January 15, 2025

சேப்பாக்கம் டை டெஸ்ட்

எவ்வளவோ கிரிக்கெட் மேட்சுகளைப் பார்த்தாலும் சில கிரிக்கெட் மேட்சுகள் மட்டுமே நம் மனதை விட்டு அகலாது இருக்கும். மேட்சின் சுவராசியம் ஒரு காரணமாய் இருந்தாலும், நாம் அதைப் பார்த்த சூழ்நிலை, அந்த மேட்ச் அன்றைய நிலையில் நமக்குக் கடத்திய உணர்வு போன்றவையும் அதற்கு முக்கிய காரணமாய் இருக்கும். 80களில் கிரிக்கெட் ரசிகர்களாய் இருந்த பலருக்கும் அப்படி ஒரு மேட்ச் மறக்க முடியாததாய் இருக்கும். அந்த மேட்சைப் பற்றிய நினைவுகளே இந்தக் கட்டுரை. அது 1986ஆம் வருடம். கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்திற்குச் சென்று அவர்கள் மண்ணிலேயே வரலாற்றில் முதன் முறையாக டெஸ்ட் தொடரை வென்று வந்திருந்தது. அந்த சூட்டோடு தன் சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணியின் வருகைக்காக காத்திருந்தது. அப்போதைய ஆஸ்திரேலிய அணி தன்னுடைய நட்சத்திர ஆட்டக்காரர்களான க்ரெக் சாப்பல், இயன் சாப்பல், டென்னிஸ் லில்லி, தாம்சன் போன்றோர் அடுத்தடுத்து ஓய்வு பெற்றிருந்ததால் நிறைய இளம் ஆட்டக்காரர்களுடன் இந்தியா வந்திறங்கியது. அணித்தலைவர் ஆலன் பார்டர், பூன், மார்ஷ் போன்றவர்களே அப்போது அதிகம் அறியப்பட்டவர்களாய் இருந்தார்கள். இங்கிலாந்தை அவர்கள் மண்ணிலேயே தலையில் தட்டிவிட்டு வந்தவர்கள், தங்கள் மண்ணில் ஆஸ்திரேலியாவை தலையில் கொட்டி அனுப்புவார்கள் என்றே பலரும் கணித்தார்கள். பலரும் கணித்தபடியே முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. ஆனால் அடுத்த போட்டியிலேயே ஆஸ்திரேலியா வெற்றி பெற்று, எங்களை குறைத்து எடை போடாதீர்கள் என்ன இருந்தாலும் நாங்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி எனக் காட்டினார்கள். இந்த இரண்டு ஒரு நாள் போட்டிகளுக்குப் பின்னர் சரித்திரப் பிரசித்தி பெற்ற அந்த முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. அப்போது பரவலாக தொலைக்காட்சிப் பெட்டிகள் ஊருக்குள் ஊடுருவிக் கொண்டிருந்த நேரம். இங்கிலாந்தில் இந்தியா பெற்ற வெற்றி அப்போது இன்னும் பலரை கிரிக்கெட் ரசிகர்கள் ஆக்கி விட்டிருந்தது. சென்னையில் மேட்ச் என்பதால் வானொலியில் தமிழ் வர்ணனை வேறு. ஒரு நாள் போட்டியில் வேண்டுமானால் நீங்கள் எனக்கு சமமாய் இருக்கலாம், ஆனால் டெஸ்ட் போட்டியில் நாங்கள் தான் என மார்தட்டி களம் கண்டது இந்திய அணி. ஆஸ்திரேலியா டாஸை வென்று பேட்டிங் எடுத்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அதற்கு முன்னால் பல டெஸ்ட் மேட்சுகள் நடந்திருக்கின்றன. இந்தியாவிலே கல்கத்தா ஈடன் கார்டனுக்கு அடுத்த படியாக உருவான மைதானம் இந்த எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியம். பொங்கல் சமயத்தில் ஒரு டெஸ்ட் மேட்ச் இங்கே நடத்துவதென்பது ஒரு ஐதீகம். சென்னை மார்கழி இசை விழா முடிந்ததும் இந்த பொங்கல் டெஸ்ட் பற்றிய பேச்சு சென்னை எலைட் வட்டாரங்களில் துவங்கும். மற்ற மாவட்டங்களில் இந்த மேட்ச் வானொலியில் வழங்கப்படும் அட்டகாச தமிழ் வர்ணனை மூலமே அறியப்படும். வாலாஜா முனை, பெவிலியன் முனை, வலது கை ஆட்டக்காரர், உதிரி ஓட்டங்கள், கால்காப்பில் பட்டு பைன்லெக் திசையை நோக்கிச் சென்றது பந்து என சொல்லப்படும் வர்ணனை மூலமே கிரிக்கெட் பழகப்பட்டு வந்தது. மேட்ச் தொடங்கி முதல் விக்கெட்டாக மார்ஷ் ஆட்டமிழந்த பின்னர் டேவிட் பூன் – டீன் ஜோன்ஸ் இணை ஆடத்துவங்கியது. அவர்கள் எந்த சிரமமும் இல்லாமல் கல்லூரி விடுதியில் இருந்து ஊருக்கு வந்த கல்லூரி கிரிக்கெட் டீம் ஆட்டக்காரர் தெரு பையன்களோடு எளிதாய் விளையாடுவது போல ஆடினார்கள். அப்போதுதான் இந்திய அணியின் பவுலிங் பலவீனம் புரிந்தது. வெளி நாட்டு பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் எளிதில் விக்கெட்டுகளை வீழ்த்தி விடுவார்கள். ஆனால் இந்திய ஆடுகளங்கள் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வில்லை. ஆஸ்திரேலிய அணி முதல் நாளில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 211 ரன்களை எடுத்தது. அடுத்த நாள் ஆட்டத்தில் நான்காம் விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டீன் ஜோன்ஸும் ஆலன் பார்டரும் நிதானமாக ரன்களைக் குவிக்க ஆரம்பித்தார்கள். டீன் ஜோன்ஸ்க்கு சென்னை வெயில் ஒத்துக் கொள்ளாமல் வாந்தியெல்லாம் எடுத்தார். ஆனாலும் விடாமல் விளையாடி 210 ரன்கள் எடுத்தார். மூன்றாம் நாளின் ஆரம்பத்தில் தான் ஆஸ்திரேலியா அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. நம்மிடம் அன்று மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தாலும் அவர்களாலும் ஏதும் பெரிதாக நடத்த முடியவில்லை. பின் இந்திய இன்னிங்ஸ் தொடங்கியது. வழக்கம்போல் ஸ்ரீகாந்த் அதிரடியாகவும். கவாஸ்கர் நிதானமாகவும் ஆட ஆரம்பித்தனர். 65 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டை இழந்தது இந்தியா. அசாருதீனும் ரவி சாஸ்திரியும் இந்தியா 200 ரன்களை எட்ட காரணமாய் இருந்தார்கள். ஐந்தாவது விக்கெட் விழுந்து கபில்தேவ் உள்ளே வரும் போது அணியின் ஸ்கோர் 206. அடுத்தடுத்து இரண்டு விக்கெட்கள் விழ இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்களுக்கு தள்ளாடத் துவங்கியது. அப்போதைய இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்தால் அடுத்து 50 ரன்களுக்குள்ளும், 7 வது விக்கெட் இழந்தால் அடுத்த 15 ரன்களுக்குள்ளும் தன் ஆட்டத்தை முடித்துக் கொள்ளும் என்றே எழுதி வைத்துக் கொள்ளலாம். அந்த அளவில் தான் நமது பந்து வீச்சாளர்களின் பேட்டிங் திறமை இருக்கும். இந்திய அணி பாலோ ஆனைத் தவிர்க்க இன்னும் 130 ரன்கள் தேவைப்பட்டன. வானொலியில் வர்ணனை செய்தவர்கள் இதை ஒவ்வொரு பந்து வீசப்படும் போதும் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். அதன் மூலம் தான், முதன் முறையாக அப்போது கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தவர்களுக்கு பாலோ ஆன் என்றால் என்ன என்று தெரியத் துவங்கியது. அந்தச் சூழ்நிலையில் தான் தன்னுடைய கேரியரின் மற்றுமொரு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார் கபில் தேவ். சேட்டன் சர்மா, சிவலால் யாதவ், மனீந்தர் சிங் போன்றோரை மறுமுனையில் நிற்க வைத்து 119 ரன்களை எடுத்து, பாலோ ஆனைத் தவிர்த்தார்.அதில் 21 பவுண்டரிகள். பல பந்துகளை தானே சந்தித்து சுமாரான பந்துகளை தண்டித்து இந்த ரன்களை ஈட்டினார். நான்காம் நாள் இந்தியா அணி பாலோ ஆனைத் தவிர்த்து விட்டு ஆல் அவுட் ஆக ஆஸ்திரேலியா தன் இரண்டாம் இன்னிங்ஸைத் தொடங்கியது. நான்காம் நாள் ஆட்ட முடிவில் 170 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்திருந்தது. சரி அவ்வளவு தான் வழக்கம் போல இந்த டெஸ்ட்டும் ட்ராவை நோக்கித்தான் போகப்போகிறது என அனைவரும் நினைத்திருந்த வேளையில் நான்காம் நாள் ஆட்ட முடிவோடு டிக்ளேர் செய்தார் பார்டர். இந்தியா, ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். ஆட்டத்தின் கடைசி நாள். 348 ரன்கள் எடுக்க முடிந்தால் எடுத்து வெற்றி கொள் என்றார் பார்டர். ஏற்றுக் கொண்டார் கபில்தேவ். இந்திய வீரர்கள் களமிறங்கினார்கள். ரன்கள் குவிப்பதும், விக்கெட்டுகள் போவதுமாய் இருந்தது. கவாஸ்கர் ஒரு முனையில் நங்கூரமாய் நின்று 90 ரன்கள் எடுத்தார். கபில்தேவின் விக்கெட் விழுந்ததும் இந்திய ரசிகர்களுக்கு கலக்கம் ஏற்பட்டது. ஆனால் அப்போதைய மிஸ்டர் கூலான ரவி சாஸ்திரி நம்பிக்கை கொடுத்தார். 9 விக்கெட்டுகள் போய் விட்டன. 2 ரன்கள் வேண்டும் என்ற நிலையில் ரவி சாஸ்திரி ஒரு ரன் மட்டும் எடுத்து மறுமுனைக்குச் செல்ல. மனீந்தர் சிங் தன் விக்கெட்டை பறி கொடுக்க டை ஆனது டெஸ்ட். வர்ணனையாளர்கள் டிராவுக்கும் டைக்கும் இடையேயான வேறுபாட்டை விளக்கிக் கொண்டிருக்க, சேப்பாக்கம் மைதானத்தில் குமுழியிருந்த ரசிகர்கள் தங்கள் கண் முன்னால் நடந்ததை நம்ப முடியாமல் இருந்தனர். டிவி பார்த்துக் கொண்டிருந்தவர்களும், வர்ணனை கேட்டுக் கொண்டு இருந்தவர்களும் தான். அந்தக் கணம் அவர்களுக்குத் தெரியாது, நாம் ஒரு சரித்திரத்தின் சாட்சியாக இருக்கப் போகிறோம் என்று. ஏனென்றால் அதுவரை நடந்த டெஸ்ட் மேட்சுகளில் ஒரு டெஸ்ட் மட்டுமே டை ஆகியிருந்தது. அதிலும் ஆஸ்திரேலியா பங்கெடுத்து இருந்தது. மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக 1960ஆம் ஆண்டில் ஒரு டெஸ்டை அவர்கள் செய்திருந்தார்கள். அதற்கடுத்து இதுதான். இந்த டெஸ்ட் முடிந்து 34 ஆண்டுகள் ஆகப்போகிறது. அதற்கடுத்து இன்னும் ஒரு டெஸ்ட் கூட டை ஆகவில்லை. இந்த டெஸ்ட்டின் முடிவு ஆஸ்திரேலியாவிற்கு உற்சாகத்தைக் கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும். இந்த டெஸ்ட் போட்டியில் சதமடித்த மூன்று ஆஸ்திரேலிய வீரர்களும் பந்து வீச்சாளர் மெக்டர்மெட்டும் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு அந்த அணியில் முக்கிய புள்ளிகளாக விளங்கினார்கள். அணியில் இடம் பிடித்திருந்த இளம் வீரரான ஸ்டீவ் வாவ் அடுத்த 15 ஆண்டுகள் அணிக்கு முக்கிய தூணாக இருந்தார். ஆனால் இவர்களை விட இந்தப் போட்டியில் சென்னை ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் க்ரெய்க் மாத்யூஸ் தான். இந்திய ஸ்பின்னர்களே விக்கெட் எடுக்க கஷ்டப்பட்ட பிட்ச்சில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 5 விக்கெட்டை வீழ்த்தியதோடு மட்டுமல்லாமல், முதல் இன்னிங்ஸில் 44 ரன்கலையும் அடித்திருந்தார். அவரின் ஆட்டிட்யூட் மைதானத்தில் இருந்த எல்லோரையும் கவர்ந்தது. டிவியில் பார்த்தவர்கள் கூட யார்றா இது இப்படி துறு துறுவென்று இருக்கிறான் என்றே பார்த்தார்கள். பவுண்டரி லைனில் நின்றிருக்கும் போது எல்லா ரசிகர்களுடனும் அன்னியோன்யமாக சிரித்துக் கொண்டே இருந்தார். சென்னை வெயிலில் முகமெல்லாம் சிவந்து, பவுண்டரி லைனில் உருண்டு புரண்டு பீல்டிங் செய்ததால் அழுக்கான உடைகளுடன் முகமெல்லாம் சிரிப்புடன் இருந்த மேத்யூஸை அன்று மேட்ச் பார்த்தவர்களால் மறக்க முடியாது. கிட்டத்தட்ட ஒரு கட்டத்தில் இந்தியாவின் கையில் இருந்த மேட்சை தங்கள் பக்கம் தன் பவுலிங்கால் திருப்பியவர் மாத்யூஸ். யாருக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் ஆட்டம் முடிந்தாலும் அதில் பங்குபெற்றவர்களுக்கும், பார்த்தவர்களுக்கும் இன்று வரை ஒரு திருப்தி. இதுவரை நடந்திருக்கும் 2000க்கும் அதிகமான டெஸ்ட்மேட்சுகளில் டை ஆனது இரண்டே மேட்சுகள் தான். அதில் ஒன்றில் நாம் சம்பந்தப்பட்டிருக்கிறோம் என்பதே அது.

No comments: