January 15, 2025

மீண்டும் கோகிலா

மீண்டும் கோகிலா திரைப்படம். திண்டுக்கல் சென்ட்ரல் தியேட்டரில் 44 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திரைப்படம். அந்த சமயத்தில் ஆட்டோக்கள் குறைவாகவே உபயோகப்படுத்தப்படும். சைக்கோ ரிக்ஷாக்களும் குதிரை வண்டிகளும் தான் அப்போது திண்டுக்கல்லில் பிரதான பொதுமக்கள் உள்ளூர் போக்குவரத்து. இதில் குதிரை வண்டியில் பயணம் செய்வது எனக்கு ஒத்துக் கொள்ளாது டொடக்கு டொடக்கு என்று ஆடிக்கொண்டே போகிறது. சாண வாடை அடிக்கிறது என்று சொல்லி அதில் ஏறவே மாட்டேன். ஒரு பேலன்ஸ் இல்லாதது போல இருக்கும். வாந்தி வருவது போலவே இருக்கும். அதனால் என்னை கூட்டிக்கொண்டு போகும்போது சைக்கிள் ரிக்சாவில் தான் கூட்டிக் கொண்டு போவார்கள். அப்படி போய் பார்த்த படம் இது. மாலை காட்சிக்கு சென்ட்ரல் தியேட்டர் வாசலில் குதிரை வண்டிகளிலும் ரிக்ஷாவிலும் பேமிலி ஆடியன்ஸ் இறங்கி கொண்டு இருந்தார்கள். அந்த வயதில் படத்தின் பல காட்சிகள் புரியவில்லை. சண்டை இல்லையே என்பது என் குறையாக இருந்தது. சென்ட்ரல் தியேட்டர் இடைவேளையில் கிடைக்கும் பருப்பு போலி தேங்காய் போலியும் சோடா கலரும் மட்டுமே அன்று take away ஆக இருந்தது. பின்னர் கல்லூரியில் படிக்கும் போது, அரை நண்பன் வாங்கி வந்த கோல்டன் ஹிட்ஸ் ஆஃப் இளையராஜா 10 ரூபாய் டெல்லி கேசட்டில் இந்த பாடலை கேட்ட போது, அப்படியே மனம் கரைந்து போனது. எப்படியும் மாதத்திற்கு ஒருமுறை கேட்டுவிடும் பாடல்.

No comments: