January 15, 2025

ராகுல் ட்ராவிட்

எங்கள் தெருவில் செந்தில் என்று ஒரு அண்ணன் இருந்தார். அந்த சமயத்தில் எல்லா தெருக்களிலும் செந்தில்கள் இருந்தார்கள். இவர் படிப்பு செந்தில் என்று எங்களால் அழைக்கப்பட்டவர். காலையில் சேவலையே எழுப்பி இவர்தான் கூவ வைப்பார் என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு விரைவாக எழுந்து படிப்பார். பத்தாம் வகுப்பில் ஒரு படத்திற்கும் அவர் சென்று பார்த்ததில்லை. தெரு கிரிக்கெட் விளையாட வந்தது இல்லை. தேர்வு முடிவுகள் வந்தபோது, ஒரு மார்க்கில் பள்ளி முதல் மார்க் எடுக்கும் வாய்ப்பை இழந்திருந்தார். அதனால் எல்லோருடைய வாழ்த்துக்களும் இவரை அனாதையாக விட்டுவிட்டு முதல் மார்க் எடுத்தவரிடம் சென்று விட்டன. இவர்களது உறவு வட்டாரத்திலும் வேறொரு ஊரில் படித்த இன்னொரு பையன் இவரை விட இரண்டு மார்க் அதிகம் எடுத்து விட்டதால், அங்கும் இவரை யாரும் கண்டு கொள்ளவில்லை. 1987ல் 470 மார்க் பத்தாம் வகுப்பில் எடுப்பதெல்லாம் பெரிய சாதனை. ஆனால் அவர் தவறவிட்ட ஒன்று இரண்டு மார்க்குகளால் அவருக்கு எந்த புகழும் கிடைக்கவில்லை.அதோடு அவர் வெறிகொண்டு படிப்பதை நிறுத்திவிட்டார். சமீபத்தில் மறைந்த எம்டி வாசுதேவன் நாயரின் மிகப் புகழ்பெற்ற நாவல் இரண்டாம் இடம். மகாபாரதத்தை பீமனின் பார்வையில் இருந்து பார்த்தது. காலம் முழுவதும் அந்த இரண்டாம் இடம் பீமனை வருத்திக் கொண்டே இருக்கும். மதிப்பு,ஆட்சி என்று பார்த்தால் தர்மர். பலம் என்று பார்த்தால் அர்ஜுனன் அவரை விஞ்சி நிற்பார்கள். நவீன காலத்திலும் அது மாதிரியான கேரக்டர்களை நாம் வாழ்வில் கண்டு கொண்டே தான் இருக்கிறோம். அப்படி நவீன பீமன் என்று அழைக்கப்பட வேண்டியவர் ராகுல் டிராவிட். 96 - இங்கிலாந்தில் இரண்டாவது டெஸ்டில் கங்குலியும் டிராவிட்டும் இறங்குகிறார்கள். கங்குலி சதம் அடிக்கிறார். டிராவிட் 96 ரன்கள். ஆனால் கங்குலிக்கும் வாட்டர்ஷிப் கொடுத்து கீழ் உள்ள பேட்ஸ்மேன்களுடனும் ஆடி இந்திய அணிக்கு லீடு பெற்று தருகிறார். ஆனால் எல்லாப் புகழும் கங்குலிக்கே கிடைத்தது. 2001 கல்கத்தா ஈடன் கார்டனில் பாலோ ஆன் வாங்கி இந்திய அணி ஆடுகிறது. லட்சுமணனும் டிராவிட்டும் இணைந்து மிகப்பெரிய ஸ்கோர் எடுத்து அந்த மேட்சில் இந்தியாவை வெற்றி பெற வைக்கிறார்கள். அதிலும் லட்சுமணனுக்கே பெயர். 2006 - பாகிஸ்தானில் அவர்களுக்கு எதிரான டெஸ்ட். அவர்கள் 679 ரன்கள் குறிக்கிறார்கள். வலுவான பந்துவீச்சு. சேவாக்கும் டிராவிட்டும் ஓப்பனிங் இறங்கி 410 ரன்கள் குவிக்கிறார்கள். அதிலும் சேவாக்கிற்கே பெயர். எத்தனை ஆட்டங்கள். பலமுறை அணியை காப்பாற்றி, பலமுறை வெற்றிக்கு அழைத்துச் சென்று, அத்தனை ஆட்டங்களிலும் வேறு யாருக்காவது பெயர் சென்று கொண்டிருப்பதே டிராவிட்டின் சிறப்பு. நல்ல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இல்லாத நேரத்தில் டீம் பேலன்ஸிற்காக விக்கெட் கீப்பிங்கும் செய்தார். அபாரமான பேட்டிங் டெக்னிக், persistent என்றாலே நினைவுக்கு வரும் பெயர். அதிவேக பந்துவீச்சாக இருந்தாலும் சரி, SENA Swing ஆக இருந்தாலும் சரி, ஆசிய துணைக்கண்ட குழி விழுந்த பிட்ச்களில் பின் ஆக இருந்தாலும் சரி. டிராவிட்டின் ஒப்பற்ற டெக்னிக் அதை எளிதாக எதிர்கொள்ளும். அதைவிட மிகவும் பிரஷரான சிச்சுவேஷன்களிலும், அதை மனதில் எடுத்துக் கொள்ளாமல் தன் வழக்கமான ஆட்டத்தை ஆடுவார். அதுதான் பலமுறை இந்தியாவை தோல்வியிலிருந்து காப்பாற்றி இருக்கிறது. ஒரு நாள் முழுவதும் ஆடினால் தான் இந்த மேட்சை காப்பாற்ற முடியும் என்றால், முழு நாளுக்கும் நான் பிளான் செய்வதில்லை. இந்த செசன் மட்டும் எப்படியாவது ஆடிவிட்டால் போதும் என்று நினைப்பேன். ட்ரிங்ஸ் பிரேக்கில் அடுத்த செசன் ஆடினால் போதும் என நினைப்பேன். என் இலக்குகளை சிறியதாக பிரித்துக் கொண்டு ஒவ்வொன்றாக வெற்றி கண்டு வருவேன் என்று ஒரு முறை சொல்லி இருப்பார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கேள்வி விளையாட்டாக அலுவலக விழாவில் கேட்கப்பட்டது. இந்த விக்கெட் விழுந்துவிட்டால் உங்கள் வாழ்க்கை முடிந்துவிடும். அப்படி என்றால் எந்த இரு பேட்ஸ்மான்கள் உங்களுக்காக களத்தில் விளையாட வேண்டும் என்று. நான் சொன்னது ராகுல் டிராவிட் & ஸ்டீவ் வாவ். ஏனென்றால் அந்த அளவிற்கு தங்களுடைய விக்கெட்டை மதித்தவர்கள் இருவரும். ராகுல் டிராவிட்டிடம் இருந்து நாம் எடுத்துக் கொள்ள வேண்டியது, நம் தொழிலுக்கு தேவைப்படும் டெக்னிக்கை வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்த சூழ்நிலையிலும் மனம் தளர்ந்து விடக்கூடாது. போராடும் களத்தில் இருந்து நாமாக வெளியே சென்று விடக்கூடாது. எவ்வளவு பெரிய இலக்காக இருந்தாலும் அதை பிரித்து அதை நோக்கி போராட வேண்டும். முக்கியமாக நமக்கு உலகில் எந்த இடம் கிடைத்தாலும் அதைக் கண்டு மனம் விட்டுவிடக்கூடாது.

No comments: