January 16, 2025

96 ஆம் ஆண்டு தீபாவளி

குருதிப்புனல் திரைப்படம் அறிவிக்கப்பட்டபோது, அதற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் துரோகி. ஹிந்தியில், கோவிந்த் நிகலானி இயக்கிய துரோகால் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக். துரோகி என்பது இந்த படத்திற்கு சரியான பெயர் தான். ஆனால் அப்போது கமல் ரசிகர் மன்றத்தில் இருந்தவர்கள், தங்களது பெயருக்கு முன்னால் படப் பெயர்களையும் போட்டுக் கொள்வார்கள், நற்பணி மன்றத்திற்கும் அந்த பெயரை வைப்பார்கள், பனியன்களிலும் அந்த படப் பெயரை அச்சிட்டு கொள்வார்கள். அவர்களுக்கு துரோகி என்ற டைட்டில் கேள்விப்பட்டதும் துரோகி கமல்ஹாசன் நற்பணி மன்றம், துரோகி குமார் என்றெல்லாம் எப்படி போட்டுக் கொள்வது என ராஜ்கமல் ஆபீசுக்கு பல கடிதங்களை எழுதினார்கள். அதனால் கமல்ஹாசன் படத்தலைப்பை குருதிப்புனல் என மாற்றினார். பி சி ஸ்ரீராம் இயக்கம் கமலஹாசனின் நண்பர் மகேஷ் இசை. இன்னொரு பக்கம் பாட்ஷா தந்த அதிரடியுடன் ரஜினிகாந்த், நாட்டாமை தந்த வெற்றியுடன் கே எஸ் ரவிக்குமார், இவர் தங்கள் படத்திற்கு இசையமைக்க மாட்டாரா என அப்போது எல்லோரும் ஏங்கிய ஏ ஆர் ரகுமான் என எதிரே வலுவான கூட்டணி. 95 ஆம் ஆண்டு பொங்கலுக்கு தான் பாட்ஷாவுடன் சதிலீலாவதி மோதியது. பல திரையரங்குகளில் 100 நாட்கள் கடந்தாலும் பாட்ஷா வெற்றியுடன் ஒப்பிடும்போது கமல் ரசிகர்களுக்கு மனக் குறை. இப்போதும் அந்தப் பக்கம் வலுவான கூட்டணி. பாட்ஷா படத்தின் வெற்றி விழாவில் ரஜினிகாந்த் பேசியபோது மணிரத்தினம் வீட்டில் குண்டு வெடித்ததை சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் வந்துவிட்டது என பேசினார். அது அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை கோபப்படுத்தியது. அமைச்சர்கள் ரஜினிகாந்தை எதிர்த்து அறிக்கை மேல் அறிக்கை விட்டார்கள். பாட்ஷா படத்தின் தயாரிப்பாளர் ஆரம் வீரப்பன் தர்ம சங்கடத்திற்கு உள்ளானார். இந்த காரணங்களால் முத்து படத்தின் மேலான எதிர்பார்ப்பு பல மடங்கு எகிறியது. முத்து படத்தின் பாடல்கள் வெளியாகின. ரஜினி ஸ்டைலாக வெள்ளை முழுக்கை சட்டையை மடித்து விட்டு சாட்டை கம்போடு வந்த கேசட்கள் விற்றுத் தீர்ந்தன. ஆமா நம்ம கேசட் எப்போ என்று கேட்டதற்கு பாடல்களே இல்லை என்ற பதில் வந்தது. அந்த சமயத்தில் விருதுநகரில் இருந்தோம். காலைக்காட்சி ராஜலட்சுமி தியேட்டரில் முத்து படம். ஒரே ஆரவாரம். படம் முடிந்ததும் அருகில் இருந்த கடைகளில் இரண்டு வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு நேராக அப்சரா தியேட்டரில் குருதிப்புனல். முதல் 10 நிமிடம் கத்தி விட்டு பிறகு படத்தில் ஆழ்ந்து போனோம். வீரம்னா என்னன்னு தெரியுமா? எல்லோருக்கும் ஒரு பிரேக்கிங் பாயிண்ட் இருக்கும் உன் கண்ணுல கலாச்சார பலம் தெரியுது.. போன்ற வசனங்களை அசை போட்டுக் கொண்டே நடந்து சென்று மாலை காட்சி அமிர்தராஜ் தியேட்டரில் மக்களாட்சி. உண்மையில் எதிர்பார்க்காத ஒரு ட்ரீட் மக்களாட்சி தான். ஒவ்வொரு சீனையும் ரசித்துப் பார்த்தோம். அப்போதைய அரசியல் நிகழ்வுகளை நேரடியாகவும் சர்காசமாகவும் கலாய்த்து எடுத்து இருப்பார் செல்வமணி. அப்போது வைகோ திமுகவில் இருந்து வெளியேறி இருந்தார். அவரை கலாய்த்து சைதாப்பேட்டை கோவிந்தசாமி (சைகோ) என்னும் கேரக்டர், வால்டர் திருவாசகம் என சொல்லிக் கொண்டே போகலாம். அடுத்த நாள் காலை சுலோச்சனா தியேட்டரில் (இப்போது இடிக்கப்பட்டு விட்டது) சரத்குமாரின் ரகசிய போலீஸ். விஜய்யின் சந்திரலேகா திரைப்படமும் அப்போது வெளியாகி இருந்தது. குருதிப்புனலை இன்னொருமுறை பார்க்க வேண்டும் என்று அதற்கு போகவில்லை. கிடைத்த தீபாவளி காசு அவ்வளவுதான்.‌

No comments: