January 15, 2025

ஜாகிர் கான்

சிறு வயதில் முதன்முதலாக கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்த காலத்தில், கேள்விப்படும் வேகப்பந்து வீச்சாளர்களின் பெயர்கள் எல்லாம் மனதில் ஒரு கிலியை ஏற்படுத்தும்‌. தெருவில் இருந்த விக்டரி கிரிக்கெட் கிளப் அணி வீரர்கள் எப்பொழுதும் மற்ற நாட்டு வேகப் பந்துவீச்சாளர்களைப் பற்றித்தான் பேசிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் பேச்சில் அடிக்கடி இடம்பெறும் பெயர்கள் மார்ஷல், கார்னர், லில்லி, தாம்சன், இம்ரான் கான், ஹாட்லி, போத்தம். நம்ம நாட்டுல அப்படி யாரும் இல்லையா என அவர்களிடம் கேட்கும் போது, கபில் ஒருத்தர் தான் நல்லா போடுவார். இப்ப சேட்டன் சர்மா என்று ஒருத்தர் வேகமாகப் போடுகிறார். ஆனா இவங்க அளவுக்கு எல்லாம் சேட்டன் சர்மா இல்லை என்று பதில் அளித்தார்கள். சில டெஸ்ட் மேட்சுகளில், கபில்தேவ் முதல் ஓவர் போடுவார், இரண்டாம் ஓவர் மொஹிந்தர் அமர்நாத் வந்து போடுவார். மிலிட்டரி மீடியம் என்று சொல்வார்கள் மிக மெதுவாக ஓடிவந்து கிரீசை அடைந்ததும் நின்று கொண்டு வந்து வீசுவார். இன்னொரு பவுலர் இருந்தார் மதன்லால். விவியன் ரிச்சர்ட்ஸ் ஒருமுறை, இவர் ஏன் இவ்வளவு தூரம் ஓடி வந்து ஆப் ஸ்பின் போடுகிறார் என்று மதன்லாலை கிண்டல் செய்ததாக கூறுவார்கள். அந்த சமயத்தில் கபில்தேவும் தன்னுடைய வேகம் எல்லாம் குறைந்து ஒரு மீடியம் ஃபேஸ் பௌலராக தான் இருந்தார். அவராலும் பாட்ஸ்மென்கள் தவறு செய்தால் தான் விக்கெட் எடுக்க முடிந்ததே தவிர, விளையாடவே முடியாத பந்துகளை வீசி பேட்ஸ்மென்களை திணறடித்து, விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை. ஸ்பின்னர்கள் வரும்போது தான் விக்கெட் கிடைக்கும். அதுவும் எதிரணி பேட்ஸ்மென்கள் அடித்து ஆடினால் தான். தங்களுடைய மெரிட்டில் விக்கெட்டுகளை எடுக்கும் இந்திய பந்துவீச்சாளர்கள் அப்போது மிகக் குறைவாகத்தான் இருந்தார்கள். ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர்களை அடித்து மற்ற நாட்டு வீரர்கள் ஆட்டம் இழப்பார்கள்.டெஸ்ட் மேட்ச் ஆக இருந்தால், பெரும்பாலும் டிராவில் தான் முடியும். ஸ்பின்னர்களுக்கு சாதகமான பிட்ச்சுகளில் மட்டுமே நாம் விக்கெட் எடுக்கும் நிலை இருந்தது.இது ஒரு கிரிக்கெட் ரசிகனாக, என்னடா இது மற்ற நாட்டு வேகப் பந்துவீச்சாளர்கள் போல் நம் நாட்டில் இல்லையே என்று சலித்துக் கொள்ள வைத்தது. முதல் முதலாகப் பார்த்த ஒரு நாள் போட்டிகள் சாம்பியன்ஷிப் என்றால் அது, 1986-87ல் சார்ஜாவில் நடந்த போட்டி தான். அதில் மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான், இந்தியா, இலங்கை ஆகிய நாடுகள் விளையாடின. அந்தப் போட்டியில் தான் வால்ஷ் மற்றும் வாசிம் அக்ரம் என்கிற பெயர்கள் அறிமுகமானது‌. மேற்கிந்திய தீவு அணி வீரர்களும் பாகிஸ்தான் வீரர்களும் பந்து வீச வந்தாலே எங்கே விக்கெட் போய் விடுமோ என்று நகத்தை கடித்தபடியே பார்க்க வேண்டி இருந்தது. ஆனால் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் வீசும் போது எவ்வளவு ரன் போகுமோ என்று பதட்டத்துடனே பார்க்க வேண்டி இருந்தது. அப்பொழுது என்னுடைய ஆசை எல்லாம், இந்தியாவிலும் மற்ற பேட்ஸ்மேன்கள் விளையாடும் போது பயம் கொள்ளும் அளவிற்கு ஒருவர் பந்து வீச வேண்டும் என்பதுதான். வாசிம் அக்ரம் எல்லாம் நம் டீமில் இருந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் அப்போதைய அதிகபட்ச கிரிக்கெட் கற்பனையாக இருந்தது. 1990 இந்திய அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது, மனோஜ் பிரபாகர் நன்றாக பந்து வீசினார் என்றார்கள். இம்ரான்கான், அவர் பந்தை சரியான பவுலிங் ஆக்‌ஷனில் வீசவில்லை என்றார். மனோஜ் பிரபாகரின் பந்து வீச்சும் பயம் கொள்ள வைக்கும் படி இருக்காது. 91-92 இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது ஜவஹல் ஸ்ரீநாத் வந்தார். அவர் கொஞ்சம் நம்பிக்கை அளித்தார்.கபில்தேவும் அந்த தொடரில் ஓரளவு நன்றாக பந்து வீசினார். ஆனாலும் இந்த கூட்டணி யாரையும் மிரட்டும்படி இல்லை. நம்மிடம் இல்லாத ஒன்று மற்றவர்களிடம் இருக்கும்போது அதன் மீது நமக்கு வரும் ஆசை மற்றும் மதிப்பானது அதிகம். அப்படித்தான் நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்த காலத்தில் இருந்து ஒரு வலுவான இடதுகை வேகப்பந்துவீச்சாளர் நமது இந்திய அணியில் இல்லாமல் இருந்தது. அதற்கு முன்னர் காலின் கௌட்ரி என்பவர் இடதுகை வேகப்பந்து வீசியதாகச் சொல்வார்கள். அதனால் வாசிம் அக்ரம் மீது அவ்வளவு ஆர்வம் இருக்கும். இந்த சூழ்நிலையில், 2000 ஆவது ஆண்டு. வராது வந்த மாமணி போல இந்திய அணிக்கு வந்தார் தான் ஜாகிர் கான். ஒரு ரிதமான ரன்னப். பந்து வீசும் இடத்திற்கு வந்ததும் ஒரு அலட்டல் இல்லாத ஜம்ப். கால் லேண்ட் ஆகும்போது ஒரு அட்டகாசமான ரிலீஸ் என‌ உடனடியாக கவர்ந்தார் ஜாகிர் கான். பந்து வீச வந்த காலத்தில் நல்ல வேகம் கொண்டிருந்தார். தேவையான அளவு ஸ்விங். அவ்வப்போது யார்க்கர்கள். என ஒரு பக்கா பேக்கேஜாக வந்தார். ஆஹா நமக்கும் ஒரு அக்ரம் கிடைத்து விட்டார் என்ற மகிழ்ச்சி வந்தது. அவர் பந்து வீசும் போது நிறைய பேட்ஸ்மேன்கள் பயந்தார்கள். 2003 ஒரு நாள் உலகக் கோப்பை போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடந்தன. தன் கேரியரின் கடைசி கட்டத்தில் இருந்த ஶ்ரீநாத் மற்றும் இன்னொரு இடதுகைப் பந்து வீச்சாளர் ஆஷிஷ் நேரா ஆகியோருடன் ஜாகிர் கான் இணைந்து ஒரு அருமையான வேகப்பந்து கூட்டணியை அந்த தொடரில் அமைத்தார். அப்போதைய ஆஸ்திரேலியா அணி மிகவும் பலம் வாய்ந்தது. வார்னே அவர்கள் ஊக்க மருந்து பிரச்சினையால் வெளியேறிய போதும் ,அது ஒரு பொருட்டே இல்லை என்று அசால்டாக எல்லோரையும் திணறடித்தது அந்த அணி. அந்த ஒரு அணியிடம் மட்டும் தான் தோற்றோம் மற்ற எல்லா போட்டிகளிலும் நமது கைதான் ஓங்கி இருந்தது அதற்கு முக்கிய காரணம் ஜாகிர் கான் தலைமையில் ஆன அந்த வேகப்பந்து கூட்டணி. 2011 உலகக் கோப்பை போட்டியிலும் நாம் 28 ஆண்டுகள் கழித்து அந்த கோப்பையை வெல்ல ஒரு மிக முக்கிய காரணமாக இருந்தவர் ஜாகிர் தான். முக்கியமான விக்கெட்டுகளை எல்லாம் தேவைப்படும் நேரத்தில் எடுத்துக் கொடுத்தார். ஜாகிர்கானின் இன்னொரு சிறப்பு, அவர் இடது கை பேட்ஸ்மென்களை அவுட் ஆக்குவதில் கை தேர்ந்தவர். மேத்யூ ஹைடன், சங்காகரா, ஜெயசூர்யா, தென்னாப்பிரிக்க அணி முன்னாள் கேப்டன் க்ரீம் ஸ்மித் ஆகியோரை பத்து முறைக்கு மேல் ஆட்டம் இழக்கச் செய்தவர். இந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மென்களை வீழ்த்தும் போது, நமக்கு ஆட்டத்தில் அட்வாண்டேஜ் கிடைக்கும். ரிவர்ஸ் ஸ்வின் போடுவதிலும் விற்பன்னராக இருந்தார் ஜாகிர்கான். பந்து தேய்ந்த உடன், ஒரு டெஸ்ட் மேட்சில் ரிவர்ஸ் ஸ்விங் முறையில் இன்சமாம் உல் ஹக்கின் விக்கெட்டை அவர் எடுத்த காட்சி இன்னும் ஞாபகம் இருக்கிறது. ஜாகிர்கான் தன் கேரியரில், இன்னும் சிறப்பாக சாதித்து இருக்க முடியும். ஆனால் அவர் அடிக்கடி காயம் அடைந்து, பிரேக் எடுத்தார். 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற, முதல் 20-20 உலகக் கோப்பையில் அவர் பங்கு பெறவில்லை. ஆனாலும் 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு ஆட்கள் ஏலம் போன போது ஜாகிர் கானுக்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த ஏலத்தில் பெரிய வெளிநாட்டு வீரர்கள், ஹிட்டர்கள் என்று தான் பலரும் கவனம் செலுத்தினார்கள். பந்து வீச்சாளர்களைப் பற்றியே யாரும் பெரிய கவனம் செலுத்தவில்லை.ஆனாலும் ஜாகிர் கானுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதன் பின்னர் மும்பை அணிக்கு விளையாடிய போது, அந்த அணிக்கு மிகப்பெரும் பலமாக இருந்தார். ஜாகிர்கான் இந்திய கிரிக்கெட்டில் கொண்டு வந்த மாற்றம் என்னவென்றால், இந்தியாவில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் நட்சத்திர அந்தஸ்து கிடைக்கும், ஸ்டார் பேட்ஸ்மென்கள் அளவிற்கு இல்லாவிட்டாலும் நிச்சயம் மக்கள் கொண்டாடுவார்கள் என்ற எண்ணத்தை இளைஞர்கள் மத்தியில் விதைத்தது தான். இதனைத் தொடர்ந்து, இரண்டாம் நிலை நகரங்களில் இருந்து, நிறைய வேகப்பந்து வீச்சாளர்கள் வரத் துவங்கினார்கள். ஐ பி எல் அணிகளில் அவர்களுக்கு கிடைத்த பொருளாதார ரீதியான ஊக்கமும் அதைத் தொடரச் செய்தது. அதன் பின்னர் கடந்த 10 - 15 ஆண்டுகளில் தொடர்ச்சியாக நமது அணிக்கு பும்ரா, சிராஜ் ஷமி என வேகப்பந்துவீச்சாளர்கள் சிறிய நகரங்களில் இருந்து வந்து கலக்கி கொண்டு இருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவிற்கு அவர்கள் நாட்டிலேயே சவால் விடும் அளவிற்கு வேகப்பந்து வீசுகிறார்கள். இந்த மாற்றத்தில் ஜாகிர் கானுக்கும் ஒரு பங்கு உண்டு எனச் சொல்லலாம்..

No comments: