January 16, 2025

91 ஆம் ஆண்டு பொங்கல் திரைப்படங்கள்

91 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெரைட்டியான படங்கள் வந்தன. நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துவிட்டேன். சிவாஜி அவர்களுடனும் நூறு படங்களுக்கு மேல் நடித்திருப்பேன். ஆனால் ஒரு படத்தில் கூட அவர் ஜோடியாக வரவில்லையே என ஜில் ஜில் ரமாமணி மனோரமா ஒரு பேட்டியில் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்த, சிவாஜியின் இணையாக நடிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு யாகவா முனிவரின் முக்கிய சீடரான தனபாலன் தயாரிப்பில் வெளியான படத்தில் கிடைத்தது. அந்தப் படம் ஞானப்பறவை‌. கமல்ஹாசன் பல பேட்டிகளில் தன் குரு என அடையாளப்படுத்திய அனந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாலச்சந்தரிடம் உதவி இயக்குனர் ஆகவே இருந்தார். அவர் முதன் முதலில் இயக்கிய படம் சிகரம். எஸ்பிபி நாயகன் மற்றும் இசை. புது வசந்தம் என்கிற மாபெரும் வெற்றி படத்திற்கு பின் விக்ரமன் இயக்கிய திரைப்படம் பெரும்புள்ளி. ஏராளமான பெரிய வெற்றி படங்களின் விநியோகத்தராக இருந்த கே ஆர் இயக்குனர் அவதாரம் எடுத்த ஈரமான ரோஜாவே. நாற்பது படங்களில் நான் நடித்த பிறகு கிடைத்த ஆக்சன் ஹீரோ இமேஜ் உனக்கு முதல் படத்திலிருந்து ரஜினி, புதிய பாதை பார்த்து பார்த்திபனை பாராட்டி இருந்தார். அடுத்து ஆக்சன் படங்களில் நடிக்கச் சொன்னார். ஆனால் பார்த்திபன் பொண்டாட்டி தேவை என ஒரு சுமாரான படத்தை எடுத்தார். தோல்வி. அடுத்து கமர்சியல் இயக்குனர் எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் அவர் நடித்த படம் தையல்காரன். கார்த்திக் நடித்த கண் சிமிட்டும் நேரம் என்கிற தரமான திரில்லர் படத்தை கொடுத்த கலைவாணன் கண்ணதாசன் இயக்கத்தில் ஒரு பொம்மையை வைத்து எடுக்கப்பட்ட மிரட்டும் திரில்லர் படம் வா அருகில் வா. எப்போது மார்க்கெட்டிற்கு சென்றாலும் எதற்கும் இருக்கட்டும் என வாங்கும் அரை கிலோ உருளைக்கிழங்கு போல எல்லா பண்டிகைகளுக்கும் வரும் ராமராஜன் படம். அதுபோல வந்த படம் நாடு அதை நாடு. ஆர் சுந்தர்ராஜன் தன் வெற்றிப்பாதையில் இருந்து விலகி இருந்த நேரத்தில் முரளியை வைத்து இயக்கிய சாமி போட்ட முடிச்சு திரைப்படம். மலையூர் மம்பட்டியான் படத்தின் வெற்றிக்குப் பிறகு அதேபோல இன்னொரு தியாகராஜன் படம் தீச்சட்டி கோவிந்தன். கங்கை அமரன் இயக்கத்தில் பிரபு நடித்த கும்பக்கரை தங்கையா. கமல் குணா படத்திலும் விஜயகாந்த் கேப்டன் பிரபாகரன் படத்திலும் பிசியாக இருந்த நேரம். அவர்கள் படம் எதுவும் வரவில்லை. எண்பதுகளில் மிக முக்கியமான கமர்சியல் இயக்குனர் ராஜசேகர். அவர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்மதுரை. அந்த பொங்கலுக்கு, தர்மதுரை- கும்பக்கரை தங்கையா, தர்மதுரை- ஈரமான ரோஜாவே, கும்பக்கரை தங்கையா - ஈரமான ரோஜாவே என மூன்று செட்டு கேசட்டுகள் ஒவ்வொரு கேசட் சென்டர்களிலும் தலா 20 பதிந்து வைத்திருப்பார்கள். அந்த அளவிற்கு ஓட்டம். இளையராஜா மூன்று படங்களுக்கும் அட்டகாச பாடல்களை கொடுத்திருந்தார். தர்மதுரையில் ஆண் என்ன பெண் என்ன அண்ணன் என்ன தம்பி என்ன என இரு தத்துவ பாடல்கள். சந்தைக்கு வந்த கிளி என்கிற துள்ளல் இசை பாடல். மாசி மாசம் ஆளான பொண்ணு என்கிற காதல் பாடல். கும்பக்கரை தங்கையாவில் அட்டகாசமான கிராமிய மெட்டுகள். ஈரமான ரோஜாவேயில் டீன் ஏஜ் மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் கேட்டு காதல் வயப்படும்படியான பாடல்கள். தர்மதுரை ஆரம்ப நாளிலிருந்து மிகப்பெரும் கூட்டத்தோடு ஓடியது. ஈரமான ரோஜாவே மற்றும் வா அருகில் ஆகிய படங்கள் அடுத்து லாபத்தை கொடுத்தன. கும்பக்கரை தங்கையா முதலுக்கு மோசம் இல்லை. ஞானப்பறவை,சிகரம்,பெரும்புள்ளி,தையல்காரன், சாமி போட்ட முடிச்சு தோல்வியை சந்தித்தன. நாடு அதை நாடு லோ பட்ஜெட் என்பதால் தப்பித்தது. தீச்சட்டி கோவிந்தன் பி&சி சென்டர்களில் சுமாராக ஓடி தப்பித்தது. தர்மதுரை படம் நல்ல வசூலுடன் ஓடியது. இந்த சமயத்தில் ரஜினிகாந்த் நாட்டுக்கு ஒரு நல்லவன், தளபதி படங்களில் கமிட் ஆகி இருந்தார். அதற்கடுத்து ராஜசேகர் இயக்கத்தில் இன்னொரு படம் என பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால் தர்மதுரை படத்தில் நூறாவது நாளில் எதிர்பாராத விதமாக ராஜசேகர் காலமானார். உண்மையில் அது தமிழ் வணிக வெற்றி படங்களுக்கு ஒரு இழப்பு என்றே சொல்ல வேண்டும். ரஜினி - ராஜசேகர் கூட்டணி என்பது மிக வெற்றிகரமான கூட்டணி. தம்பிக்கு எந்த ஊரு, படிக்காதவன், தர்மதுரை என ரஜினியின் ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் நெருக்கமான படங்களை கொடுத்தது இந்த கூட்டணி. மாவீரன் திரைப்படம் மட்டும் மிஸ் ஆனது. நிச்சயம் இன்னும் இரண்டு மூன்று வெற்றி திரைப்படங்களை இந்த கூட்டணி அளித்திருக்கும்

No comments: