January 15, 2025
வாலி
ஆசை திரைப்படத்தின் நாயகனாக அஜித் நடித்துக் கொண்டிருந்தபோது, அவருக்கு மிகவும் பிடித்த உதவி இயக்குனராக இருந்தவர் எஸ் ஜே சூர்யா. அதற்கு அடுத்து உல்லாசம் படத்திலும் எஸ்.ஜே சூர்யா உதவி இயக்குனர். அவருடைய சுறுசுறுப்பு, துறுதுறுப்பு பிடித்துப் போய், எனக்கு ஒரு ஸ்கிரிப்ட் தயார் செய்யுங்கள் என்றார் அஜித்.
அப்படி உருவான ஸ்கிரிப்ட் தான் வாலி. அதற்கு முன்னர் அஜித்தின் ராசி படத்தை தயாரித்து இருந்த சக்கரவர்த்தியின் நிக் ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் பேசி இந்த படம் துவங்கப்பட்டது. ஒரு நல்ல ஸ்கிரிப்ட் தனக்கான எல்லாவற்றையும் தானே அமைத்துக் கொள்ளும் என்பதற்கு ஏற்ப, வாலி திரைப்படத்திற்கு எல்லா விஷயங்களும் அருமையாக அமைந்தன.
நிறைய கதாநாயகிகள் பேசப்பட்டு சிம்ரன் வந்தார். நாயகிக்காக கேட்கப்பட்ட ஜோதிகாவும் ஒரு கேரக்டரில் வந்தார். தேவாவின் இசை, விவேக்கின் காமெடி, எல்லாவற்றிற்கும் சிகரமாக ஜீவாவின் ஒளிப்பதிவு என எல்லாமே அமைந்தன.
99 ஆம் ஆண்டு படையப்பா வெளியாகி, தமிழ்நாடு முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த சூழலில் 20 நாட்கள் கழித்து ரிலீஸ் ஆனது வாலி. பாடல்கள் வெளியாகி நல்ல ஹிட் ஆகியிருந்தன. அஜித் ரசிகர்கள், இளைஞர்கள் முதல் காட்சிக்கு சென்றார்கள். அப்போது கோவை வாசம். அர்ச்சனா தியேட்டரில் படம் ரிலீஸ்
முதல் பாதியில் அஜித், சிம்ரன் ஜோதிகா சம்பந்தமான லவ் ட்ராக், நண்பகல் நேரத்தில் ஃபிரஷ் ஜூஸ் குடித்தது போல, அவ்வளவு புதிதாக இருந்தது.
அதற்கு அடுத்த இரண்டு வாரம் கழித்து மதுரைக்கு, ஒரு வேலை விஷயமாக சென்று இருந்த போது, ஆரப்பாளையம் மதி தியேட்டரில் இரவுக் காட்சிக்கு சென்றிருந்தேன்.
Jam-Packed என்று சொல்லத்தக்க வகையில் கிட்டத்தட்ட எக்ஸ்ட்ரா சேர் கூட போட்டார்கள். ஒரு வேலை நாளின், இரவு காட்சிக்கு படத்தின் மூன்றாவது வாரத்தில் கூட அப்படி ஒரு கூட்டம் ஆச்சரியமாக இருந்தது. எல்லோருமே இளைஞர்கள். மதுரையின் இளைஞர் பட்டாளமே அங்கு இருந்தது போல ஒரு தோற்றம்.
இன்றும் நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. அர்ச்சனா தியேட்டரிலும் அதற்கடுத்து சில முறை வாலி படத்தைப் பார்த்தேன். பொதுவாக காலைக்காட்சி. காலை காட்சியும் சரி, இரவு காட்சிகளும் சரி இளைஞர்களால் அரங்கு நிறைந்து ஓடிக் கொண்டிருந்தது.
அஜித்திற்கு கிட்டத்தட்ட தமிழ் சமூகம் இன்றளவும் வெறுக்கக்கூடிய ஒரு கேரக்டர். இன்னொரு அஜித்தோ, எந்தவித ஹீரோயிசமும் இல்லாமல் படம் முழுவதும் வருவார். அண்ணனின் காசில் வாழும் ஒரு சராசரி இளைஞன் பாத்திரம்.
ஆசை திரைப்படத்தின் கதை, தன் மனைவியின் சகோதரியின் மீது ஆசைப்பட்டு மனைவியை கொல்லும் கதை. அதில் அஜித் ஹீரோ. பிரகாஷ்ராஜ் வில்லன். அந்தப் படத்தின் உதவி இயக்குனர்களாக பணியாற்றியவர்கள் களஞ்சியமும் எஸ் ஜே சூர்யாவும். களஞ்சியம் வில்லன் பிரகாஷ்ராஜை வைத்து தம்பி மனைவியின் மீது ஆசைப்படும் பூமணி என்னும் படத்தை எடுத்தார். எஸ் ஜே சூர்யா, அஜித்தை வைத்து இந்த படத்தை எடுத்தார்.
இரண்டு வேடம். தோற்றத்தில் ஒரு சதவிகிதம் கூட மாறுபாடு கிடையாது. ஆனால் இரண்டாம் பாதியில் சிம்ரன் தான் எந்த அஜீத் என குழம்புவார். முதல் தடவை பார்க்கும் ரசிகர்களுக்கே அது வில்லன் அஜித் தான் என்று தெரியும்படியான ஒரு நடிப்பு அஜித்திடம். இப்படி ஒரு வில்லன் கேரக்டரை செய்து, எல்லோரையும் அவர் மீது பிரியம் கொள்ளும்படி செய்த நடிப்பும், ஸ்கிரீன் பிரசன்ஸூம் அஜித்துக்குத் தான்.
படம் வெளியாகி ஒரு மாதத்திற்கு உள்ளேயே ஏராளமான ரசிகர் மன்றங்கள் கோவை காந்திபுரம் பகுதியில் துவங்கப்பட்டன. மதுரையிலும் அப்படித்தான். அஜித் இந்த படத்தில் அணிந்து வரும் சிகப்பு சட்டை,ப்ளூ ஜீன்ஸ், பிளாக் ஷூ காம்பினேஷன் தேடி கடை கடையாக அடைந்தவர்கள் உண்டு.
வாலி வெளியாகி ஒரு மாதத்திற்குள் ஆனந்த பூங்காற்றே திரைப்படம் வெளியானது. அதில் கூட வாலியின் வெற்றி பெரிதும் எதிரொலிக்கவில்லை.
அதே ஆண்டில் சுதந்திர தினத்தன்று அமர்க்களம் படம் வெளியானது. வாலி வெளியாகி 100 நாட்கள் கழித்து வரும் படம். அதுவரை வந்த படங்களிலேயே அஜித்திற்கு மிகப்பெரிய ஓபனிங் கொடுத்த படம் அமர்க்களம் தான்.
கோவை கங்கா தியேட்டரில் படம் வெளியாகி இருக்கிறது. தியேட்டரின் எதிரே, அந்த 100 அடி ரோடு முழுவதும் இளைஞர் பட்டாளம். அடுத்தடுத்து அஜித் உயர்ந்து கொண்டே போக அவருக்கு கிடைத்த முக்கியமான பிரேக் வாலி.
அந்தப் படத்தில் அவர் இரண்டு கேரக்டர்களையும் ஹோல்ட் செய்திருந்த விதம், எந்த கேரக்டரையும் தாங்குவார் என்ற எண்ணத்தை எல்லா இயக்குனர்களுக்கும் தந்தது. ஒளிப்பதிவாளர் ஜீவாவின் கண்களின் வழியே அஜித்தை பார்த்தவர்களுக்கு, இவர் சும்மா வந்தாலே போதும் ரசிகர்கள் வருவார்கள் என்ற எண்ணத்தையும் கொடுத்தது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment