September 26, 2008

பாதை மாறிய இயக்குநர் - பார்த்திபன்

புதியபாதையாய் தமிழ்திரைக்கு வந்தவர். பல வெற்றிகளை காண்பார் என நினைக்க வைத்தவர். எதிர்பார்ப்பை நிறைவேற்றினாரா?

இயக்கிய படங்கள்

புதியபாதை
பொண்டாட்டி தேவை
சுகமான சுமைகள்
உள்ளே வெளியே
புள்ளகுட்டிகாரன்
சரிகமபதநீ
ஹவுஸ்புல்
இவன்
குடைக்குள் மழை
பச்சக்குதிர


இதுதவிர பாரதிகண்ணம்மா,அழகி, வெற்றிக்கொடி கட்டு,தென்றல், புதுமைப்பித்தன்,காதல் கிறுக்கன்,டாட்டா பிர்லா உட்பட பல படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார்.

புதியபாதையின் பெருவெற்றிக்குப்பிறகு பொண்டாட்டி தேவை படத்தை இயக்கி நடித்தார். அது தோல்வியடைந்தவுடன் சுகமான சுமைகள் இயக்கினார். அது படுதோல்வி. உங்களுக்கு இதுதானே வேணும் வந்து பாருங்க என உள்ளே வெளியே எடுத்தார். நல்ல வெற்றி. அதற்குப்பின் இவர் இயக்கிய எந்தப்படமும் வணிகரீதியிலான வெற்றி பெறவில்லை. நல்ல இயக்குநர் என்னும் பெயரை மட்டும் ஒரளவு காப்பாற்றியது.

இவர் இயக்கிய படங்களில் வேறு வேறான கேரக்டர்களில் நடித்தாலும் நம் கண்ணுக்கு பார்த்திபனே தெரிவார். ஹவுஸ்புல் படத்தில் மட்டும்தான் ஓரளவு பாடிலாங்குவேஜ், வாய்ஸ் மாடுலேஷன் மாறுபாடு இருக்கும். மாஸ் ஹீரோ என்றால், கேரக்டரை மீறி அவரே தெரிந்தால் (ரஜினி,விஜயகாந்த்,விஜய்) பரவாயில்லை. மெத்தட் ஆக்டிங் தேவைப்படும் கேரக்டர்களில் நடிக்கும் போது, கேரக்டரை மீறி இவர் தெரியும் போது அது படத்தை பாழ்படுத்திவிடுகிறது.

இயக்கும் படங்களில் தானே நடிப்பேன் என்ற கொள்கை தவறானது. சரிகமபதநீ, ஓரளவு இளமை,அழகு கொண்ட நடிகர் நடித்திருந்தால் நல்ல வெற்றி அடைந்திருக்கும். கதை முடிச்சு, திரைக்கதை, பாடல்கள் சிறப்பாக அமைந்த படம்.

இவரது பரிசுகள் திரையிலகில் புகழ்பெற்றவை. நடிகர், நடிகையினரின் பிறந்த நாள் மற்றும் சிறப்பு நாட்களுக்காக இவர் கிரியேட்டிவ்வாக செய்து தரும் பரிசுகள் பேசப்பட்டவை. பெப்ஸி பிரச்சினையில் கமல் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இயக்குநர்களுக்கு எதிரான நிலை எடுத்தபோது, நிறைய உதவி இயக்குநர்கள் மூலம் பொக்கேவை அனுப்பி நோகடித்தார். பூக்களால் காயப்படுத்தும் உத்தி. இவர் விளம்பரத்துறைக்கு வந்திருந்தால் பெரிய ஆளாயிருப்பார் என்று கூட சொல்வார்கள். ஆனால் இந்த உத்திகள் திரைக்கதையை மீறி வெளிப்படும் போது பார்வையாளனுக்கு படம் தொடர்ச்சியற்றதாகிறது.

மற்ற இயக்குநர்களின் படங்களில் நடிக்கும் போது (அழகி, தென்றல்) அவர்கள் ஒரளவுக்கு பார்த்திபனை மறைக்கிறார்கள். சில இயக்குநர்கள் (சக்திசிதம்பரம் – காதல் கிறுக்கன், ரங்கநாதன் – டாட்டா பிர்லா) பார்த்திபன் அக்கேரக்டருக்கு தேவை என்பதால் மறைக்காமல் விடுகிறார்கள். அதனால் அப்படங்கள் வெற்றி பெறுகின்றன. இயக்குநர் பார்த்திபனை விட நடிகர் பார்த்திபன் தான் அதிக வெற்றி பெற்றிருக்கிறார்.

பார்த்திபன், மற்ற நடிகர்களை வைத்து இயக்குங்கள். மீண்டும் ஒரு புதியபாதை கிடைக்கட்டும். நடிக்க வேண்டுமானால் மற்ற இயக்குநர்களிடம் நடித்துக்கொள்ளுங்கள். செல்வராகவன் உங்களை (ஆயிரத்தில் ஒருவன்) மற்றொரு பரிமாணத்தில் காட்டுவார் என எதிர்பார்க்கிறேன்.

19 comments:

கானா பிரபா said...

Nice one.

you missed Thalattu Paadava, directed by R.Sundarrajan

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி கானாபிரபா

கிரி said...

எனக்கு பார்த்திபன் படங்களிலேயே ரொம்ப பிடித்தது சொர்ணமுகி தான் ..வாய்ப்பே இல்லை கலக்கலாக நடித்து இருப்பார்..பல முறை பார்த்தும் எனக்கு சலிக்காத படம்.. பின்னி பெடலெடுத்து இருப்பார்

Sen22 said...

நீங்க சொல்றதும் கரெக்ட்தான் சார்...

எனக்கு இயக்குனரா புதியபாதை படம் ரொம்ப பிடிக்கும்...
நடிகரா பாரதி கண்ணம்மா, வெற்றிகொடி கட்டு படம் பிடிக்கும்...

Robin said...

வடிவேல்-பார்த்திபன் ஜோடி வெற்றிகரமானது. இருவரையம் சேர்ந்து பார்த்தாலே சிரிப்பு தானாக வந்து விடும்.

சரவணகுமரன் said...

அவரது தொடர் வித்தியாசமான முயற்சிகள், ஒரு கட்டத்தில் சாதாரணமாக போய்விட்டது.

narsim said...

//மெத்தட் ஆக்டிங் தேவைப்படும் கேரக்டர்களில் நடிக்கும் போது, கேரக்டரை மீறி இவர் தெரியும் போது அது படத்தை பாழ்படுத்திவிடுகிறது.//

மிக நல்ல பகுப்பாய்வு..

முதல் பட வெற்றியை விட இரண்டாவதில் அதை தக்க வைத்தவர்கள் குறைவு என்றே சொல்லலாம்.

தொடர்ந்து கலக்குங்கள் முரளி கண்ணன்.

நர்சிம்

rapp said...

இவர் ஓவரா புதுமை புதுமைன்னு படத்துக்கு வெளியே தன்னை அடையாங்காட்டி பப்ளிசிட்டி தேடிக்கிட்டாரு. விளைவு நீங்க பதிவில் சொல்லி இருக்க மாதிரி எல்லாரும் இவர் படங்களை எக்கச்சக்கமா எதிர்பார்க்க ஆரம்பிச்சி பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. சூப்பரா சொல்லி இருக்கீங்க:):):) இவன் படம் கூட பாதி நல்லா இருக்கும், மீதி ரொம்ப இழுவயா இருக்கும்

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி கிரி, சென்22,ராபின்,சரவணகுமரன்,நர்சிம் மற்றும் ராப்

ARV Loshan said...

ஓவரான புதுமை ஓட ஓட விரட்டும் என்பதற்கு நல்ல உதாரணம் பார்த்திபன்.. அருமையான இயக்குனர்,நல்ல எழுத்தாளர்,சிறந்த நடிகர்,சிந்தனையுடன் சிரிக்க வைப்பவர்..
ஆனால் இந்த அத்தனை அம்சமும் ஒன்று சேரும் போது கவிழ்த்துவிடுகிறது இவரை..

ஒரு சில காட்சிகளிலே பார்த்திபன் வரும் "அரவிந்தன்" எனக்கு மிகப்பிடித்தது..

முரளிகண்ணன் said...

லோஷன், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

புருனோ Bruno said...

//ஹவுஸ்புல் படத்தில் மட்டும்தான் ஓரளவு பாடிலாங்குவேஜ், வாய்ஸ் மாடுலேஷன் மாறுபாடு இருக்கும்.//

பாடி லாங்குவேஜ் சரி, வாய்ஸ் மாடுலேஷன் !!!???

அந்த படத்தில் அவர் அவ்வளவு வசனமா பேசினார் :) :)

முரளிகண்ணன் said...

\\அந்த படத்தில் அவர் அவ்வளவு வசனமா பேசினார் :) :)
\\

டாக்டர் விடமாட்டீங்களே. பேசிய வரைக்கும் னு வச்சுக்குவோம்

;-)))

http://urupudaathathu.blogspot.com/ said...

எனக்கு பார்த்திபன் நடித்ததில் அந்தப்புரம் படம் மிகவும் பிடிக்கும்.
அந்த படத்தில் கௌரவ வேடத்தில் வந்தாலும், மனுஷன் பின்னி பிடல் எடுத்திருப்பார் ..

thamizhparavai said...

முரளி கண்ணனுக்கு....
முதலில் ஒரு கைகுலுக்கல். இதுவரை உங்கள் பதிவுகளில் என் ரேகையைத்தான் பதிக்கவில்லையே தவிர,பலமுறை என் பார்வையைப் பதித்திருக்கிறேன்.தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய தங்கள் அனைத்துக் கட்டுரைகளுமே அருமையான ஆவணங்கள். ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பின்னூட்டமிடுகிறேன்.பல விஷயங்கள் பாராட்ட வேண்டி உள்ளது;சில விஷயங்கள் சேர்க்கவேண்டி உள்ளது;சிற்சில திருத்த வேண்டி உள்ளது.
தற்போது பார்த்திபனைப் பற்றிய பதிவில் எனது பின்னூட்டம்.
பார்த்திபனின் 'பொண்டாட்டி தேவை' எனக்குப் பிடித்த படம்.அதில் வரும் 'ஆராரொ பாட்டு பாட' இனிமையான ஒன்று.இவர் படங்களில் பாடல்கள் நன்றாக இருக்கும்.(இளையராஜாவின் ரசிகர் இவ(ன்)ர்.)

'ஹவுஸ்ஃபுல்' படத்திற்கு சிறந்த தமிழ்ப்படத்திறகான தேசிய விருது கிடைத்தது.
//இயக்கும் படங்களில் தானே நடிப்பேன் என்ற கொள்கை தவறானது. சரிகமபதநீ, ஓரளவு இளமை,அழகு கொண்ட நடிகர் நடித்திருந்தால் நல்ல வெற்றி அடைந்திருக்கும். கதை முடிச்சு, திரைக்கதை, பாடல்கள் சிறப்பாக அமைந்த படம். //
சரியான கருத்து.(சேரன்,எஸ்.ஜே.சூர்யா நோட் பண்ணிக்கங்கப்பா...)
//இவரது பரிசுகள் திரையிலகில் புகழ்பெற்றவை.//
நடிகை மீனாவின் பிறந்த நாளுக்கு இவர் அளித்த பரிசு...
ஒரு பெரிய ஃபிரேமில் மீனாவின் ஒரு கண் மட்டும். கீழே
"மீனா கண்ணா...?
மீனே கண்ணா..?"

இதுவும் ஒரு பிடி சோறுதான்.
'தென்றல்' படத்தில் பார்த்திபனின் நடிப்பு மிக இயல்பாக இருக்கும்.
//ரொம்ப பிடித்தது சொர்ணமுகி தான் ..வாய்ப்பே இல்லை கலக்கலாக நடித்து இருப்பார்..பல முறை பார்த்தும் எனக்கு சலிக்காத படம்.. பின்னி பெடலெடுத்து இருப்பார்//
அதோட இயக்குனர் அதியமான் , பார்த்திபன் மாதிரியே நடிக்க முயற்சி பண்ணினார் 'தலைமுறை' படத்துல. இப்போ ஆளையே காணோம்.
//இவன் படம் கூட பாதி நல்லா இருக்கும், மீதி ரொம்ப இழுவயா இருக்கும்
//
எக்கச்சக்கமா வழிமொழிகிறேன். இரண்டாம் பாதி சரி பண்ணி இருந்தார்னா படம் நல்லா போயிருக்கும்..
//ஓவரான புதுமை ஓட ஓட விரட்டும் என்பதற்கு நல்ல உதாரணம் பார்த்திபன்.. அருமையான இயக்குனர்,நல்ல எழுத்தாளர்,சிறந்த நடிகர்,சிந்தனையுடன் சிரிக்க வைப்பவர்..
ஆனால் இந்த அத்தனை அம்சமும் ஒன்று சேரும் போது கவிழ்த்துவிடுகிறது இவரை..
//
மண வாழ்க்கையும் கவிழ்த்துவிடும்ன்னு ஒரு காலத்துல யாருமே எதிர்பார்க்கலை.
இதெல்லாம் விட இவர் பூஜை மட்டுமே போட்ட படங்கள்ன்னு ஒரு லிஸ்ட்டே இருக்கு....
'சீமைப்பசு','கருப்பண்ணசாமி','ஏலேலோ'....

'குடைக்குள் மழை' வித்தியாசமா இருக்கும்ன்னு கேள்விப்பட்டேன். பார்க்கலை. யாருமே அதை பத்தி சொல்லலியே.

thamizhparavai said...

தலைப்பு சூப்பர்....

முரளிகண்ணன் said...

தமிழ்ப்பறவை தங்கள் வருகைக்கும் தகவல்களுக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள்


\\'சீமைப்பசு','கருப்பண்ணசாமி','ஏலேலோ'\\

சோத்துக்கட்சியையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம்

ILA (a) இளா said...

\\இவர் விளம்பரத்துறைக்கு வந்திருந்தால் பெரிய ஆளாயிருப்பார் என்று கூட சொல்வார்கள்.\\
இதுலயும் அவரு இருந்தாருங்க. ஆனா பப்பு வேகல..

முரளிகண்ணன் said...

\\இவர் விளம்பரத்துறைக்கு வந்திருந்தால் பெரிய ஆளாயிருப்பார் என்று கூட சொல்வார்கள்.\\
இதுலயும் அவரு இருந்தாருங்க. ஆனா பப்பு வேகல\\

ஆமாம் இளா. பிரபுதேவா, சங்கவியை வைத்து ஒரு டிடர்ஜென்ட் சோப் விளம்பரம் எடுத்தார். அது பிக்கப் ஆகவில்லை.