January 15, 2025
வைதேகி காத்திருந்தாள்
வைதேகி காத்திருந்தாள் என்கிற படப்பெயரைக் கேட்ட உடன், பலருக்கும் பல விஷயங்கள் ஞாபகம் வரும்.
இளையராஜா, ஒரு படத்திற்கான கம்போசிங் முடிந்த பின்னர், அன்று இருந்த மீத நேரத்தில் சில ட்யூன்களை கம்போசிங் செய்து வைத்திருந்தார். அதை மொத்தமாக ஒரு படத்திற்குத்தான் கொடுப்பேன் என்று சொன்னார். அந்த ட்யூன்களை வாங்கி, அதற்கேற்ப சிச்சுவேஷன்கள், திரைக்கதை என அமைத்து ஆர் சுந்தர்ராஜன் இயக்கிய படம்.
கவுண்டமணி - செந்தில் என்கிற நகைச்சுவை காம்பினேஷன் என்ற ஒன்று மிக மிக பலமாக உருவாக காரணமாக இருந்த படம். இந்த காம்பினேஷன் இருந்தாலே ஒரு படத்திற்கு மினிமம் கியாரண்டி நிச்சயம் என்ற எண்ணத்தை தமிழ் சினிமாவிற்கு விதைத்த படம். ஆல் இன் ஆல் அழகுராஜா, பெட்ரோமக்ஸ் லைட், கால்கிலோ அல்வா, மல்லிகைப்பூ, ரங்கநாதன்கிற பேருக்கு சைக்கிள் தர்றதில்ல, கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசியா இருந்தா போதாதா, வயித்து வலிக்கு ரெண்டு இட்லி கெட்டிச் சட்னி என 40 ஆண்டுகள் ஆகியும் தமிழ்நாட்டின் வக்காபுலரியில் இருந்து மறையாத சொற்களை கொண்ட படம்.
ஒரு நாயகன் இரவில் பாடுவான். அவன் பாடலைக் கேட்டு ஊரே மயங்கும். என்கிற ஒரு கான்செப்டை கொடுத்த படம். அதையொட்டி பல இன்ஸ்பிரேஷன்கள், ஸ்பூப்கள் உருவாக காரணமாக இருந்த படம்.
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு, மேகம் கருக்கையிலே, இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே? என கூட்டமாக கூடி வைப் செய்யக்கூடிய பாடல்கள்.
மூன்று கதைகள் இணைந்த படம். தண்ணீர் இல்லாததால் காதலியை இழந்தவன், தண்ணீர் அதிகமாக இருந்ததால் கணவனை இழந்த பெண், இருவரும் சேர்ந்து ஒரு காதலை சேர்க்கும் படம்.
என எத்தனையோ ஞாபகம் வரும். ஆனால் இந்தப் படத்தில் விஜய்காந்த் செய்த குறும்புத்தனமான கிராமத்து வாலிபன் வேடம் என்பது அதிகம் கவனிக்கப் படாமல் போனது. தமிழ் சினிமா வரலாற்றில் எம் கே தியாகராஜா பாகவதர் - சின்னப்பா காலம் துவங்கி எம்ஜியார்-சிவாஜி காலம் வரை உண்மைக்கு நெருக்கமான கிராமத்து படங்கள் வரவில்லை. தேவராஜ் - மோகன், பாரதிராஜா வருகைக்குப் பின்னர் அது சாத்தியமானது.
ஆனால் ஒரு யதார்த்தமான, லைவ்லியான, குறும்புத்தனமான, கிராமத்தில் நாம் பார்க்கும் காதலிக்கும் இளைஞன் கேரக்டரை, அதுவரை ரஜினி-கமல் காலம் வரையும் கூட யாரும் திரையில் அப்படியே கொண்டு வரவில்லை. 16 வயதினிலே படத்தில் சப்பாணி, பரட்டை என கேரக்டர்கள் வந்தன.
ஆனால், அட இது நம்ம சித்தப்பா, அண்ணன், மாமா, அத்தை மகன் இப்படித்தானே இருப்பார்கள் என்கிற உணர்வை கிராமத்துப் படங்களில் நடிக்கும் போது, முதன் முதலில் கொண்டு வந்தது விஜய்காந்த் தான். அவர் அளவிற்கு தமிழ்சினிமாவில் அந்த கிராமத்து நாயகன் வேடத்தை மிகுந்த நம்பகத்தன்மையுடன், கண்டு மகிழும்படியாக திரையில் கொண்டு வந்தது விஜய்காந்த் தான். ராமராஜன் அதன் பின்னர் நடித்த எல்லாப் படங்களிலும் அந்த கேரக்டரின் சாயல் இருக்கும்.
ஒரு நடிகனை, தமிழ்நாட்டு மக்கள் ஆக்ஷன் ஹீரோவாக ஏற்றுக் கொள்வதற்கு சில காலம் பிடிக்கும். அப்படி ஏற்றுக்கொண்டு விட்டால் அவர்கள் திரைத்துறையில் வெகுகாலம் நீடித்து நிற்பார்கள்.
விஜய்காந்த் எல்லாம் நடிக்க வந்த ஒன்றிரண்டு ஆண்டுகளிலேயே, தமிழ்நாட்டு மக்களால் யுனானிமஸாக ஆக்ஷன் ஹீரோவாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர். வைதேகி காத்திருந்தாள் படம் வெளியான 1984 ஆம் ஆண்டிலேயே அவர் வெற்றி, நூறாவது நாள், வெள்ளைப்புறா ஒன்று, நூறாவது நாள் என ஏகப்பட்ட ஆக்ஷன் படங்களில் நடித்திருந்தார்.
இப்போது, சசிகுமாருக்கு சொல்கிறார்களே, இவர் நல்லவர் என சொல்வதற்கு, காரக்டர் ஆர்க் ஏற்படுத்துவதற்கு தனியாக சீன் தேவையில்லை. சசிகுமாரைக் காட்டினாலே மக்கள் நல்லவர் என்று மைண்ட் செட்டிற்குப் போய் விடுவார்கள் என. அதுபோல விஜய்காந்த்திற்கும் நடிக்க வந்த ஒராண்டிலேயே இவர் மிகப்பெரிய ஆக்ஷன் ஹீரோ என்கிற இமேஜ் வந்துவிட்டது. அந்த கேரக்டர் ஆர்க் கொண்டுவர எந்த அறிமுக காட்சிகளும் தேவையில்லாமல் போய்விட்டது. விஜய்காந்த் போட்டோ போஸ்டரில் இருந்தாலே, இது ஆக்ஷன் படம் என இளைஞர்கள், சிறுவர்கள் தியேட்டர் கியூவில் போய் நின்று விடுவார்கள்.
அப்படி இருந்த சூழலில், வைதேகி காத்திருந்தாளில் வெள்ளைச்சாமி என்கிற கேரக்டரை ஏற்கிறார் விஜய்காந்த். ஒரு அத்தாரிட்டிவ் கிராமத்து இளைஞனை அப்படியே கொண்டு வருகிறார்.
1984 தீபாவளிக்கு படம் வெளிவருகிறது. உடன் ஏவி எம் தயாரிப்பில் ரஜினிகாந்தின் நல்லவனுக்கு நல்லவன், அந்த ஆண்டு ஆறேழு இந்திப்படங்களில் நடித்துக் கொண்டிருந்துவிட்டு தமிழ் கோட்டாவிற்காக கமல் நடித்த மறுஜென்மம் பற்றிய எனக்குள் ஒருவன் படங்கள் வந்தன. அதையெல்லாம் விட இந்தியாவின் முதல் 3டி திரைப்படம் மலையாள மை டியர் குட்டிச் சாத்தான் படத்தின் டப்பிங்கும்.
வலுவான போட்டி. கண்ணாடி போட்டு படம் பார்க்கனுமாம், எல்லாமே கிட்டக்க வருதாம் என தமிழ்நாட்டு மக்கள் அந்த அனுபவத்திற்காக வரிசையில் நின்றார்கள். டிசம்பர் மாத அரையாண்டு விடுமுறையில் எல்லாம் இந்தப் படத்தைப் பார்க்காவிட்டால், ஸ்கூல் டிசி கொடுத்து விடுவார்கள் என்னும் அளவிற்கு ஸ்கூல் பையன்கள் குடும்பத்தோடு வந்தார்கள்.
நல்லவனுக்கு நல்லவன் பெரிய ஹிட். எனக்குள் ஒருவன் நல்ல ஹிட் என்று சொல்லமுடியாவிட்டாலும், சில திரையரங்குகளில் 100 வது நாள் வரை ஓடியது.
வைதேகி காத்திருந்தாள் படம் தான் ராகுல் டிராவிட் டெஸ்ட் இன்னிங்ஸ் போல ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக வேகம் எடுத்தது. எப்படி பந்து வீச்சாளர்கள், இவர் எப்ப அவுட் ஆவார் என நினைப்பார்களோ. அது போல விநியோகஸ்தர்களும், சி செண்டர் தியேட்டர் உரிமையாளர்களும் எப்படா இந்தப்படத்தை மெயின் தியேட்டர்கள் கூட்டம் குறையும். எடுப்பார்கள் என பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.
ரிப்பீட் ஆடியன்ஸ் என்பார்களே, அது இந்தப்படத்திற்கு வந்து கொண்டே இருந்தார்கள். பாடல்களும், நகைச்சுவை காட்சிகளும் அப்படி அமைந்த படம். பல தியேட்டர்களி சில்வர் ஜூப்ளி.
இந்தப் படத்திற்குப் பின், அம்மன் கோவில் கிழக்காலே, நினைவே ஒரு சங்கீதம், நானே ராஜா நானே மந்திரி, தெற்கத்தி கள்ளன்,பொன்மனச் செல்வன், கோவில் காளை,சின்னக் கவுண்டர் என ஏகப்பட்ட கிராம கேரக்டர்களை அவர் செய்து விட்டார். அவர் அளவிற்கு அந்த கேரக்டரை authoritive ஆக திரையில் pull செய்தவர்கள் குறைவு.
விஜய்காந்த் என்றாலே போலீஸ் கேரக்டர் என்பார்கள். கோபக்கார இளைஞன் வேடம் என்பார்கள், சிவப்பு மல்லி, அலை ஓசை என புரட்சிகர வேடங்களில் நடித்தவர் என்பார்கள். அதற்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை விஜய்காந்த நடித்த கிராமத்து இளைஞன் வேடங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment