January 16, 2025
இதயத்தை திருடாதே
"ஓடிப் போயிடலாமா' என்னும் வார்த்தையை தமிழ் கூறும் நல் உலகிற்கு தந்த படம்.
இந்தப் படத்தின் நாயகி கிரிஜாவின் தந்தை ஒரு இன்கம்டாக்ஸ் அதிகாரி.
இதயத்தை திருடாதே பாடல்கள் A சைடிலும், கரகாட்டக்காரன் பாடல்கள் B சைடிலும் பதிந்த கேசட்டுகள் கணக்கில்லாமல் விற்பனை ஆகின.
1989 ஆம் ஆண்டு துவங்கியதில் இருந்து ஏகப்பட்ட ஹிட் படங்கள். வருஷம் 16, ராஜாதி ராஜா அபூர்வ சகோதரர்கள், கரகாட்டக்காரன் என.
அபூர்வ சகோதரர்கள் கரகாட்டக்காரன் படங்கள் இரண்டும் திரையரங்கில் இருந்தபோது இந்த படமும் வந்தது.
இந்தப் படத்திற்கான விளம்பரத்தை மணிரத்னம் வித்தியாசமாக செய்தார். இரண்டு முகங்கள் மட்டும் இருக்கும். இதயத்தை திருடாதே, இளையராஜா அவ்வளவுதான். யார் அந்த முகங்கள் என்று ரிலீஸ் ஆகும் நாள் வரை காட்டவில்லை.
நாயகன்,அக்னி நட்சத்திரம் எடுத்த டைரக்டர் என்று கல்லூரி இளைஞர்கள் அவர்களாகவே குவிந்தார்கள். பார்த்தவர்கள் இந்த படத்தின் விஷுவலில் மயங்கி ஹாஸ்டலில் இருந்த எல்லோரையும் படம் பார்க்க விரட்டி விட்டார்கள்.
ஒவ்வொரு சீனையும் சிலாகித்து சொல்வார்கள். நாகார்ஜுனா தண்ணீரிலிருந்து இறங்கி வரும்போது ஷூ காலை அழுத்த அதிலிருந்து வெளிவரும் தண்ணீர், எந்நேரமும் பிரேமில் இருக்கும் பனிப்புகை.
ஓ பாப்பா லாலி, ஓம் நமஹா, காவியம் பாடவா தென்றலே பாடல்கள்...
எத்தனை எத்தனை நினைவுகளை இந்த படம் அள்ளிக் கொடுத்தது.
இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து நிறைய நாகார்ஜூனா படங்கள் டப் ஆகி வந்தன.
சில விஷயங்களை அந்தந்த காலத்தில் அனுபவித்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்பார்கள்.
அதுபோல மேல்நிலைப்பள்ளி, கல்லூரியில் படிக்கும் போது இந்த படத்தை நல்ல சவுண்ட் சிஸ்டம் உடைய குளிர்சாதன அரங்கில் அப்போது பார்த்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
ரட்சகன்
கே டி குஞ்சுமோன், கேரளாவில் விநியோகஸ்தராகவும் சில படங்களின் தயாரிப்பாளராகவும் இருந்தவர். அவர் தமிழில் பவித்ரனை இயக்குநராக வைத்து வசந்தகால பறவைகள் என்னும் படத்தை எடுத்தார். அந்தப் படத்தில் ஷங்கர் இணை இயக்குனர். படம் வெற்றி அதற்கடுத்து சூரியன் படத்தை எடுத்தார் அது பிரம்மாண்ட வெற்றி.
அதன் பின் குஞ்சுமோனுக்கும் பவித்ரனுக்கும் சண்டை வர, குஞ்சுமோன் ஷங்கரை வைத்து ஜென்டில்மேன் எடுத்தார். பவித்ரன் விஷாலின் அப்பா ஜி கே ரெட்டியுடன் இணைந்து சரத்குமாரை வைத்து ஐ லவ் இந்தியா எடுத்தார்.
ஜென்டில்மேனின் அபார வெற்றிக்குப் பிறகு ஷங்கரை வைத்து காதலன் எடுத்தார் குஞ்சுமோன். அதுவும் பிரம்மாண்ட வெற்றி. அதே சமயத்தில் கலக்கப்போவது ராமரால் தற்போது புகழடைந்த ஆத்தாடி என்ன உடம்பி பாடல் இடம் பெற்ற சிந்துநதிப் பூ படத்தையும் தயாரித்தார்.
காதலனின் வெற்றிக்குப் பிறகு குஞ்சுமோனுக்கும் ஷங்கருக்கும் சண்டை. ஷங்கர் இந்தியன் படத்திற்கு போய்விட்டார்.
குஞ்சுமோன் என்ன செய்வது என்று யோசித்தார். அவருக்கு ஜென்டில்மேன் படத்திலிருந்து தெரிந்துவிட்டது. பிரம்மாண்டம் என்பது ஒரு பெரிய விசிட்டிங் கார்டு. அந்த பிரம்மாண்டத்தை அப்போதைய சூழ்நிலையில் தரக்கூடிய ஒரே ஆள் ஏ ஆர் ரகுமான் தான்.
அப்போது ஏ ஆர் ரகுமான் ஒரு படத்தில் கையெழுத்து இட்டார் என்றாலே அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு எல்லா மட்டங்களிலும் எகிறிவிடும்.
தயாரிப்பாளராக ஏ ஆர் ரகுமானிடம் மிகுந்த பழக்கம் இருந்தாலும், அவரை சம்மதிக்க வைக்க ஒரு இயக்குநர் தேவைப்பட்டார். அப்போது ஏ ஆர் ரகுமானின் நண்பர் கதிர் கிடைத்தார். காதல் தேசம் உருவானது. அந்தப் படம் வெளியானபோது முதல் சில நாட்கள் நல்ல ரெஸ்பான்ஸ் இல்லை. எனவே எடிட்டர் லெனினை வைத்து காட்சிகளை மறுசீரமைப்பு தியேட்டர்களுக்கு கொடுத்து படம் பிக்கப் ஆனது. அதோடு கதிருடனும் சண்டை.
அடுத்து அவருக்கு கிடைத்த ரகுமானின் நண்பர் பிரவீன் காந்தி.
எனவே அவரை இயக்குனர் ஆக்கி ரகுமானை இசையமைக்க வைத்து ரட்சகன் படத்தை தயாரிக்க ஆரம்பித்தார். அப்போது படத்திற்கு இன்னும் ஹைப் கூட்டுவதற்காக பெரிய ஹீரோ தேடினார். (காதல் தேசத்தில் அப்பாஸ் அறிமுகம், வினித் அதற்கு முன் ஆவாரம்பூ படத்தில் ஒரு வெள்ளந்தி கேரக்டரில் நடித்தவர் தபுவுக்கு கிளாமர் அப்பீல் கிடையாது). தெலுங்கில் இருந்து நாகார்ஜுனாவை பிடித்தார்.
மிஸ் இந்தியா ஐஸ்வர்யா ராய் மணிரத்தினத்தின் இருவர் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். மிஸ் யுனிவர்ஸ் சுஷ்மிதா சென்னை இந்தப் படத்திற்குப் பிடித்தார். உடன் வடிவேலுவும் கிடைத்தார்.
அப்போது இந்த படத்தின் பட்ஜெட் 15 கோடி. அது பத்திரிகைகளில் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு விஷயம். ஒரு வேற்றுமொழி நாயகர் புது இயக்குனர் இவ்வளவு செலவா என்று.
அந்த சமயத்தில் எங்கள் உறவில் ஒரு அண்ணன் இருந்தார். எனது அத்தை அவருக்கு பெண் கொடுக்க மிகவும் யோசித்தார். ஆள் பார்க்க சுமாராக இருக்கிறார் என்பதுதான் ஒரே காரணம். அப்போது, நாங்கள் எங்களுக்குள் கிண்டல் அடிப்போம். ஆமா 15 கோடி போட்டு படம் எடுக்க போகுது இந்த அத்தை. ஹீரோ தேடுது என்று.
படத்தின் பாடல்கள் வெளியானதும், இன்னும் ஹைப் ஏறியது. சோனியா சோனியா பாடலும் சரி சந்திரனை தொட்டது யார் மெலடியும் சரி இன்ஸ்டன்ட் ஹிட்.
அப்போது இப்போது போல சமூக ஊடகங்கள் இல்லாத காரணத்தால் ஸ்டில்லும் போட்டோவும் மட்டுமே ஒரு படத்தின் கதையை கடத்தும் காரணிகளாக இருந்தது. ஸ்டில்லில் நாகார்ஜுனாவும் எஸ் பி பாலசுப்ரமணியம் ஒரு சின்ன வீடு ஸ்கூட்டரில் உட்கார்ந்து இருப்பார்கள். படத்தின் டைட்டில் ரட்சகன். துப்பாக்கி சிம்பல்.
எனவே, இந்தப் படத்தில் நாட்டிற்கு ஒரு பெரிய ஆபத்து. அதைக் காப்பாற்றும் ஒரு சூப்பர் ஹீரோவின் கதை என இளைஞர்கள் தங்கள் மனதில் ஃபிக்ஸ் செய்து கொண்டார்கள்.
படம் வெளியானது. தமிழ்நாட்டில் ஒரு வேற்று மொழி நடிகர் கதாநாயகனாக தமிழ் படத்தில் நடித்து கிடைத்த மிகப்பெரிய முதல் ஓப்பனிங் அது. மதுரை குரு தியேட்டரில் காலை காட்சிக்கு வந்திருந்தவர்கள் டிக்கெட் கிடைக்காமல் மதிய காட்சி வரை அங்கேயே நின்றது பெரிய ஆச்சரியம்.
அது ஹீரோவுக்காக அல்ல இயக்குனருக்காக அல்ல தயாரிப்பாளருக்காகவும் அவரது ப்ரொடக்ஷன் டிசைனுக்காகவும். கிட்டத்தட்ட காதல் தேசமும் அப்படித்தான். இயக்குனர் கதிர் கூட அதற்கு முன் உழவன் என்னும் தோல்வி படம் கொடுத்தவர்.
ஆனால் படம் ரசிகர்களை ஏமாற்றியது. ஒரு தனிமனிதனின் கோபம். அவன் குடும்பக்கதை என்னும் அளவில் அது சுருங்கி போனது.
படம் முடித்து வெளியே வந்த மதுரை ரசிகர் ஒருவர், பூராத்தையும் போட்டு உடைக்கிறாங்கய்யா.. படம் முடிஞ்சதும் டயர் இருக்கான்னு கீழ தேடி பார்க்க வச்சுட்டாங்க என்றார்.
சூப்பர் ஹீரோ கதையாக இருந்திருந்தால் ஓடி இருக்கும்.
96 ஆம் ஆண்டு தீபாவளி
குருதிப்புனல் திரைப்படம் அறிவிக்கப்பட்டபோது, அதற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் துரோகி. ஹிந்தியில், கோவிந்த் நிகலானி இயக்கிய துரோகால் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக். துரோகி என்பது இந்த படத்திற்கு சரியான பெயர் தான்.
ஆனால் அப்போது கமல் ரசிகர் மன்றத்தில் இருந்தவர்கள், தங்களது பெயருக்கு முன்னால் படப் பெயர்களையும் போட்டுக் கொள்வார்கள், நற்பணி மன்றத்திற்கும் அந்த பெயரை வைப்பார்கள், பனியன்களிலும் அந்த படப் பெயரை அச்சிட்டு கொள்வார்கள்.
அவர்களுக்கு துரோகி என்ற டைட்டில் கேள்விப்பட்டதும் துரோகி கமல்ஹாசன் நற்பணி மன்றம், துரோகி குமார் என்றெல்லாம் எப்படி போட்டுக் கொள்வது என ராஜ்கமல் ஆபீசுக்கு பல கடிதங்களை எழுதினார்கள்.
அதனால் கமல்ஹாசன் படத்தலைப்பை குருதிப்புனல் என மாற்றினார். பி சி ஸ்ரீராம் இயக்கம் கமலஹாசனின் நண்பர் மகேஷ் இசை.
இன்னொரு பக்கம் பாட்ஷா தந்த அதிரடியுடன் ரஜினிகாந்த், நாட்டாமை தந்த வெற்றியுடன் கே எஸ் ரவிக்குமார், இவர் தங்கள் படத்திற்கு இசையமைக்க மாட்டாரா என அப்போது எல்லோரும் ஏங்கிய ஏ ஆர் ரகுமான் என எதிரே வலுவான கூட்டணி.
95 ஆம் ஆண்டு பொங்கலுக்கு தான் பாட்ஷாவுடன் சதிலீலாவதி மோதியது. பல திரையரங்குகளில் 100 நாட்கள் கடந்தாலும் பாட்ஷா வெற்றியுடன் ஒப்பிடும்போது கமல் ரசிகர்களுக்கு மனக் குறை. இப்போதும் அந்தப் பக்கம் வலுவான கூட்டணி.
பாட்ஷா படத்தின் வெற்றி விழாவில் ரஜினிகாந்த் பேசியபோது மணிரத்தினம் வீட்டில் குண்டு வெடித்ததை சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் வந்துவிட்டது என பேசினார். அது அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை கோபப்படுத்தியது. அமைச்சர்கள் ரஜினிகாந்தை எதிர்த்து அறிக்கை மேல் அறிக்கை விட்டார்கள். பாட்ஷா படத்தின் தயாரிப்பாளர் ஆரம் வீரப்பன் தர்ம சங்கடத்திற்கு உள்ளானார். இந்த காரணங்களால் முத்து படத்தின் மேலான எதிர்பார்ப்பு பல மடங்கு எகிறியது.
முத்து படத்தின் பாடல்கள் வெளியாகின. ரஜினி ஸ்டைலாக வெள்ளை முழுக்கை சட்டையை மடித்து விட்டு சாட்டை கம்போடு வந்த கேசட்கள் விற்றுத் தீர்ந்தன.
ஆமா நம்ம கேசட் எப்போ என்று கேட்டதற்கு பாடல்களே இல்லை என்ற பதில் வந்தது.
அந்த சமயத்தில் விருதுநகரில் இருந்தோம். காலைக்காட்சி ராஜலட்சுமி தியேட்டரில் முத்து படம். ஒரே ஆரவாரம். படம் முடிந்ததும் அருகில் இருந்த கடைகளில் இரண்டு வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு நேராக அப்சரா தியேட்டரில் குருதிப்புனல். முதல் 10 நிமிடம் கத்தி விட்டு பிறகு படத்தில் ஆழ்ந்து போனோம்.
வீரம்னா என்னன்னு தெரியுமா?
எல்லோருக்கும் ஒரு பிரேக்கிங் பாயிண்ட் இருக்கும்
உன் கண்ணுல கலாச்சார பலம் தெரியுது..
போன்ற வசனங்களை அசை போட்டுக் கொண்டே நடந்து சென்று மாலை காட்சி அமிர்தராஜ் தியேட்டரில் மக்களாட்சி.
உண்மையில் எதிர்பார்க்காத ஒரு ட்ரீட் மக்களாட்சி தான். ஒவ்வொரு சீனையும் ரசித்துப் பார்த்தோம். அப்போதைய அரசியல் நிகழ்வுகளை நேரடியாகவும் சர்காசமாகவும் கலாய்த்து எடுத்து இருப்பார் செல்வமணி. அப்போது வைகோ திமுகவில் இருந்து வெளியேறி இருந்தார். அவரை கலாய்த்து சைதாப்பேட்டை கோவிந்தசாமி (சைகோ) என்னும் கேரக்டர், வால்டர் திருவாசகம் என சொல்லிக் கொண்டே போகலாம்.
அடுத்த நாள் காலை சுலோச்சனா தியேட்டரில் (இப்போது இடிக்கப்பட்டு விட்டது) சரத்குமாரின் ரகசிய போலீஸ். விஜய்யின் சந்திரலேகா திரைப்படமும் அப்போது வெளியாகி இருந்தது. குருதிப்புனலை இன்னொருமுறை பார்க்க வேண்டும் என்று அதற்கு போகவில்லை. கிடைத்த தீபாவளி காசு அவ்வளவுதான்.
91 ஆம் ஆண்டு பொங்கல் திரைப்படங்கள்
91 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெரைட்டியான படங்கள் வந்தன.
நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துவிட்டேன். சிவாஜி அவர்களுடனும் நூறு படங்களுக்கு மேல் நடித்திருப்பேன். ஆனால் ஒரு படத்தில் கூட அவர் ஜோடியாக வரவில்லையே என ஜில் ஜில் ரமாமணி மனோரமா ஒரு பேட்டியில் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்த, சிவாஜியின் இணையாக நடிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு யாகவா முனிவரின் முக்கிய சீடரான தனபாலன் தயாரிப்பில் வெளியான படத்தில் கிடைத்தது. அந்தப் படம் ஞானப்பறவை.
கமல்ஹாசன் பல பேட்டிகளில் தன் குரு என அடையாளப்படுத்திய அனந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாலச்சந்தரிடம் உதவி இயக்குனர் ஆகவே இருந்தார். அவர் முதன் முதலில் இயக்கிய படம் சிகரம். எஸ்பிபி நாயகன் மற்றும் இசை.
புது வசந்தம் என்கிற மாபெரும் வெற்றி படத்திற்கு பின் விக்ரமன் இயக்கிய திரைப்படம் பெரும்புள்ளி.
ஏராளமான பெரிய வெற்றி படங்களின் விநியோகத்தராக இருந்த கே ஆர் இயக்குனர் அவதாரம் எடுத்த ஈரமான ரோஜாவே.
நாற்பது படங்களில் நான் நடித்த பிறகு கிடைத்த ஆக்சன் ஹீரோ இமேஜ் உனக்கு முதல் படத்திலிருந்து ரஜினி, புதிய பாதை பார்த்து பார்த்திபனை பாராட்டி இருந்தார். அடுத்து ஆக்சன் படங்களில் நடிக்கச் சொன்னார். ஆனால் பார்த்திபன் பொண்டாட்டி தேவை என ஒரு சுமாரான படத்தை எடுத்தார். தோல்வி. அடுத்து கமர்சியல் இயக்குனர் எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் அவர் நடித்த படம் தையல்காரன்.
கார்த்திக் நடித்த கண் சிமிட்டும் நேரம் என்கிற தரமான திரில்லர் படத்தை கொடுத்த கலைவாணன் கண்ணதாசன் இயக்கத்தில் ஒரு பொம்மையை வைத்து எடுக்கப்பட்ட மிரட்டும் திரில்லர் படம் வா அருகில் வா.
எப்போது மார்க்கெட்டிற்கு சென்றாலும் எதற்கும் இருக்கட்டும் என வாங்கும் அரை கிலோ உருளைக்கிழங்கு போல எல்லா பண்டிகைகளுக்கும் வரும் ராமராஜன் படம். அதுபோல வந்த படம் நாடு அதை நாடு.
ஆர் சுந்தர்ராஜன் தன் வெற்றிப்பாதையில் இருந்து விலகி இருந்த நேரத்தில் முரளியை வைத்து இயக்கிய சாமி போட்ட முடிச்சு திரைப்படம்.
மலையூர் மம்பட்டியான் படத்தின் வெற்றிக்குப் பிறகு அதேபோல இன்னொரு தியாகராஜன் படம் தீச்சட்டி கோவிந்தன்.
கங்கை அமரன் இயக்கத்தில் பிரபு நடித்த கும்பக்கரை தங்கையா.
கமல் குணா படத்திலும் விஜயகாந்த் கேப்டன் பிரபாகரன் படத்திலும் பிசியாக இருந்த நேரம். அவர்கள் படம் எதுவும் வரவில்லை.
எண்பதுகளில் மிக முக்கியமான கமர்சியல் இயக்குனர் ராஜசேகர். அவர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்மதுரை.
அந்த பொங்கலுக்கு, தர்மதுரை- கும்பக்கரை தங்கையா, தர்மதுரை- ஈரமான ரோஜாவே, கும்பக்கரை தங்கையா - ஈரமான ரோஜாவே என மூன்று செட்டு கேசட்டுகள் ஒவ்வொரு கேசட் சென்டர்களிலும் தலா 20 பதிந்து வைத்திருப்பார்கள்.
அந்த அளவிற்கு ஓட்டம். இளையராஜா மூன்று படங்களுக்கும் அட்டகாச பாடல்களை கொடுத்திருந்தார்.
தர்மதுரையில் ஆண் என்ன பெண் என்ன அண்ணன் என்ன தம்பி என்ன என இரு தத்துவ பாடல்கள். சந்தைக்கு வந்த கிளி என்கிற துள்ளல் இசை பாடல். மாசி மாசம் ஆளான பொண்ணு என்கிற காதல் பாடல்.
கும்பக்கரை தங்கையாவில் அட்டகாசமான கிராமிய மெட்டுகள். ஈரமான ரோஜாவேயில் டீன் ஏஜ் மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் கேட்டு காதல் வயப்படும்படியான பாடல்கள்.
தர்மதுரை ஆரம்ப நாளிலிருந்து மிகப்பெரும் கூட்டத்தோடு ஓடியது. ஈரமான ரோஜாவே மற்றும் வா அருகில் ஆகிய படங்கள் அடுத்து லாபத்தை கொடுத்தன. கும்பக்கரை தங்கையா முதலுக்கு மோசம் இல்லை.
ஞானப்பறவை,சிகரம்,பெரும்புள்ளி,தையல்காரன், சாமி போட்ட முடிச்சு தோல்வியை சந்தித்தன. நாடு அதை நாடு லோ பட்ஜெட் என்பதால் தப்பித்தது. தீச்சட்டி கோவிந்தன் பி&சி சென்டர்களில் சுமாராக ஓடி தப்பித்தது.
தர்மதுரை படம் நல்ல வசூலுடன் ஓடியது. இந்த சமயத்தில் ரஜினிகாந்த் நாட்டுக்கு ஒரு நல்லவன், தளபதி படங்களில் கமிட் ஆகி இருந்தார். அதற்கடுத்து ராஜசேகர் இயக்கத்தில் இன்னொரு படம் என பேச்சுக்கள் அடிபட்டன.
ஆனால் தர்மதுரை படத்தில் நூறாவது நாளில் எதிர்பாராத விதமாக ராஜசேகர் காலமானார். உண்மையில் அது தமிழ் வணிக வெற்றி படங்களுக்கு ஒரு இழப்பு என்றே சொல்ல வேண்டும்.
ரஜினி - ராஜசேகர் கூட்டணி என்பது மிக வெற்றிகரமான கூட்டணி.
தம்பிக்கு எந்த ஊரு, படிக்காதவன், தர்மதுரை என ரஜினியின் ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் நெருக்கமான படங்களை கொடுத்தது இந்த கூட்டணி. மாவீரன் திரைப்படம் மட்டும் மிஸ் ஆனது. நிச்சயம் இன்னும் இரண்டு மூன்று வெற்றி திரைப்படங்களை இந்த கூட்டணி அளித்திருக்கும்
January 15, 2025
விருதுநகர் உணவு
90களில் தமிழ்நாட்டில் ஏன் இந்தியாவிலேயே அதிக அளவில் புரோட்டா தயாரிக்கும் மாவட்டமாக விளங்கியது விருதுநகர் எனலாம்.
விருதுநகர் எண்ணெய் புரோட்டா எல்லோரும் அறிந்தது. பர்மா கடை பற்றி எல்லோரும் பேசுவார்கள். ஆனால் தாஜ்,கார்னேசன், கமாலியா மற்றும் பெயர் இல்லாத கடைகளும் ஏராளமாக இருந்தன. அவர்கள் எந்த விதத்திலும் பர்மாவிற்கு குறைந்தவர்கள் இல்லை.
பானு என்கிற கடை இப்போதும் இருக்கிறது. அவர்கள் சாதாரணமாக புரோட்டாவிற்கு கொடுக்கும் சால்னாவே பெப்பர் சிக்கன் கிரேவியிலிருந்து சிக்கனை எடுத்துவிட்டு ஊற்றினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும்.
மாவட்டத் தலைநகர் விருதுநகராக இருந்தாலும் விருதுநகர் மாவட்டத்தின் கிங் சிவகாசி தான் என்பது போல, புரோட்டா தயாரிப்பிலும் சிவகாசி தான் நம்பர் ஒன். அங்கே நாள் முழுவதும் தீப்பெட்டி, பட்டாசு, காலண்டர்,டைரி, நோட் புக் மற்ற பிரிண்டிங் வேலைகள் என்று குடும்பத்தோடு வேலை பார்த்துவிட்டு, மாலை வேளையில் பார்சல் வாங்குவதற்கு என்றே நேர்ந்து விடப்பட்ட அவர்கள் குடும்பத்தில் ஒருவனை வாளியோடு அனுப்பிவிடுவார்கள்.
அங்கே எல்லா கடைகளிலும் சாப்பிடும் இடம் சிறியதாகவும் பார்சல் வாங்க நிற்பவர்கள் பெரிய இடத்தில் காத்திருக்கும்படிதான் அமைத்திருப்பார்கள். நான்கு பேர் சாப்பிட்டால் 40 பேர் பார்சலுக்கு நிற்பார்கள். அங்கேயும் விஜயம், ஜானகிராம், பெல் என சொல்லிக் கொண்டே போகலாம். ஒவ்வொரு கடையுமே ஒரு பிராண்ட் தான்.
அருப்புக்கோட்டையில் அந்த சமயத்தில் ஏராளமான தறி நெசவாளிகள். அவர்களும் சாயங்காலம் ஆகிவிட்டால் கடைகளில்தான். இனிமை,நடராஜ், முக்கு,கடற்கரை, ஆழாக்கு கடை என ஏகப்பட்ட கடைகள்.
ஒவ்வொரு கடை சால்னாவும் texture, consistency, taste ஒவ்வொன்றிலும் வித்தியாசமாக இருக்கும். வாளியை திறந்து பார்த்த உடனேயே சிலர் என்னடா இனிமையில் வாங்க சொன்னேன் நடராஜுல வாங்கிட்டு வந்துட்ட என்று சொல்லும் அளவிற்கு இருக்கும்.
ராஜபாளையத்திலும் சொல்லவே வேண்டாம். ஆனந்தாஸ் பாம்பே ரஹமத் என ஏராள கடைகள். ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூரும் அப்படித்தான்.
சேத்தூர் கண்ணாடி கடை மட்டன் சுக்கா சாப்பிட்டவர்களுக்கு அது ஒரு பென்ச் மார்க்காகவே மாறிவிடும். வேறு எங்கு சாப்பிட்டாலும் அந்த கடை மாதிரி இருந்தது இல்லை என்று யோசிக்க வைத்து விடும்.
விருதுநகர் மாவட்ட கடைகளில் ஒரு விசேஷம். நீங்கள் புரோட்டா வாங்கினாலும் சரி பூரி வாங்கினாலும் சரி கேட்காமலேயே ஒரு கரண்டி நல்ல தேங்காய் சட்டினி வைத்து விடுவார்கள். வைக்கும் போது தான் நாம் பிடிக்கவில்லை என்றால் வேண்டாம் என்று சொல்ல வேண்டும். அதேபோல ரவா தோசை வாங்கினால் சட்னி சாம்பார் ஊற்றிவிட்டு பக்கத்திலேயே ஒரு ஸ்பூன் சீனியும் வைத்து விடுவார்கள். அதுதான் பா காம்பினேஷன் என்பார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, சாத்தூர் சேவு, பாலவனத்தம் சீரணி என ஸ்பெஷல் ஐட்டங்களும் இங்கேதான்.
ராம நாராயணன்
இண்டஸ்ட்ரிகளில் முன்னாளில் சீக்வன்சியல் இன்ஜினியரிங் முறை இருந்தது. ஒரு பிராசஸ் முடிந்த பின்னரே அடுத்த பிராசஸ் துவங்குவார்கள். அதனால் lead time அதிகமாகிறது என்று concurrent engineering முறை கொண்டு வந்தார்கள். ஒரு ப்ராடக்டிற்கான வேலை இன்னும் சில ஒர்க் ஸ்டேஷன்களிலும் நடைபெறும். சைமல்டேனியஸ் ப்ராசஸ்.
இதை திரைத்துறையில் மிகவும் எபக்டிவ்வாக பயன்படுத்தியவர் இயக்குனர் ராமநாராயணன் அவர்கள். அவருடைய படங்கள் எல்லாமே குறைந்தது நான்கு வாரம் ஓடும். அப்படி நான்கு வாரம் ஓடி விட்டாலே தயாரிப்பாளரிலிருந்து தியேட்டர் அதிபர் வரை எல்லோருக்கும் தேவையான லாபம் கிடைத்து விடும்.
ராமநாராயணனுடைய கொள்கை நான் படமெடுக்கும் நாட்களை விட ஒரு நாளாவது படம் அதிகம் ஓட வேண்டும் என்பதே. அதனால் அவர் தன் எல்லா படங்களையும் நான்கு வாரத்திற்குள் முடித்து விடுவார். யானை,பாம்பு, நாய் என எதை வைத்து எடுத்தாலும் அவ்வளவு வேகமாக முடித்து விடுவார்.
அவர் அதற்காக வலுவான அசோசியேட் இயக்குனர்கள் மற்றும் உதவி இயக்குனர்கள் குழு வைத்திருந்தார். ஒருவர் ஒரு இடத்தில் சண்டைக் காட்சிகளை படமாக்கினால் அதில் தொடர்பு இல்லாத ஆட்களை கொண்ட காட்சிகளை இன்னொரு உதவி இயக்குனர் இன்னொரு இடத்தில் இயக்கிக் கொண்டிருப்பார்.
ஓரிடத்தில் பாடல் காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருக்கும்.
இப்படி ஒவ்வொரு இடங்களிலும் காட்சிகள் எடுக்கப்பட்டு கொண்டிருக்கும் இவர் எல்லா இடங்களுக்கும் சென்று மேற்பார்வையிட்டு கரெக்ஷன் சொல்லிக் கொண்டிருப்பார்.
மிகுந்த கம்யூனிச தாக்கம் உள்ள இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு வந்தவர் ராமநாராயணன். அவருடைய சுமை, சிவப்பு மல்லி, பட்டம் பறக்கட்டும் எல்லாமே அத்தகைய தாக்கத்தை கொண்டிருந்த படங்கள்.
சிவப்பு மல்லி படம் விஜயகாந்த்திற்கு ஏராள ரசிகர்களை பெற்று தந்தது.
ஆனால் அதன் பின்னர் அவர் முழுக்க கமர்சியல் ரூட்டிற்கு மாறினார். நன்றி படத்தில் அர்ஜுன அறிமுகப்படுத்தினார்.
ஆடி வெள்ளி மற்றும் துர்கா ஆகிய இரண்டு படங்கள் செய்த கலெக்ஷன் சாதனையால் அவர் அதிகமாக விலங்குகள் மற்றும் பக்தி படங்கள் இயக்கலானார். இடையிடையே காமெடி படங்கள் வேறு. அவர் இயக்கிய நூறாவது திரைப்படம் திருப்பதி ஏழுமலை வெங்கடேசா மிகப்பெரிய கலெக்சன்.
ஆடி வெள்ளி, துர்கா படங்களின் கதையை வைத்துக்கொண்டு அவர் எல்லா திரையுலகிற்கும் சென்றார். போஜ்புரி மொழியிலும் பல படங்களை இயக்கினார்.
சின்னக் கல்லு பெத்த லாபம்
என்கிற கொள்கையையும் கடைசிவரை கடைபிடித்தவர் ராமநாராயணன். அவருடைய படங்கள் எல்லாமே லோ பட்ஜெட் படங்கள் தான். எப்படியும் யார் கையையும் கடிக்காது.
ஆனால் ஹிட் ஆகிவிட்டால் ஏகப்பட்ட லாபம் கிடைக்கும்.
ஆடி வெள்ளி திரைப்படம் வாங்கியவர்களுக்கு 5 மடங்கு லாபம் கொடுத்தது. துர்கா அதற்கு மேல் கொடுத்தது என்பார்கள்.
ஜீன்ஸ்
ஜீன்ஸ் திரைப்படத்தை, டென்னிஸ் வீரர் அசோக் அமிர்தராஜின் கம்பெனி தயாரித்தது. அவர்கள் ஏற்கனவே ரஜினியை வைத்து பிளட் ஸ்டோன் என்கிற ஆங்கில படமும் தயாரித்திருந்தார்கள்.
ஜீன்ஸ் படத்தின் பட்ஜெட் 24 கோடி என அறிவிக்கப்பட்டது அப்பொழுது பெரிய செய்தியானது. ஏனென்றால் அதற்கு முந்தைய சங்கர் படமான இந்தியன் பட பட்ஜெட் 12 கோடி தான். அதுவும் எட்டு கோடி தான் பட்ஜெட் என அறிவிக்கப்பட்டு 12 கோடியானது. கமல்ஹாசன் அவர்களின் சம்பளம் 90 லட்சம்.
இந்த சூழ்நிலையில் பிரசாந்த் வைத்து எடுக்கப்படும் ஒரு படத்திற்கு 24 கோடி பட்ஜெட் என்பது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பிரசாந்திற்கு இந்த படத்திற்கு கிட்டத்தட்ட மாத சம்பளம் போல கொடுத்தார்கள் என்று சொல்வார்கள். ஓராண்டுக்கு மேல் தயாரிப்பில் இருந்தது.
ஸ்ரீதேவியின் தாயாருக்கு அமெரிக்காவில் சிகிச்சையை மாற்றி செய்த சம்பவத்தை இந்த படத்தில் வைத்திருப்பார்கள்.
படம் ஆவரேஜ் ஆகத்தான் போனது.
ஜீன்ஸ் திரைப்படத்திற்கு பிறகு தொடர்ச்சியாக தமிழில் படங்கள் எடுப்போம் என்று சொன்ன அவர்கள் பின்வாங்கினார்கள்.
பெரிய தயாரிப்பாளர்கள் ஷங்கரிடம் போவது, பூனைக்கு சுடுபால் வைத்த கதை. வேறு ஆப்ஷன் இருக்கும் பூனைகள் அந்த பக்கம் எட்டிப் பார்க்காது. வேறு வழியில்லாத பூனைகள் வாய் வெந்து பாலை குடிக்க வேண்டி இருக்கும்.
இதற்கு அடுத்து வந்த பிரசாந்த் படமான கண்ணெதிரே தோன்றினாள் குறைந்த பட்ஜெட்டில் வேகமாக எடுக்கப்பட்டு எல்லோருக்கும் ஏகப்பட்ட லாபம் கொடுத்தது.
ஜீன்ஸை விட கண்ணெதிரே தோன்றினாள் தான் நிறைய பேருக்கு பிடித்த படம். லாபகரமான படமும் கூட.
லவ் லெட்டர்
திருமணம் ஆகா பெண்களின் தினசரி உடையாக தாவணி இருந்த காலகட்டம். போகி அன்று நள்ளிரவு துவங்கி, தைப்பொங்கல் விடியும் வரை தெருவில் கோலம் போடுவார்கள்.
தெருவிலேயே அழகான பெண் என பெயர் எடுத்தவர் சுபத்ரா. அப்போது கல்லூரி முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தார். தெருவில் வசித்த கணேஷ் அப்போது கல்லூரி மூன்றாம் ஆண்டு. எனக்கு அவர் மீது மிகுந்த அபிமானம். என்னைவிட நான்கு வயது கூடியவர். ஆறாம் வகுப்பில் நான் மேல்நிலைப்பள்ளியில் நுழைந்தபோது, கிட்டத்தட்ட அங்கே ஹீரோவாக இருந்தவர் கணேஷ். படிப்பு, கட்டுரை போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் என எல்லாவற்றிலும் அவர் பெயர்தான் அடிபடும்.
நான் அந்த பொங்கல் சமயத்தில் பதினொன்றாம் வகுப்பு. கணேஷ் சுபத்ரா இருவருக்கும் இடையே பார்வை பரிமாற்றம் ஆரம்பமாகி இருந்த நேரம். கணேஷ் என்னிடம் சுபத்ராவிடம் கொடுக்குமாறு ஒரு லெட்டர் கொடுத்தார். அந்த சமயத்தில் அதை ஒரு ஹீரோயிசமாக கருதி செய்தேனா, இல்லை கணேஷ் மீது இருந்த அபிமானத்தில் செய்தேனா என்று தெரியவில்லை. அந்த லெட்டரை கொண்டு போய் சுபத்ராவிடம் கொடுத்தேன். மாட்டிக்கொண்டேன்.
அவ்வளவுதான் தெருவே சேர்ந்து என்னை காறித் துப்பினார்கள். சுபத்ராவின் தந்தை, உங்கள் வீட்டுப் பெண்ணிற்கு இப்படி யாராவது கொடுத்தால் சென்று கொடுப்பாயா என்று கேட்டார். என் தந்தை நடுவீதியில் வைத்து டெல்டால் விளாசிவிட்டார். கணேஷ் அவர்கள் வேறு ஜாதி என்பதால் நேரடியாக அவர்களிடம் எதுவும் வைத்துக் கொள்ளவில்லை.
அடித்த அடியில் காய்ச்சல் வந்து, வீட்டிலேயே படுத்து கிடந்தேன். பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளி சென்றபோது சக மாணவர்களிடம் ஏளன பேச்சுக்கு உள்ளானேன். ஊரிலேயே சிறப்பான பொங்கல் உனக்கு தானாமே என்பது துவங்கி இவர் பெரிய அனுமாரு என்பது வரை வகை வகையான கலாய்த்தல்கள்.
டியூஷன் சார், தன் பங்கிற்கு என்னடா இப்பவே டபுள் எம் ஏ வாங்கிட்ட என்றார். டியூஷன் மாணவர்கள் அதைப் பிடித்து கொண்டார்கள் டபுள் எம் ஏ என்பது என் பட்டப் பெயர் ஆயிற்று.
அதைவிட தெருக்காரர்கள் நடந்து கொண்ட விதம்தான் மனதை மிகவும் காயப்படுத்தியது. அத்தனையும் வீடுகளுக்குள்ளும் உரிமையாக நுழைந்து வந்தவன். யார் வீட்டிற்கு சாப்பாடு நேரத்திற்கு போனாலும் தட்டு வைப்பார்கள். இல்லை ஒரு விள்ளலாவது சாப்பிடுவேன். அத்தனை பேருக்கும் கடை, மருத்துவமனை போவதற்கு உதவியிருக்கிறேன். ஒரே நாளில் எல்லாமே முடிந்து போனது. ஏதோ வீட்டிற்குள் விட்டால் அவர்களின் பெண்ணிற்கும் இப்படி செய்து விடுவேன் என்று வாசலோடு நிப்பாட்டினார்கள்.
அடுத்தடுத்த திருமணங்கள் துக்க வீடுகளின் மூலம் எல்லா உறவினர்களுக்கும் இந்த விஷயம் பரவியது. எல்லோருமே கேவலமாகவே பேசினார்கள். தவிர்த்தார்கள். ஒரு முதிர்ச்சி இல்லாத பையனின் சிறிய தவறு யாராலும் மன்னிக்க முடியாத ஒரு தவறாக மாறி நின்றது.
உண்மையில் அது என மனதை முடக்கியது எனலாம். முன்பு போல படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. குரூப் ஸ்டடி என்று நண்பர்கள் வீட்டிற்கு செல்ல முடியவில்லை. வீடு, சுற்றம், உறவினர்கள் எல்லோரும் என்னை ஒதுக்கிய விதம் எதுக்கு படிச்சு என்ன பண்ணப் போகிறோம் என்கிற நிலைக்கு கொண்டு வந்தது.
சுபத்ராவின் திருமணம் நடந்தது. நெருங்கிய உறவினர் என்றாலும் கூட என்னை அழைக்கவில்லை.
காலங்கள் இன்னும் கடந்தது. குடும்பத்தாரிடம் கூட மிகவும் ஒதுங்கியே இருந்தேன். ஒரு நாள் என் தந்தை சொன்னார். என் சக வயது ஆட்களோடு ஒப்பிடுகையில் நான் மிகவும் பின்தங்கியிருந்தேன். பிழைக்கத் தெரியாதவன் என்ற சொல் என்னை துரத்திக் கொண்டே இருந்தது. நீயும் என்னை மாதிரியே பிழைக்கத் தெரியாதவன் என்று ஆகி விடுவாயோ?, என்ற ஆற்றாமை. அதனால் அப்படி நடந்து கொண்டேன் என்றார்.
சில வருடங்கள் கழித்து கணேஷ் ஒரு முறை என்னிடம் பேசினார். சாரிடா இப்படி எல்லாம் ஆகுணும்னு நான் நினைக்கல என்றார்.
சமீபத்தில், நெருங்கிய உறவினர் இறப்பிற்காக ஊருக்கு சென்றிருந்தபோது, சுபத்ராவின் தந்தை ஆறுதலாக பார்த்தார். மின் மயானத்தில் எங்கள் டர்னுக்கு காத்திருந்தபோது, எல்லோரும் அருகே டீ சாப்பிட போனார்கள். அவர் எனக்கு எடுத்துக் கொடுத்தார்.
தற்போது பள்ளி whatsapp குரூப் களில் தெரு நண்பர்கள் whatsapp குரூப் களில் எல்லாம் இணைத்திருக்கிறார்கள். யாரும் டபுள் எம் ஏ என்று சொல்வதில்லை.
எல்லோரும் தங்கள் பிள்ளைகளின் நினைத்தால் காதல், நினைத்தால் பிரேக்கப்புகளை பார்த்து நார்மலைஸ் ஆகி விட்டார்கள். குடும்பம் சுற்றம் எல்லோரிடமும் இன்றைக்கு அது ஒரு நகைச்சுவை சம்பவமாக மாறி இருக்கிறது.
ஆனால் நான் இழந்த வசந்தம், கவனம் செலுத்தா படிப்பு, அதனால் தள்ளிக் கொண்டே போன வேலை, இன்றும் ஓட வைத்துக் கொண்டே இருக்கும் வாழ்க்கை.. இதற்கெல்லாம் பதிலை யார் தருவார்கள்?
மீண்டும் கோகிலா
மீண்டும் கோகிலா திரைப்படம். திண்டுக்கல் சென்ட்ரல் தியேட்டரில் 44 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திரைப்படம். அந்த சமயத்தில் ஆட்டோக்கள் குறைவாகவே உபயோகப்படுத்தப்படும்.
சைக்கோ ரிக்ஷாக்களும் குதிரை வண்டிகளும் தான் அப்போது திண்டுக்கல்லில் பிரதான பொதுமக்கள் உள்ளூர் போக்குவரத்து. இதில் குதிரை வண்டியில் பயணம் செய்வது எனக்கு ஒத்துக் கொள்ளாது டொடக்கு டொடக்கு என்று ஆடிக்கொண்டே போகிறது. சாண வாடை அடிக்கிறது என்று சொல்லி அதில் ஏறவே மாட்டேன். ஒரு பேலன்ஸ் இல்லாதது போல இருக்கும். வாந்தி வருவது போலவே இருக்கும்.
அதனால் என்னை கூட்டிக்கொண்டு போகும்போது சைக்கிள் ரிக்சாவில் தான் கூட்டிக் கொண்டு போவார்கள். அப்படி போய் பார்த்த படம் இது.
மாலை காட்சிக்கு சென்ட்ரல் தியேட்டர் வாசலில் குதிரை வண்டிகளிலும் ரிக்ஷாவிலும் பேமிலி ஆடியன்ஸ் இறங்கி கொண்டு இருந்தார்கள். அந்த வயதில் படத்தின் பல காட்சிகள் புரியவில்லை. சண்டை இல்லையே என்பது என் குறையாக இருந்தது.
சென்ட்ரல் தியேட்டர் இடைவேளையில் கிடைக்கும் பருப்பு போலி தேங்காய் போலியும் சோடா கலரும் மட்டுமே அன்று take away ஆக இருந்தது.
பின்னர் கல்லூரியில் படிக்கும் போது, அரை நண்பன் வாங்கி வந்த கோல்டன் ஹிட்ஸ் ஆஃப் இளையராஜா 10 ரூபாய் டெல்லி கேசட்டில் இந்த பாடலை கேட்ட போது, அப்படியே மனம் கரைந்து போனது.
எப்படியும் மாதத்திற்கு ஒருமுறை கேட்டுவிடும் பாடல்.
ராகுல் ட்ராவிட்
எங்கள் தெருவில் செந்தில் என்று ஒரு அண்ணன் இருந்தார். அந்த சமயத்தில் எல்லா தெருக்களிலும் செந்தில்கள் இருந்தார்கள்.
இவர் படிப்பு செந்தில் என்று எங்களால் அழைக்கப்பட்டவர். காலையில் சேவலையே எழுப்பி இவர்தான் கூவ வைப்பார் என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு விரைவாக எழுந்து படிப்பார். பத்தாம் வகுப்பில் ஒரு படத்திற்கும் அவர் சென்று பார்த்ததில்லை. தெரு கிரிக்கெட் விளையாட வந்தது இல்லை.
தேர்வு முடிவுகள் வந்தபோது, ஒரு மார்க்கில் பள்ளி முதல் மார்க் எடுக்கும் வாய்ப்பை இழந்திருந்தார். அதனால் எல்லோருடைய வாழ்த்துக்களும் இவரை அனாதையாக விட்டுவிட்டு முதல் மார்க் எடுத்தவரிடம் சென்று விட்டன. இவர்களது உறவு வட்டாரத்திலும் வேறொரு ஊரில் படித்த இன்னொரு பையன் இவரை விட இரண்டு மார்க் அதிகம் எடுத்து விட்டதால், அங்கும் இவரை யாரும் கண்டு கொள்ளவில்லை.
1987ல் 470 மார்க் பத்தாம் வகுப்பில் எடுப்பதெல்லாம் பெரிய சாதனை. ஆனால் அவர் தவறவிட்ட ஒன்று இரண்டு மார்க்குகளால் அவருக்கு எந்த புகழும் கிடைக்கவில்லை.அதோடு அவர் வெறிகொண்டு படிப்பதை நிறுத்திவிட்டார்.
சமீபத்தில் மறைந்த எம்டி வாசுதேவன் நாயரின் மிகப் புகழ்பெற்ற நாவல் இரண்டாம் இடம். மகாபாரதத்தை பீமனின் பார்வையில் இருந்து பார்த்தது. காலம் முழுவதும் அந்த இரண்டாம் இடம் பீமனை வருத்திக் கொண்டே இருக்கும். மதிப்பு,ஆட்சி என்று பார்த்தால் தர்மர். பலம் என்று பார்த்தால் அர்ஜுனன் அவரை விஞ்சி நிற்பார்கள்.
நவீன காலத்திலும் அது மாதிரியான கேரக்டர்களை நாம் வாழ்வில் கண்டு கொண்டே தான் இருக்கிறோம். அப்படி நவீன பீமன் என்று அழைக்கப்பட வேண்டியவர் ராகுல் டிராவிட்.
96 - இங்கிலாந்தில் இரண்டாவது டெஸ்டில் கங்குலியும் டிராவிட்டும் இறங்குகிறார்கள். கங்குலி சதம் அடிக்கிறார். டிராவிட் 96 ரன்கள். ஆனால் கங்குலிக்கும் வாட்டர்ஷிப் கொடுத்து கீழ் உள்ள பேட்ஸ்மேன்களுடனும் ஆடி இந்திய அணிக்கு லீடு பெற்று தருகிறார். ஆனால் எல்லாப் புகழும் கங்குலிக்கே கிடைத்தது.
2001 கல்கத்தா ஈடன் கார்டனில் பாலோ ஆன் வாங்கி இந்திய அணி ஆடுகிறது. லட்சுமணனும் டிராவிட்டும் இணைந்து மிகப்பெரிய ஸ்கோர் எடுத்து அந்த மேட்சில் இந்தியாவை வெற்றி பெற வைக்கிறார்கள். அதிலும் லட்சுமணனுக்கே பெயர்.
2006 - பாகிஸ்தானில் அவர்களுக்கு எதிரான டெஸ்ட். அவர்கள் 679 ரன்கள் குறிக்கிறார்கள். வலுவான பந்துவீச்சு. சேவாக்கும் டிராவிட்டும் ஓப்பனிங் இறங்கி 410 ரன்கள் குவிக்கிறார்கள். அதிலும் சேவாக்கிற்கே பெயர்.
எத்தனை ஆட்டங்கள். பலமுறை அணியை காப்பாற்றி, பலமுறை வெற்றிக்கு அழைத்துச் சென்று, அத்தனை ஆட்டங்களிலும் வேறு யாருக்காவது பெயர் சென்று கொண்டிருப்பதே டிராவிட்டின் சிறப்பு. நல்ல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இல்லாத நேரத்தில் டீம் பேலன்ஸிற்காக விக்கெட் கீப்பிங்கும் செய்தார்.
அபாரமான பேட்டிங் டெக்னிக், persistent என்றாலே நினைவுக்கு வரும் பெயர். அதிவேக பந்துவீச்சாக இருந்தாலும் சரி, SENA Swing ஆக இருந்தாலும் சரி, ஆசிய துணைக்கண்ட குழி விழுந்த பிட்ச்களில் பின் ஆக இருந்தாலும் சரி. டிராவிட்டின் ஒப்பற்ற டெக்னிக் அதை எளிதாக எதிர்கொள்ளும்.
அதைவிட மிகவும் பிரஷரான சிச்சுவேஷன்களிலும், அதை மனதில் எடுத்துக் கொள்ளாமல் தன் வழக்கமான ஆட்டத்தை ஆடுவார். அதுதான் பலமுறை இந்தியாவை தோல்வியிலிருந்து காப்பாற்றி இருக்கிறது.
ஒரு நாள் முழுவதும் ஆடினால் தான் இந்த மேட்சை காப்பாற்ற முடியும் என்றால், முழு நாளுக்கும் நான் பிளான் செய்வதில்லை. இந்த செசன் மட்டும் எப்படியாவது ஆடிவிட்டால் போதும் என்று நினைப்பேன். ட்ரிங்ஸ் பிரேக்கில் அடுத்த செசன் ஆடினால் போதும் என நினைப்பேன். என் இலக்குகளை சிறியதாக பிரித்துக் கொண்டு ஒவ்வொன்றாக வெற்றி கண்டு வருவேன் என்று ஒரு முறை சொல்லி இருப்பார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கேள்வி விளையாட்டாக அலுவலக விழாவில் கேட்கப்பட்டது. இந்த விக்கெட் விழுந்துவிட்டால் உங்கள் வாழ்க்கை முடிந்துவிடும். அப்படி என்றால் எந்த இரு பேட்ஸ்மான்கள் உங்களுக்காக களத்தில் விளையாட வேண்டும் என்று. நான் சொன்னது ராகுல் டிராவிட் & ஸ்டீவ் வாவ்.
ஏனென்றால் அந்த அளவிற்கு தங்களுடைய விக்கெட்டை மதித்தவர்கள் இருவரும்.
ராகுல் டிராவிட்டிடம் இருந்து நாம் எடுத்துக் கொள்ள வேண்டியது,
நம் தொழிலுக்கு தேவைப்படும் டெக்னிக்கை வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்த சூழ்நிலையிலும் மனம் தளர்ந்து விடக்கூடாது. போராடும் களத்தில் இருந்து நாமாக வெளியே சென்று விடக்கூடாது. எவ்வளவு பெரிய இலக்காக இருந்தாலும் அதை பிரித்து அதை நோக்கி போராட வேண்டும். முக்கியமாக நமக்கு உலகில் எந்த இடம் கிடைத்தாலும் அதைக் கண்டு மனம் விட்டுவிடக்கூடாது.
ஜாகிர் கான்
சிறு வயதில் முதன்முதலாக கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்த காலத்தில், கேள்விப்படும் வேகப்பந்து வீச்சாளர்களின் பெயர்கள் எல்லாம் மனதில் ஒரு கிலியை ஏற்படுத்தும். தெருவில் இருந்த விக்டரி கிரிக்கெட் கிளப் அணி வீரர்கள் எப்பொழுதும் மற்ற நாட்டு வேகப் பந்துவீச்சாளர்களைப் பற்றித்தான் பேசிக் கொண்டே இருப்பார்கள்.
அவர்கள் பேச்சில் அடிக்கடி இடம்பெறும் பெயர்கள் மார்ஷல், கார்னர், லில்லி, தாம்சன், இம்ரான் கான், ஹாட்லி, போத்தம். நம்ம நாட்டுல அப்படி யாரும் இல்லையா என அவர்களிடம் கேட்கும் போது, கபில் ஒருத்தர் தான் நல்லா போடுவார். இப்ப சேட்டன் சர்மா என்று ஒருத்தர் வேகமாகப் போடுகிறார். ஆனா இவங்க அளவுக்கு எல்லாம் சேட்டன் சர்மா இல்லை என்று பதில் அளித்தார்கள்.
சில டெஸ்ட் மேட்சுகளில், கபில்தேவ் முதல் ஓவர் போடுவார், இரண்டாம் ஓவர் மொஹிந்தர் அமர்நாத் வந்து போடுவார். மிலிட்டரி மீடியம் என்று சொல்வார்கள் மிக மெதுவாக ஓடிவந்து கிரீசை அடைந்ததும் நின்று கொண்டு வந்து வீசுவார். இன்னொரு பவுலர் இருந்தார் மதன்லால். விவியன் ரிச்சர்ட்ஸ் ஒருமுறை, இவர் ஏன் இவ்வளவு தூரம் ஓடி வந்து ஆப் ஸ்பின் போடுகிறார் என்று மதன்லாலை கிண்டல் செய்ததாக கூறுவார்கள்.
அந்த சமயத்தில் கபில்தேவும் தன்னுடைய வேகம் எல்லாம் குறைந்து ஒரு மீடியம் ஃபேஸ் பௌலராக தான் இருந்தார். அவராலும் பாட்ஸ்மென்கள் தவறு செய்தால் தான் விக்கெட் எடுக்க முடிந்ததே தவிர, விளையாடவே முடியாத பந்துகளை வீசி பேட்ஸ்மென்களை திணறடித்து, விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை. ஸ்பின்னர்கள் வரும்போது தான் விக்கெட் கிடைக்கும். அதுவும் எதிரணி பேட்ஸ்மென்கள் அடித்து ஆடினால் தான். தங்களுடைய மெரிட்டில் விக்கெட்டுகளை எடுக்கும் இந்திய பந்துவீச்சாளர்கள் அப்போது மிகக் குறைவாகத்தான் இருந்தார்கள்.
ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர்களை அடித்து மற்ற நாட்டு வீரர்கள் ஆட்டம் இழப்பார்கள்.டெஸ்ட் மேட்ச் ஆக இருந்தால், பெரும்பாலும் டிராவில் தான் முடியும். ஸ்பின்னர்களுக்கு சாதகமான பிட்ச்சுகளில் மட்டுமே நாம் விக்கெட் எடுக்கும் நிலை இருந்தது.இது ஒரு கிரிக்கெட் ரசிகனாக, என்னடா இது மற்ற நாட்டு வேகப் பந்துவீச்சாளர்கள் போல் நம் நாட்டில் இல்லையே என்று சலித்துக் கொள்ள வைத்தது.
முதல் முதலாகப் பார்த்த ஒரு நாள் போட்டிகள் சாம்பியன்ஷிப் என்றால் அது, 1986-87ல் சார்ஜாவில் நடந்த போட்டி தான். அதில் மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான், இந்தியா, இலங்கை ஆகிய நாடுகள் விளையாடின. அந்தப் போட்டியில் தான் வால்ஷ் மற்றும் வாசிம் அக்ரம் என்கிற பெயர்கள் அறிமுகமானது. மேற்கிந்திய தீவு அணி வீரர்களும் பாகிஸ்தான் வீரர்களும் பந்து வீச வந்தாலே எங்கே விக்கெட் போய் விடுமோ என்று நகத்தை கடித்தபடியே பார்க்க வேண்டி இருந்தது. ஆனால் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் வீசும் போது எவ்வளவு ரன் போகுமோ என்று பதட்டத்துடனே பார்க்க வேண்டி இருந்தது.
அப்பொழுது என்னுடைய ஆசை எல்லாம், இந்தியாவிலும் மற்ற பேட்ஸ்மேன்கள் விளையாடும் போது பயம் கொள்ளும் அளவிற்கு ஒருவர் பந்து வீச வேண்டும் என்பதுதான். வாசிம் அக்ரம் எல்லாம் நம் டீமில் இருந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் அப்போதைய அதிகபட்ச கிரிக்கெட் கற்பனையாக இருந்தது.
1990 இந்திய அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது, மனோஜ் பிரபாகர் நன்றாக பந்து வீசினார் என்றார்கள். இம்ரான்கான், அவர் பந்தை சரியான பவுலிங் ஆக்ஷனில் வீசவில்லை என்றார். மனோஜ் பிரபாகரின் பந்து வீச்சும் பயம் கொள்ள வைக்கும் படி இருக்காது.
91-92 இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது ஜவஹல் ஸ்ரீநாத் வந்தார். அவர் கொஞ்சம் நம்பிக்கை அளித்தார்.கபில்தேவும் அந்த தொடரில் ஓரளவு நன்றாக பந்து வீசினார். ஆனாலும் இந்த கூட்டணி யாரையும் மிரட்டும்படி இல்லை.
நம்மிடம் இல்லாத ஒன்று மற்றவர்களிடம் இருக்கும்போது அதன் மீது நமக்கு வரும் ஆசை மற்றும் மதிப்பானது அதிகம். அப்படித்தான் நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்த காலத்தில் இருந்து ஒரு வலுவான இடதுகை வேகப்பந்துவீச்சாளர் நமது இந்திய அணியில் இல்லாமல் இருந்தது. அதற்கு முன்னர் காலின் கௌட்ரி என்பவர் இடதுகை வேகப்பந்து வீசியதாகச் சொல்வார்கள். அதனால் வாசிம் அக்ரம் மீது அவ்வளவு ஆர்வம் இருக்கும்.
இந்த சூழ்நிலையில், 2000 ஆவது ஆண்டு. வராது வந்த மாமணி போல இந்திய அணிக்கு வந்தார் தான் ஜாகிர் கான். ஒரு ரிதமான ரன்னப். பந்து வீசும் இடத்திற்கு வந்ததும் ஒரு அலட்டல் இல்லாத ஜம்ப். கால் லேண்ட் ஆகும்போது ஒரு அட்டகாசமான ரிலீஸ் என உடனடியாக கவர்ந்தார் ஜாகிர் கான். பந்து வீச வந்த காலத்தில் நல்ல வேகம் கொண்டிருந்தார். தேவையான அளவு ஸ்விங். அவ்வப்போது யார்க்கர்கள். என ஒரு பக்கா பேக்கேஜாக வந்தார். ஆஹா நமக்கும் ஒரு அக்ரம் கிடைத்து விட்டார் என்ற மகிழ்ச்சி வந்தது. அவர் பந்து வீசும் போது நிறைய பேட்ஸ்மேன்கள் பயந்தார்கள்.
2003 ஒரு நாள் உலகக் கோப்பை போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடந்தன. தன் கேரியரின் கடைசி கட்டத்தில் இருந்த ஶ்ரீநாத் மற்றும் இன்னொரு இடதுகைப் பந்து வீச்சாளர் ஆஷிஷ் நேரா ஆகியோருடன் ஜாகிர் கான் இணைந்து ஒரு அருமையான வேகப்பந்து கூட்டணியை அந்த தொடரில் அமைத்தார். அப்போதைய ஆஸ்திரேலியா அணி மிகவும் பலம் வாய்ந்தது. வார்னே அவர்கள் ஊக்க மருந்து பிரச்சினையால் வெளியேறிய போதும் ,அது ஒரு பொருட்டே இல்லை என்று அசால்டாக எல்லோரையும் திணறடித்தது அந்த அணி. அந்த ஒரு அணியிடம் மட்டும் தான் தோற்றோம் மற்ற எல்லா போட்டிகளிலும் நமது கைதான் ஓங்கி இருந்தது அதற்கு முக்கிய காரணம் ஜாகிர் கான் தலைமையில் ஆன அந்த வேகப்பந்து கூட்டணி.
2011 உலகக் கோப்பை போட்டியிலும் நாம் 28 ஆண்டுகள் கழித்து அந்த கோப்பையை வெல்ல ஒரு மிக முக்கிய காரணமாக இருந்தவர் ஜாகிர் தான். முக்கியமான விக்கெட்டுகளை எல்லாம் தேவைப்படும் நேரத்தில் எடுத்துக் கொடுத்தார்.
ஜாகிர்கானின் இன்னொரு சிறப்பு, அவர் இடது கை பேட்ஸ்மென்களை அவுட் ஆக்குவதில் கை தேர்ந்தவர். மேத்யூ ஹைடன், சங்காகரா, ஜெயசூர்யா, தென்னாப்பிரிக்க அணி முன்னாள் கேப்டன் க்ரீம் ஸ்மித் ஆகியோரை பத்து முறைக்கு மேல் ஆட்டம் இழக்கச் செய்தவர். இந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மென்களை வீழ்த்தும் போது, நமக்கு ஆட்டத்தில் அட்வாண்டேஜ் கிடைக்கும். ரிவர்ஸ் ஸ்வின் போடுவதிலும் விற்பன்னராக இருந்தார் ஜாகிர்கான். பந்து தேய்ந்த உடன், ஒரு டெஸ்ட் மேட்சில் ரிவர்ஸ் ஸ்விங் முறையில் இன்சமாம் உல் ஹக்கின் விக்கெட்டை அவர் எடுத்த காட்சி இன்னும் ஞாபகம் இருக்கிறது. ஜாகிர்கான் தன் கேரியரில், இன்னும் சிறப்பாக சாதித்து இருக்க முடியும். ஆனால் அவர் அடிக்கடி காயம் அடைந்து, பிரேக் எடுத்தார்.
2007 ஆம் ஆண்டு நடைபெற்ற, முதல் 20-20 உலகக் கோப்பையில் அவர் பங்கு பெறவில்லை. ஆனாலும் 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு ஆட்கள் ஏலம் போன போது ஜாகிர் கானுக்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த ஏலத்தில் பெரிய வெளிநாட்டு வீரர்கள், ஹிட்டர்கள் என்று தான் பலரும் கவனம் செலுத்தினார்கள். பந்து வீச்சாளர்களைப் பற்றியே யாரும் பெரிய கவனம் செலுத்தவில்லை.ஆனாலும் ஜாகிர் கானுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதன் பின்னர் மும்பை அணிக்கு விளையாடிய போது, அந்த அணிக்கு மிகப்பெரும் பலமாக இருந்தார்.
ஜாகிர்கான் இந்திய கிரிக்கெட்டில் கொண்டு வந்த மாற்றம் என்னவென்றால்,
இந்தியாவில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் நட்சத்திர அந்தஸ்து கிடைக்கும், ஸ்டார் பேட்ஸ்மென்கள் அளவிற்கு இல்லாவிட்டாலும் நிச்சயம் மக்கள் கொண்டாடுவார்கள் என்ற எண்ணத்தை இளைஞர்கள் மத்தியில் விதைத்தது தான். இதனைத் தொடர்ந்து, இரண்டாம் நிலை நகரங்களில் இருந்து, நிறைய வேகப்பந்து வீச்சாளர்கள் வரத் துவங்கினார்கள். ஐ பி எல் அணிகளில் அவர்களுக்கு கிடைத்த பொருளாதார ரீதியான ஊக்கமும் அதைத் தொடரச் செய்தது.
அதன் பின்னர் கடந்த 10 - 15 ஆண்டுகளில் தொடர்ச்சியாக நமது அணிக்கு பும்ரா, சிராஜ் ஷமி என வேகப்பந்துவீச்சாளர்கள் சிறிய நகரங்களில் இருந்து வந்து கலக்கி கொண்டு இருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவிற்கு அவர்கள் நாட்டிலேயே சவால் விடும் அளவிற்கு வேகப்பந்து வீசுகிறார்கள். இந்த மாற்றத்தில் ஜாகிர் கானுக்கும் ஒரு பங்கு உண்டு எனச் சொல்லலாம்..
உத்தம வில்லன்
அங்கீகாரம். இந்த ஒற்றைச் சொல் தான் உலகத்தில் உள்ளோர் ஓரிடத்தில் தேங்கி நின்று
விடாமல் செயல்பட்டுக் கொண்டே இருக்கச் செய்யும் விசை. மனிதர்களின் ஒவ்வொரு
பருவத்திலும் அவர்கள் தேடுவது வேறாக இருக்கும். படிக்கும் பருவத்தில் முதல் மார்க்,
விளையாட்டுப் போட்டியில் வெற்றி, நண்பர்களிடத்தில் முக்கியத்துவம் என விருப்பம்
இருக்கும். பதின்பருவத்தில் எதிர்பாலினத்தவர்களின் ஏகோபித்த தேர்வாக இருக்க
வேண்டுமென ஆசையிருக்கும். வேலைக்கு சேர்ந்த பின் அங்கே தவிர்க்க இயலா ஆளாக
இருக்க வேண்டுமென்ற ஆர்வம் இருக்கும். ஓய்வு பெற்ற பின்னர் உறவினர், ஊர்
வட்டாரங்களில் நம்மை யாரும் மறந்து விடக்கூடாது என்ற துடிப்பு இருக்கும். கோவில்
விழாக்கள், திருமண விசேஷங்களுக்கு ஆர்வத்துடன் செல்லுதல், வாட்ஸ் அப் குரூப்பில்
எல்லோருக்கும் செய்திகளை அனுப்புதல் என ஆளுக்குத் தகுந்தபடி மாறும். இது
எல்லாவற்றிற்கும் ஆதாரம் மனிதனின் அங்கீகாரம் தேடும் மனது. தன் அந்திமக்
காலங்களில் மனிதன், தன்னை யாரும் மறந்து விடக்கூடாது என பிரயத்தனப்படுவான்.
ஏனென்றால் அதுதான் அவன் வாழ்ந்தற்கான அங்கீகாரம். சுஜாதா சொன்னது போல
“மரணத்தை விட கொடுமையானது மறக்கப்படுவது”.
கலைஞர்கள் இந்த அங்கீகாரம் தேடுவதில் இன்னும் ஒரு படி மேல். கை தட்டுக்களை
சுவாசமாக கொண்டு வளர்ந்தவர்கள் அவர்கள். கை தட்டு நிற்கும் நாள் அவர்களைப்
பொருத்த வரையில் அவர்களது கடைசி நாள். மக்கள் தன்னை மறந்து விடக்கூடாது
என்பது தான் அவர்களது ஒரே நோக்கமாக இருக்கும். தங்கள் வாழ்நாள் முடிவதற்குள்
என்ன முடியுமோ அதைச் செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பெற வேண்டுமென
நினைப்பார்கள். என்றென்றும் மக்கள் மனதில் இடம் பிடித்திருப்பது தானே உச்சபட்ச
அங்கீகாரம்?. கிட்டத்தட்ட சாகாவரம்.
ஒரு கலைஞன், வாழ்க்கையில் சில தவறுகள் செய்தவன், திடீரென தனக்கு கேன்சர்
இருப்பதையும், ஆயுள் சில மாதங்கள் தான் என்பதையும் அறிகிறான். மீதமிருக்கும்
நாட்களுக்குள் மக்கள் தன்னை மறக்காமல் இருக்க இன்னுமோர் கலைப்படைப்பை
கொடுத்து விட்டுச் செல்ல வேண்டுமென நினைக்கிறான். அவனது கடைசி மாதங்களை,
அவன் ஏக்கங்களை, அவன் தன் தவறுகளைத் திருத்துவதை நமக்கு காட்சிப் படுத்தியதே
உத்தம வில்லன் திரைப்படம்.
கமல்ஹாசன், மனோ ரஞ்சன் என்னும் நடிகராக இந்தப் படத்தில் வாழ்ந்திருந்தார். அவரது
இளமைப்பருவத்தில் ஒரு காதலி, ஆனால் நிர்ப்பந்தங்களுக்காக தன்னை வைத்து
தொடர்ச்சியாக படம் தயாரித்தவரின் மகளை மணம் செய்து கொள்கிறார். தனக்கு
ஆரம்பத்தில் வழிகாட்டியாக இருந்த இயக்குநரிடமும் தன் மாமனாரால் பிணக்கு
கொள்கிறார். அவரது தற்போதைய பெண் மருத்துவரிடமும் அவருக்கு காதல். இந்த
சூழலில் தான் தன் முன்னாள் காதலி இறந்து விட்டதும், அவளுக்கு தன் மூலம் ஒரு பெண்
இருப்பதும் தெரிய வருகிறது. மனோரஞ்சனுக்கு அதற்கடுத்த இடியாக, தனக்கு கேன்சர்
என்பதும் இன்னும் சில மாதங்களில் இறக்கப்போகிறோம் எனவும் தெரிய வருகிறது.
எல்லாவற்றையும் சரி செய்து கொண்டே, தன் கடைசிப்படத்தையும் முடிக்கிறான்.
குழந்தைகளுக்கான படம், இளைஞர்களுக்கான படம், குடும்பத்தோடு பார்க்கும் படம்
என்பதைப்போல இது நாற்பது வயது ஆண்களுக்கான படம். நாற்பதுக்கு மேல் வயதான
ஆண்கள் இந்தப்படத்துடன் தங்களை எளிதில் தொடர்புபடுத்திக் கொள்வார்கள்.
அவர்கள் வாழ்வில் நடந்த ஏதாவது ஒரு சம்பவம் இந்தப்படத்தில் இருக்கும். அது இள
வயது நிறைவேறாத காதலாக இருக்கலாம், நிர்ப்பந்தத்தால் தொடரும் மண
வாழ்க்கையாக இருக்கலாம், வேலை அழுத்தத்தால் மகன் என்ன படிக்கிறான் எப்படி
படிக்கிறான் என்று அறியாத நிலையாகவும் இருக்கலாம், நடுத்தர வயதில் இன்னொரு
பெண்னால் ஈர்க்கப்பட்டதாகவும் இருக்கலாம், வாழ்வு முடிவதற்குள் குறைந்த பட்ச
கடமைகளையாவது முடிக்க வேண்டுமென்ற எண்ணமாக இருக்கலாம். தங்கள் வாழ்வை
மனோரஞ்சனோடு ஒப்பிட்டு ஒரு சுய பரிசோதனை செய்து கொள்ளும் அளவுக்கு தேர்ந்த
பாத்திரப்படைப்பு கொண்டது உத்தம வில்லன்.
உத்தம வில்லன் திரைப்படத்தின் ஆரம்பகாட்சியிலேயே எல்லோரும் இயல்பாக அவரவர்
குணாதியங்களுடன் அறிமுகமாவார்கள். இவர் இன்னார், இவர் இவருக்கு இப்படி உறவு
என்றாலும் வாய்ஸ் ஓவர் இருக்காது. கமல்ஹாசனின் பெரும்பாலான படங்களில் வாய்ஸ்
ஓவர் இருக்காது. சினிமா என்பது காட்சி ஊடகம். காட்சி மூலமே எல்லாவற்றையும்
பார்வையாளனுக்கு கடத்த வேண்டும் என்பது கமல்ஹாசனின் நிலைப்பாடு. விஸ்வரூபம்
படத்தின் ஆரம்ப காட்சியில் இருவரின் உரையாடலிலேயே ஆரம்பக் கதை சொல்லப்படு
விடும். உத்தம வில்லனில், மனோரஞ்சன் நடித்த ஒரு படத்தின் ப்ரீமியர் ஷோ ஒரு மாலில்
உள்ள திரையரங்கில் நடக்கும். அதைக் கொண்டே எல்லா முக்கிய கேரக்டர்களும்
அறிமுகமாவார்கள்.
என்ன, இன்னும் இப்படிப்பட்ட மசாலாப் படங்களில் நடிக்கிறாரே தந்தை என
விசனப்படும் மகன் கேரக்டர் கூட அதன் போக்கில் அறிமுகமாகும்.
கமல்ஹாசன் திரைப்படங்களில் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம், புதிதான காட்சிகள்.
மற்ற திரைப்படங்களில் எண்பது, தொண்ணூறு காட்சிகள் இருக்கிறதென்றால் அவற்றில்
வழக்கமான ஹீரோ, ஹீரோயின் அறிமுக காட்சி, நகைச்சுவைக் காட்சி, பாடல் காட்சி,
சண்டைக் காட்சி தவிர கதைக்குத் தேவையான சம்பவங்கள் என ஏழெட்டுக் காட்சிகள்
தான் புதிதாக மற்ற திரைப்படங்களில் வராத காட்சிகளாக இருக்கும். கமல்ஹாசன்
திரைப்படங்களில் கதைக்குத் தேவையான சம்பவ காட்சிகள் மற்ற படங்களை விட சற்று
அதிகமாகவே இருக்கும். அந்தக்காட்சிகள் தான் கமல்ஹாசன் படங்களை ஞாபகத்தில்
வைத்திருக்க உதவுகின்றன. உத்தம வில்லனில் அதுபோல ஏராள காட்சிகள் இருந்தாலும்,
ஆறு காட்சிகள் என்றும் இந்தத் திரைப்படத்தை ஞாபகத்தில் வைத்திருக்கச் செய்பவை.
முன்னாள் காதலியின் கணவர், உங்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள் எனச் சொல்லி
அவளது புகைப்படங்களைக் காட்டுவது. தனக்கு கேன்சர் எனத் தெரிந்ததும் தனக்கு
வழிகாட்டியாக இருந்த இயக்குநரை பார்க்கச் செல்வது, தன் வீட்டாரிடம் தன் நோயைப்
பற்றிச் சொல்ல போகும் போது அவருக்கும் அவரது மகனுக்கும் நடக்கும் உரையாடல்,
தன் உதவியாளர், தன் காதலியிடம் தான் கொடுத்த கடிதத்தை கொடுக்காததும்,
காதலியிடம் இருந்து வந்த கடிதத்தை மறைத்தும் தெரிய வந்து, அந்த கடிதத்தை
அவரையே படிக்கச் சொல்லும் காட்சி, தன் முன்னாள் காதலிக்குப் பிறந்த மகளை
சந்திக்கும் காட்சி, தற்போதைய காதலியான மருத்துவருடன் காரில் பேசிக் கொண்டே
வரும் காட்சி.
மனோரஞ்சன் தன் இயக்குநருடன் சேர்ந்து கடைசியாக நடிக்கும் படத்தின் பெயராக
உத்தம வில்லன் இருக்கும். அந்தப்படம் ராஜா ராணி கால படம். அதில் தெய்யம்
கலைஞராக கமல் வேடமேற்றிருப்பார். தொடர்ச்சியாக நாட்டுப்புற கலைகளையும், மற்ற
கலை வடிவங்களையும் தமிழ்சினிமாவில் காட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது
கமல்ஹாசனின் ஆசைகளில் ஒன்று. அன்பே சிவத்தில் தெருக்கூத்து, விஸ்வரூபத்தில்
கதக் என பல உதாரணங்கள் சொல்லலாம். உத்தம வில்லனில் வில்லுப் பாட்டையும்,
தெய்யத்தையும் பயன்படுத்தியிருப்பார். எடுக்கப்படும் காட்சிகளின் இடைவேளையில்
தன் செயலாளருடன் சந்திப்பு, மகளுடன் சந்திப்பு போன்ற நுணுக்கமான காட்சிகள்
வரும்.
மனோரஞ்சன் தான் அறிமுகமாகும் காட்சியில் நல்ல அழகுடன், தேஜஸாக இருந்து
கடைசியில் முடி இழந்து உடல் வலுவிழந்து இறந்து போவான். ஆனால் தான் நடிக்கும்
படத்தில், அறிமுக காட்சியில் தாடி மீசை, மோசமான சிகை அலங்காரத்தில் தோன்றி,
படம் முடியும் தருவாயில் அழகாக தேஜஸாக மன்னர் வேடத்தில் தோன்றுவான். உடல்
அழியக்கூடியது புகழ் அழியக்கூடியதல்ல சாகாவரம் கொண்டது என படம் முடியும்.
படத்தின் இயக்கம் ரமேஷ் அரவிந்த், இசை ஜிப்ரான். சில பாடல்களை கமல்ஹாசன்
எழுதியிருந்தார். அதில் முக்கியமான பாடல் சாகாவரம் போல் சோகம் உண்டோ கேளாய்
மன்னா என்ற பாடல். சாகாவரம் போல் கொடுமையானது ஒன்றில்லை. நாம் உடல்
ஆரோக்கியத்துடன் இருந்தால் கூட நம்மைச் சுற்றியுள்ளவர்களின் இழப்பு, நம்மை
வேதனைப்படுத்த துவங்கி விடும். எல்லோரும் அந்த வரம் பெற்றுவிட்டாலும் அதற்கு
சிறப்பு ஏதும் இல்லை. உடலால் சாகாவரம் பெறாமல் புகழால் பெறு என்பதே உத்தம
வில்லனின் சாராம்சம்.
படத்தின் ஆரம்ப காட்சி முடிந்ததும், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கு பெறுவார்
மனோரஞ்சன். கை தட்டுகள் முடிந்ததும், நிகழ்ச்சியை நடத்திச் செல்பவர் உங்கள்
வாழ்க்கையில் சிறப்பான சம்பவம் எது எனக் கேட்பார். உடனே மனோ ரஞ்சன் இந்தக்
கை தட்டு தான். அடுத்து எப்போது கிடைக்கும் எனத் தெரியாது, கிடைக்காமலும் கூடப்
போகலாம் என்பார். அது பெரும்பாலான கலைஞர்களுக்கு நடந்திருக்கிறது. உச்சத்தில்
இருந்தவர்கள் பேச்சுத்துணைக்கு ஏங்கிய எடுத்துக்காட்டுகள் தனிழ் சினிமாவில் ஏராளம்
உண்டு. அது ஐந்து வயது முதல் கைதட்டு வாங்கி வரும் கமல்ஹாசனுக்கு நன்கு தெரியும்.
குழந்தைப்பருவம் முடிந்து வாலிபனாக மாறும் வயது வரை கைதட்டல்கள் இல்லாமல்
ஏங்கிக் கிடந்த காலம் இன்னும் அவர் ஞாபகத்தில் இருந்து கொண்டே தான் இருக்கிறது.
அந்தக் காலத்திலும் கை தட்டல் வாங்க நாட்டிய நிகழ்ச்சி நடத்துதல் போன்றவற்றில்
ஈடுபட்டுக் கொண்டேயிருந்தார். பின் சிறிய வேடங்களில் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து
கை தட்டல் நிற்கா கலையுலகப் பயணம் அவருடையது. தற்போதைய கை தட்டலும்
வேண்டும், தன்னை பிற்காலத்திலும் மக்கள் மறந்து விடக்கூடாது என்பதால் தான்
காலத்தை மீறிய முயற்சிகளையும் அவர் தொடர்ந்து எடுத்துக் கொண்டேயிருந்தார். அதில்
ஒன்று தான் உத்தமவில்லன். காலத்தைக் கடந்து அவர் பெயரை சொல்லிக்
கொண்டிருக்கும்.
1983 உலக கோப்பை இறுதி போட்டி
சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு அரை வேலை நாள் இருந்த காலம் அது. மதியத்துடன் பள்ளிகள் முடியும் அந்த சனிக்கிழமைகளை ஆவலுடன் எதிர்பார்த்திருப்போம். ஏனென்றால் மாலை வரை மைதானத்தில் விளையாண்டு கொண்டேயிருக்கலாம். அப்போது கிரிக்கெட் எல்லாம் எங்கள் ஊரில் பிரபலமாகாத காலம். பள்ளி விளையாட்டு ஆசிரியரின் அறையில் ஹாக்கி மட்டைகளும், பேஸ்பால் மட்டைகளும், வாலிபால்,பேஸ்கட் பால், கால்பந்துகளுமே பெரும்பான்மையாக இருக்கும். உள்ளூரில் ஒரே ஒரு தெருவைச் சார்ந்த கிரிக்கெட் அணி மட்டுமே இருந்தது. அவர்கள் மாவட்ட அளவிலான லீக் கிரிக்கெட்டில் பங்கு பெறும் அணியாகவும் இருந்தார்கள். அவர்களுக்கு என மைதானம் இல்லாததால் எங்கள் பள்ளி மைதானத்தில் தான் விளையாடுவார்கள். எப்போது பள்ளி முடியும் என காத்திருந்து உள்ளே வருவார்கள். சனிக்கிழமை பள்ளி அரை நாள் என்பதால் அவர்களும் மதியமே வந்து விடுவார்கள்.
அன்று நாங்கள் எங்களுக்கு கிடைத்த கால்பந்தை எடுத்துக் கொண்டு மைதானத்துக்கு வந்த போது ஒரு அதிர்ச்சி. சனிக்கிழமை தவறாது ஆட வந்து எங்களுக்கு இடப்பற்றாக்குறையை அளிக்கும் கிரிக்கெட் அணியினரைக் காணோம். ஆச்சரியத்துடன் கேட்ட போது, தெரியாதா? இன்று இந்தியா உலக கோப்பை பைனல் ஆடுகிறது. அதுதான் கமெண்டரி கேட்கவேண்டுமென்று யாரும் வரவில்லை என்றார்கள். ஆம். அன்றுதான் ஜூன் 25, 1983. இந்தியா தன் கிரிக்கெட் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத நாளாக அது மாறும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.
ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்தியா அணி சென்றால் எவ்வளவு அசுவராசியமாக இருப்போமோ, அதே அளவு அசுவராசியத்துடன் தான் அன்று இந்தியா இந்த மேட்சுகளை கவனித்துக் கொண்டிருந்தது. இந்தியா வெற்றி பெறும் என்றெல்லாம் யாரும் நினைக்கவில்லை. அப்போது பொதுவாக கிரிக்கெட் என்பதே ஒரு மேல்தட்டு மற்றும் உயர் நடுத்தரவர்க்கத்தினரின் ஆட்டமாகத்தான் கருதப்பட்டு வந்தது. இப்போது போல மேட்சுகளை தொலைக்காட்சியில் பார்ப்பதற்ககு வாய்ப்பேயில்லை. ஊரில் நான்கைந்து வீடுகளில் மட்டுமே கறுப்பு வெள்ளை தொலைக்காட்சிகள் இருந்தன. மற்றபடி ரேடியோவில் கேட்கும் கமெண்ட்ரி மட்டும் தான். அதிலும் வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளின் வர்ணனை கேட்க வேண்டுமெனில் நான்கு பேண்ட் ரேடியோ வேண்டும். ஊரில் பெரும்பாலும் இரண்டு பேண்ட் ரேடியோக்கள் தான் இருக்கும். சில தெருக்களில் மட்டுமே பிபிசி, ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனமான ஏபிசி ஒலிபரப்பை கேட்கும் படி நான்கு பேண்ட் ரேடியோக்கள் இருக்கும். அவர்களுக்கு மட்டுமே அப்போது கிரிக்கெட் ஆட்டம் பற்றி தெரிந்திருந்தது.ஏனையோருக்கு அது பற்றிய அவ்வளவு தெளிவில்லை.
ஜூன் முதல் வாரத்தில் இந்தியா இங்கிலாந்திற்குச் சென்றிருந்தது. மேட்சுகளைப் பற்றி தமிழ் நாளிதழ்களில் சிறு அளவிலேயே கவரேஜ் இருந்தது. ஆங்கில நாளிதழ்களில் நன்றாக கவரேஜ் செய்தார்கள். இந்தியா இடம்பெற்றிருந்த குரூப்பில் மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இடம்பெற்றிருந்தன. இன்னொரு குரூப்பில் இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை அணிகள் இடம்பெற்றிருந்தன. இந்தியா இருந்த குரூப்பில் எப்படியும் மேற்கிந்திய தீவுகளும், ஆஸ்திரேலியாவும் தான் நாக் அவுட்டிற்குச் செல்லும். இந்திய அணி இங்கிலாந்தைச் சுற்றிப் பார்த்து விட்டுத்தான் வரும் என்று அனைவரும் கணித்தார்கள். குரூப் ஸ்டேஜில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் இருமுறை ஆடவேண்டும். முதல் ஆட்டத்தில் இந்தியா மேற்கிந்திய தீவுகளை வென்றது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஜிம்பாப்வே உடனான வெற்றி எதிர்பார்த்த ஒன்று. ஆனால் ஆஸ்திரேலியாவுடனும் மேற்கிந்திய தீவுகளுடனும் அடுத்தடுத்த மேட்சுகளில் தோற்கவும் எதிர்பார்ப்பு குறைய ஆரம்பித்தது.
இங்கிலாந்து ஆட்டக்களங்கள் சீம், ஸ்விங் பந்து வீச்சுக்கு உகந்ததாய் இருந்தது இந்திய அணிக்கு சாதகமாய்ப் போனது. கபில்தேவ், பின்னி, பல்விந்தர் சிங் சாந்து, மதன்லால், மொஹிந்தர் அமர்நாத் அனைவருமே இந்த முறையில் பந்து வீசக்கூடியவர்கள். யஷ்பால் சர்மா, சந்தீப் பாட்டில் இருவரும் வெளிநாட்டு ஆடுகளங்களிலும் துடிப்பாக ஆடக் கூடியவர்கள். கவாஸ்கர், அமர்நாத் குவாலிட்டி பேட்ஸ்மென்கள், ஸ்ரீகாந்த் அதிரடியாக ஆடக்கூடியவர். கபில்தேவ், இன்று வரை இந்தியாவில் உருவான ஒரே உலகத்தரமான ஆல்ரவுண்டர். பின்னி, மதன்லால் போன்றோர் பேட்டிங்கிலும் தாக்குப்பிடிக்க கூடியவர்கள். கிர்மானி நல்ல விக்கெட் கீப்பர் மற்றும் தாக்குப்பிடிக்கக் கூடிய பேட்ஸ்மென். எனவே எச்சூழலையும் சமாளிக்கும் சரிநிகர் சமானமான அணியாக இந்திய அணி இருந்தது.
சிற்றூர்களில் அப்போது கிரிக்கெட் என்றால் இரண்டு பெயர்கள் மட்டுமே எல்லோருக்கும் தெரிந்ததாக இருந்தது. கவாஸ்கர் மற்றும் கபில்தேவ். ஆனால் முதல் இரண்டு வெற்றிகளின் மூலம் மொஹிந்தர் அமர்நாத், ஸ்ரீகாந்த், பின்னி. மதன்லால், யஷ்பால் சர்மா போன்ற பெயர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கேட்கத் துவங்கியது. ஜிம்பாப்வே உடனான முக்கிய மேட்சில் கபில்தேவின் ஹீரோயிசத்தால் ஜெயிக்க உத்வேகம் பெற்றது இந்திய அணி. அடுத்து ஆஸ்திரேலியாவையும் வென்று, செமிபைனலுக்குள் நுழைந்து இங்கிலாந்தை வென்று, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இவ்வாறு இந்திய அணி முதன் முதலாய் உலக கோப்பைக்கு தகுதி பெற்றது நல்ல பேச்சாக அடிபடத் துவங்கியது. அதற்கு முன்னதாக ஹாக்கியில் மட்டுமே நாம் உலக அளவில் வெற்றி பெறும் அணியாக இருந்தோம். மற்ற விளையாட்டுகளில் நாம் சவலைப் பிள்ளை தான். இன்னொரு விளையாட்டிலும் நம்மால் உலக அணிகளுக்கு இணையாக ஆட முடியும் என்று இந்திய மக்களை பெருமிதம் கொள்ள வைத்தது இந்த நிகழ்வு.
மிக மிகக் குறைவான ஆட்களே எங்கள் ஊரில் அந்த இறுதிப் போட்டியை தொலைக்காட்சியில் கண்டார்கள். அதைவிட சற்று கூடுதலானவர்கள் வானொலியில் வர்ணனையை கேட்டார்கள்.
நாங்கள் கிரவுண்ட் ப்ரீயா இருக்கு என நன்றாக ஆடிக்களித்து விட்டு திரும்பும் போது, ஊரில் இருந்த ஒரே ஒரு ரேடியோ கடையில் சிலர் நின்று கமெண்டிரி கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஸ்ரீகாந்த் நல்லா அடிச்சானாம்பா என்ற ஒரு வார்த்தை தான் அப்போது காதில் விழுந்தது. சில தெருக்களில் மட்டும் வீட்டிற்கு வெளியே ரேடியோவை வைத்து மாலையில் வர்ணனை கேட்டுக் கொண்டிருந்தார்கள். ரிச்சர்ட்ஸ் இருக்கிற வரை கஷ்டம் என்றார்கள். அப்புறம் கபில்தேவ் கேட்ச் பிடித்து அவர் அவுட்டானார் என்றார்கள். நடந்து கொண்டிருந்த சம்பவத்தின் முக்கியத்துவம் அறியாமல் வீட்டிற்குச் சென்றுவிட்டேன்.
அடுத்த நாள் காலை இந்தியாவே ஆனந்தக் கொண்டாட்டத்தில் மூழ்கியது. கிரிக்கெட் ஆட்டம் பற்றி தெரியாதவர்கள் கூட, அதைப் பற்றியே பேசலானார்கள். நாம உலக அளவில் ஒரு போட்டியில் ஜெயித்து விட்டோம் என்பதே எல்லோருக்கும் பெரிய பெருமையைக் கொடுத்தது. திங்கள் அன்று பள்ளி செல்லும் போது அதே பேச்சு. எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் டிவி இருந்தது. அவர் கிரிக்கெட் ரசிகரும் கூட. அவர் சொல்லி பள்ளி நோட்டீஸ் போர்டில் கொட்டெழுத்துக்களில் இந்திய வெற்றியைப் பற்றி எழுதியிருந்தார்கள். அவரும் பிரேயரில் இந்த வரலாற்றுச் சம்பவத்தைப் பற்றி நிறைய பேசினார்.
இந்த ஜூன் 25க்குப் பின் இந்தியாவே ஒரு மாற்றத்தைச் சந்தித்தது. அதுவரை ஹாக்கி, புட்பால் விளையாடிக் கொண்டிருந்த இந்திய சிறுவர்கள் கிரிக்கெட்டின் பால் ஈர்க்கப்பட்டனர். ஹாக்கி விளையாட நல்ல ஹாக்கி மட்டை தேவை. புட்பாலுக்கு சாதா பந்து இருந்தாலும் இட வசதி தேவை. எந்த உபகரணமும் தேவையில்லை, சின்ன இடம் போதும், இரண்டு பேர் இருந்தாலும் ஆடலாம் என்ற கிரிக்கெட்டின் தன்மையால் பலரும் அதை நோக்கி இழுக்கப்பட்டனர். பிள்ளையாரை எப்படி தங்களுக்குப் பிடித்த வடிவங்களில் எல்லாம் பிடித்தார்களோ அது போலத்தான் கிரிக்கெட்டும். சிலையாகவும் வைக்கலாம், மஞ்சளில் பிடித்து வைக்கலாம், கைப்பிடி மண்ணிலும் பிடிக்கலாம் என்ற பிள்ளையாரின் சிம்ப்ளிசிட்டி கிரிக்கெட்டுக்கும் உண்டு. பேட், பேட்,பால் என எதுவும் தேவையில்லை. ஒரு கட்டை, அறுத்த சைக்கிள் ட்யூப் துண்டுகளைக் கொண்டு கூட பந்து செய்யலாம் என்ற எளிமையால் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் கிரிக்கெட் பரவியது. ஆனால் பிள்ளையாருக்கு சக்தி இருக்கிறது என்ற நம்பிக்கை மக்கள் மனதில் விதைக்கப்பட்டது போல, கிரிக்கெட்டில் நம்மால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை இந்த உலகக் கோப்பை வெற்றி கொடுத்தது.
இந்த வெற்றியை இந்தியாவிற்குச் சாத்தியமாக்கியது எது என்ற கேள்வி எழும்போதெல்லாம் மனதுக்கு தோன்றுவது அப்போது இங்கிலாந்து ஆடுகளங்களுக்கு ஏற்றார் போல் அமைந்த அணியும் கபில்தேவ் என்ற பெயரும் தான். பொதுவாக அப்போது இருந்த இந்திய அணிக்கு வெற்றி பெறும் ஆவலெல்லாம் இருக்காது. தங்கள் சாதனை, தங்கள் கேரியர் என்றே இருப்பார்கள். அணியின் ஒட்டுமொத்த வெற்றிக்குத் தேவைப்படும் அந்த அதிகப்படியான முயற்சியைச் செய்ய சுணக்கம் காட்டுவார்கள். கபில்தேவுக்கு அந்த அதிகப்படியான முயற்சியைக் கொடுக்கும் மனம் இயல்பிலேயே இருந்தது. அதுபோக தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற வெறியும். அவருக்குள் இருந்த அந்த வெறிதான் இந்தியாவை கோப்பையை நோக்கி அழைத்துச் சென்றது. இந்தியாவில் வேகப்பந்து வீச்சாளரே கிடையாது நீ வேகப்பந்து வீச்சாளர் என்கிறாயா என்ற கேலிகள், டிரஸ்ஸிங் ரூமில் பேட்ஸ்மென்களால் அவர் அடைந்த அவமானங்கள், கொச்சையாக ஆங்கிலம் பேசுகிறார் என்ற மும்பை மீடியாக்களின் எள்ளல்கள் என அனைத்தையும் தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற வெறியாக மாற்றி அணியை வெற்றி பெறச் செய்தார். வெற்றி பெறுவோம் என்ற அவரின் நம்பிக்கையே எல்லோர் மனதிலும் புகுந்து உத்வேகம் கொடுத்தது.
நம் நாட்டின் தேசிய விளையாட்டான ஹாக்கி தவிர்த்து இன்று வரை குழு ஆட்டங்களில் நாம் உலக அளவில் பெயர் சொல்லும் படியாக இருப்பது கிரிக்கெட்டில் தான். ஏன் தனி நபர் ஆட்டங்களில் கூட நம் நாட்டு சாதனையாளர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். 1983 கிரிக்கெட் உலக கோப்பை வெற்றிக்குப் பின் ஹாக்கி நம் மக்கள் மனதில் பெற்றிருந்த இடம் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மும்பை முதல் மேற்கு வங்கம் வரை இந்தியாவின் எல்லா மூலைகளிலும் பரவியிருப்பது கிரிக்கெட் தான். அப்படி கிரிக்கெட் விளையாட்டு இந்தியாவில் விஸ்வரூபம் எடுக்க காரணமான நாள் ஜூன் 25, 1983 என்றால் அதற்கு அச்சாணியாய் இருந்தது கபில்தேவ் என்ற மனிதனின் வெல்ல வேண்டும் என்ற உத்வேகம் தான்.
ஜெயலலிதா
ஜெயலலிதா தமிழ்சினிமாவில் நடிகையாக உள்ளே நுழைந்த
காலகட்டம் தமிழ்சினிமாவின் பொற்காலங்களில் ஒன்றான
அறுபதுகள். எம்ஜியாரும், சிவாஜியும் முழுவீச்சில் வெற்றிப்
படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். எம்ஜியார்,
ப.நீலகண்டன், கே. சங்கர் போன்ற இயக்குநர்களுடன் இணைந்து
வெற்றிகரமான பார்முலா படங்களைக் கொடுத்து வந்தார். சிவாஜி
கணேசன் பீம்சிங் போன்ற இயக்குநர்களுடன் இணைந்து பா
வரிசை படங்களை (பாசமலர், பாவமன்னிப்பு போன்ற) கொடுத்து
வந்தார். இயக்குநர் ஸ்ரீதர் அப்போதைய வழக்கத்தில் இருந்து ஒரு
இயக்குநரின் படம் என்று தனித்துத் தெரியும் வகையில்
அவருக்கான பிரத்யேக காட்சி அமைப்புகள், வசனம், இசை என
தனிக்கவனம் செலுத்தி படங்களை இயக்கி வந்தார். கே
பாலசந்தரும் தன் பயனத்தை அறுபதுகளில் துவங்கியிருந்தார்.
இது
போக ஸ்க்ரிப்ட் ஒரியண்டட் இயக்குநர் கே கோபாலகிருஷ்ணன்
தன் பங்கிற்கு சித்தி, கற்பகம் என அட்டகாசப் படங்களை
கொடுத்து வந்தார். இவர்கள் போக ஏ பி நாகராஜன்
திருவிளையாடல் போன்ற புராணப் படங்களை இயக்கி தன்
பங்கிற்கு தமிழ்சினிமாவை அலங்கரித்துக் கொண்டிருந்தார். எஸ்
எஸ் வாசன் அவர்களின் ஜெமினி, ஏ வி எம், விஜயா வாகினி
போன்ற தயாரிப்பு நிறுவனங்களும் ஏராளமான படங்களை இந்தக்
காலகட்டத்தில் தயாரித்து வந்தன. தேவர் பிலிம்ஸ், மேகலா
பிக்சர்ஸ் போன்ற பட்ஜெட் படம் எடுக்கும் தயாரிப்பு நிறுவங்களும்
தொடர்ச்சியாக படங்களை தயாரித்து வந்தார்கள்.
இந்தக் கலைஞர்களுக்கெல்லாம் திரைப்படத்துறைக்கு உள்ளே
நுழையும் கருவியாக இருந்தது நாடகங்கள் தான். ஒரு நாடகத்தில்
சிறப்பாக நடிப்பதன் மூலம் படத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள்
கண்ணில் பட்டு அவர்களை தங்கள் திறமையால் கவர்ந்து வாய்ப்பு
பெறுவது தான் முக்கிய வழியாக இருந்தது. இந்தக் காலகட்டத்தில்
சென்னையில் ஏராள நாடக கம்பெனிகள் இயங்கி வந்தன. கே
பாலசந்தர்,சோ ராமசாமி, ஒய் ஜி பார்த்தசாரதி போன்றோர்
தொடர்ச்சியாக நாடகங்களை நடத்தி வந்தார்கள். ஜெயலலிதாவின்
தாயாரான சந்தியா சினிமாவில் அவ்வப்போது தலைகாட்டினாலும்
இது போன்ற நாடக கம்பெனிகளில் அடிக்கடி நடித்து வந்தார்.
ஜெயலலிதாவும் இதைப் பின்பற்றி சோ, ஒய் ஜி பார்த்தசாரதி
போன்றோரின் நாடகங்களில் பள்ளியில் நடிக்கும் போதே நடிக்க
ஆரம்பித்தார். அப்போது தென்னக சினிமாவின் தலைமையகமாக
சென்னை தான் விளங்கியது. ஏராளமான தெலுங்கு படங்கள்
இங்கே எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. சில கன்னட படங்களும்.
ஜெயலலிதாவிற்கு இதன் மூலம் சில தெலுங்கு, கன்னட
படங்களில் வாய்ப்பு கிடைத்தது. பள்ளி விடுமுறையில்
இப்படங்களை நடித்தார்.
1965 ஆம் ஆண்டு, இயக்குநர் ஸ்ரீதர் புதுமுகங்களை வைத்து
வெண்ணிற ஆடை என்ற படத்தை துவக்கினார். அதில் நிர்மலா,
மூர்த்தி ஆகியோர் அறிமுகமானார்கள். இன்னொரு நாயகி
வேடத்திற்கு ஹேமமாலினி வரவழைக்கப்பட்டு ஸ்க்ரீன் டெஸ்டில்
நிராகரிக்கப்பட்டார். அந்த வேடத்திற்கு 16 வயது ஜெயலலிதா
பின்னர் தேர்வு செய்யப்பட்டார். வெண்ணிற ஆடை வெற்றி
பெற்றது. நிர்மலாவும், மூர்த்தியும் வெண்ணிற ஆடை என்ற
பெயருடன் சேர்த்து அழைக்கப் பட்டார்கள். ஆனால் ஜெயலலிதா
அந்த அடைமொழியைப் பெறவில்லை. அதையெல்லாம் தாண்டி
அவர் பலப்பல அடைமொழிகளைப் பெறுவார் என
மற்றவர்களுக்குத் தோன்றியதோ என்னவோ. தன் முதல்
படத்திலேயே பெருவாரியான ரசிகர்களின் பேராதரவைப் பெற்றார்
ஜெயலலிதா.
வெண்ணிற ஆடை வெற்றிக்குப் பின் ஜெயலிதாவிற்கு மிகப்பெரிய
ஏற்றமாக அமைந்தது ஆயிரத்தில் ஒருவன். சிவாஜி கணேசனை
வைத்து பல படங்களை இயக்கிய பி ஆர் பந்துலு எம்ஜியாரை
வைத்து இயக்கிய முதல் படம் ஆயிரத்தில் ஒருவன். அதில்
கன்னித்தீவு இளவரசி வேடத்தில் நடித்தார். அப்போது எம்ஜியார்
மிகப்பெரிய நாயகன். ஆனால் 17 வயது ஜெயலலிதா அவருக்கு
இணையான நடிப்பை வழங்கி அந்த கேரக்டரை நிலைநிறுத்தி
இருந்தார். ராஜா ராணி கால சரித்திர படமான ஆயிரத்தில் ஒருவன்
இந்தக் கால பாகுபலி போல பெரு வெற்றி அடைந்த படம்.
அதன்பின்னர் ஜெயலலிதாவிற்கு ஏறுமுகம் தான். எம்ஜியாருடன்
குடியிருந்த கோயில், ரகசிய போலீஸ் 115, அடிமைப் பெண்,
சிவாஜி கணேசனுடன் பட்டிக்காடா பட்டணமா, கலாட்டா
கல்யாணம் என கிட்டத்தட்ட 15க்கும் அதிகமான படங்கள்,
ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன் என அப்போதிருந்த
அடுத்த நிலை நடிகர்களுடனும் நிறையப் படங்கள் என
தமிழ்சினிமாவை ஒரு கலக்கு கலக்கினார். தெலுங்கிலும் என் டி
ஆர், நாகேஸ்வராவ் போன்ற முண்ணனி நடிகர்களுடனும்,
கிருஷ்ணா, சோபன்பாபு போன்ற அடுத்த நிலை நடிகர்களுடனும்
பல வெற்றிப்படங்களில் நடித்தார். கன்னடத்திலும் பல
வெற்றிப்படங்கள். நடிக்க வந்த முதல் 10 ஆண்டுகளில் பல மொழி
வெற்றிப்படங்களின் மூலம் முக்கிய தென் இந்திய திரை
நட்சத்திரமாக மாறினார். ஜெயலலிதா ஏற்று நடித்த பல்வேறு
கேரக்டர்களின் மூலம் ஏராளமான தமிழக மக்களின்
அபிமானத்தைப் பெற்றார்.
எப்படி அறுபதுகளில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள்,
நடிகர்களிடையே கடும் போட்டி இருந்தது போல நடிகைகளிடமும்
கடும் போட்டி இருந்தது. பானுமதி, வைஜயந்தி மாலா செட்டில்
வைஜயந்திமாலா இந்திக்குப் போய் இருந்தார். பானுமதி இன்னும்
பீல்டில் இருந்தார். பத்மினி, சாவித்திரி, தேவிகா செட்டும் மிக
ஆக்டிவ்வாக பீல்டில் இருந்தார்கள். ஜெயலலிதாவிற்கு சில
வருடங்கள் முன் அறிமுகமாயிருந்த சரோஜா தேவி, கே ஆர்
விஜயா தங்கள் கேரியரின் உச்சத்தில் இருந்தனர்.
ஜெயலலிதாவிற்குப் பின் அறிமுகமாகி இருந்த லதா, மஞ்சுளா
போன்றோரும் கடும் போட்டியை கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
இத்தனை பேரையும் மீறி ஜெயலலிதா தனக்கான வெற்றிகளைக்
குவித்தார். அவர் கணக்கில் ஏராளமான சில்வர் ஜூபிலி படங்கள்
இருந்தன. பெருவாரியான திரைத் துறையினரின் முதல் தேர்வாக
ஜெயலலிதா இருந்தார். அதற்கு முக்கிய காரணம் எந்த
கேரக்டரையும் ஏற்று நடித்து அதைச் சிறப்பிக்கும் திறமை
அவருக்கு இருந்தது. அந்தக் காலகட்டத்தில் துடுக்குத்தனமான
நவநாகரீகப் பெண் வேடத்திற்கு போட்டியே இல்லாத தேர்வாக
ஜெயலலிதா இருந்தார். அவர் இயல்பே அதுதான் என்பதால் அதை
அசால்டாக செய்வார். இளவரசி வேடமும் அவருக்கு
கனகச்சிதமாகப் பொருந்தும். அதற்கேற்ற தோற்றம், தோரணை,
குரல் எல்லாம் அவருக்கு இயல்பாகவே அமைந்திருந்தது. அதே
சமயம் நடுத்தர குடும்பப் பெண் வேடம், அப்பாவி கிராமத்துப்
பெண் வேடம் போன்றவற்றையும் மிக எளிதாகச் செய்வார். இந்த
பன்முகத்தன்மைதான் அவரை திரையுலகில் முண்ணனி
நட்சத்திரமாக நிலை நிறுத்தியது.
எம்ஜியாருடன் இணைந்து நடித்த ராமன் தேடிய சீதையில் எம் ஜி
யாரை பல வேடங்கள் போட்டு ஏமாற்றும் கதாபாத்திரம்.
ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வேடங்கள். அனாயாசமாக
அதைச் செய்திருப்பார். முத்துராமனுடன் நடித்த சூரியகாந்தி
திரைப்படத்தில் வேலைக்குச் செல்லும் பெண் உரிமையில்
நம்பிக்கை கொண்ட கதாபாத்திரம் அதையும் செம்மையாக
செய்திருப்பார். அதற்காக பெரியாரின் பாராட்டையும் பெற்றார்.
நகைச்சுவை வேடங்களும் அவருக்கு எளிது தான். கலாட்டா
கல்யாணம் போன்ற படங்களில் அதிலும் கலக்கியிருப்பார்.
வழக்கமான கவர்ச்சி கதாநாயகி வேடங்கள் சொல்லவே
வேண்டாம். ஏராளம். அதிலும் சிறப்புற நடித்திருப்பார். இது தவிர
மனநிலை பாதிக்கப்பட்ட வேடங்கள் அவற்றிலும் வித்தியாசமாக
நடித்துள்ளார். நவரத்தினம், எங்கிருந்தோ வந்தாள் போன்ற
படங்களில் அந்த வித்தியாசத்தைக் காட்டியிருப்பார். எந்த வகை
வேடமாக இருந்தாலும் சரி, எந்த நாயகர்களுடன் நடித்தாலும் சரி.
ஜெயலலிதா தனித்து தன் திறமையைக் காட்டத்
தவறியதேயில்லை.
1970களின் மத்தி வரை ஜெயலலிதா வெற்றிகரமான
கதாநாயகியாக இருந்தார். பின்னர் பாரதிராஜா, மகேந்திரன்,
பாலுமகேந்திரா, ருத்ரய்யா போன்ற புதிய அலை இயக்குநர்கள் வர
ஆரம்பித்தார்கள். ஸ்ரீதேவி, ஸ்ரீபிரியா போன்ற நாயகிகளின்
வருகை, கமல்ஹாசன், ரஜினிகாந்த் தலை எடுக்க ஆரம்பிக்க
ஜெயலலிதாவின் நாயகி அந்துஸ்து குறையத் துவங்கியது. இனி
இரண்டாம் நாயகி, சகோதரி, அம்மா கேரக்டர்களில் தான் நடிக்க
முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அது போல சில குணச்சித்திர
வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். 1980ல் ரஜினியில் பில்லா
படத்தில் அவருக்கு நெருக்கமான தயாரிப்பாளர் பாலாஜியால்
ஸ்ரீபிரியா நடித்த வேடத்திற்கு முதலில் நடிக்க அழைக்கப்பட்டார்.
ஆனால் அதில் அவர் நடிக்க வில்லை. அதே ஆண்டில் அவர் நடித்த
நதியை தேடி வந்த கடல் அவரின் கடைசிப் படமாயிற்று.
அவர் உச்சத்தில் இருந்த பத்தாண்டுகளில் அவர் சேர்ந்து நடிக்காத
பெரிய நடிகர்கள் இல்லை, வித்தியாச வேடங்கள் இல்லை. எந்தக்
காட்சியிலும் அவர் தன் ரோலை மீறி நடித்தது இல்லை. அந்த
கேரக்டருக்கு எவ்வளவு நடிக்க வேண்டும் என்ற தெளிவு அவரிடம்
இருந்தது. ஜெயலலிதா ஒரு காட்சியில் இருந்தாலே, அவரை
மற்றவர்களை மீறி கவனிக்க வைக்கும் திறமையும் அவரிடம்
இருந்தது.எந்த மொழித் திரைப்படமாக இருந்தாலும் அந்தக்
கலாச்சாரத்திற்கு ஏற்ப, மொழிக்கு ஏற்ப முன் தயாரிப்பு செய்து
பாவனைகளை கொடுக்கக் கூடியவர். இந்தத் திறமைகள்தான்
அவருக்கு தென் இந்திய திரைத்துறையிலும் பொது
மக்களிடையேயும் பெரிய மரியாதையைப் பெற்றுக் கொடுத்தது.
சேப்பாக்கம் டை டெஸ்ட்
எவ்வளவோ கிரிக்கெட் மேட்சுகளைப் பார்த்தாலும் சில கிரிக்கெட்
மேட்சுகள் மட்டுமே நம் மனதை விட்டு அகலாது இருக்கும்.
மேட்சின் சுவராசியம் ஒரு காரணமாய் இருந்தாலும், நாம் அதைப்
பார்த்த சூழ்நிலை, அந்த மேட்ச் அன்றைய நிலையில் நமக்குக்
கடத்திய உணர்வு போன்றவையும் அதற்கு முக்கிய காரணமாய்
இருக்கும். 80களில் கிரிக்கெட் ரசிகர்களாய் இருந்த பலருக்கும்
அப்படி ஒரு மேட்ச் மறக்க முடியாததாய் இருக்கும். அந்த மேட்சைப்
பற்றிய நினைவுகளே இந்தக் கட்டுரை.
அது 1986ஆம் வருடம். கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி,
இங்கிலாந்திற்குச் சென்று அவர்கள் மண்ணிலேயே வரலாற்றில்
முதன் முறையாக டெஸ்ட் தொடரை வென்று வந்திருந்தது. அந்த
சூட்டோடு தன் சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணியின்
வருகைக்காக காத்திருந்தது. அப்போதைய ஆஸ்திரேலிய அணி
தன்னுடைய நட்சத்திர ஆட்டக்காரர்களான க்ரெக் சாப்பல், இயன்
சாப்பல், டென்னிஸ் லில்லி, தாம்சன் போன்றோர் அடுத்தடுத்து
ஓய்வு பெற்றிருந்ததால் நிறைய இளம் ஆட்டக்காரர்களுடன்
இந்தியா வந்திறங்கியது. அணித்தலைவர் ஆலன் பார்டர், பூன்,
மார்ஷ் போன்றவர்களே அப்போது அதிகம் அறியப்பட்டவர்களாய்
இருந்தார்கள். இங்கிலாந்தை அவர்கள் மண்ணிலேயே தலையில்
தட்டிவிட்டு வந்தவர்கள், தங்கள் மண்ணில் ஆஸ்திரேலியாவை
தலையில் கொட்டி அனுப்புவார்கள் என்றே பலரும் கணித்தார்கள்.
பலரும் கணித்தபடியே முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா
வெற்றி பெற்றது. ஆனால் அடுத்த போட்டியிலேயே
ஆஸ்திரேலியா வெற்றி பெற்று, எங்களை குறைத்து எடை
போடாதீர்கள் என்ன இருந்தாலும் நாங்கள் ஆஸ்திரேலிய
கிரிக்கெட் அணி எனக் காட்டினார்கள்.
இந்த இரண்டு ஒரு நாள் போட்டிகளுக்குப் பின்னர் சரித்திரப்
பிரசித்தி பெற்ற அந்த முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம்
மைதானத்தில் தொடங்கியது. அப்போது பரவலாக
தொலைக்காட்சிப் பெட்டிகள் ஊருக்குள் ஊடுருவிக் கொண்டிருந்த
நேரம். இங்கிலாந்தில் இந்தியா பெற்ற வெற்றி அப்போது இன்னும்
பலரை கிரிக்கெட் ரசிகர்கள் ஆக்கி விட்டிருந்தது. சென்னையில்
மேட்ச் என்பதால் வானொலியில் தமிழ் வர்ணனை வேறு. ஒரு நாள்
போட்டியில் வேண்டுமானால் நீங்கள் எனக்கு சமமாய்
இருக்கலாம், ஆனால் டெஸ்ட் போட்டியில் நாங்கள் தான் என
மார்தட்டி களம் கண்டது இந்திய அணி. ஆஸ்திரேலியா டாஸை
வென்று பேட்டிங் எடுத்தது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அதற்கு முன்னால் பல
டெஸ்ட் மேட்சுகள் நடந்திருக்கின்றன. இந்தியாவிலே கல்கத்தா
ஈடன் கார்டனுக்கு அடுத்த படியாக உருவான மைதானம் இந்த எம்
ஏ சிதம்பரம் ஸ்டேடியம். பொங்கல் சமயத்தில் ஒரு டெஸ்ட் மேட்ச்
இங்கே நடத்துவதென்பது ஒரு ஐதீகம். சென்னை மார்கழி இசை
விழா முடிந்ததும் இந்த பொங்கல் டெஸ்ட் பற்றிய பேச்சு சென்னை
எலைட் வட்டாரங்களில் துவங்கும். மற்ற மாவட்டங்களில் இந்த
மேட்ச் வானொலியில் வழங்கப்படும் அட்டகாச தமிழ் வர்ணனை
மூலமே அறியப்படும். வாலாஜா முனை, பெவிலியன் முனை,
வலது கை ஆட்டக்காரர், உதிரி ஓட்டங்கள், கால்காப்பில் பட்டு
பைன்லெக் திசையை நோக்கிச் சென்றது பந்து என சொல்லப்படும்
வர்ணனை மூலமே கிரிக்கெட் பழகப்பட்டு வந்தது.
மேட்ச் தொடங்கி முதல் விக்கெட்டாக மார்ஷ் ஆட்டமிழந்த பின்னர்
டேவிட் பூன் – டீன் ஜோன்ஸ் இணை ஆடத்துவங்கியது. அவர்கள்
எந்த சிரமமும் இல்லாமல் கல்லூரி விடுதியில் இருந்து ஊருக்கு
வந்த கல்லூரி கிரிக்கெட் டீம் ஆட்டக்காரர் தெரு பையன்களோடு
எளிதாய் விளையாடுவது போல ஆடினார்கள். அப்போதுதான்
இந்திய அணியின் பவுலிங் பலவீனம் புரிந்தது. வெளி நாட்டு பந்து
வீச்சுக்கு சாதகமான மைதானங்களில் இந்திய வேகப்பந்து
வீச்சாளர்கள் எளிதில் விக்கெட்டுகளை வீழ்த்தி விடுவார்கள்.
ஆனால் இந்திய ஆடுகளங்கள் அவர்களுக்கு ஒத்துழைப்பு
கொடுக்க வில்லை. ஆஸ்திரேலிய அணி முதல் நாளில் இரண்டு
விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 211 ரன்களை எடுத்தது. அடுத்த
நாள் ஆட்டத்தில் நான்காம் விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டீன்
ஜோன்ஸும் ஆலன் பார்டரும் நிதானமாக ரன்களைக் குவிக்க
ஆரம்பித்தார்கள். டீன் ஜோன்ஸ்க்கு சென்னை வெயில் ஒத்துக்
கொள்ளாமல் வாந்தியெல்லாம் எடுத்தார். ஆனாலும் விடாமல்
விளையாடி 210 ரன்கள் எடுத்தார். மூன்றாம் நாளின் ஆரம்பத்தில்
தான் ஆஸ்திரேலியா அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள்
எடுத்து டிக்ளேர் செய்தது. நம்மிடம் அன்று மூன்று சுழற்பந்து
வீச்சாளர்கள் இருந்தாலும் அவர்களாலும் ஏதும் பெரிதாக நடத்த
முடியவில்லை.
பின் இந்திய இன்னிங்ஸ் தொடங்கியது. வழக்கம்போல் ஸ்ரீகாந்த்
அதிரடியாகவும். கவாஸ்கர் நிதானமாகவும் ஆட ஆரம்பித்தனர். 65
ரன்களுக்குள் மூன்று விக்கெட்டை இழந்தது இந்தியா.
அசாருதீனும் ரவி சாஸ்திரியும் இந்தியா 200 ரன்களை எட்ட
காரணமாய் இருந்தார்கள். ஐந்தாவது விக்கெட் விழுந்து கபில்தேவ்
உள்ளே வரும் போது அணியின் ஸ்கோர் 206. அடுத்தடுத்து
இரண்டு விக்கெட்கள் விழ இந்திய அணி 7 விக்கெட்டுகளை
இழந்து 245 ரன்களுக்கு தள்ளாடத் துவங்கியது. அப்போதைய
இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்தால் அடுத்து 50
ரன்களுக்குள்ளும், 7 வது விக்கெட் இழந்தால் அடுத்த 15
ரன்களுக்குள்ளும் தன் ஆட்டத்தை முடித்துக் கொள்ளும் என்றே
எழுதி வைத்துக் கொள்ளலாம். அந்த அளவில் தான் நமது பந்து
வீச்சாளர்களின் பேட்டிங் திறமை இருக்கும்.
இந்திய அணி பாலோ ஆனைத் தவிர்க்க இன்னும் 130 ரன்கள்
தேவைப்பட்டன. வானொலியில் வர்ணனை செய்தவர்கள் இதை
ஒவ்வொரு பந்து வீசப்படும் போதும் சொல்லிக் கொண்டே
இருந்தார்கள். அதன் மூலம் தான், முதன் முறையாக அப்போது
கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தவர்களுக்கு பாலோ ஆன் என்றால்
என்ன என்று தெரியத் துவங்கியது.
அந்தச் சூழ்நிலையில் தான் தன்னுடைய கேரியரின் மற்றுமொரு
சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார் கபில் தேவ். சேட்டன்
சர்மா, சிவலால் யாதவ், மனீந்தர் சிங் போன்றோரை
மறுமுனையில் நிற்க வைத்து 119 ரன்களை எடுத்து, பாலோ
ஆனைத் தவிர்த்தார்.அதில் 21 பவுண்டரிகள். பல பந்துகளை
தானே சந்தித்து சுமாரான பந்துகளை தண்டித்து இந்த ரன்களை
ஈட்டினார்.
நான்காம் நாள் இந்தியா அணி பாலோ ஆனைத் தவிர்த்து விட்டு
ஆல் அவுட் ஆக ஆஸ்திரேலியா தன் இரண்டாம் இன்னிங்ஸைத்
தொடங்கியது. நான்காம் நாள் ஆட்ட முடிவில் 170 ரன்களுக்கு 5
விக்கெட் இழந்திருந்தது. சரி அவ்வளவு தான் வழக்கம் போல இந்த
டெஸ்ட்டும் ட்ராவை நோக்கித்தான் போகப்போகிறது என
அனைவரும் நினைத்திருந்த வேளையில் நான்காம் நாள் ஆட்ட
முடிவோடு டிக்ளேர் செய்தார் பார்டர். இந்தியா, ஆஸ்திரேலிய
கிரிக்கெட் ரசிகர்கள் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள்.
ஆட்டத்தின் கடைசி நாள். 348 ரன்கள் எடுக்க முடிந்தால் எடுத்து
வெற்றி கொள் என்றார் பார்டர். ஏற்றுக் கொண்டார் கபில்தேவ்.
இந்திய வீரர்கள் களமிறங்கினார்கள். ரன்கள் குவிப்பதும்,
விக்கெட்டுகள் போவதுமாய் இருந்தது. கவாஸ்கர் ஒரு முனையில்
நங்கூரமாய் நின்று 90 ரன்கள் எடுத்தார். கபில்தேவின் விக்கெட்
விழுந்ததும் இந்திய ரசிகர்களுக்கு கலக்கம் ஏற்பட்டது. ஆனால்
அப்போதைய மிஸ்டர் கூலான ரவி சாஸ்திரி நம்பிக்கை
கொடுத்தார். 9 விக்கெட்டுகள் போய் விட்டன. 2 ரன்கள் வேண்டும்
என்ற நிலையில் ரவி சாஸ்திரி ஒரு ரன் மட்டும் எடுத்து
மறுமுனைக்குச் செல்ல. மனீந்தர் சிங் தன் விக்கெட்டை பறி
கொடுக்க டை ஆனது டெஸ்ட்.
வர்ணனையாளர்கள் டிராவுக்கும் டைக்கும் இடையேயான
வேறுபாட்டை விளக்கிக் கொண்டிருக்க, சேப்பாக்கம்
மைதானத்தில் குமுழியிருந்த ரசிகர்கள் தங்கள் கண் முன்னால்
நடந்ததை நம்ப முடியாமல் இருந்தனர். டிவி பார்த்துக்
கொண்டிருந்தவர்களும், வர்ணனை கேட்டுக் கொண்டு
இருந்தவர்களும் தான். அந்தக் கணம் அவர்களுக்குத் தெரியாது,
நாம் ஒரு சரித்திரத்தின் சாட்சியாக இருக்கப் போகிறோம் என்று.
ஏனென்றால் அதுவரை நடந்த டெஸ்ட் மேட்சுகளில் ஒரு டெஸ்ட்
மட்டுமே டை ஆகியிருந்தது. அதிலும் ஆஸ்திரேலியா பங்கெடுத்து
இருந்தது. மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக 1960ஆம்
ஆண்டில் ஒரு டெஸ்டை அவர்கள் செய்திருந்தார்கள். அதற்கடுத்து
இதுதான். இந்த டெஸ்ட் முடிந்து 34 ஆண்டுகள் ஆகப்போகிறது.
அதற்கடுத்து இன்னும் ஒரு டெஸ்ட் கூட டை ஆகவில்லை.
இந்த டெஸ்ட்டின் முடிவு ஆஸ்திரேலியாவிற்கு உற்சாகத்தைக்
கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும். இந்த டெஸ்ட்
போட்டியில் சதமடித்த மூன்று ஆஸ்திரேலிய வீரர்களும் பந்து
வீச்சாளர் மெக்டர்மெட்டும் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு அந்த
அணியில் முக்கிய புள்ளிகளாக விளங்கினார்கள். அணியில் இடம்
பிடித்திருந்த இளம் வீரரான ஸ்டீவ் வாவ் அடுத்த 15 ஆண்டுகள்
அணிக்கு முக்கிய தூணாக இருந்தார்.
ஆனால் இவர்களை விட இந்தப் போட்டியில் சென்னை
ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் க்ரெய்க் மாத்யூஸ் தான். இந்திய
ஸ்பின்னர்களே விக்கெட் எடுக்க கஷ்டப்பட்ட பிட்ச்சில் இரண்டு
இன்னிங்ஸ்களிலும் 5 விக்கெட்டை வீழ்த்தியதோடு
மட்டுமல்லாமல், முதல் இன்னிங்ஸில் 44 ரன்கலையும்
அடித்திருந்தார். அவரின் ஆட்டிட்யூட் மைதானத்தில் இருந்த
எல்லோரையும் கவர்ந்தது. டிவியில் பார்த்தவர்கள் கூட யார்றா
இது இப்படி துறு துறுவென்று இருக்கிறான் என்றே பார்த்தார்கள்.
பவுண்டரி லைனில் நின்றிருக்கும் போது எல்லா ரசிகர்களுடனும்
அன்னியோன்யமாக சிரித்துக் கொண்டே இருந்தார். சென்னை
வெயிலில் முகமெல்லாம் சிவந்து, பவுண்டரி லைனில் உருண்டு
புரண்டு பீல்டிங் செய்ததால் அழுக்கான உடைகளுடன்
முகமெல்லாம் சிரிப்புடன் இருந்த மேத்யூஸை அன்று மேட்ச்
பார்த்தவர்களால் மறக்க முடியாது. கிட்டத்தட்ட ஒரு கட்டத்தில்
இந்தியாவின் கையில் இருந்த மேட்சை தங்கள் பக்கம் தன்
பவுலிங்கால் திருப்பியவர் மாத்யூஸ்.
யாருக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் ஆட்டம் முடிந்தாலும் அதில்
பங்குபெற்றவர்களுக்கும், பார்த்தவர்களுக்கும் இன்று வரை ஒரு
திருப்தி. இதுவரை நடந்திருக்கும் 2000க்கும் அதிகமான
டெஸ்ட்மேட்சுகளில் டை ஆனது இரண்டே மேட்சுகள் தான்.
அதில் ஒன்றில் நாம் சம்பந்தப்பட்டிருக்கிறோம் என்பதே அது.
அசாருதீன்
1984 ஆம் ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இந்தியப்
பயணம் அறிவிக்கப்பட்ட போது, இந்திய கிரிக்கெட் அணி ஒரு
குழப்பமான சூழ்நிலையில் இருந்தது. 1983ல் உலக கோப்பையைப்
பெற்றுத்தந்த கபில்தேவ், அடுத்து வந்த தொடர்களில் வெற்றியைப்
பெற இயலாதால், குறிப்பாக எங்களையா வென்று உலகக்
கோப்பையை வாங்கினாய்? அதற்கு பதிலடி தருகிறோம் என
வஞ்சினத்துடன் கிளைவ் லாயிட் தலைமையில் இந்தியாவிற்கு
வந்த மேற்கு இந்திய தீவு அணியினர் நம்மை பந்தாடி விட,
கபில்தேவிடம் இருந்த கேப்டன் பதவி கவாஸ்கருக்குச் சென்றது.
கவாஸ்கர், தனக்குப் பிடிக்காத சில வீரர்களை எப்படியாவது
கழட்டி விட வேண்டுமென்று மனதில் திட்டமிட்டுக் கொண்டே
இருந்தார். அதனால் இந்திய அணி டிரஸ்ஸிங் ரூமில் ஒரு
சுமுகமான நிலை அப்போது இருக்கவில்லை.
அப்போதைய இந்தியப் பிரதமராக இருந்த இந்திராகாந்தி தன்
பாதுகாவலர்களலேயே சுடப்பட்டு, அவரது மகன் ராஜீவ் காந்தி
பிரதமராப் பதவியேற்று, உடனேயே தேர்தலையும் அறிவித்தார்.
அந்த நேரத்தில் தான் இங்கிலாந்து அணியின் சுற்றுப்பயணமும்
இங்கே துவங்கியது. எனவே இந்திய மக்கள், மீடியா இவற்றின்
கவனம் முழுவதும் அரசியல் களத்தையே நோக்கி இருந்தது.
இந்தச் சூழ்நிலையில்தான் 5 டெஸ்ட்கள், 5 ஒருநாள் போட்டிகள்
கொண்ட தொடரை விளையாட டேவிட் கோவர் தலைமையிலான
இங்கிலாந்து அணி இங்கே வந்தது. முதல் டெஸ்டில் இந்தியா
வெற்றி பெற்றது. அடுத்த டெஸ்டில் இங்கிலாந்து வென்றது. இந்த
இரண்டாம் டெஸ்டில் சரியாக விளையாட வில்லையென
கபில்தேவை (இத்தனைக்கும் அவர் முதல் இன்னிங்ஸில் 60 ரன்கள்
அடித்திருந்தார்) மூன்றாவது டெஸ்டில் ஆடும் அணியில்
சேர்க்காமல் வெளியே உட்கார வைத்தார் கவாஸ்கர். இலவச
இணைப்பாக மக்களை கவர்ந்திழுக்கும்படி ஆடக்கூடிய சந்தீப்
பாட்டிலையும். சந்தீப் பாட்டிலுக்கு அதுவே கடைசி டெஸ்டானது.
மூன்றாவது டெஸ்ட் விளையாட கல்கத்தாவிற்கு பயனமாகின இரு
அணிகளும். கபில்தேவ் இல்லாததால் அவரது ரசிகர்கள்
கிட்டத்தட்ட இங்கிலாந்து அணிக்கு ஆதரவு கொடுப்பது போல்,
கவாஸ்கருக்கு எதிராக கோஷங்களை எழுப்பிக்
கொண்டிருந்தார்கள். முதல் மூன்று விக்கெட்டுகள் விழுந்த
நிலையில், அந்தப் போட்டியில் சந்தீப் பாட்டிலுக்கு பதிலாக
அறிமுகமான இன்னொரு வீரர் களமிறங்கினார். அவர் களத்தில்
இறங்கிய உடனேயே இன்னொரு விக்கெட்டும் போக 127
ரன்களுக்கு 4 விக்கெட் என்ற நிலை. ஒரு அறிமுக வீரருக்கு இது
இக்கட்டான நிலை தான். ஆனால் அது பற்றி எந்த
அழுத்தத்தையும் ஏற்றிக் கொள்ளாமல் தன் ஆட்டத்தை அவர் ஆடத்
துவங்கினார். கிரிக்கெட் ரசனையுள்ள கல்கத்தா ரசிகர்கள், யார்
இந்தப் புதுப்பையன்? ஆட்டம் வித்தியாசமாக இருக்கிறதே என
கவாஸ்கருக்கு எதிராக கோஷம் எழுப்புவதை சற்று நிறுத்தி விட்டு
ஆட்டத்தை கவனிக்கத் துவங்கினார்கள். வர்ணனையாளர்களும்
இது இவரது முதல் போட்டி போலவே தெரியவில்லை என பேசத்
துவங்கினார்கள்.
அந்த வீரர் வேறு யாருமல்ல. எம் எல் ஜெயசிம்மா, குண்டப்பா
விஸ்வநாத் ஆகியோருக்கு அடுத்த படியாக மணிக்கட்டு
திருப்பல்களை வைத்தே பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பக்கூடிய
திறமைசாலியாக இந்திய அணிக்குள் உள்ளே வந்து மூன்று உலக
கோப்பைப் போட்டிகளுக்கு இந்திய அணியின் கேப்டனாக இருந்த
அசாருதீன் தான்.
அடுத்த இரண்டு டெஸ்ட்களிலும் இங்கிலாந்து அணிக்கு எதிராக
சதமடித்து, இன்று வரை யாரும் உடைக்க முடியாத சாதனையாக
இருக்கும் அறிமுகமான உடன் தொடர்ந்து மூன்று டெஸ்ட்களிலும்
சதமடித்த சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இந்தச்
சாதனையானது அவருக்கு உடனடியாக இந்திய அணியில் ஒரு
நிலையான இடத்தைப் பெற்றுத் தந்தது.
அடுத்து வந்த பென்சன் அண்ட் ஹெட்ஜஸ் உலக கோப்பைத்
தொடர், இங்கிலாந்து, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணங்கள், ஷார்ஜா
போட்டிகள், 1987 உலக கோப்பை என எல்லாவற்றிலும்
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அப்போது இருந்த
இந்திய பேட்ஸ்மென்களுக்கும் அவருக்கும் பிட்னெஸ் லெவலில்
பெரிய வேறுபாடு இருந்தது. கவாஸ்கர், வெங்சர்க்கார், அமர்நாத்
ஏன் ஸ்ரீகாந்த், ரவி சாஸ்திரி கூட விக்கெட்டுகளுக்கு இடையில்
வேகமாக ஓட மாட்டார்கள். கபில் தேவ் ஒருவர் மட்டும் தான்
வேகமாக ஓடக்கூடியவர்.
பவுண்டரி அடிப்பார்கள், இல்லையெனில் உள் வட்டத்தைத்
தாண்டி அடித்து விட்டு நிதானமாக ஒரு ரன் ஓடுவார்கள். இரண்டு
ரன்களே அரிதாகத்தான் ஓடுவார்கள். ஆனால் அசாருதீன்
விக்கெட்டுகளுக்கு இடையே மின்னல் வேகத்தில் ஓடக்கூடியவர்.
அவர் அழைத்தாலும் யாரும் இரண்டாம் ரன் வரமாட்டார்கள்,
கபில்தேவைத் தவிர. பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களைப் பற்றி
சொல்லும் போது ஒன்று சொல்வார்கள். அவர்களுக்கு மட்டும்
நல்ல ஸ்லிப் கேட்சர்கள் இருந்தால் இன்னும் அதிக வெற்றிகளைப்
பெற்றிருப்பார்கள் என. அசாருதீனுக்கும் அதே தான். அவருக்கு
மட்டும் முதல் ஆறேழு ஆண்டுகளில் நல்ல ரன்னிங் பார்ட்னர்கள்
கிடைத்திருந்தால் இன்னும் அதிகமாகவே ரன்களைக்
குவித்திருப்பார். அசாருதீன் பந்தை லேசாகத் தட்டிவிட்டு விரைந்து
ஓட நினைப்பார். எதிர் முனை பேட்ஸ்மென்கள், ஆணியில்
மாட்டிய காலண்டரைப் போல் இருப்பார்கள். இரண்டாம்
ரன்னுக்கெல்லாம் மூச்சு வாங்கும் பேட்ஸ்மென்களைக் கொண்டது
தான் அப்போதைய இந்திய அணி. மூன்று ரன்கள் ஓடிப் பார்த்த
சம்பவங்கள் எல்லாம் மிக மிகக் குறைவு.
அதே போல் ஸ்ட்ரோக் பிளேயிலும் அவருக்கும் மற்ற
ஆட்டக்காரர்களுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. அவரது லெக்
சைட் ப்ளிக் யாராலும் மேட்ச் செய்ய முடியாத ஒன்றாக அப்போது
இருந்தது.லெக் ஸ்டம்பிற்கு வரும் பந்தை ப்ளிக் ஆடுவது சுலபம்.
அதைக்கூட கடினமாக ஒன்றாக செய்வார்கள் மற்ற
பேட்ஸ்மென்கள். ஆனால் மிடில் ஸ்டம்பிற்கு வரும் பந்தைக் கூட
அலுங்காமல் குலுங்காமல், தன் ரிஸ்ட் ஒர்க்கால் லெக் சைட்
அனாயசமாக கலை நுணுக்கத்துடன் ஆடும் திறமை
வாய்த்திருந்தது அசாருதீனுக்கு. ஆப் ஸ்டம்பிற்கு வரும்
பந்துகளைக் கூட லேசாக கால்களை நகர்த்தி பெரிய பிரயத்தனம்
ஏதுமின்றி மிட் விக்கெட் திசைக்கு அனுப்புவதில் வல்லவர்
அசாருதீன். பந்து வீச்சாளர்கள் கூட ஒரு நொடி நாம் ஆப்
ஸ்டம்பிற்கு பந்தை வீசினோமா? இல்லை லெக் ஸ்டம்பிற்கு
வீசினோமா என குழம்பி விடுவார்கள். எதிர்த் தரப்பு கேப்டனும்
என்னடா இது லெக்ஸ்டம்பிற்கு பந்தைப் போடுகிறான் என்று
பந்து வீச்சாளரைத் திட்டும் படி இருக்கும் அசாருதீனின் இயல்பான
அந்த ஸ்ட்ரோக்.
அதே போல் ஸ்ட்ரெயிட் ட்ரைவ் அடிப்பதிலும் வல்லவர். பவுலர்
ஆப் ஸ்டம்பிற்கு ஓவர் பிட்ச் போட்டாலே மிடான், மிடாப்பில்
இருப்பவர்கள் பவுண்டரியைத் தடுக்க ஓட ஆரம்பித்து விட
வேண்டியது தான். அப்படி ஒரு டைமிங்கில் ஸ்ட்ரெயிட் ட்ரைவ்
ஆடுவார். ஆட வந்த புதிதில் லெக் சைட் வித்தகராக இருந்த
அசாருதீன், சில ஆண்டுகளிலேயே ஆப் சைடும் சிறப்பாக ஆட
ஆரம்பித்தார். எக்ஸ்ட்ரா கவர் அவருக்கு பிடித்த பிரத்யேக ஸ்பாட்.
பேட்டிங்கை விட பீல்டிங் திறமையால் தான் இந்தியர்கள்
அனைவரின் மனதையும் கவர்ந்தார் அசார். இந்திய அணியில்
சிறந்த பீல்டர்கள் என்ற இனமே இல்லாத காலகட்டம் அது.
ஏக்நாத் சோல்கர் மட்டுமே சிறந்த பீல்டர் என அறியப்பட்டு
இருந்தார். அவர் பார்வார்ட் சாட் லெக்கிலும் சில சமயம் சில்லி
பாயிண்டில் பெரும் வித்தையைக் காட்டியவர். இந்தியா கண்ட
அற்புத குளோஸ் இன் பீல்டர். ஆனால் அவருக்கு அப்புறம்
பீல்டிங்கிற்காக யாரும் இந்தியாவில் அறியப்படவில்லை.
அசாருதீன் வந்த பிறகு தான் இந்தியர்களும் இப்படி பீல்டிங்
செய்வார்களா என எல்லோரும் ஆச்சரியப்பட்டனர். அவருக்கு
மிகவும் பிடித்த பீல்டிங் இடம் பாயிண்ட். பேட்ஸ்மென் ஸ்கொயர்
கட் அடித்தால் அதி வேகமாக பந்து அங்குதான் வரும். அதை
அசால்டாக கையாள்வார். எடுத்த கையாலேயே திருப்பி வீசவும்
செய்வார். இதெல்லாம் இப்போது மிக சாதாரணம் என்றாலும்
அப்போது வியந்து பாராட்டப்பட்ட திறமை. அதே போல்
ஸ்லிப்பிலும் பல அட்டகாச கேட்சுகளைப் பிடித்தவர் அசாருதீன்.
1987 உலக கோப்பைத் தோல்விக்குப் பின்னர் கபில்தேவ் கேப்டன்
பதவியில் இருந்து விலக, வெங்சர்க்கார் கேப்டனாக
நியமிக்கப்பட்டார், அவரும் தோல்விகளையே காண, ஸ்ரீகாந்த்
கேப்டனாக்கப்பட்டார். அவரும் நிலைக்க முடியாமல் போக 1989-
90 நியூசிலாந்து தொடருக்கு கேப்டனாக நியமிக்கப் பட்டார் .
அவருக்கு துணை கேப்டனாக நியமிக்கப்பட்டவர் விக்கெட்
கீப்பராக இருந்த் கிரண் மோர். அந்தளவிற்கு சீனியர்கள்
எல்லோரும் ஓய்வு பெற்றிருந்த நேரம் அது. இவர் எத்தனை நாள்
நிலைப்பார் எனவே எல்லோரும் நினைத்தார்கள். அதனைப்
பொய்யாக்கி 1992,96 மற்றும் 99 உலகக் கோப்பை
போட்டிகளுக்கு இந்திய அனிக்குத் தலைமை தாங்கும் அளவுக்கு
நீடித்தார்.
அசாருதீனின் கேப்டன் பதவி நீடிக்கக் காரணம் அவர் இந்திய
பிட்சுகளில் பெற்ற டெஸ்ட் வெற்றியே. மீண்டும் இங்கிலாந்து
அணியே அதற்கு விதை போட்டது. இங்கிலாந்து அணியின் 1993
இந்திய சுற்றுப்பயணத்தின் போது, தன் அணிக்கேற்ற பிட்சுகளை
அப்போதைய மேனேஜர் அஜீத் வடேகரின் வழிகாட்டுதலுடன்
போட வைத்தார் அசாருதீன். மூன்றாம் நாளில் இருந்து
ஸ்பின்னர்கள் சொன்னபடி கேட்கும் பிட்சுகள்.
அதற்கேற்றாற்போல கும்ப்ளே,ராஜூ, சௌகான் என
ஸ்பின்னர்கள். தேவையான ரன்னை எடுக்க சச்சின் டெண்டுல்கர்
தலைமையில் பேட்ஸ்மென்கள் என ஒரு வியூகம்
அமைக்கப்பட்டது.இது அட்டகாச பலனைத் தந்தது. அதுவரை
ஏராளமான ட்ராக்களையே சந்தித்து வந்த இந்திய அணி
வெற்றிகளைப் பெறத் தொடங்கியது. ஆனால் உள்ளூரில்
புலியாகவும் வெளியூரில் எலியாகவும் அணி மாறத் துவங்கியது.
இதனால் வெளிநாடுகளில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை அசாரால்
பெற முடியவில்லை.
காலத்துக்கும் மறக்க முடியா பல இன்னிங்ஸ்களை அசாருதீன்
ஆடியுள்ளார். ஈடன் கார்டனில் அவர் அடித்த 5 டெஸ்ட் சதங்கள்,
1990ல் இங்கிலாந்திற்கு எதிராக பாலோ ஆனைத் தவிர்க்க அடித்த
சதம், தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டர்பன் டெஸ்டில் அடித்த
சதம் எல்லாமே ஸ்ட்ரோக் பிளே எப்படி இருக்க வேண்டும்
என்பதற்கு எடுத்துக்காட்டானவை. அதுவும் டர்பன் டெஸ்டில்
அவர் ரன் அவுட் ஆகும் போது வர்ணனையாளர் சொன்னார்,
“வேறு எந்த வகையிலும் இவர் அவுட் ஆகியிருக்க முடியாது
அப்பேர்பட்ட பார்மில் இவர் ஆடிக் கொண்டிருந்தார் என்று. ஒரு
நாள் போட்டிகளிலும் ஏராளமான மேட்ச் வின்னிங்
இன்னிங்ஸ்களை ஆடியவர் அசாருதீன்.
ஒரு நல்ல பேட்ஸ்மனாக, சரிந்திருந்த இந்திய அணியை சிறிது
நிமிர்த்திய கேப்டனாக அறியப்பட்டு கௌவரமாக ஓய்வு
பெற்றிருக்க வேண்டிய அசாருதீன் தேவையில்லாமல் கிரிக்கெட்
சூதாட்டப் புகாரில் சிக்கி கிரிக்கெட் உலகில் இருந்து
வெளியேறினார். தன் கேப்டன்சிக்கு போட்டி இல்லாத தன் முதல்
ஐந்தாண்டு காலத்தில் சில வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்க
கிரிக்கெட் வாரியத்துக்கு அழுத்தம் கொடுத்திருந்தால் இன்னும்
நல்ல கேப்டனாக அறியப்பட்டிருப்பார் அசாருதீன்.
சோபர்ஸ்
80களின் மத்தியில் டிவியில் கிரிக்கெட் பார்க்கும் பொழுது, ஒரு
நாள் கிரிக்கெட் போட்டிகளில் யாராவது சதம் அடித்தால் போதும்.
உடனே ஒரு ஸ்லைட் போடுவார்கள். ஒரு நாள் போட்டிகளில் யார்
ஒரு இன்னிங்ஸில் அதிக ரன் அடித்திருக்கிறார்கள் என. அதில்
மகுடத்தின் உச்சியில் பதித்த வைரமாய் கபில்தேவ் 175* என்று
இருக்கும். நம்மாளுடா என்று புளகாங்கிதப்பட்டுக் கொள்வோம்.
அதே போல டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்கும் போது,
யாராவது இரட்டை சதத்தை தாண்டிவிட்டால் போதும் டெஸ்ட்
இன்னிங்ஸில் யார் அதிக ரன் எடுத்து என்ற ஸலைட் போடப்படும்.
அதில் பிராட்மென், லென் ஹட்டன் ஆகியோரது பெயர்களுக்கு
மேலே முதலிடத்தில் கேரி சோபர்ஸ் 365* என்ற பெயர் இருக்கும்.
வெஸ்ட் இண்டீஸ் ஆளு, பாகிஸ்தானுக்கு எதிரா அடிச்சிருக்கார்
என்றதும் இரட்டை மகிழ்ச்சியாக இருக்கும்.
அப்போது, டிவியில் உடன் பார்த்துக் கொண்டிருக்கும் சூப்பர்
சீனியர்களிடம் யார் இவரு என்று கேட்போம். இப்போது போல
கூகுள், யூ ட்யூப்பை தட்டி விட்டால் அவரது ஜாதகமே வரும்
காலமல்லவே அது?
இப்ப ரிச்சர்ட்ஸ் இருக்காருல்ல, அவரு மாதிரி அந்தக்காலத்தில்
அவரு என்பார்கள். ரிச்சர்ட்ஸ் மாதிரி பேட்டிங் மட்டுமல்ல, லெப்ட்
ஹேண்ட் பாஸ்ட் பவுலர், கூடவே பிங்கர் ஸ்பின்னும் போடுவார்,
ரிஸ்ட் ஸ்பின்னும் போடுவார். மிகப்பெரிய ஆல்ரவுண்டர்
என்பார்கள். இப்ப இருக்கிற இம்ரான், கபில், ஹேட்லி, போத்தம்
எல்லோரும் முதல்ல பவுலர்கள் அடுத்துத்தான் பேட்ஸ்மென்கள்.
ஆனா சோபர்ஸ் முதல்ல உலகத்தரமான பேட்ஸ்மென், அடுத்து
பவுலர். பேட்டிங்குக்கு பெஞ்ச் மார்க் பிராட்மென்னா
ஆல்ரவுண்டர்க்கு பெஞ்ச் மார்க் சோபர்ஸ் என்பார்கள்.
அப்போது ஒரு முதல் தர கிரிக்கெட் போட்டியில் ரவி சாஸ்திரி ஆறு
பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் அடித்ததைப் பற்றி
வர்ணனையாளர்கள் சொல்லும் போதெல்லாம் சோபர்ஸின்
சாதனையை சமன் செய்த சாஸ்திரி என்றே சொல்வார்கள்.
முதன்முறையாக ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் அடித்தது
சோபர்ஸ் தான்.
ரிச்சர்ட்ஸ் காலம் முடிந்து, லாராவின் காலம் அப்போது
ஆரம்பமாகியிருந்தது. ஆப் ஸ்டம்பிற்குச் சற்று தள்ளி விழுகும்
பந்துகளை ஒரு பேக்லிப்ட் கொடுத்து ஒரு ட்ரைவ் ஆடுவார்.
டிபிகல் கரீபியன் ஸ்டைல் என்பார்கள். அந்தக்காலத்தில் இருந்து
அப்போது வரை வர்ணணையாளராக இருந்த டோனி கோசியர்,
அப்படியே சோபர்ஸ் ஆடும் டிரைவ் போல இருக்கிறது என்றார்.
இன்னும் ஆர்வம் அதிகமானது சோபர்ஸ் பர்றி அறிய. அந்தக் கால
கட்டத்தில் எப்போதாவது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சானலில் பழைய
கிளிப்பிங்குகளை போடுவார்கள். அதில் அரிதாகத்தான்
சோபர்ஸின் ஆட்டங்கள் இடம்பெறும். அதில் இடம்பெற்ற பலரின்
பேட்டிகள் மூலமாகத்தான் சோபர்ஸின் ஆளுமை அறிய வந்தது.
சோபர்ஸ் அணிக்குள் நுழைந்த போது அவருக்கு 16 வயது
தான்.ஓங்கி வளர்ந்த உருவம். முதலில் பந்து வீச்சாளராகத்தான்
இடம் பிடித்தார். அப்போதைய கேப்டனுக்கு ஏற்பட்ட காயத்தால்
துவக்க ஆட்டக்காராக இறங்கும் வாய்ப்பு கிடைத்தது.
அப்போதைய அணியில் மூவேந்தர்களாக இருந்தவர்கள் த்ரி
டபிள்யூஸ் என அழைக்கப்பட்ட ப்ராங்க் வோரல், எவர்டன் வீக்ஸ்,
வால்காட். அணியில் மூன்றாம், நான்காம், ஐந்தாம் இடத்தில்
இறங்குவார்கள். சோபர்ஸின் ஆட்டம் அவர்களுக்கு இணையாகத்
தென்பட ஆரம்பித்ததும் அணியின் நிரந்தர உறுப்பினராக
மாறினார். அதுவரை ஆங்கிலேயர்கள் கேப்டனாக இருந்த
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு முதன் முறையாக மேற்கிந்திய
தீவுகளைச் சேர்ந்த பிராங்க் வோரல் கேப்டனாக
நியமிக்கப்பட்டார். இந்த நிகழ்வு சோபர்ஸ்க்கு ஒரு உத்வேகத்தைக்
கொடுத்தது எனலாம். அவர் சோபர்ஸின் நண்பர் என்பதும்
இன்னொரு காரணம். இந்த சமயத்தில் அவர் சுற்றுப்பயணம்
மேற்கொண்ட ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா என எல்லா
நாடுகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
பிராங்க் வோரல் ஓய்வு பெற, மூவேந்தர்களில் மற்ற இருவரான
வால்காட், வீக்ஸ் தங்கள் கேரியரின் கடைசிக்கட்டத்தில் இருக்க,
சோபர்ஸ் கேப்டனானார். துணைக்கு சோபர்ஸ் அறிமுகமான
காலகட்டத்தில் அறிமுகமான இன்னொரு மிகச்சிறந்த
பேட்ஸ்மெனான ரோஹன் கன்ஹாய் இருக்க கேப்டனாக
சோபர்ஸின் பயணம் தொடங்கியது. முதன்முறையாக
ஆஸ்திரேலியாவை மேற்கிந்திய தீவுகள் ஒரு டெஸ்ட் தொடரில்
வென்றது சோபர்ஸ் கேப்டனான பிறகுதான். அடுத்து
இங்கிலாந்திற்குப் பயணம் செய்து அங்கும் தொடரை வெற்றி
கண்டார். 5 டெஸ்ட்களில் 700க்கும் அதிகமான ரன்கள், 20
விக்கெட்டுகள்,10 கேட்சுகளைப் பிடித்து ஒரு கம்ப்ளீட்
ஆல்ரவுண்டராக ஜொலித்தார். பிரிட்டன் பத்திரிக்கைகள் அவரை
கிங் கிரிக்கெட் என வர்ணித்தன. அதன்பின் இந்தியாவுக்கு
சுற்றுப்பயணம் வந்து இங்கேயும் வெற்றி.
ஆனால் அதன்பின் அவ்வளவாக வெற்றிகள் கிட்டவில்லை.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா என பல இடங்களில்
மேற்கிந்திய அணி தோற்றது. ஒரு கட்டத்தில் ரோஹன் கன்ஹாய்
கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
சோபர்ஸ் பின் 1974ல் ஓய்வு பெற்றார். அணித்தலைமை கிளைவ்
லாயிடுக்கு வந்தது. அந்த காலகட்டத்தில் மேற்கு இந்திய தீவுகள்
அணிக்கு வலுவான வேகப்பந்து வீச்சாளர்கள் கிடைத்தார்கள்.
ஆண்டி ராப்ர்ட்ஸ், ஜோயல் கார்னர், மைக்கேல் ஹோல்டிங்,
கோலின் கிராப்ட் என எதிரணி கொஞ்சம் கூட ரிலாக்ஸ் ஆகாமல்
பந்துவீசக்கூடிய ஒரு கூட்டணி அமைந்தது. பேட்டிங்கில்
பெரும்பலமாய் விவியன் ரிச்சர்ட்ஸ். இரண்டு உலக கோப்பைகள்,
பதினான்கு ஆண்டுகளுக்கும் மேலாக டெஸ்ட் தொடரை
இழக்காமல் ஆதிக்கம் செய்த ஒரு அணி உருவானது. இம்மாதிரி
ஒரு அணி உருவாக சோபர்ஸின் காலகட்டம் ஒரு காரணமாக
இருந்தது.
சோபர்ஸ் அணிக்கு வருமுன் ஆஸ்திரேலியாவை வெல்லாத ஒரு
அணியாகத்தான் மேற்கிந்திய அணிகள் அணி இருந்தது.
பிராட்மென் தலைமையிலான இன்வின்சிபிள்ஸ் 1948 வரை
எல்லாரையும் விரட்டி விரட்டி அடித்து வந்தார்கள். அவரின்
ஓய்வுக்குப் பின் கிரிக்கெட்டில் ஒரு சமநிலை தோன்றியது. பின்
மேற்கிந்திய அணி வளர்ந்து ஆஸ்திரேலிய அணிக்குச் சமமாய்
சோபர்ஸ் காலத்தில் நின்றது. ஆனால் உலக கிரிக்கெட் அரங்கை
ஆட்சி செய்ய முடியவில்லை. சோபர்ஸ், கன்ஹாய் இருந்தும்
எதிரணியை அச்சுறுத்தக் கூடிய பந்து வீச்சாளர்கள் இல்லாதது ஒரு
காரணமாய் இருந்தது. ஆனால் சோபர்ஸ் தன்
ஆட்டக்காரர்களுடன் தொடர்ந்து வெளிப்படுத்திய ஆட்டம் பல
திறமைகள் மேற்கிந்திய தீவுகளில் உருவாக காரணமாய்
அமைந்தது. அடுத்த 15 ஆண்டுகள் உலக கிரிக்கெட்டில்
மேற்கிந்திய தீவு அணி சிம்மாசனம் போட்டு அமர சோபர்ஸ்
ஏற்படுத்திய ஈர்ப்பு ஒரு காரணம் எனலாம்.
20 ஆம் நூற்றாண்டின் சிறந்த 5 வீரர்களை தேர்ந்தெடுக்க விஸ்டன்
ஒரு தேர்தலை நடத்தியது. கிரிக்கெட்டில் மதிக்கத்தக்க 100
பெருந்தலைகள் ஓட்டளித்தனர். அதில் பிராட்மென் 100
ஓட்டுக்களும் சோபர்ஸ் 90 ஓட்டுக்களையும் பெற்றனர். அடுத்த
வந்த மூவர் ஜாக் ஹாப்ஸ், வார்னே, ரிச்சர்ட்ஸ். இவர்கள் மூவருமே
முப்பதிற்குள் தான் ஓட்டு வாங்கியிருந்தனர். இதில் இருந்தே
சோபர்ஸின் ஆட்டத்திறமையை அறிந்து கொள்ளலாம்.
பிராட்மென்
1983ல் மேற்கு இந்திய அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம்
வந்திருந்தது. அதற்கு சில மாதங்களுக்கு முன் நடந்திருந்த உலகக்
கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் தோற்று, தன்
அந்தஸ்தை கொஞ்சம் இழந்திருந்ததால் வெறியுடன்
விளையாடினார்கள். ஆறு டெஸ்ட் கொண்ட தொடரில் முதல் 5
டெஸ்ட்களில் மூன்றில் வெற்றி பெற்று 3-0 என்று தொடரையே
வெற்றி கண்டு, ஆறாவது டெஸ்டை விளையாட சென்னைக்கு
வந்தார்கள். யார் வெற்றி பெறுவார், யார் நன்றாக
ஆடப்போகிறார்கள் என யாரிடமும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை.
டெட் ரப்பர் என்ற அடைமொழியோடு அந்த மேட்ச் துவங்கியது.
மேற்கு இந்திய தீவுகளின் முதல் இன்னிங்ஸ்
முடிந்ததும்,இந்தியாவின் பேட்டிங் தொடங்கியது.
அந்த இன்னிங்ஸில் கவாஸ்கர், சதமடித்ததும், இந்திய கிரிக்கெட்
ரசிகர்களிடம் மட்டுமல்ல, உலக கிரிக்கெட் ரசிகர்களிடையேயும்
ஒரு அதிர்வு பரவியது. அவர் செய்தது மிகப்பெரிய சாதனை அல்ல.
தன்னுடைய 30வது சதத்தை அடித்தது தான். இன்று அது இன்னும்
மிகச் சாதாரணமாகத் தெரியும். ஏனென்றால் சச்சின் டெண்டுல்கர்,
ஜாக் காலிஸ், ரிக்கி பாண்டிங், ட்ராவிட், லாரா , ஹாசிம் ஆம்லா
என ஏராளமானவர்கள் 30 சதங்களுக்கு மேல் அடித்து விட்டார்கள்.
ஆனால் அன்று கவாஸ்கர் பெயர் உலகமெங்கும் உச்சரிக்கப்படக்
காரணம், இன்றளவும் உலகின் சிறந்த பேட்ஸ்மெனாக
எல்லோராலும் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கும்
ஆஸ்திரேலிய வீரர் பிராட்மெனின் சாதனையை அவர் தாண்டியது
தான்.
கவாஸ்கர் அந்த சாதனையை செய்தாலும், யாரும் அவரை
பிராட்மனுடன் ஒப்பிடவில்லை. அதை ஒரு வரலாற்று
சம்பவமாகத்தான் பார்த்தார்கள். கவாஸ்கர் மட்டுமல்ல அதற்குப்
பின் நிறைய மகா பேட்ஸ்மென்கள் வந்து விட்டார்கள். யாரையும்
பிராட்மெனுடன் ஒரே தராசில் கிரிக்கெட் உலகம் நிற்க
வைக்கவில்லை. அந்த அளவிற்கு கிரிக்கெட்டில் தன்னுடைய
ஆட்டத்தால், அசைக்க முடியாத யாரும் நெருங்க முடியாத
ஆளுமையாய் இருப்பவர் பிராட்மென்.
பிராட்மென் தன் இரண்டாம் டெஸ்டில் சதமடித்தார். அதில் இருந்து
20 ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தார். அந்த 20
ஆண்டுகளும் அவருடைய பார்ம் குறையவே இல்லை. அப்போது
டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகள் எனில் கிரிக்கெட் ஆட்டத்தை
உருவாக்கிய இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்திய
தீவுகள் மற்றும் இந்தியா, பாகிஸ்தான் என பிளவுபடாத பிரிட்டிஷ்
கால இந்தியா. இவற்றுடன் மட்டுமே தன் 52 டெஸ்டுகளை
விளையாடினார். அதில் அப்போதைய சிறந்த அணியான
இங்கிலாந்துடன் தான் 75% மேட்சுகளை விளையாடியுள்ளார்.
அப்போது டெஸ்ட் அந்தஸ்து பெற்றிருந்த அணியான
நியூசிலாந்துடன் இவர் ஆடவேயில்லை. எங்களுடன் விளையாடும்
அளவிற்கு நீங்கள் இல்லை என்று ஆஸ்திரேலிய போர்டு
மறுத்ததும் உண்டு. தேவையான அளவிற்கு வீரர்களுக்கு தர
வேண்டிய அலவன்ஸ் கொடுக்காததாலும் என்று சொல்வார்கள்.
பிராட்மென் குவித்த ரன்களை விட, அவர் அதை எடுக்க எடுத்துக்
கொண்ட நேரமே எதிர் அணிகளை கலங்கடித்தது. டெஸ்ட்
கிரிக்கெட் என்றாலே விக்கெட்டை காப்பாற்ற எல்லோரும்
முனையும் நேரத்தில் அனாயாசமாக அடித்து ஆடியவர்
பிராட்மென். அவர் வேகமாக ரன் குவிப்பது, ஆஸ்திரேலிய அணி
பந்து வீச்சாளர்களுக்கு எதிர் அணி விக்கெட்டுகளை எடுக்க அதிக
நேரத்தைக் கொடுத்தது. ஒரு கட்டத்தில் இதனால் ஆஸ்திரேலியா
தோல்வியே அடையாமல் வெற்றி மேல் வெற்றி பெற தி
இன்வின்சிபிள்ஸ் என்ற பட்டத்தையும் இவர் காலத்திய அணி
பெற்றது.
இதனால் தான் ஒரு நாள் போட்டிகள் துவங்கிய பொழுதில், நல்ல
வேளை பிராட்மென் இப்போது இல்லை. இருந்திருந்தால் ஒரு பந்து
வீச்சாளர் இத்தனை ஓவர் தான் வீச வேண்டும் என்ற கட்டுப்பாடு
விதித்திருப்பதைப் போல ஒரு பேட்ஸ்மென் இத்தனை ஓவர்தான்
விளையாட வேண்டும் என்ற விதியைக் கொண்டுவந்திருக்க
வேண்டும் என்று சொன்னார்கள்.அந்த அளவிற்கு ஆட்டத்திறனும்
சரி, விரைவாக ரன் எடுக்கும் திறனும் கொண்டவர் பிராட்மென்.
இங்கிலாந்து அணிக்கு, தீராத தலைவலியாய் இருந்தவர்
பிராட்மென். இந்த ஒத்த ஆள் இல்லாட்டி நாம ஈசியா
ஜெயிச்சுடலாம் என்றே அப்போது சொல்வார்கள். அவரை
அவுட்டாக்க இங்கிலாந்து அணி ஒரு பிரத்யேக வியூகமே
அமைத்தது. அதுதான் பாடிலைன் அட்டாக். ஸ்டம்புக்கு போட்டா
அடிக்கிறார், ஸ்டம்புக்கு வெளியே போட்டா உக்கிரமா
அடிக்கிறார். ஒரே வழி, பவுன்சர்களா நெஞ்சுக்கு போட
வேண்டியது தான் என்ற வியூகத்துடன் களமிறங்கினர்
இங்கிலாந்து அணியினர். அந்தத் தொடர் தான் வரலாற்றில்
பாடிலைன் சீரிஸ் என அழைக்கப்படுகிறது. இதில் ஆரம்பத்தில்
தடுமாறினாலும் பின்னர் சுதாரித்து ஆடினார் பிராட்மென்.
பிராட்மென் தன் முதல் டெஸ்டில் குறைந்த ரன்களே எடுத்தார். தன்
கடைசி டெஸ்டை ஆட அவர் களத்தில் இறங்கிய போது, அவரின்
டெஸ்ட் சராசரி 100 க்கு மேல் இருந்தது. நான்கு ரன்கள் எடுத்தால்
போதும். அவர் தன் சராசரியாக 100 என்ற மேஜிக்கல் நம்பருடன்
ஓய்வு பெற்றிருப்பார். ஆனால் அவர் ரன் ஏதும் எடுக்காமல்
ஆட்டமிழந்தார். அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ்
வெற்றி பெற, இன்னொரு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால்
பிராட்மெனின் சராசரி 99.94 ஆனது. அவர் ஓய்வு பெற்று
கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் ஆகப்போகிறது. இன்னும் அவரின்
சராசரியை நெருங்க யாரும் பிறந்து வரவில்லை. அடுத்த
சராசரியாக 63 தான் உள்ளது.
சச்சின் டெண்டுல்கர் 90களின் ஆரம்பத்தில் தன் சிறப்பான
ஆட்டத்தை வெளிப்படுத்திய போது, சில ஷாட்கள் பிராட்மென்
போலவே ஆடுகிறார் என்றார்கள். சச்சினும் தன் ஆஸ்திரேலிய
பயனத்தில் பிராட்மெனை சந்தித்தார். அப்போது பிராட்மென்,
என்னைப் போலவே சில ஷாட்கள் ஆடுகிறீர்கள் எனச் சொல்ல,
சச்சினுக்கு அது மிகப்பெரிய அங்கீகாரமானது. சச்சினுமே, தான்
வாங்கிய எல்லா விருதுகளையும் விட பிராட்மெனின் அந்த
வார்த்தைகளைத் தான் பெரிதாய் நினைத்திருப்பார்.
உலகில் உள்ள எல்லா கிரிக்கெட் வீரர்களுக்குமே அவரிடம்
அளப்பரிய பக்தி உண்டென்றுதான் சொல்ல வேண்டும்.
ஆஸ்திரேலிய கேப்டன் மார்க் டெய்லர், பாகிஸ்தானுக்கு எதிரான
டெஸ்டில் தான் 334 ரன்களை எடுத்திருந்த போது, டிக்ளேர்
செய்தார். ஏனென்றால் பிராட்மெனின் அதிகபட்ச ரன்னை தான்
தாண்டிவிடக் கூடாதென. பிராட்மென் காலம்
தொட்டு,ஆஸ்திரேலிய அணி இன்றளவும், அசைக்க முடியாத
யாரும் சுலபமாக வெற்றி கொண்டுவிட முடியாத அணியாக
இருந்து வருகிறது. அதற்குப் பின்னால் பிராட்மெனின் அளப்பரிய
சாதனை இருக்கிறது. இப்பேர்பட்ட பிளேயர் இருக்கும் போது,
நாம் எப்படி ஆட வேண்டும் என சக வீரர்களுக்கு பெரும்
உந்துதலாக இருந்தவர் பிராட்மென். பின் அடுத்தடுத்த
தலைமுறைக்கும் நாம் பிராட்மென் ஆடிய டீமில்
விளையாடுகிறோம், அசால்டாய் ஆடி விடக்கூடாது என்ற
எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. இருந்து கொண்டே
இருக்கும்.
பிராட்மென் ஆடத்துவங்கிய காலம் தொட்டு இன்று வரை ஆல்
டைம் உலக லெவன் அணி போடுகிறவர்கள் யாருமே பிராட்மென்
பெயரை விட்டு விட்டு போட்டதில்லை. இனியும் போட
மாட்டார்கள். எத்தனையோ பேர் அதில் மாறி மாறி வந்தாலும்,
பிராட்மென் பெயர் அங்கே நிலையாகத்தான் இருக்கும். விஸ்டன்
பத்திரிக்கை 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த 5 கிரிக்கெட்
வீரர்களுக்கான கருத்துக் கணிப்பை 100 சிறந்த கிரிக்கெட்
வீரர்களிடம் நடத்திய போது 100 பேருமே பிராட்மெனுக்கு தங்கள்
வாக்கைச் செலுத்தினார்கள்.
பதினொன்றாம் வகுப்பில் இயற்பியல் பாடத்தின் முதல் வகுப்பு.
ஆசிரியர் உள்ளே நுழைந்ததும் சம்பிரதாயமாக எல்லோருடைய
பெயரையும் கேட்டுவிட்டு, வகுப்பை ஆரம்பித்தார். இயற்பியலுக்கு
அடிப்படை அலகுகள் நீளம், நிறை, காலம் இது மாதிரி ஏழு
இருக்கு. அதில் நீளம் பற்றிப் பார்ப்போம் எனச் சொல்லிவிட்டு,
இப்ப ஒரு மீட்டர்ங்கிறாங்க, அந்த மீட்டர் எவ்வளவு நீளம்
இருக்கணும்னு ஒரு கணக்கிருக்கும்ல? அதுக்காகவே ஒரு
ஸ்டாண்டர்டான தூரத்தை உருவாக்கி வச்சிருப்பாங்க.
காலகாலத்துக்கும் ஒரு மீட்டர் தூரம்னா அதுதான். இதே மாதிரி
மத்ததுக்கும் உண்டு என அவற்றை விளக்கி முடித்தார்,
மனதிலேயே தங்கிவிட்ட முதல் வகுப்பு அது. எப்போதாவது
அனிச்சையாக அந்த வகுப்பின் ஞாபகம் வரும். அப்போதெல்லாம்
பிராட்மெனின் ஞாபகம் வரும். கிரிக்கெட் பேட்ஸ்மென்களுக்கு
இது போல் ஒரு ஸ்பெசிமன் மாடல் உண்டு என்றால் அது
இவராய்த்தான் இருக்க முடியும் என்று தோன்றும். அவர் கிரிக்கெட்
ஆட்டத்தில் இருந்து ஓய்வு பெற்றதில் இருந்து, இன்று வரை, ஒரு
பேட்ஸ்மென் சிறப்பாக ஆடிவிட்டால், சிறப்பாக என்று
சொல்லக்கூடாது மிக மிகச் சிறப்பாக ஆடினால் அடுத்த
பிராட்மெனா இவர்?, சேச்சே அவர் கூடல்லாம் கம்பேர் பண்ண
முடியுமா என்று சொல்லும் அளவில் தான் இருக்கிறதே தவிர
பிராட்மெனை மிஞ்சிவிட்டார் இவர் என்று யாரும் சொல்வதில்லை.
அந்த அளவிற்கு கிரிக்கெட் பேட்ஸ்மென்களுக்கு ஒரு பெஞ்ச்
மார்க்காக, எட்டத்துடிக்கும் சாதனை எல்லையாக விளங்கிக்
கொண்டிருக்கிறார் டொனால்ட் பிராட்மென்.
கிளைவ் லாயிட்
1971ல் தான் முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது
எனலாம். ஆஸ்திரேலிய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான
டெஸ்ட் போட்டி ஒன்று, முதல் மூன்று நாட்களுக்கு மழையால்
தடைப்பட, வந்திருந்த பார்வையாளர்கள் ஏமாற்றமடையாமல்
இருக்க, ஒரு ஓவருக்கு எட்டு பந்துகள் எனக் கொண்டு அணிக்கு
தலா நாற்பது ஓவர்கள் என நிர்ணயம் செய்து கொண்டு ஒரு
போட்டி நடத்தப்பட்டது. இது நல்லாயிருக்கே என எல்லோருக்கும்
தோன்றியது. ஏனென்றால் அப்போது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான
பார்வையாளர்கள் குறைந்து கொண்டிருந்த காலம். இப்படி ஒரே
நாளில் மேட்ச் முடிந்தால் எல்லோருக்கும் நல்லதே எனத் தோன்ற
அடுத்தடுத்த வருடங்களில் ஒவ்வொரு நாடாக நாங்களும்
ஆட்டைக்கு வரலாமா என சேர்ந்து கொள்ள, 1975ல் உலக
கோப்பை போட்டி ஒன்றை நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது.
அந்தப் போட்டித் தொடரில் கலந்து கொண்ட அணிகள் எல்லாமே
அதற்கு முன்னால் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் ஒரு
நாள் போட்டிகளில் விளையாடி இருந்தன. வெற்றிக்கான சூத்திரம்
எது என யாருக்கும் தெரியாது. சில அணிகள் இதை டெஸ்ட் மேட்ச்
போலவே ஆடின. குறிப்பாக இந்தியா. இங்கிலாந்திற்கு எதிரான
போட்டியில் சேஸிங்கில் கவாஸ்கர் 174 பந்துகளைச் சந்தித்து 36
ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் பெவிலியனுக்கு வந்தார். அந்த
போட்டியில் இந்தியா 202 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
அடுத்த நாள் டீம் மைதானத்திற்குச் செல்லாமல் ஹோட்டலிலேயே
இருந்த போது, கவாஸ்கர், அணி மேனேஜரிடம் என்ன நாம
இன்னும் மேட்ச்சுக்கு கிளம்பலை? எனக் கேட்டதாக கிண்டலாகச்
சொல்வார்கள்.
அப்படியாப்பட்ட காலகட்டத்தில், பைனலுக்கு ஆஸ்திரேலிய
அணியும், மேற்கிந்திய தீவுகள் அணியும் தகுதி பெற்று வந்தன.
முதலில் மேற்கு இந்திய தீவு அணியின் பேட்டிங். 50 ரன்களுக்கு
மூன்று விக்கெட் விழுந்த நிலையில் இறங்கினார் அவர். ஆறே கால்
அடிக்கு மேல் உயரம். அதற்கேற்ற வலுவான உடல்கட்டு. அந்த
உயரத்தால் லேசான கூன் விழுந்தாற் போன்ற நடை. மனதில்
ஓடும் உணர்ச்சிகளை எளிதில் வெளிக்காட்டா முகம். தன்
ஆட்டத்தை ஆரம்பித்தார். 85 பந்துகளில் 102 ரன்கள்.
ஆஸ்திரேலியாவை வெல்வதற்கு ஏற்ற ஸ்கோர் கிடைத்தது. மேற்கு
இந்திய தீவு பந்துவீச்சாளர்கள் காரியத்தை கச்சிதமாக முடிக்க
மேற்கிந்திய தீவுகள் அணி உலக கோப்பை வரலாற்றில் முதல்
கோப்பையை வென்றது. லார்ட்ஸ் பால்கனியில் அந்த
கோப்பையை வாங்கினார் சதமடித்த வீரரும் மேற்கிந்திய அணி
கேப்டனுமான கிளைவ் லாயிட்.
அது தான் ஆரம்பம். அதில் இருந்து 10 வருடங்கள் கிரிக்கெட்
உலகின் அசைக்க முடியாத சக்தியாக மேற்கு இந்திய தீவுகள் அணி
விளங்கியது. சில திரைப் படங்களுக்கு முன்னர் சொல்வார்கள்.
படம் கன்பார்ம் ஹிட்தான். சூப்பர் ஹிட்டா, பிளாக் பஸ்டரா
என்பது தான் கேள்வி என. அது போல மேற்கு இந்திய தீவுகள்
அணி அப்போது களமிறங்கினாலே வெற்றி தான். எத்தனை ரன்
வித்தியாசத்தில் அல்லது எவ்வளவு விரைவாக மேட்ச் முடியும்
என்பது தான் கேள்வி.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், இந்தியா உடனான
டெஸ்ட் போட்டிகளை எல்லாம் எதிராளியின் மண்ணிலேயே
போய் வெற்றி கண்டு வந்தது மேற்கிந்திய தீவுகள் அணி.
தொடர்ந்து 27 டெஸ்ட் மேட்சுகளைத் தோற்காமல் வெற்றி நடை
போட்டது.
அடுத்த மகுடமாக 1979 உலக கோப்பையையும் மேற்கு இந்திய
தீவுகளுக்கு லாயிட் பெற்றுத் தந்தார். 1983 உலக கோப்பையும் ஒரு
அதிசயத்தால் அவருக்கு கிட்டாமல் போனது. எம்ஜியார் இறந்ததை
எப்படி பல கிராம மக்கள் நம்பவில்லையோ அது போல
மேற்கிந்திய தீவு அணியின் அந்த தோல்வியையும் உலகமே
நம்பவில்லை. அந்த அளவிற்கு மேற்கிந்திய தீவுகள் அணியை
உயர்த்தி வைத்திருந்தவர் தான் கிளைவ் லாயிட்.
கிளைவ் லாயிட் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு உள்ளே மிடில்
ஆர்டர் பேட்ஸ்மெனாக வந்த காலத்தில் உலகின் சிறந்த ஆல்
ரவுண்டர் கேரி சோபர்ஸ் அணித் தலைவர். உடன் ரோஹன்
கன்ஹாய் என்ற சிறந்த பேட்ஸ்மெனும் இருந்தார். அவரின்
ஆட்டத்தால் கவரப்பட்டுத்தான் கவாஸ்கர் தன் மகனுக்கு ரோகன்
எனப் பெயரிட்டார்.
கிளைவ் லாயிட் ஒரு ஸ்டைலிஷான பேட்ஸ்மென் கிடையாது.
ரசிக்க வைக்கும் புட் ஒர்க்கோ, ’அட’ போட வைக்கும் ரிஸ்ட்
ஒர்க்கோ கிடையாது. அவரின் பெரும்பாலான ரன்கள் லெக்
சைடில் தான் எடுக்கப்பட்டிருக்கும். லெக் அண்ட் மிடில்
ஸ்டம்புக்கு வரும் பந்துகளை, காலை முன் நகர்த்தி மிட்
விக்கெட்டிலோ, மிடானிலோ அடிப்பார். அவரின் ஆகிருதிக்கும்
பலத்திற்கும் பந்து தெறித்து ஓடும். அவரின் உயரத்திற்கு ஷார்ட்
பிட்ச் பந்துகளை அசால்டாக புல் மற்றும் ஹூக் செய்வார். ஆப்
சைடில் பெரும்பாலும் மிட் ஆபில் அடிப்பார். ஸ்கொயர் கட், கவர்
ட்ரைவ் போன்றவற்றை அதிகம் செய்ய மாட்டார். அதனால்
பார்த்து பார்த்து ரசிக்கும் படி அவரின் ஆட்டம் இருக்காது. ஆனால்
அவரின் ஷாட்கள் எல்லாம் பவர்புல்லாக இருக்கும். மைதானத்தில்
நேரடியாகப் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு அவர் விளாசும்
சத்தம் கேட்கும்.
மிடில் ஆர்டரில் கிளைவ் லாயிட் ஒரு டிபெண்டபிள் பேட்ஸ்மென்.
தன் விக்கெட்டின் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்த பேட்ஸ்மென்.
தேவையில்லாமல் அவுட் ஆக மாட்டார். பல இக்கட்டான
சூழ்நிலைகளில் நிலைத்து நின்று ஆடி அணியைக் கரை சேர்ப்பார்.
கிளைவ் லாயிட் ஆடிய காலத்தில் ஆஸ்திரேலியாவில் ஸ்விங் கிங்
டென்னிஸ் லில்லி, வேகப்பந்து வேதாளம் ஜெப் தாம்சன்
இருந்தனர். பாகிஸ்தானில் சர்பராஸ் நவாஸ், இம்ரான் கான்
இருந்தனர். இங்கிலாந்தில் போத்தம், பிரிங்கிள் இருந்தனர்.
நியூசிலாந்தில் ஹேட்லி, இந்தியாவில் கபில்தேவ் இருந்தனர்.
அத்தனை முக்கிய பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும் அவர்களின்
நாட்டிலேயே ஸ்கோர் செய்துள்ளார் லாயிட். ஸ்விங் பவுலர்களை
திறம்பட எதிர் கொள்வார்.
மேற்கு இந்திய தீவுக்காக 100 டெஸ்ட்கள் முதலில் ஆடிய வீரர்
கிளைவ் லாயிட் என்பதிலேயே அவர் எந்த அளவிற்கு அணிக்குத்
தூணாக விளங்கியிருக்கிறார் என அறிந்து கொள்ளலாம்.
கிரிக்கெட் வீரர்களில் சிலர் நடிகர்களைப் போல இருப்பார்கள்.
சிலர் பெரிய மீசை வைத்து மாபியா டான் போல இருப்பார்கள்,
சிலர் மேனேஜர்களைப் போல் இருப்பார்கள். சிலர் தங்கள் பாடி
லாங்வேஜ், செயல்பாடுகள் மூலம் காமெடியன் போலத்
தெரிவார்கள். முன்னாள் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்
கிரெய்க் மாத்யூஸைப் பார்த்தால் காமெடியன் போல இருப்பார்.
கிளைவ் லாயிட் ஒரு மிடுக்கான ராணுவ உயர் அதிகாரி போல
இருப்பார். இவர் கிரிக்கெட் பிளேயரா இல்லை, வி ஆர் எஸ்
வாங்கி வந்த மேஜர் ஜெனரலா என்றுதான் பார்க்கும் போது
தோன்றும். அணி வெற்றி நடை போட்டுக் கொண்டிருந்தாலும் சரி,
தோல்விப் பாதையில் இருந்தாலும் சரி முகத்தில் எந்த
உணர்ச்சியுமின்றி களத்தில் இருப்பார். உடன்
இன்னும் எதுவும் நடக்கவில்லை, நாம விளையாட்டை தொடர்ந்து
ஆடுவோம் என்ற எண்ணமே அவர் முகத்தையும், உடல்
மொழியையும் பார்த்தால் தோன்றும்.
பேட்ஸ்மென் கிளைவ் லாயிடை விட கேப்டன் கிளைவ்
லாயிட்தான் எல்லோரையும் கவர்ந்தவர். இன்று வரை கூட
மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டன் என்றாலே எல்லோருக்கும்
கிளைவ் லாயிடின் முகமே ஞாபகம் வரும் அளவிற்கு
முத்திரையைப்
கிளைவ் லாயிட் கேப்டன்ஷிப்பில் அதிரடி வியூகங்கள், குயுக்திகள்
இதெல்லாம் இருக்காது. எதிரணி பேட்ஸ்மென்களுக்கு எப்படி
வியூகம் அமைப்பது, எதிரணி பவுலர்களுக்கு ஏற்ப அணி பேட்டிங்
ஆர்டரை எப்படி மாற்றுவது போன்ற சிந்தனைகள் எல்லாம்
இருக்காது. மேற்கிந்திய தீவுகள் அணி லாயிட் தலைமையில் களம்
காணுவதே எதிர் அணிக்கு ஒரு கலக்கத்தைத் தரும். ஒரு ராணுவ
அணிவகுப்பு போல மேஜர் ஜெனரல் கிளைவ் லாயிட்
தலைமையில் அணியினர் உள்ளே வருவார்கள்.எதையும் தகர்க்கும்
பீரங்கிப்படை போல வேகப்பந்து வீச்சாளர்கள் துடிப்போடு
உள்ளே வருவார்கள். கிளைவ் லாயிடுக்கு அமைந்த வீரர்களைப்
போல யாருக்கும் அமைந்திருப்பார்களா என்பது சந்தேகமே. ஒரு
மேஜர் ஜெனரலுக்கு வீரர்கள் அமைவதா ஆச்சரியம்? பாகிஸ்தான்
அணியின் கேப்டனாக சில காலம் சலீம் மாலிக் இருந்த போது,
அவர், உலகின் தலை சிறந்த இரண்டு பந்து வீச்சாளர்கள் (வாசிம்
அக்ரம் & வக்கார் யூனிஸ்) எனக்காக விளையாடும் போது
எனக்கென்ன கவலை என்பார். அப்படிப் பார்த்தால் கிளைவ்
லாயிடுக்கு, உலகின் தலை சிறந்த பேட்ஸ்மென் ரிச்சர்ட்ஸ், எந்த
அணியிலும் இடம் பிடிக்கும் அளவிற்கு ஆடக்கூடிய சிறந்த
பேட்ஸ்மென்களான ராய் பிரடெரிக்ஸ், ஆல்வின் காளிச்சரண்,
கார்டன் கிரினீட்ஜ், டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் அகியோர்அவர்
அணியில் ஆடினார்கள். இம்மாதிரி பேட்ஸ்மென்கள் கூட ஒரு
கேப்டனுக்கு அமைவார்கள். அதற்கு முன்னர் கேரி சோபர்ஸ்க்கு
கூட அப்படியாப்பட்ட பேட்ஸ்மென்கள் கிடைத்திருந்தார்கள்.
ஆனால் லாயிடுக்கு அமைந்தது மாதிரி வேகப் பந்து வீச்சாளர்கள்
யாருக்கும் கிடைக்கவில்லை. மைக்கேல் ஹோல்டிங்,ஜோயல்
கார்னர்,ஆண்டி ராபர்ட்ஸ், கோலிஸ் கிங், மால்கம் மார்சல் என
எவ்வளவு பெரிய பேட்ஸ்மென்கள் உள்ள அணியையும் ஆட்டி
வைக்கக் கூடிய பந்து வீச்சாளர்கள். இந்த வேகப் பந்து படையால்
டெஸ்ட் அரங்கில் வீழ்த்த முடியாத அணியாக விளங்கியது.
சிவாஜி கணேசன் நடித்த ஆண்டவன் கட்டளை என்ற திரைப்படம்.
அதன் இயக்குநர் கே சங்கர். படத்தில் பணியாற்றியவர்கள்
எல்லாம் பெரிய ஜாம்பவான்கள். சந்திரபாபு, தேவிகா, பி எஸ்
வீரப்பா, சித்தூர் நாகையா, ஏ வி எம் ராஜன். இசை விஸ்வநாதன்
ராம மூர்த்தி, பாடல்கள் கண்ணதாசன் என சொல்லிக் கொண்டே
போகலாம். படத்தில் சிவாஜி கணேசன் கல்லூரி பேராசிரியர்.
அவர் கல்லூரிக்கு நடந்து போகும் போது டைட்டில் கார்ட்
போடுவார்கள். ட்ராபிக் போலிஸ்காரர் ஸ்டாப் என்ற சின்ன
போர்டை காட்டும் போது இயக்கம் கே சங்கர் எனப்
போடுவார்கள். என்னய்யா இது வித்தியாசமா இருக்கே எனக்
கேட்ட போது, இயக்குநருக்கு பெரிய வேலை இல்லை.
இவர்களின் பெர்பார்மன்ஸை கண்ட்ரோல் செய்தால் போதும்.
எனவே அந்த இடத்தில் தன் பெயரைப் போட்டுக் கொண்டார்
என்பார்கள். போலவே கிளைட் லாயிடுக்கும் தன் அணி வீரர்களை
பெர்பார்மன்ஸை கண்ட்ரோல் செய்தால் போதும் என்ற நிலையே
இருந்தது. நீ பந்து போட்டது போதும். ரெஸ்ட் எடு. அடுத்த ஆள்
வா என்பது தான் அவர் கேப்டன்சி. அதுவே வெற்றிகளைக்
குவிக்க போதுமானதாக இருந்தது.
பள்ளி, கல்லூரிகளில், வேலை இடங்களில் இருப்பவர்களில் சிலர்,
எல்லோருடனும் இனிமையாகப் பழகி கவர்ந்திழுக்கும்
தன்மையுடன் இருப்பார்கள். சிலர் எல்லோரையும் விட மிகுந்த
திறமைசாலியாக இருப்பார்கள், இதனால் அவர்கள் அங்கே பெயர்
பெற்று விளங்குவார்கள். ஆனால் சிலர் தொடர்ந்து தங்கள் கடின
உழைப்பை தந்து கொண்டிருப்பார்கள். எந்த சூழ்நிலையிலும்
மனதைத் தளரவிடாமல் தங்கள் பணியைச் செய்து
கொண்டேயிருப்பார்கள். முதலில் அவர்களுக்கு எந்தப் பெயரும்
கிடைக்காது. நாளடைவில் அவர்களின் மீது ஒரு நம்பிக்கை
எல்லோருக்கும் உருவாகும். அந்த நம்பிக்கை அவர்களுக்கு
எல்லாவிதமான ஏற்றங்களையும் தரும். ஏனென்றால் ஒருவரால்
ரசிக்கப்படுவதை விடவும் ஒருவரின் நம்பிக்கையைப் பெறுவது
என்பது பெரிய விஷயம். அது போல சூப்பர்ஸ்டார்கள் நிறைந்த
மேற்கு இந்திய தீவு அணியில் எல்லோரின் நம்பிக்கையையும்
பெற்றவர் லாயிட். அந்த நம்பிக்கை தான் சோபர்ஸும், கன்ஹாயும்
ஓய்வு பெற்ற உடன் கேப்டன் பதவியை தேடி வரச் செய்தது.
அத்தனை வீரர்களையும் கட்டுக்கோப்பாக அவரின் பின்னே நிற்க
அவரின் ஓய்வுக்குப் பிறகு, இண்டர்நேசனல் கிரிக்கெட் கவுன்சில்
பல உயர் பதவிகளை அவருக்கு கொடுத்து அழகு பார்த்தது. இன்று
வரை ஐ சி சி மேட்ச் ரெப்ரி, உயர் அதிகாரி என்றாலே பலருக்கும்
கிளைவ் லாயிடின் முகம் தான் மனதில் வரும் அளவிற்கு அப்படி
ஒரு ஆளுமையைக் கொடுத்தது அவரின் எந்த சூழ்நிலையிலும் தளராமல் தொடர்ச்சியாக தன் உழைப்பை கொடுத்துக்
கொண்டே இருந்த பண்பும் அதனால் அவர் மேல் எல்லோருக்கும்
ஏற்பட்ட நம்பிக்கையும் தான்.
தோனி
1993 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி, இந்திய சுற்றுப்பயணம்
வந்திருந்த நேரம். அந்த அணியில் அலெக் ஸ்டீவர்ட் விக்கெட்
கீப்பர். அவர் அந்த அணியில் இருந்த எந்த பேட்ஸ்மெனுக்கும்
குறைந்தவர் அல்ல. அப்போது நம்முடைய விக்கெட் கீப்பர் கிரண்
மோர். அவரை அம்மாதிரி சொல்ல முடியாது. கடைசி வரிசை
பேட்ஸ்மென்களைப் போல தான் அவர் ஆடுவார். அதற்கடுத்து
வந்த நயன் மோங்கியா, சபா கரீம் ஆகியோரும் அப்படித்தான்.
அதற்கு முன்னராவது நம்மிடம் பேட்ஸ்மென்களுக்கு நிகராக
ஓரளவாவது ஆடக்கூடிய விக்கெட் கீப்பர்கள் இருந்தார்கள். ப்ரூக்
எஞ்சினியர் நல்ல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென். துவக்க
ஆட்டக்காரராகவும் இறங்குவார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்
சராசரி 31 வைத்திருந்தார். அவருக்கு அடுத்து வந்த சையது
கிர்மானியும் ஓரளவு சமாளிப்பார். அவரும் சில சதங்களும், அரை
சதங்களும் எடுத்தவர். கபில்தேவ் 1983 உலககோப்பைப்
போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிராக 175 ரன்களைக் குவித்த
போது மறுமுனையைக் காத்தவர். இவர்களுக்கு அடுத்து யாரும்
சோபிக்கவில்லை. சதானந்த் விஸ்வநாத் என்பவர் அதிரடியாக
ஆடக்கூடியவர் என்று இறக்கினார்கள். அவரும் நன்றாக
ஆடவில்லை. சந்திரகாந்த் பண்டிட் நல்ல பேட்ஸ்மென். ஆனால்
விக்கெட் கீப்பிங் சுமார். தொடர்ச்சியாக நன்கு ஆடமாட்டார்.
1986ல் இந்தியா – ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்டில்
அவரை பேட்ஸ்மென் ஆகவே எடுத்தார்கள். கிரண் மோர் விக்கெட்
கீப்பிங் நன்றாகச் செய்ததால் , பேட்டிங் சுமாராக இருந்தாலும்,
வேறு வழி இல்லாமல் பல ஆண்டுகளுக்கு அவரை இந்திய அணி
வைத்துக் கொண்டது.
இந்த சமயத்தில் எல்லாம் மற்ற அணிகளில் எல்லாம் அணிக்கு
சிக்கலான சூழலில் கை கொடுக்கும் நல்ல விக்கெட் கீப்பர்
பேட்ஸ்மென்கள் உருவாகிக் கொண்டே இருந்தார்கள். மேற்கு
இந்திய தீவுகளில் ஜெப்ரி துஜான், நியூசிலாந்துக்கு இயன் ஸ்மித்,
பாகிஸ்தானில் மோயின் கான், இலங்கையில் பிரண்டன் குருப்பு,
இவர் இரட்டை சதமெல்லாம் அடித்தார். அவருக்குப் பின்னர்
அதிரடி ஆட்டக்காரர் கலுவிரதனா. ஆஸ்திரேலியாவில்
சொல்லவே வேண்டாம். இயன் ஹீலி இருந்தார். அவர்
ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களுக்கும் கடைசி வரிசை
ஆட்டக்காரர்களுக்கும் இடையே பாலமாக இருப்பார். அது தவிர
பந்து வீச்சாளர்களுக்கும் டிப்ஸ் கொடுத்துக் கொண்டே இருப்பார்.
வார்னே பந்து வீசும் போது, அருகில் ஸ்லிப்பில் நிற்கும் கேப்டன்
டெய்லரிடம் கூட எதுவும் சொல்லாமல், நேராக வார்னேவிடம்
சென்று இப்படி போடு என்பார்.
இந்த சமயத்தில் 1996ல் நடந்த ஒரு டெஸ்ட் மேட்சில்
ஆஸ்திரேலிய தேர்வாளர்களைத் திட்டி ஸ்டேடியத்தில்
பதாகைகள். காரணம் அடுத்து ஆஸ்திரேலியா போகும் தென்
ஆப்பிரிக்க பயணத்திற்கு புது விக்கெட் கீப்பர் களமிறங்குவார்
என்ற செய்தியே. ஹீலிய விடவா ஒரு கீப்பர் என
யோசித்தவர்களை வாயடைக்கச் செய்தார் வந்த புது கீப்பர் ஆடம்
கில்கிறிஸ்ட். முதல் வரிசை பேட்ஸ்மென்களை விட சிறப்பான
ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதற்குப் பின் தென் ஆப்பிரிக்க
அணிக்கு மார்க் பவுச்சர், இலங்கை அணிக்கு குமார சங்காகரா என
புதுப்புது பலம் கூடிக் கொண்டே இருந்தது. நமது நாட்டிலோ
அப்படி ஒரு ஆள் கிடைக்காமல், ஒரு நாள் போட்டிகளை சமாளிக்க
உலகத் தரமான பேட்ஸ்மென் ஆன ராகுல் ட்ராவிட்டை கீப்பர்
ஆக்கினார்கள். டெஸ்ட் மேட்சுகளுக்கு வழக்கம் போல விஜய்
தாகியா, தீப் தாஸ் குப்தா என சுமாரான கீப்பர்கள். இதெல்லாம்
போதாது என பால்வாடியில் இருந்து நேரே கிரிக்கெட்
கிரவுண்டுக்கு வந்தவரைப் போன்ற தோற்றம் கொண்ட பார்தீவ்
பட்டேல் வேறு.
இந்தச் சூழ்நிலையில் தான் ஒரு வீரன் இந்திய அணியின் உள்ளே
வந்தான். அட்டகாச உடல்கட்டு. அதற்கு முன்னான இந்திய
கீப்பர்கள் எல்லாம் பிள்ளைப் பூச்சிகளைப் போலத்தான்
இருந்தார்கள். நன்றாக நினைவிருக்கிறது. கல்லூரி விடுதியில்
அந்த வீரன் விளையாடிய ஆரம்ப மேட்சுகளில் ஒன்றைப் பார்க்கும்
போது, கூட்டத்தில் ஒருவன் என்னடா இவன் டார்ஜான் படத்தில
நடிக்கிறவன் மாதிரி இருக்கான் என்றே கமெண்ட் அடித்தான். நீள
முடி, இறுகிய முகம், தீர்க்கமான கண்கள். வேறு யார்? மகேந்திர
சிங் தோனி தான். முதலில் அவர் ஆடிய சில மேட்சுகளைப்
பார்த்தவர்கள் பரவாயில்லைடா, கிர்மானிக்கு அடுத்து ஒரு நல்ல
விக்கெட் கீப்பர் நமக்கு கிடைச்சுட்டான் என்றே நினைத்தார்கள்.
அடுத்தடுத்த மேட்சுகளில் தோனி காட்டிய விக்கெட் கீப்பிங்
திறமை, பவுண்டரிகளை விளாசும் வேகம், விக்கெட்டுகளுக்கு
இடையேயான ஓட்ட வேகம் என வெகு சீக்கிரமே அனைவரின்
மனதிலும் இடம் பிடித்தார் மகேந்திர சிங் தோனி. நமது
அணியிலும் கில்கிறிஸ்ட், சங்காகரா போன்றோருக்கு இணையான
ஒரு வீரன் தோன்றி விட்டான் எனவே அப்போது பலர்
நினைத்தார்கள். அப்போது தெரியவில்லை தோனியிடம்
அவர்களைத் தாண்டிய பண்புகளும் உண்டு என்றென.
நிறையப் பேரை, 2005ல் தோனி, இலங்கை அணிக்கு எதிராக
முதல் விக்கெட் விழுந்ததும் இறங்கி அடித்த 183 ரன்கள் தான்
அவரின் பெரிய ரசிகராக மாற்றியிருக்கும்.ஆனால் அந்த
காலகட்டத்தில் நடைபெற்ற ஒரு நாள் போட்டிகளில் இந்திய
அணியின் சேஸிங்குகளில் அவர் காட்டிய அணுகுமுறை தான்
எல்லோரின் மனதிலும் இடம் பெறச் செய்தது எனலாம். அதற்கு
முன் இந்திய அனியின் ஒரு நாள் போட்டி சேஸிங்குகளில், ரவி
சாஸ்திரி, கபில்தேவ் ஆடிய காலகட்டத்தில், நான்கு விக்கெட்
விழுந்த உடன் இவர்கள் வந்து சில பல பவுண்டரிகளை
அடிப்பார்கள். இவர்கள் ஆட்டமிழக்காவிட்டால் அணிக்கு வெற்றி.
மாறாக ஆட்டமிழந்தால் அவ்வளவு தான். இவர்களுக்குப்
பின்னால் இந்திய அணியின் நிலைமை இன்னும் மோசமானது.
நான்கு விக்கெட்டுகள் விழுந்தால்,நடையைக் கட்டு வேற வேலை
பார்க்கலாம் என ரசிகர்கள் கிளம்பி விடுவார்கள். யுவராஜ் சிங்
வந்த பின்னர் இந்த நிலைமை கொஞ்சம் மாறியது என்றாலும்
இவர் அவுட்டாயிட்டா என்ற கேள்வி இருந்து கொண்டேயிருக்கும்.
ஆனால் தோனி வந்த பின்னர் தான் இந்திய அணியின் தலைவிதி
மாறியது. ஐந்து விக்கெட்டுகள் விழுந்தாலும் பரவாயில்லை தோனி
பக்குவமாக ஒன்றிரண்டாக எடுத்து அடுத்து விக்கெட் விழாமல்
ரன்னைச் சேர்த்து அணியைக் காப்பாற்றி விடுவார் எனப் பார்க்கும்
அனைவருக்கும் தோன்றியது. ஆஹா. ஆஸ்திரேலிய மைக்கேல்
பெவன் மாதிரி நமக்கும் ஒரு பினிசர் கிடைச்சாச்சு என
அனைவருக்கும் ஒரு நம்பிக்கை தோனியின் பக்குவத்தால்
ஏற்பட்டது.
இந்தப் பக்குவம் தான் ஆதி காலத்தில் இருந்தே இந்திய அணியில்
இல்லாதது. ஏன் பெரும்பாலான இந்தியர்களுக்கே இல்லாதது.
அழுத்தத்தை உணர்ந்தால் அவர்களின் பெர்பார்மன்ஸ் குறையும்.
உணர்ச்சி வேகத்தில் தவறிழைப்பார்கள். இன்னும் கொஞ்சம்
நேரம் இந்த நிலையைப் பொறுத்துக் கொண்டிருந்தால் போதும்,
சமாளித்து விடலாம் என்றால், அந்த சமாளிக்கும் நேரம் பெருந்
தொலைவாய்த் தோன்றும். எவ்வளவு நேரம் இப்படியே இருப்பது?
செய் அல்லது செத்து மடி என இறங்கி காட்டு சுத்து சுத்துவார்கள்.
ஆனால் தோனியிடம் அந்தப் பொறுமையும் பக்குவமும் இருந்தது.
அதுதான் 2007ல் இந்திய அணி உலகக் கோப்பை போட்டியில்
முதல் சுற்றிலேயே அடி வாங்கித் திரும்பிய போது, அடுத்து யார்
கேப்டனாக ஆக வேண்டும் என்ற கேள்வி வந்த போது, கிரிக்கெட்
வாரியத்திற்கும், அணியின் மூத்த வீரர்களுக்கும் தோனியின்
பெயரை கொண்டு சேர்த்தது.
அதற்குப் பின் நடந்தது வரலாறு. 20-20 உலக கோப்பையில்
இந்திய அணியை வெற்றி பெற வைத்த உடன் தோன்றியது
பாகிஸ்தானின் இம்ரான் கானைப் போன்ற ஒரு கேப்டன் நமக்கு
கிடைத்து விட்டார் என. 1992 உலக கோப்பையில் அரை இறுதிப்
போட்டிக்கு பாகிஸ்தான் செல்ல இருந்த வழி 90% அடைக்கப்பட்ட
நிலையில், போராடி அணியை கோப்பையை வெல்ல வைத்த
இம்ரானுக்கு இணையான ஒரு தலைமைப் பண்பு தோனியிடம்
தென்பட்டது. எந்த சூழலிலும் அலட்டிக் கொள்ளாமல்,
அனைவரையும் அரவணைத்து அணியை நடத்திச் செல்லும்
பாங்கை தோனியும் தொடர்ந்தார். அடுத்தடுத்த பல வெற்றிகள்,
ஒரு நாள் உலக கோப்பை, சாம்பியன்ஸ் ட்ராபி, டெஸ்டில்
முதலிடம் என தோனி காணாத சிறப்புகள் இல்லை.
இந்திய அனியில் கவாஸ்கர், சச்சின், ட்ராவிட் என மாபெரும்
பேட்ஸ்மென்கள் இருந்திருந்தாலும் இந்திய அணியின்
மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்கள் அல்லது அதற்கு பண்பு/ மதிப்பு
கூட்டும் செயலில் ஈடுபட்டவர்கள் என்றால் முதலில் ஞாபகம்
வருவது கபில்தேவ். நம்மாலும் போராடி ஜெயிக்க முடியும் என்ற
எண்ணத்தை ஏற்படுத்தியவர். அடுத்ததாக கங்குலி. நாம் யாருக்கும்
குறைந்தவர்கள் இல்லை என்ற எண்ணத்தை அணியினருக்கு
ஏற்படுத்தியவர். அடுத்ததாக தோனி. எதுவும் கடந்து போய்
விடவில்லை. எல்லாம் இன்னும் நம் கைவசம் தான் இருக்கிறது.
நமக்குத் தேவை பொறுமையும், விடாமுயற்சியும், நிதானமும்
மட்டுமே என உணர்த்தியவர்.
தோனியிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய
இருக்கிறது. முதலில் உடல் ஆரோக்கியத்தைப் பேணி வலுவாக
இருத்தல். வலுவாக இருக்கும் போதுதான் நம்மால் எதுவும் முடியும்
என்ற எண்ணம் தோன்றும். வலு குறைய குறைய அந்த எண்ணமும்
குறையும். இரண்டாவது எந்த சூழ்நிலையிலும் உணர்ச்சி
வசப்படாமல் இருத்தல். உணர்ச்சி வசப்பட்டால் எதையும் சரியாக
யோசித்து செயலாற்ற முடியாது. உணர்ச்சி வேகத்தில் எடுக்கும்
முடிவுகளின் வெற்றி நிகழ்தகவு 50-50 தான். மூன்றாவது
தலைமைப் பொறுப்பில் இருக்கும் போது, கீழே உள்ளவர்கள்
தவறு செய்தாலும், அவர்களை சுடுசொற்களாலோ, உடல்
மொழியாலோ காயப்படுத்தாமல் அதைச் சரிப்படுத்த முயல்வது,
தொடர்ந்து ஊக்கப்படுத்துவது. நான்காவது, எல்லாத் திறமையும்
நம்மிடம் இருக்காது. இல்லாத திறமைக்கு ஏங்கி நேரத்தை
வீணடிப்பதை விட, நம்மிடம் இருக்கும் திறமையால் நமது
குறிக்கோளை அடைவது எப்படி என சிந்தித்து செயல்படுவது.
கிட்டத்தட்ட 15 ஆண்டுகள், இந்திய அணியின் தூணாக இருந்து,
இந்தியர்களின் கிரிக்கெட் பார்க்கும் ஆர்வம் குன்றாமல் பார்த்துக்
கொண்டவர். எங்கிருந்து வந்தாலும் திறமையும், விடா முயற்சியும்,
பக்குவமும் இருந்தால் சாதித்து விடலாம் என ஏராளமானோருக்கு
நம்பிக்கை ஊட்டியவர். இந்த சிச்சுவேசன்ல தோனி இருந்தா
என்ன செஞ்சிருப்பார்னு யோசித்தாலே போதும் தப்பிச்சிடலாம்
என்று யோசிக்கும் முறையை வழங்கியவர்.
மனித குலம், அவ்வப்போது தோன்றும் சிந்தனையாளர்கள்,
சாதனையாளர்கள் மூலம் உள் வாங்கும் கருத்துருக்களைக்
கொண்டே தன் வாழ்வியலை மெருகேற்றிக் கொள்கிறது. அது
போல இந்தியர்களின் வாழ்வியலுக்கு சில முக்கிய கருத்துருக்களை
வழங்கிச் சிறப்பித்தவராக தோனி என்றென்றும் ஞாபகத்தில்
கொள்ளப்படுவார்.
Subscribe to:
Posts (Atom)