட்டவர்கள்தாம். பட்டியல் வெகு நீளமாகும்.

சுரேஷ் கிருஷ்ணாவைப் பற்றி வெண்பூ சொல்லியது சரியே. சிறிதுகூட பாலசந்தர் வாடை அவரிடம் இல்லை. பாட்ஷா மாதிரி மெகா ஹிட் கொடுக்கக்கூடிய மனிதரிடம் நிச்சயம் சரக்கு இருக்கும்.

ஆமாம், என்னளவில் மிகப் பெரும் கலைஞனான மகேந்திரன் சீடர்களையே உருவாகவில்லையா? முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் எல்லாம் classics.

நீங்கள் இன்னும் கொஞ்சம் விரிவாக அலசியிருக்கலாம்.

அனுஜன்யா

சரவணகுமரன் said...

வழக்கம் போல் சுவாரஸ்யமான பதிவு... வாழ்த்துக்கள்...