January 15, 2025
ஆட்டுக்கார அலமேலு
தற்போது, படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன்பே ஸ்கிரிப்ட் ஒர்க், குறைவான நாட்களில் படப்பிடிப்பு என்பது பற்றி அதிகம் பேசப்படுகிறது. இதை 1950 களிலிருந்து நடைமுறைப்படுத்திய ஒரு தயாரிப்பு நிறுவனம் தேவர் பிலிம்ஸ்.
தேவர் பிலிம்ஸ் கதை இலாகா என்று ஒரு பிரத்தியேக டீம் இருந்தது. அவர்கள் அந்த சமயத்தில் எந்த கதை நன்றாக போகும் என்பதை அனுமானித்து, ஒரு கதை ரெடி செய்து, அதற்கான காட்சிகளை எழுதுவார்கள். பிறமொழி திரைப்படங்களை பார்த்து அதன் இன்ஸ்பிரேஷனில் காட்சிகள் உருவாக்குவார்கள். முழுக்க முழுக்க அந்த படத்தின் கதை என்றால் ரைட்ஸ் வாங்குவார்கள்.
அந்த குழுவிற்கு ஃப்ரீ லான்சராக கூட செல்லலாம். நல்ல சீன் சொன்னால் உடனே அதற்கு தேவர் பணம் கொடுத்து விடுவார்.
அவர்களுடைய திரைக்கதை மாத நாவல்களைப் போலத்தான் இருக்கும். ஒரு ஹீரோ நாயகி வில்லன் அறிமுகம். பின்னர் அது சம்பந்தமான conflicts. இறுதியில் சுபம். எனவே ஒரு படத்திற்கும் இன்னொரு படத்திற்கும் இடையே சுவராசியமான காட்சிகள் இருக்க வேண்டும் என்பதை மட்டும் தான் பார்ப்பார்கள்.
முழுமையாக ஸ்கிரிப்ட் ரெடியான உடன் ஒரு அமாவாசையில் பூஜை போடுவார் தேவர். இரண்டு அமாவாசைகளில் அந்த படம் வெளிவந்துவிடும்.
எம்ஜிஆரை வைத்து 17 படங்கள் தயாரித்து இருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளலாம்.
பக்தி படங்களும் அவர் இடையிடையே எடுத்து வந்தார்.
வெள்ளிக்கிழமை விரதம் என்னும் படம் பாம்பை வைத்து எடுக்கப்பட்டது. அது வசூல் ரீதியாக மிகப்பெரிய லாபத்தை கொடுக்கவும், அடுத்து இன்னொரு படம் விலங்கை மையமாக வைத்து எடுக்க வேண்டும் என்று நினைத்தார்.
அப்படி உருவானது தான் ஆட்டுக்கார அலமேலு திரைப்படம். சிவக்குமார் ஸ்ரீபிரியா ஜோடி. ஆட்டிற்கு முக்கிய கதாபாத்திரம்.
யானை நாய் பாம்பு சிங்கம், புலி என எத்தனையோ விலங்குகளை வைத்து படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் ஆட்டை மையமாக வைத்து அதற்கு முன்னர் படம் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை.
இப்படி ஆட்டை மையமாக வைத்து படம் எடுக்கலாம் என்று யார் முன் வைத்திருப்பார்கள் என்று தெரியவில்லை.
ஆனால் ஆட்டுக்கார அலமேலு படம் உருவானது. சிவகுமார் அதற்கு முன்னர் 15 வருடங்களாக நாயகனாக நடித்தார். அதன் பின்னும் சில ஆண்டுகள் நாயகனாக நடித்தார். ஆனால் அவருக்கு இதுதான் மிகவும் வெற்றிகரமாக ஓடிய படம்.
இந்தப் படத்திற்கு வந்த வசூலால் திரையுலகமே திகைத்துப் போனது.
சி சென்டர் திரையரங்க உரிமையாளர்கள் எல்லாம் எப்போது எங்களுக்கு படம் வரும் என்று நச்சரிக்கத் துவங்கினார்கள்.
இந்த படத்தில் நடித்த ஆட்டை, ஒவ்வொரு தியேட்டராக கொண்டு போய் இடைவேளையில் காட்டினார்கள். அதற்காகவே மீண்டும் ஒரு பெருங்கூட்டம் திரையரங்குகளுக்கு சென்றது.
ஆட்டுக்கார அலமேலு படத்தில் நடித்த ராமு ஆடு நம்ம ஊருக்கு வந்திருக்காம் என்பது பேச்சாக இருந்தது.
விஜயகாந்தின் நண்பர் மர்ஷூக் இந்த படத்திற்கு விநியோக உரிமை. அவர் ஒவ்வொரு திரையரங்காக ஆட்டை கூட்டிப் போக உடன் துணை சென்றவர் விஜயகாந்த். அதனால் அவருக்கு பல சினிமா தொடர்புகள் கிடைத்து சென்னை வந்தார்.
உலக வரலாற்றிலேயே, அந்த படத்தில் நடித்த விலங்கை ஒவ்வொரு தியேட்டராக கூட்டி போய் அதற்கு கூட்டம் வந்திருக்குமா என்பது தெரியவில்லை.
இந்த பட வெற்றியை பார்த்து அடுத்த கழுதையை வைத்து பஞ்ச கல்யாணி என்கிற படத்தை இன்னொரு தரப்பு தயாரித்தது.
அதுவும் 100 நாள் வெற்றி பெறமாக ஓடியது. ஆனால் அந்த கழுதையை எந்த தியேட்டருக்கும் கூட்டி வரவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment