January 15, 2025

ஜீன்ஸ்

ஜீன்ஸ் திரைப்படத்தை, டென்னிஸ் வீரர் அசோக் அமிர்தராஜின் கம்பெனி தயாரித்தது. அவர்கள் ஏற்கனவே ரஜினியை வைத்து பிளட் ஸ்டோன் என்கிற ஆங்கில படமும் தயாரித்திருந்தார்கள். ஜீன்ஸ் படத்தின் பட்ஜெட் 24 கோடி என அறிவிக்கப்பட்டது அப்பொழுது பெரிய செய்தியானது. ஏனென்றால் அதற்கு முந்தைய சங்கர் படமான இந்தியன் பட பட்ஜெட் 12 கோடி தான். அதுவும் எட்டு கோடி தான் பட்ஜெட் என அறிவிக்கப்பட்டு 12 கோடியானது. கமல்ஹாசன் அவர்களின் சம்பளம் 90 லட்சம். இந்த சூழ்நிலையில் பிரசாந்த் வைத்து எடுக்கப்படும் ஒரு படத்திற்கு 24 கோடி பட்ஜெட் என்பது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பிரசாந்திற்கு இந்த படத்திற்கு கிட்டத்தட்ட மாத சம்பளம் போல கொடுத்தார்கள் என்று சொல்வார்கள். ஓராண்டுக்கு மேல் தயாரிப்பில் இருந்தது. ஸ்ரீதேவியின் தாயாருக்கு அமெரிக்காவில் சிகிச்சையை மாற்றி செய்த சம்பவத்தை இந்த படத்தில் வைத்திருப்பார்கள். படம் ஆவரேஜ் ஆகத்தான் போனது. ஜீன்ஸ் திரைப்படத்திற்கு பிறகு தொடர்ச்சியாக தமிழில் படங்கள் எடுப்போம் என்று சொன்ன அவர்கள் பின்வாங்கினார்கள். பெரிய தயாரிப்பாளர்கள் ஷங்கரிடம் போவது, பூனைக்கு சுடுபால் வைத்த கதை. வேறு ஆப்ஷன் இருக்கும் பூனைகள் அந்த பக்கம் எட்டிப் பார்க்காது. வேறு வழியில்லாத பூனைகள் வாய் வெந்து பாலை குடிக்க வேண்டி இருக்கும். இதற்கு அடுத்து வந்த பிரசாந்த் படமான கண்ணெதிரே தோன்றினாள் குறைந்த பட்ஜெட்டில் வேகமாக எடுக்கப்பட்டு எல்லோருக்கும் ஏகப்பட்ட லாபம் கொடுத்தது. ஜீன்ஸை விட கண்ணெதிரே தோன்றினாள் தான் நிறைய பேருக்கு பிடித்த படம். லாபகரமான படமும் கூட.

No comments: