January 15, 2025
லான்ஸ் குளூஸ்னர்
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 21ஆண்டுகள் அவர்களுடைய நிறவெறி கொள்கை காரணமாக சர்வதேச போட்டிகள் விளையாடுவதில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்தது. அந்தத் தடை நீக்கப்பட்டு, இந்தியாவிற்கு அவர்கள் சுற்றுப்பயணம் வந்த போது, ஊர் திருவிழாவிற்கு வந்த வெளியூர் அங்கிள்கள் எல்லாம் ஒரு டீமாக சேர்ந்து உள்ளூர் இளைஞர்களுடன் ஆடுவது போன்று இருந்தது.
அந்த அணியில் இடம்பெற்றிருந்த அலன் டொனால்ட் தவிர மற்றவர்கள் 35+. அந்த அணியின் அப்போதைய கேப்டன் கிளைவ் ரைஸ் 42 வயதுக்காரர். அவர் 1970 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பெற்ற போது சர்வதேச தடை அந்த அணி மேல் விழுந்தது. அந்த தடை நீக்கப்பட்ட போது, அவரே கேப்டன் பொறுப்பேற்று வந்தார். அவர் ஒரு மிகச்சிறந்த ஆல்ரவுண்டர். அவர் மட்டும் அல்ல அப்போது அந்த அணியில் நான்கு ஆல்ரவுண்டர்கள் இடம்பெற்று இருந்தனர். முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளை இழந்தாலும் மூன்றாவது போட்டியில் அபார வெற்றி பெற்றது. அதற்கு முக்கிய காரணம் அந்த ஆல்ரவுண்டர்கள் தான்.
அடுத்து 1992 உலகக் கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி, தன் முதல் போட்டியில் கோப்பையை வெல்லும் அணி என கணிக்கப்பட்டு இருந்த ஆஸ்திரேலியாவை அவர்கள் மண்ணிலேயே சந்தித்தது. கிரிக்கெட் உலகமே ஆஸ்திரேலியா தான் வெல்லும் என எதிர்பார்த்தது. அதிர்ச்சி திருப்பமாக தென் ஆப்பிரிக்க அணி ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அதிர்ச்சியில் இருந்து ஆஸ்திரேலியா மீள முடியாமல் அந்த உலக கோப்பை அரை இறுதிக்கு கூட தகுதி பெறாமல் போனது.
அந்த உலக கோப்பையில் எல்லோரையும் அதிர்ச்சி அடைய வைத்து அரை இறுதிக்கு தகுதி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி, அப்போதிருந்த மட்டமான மழை விதியால் இறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தது. ஆனால் உலகெங்கிலும் உள்ள எல்லா கிரிக்கெட் ரசிகர்களின் மனதிலும் இந்த அணி ஒரு தரமான அணி என்ற நம்பிக்கையை விதைத்தது. அதற்கு காரணம் அந்த அணியின் அட்டகாச பீல்டிங் திறமை. அதிலும் குறிப்பாக உலக கிரிக்கெட்டின் பீல்டிங் தரத்தையே உயர்த்திய ஜாண்டி ரோட்ஸ் எல்லாவற்றுக்கும் மகுடமாக தென் ஆப்பிரிக்க அணியின் ஆல் ரவுண்டர்கள். மற்ற அணிகளுக்கும் தென் ஆப்பிரிக்க அணிக்கும் அன்றைய நிலையில் முக்கிய வித்தியாசமாக இருந்தது அதன் ஆல்ரவுண்டர்கள் தான்.
அப்போது மட்டுமல்ல, இன்று வரை தென் ஆப்பிரிக்க அணியை ஏராளமான ஆல்ரவுண்டர்கள் அலங்கரித்து வந்துள்ளார்கள். பிரயன் மெக்மில்லன், அட்ரின் குய்ப்பர், ஹான்ஸி க்ரோன்யே, ஷான் போலக், ஜாக் காலிஸ் என சொல்லிக் கொண்டே போகலாம். இந்த ஆல்ரவுண்டர் பாரம்பரியத்தில் ஒரு முக்கிய வீரராக தென் ஆப்பிரிக்க அணியின் 1997 இந்திய பயணத்தில் அறிமுகமானவர் லான்ஸ் க்ளூஸ்னர். தன் முதல் டெஸ்டை கல்கத்தா ஈடன் கார்டனில் விளையாடினார்.
கல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் அப்போதைய இந்திய அணி கேப்டனான முகமது அசாருதீனின் விருப்பமிக்க வேட்டைக் களம். அங்கே பல சதங்களைக் கண்டவர் அவர். குளூஸ்னரின் ஒரு ஓவரில் அவர் 5 பவுண்டரிகளை தொடர்ந்து அடிக்க, என்னடா இது, இந்த தென் ஆப்பிரிக்க டீமே பவுலிங்குக்குத்தான பேமஸ். என்ன இவன் இப்படி அடி வாங்குறான் என்றே இந்திய ரசிகர்கள் நினைத்தார்கள். ஆனால் அடுத்த இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி பதிலடி கொடுத்தார் குளூஸ்னர். அப்போதிருந்து வேகமெடுத்தது குளூஸ்னரின் பயணம்.
இந்தியர்களுக்கு நமது வீரர்கள் என்றால் மிகப் பிடிக்கும். அதற்கடுத்து மேற்கிந்திய தீவு வீரர்களைப் பிடிக்கும். ஆஸ்திரேலிய, இலங்கை, பாகிஸ்தான் வீரர்களைக் கண்டாலே ஆகாது. நியூசிலாந்து, இங்கிலாந்து வீரர்களை ஒன்றுவிட்ட பங்காளி வீட்டுப் பசங்களை ஒரு இடைவெளி விட்டுப் பழகுவது போன்ற மனநிலையில் பார்ப்பார்கள். இந்நிலையில் புதிதாக வந்திருந்த தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் மீது இந்தியர்களுக்கு பெரிய அபிமானம் ஏதும் வரவில்லை. 92 உலக கோப்பையில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் கெப்ளர் வெசல்ஸ், அதற்கடுத்த பதவியேற்றுக் கொண்ட ஹான்ஸி குரோனியே இருவருமே இறுகிய முகத்துக்கு சொந்தக்காரர்கள். அணியினரும் அப்படித்தான் இருப்பார்கள். சிரித்த முகமாக வேற லெவலில் பீல்டிங் செய்து கொண்டிருந்த ரோட்ஸின் மீது மட்டும் ஒரு சாப்ட் கார்னர் இருந்தது.
ஆனால் லான்ஸ் குளூஸ்னரை மட்டும் ஏராளமான இந்தியர்களுக்கு பிடித்துப் போனது. அப்போது கிரிக்கெட் பார்த்தவர்களை,உங்களுக்குப் பிடித்த தென் ஆப்பிரிக்க வீரர் யார் என்று கேட்டால் குளூஸ்னரைத்தான் பெரும் பாலானவர்கள் குறிப்பிடுவார்கள். அவரை மிகச்சிறந்த பந்து வீச்சாளர் என்று சொல்ல முடியாது. கிளாஸிக் பேட்ஸ்மென் என்றும் சொல்ல முடியாது. பீல்டிங்கில் வித்தை காட்டுபவர் என்றும் சொல்ல முடியாது. இறுகிப் போன தென் ஆப்பிரிக்க முகங்களுக்கு மத்தியில் ஒரு இயல்பான முகமாக தென்பட்டார் குளூஸ்னர்.
பொதுவாக தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மென்களும் சரி, பவுலர்களும் சரி தங்கள் திறமையை எப்போதும் முழுக்க முழுக்க வெளிப்படுத்துவார்கள். அதனால் அவர்களின் மேக்ஸிமம் பொடென்சியலை மற்ற அணிகள் கணித்து விடுவார்கள். அதற்கேற்ப தங்களின் ஆட்ட வியூகத்தை மாற்றிக் கொள்வார்கள். கிரிக்கெட்டில் எக்ஸ் பேக்டர் என்பதும் ஒரு அணிக்கு முக்கியம். யாராவது தங்கள் திறமையை மீறி செய்யும் செயல் அணியை பல இக்கட்டுகளில் இருந்து காப்பாற்றும். தென் ஆப்பிரிக்க அணியில் அப்படிப்பட்ட எக்ஸ் பேக்டர்கள் குறைவு. லான்ஸ் குளூஸ்னர் அப்படிப்பட்ட ஒரு எக்ஸ் பேக்டர். இவரெல்லாமா இந்த பிட்சில் விக்கெட் எடுப்பார் என்று நினைத்தால் அங்கே விக்கெட் எடுப்பார். தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் ஒரே ரிதத்தில் பந்து வீசுவார்கள். அந்த ரிதம் பேட்ஸ்மெனுக்கு பிடிபட்டு விட்டால், அவர்களை எளிதாக ஆடிவிடுவார்கள்.
1995-96ல் இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தது. அதில் ஒரு டெஸ்ட் மேட்சில் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் ஆர்தர்டன் நாலாவது இன்னிங்ஸில் கிட்டத்தட்ட ஒன்றரை நாட்களுக்கு மேல் விளையாடி ஆட்டமிழக்காமல் 185 ரன்களைக் குவித்தார். அதனால் அந்த மேட்ச் ட்ராவானது. அதற்கு முக்கிய காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் ஒரே விதமான பந்துவீச்சை விமர்சகர்கள் குறை கூறினார்கள்.
ஆனால் லான்ஸ் குளூஸ்னர் தென் ஆப்பிரிக்க வேகப் பந்து வீச்சாளர்களிடமிருந்து வித்தியாசமானவர். ஸ்டம்பிற்கு அருகில் இருந்தும் வீசுவார். கிரீஸ் கார்னரில் இருந்தும் பந்து வீசுவார். கிரீஸை முழுக்க முழுக்க உபயோகப் படுத்துவார். அவரின் ஆக்சனும் எளிதாக மற்றவர்களால் மிமிக் செய்யும் படி இருக்கும்.
பந்து வீச்சை விட குளூஸ்னர் தென் ஆப்பிரிக்க வீரர்களிடம் இருந்து பெரிதும் வேறுபடுவது பேட்டிங்கில் தான். மற்ற தென் ஆப்பிரிக்க வீரர்களிடம் இல்லாத ஒரு நிதானமும், கால்குலேட்டிவ் பேட்டிங்கும் குளூஸ்னரிடம் உண்டு. அதை 1999ல் இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பையில் காட்டினார் குளூஸ்னர். ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் சீட்டுக்கட்டு மாளிகை சரிவதைப் போல சரிவதில் புகழ்பெற்றவர்கள் தென் ஆப்பிரிக்கர்கள். அதிலும் முக்கியமான மேட்சுகளில் அப்படி நடந்து கொள்வதை வாடிக்கையாகவே வைத்திருந்தார்கள். 99 உலக கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி அரை இறுதி வரை வர குளூஸ்னரே காரணம். தன்னுடைய கால்குலேட்டிவ் பேட்டிங் திறமையால் முக்கியமான மூன்று மேட்சுகளை ஜெயிக்க வைத்தார்.
அரை இறுதியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் தன் திறமையால் 99% வெல்ல வைத்து விட்டார். ஸ்கோர் சமமாக இருந்த நிலையில் வெற்றி ரன்னை எடுக்க. நிதானம் தவறி ஓடிய ஆலன் டொனால்டால் மேட்ச் பறிபோனது. இருந்தாலும் அந்த உலக கோப்பைப் போட்டியின் சிறந்த ஆட்டக்காராக தேர்ந்தெடுக்கப்பட்டார் குளூஸ்னர்.
குளூஸ்னர் ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம் போன்றவர். அவரை கேப்டன்கள் தேவையான போது, தேவையான இடத்தில் பயன்படுத்த வேண்டும். எந்தச் சூழலிலும் பதறாமல், கஷ்டமான பந்துகளைத் தவிர்த்து, எளிதில் அடிக்கக் கூடிய பந்துகளை விளாசி ஆட்டத்தை தன் அணிப்பக்கம் கொண்டு வந்து விடுவார். அவர் செட் ஆன பின் எத்தகைய பந்து வீச்சையும் பவுண்டரிக்கு வெளியே விளாசக் கூடியவர். மூன்று ஸ்டம்புகளையும் காட்டிய படி விலகி நின்று, வீசப்படும் எந்த லெந்த் பந்தையும் ஆப் சைடிலோ இல்லை லெக் சைடிலொ பறக்க விடக்கூடிய பலசாலி. பந்து வீசும் போதும், திடீரென பேட்ஸ்மென்கள் கணிக்க இயலா, விளையாட இயலா பந்துகளை வீசக் கூடியவர்.
குளூஸ்னர் அணிக்கு உள்ளே வந்த போது இருந்த கேப்டன் ஹான்ஸி குரோனியே. அவர் குளூஸ்னரை சாதுர்யமாக பயன்படுத்தினார். அவர் சூதாட்ட சர்ச்சையால் அணியில் இருந்து வெளியேற்றப்பட அடுத்த கேப்டன் ஆனவர் ஷான் போலக். அவர் சிறந்த வீரர். ஆனால் நல்ல கேப்டன் இல்லை. அவர் 2003 உலக கோப்பையில் அணியை சரியாக வழி நடத்தாமல் போக, க்ரீம் ஸ்மித் கேப்டன் ஆனார். அவருக்கு குளூஸ்னரின் ஸ்டைல் பிடிக்காது. அதனால் அடுத்த ஆண்டிலேயே குளுஸ்னர் அணியில் இருந்து விலக வேண்டியதாகி விட்டது. அதனுடன் குளூஸ்னர் தென் ஆப்பிரிக்க அணிக்கு கொடுத்து வந்த எக்ஸ் பேக்டரும் விடை பெற்றது.
குளூஸ்னரை இந்தியர்களுக்கு பிடிக்க காரணம் என்னவென்று யோசித்தால் இந்த எக்ஸ் பேக்டர் தான் நினைவுக்கு வருகிறது. பெரும்பாலான இந்தியர்கள் உண்மையான அட்வெஞ்சரில் ஈடுபட்டவர்கள் அல்ல. எத்தனை பேர் செங்குத்தான மலையில் ஏறி இருப்பார்கள்? வனாந்தரங்களில் தனியே பயணித்திருப்பார்கள்? பங்கி ஜம்ப்பில் குதித்திருப்பார்கள்? அவர்கள் பாதுகாப்பு மிகுந்த தீம் பார்க்குகளில் ஜெயண்ட் வீலில் சுற்றுவதை தங்கள் வாழ்நாளின் உச்சபட்ச அட்வெஞ்சராக கருதுபவர்கள். அவர்களுக்கு தங்கள் வாழ்நாளில் கிடைக்கா அட்வெஞ்சரை விளையாட்டில் தேடினார்கள்.ஒரு நாள் கிரிக்கெட் அதற்கு தோதாக அமைந்தது. எப்படி தமிழக வாக்காளர்களுக்கு அழுது கொண்டே ஓட்டுப் போட்டால் ஒரு திருப்தி கிடைக்குமோ அது போல நகத்தைக் கடித்துக் கொண்டே கிரிக்கெட் பார்த்தால் தான் ஒரு திருப்தி.
அதனால் தான் திருப்பங்கள் நிறைந்த ஒரு நாள் கிரிக்கெட்டை ஆதரித்தார்கள். 20-20 ஐ தங்கள் செல்லக் குழந்தையாக வரித்துக் கொண்டார்கள். தென் ஆப்பிரிக்க அணியினர் ஒரே நேர்கோடாக தங்கள் ஆட்டத்தை ஆடுபவர்கள். எதிர்பாராமல் சரிவதைத் தவிர அவர்களிடம் பெரிய அட்வெஞ்சர் இருக்காது. லான்ஸ் குளூஸ்னர் இந்திய மக்களுக்கு கொடுத்தது அந்த நகம் கடிக்கும் எக்ஸைட்மெண்டை. அதனாலேயே இவன் நம்மாளுடா என்ற நெருக்கம் குளூஸ்னரிடம் இந்தியர்களுக்கு வந்தது.
தன் ஓய்வுக்குப் பிறகு கபில்தேவ் ஒருங்கிணைத்து நடத்திய இந்தியன் கிரிக்கெட் லீக்கில் கல்கத்தா அணிக்கு சில மேட்சுகள் ஆடினார் குளூஸ்னர். அவர் தவறவிட்டது ஐ பி எல்லை. ஐ பி எல்லில் குளூஸ்னர் ஆடியிருந்தால் அவரும் ஒரு தனிப்பட்ட நிறத்தை ஐ பி எல்லுக்கு வழங்கியிருப்பார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment