January 15, 2025

வார்னே

நூறாண்டுகளுக்கு ஒரு முறைதான் சில விளையாட்டு வீரர்கள் அவதரிப்பார்கள். அவர்களுக்கு முன்னும் அப்பேர்பட்ட ஆட்டக்காரர்களை உலகம் சந்தித்திராது. அவர்களுக்குப் பின்னும் அந்த இடம் நிரப்பப்படாமலேயே இருக்கும். அப்படிப்பட்ட ஒரு விளையாட்டு வீரர்தான் இதுவரை உலகில் தோன்றிய லெக் ஸ்பின்னர்களிலேயே சிறந்தவரான ஷான் வார்னே. அவர் கேட்டிங்கிற்கு இங்கிலாந்தில் வீசிய நூற்றாண்டின் சிறந்த பந்து எப்படி எல்லோரையும் திகைக்க வைத்ததோ அது போல அவரின் ஒவ்வொரு ஓவருமே பேட்ஸ்மனையும் எதிரணி பார்வையாளர்களையும் திகைப்பிலேயே வைத்திருக்கும். 90களில் கிரிக்கெட் பார்த்தவர்களுக்குத்தான் ஷான் வார்னேவின் ஜாம்பவான் தன்மை முழுதாகப் புரியும். எல்லா பேட்ஸ்மென்களும் அவரை எதிர்கொள்ள பல தூக்கமில்லா இரவுகளைச் சந்தித்தார்கள். அவர் வீசும் ஒவ்வொரு டெலிவரியையும் வர்ணனையாளர்கள் நூறு கண் கொண்டு பார்த்தார்கள். பார்வையாளர்கள் அங்கிங்கு அசையாமல் ஒரு தேர்ந்த நடனத்தை எப்படி பார்ப்பார்களோ அப்படிப் பார்த்தார்கள். அது டெஸ்டோ, ஒன் டேவோ வார்னே பந்து வீசும் போது எதிர் அணியினரிடம் தோன்றும் இறுக்கமும் எதிரணி பார்வையாளர்களிடம் தோன்றும் பதட்டமும் எதாலும் அளவிட முடியாதது. வார்னேவின் அறிமுக ஆண்டு அவ்வளவு சிறப்பில்லாதது. 1991 ஆம் ஆண்டு இந்திய அணி அசாருதீன் தலைமையில் ஆஸ்திரேலியாவிற்கு ஒரு நெடிய பயணம் மேற்கொண்டது. ஐந்து டெஸ்ட், மேற்கு இந்திய தீவுகளுடன் சேர்ந்து ஒரு ஒருநாள் மும்முனைப் போட்டித் தொடர் அது முடிந்து 1992 ஒரு நாள் உலக கோப்பை. டெஸ்ட் சீரிஸில் முதல் இரண்டு டெஸ்ட்களில் அடி வாங்கி மூன்றாவது டெஸ்ட் விளையாட சிட்னிக்கு சென்றது. சிட்னி நமது அணி குறைவாக அடி வாங்கும் மைதானம். அந்த டெஸ்டுக்கு முந்தைய நாள் செய்திகளில் ஷேன் வார்னே என்ற லெக் ஸ்பின்னர் அறிமுகமாகப் போவதாக காட்டினார்கள். சிலிப் கேட்ச் பிராக்டீஸ் செய்யும் கிளிப்பிங் அது. டெஸ்ட் தொடங்கியது ரவி சாஸ்திரி இரட்டை சதம் அடிக்க, சச்சின் சதம் அடிக்க மேட்ச் ட்ராவானது. வார்னே150 ரன்னுக்கு மேல் கொடுத்து சாஸ்திரியின் விக்கெட்டை மட்டும் எடுத்திருந்தார். அடுத்த டெஸ்டில் விக்கெட்டே இல்லை. ஐந்தாவதி டெஸ்ட் வேகப்பந்து வீச்சின் சொர்க்கமான பெர்த்தில். அந்த மேட்ச்சுக்கு வார்னேவை கழட்டி விட்டுவிட்டார்கள். இப்படியாக தன் முதல் டெஸ்ட் தொடரில் 200 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்து ஒரே ஒரு விக்கெட் மட்டுமே எடுத்திருந்தார் வார்னே. ஆனால் அவர் உள்ளூர் போட்டிகளில் ஆடியிருந்த விதத்தைப் பார்த்து அடுத்தடுத்த இலங்கை, மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து தொடர்களுக்கு அவர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். இந்த தொடர்களில் பெரிதாக அவர் ஏதும் சாதிக்கவில்லை. ஆனால் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு டெஸ்டில் அப்போது அவர்களின் கேப்டனாக இருந்த ரிச்சி ரிச்சர்ட்சனின் விக்கெட்டை ஒரு ப்லிப்பரின் மூலம் வீழ்த்தி இவருக்குள் ஏதோ இருக்கிறது என எல்லோரையும் எண்ண வைத்தார். 1993 ஆம் ஆண்டு ஆஷஸ் தொடருக்காக இங்கிலாந்து மண்ணில் கால் வைத்தது. அப்போது யாருக்கும் தெரியாது. இந்த தொடர் முடியும் போது ஒரு உலக சாம்பியன் உருவாகியிருப்பார் என. முதல் டெஸ்டில் வார்னேவின் முதல் டெலிவரி மைக் கேட்டிங்கிற்கு. ஸ்பின்னர்களை நன்கு ஆடக்கூடியவர் அவர். ஆனால் அவரையும் ஏமாற்றி லெக் ஸ்டம்பிற்கு வெளியே விழுந்து பாம்பு போல சீறி கேட்டிங்கின் கால்காப்பு, பேட்டைத் தாண்டி ஆப் ஸ்டம்ப் பெயில்ஸை வீழ்த்தியது. கேட்டிங்கால் அதை நம்ப முடியவில்லை. அன்று தொடங்கியது வார்னேவின் ஆட்சி. அந்த தொடரில் உலகின் கவனத்தை ஈர்த்தார் வார்னே. எப்படி இந்திய கிரிக்கெட்டுக்கு மும்பையோ அப்படி உலக கிரிக்கெட்டுக்கு இங்கிலாந்து. அவர்களின் செயல்கள் பிரதானமாக பேசப்படும். மற்றவர்கள் மட்டம் தட்டப்படுவார்கள். அந்த இங்கிலாந்தில் எந்த சம்பவம் நடந்தாலும் உலக கிரிக்கெட் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்க்கும். இந்த ஆஷஸில் வார்னேவின் பந்து வீச்சு எல்லோராலும் புகழப்பட்டது. அதற்கெல்லாம் மணி மகுடமாக கிரிக்கெட்டை அப்போது சரியாக கணிப்பவர் என்று பெயர் பெற்றிருந்த இம்ரான் கான் வார்னே 500+ விக்கெட்டுகளை எடுப்பார் என்று ஒரு ஸ்டேட்மெண்ட் அளித்தார். அப்போது வார்னே 50+ விக்கெட்டுகள் தான் எடுத்திருந்தார். பலத்த அதிர்ச்சி அலைகளை இம்ரான்கானின் அந்த ஸ்டேட்மெண்ட் கிளப்பியது. ஆனால் அதையும் தாண்டி 708 விக்கெட்டுகளை வீழ்த்தி இம்ரான்கானின் நம்பிக்கையை காப்பாற்றினார் வார்னே. வார்னேவின் சிறப்பு என நினைப்பது, ஒரு பேட்ஸ்மென் எந்த மைதானத்தில் விளையாடினாலும், அவர் எவ்வளவு செட்டில் ஆகியிருந்தாலும் வார்னே பந்து வீச வந்தால் ஒவ்வொரு பந்தையும் கணித்து மிகக் கவனத்துடன் தான் ஆட வேண்டியிருக்கும். லூஸ் பால் என்பதே பெரும்பாலும் இருக்காது. அப்படி போடப்படும் பந்து கூட பேட்ஸ்மெனை ட்ராப்பில் விழுக வைப்பதற்கான உத்தியோ எனவே எண்ன வைக்கும். அந்த பயத்தை தன் பந்து வீச்சுக்காலம் முழுவதும் பாட்ஸ்மென்களுக்கு கொடுத்து வந்தார் வார்னே. வார்னேவின் பந்து வீச்சில் நான்கு முக்கிய வெரைட்டிகள். முதலில் வழக்கமான லெக்ஸ்பின். மிடில் அண்ட் ஆப் ஸ்டம்பில் விழுந்து ஆப் ஸ்டம்பை நான்கு இஞ்சிற்குள் கிராஸ் செய்யும் டெலிவரி. பெரிய டீவியேசன் இருக்காது. மற்ற லெக் ஸ்பின்னர்களை அடிப்பது போல அசால்டாக ஸ்கொயர் கட் எல்லாம் செய்ய முடியாது. மீறி அடித்தால் விக்கெட் கீப்பர் அல்லது பர்ஸ்ட் சிலிப்பில் போய் உட்காரும். கவனமாக தடுத்து ஆடாவிட்டாலும் எட்ஜ் எடுத்து விடும். இரண்டாவது பிலிப்பர். நன்கு செட்டில் ஆன பேட்ஸ்மென்களை கூட மிரட்டி விடும் டெலிவரி இதுதான். பிட்ச் ஆன உடன் லோ பவுன்ஸில் நேராகவும் விரைவாகவும் வரும். பெரும்பாலான பேட்ஸ்மென்கள் எல் பி டபிள்யூ அல்லது போல்ட் ஆகி விடுவாகள். தென் ஆப்பிரிக்காவின் டேரில் கல்லினனை அவர் ஓய்வு பெற்ற பின்னரும் அந்த டெலிவரி துரத்தியதாகச் சொல்வார்கள். மூன்றாவது கூக்ளி. ஷேன் வார்னேவின் சமகால ஆட்டக்காரரான முஷ்டாக் அகமது, தற்போதைய லெக் ஸ்பின் சென்சேசன் ரஷீத் கான் இவர்கள் எல்லாம் ஜெப்ரி பாய்காட் பாஷையில் சொல்வதானால் கூக்ளி மெர்சண்டுகள். அதுவும் முஷ்டாக்கை பற்றி சொல்லும் போது, அவர் கூக்ளி பவுலர் எப்போதாவது லெக் ஸ்பின் போடுவார் என்றே சொல்வார். ஆனால் வார்னே எக்கச்சக்கமாக கூக்ளி போட மாட்டார். அதை பேட்ஸ்மென்னை திகைக்க வைக்கும் அஸ்திரமாகத்தான் அரிதாக பயன்படுத்துவார். நான்காவது தான் வார்னே ஸ்பெசல். லெக் ஸ்டம்பிற்கு மிக வெளியே ஏழாவது எட்டாவது ஸ்டம்பில் விழுந்து, பேட்ஸ்மெனின் லெக் ஸ்டம்பை தகர்க்கும் டெலிவரி. எத்தனை பேட்ஸ்மென்கள் அதில் விழுந்திருக்கிறார்கள், கணக்கே இருக்காது. இயன் ஹீலே கீப்பராக இருந்த காலகட்டத்தில் இதை ஒரு ட்ரிக்காகவே செய்வார்கள். டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி எண்ணற்ற வெற்றிகள் பெறவும் ஒரு பதினைந்து ஆண்டுகள் யாராலும் வீழ்த்த முடியா அணியாகவும் இருந்ததில் வார்னேவின் பங்கு அளப்பரியது. ஒரு நாள் போட்டிகளிலும் வார்னே அணிக்கு பெரும் சொத்தாக இருந்தார். வார்னேவின் ஓவரில் முக்கிய விக்கெட்டுகள் விழுந்து விடக்கூடாது என கவனமாக ஆடுவார்கள். இதனால் தேவைப்படும் ரன் ரேட் கூடும். மற்ற பவுலர்களை தேவையில்லாமல் அடித்து அவுட் ஆவார்கள். 96 & 99 உலக கோப்பை செமி பைனல்களில் அவரின் பந்து வீச்சு மறக்க முடியாதது. 96 உலக கோப்பை பைனலில் அரவிந்த டி சில்வா & ரணதுங்கா இணை கவனமாக ஆட அந்தப் போட்டியில் வெற்றி பெற முடியவில்லை. 99ல் கோப்பையை வென்றனர். 2003 உலக கோப்பையில் ஊக்க மருந்து சர்ச்சை காரணமாக டோர்னமெண்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இல்லையென்றால் இரண்டு உலக கோப்பைகள் வாங்கிய ப்ளேயர்கள் லிஸ்டில் இடம் பிடித்திருப்பார். 20-20 கிரிக்கெட்டிலும் தன் முத்திரையைப் பதித்தார் வார்னே. ஐ பி எல்லின் முதல் கோப்பையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வாங்கித் தந்தார். இக்கட்டான சூழலில் நன்கு பந்து வீசியும் ஸ்டேட்டர்ஜிக்கலான முடிவுகளை எடுத்தும் சிறப்பாக ஆடினார். விஸ்டன் நடத்திய நூற்றாண்டின் சிறந்த 5 வீரர்கள் தேர்தலில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த லிஸ்டில் இருந்த ஒரே பவுலர் வார்னே தான். அப்போது ஆக்டிவ்வாக ஆடிக்கொண்டிருந்த வீரரும் அவர் தான். இத்தனை சிறப்புகள் இருந்தும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பொறுப்பை அவர் வகிக்காதது சிறு குறை தான். ஸ்டீவ் வாவ் ஓய்வு பெற்ற உடன் நீண்ட கால நோக்கில் யோசித்து ரிக்கி பாண்டிங்கை அணித்தலைவர் ஆக்கினார்கள். ஆனால் அதன்பின்னர் இரண்டு மூன்று ஆண்டுகள் வார்னேதொடர்ந்து விளையாடத்தான் செய்தார். ஒரு வேளை அவர் மீது இருந்த சில குற்றச்சாட்டுகளால் (ஒரு பெண் விவகாரம், புக்கிகளுக்கு இன்பர்மேசன் கொடுத்தது போன்ற) கேப்டன் ஷிப்பை தரவில்லையோ என்னவோ? என்ன நடந்திருந்தாலும் சரி, நீங்கள் உங்கள் கனவு உலக லெவன் அணியை தேர்ந்தெடுங்கள் என்று எந்த கிரிக்கெட் பிரபலத்திடம் கேட்டாலும் எப்படி ஒரு போருக்குப் புறப்படும் மன்னன் தன் முக்கிய ஆயுதமாகக் கருதும் ஒன்றை சரிபார்த்து விட்டே அடுத்தடுத்த ஆயுதங்களில் கவனம் செலுத்துவானோ அது போல வார்னேவை ஸ்பின்னர் இடத்தில் எழுதி விட்டுத்தான் அணியை செலக்ட் செய்யவே ஆரம்பிக்கிறார்கள். இது ஒன்றே போதும் வார்னேவின் திறனுக்கு. தன் உடன் நிலை மீது ஒரு நிலையில்லாத அக்கறை கொண்டவர் வார்னே. அவர் மீது கிரிக்கெட் சம்பந்தப்பட்ட இடத்தில் புகை பிடித்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டது உண்டு. தான் அதிக எடையுடன் இருப்பதால் திடீரென உடற்பயிற்சி ரொட்டீன்களை எடுத்துக் கொள்வார். அப்படி எடுக்கப்பட்ட ஒரு முயற்சியின் இடையே அவர் இறந்தது துரதிர்ஷ்டவசமானது. நிரப்ப முடியாத வெற்றிடத்தை விட்டுச் சென்றிருக்கிறீர்கள் வார்னே.

No comments: