January 15, 2025

1983 உலக கோப்பை இறுதி போட்டி

சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு அரை வேலை நாள் இருந்த காலம் அது. மதியத்துடன் பள்ளிகள் முடியும் அந்த சனிக்கிழமைகளை ஆவலுடன் எதிர்பார்த்திருப்போம். ஏனென்றால் மாலை வரை மைதானத்தில் விளையாண்டு கொண்டேயிருக்கலாம். அப்போது கிரிக்கெட் எல்லாம் எங்கள் ஊரில் பிரபலமாகாத காலம். பள்ளி விளையாட்டு ஆசிரியரின் அறையில் ஹாக்கி மட்டைகளும், பேஸ்பால் மட்டைகளும், வாலிபால்,பேஸ்கட் பால், கால்பந்துகளுமே பெரும்பான்மையாக இருக்கும். உள்ளூரில் ஒரே ஒரு தெருவைச் சார்ந்த கிரிக்கெட் அணி மட்டுமே இருந்தது. அவர்கள் மாவட்ட அளவிலான லீக் கிரிக்கெட்டில் பங்கு பெறும் அணியாகவும் இருந்தார்கள். அவர்களுக்கு என மைதானம் இல்லாததால் எங்கள் பள்ளி மைதானத்தில் தான் விளையாடுவார்கள். எப்போது பள்ளி முடியும் என காத்திருந்து உள்ளே வருவார்கள். சனிக்கிழமை பள்ளி அரை நாள் என்பதால் அவர்களும் மதியமே வந்து விடுவார்கள். அன்று நாங்கள் எங்களுக்கு கிடைத்த கால்பந்தை எடுத்துக் கொண்டு மைதானத்துக்கு வந்த போது ஒரு அதிர்ச்சி. சனிக்கிழமை தவறாது ஆட வந்து எங்களுக்கு இடப்பற்றாக்குறையை அளிக்கும் கிரிக்கெட் அணியினரைக் காணோம். ஆச்சரியத்துடன் கேட்ட போது, தெரியாதா? இன்று இந்தியா உலக கோப்பை பைனல் ஆடுகிறது. அதுதான் கமெண்டரி கேட்கவேண்டுமென்று யாரும் வரவில்லை என்றார்கள். ஆம். அன்றுதான் ஜூன் 25, 1983. இந்தியா தன் கிரிக்கெட் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத நாளாக அது மாறும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்தியா அணி சென்றால் எவ்வளவு அசுவராசியமாக இருப்போமோ, அதே அளவு அசுவராசியத்துடன் தான் அன்று இந்தியா இந்த மேட்சுகளை கவனித்துக் கொண்டிருந்தது. இந்தியா வெற்றி பெறும் என்றெல்லாம் யாரும் நினைக்கவில்லை. அப்போது பொதுவாக கிரிக்கெட் என்பதே ஒரு மேல்தட்டு மற்றும் உயர் நடுத்தரவர்க்கத்தினரின் ஆட்டமாகத்தான் கருதப்பட்டு வந்தது. இப்போது போல மேட்சுகளை தொலைக்காட்சியில் பார்ப்பதற்ககு வாய்ப்பேயில்லை. ஊரில் நான்கைந்து வீடுகளில் மட்டுமே கறுப்பு வெள்ளை தொலைக்காட்சிகள் இருந்தன. மற்றபடி ரேடியோவில் கேட்கும் கமெண்ட்ரி மட்டும் தான். அதிலும் வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளின் வர்ணனை கேட்க வேண்டுமெனில் நான்கு பேண்ட் ரேடியோ வேண்டும். ஊரில் பெரும்பாலும் இரண்டு பேண்ட் ரேடியோக்கள் தான் இருக்கும். சில தெருக்களில் மட்டுமே பிபிசி, ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனமான ஏபிசி ஒலிபரப்பை கேட்கும் படி நான்கு பேண்ட் ரேடியோக்கள் இருக்கும். அவர்களுக்கு மட்டுமே அப்போது கிரிக்கெட் ஆட்டம் பற்றி தெரிந்திருந்தது.ஏனையோருக்கு அது பற்றிய அவ்வளவு தெளிவில்லை. ஜூன் முதல் வாரத்தில் இந்தியா இங்கிலாந்திற்குச் சென்றிருந்தது. மேட்சுகளைப் பற்றி தமிழ் நாளிதழ்களில் சிறு அளவிலேயே கவரேஜ் இருந்தது. ஆங்கில நாளிதழ்களில் நன்றாக கவரேஜ் செய்தார்கள். இந்தியா இடம்பெற்றிருந்த குரூப்பில் மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இடம்பெற்றிருந்தன. இன்னொரு குரூப்பில் இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை அணிகள் இடம்பெற்றிருந்தன. இந்தியா இருந்த குரூப்பில் எப்படியும் மேற்கிந்திய தீவுகளும், ஆஸ்திரேலியாவும் தான் நாக் அவுட்டிற்குச் செல்லும். இந்திய அணி இங்கிலாந்தைச் சுற்றிப் பார்த்து விட்டுத்தான் வரும் என்று அனைவரும் கணித்தார்கள். குரூப் ஸ்டேஜில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் இருமுறை ஆடவேண்டும். முதல் ஆட்டத்தில் இந்தியா மேற்கிந்திய தீவுகளை வென்றது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஜிம்பாப்வே உடனான வெற்றி எதிர்பார்த்த ஒன்று. ஆனால் ஆஸ்திரேலியாவுடனும் மேற்கிந்திய தீவுகளுடனும் அடுத்தடுத்த மேட்சுகளில் தோற்கவும் எதிர்பார்ப்பு குறைய ஆரம்பித்தது. இங்கிலாந்து ஆட்டக்களங்கள் சீம், ஸ்விங் பந்து வீச்சுக்கு உகந்ததாய் இருந்தது இந்திய அணிக்கு சாதகமாய்ப் போனது. கபில்தேவ், பின்னி, பல்விந்தர் சிங் சாந்து, மதன்லால், மொஹிந்தர் அமர்நாத் அனைவருமே இந்த முறையில் பந்து வீசக்கூடியவர்கள். யஷ்பால் சர்மா, சந்தீப் பாட்டில் இருவரும் வெளிநாட்டு ஆடுகளங்களிலும் துடிப்பாக ஆடக் கூடியவர்கள். கவாஸ்கர், அமர்நாத் குவாலிட்டி பேட்ஸ்மென்கள், ஸ்ரீகாந்த் அதிரடியாக ஆடக்கூடியவர். கபில்தேவ், இன்று வரை இந்தியாவில் உருவான ஒரே உலகத்தரமான ஆல்ரவுண்டர். பின்னி, மதன்லால் போன்றோர் பேட்டிங்கிலும் தாக்குப்பிடிக்க கூடியவர்கள். கிர்மானி நல்ல விக்கெட் கீப்பர் மற்றும் தாக்குப்பிடிக்கக் கூடிய பேட்ஸ்மென். எனவே எச்சூழலையும் சமாளிக்கும் சரிநிகர் சமானமான அணியாக இந்திய அணி இருந்தது. சிற்றூர்களில் அப்போது கிரிக்கெட் என்றால் இரண்டு பெயர்கள் மட்டுமே எல்லோருக்கும் தெரிந்ததாக இருந்தது. கவாஸ்கர் மற்றும் கபில்தேவ். ஆனால் முதல் இரண்டு வெற்றிகளின் மூலம் மொஹிந்தர் அமர்நாத், ஸ்ரீகாந்த், பின்னி. மதன்லால், யஷ்பால் சர்மா போன்ற பெயர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கேட்கத் துவங்கியது. ஜிம்பாப்வே உடனான முக்கிய மேட்சில் கபில்தேவின் ஹீரோயிசத்தால் ஜெயிக்க உத்வேகம் பெற்றது இந்திய அணி. அடுத்து ஆஸ்திரேலியாவையும் வென்று, செமிபைனலுக்குள் நுழைந்து இங்கிலாந்தை வென்று, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இவ்வாறு இந்திய அணி முதன் முதலாய் உலக கோப்பைக்கு தகுதி பெற்றது நல்ல பேச்சாக அடிபடத் துவங்கியது. அதற்கு முன்னதாக ஹாக்கியில் மட்டுமே நாம் உலக அளவில் வெற்றி பெறும் அணியாக இருந்தோம். மற்ற விளையாட்டுகளில் நாம் சவலைப் பிள்ளை தான். இன்னொரு விளையாட்டிலும் நம்மால் உலக அணிகளுக்கு இணையாக ஆட முடியும் என்று இந்திய மக்களை பெருமிதம் கொள்ள வைத்தது இந்த நிகழ்வு. மிக மிகக் குறைவான ஆட்களே எங்கள் ஊரில் அந்த இறுதிப் போட்டியை தொலைக்காட்சியில் கண்டார்கள். அதைவிட சற்று கூடுதலானவர்கள் வானொலியில் வர்ணனையை கேட்டார்கள். நாங்கள் கிரவுண்ட் ப்ரீயா இருக்கு என நன்றாக ஆடிக்களித்து விட்டு திரும்பும் போது, ஊரில் இருந்த ஒரே ஒரு ரேடியோ கடையில் சிலர் நின்று கமெண்டிரி கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஸ்ரீகாந்த் நல்லா அடிச்சானாம்பா என்ற ஒரு வார்த்தை தான் அப்போது காதில் விழுந்தது. சில தெருக்களில் மட்டும் வீட்டிற்கு வெளியே ரேடியோவை வைத்து மாலையில் வர்ணனை கேட்டுக் கொண்டிருந்தார்கள். ரிச்சர்ட்ஸ் இருக்கிற வரை கஷ்டம் என்றார்கள். அப்புறம் கபில்தேவ் கேட்ச் பிடித்து அவர் அவுட்டானார் என்றார்கள். நடந்து கொண்டிருந்த சம்பவத்தின் முக்கியத்துவம் அறியாமல் வீட்டிற்குச் சென்றுவிட்டேன். அடுத்த நாள் காலை இந்தியாவே ஆனந்தக் கொண்டாட்டத்தில் மூழ்கியது. கிரிக்கெட் ஆட்டம் பற்றி தெரியாதவர்கள் கூட, அதைப் பற்றியே பேசலானார்கள். நாம உலக அளவில் ஒரு போட்டியில் ஜெயித்து விட்டோம் என்பதே எல்லோருக்கும் பெரிய பெருமையைக் கொடுத்தது. திங்கள் அன்று பள்ளி செல்லும் போது அதே பேச்சு. எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் டிவி இருந்தது. அவர் கிரிக்கெட் ரசிகரும் கூட. அவர் சொல்லி பள்ளி நோட்டீஸ் போர்டில் கொட்டெழுத்துக்களில் இந்திய வெற்றியைப் பற்றி எழுதியிருந்தார்கள். அவரும் பிரேயரில் இந்த வரலாற்றுச் சம்பவத்தைப் பற்றி நிறைய பேசினார். இந்த ஜூன் 25க்குப் பின் இந்தியாவே ஒரு மாற்றத்தைச் சந்தித்தது. அதுவரை ஹாக்கி, புட்பால் விளையாடிக் கொண்டிருந்த இந்திய சிறுவர்கள் கிரிக்கெட்டின் பால் ஈர்க்கப்பட்டனர். ஹாக்கி விளையாட நல்ல ஹாக்கி மட்டை தேவை. புட்பாலுக்கு சாதா பந்து இருந்தாலும் இட வசதி தேவை. எந்த உபகரணமும் தேவையில்லை, சின்ன இடம் போதும், இரண்டு பேர் இருந்தாலும் ஆடலாம் என்ற கிரிக்கெட்டின் தன்மையால் பலரும் அதை நோக்கி இழுக்கப்பட்டனர். பிள்ளையாரை எப்படி தங்களுக்குப் பிடித்த வடிவங்களில் எல்லாம் பிடித்தார்களோ அது போலத்தான் கிரிக்கெட்டும். சிலையாகவும் வைக்கலாம், மஞ்சளில் பிடித்து வைக்கலாம், கைப்பிடி மண்ணிலும் பிடிக்கலாம் என்ற பிள்ளையாரின் சிம்ப்ளிசிட்டி கிரிக்கெட்டுக்கும் உண்டு. பேட், பேட்,பால் என எதுவும் தேவையில்லை. ஒரு கட்டை, அறுத்த சைக்கிள் ட்யூப் துண்டுகளைக் கொண்டு கூட பந்து செய்யலாம் என்ற எளிமையால் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் கிரிக்கெட் பரவியது. ஆனால் பிள்ளையாருக்கு சக்தி இருக்கிறது என்ற நம்பிக்கை மக்கள் மனதில் விதைக்கப்பட்டது போல, கிரிக்கெட்டில் நம்மால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை இந்த உலகக் கோப்பை வெற்றி கொடுத்தது. இந்த வெற்றியை இந்தியாவிற்குச் சாத்தியமாக்கியது எது என்ற கேள்வி எழும்போதெல்லாம் மனதுக்கு தோன்றுவது அப்போது இங்கிலாந்து ஆடுகளங்களுக்கு ஏற்றார் போல் அமைந்த அணியும் கபில்தேவ் என்ற பெயரும் தான். பொதுவாக அப்போது இருந்த இந்திய அணிக்கு வெற்றி பெறும் ஆவலெல்லாம் இருக்காது. தங்கள் சாதனை, தங்கள் கேரியர் என்றே இருப்பார்கள். அணியின் ஒட்டுமொத்த வெற்றிக்குத் தேவைப்படும் அந்த அதிகப்படியான முயற்சியைச் செய்ய சுணக்கம் காட்டுவார்கள். கபில்தேவுக்கு அந்த அதிகப்படியான முயற்சியைக் கொடுக்கும் மனம் இயல்பிலேயே இருந்தது. அதுபோக தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற வெறியும். அவருக்குள் இருந்த அந்த வெறிதான் இந்தியாவை கோப்பையை நோக்கி அழைத்துச் சென்றது. இந்தியாவில் வேகப்பந்து வீச்சாளரே கிடையாது நீ வேகப்பந்து வீச்சாளர் என்கிறாயா என்ற கேலிகள், டிரஸ்ஸிங் ரூமில் பேட்ஸ்மென்களால் அவர் அடைந்த அவமானங்கள், கொச்சையாக ஆங்கிலம் பேசுகிறார் என்ற மும்பை மீடியாக்களின் எள்ளல்கள் என அனைத்தையும் தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற வெறியாக மாற்றி அணியை வெற்றி பெறச் செய்தார். வெற்றி பெறுவோம் என்ற அவரின் நம்பிக்கையே எல்லோர் மனதிலும் புகுந்து உத்வேகம் கொடுத்தது. நம் நாட்டின் தேசிய விளையாட்டான ஹாக்கி தவிர்த்து இன்று வரை குழு ஆட்டங்களில் நாம் உலக அளவில் பெயர் சொல்லும் படியாக இருப்பது கிரிக்கெட்டில் தான். ஏன் தனி நபர் ஆட்டங்களில் கூட நம் நாட்டு சாதனையாளர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். 1983 கிரிக்கெட் உலக கோப்பை வெற்றிக்குப் பின் ஹாக்கி நம் மக்கள் மனதில் பெற்றிருந்த இடம் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மும்பை முதல் மேற்கு வங்கம் வரை இந்தியாவின் எல்லா மூலைகளிலும் பரவியிருப்பது கிரிக்கெட் தான். அப்படி கிரிக்கெட் விளையாட்டு இந்தியாவில் விஸ்வரூபம் எடுக்க காரணமான நாள் ஜூன் 25, 1983 என்றால் அதற்கு அச்சாணியாய் இருந்தது கபில்தேவ் என்ற மனிதனின் வெல்ல வேண்டும் என்ற உத்வேகம் தான்.

No comments: