January 16, 2025

இதயத்தை திருடாதே

"ஓடிப் போயிடலாமா' என்னும் வார்த்தையை தமிழ் கூறும் நல் உலகிற்கு தந்த படம். இந்தப் படத்தின் நாயகி கிரிஜாவின் தந்தை ஒரு இன்கம்டாக்ஸ் அதிகாரி. இதயத்தை திருடாதே பாடல்கள் A சைடிலும், கரகாட்டக்காரன் பாடல்கள் B சைடிலும் பதிந்த கேசட்டுகள் கணக்கில்லாமல் விற்பனை ஆகின. 1989 ஆம் ஆண்டு துவங்கியதில் இருந்து ஏகப்பட்ட ஹிட் படங்கள். வருஷம் 16, ராஜாதி ராஜா அபூர்வ சகோதரர்கள், கரகாட்டக்காரன் என. அபூர்வ சகோதரர்கள் கரகாட்டக்காரன் படங்கள் இரண்டும் திரையரங்கில் இருந்தபோது இந்த படமும் வந்தது. இந்தப் படத்திற்கான விளம்பரத்தை மணிரத்னம் வித்தியாசமாக செய்தார். இரண்டு முகங்கள் மட்டும் இருக்கும். இதயத்தை திருடாதே, இளையராஜா அவ்வளவுதான். யார் அந்த முகங்கள் என்று ரிலீஸ் ஆகும் நாள் வரை காட்டவில்லை. நாயகன்,அக்னி நட்சத்திரம் எடுத்த டைரக்டர் என்று கல்லூரி இளைஞர்கள் அவர்களாகவே குவிந்தார்கள். பார்த்தவர்கள் இந்த படத்தின் விஷுவலில் மயங்கி ஹாஸ்டலில் இருந்த எல்லோரையும் படம் பார்க்க விரட்டி விட்டார்கள். ஒவ்வொரு சீனையும் சிலாகித்து சொல்வார்கள். நாகார்ஜுனா தண்ணீரிலிருந்து இறங்கி வரும்போது ஷூ காலை அழுத்த அதிலிருந்து வெளிவரும் தண்ணீர், எந்நேரமும் பிரேமில் இருக்கும் பனிப்புகை‌. ஓ பாப்பா லாலி, ஓம் நமஹா, காவியம் பாடவா தென்றலே பாடல்கள்... எத்தனை எத்தனை நினைவுகளை இந்த படம் அள்ளிக் கொடுத்தது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து நிறைய நாகார்ஜூனா படங்கள் டப்‌ ஆகி வந்தன. சில விஷயங்களை அந்தந்த காலத்தில் அனுபவித்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்பார்கள். அதுபோல மேல்நிலைப்பள்ளி, கல்லூரியில் படிக்கும் போது இந்த படத்தை நல்ல சவுண்ட் சிஸ்டம் உடைய குளிர்சாதன அரங்கில் அப்போது பார்த்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

No comments: