January 15, 2025

அசாருதீன்

1984 ஆம் ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இந்தியப் பயணம் அறிவிக்கப்பட்ட போது, இந்திய கிரிக்கெட் அணி ஒரு குழப்பமான சூழ்நிலையில் இருந்தது. 1983ல் உலக கோப்பையைப் பெற்றுத்தந்த கபில்தேவ், அடுத்து வந்த தொடர்களில் வெற்றியைப் பெற இயலாதால், குறிப்பாக எங்களையா வென்று உலகக் கோப்பையை வாங்கினாய்? அதற்கு பதிலடி தருகிறோம் என வஞ்சினத்துடன் கிளைவ் லாயிட் தலைமையில் இந்தியாவிற்கு வந்த மேற்கு இந்திய தீவு அணியினர் நம்மை பந்தாடி விட, கபில்தேவிடம் இருந்த கேப்டன் பதவி கவாஸ்கருக்குச் சென்றது. கவாஸ்கர், தனக்குப் பிடிக்காத சில வீரர்களை எப்படியாவது கழட்டி விட வேண்டுமென்று மனதில் திட்டமிட்டுக் கொண்டே இருந்தார். அதனால் இந்திய அணி டிரஸ்ஸிங் ரூமில் ஒரு சுமுகமான நிலை அப்போது இருக்கவில்லை. அப்போதைய இந்தியப் பிரதமராக இருந்த இந்திராகாந்தி தன் பாதுகாவலர்களலேயே சுடப்பட்டு, அவரது மகன் ராஜீவ் காந்தி பிரதமராப் பதவியேற்று, உடனேயே தேர்தலையும் அறிவித்தார். அந்த நேரத்தில் தான் இங்கிலாந்து அணியின் சுற்றுப்பயணமும் இங்கே துவங்கியது. எனவே இந்திய மக்கள், மீடியா இவற்றின் கவனம் முழுவதும் அரசியல் களத்தையே நோக்கி இருந்தது. இந்தச் சூழ்நிலையில்தான் 5 டெஸ்ட்கள், 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை விளையாட டேவிட் கோவர் தலைமையிலான இங்கிலாந்து அணி இங்கே வந்தது. முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. அடுத்த டெஸ்டில் இங்கிலாந்து வென்றது. இந்த இரண்டாம் டெஸ்டில் சரியாக விளையாட வில்லையென கபில்தேவை (இத்தனைக்கும் அவர் முதல் இன்னிங்ஸில் 60 ரன்கள் அடித்திருந்தார்) மூன்றாவது டெஸ்டில் ஆடும் அணியில் சேர்க்காமல் வெளியே உட்கார வைத்தார் கவாஸ்கர். இலவச இணைப்பாக மக்களை கவர்ந்திழுக்கும்படி ஆடக்கூடிய சந்தீப் பாட்டிலையும். சந்தீப் பாட்டிலுக்கு அதுவே கடைசி டெஸ்டானது. மூன்றாவது டெஸ்ட் விளையாட கல்கத்தாவிற்கு பயனமாகின இரு அணிகளும். கபில்தேவ் இல்லாததால் அவரது ரசிகர்கள் கிட்டத்தட்ட இங்கிலாந்து அணிக்கு ஆதரவு கொடுப்பது போல், கவாஸ்கருக்கு எதிராக கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தார்கள். முதல் மூன்று விக்கெட்டுகள் விழுந்த நிலையில், அந்தப் போட்டியில் சந்தீப் பாட்டிலுக்கு பதிலாக அறிமுகமான இன்னொரு வீரர் களமிறங்கினார். அவர் களத்தில் இறங்கிய உடனேயே இன்னொரு விக்கெட்டும் போக 127 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற நிலை. ஒரு அறிமுக வீரருக்கு இது இக்கட்டான நிலை தான். ஆனால் அது பற்றி எந்த அழுத்தத்தையும் ஏற்றிக் கொள்ளாமல் தன் ஆட்டத்தை அவர் ஆடத் துவங்கினார். கிரிக்கெட் ரசனையுள்ள கல்கத்தா ரசிகர்கள், யார் இந்தப் புதுப்பையன்? ஆட்டம் வித்தியாசமாக இருக்கிறதே என கவாஸ்கருக்கு எதிராக கோஷம் எழுப்புவதை சற்று நிறுத்தி விட்டு ஆட்டத்தை கவனிக்கத் துவங்கினார்கள். வர்ணனையாளர்களும் இது இவரது முதல் போட்டி போலவே தெரியவில்லை என பேசத் துவங்கினார்கள். அந்த வீரர் வேறு யாருமல்ல. எம் எல் ஜெயசிம்மா, குண்டப்பா விஸ்வநாத் ஆகியோருக்கு அடுத்த படியாக மணிக்கட்டு திருப்பல்களை வைத்தே பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பக்கூடிய திறமைசாலியாக இந்திய அணிக்குள் உள்ளே வந்து மூன்று உலக கோப்பைப் போட்டிகளுக்கு இந்திய அணியின் கேப்டனாக இருந்த அசாருதீன் தான். அடுத்த இரண்டு டெஸ்ட்களிலும் இங்கிலாந்து அணிக்கு எதிராக சதமடித்து, இன்று வரை யாரும் உடைக்க முடியாத சாதனையாக இருக்கும் அறிமுகமான உடன் தொடர்ந்து மூன்று டெஸ்ட்களிலும் சதமடித்த சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இந்தச் சாதனையானது அவருக்கு உடனடியாக இந்திய அணியில் ஒரு நிலையான இடத்தைப் பெற்றுத் தந்தது. அடுத்து வந்த பென்சன் அண்ட் ஹெட்ஜஸ் உலக கோப்பைத் தொடர், இங்கிலாந்து, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணங்கள், ஷார்ஜா போட்டிகள், 1987 உலக கோப்பை என எல்லாவற்றிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அப்போது இருந்த இந்திய பேட்ஸ்மென்களுக்கும் அவருக்கும் பிட்னெஸ் லெவலில் பெரிய வேறுபாடு இருந்தது. கவாஸ்கர், வெங்சர்க்கார், அமர்நாத் ஏன் ஸ்ரீகாந்த், ரவி சாஸ்திரி கூட விக்கெட்டுகளுக்கு இடையில் வேகமாக ஓட மாட்டார்கள். கபில் தேவ் ஒருவர் மட்டும் தான் வேகமாக ஓடக்கூடியவர். பவுண்டரி அடிப்பார்கள், இல்லையெனில் உள் வட்டத்தைத் தாண்டி அடித்து விட்டு நிதானமாக ஒரு ரன் ஓடுவார்கள். இரண்டு ரன்களே அரிதாகத்தான் ஓடுவார்கள். ஆனால் அசாருதீன் விக்கெட்டுகளுக்கு இடையே மின்னல் வேகத்தில் ஓடக்கூடியவர். அவர் அழைத்தாலும் யாரும் இரண்டாம் ரன் வரமாட்டார்கள், கபில்தேவைத் தவிர. பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களைப் பற்றி சொல்லும் போது ஒன்று சொல்வார்கள். அவர்களுக்கு மட்டும் நல்ல ஸ்லிப் கேட்சர்கள் இருந்தால் இன்னும் அதிக வெற்றிகளைப் பெற்றிருப்பார்கள் என. அசாருதீனுக்கும் அதே தான். அவருக்கு மட்டும் முதல் ஆறேழு ஆண்டுகளில் நல்ல ரன்னிங் பார்ட்னர்கள் கிடைத்திருந்தால் இன்னும் அதிகமாகவே ரன்களைக் குவித்திருப்பார். அசாருதீன் பந்தை லேசாகத் தட்டிவிட்டு விரைந்து ஓட நினைப்பார். எதிர் முனை பேட்ஸ்மென்கள், ஆணியில் மாட்டிய காலண்டரைப் போல் இருப்பார்கள். இரண்டாம் ரன்னுக்கெல்லாம் மூச்சு வாங்கும் பேட்ஸ்மென்களைக் கொண்டது தான் அப்போதைய இந்திய அணி. மூன்று ரன்கள் ஓடிப் பார்த்த சம்பவங்கள் எல்லாம் மிக மிகக் குறைவு. அதே போல் ஸ்ட்ரோக் பிளேயிலும் அவருக்கும் மற்ற ஆட்டக்காரர்களுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. அவரது லெக் சைட் ப்ளிக் யாராலும் மேட்ச் செய்ய முடியாத ஒன்றாக அப்போது இருந்தது.லெக் ஸ்டம்பிற்கு வரும் பந்தை ப்ளிக் ஆடுவது சுலபம். அதைக்கூட கடினமாக ஒன்றாக செய்வார்கள் மற்ற பேட்ஸ்மென்கள். ஆனால் மிடில் ஸ்டம்பிற்கு வரும் பந்தைக் கூட அலுங்காமல் குலுங்காமல், தன் ரிஸ்ட் ஒர்க்கால் லெக் சைட் அனாயசமாக கலை நுணுக்கத்துடன் ஆடும் திறமை வாய்த்திருந்தது அசாருதீனுக்கு. ஆப் ஸ்டம்பிற்கு வரும் பந்துகளைக் கூட லேசாக கால்களை நகர்த்தி பெரிய பிரயத்தனம் ஏதுமின்றி மிட் விக்கெட் திசைக்கு அனுப்புவதில் வல்லவர் அசாருதீன். பந்து வீச்சாளர்கள் கூட ஒரு நொடி நாம் ஆப் ஸ்டம்பிற்கு பந்தை வீசினோமா? இல்லை லெக் ஸ்டம்பிற்கு வீசினோமா என குழம்பி விடுவார்கள். எதிர்த் தரப்பு கேப்டனும் என்னடா இது லெக்ஸ்டம்பிற்கு பந்தைப் போடுகிறான் என்று பந்து வீச்சாளரைத் திட்டும் படி இருக்கும் அசாருதீனின் இயல்பான அந்த ஸ்ட்ரோக். அதே போல் ஸ்ட்ரெயிட் ட்ரைவ் அடிப்பதிலும் வல்லவர். பவுலர் ஆப் ஸ்டம்பிற்கு ஓவர் பிட்ச் போட்டாலே மிடான், மிடாப்பில் இருப்பவர்கள் பவுண்டரியைத் தடுக்க ஓட ஆரம்பித்து விட வேண்டியது தான். அப்படி ஒரு டைமிங்கில் ஸ்ட்ரெயிட் ட்ரைவ் ஆடுவார். ஆட வந்த புதிதில் லெக் சைட் வித்தகராக இருந்த அசாருதீன், சில ஆண்டுகளிலேயே ஆப் சைடும் சிறப்பாக ஆட ஆரம்பித்தார். எக்ஸ்ட்ரா கவர் அவருக்கு பிடித்த பிரத்யேக ஸ்பாட். பேட்டிங்கை விட பீல்டிங் திறமையால் தான் இந்தியர்கள் அனைவரின் மனதையும் கவர்ந்தார் அசார். இந்திய அணியில் சிறந்த பீல்டர்கள் என்ற இனமே இல்லாத காலகட்டம் அது. ஏக்நாத் சோல்கர் மட்டுமே சிறந்த பீல்டர் என அறியப்பட்டு இருந்தார். அவர் பார்வார்ட் சாட் லெக்கிலும் சில சமயம் சில்லி பாயிண்டில் பெரும் வித்தையைக் காட்டியவர். இந்தியா கண்ட அற்புத குளோஸ் இன் பீல்டர். ஆனால் அவருக்கு அப்புறம் பீல்டிங்கிற்காக யாரும் இந்தியாவில் அறியப்படவில்லை. அசாருதீன் வந்த பிறகு தான் இந்தியர்களும் இப்படி பீல்டிங் செய்வார்களா என எல்லோரும் ஆச்சரியப்பட்டனர். அவருக்கு மிகவும் பிடித்த பீல்டிங் இடம் பாயிண்ட். பேட்ஸ்மென் ஸ்கொயர் கட் அடித்தால் அதி வேகமாக பந்து அங்குதான் வரும். அதை அசால்டாக கையாள்வார். எடுத்த கையாலேயே திருப்பி வீசவும் செய்வார். இதெல்லாம் இப்போது மிக சாதாரணம் என்றாலும் அப்போது வியந்து பாராட்டப்பட்ட திறமை. அதே போல் ஸ்லிப்பிலும் பல அட்டகாச கேட்சுகளைப் பிடித்தவர் அசாருதீன். 1987 உலக கோப்பைத் தோல்விக்குப் பின்னர் கபில்தேவ் கேப்டன் பதவியில் இருந்து விலக, வெங்சர்க்கார் கேப்டனாக நியமிக்கப்பட்டார், அவரும் தோல்விகளையே காண, ஸ்ரீகாந்த் கேப்டனாக்கப்பட்டார். அவரும் நிலைக்க முடியாமல் போக 1989- 90 நியூசிலாந்து தொடருக்கு கேப்டனாக நியமிக்கப் பட்டார் . அவருக்கு துணை கேப்டனாக நியமிக்கப்பட்டவர் விக்கெட் கீப்பராக இருந்த் கிரண் மோர். அந்தளவிற்கு சீனியர்கள் எல்லோரும் ஓய்வு பெற்றிருந்த நேரம் அது. இவர் எத்தனை நாள் நிலைப்பார் எனவே எல்லோரும் நினைத்தார்கள். அதனைப் பொய்யாக்கி 1992,96 மற்றும் 99 உலகக் கோப்பை போட்டிகளுக்கு இந்திய அனிக்குத் தலைமை தாங்கும் அளவுக்கு நீடித்தார். அசாருதீனின் கேப்டன் பதவி நீடிக்கக் காரணம் அவர் இந்திய பிட்சுகளில் பெற்ற டெஸ்ட் வெற்றியே. மீண்டும் இங்கிலாந்து அணியே அதற்கு விதை போட்டது. இங்கிலாந்து அணியின் 1993 இந்திய சுற்றுப்பயணத்தின் போது, தன் அணிக்கேற்ற பிட்சுகளை அப்போதைய மேனேஜர் அஜீத் வடேகரின் வழிகாட்டுதலுடன் போட வைத்தார் அசாருதீன். மூன்றாம் நாளில் இருந்து ஸ்பின்னர்கள் சொன்னபடி கேட்கும் பிட்சுகள். அதற்கேற்றாற்போல கும்ப்ளே,ராஜூ, சௌகான் என ஸ்பின்னர்கள். தேவையான ரன்னை எடுக்க சச்சின் டெண்டுல்கர் தலைமையில் பேட்ஸ்மென்கள் என ஒரு வியூகம் அமைக்கப்பட்டது.இது அட்டகாச பலனைத் தந்தது. அதுவரை ஏராளமான ட்ராக்களையே சந்தித்து வந்த இந்திய அணி வெற்றிகளைப் பெறத் தொடங்கியது. ஆனால் உள்ளூரில் புலியாகவும் வெளியூரில் எலியாகவும் அணி மாறத் துவங்கியது. இதனால் வெளிநாடுகளில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை அசாரால் பெற முடியவில்லை. காலத்துக்கும் மறக்க முடியா பல இன்னிங்ஸ்களை அசாருதீன் ஆடியுள்ளார். ஈடன் கார்டனில் அவர் அடித்த 5 டெஸ்ட் சதங்கள், 1990ல் இங்கிலாந்திற்கு எதிராக பாலோ ஆனைத் தவிர்க்க அடித்த சதம், தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டர்பன் டெஸ்டில் அடித்த சதம் எல்லாமே ஸ்ட்ரோக் பிளே எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டானவை. அதுவும் டர்பன் டெஸ்டில் அவர் ரன் அவுட் ஆகும் போது வர்ணனையாளர் சொன்னார், “வேறு எந்த வகையிலும் இவர் அவுட் ஆகியிருக்க முடியாது அப்பேர்பட்ட பார்மில் இவர் ஆடிக் கொண்டிருந்தார் என்று. ஒரு நாள் போட்டிகளிலும் ஏராளமான மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்களை ஆடியவர் அசாருதீன். ஒரு நல்ல பேட்ஸ்மனாக, சரிந்திருந்த இந்திய அணியை சிறிது நிமிர்த்திய கேப்டனாக அறியப்பட்டு கௌவரமாக ஓய்வு பெற்றிருக்க வேண்டிய அசாருதீன் தேவையில்லாமல் கிரிக்கெட் சூதாட்டப் புகாரில் சிக்கி கிரிக்கெட் உலகில் இருந்து வெளியேறினார். தன் கேப்டன்சிக்கு போட்டி இல்லாத தன் முதல் ஐந்தாண்டு காலத்தில் சில வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்க கிரிக்கெட் வாரியத்துக்கு அழுத்தம் கொடுத்திருந்தால் இன்னும் நல்ல கேப்டனாக அறியப்பட்டிருப்பார் அசாருதீன்.

No comments: